(செப்டம்பர் 11 அன்று மகாகவியின் நினைவு நாளையொட்டி மு.கோ. அவர்கள் எழுதியது)
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் படித்தவர்கள், படிப்பறியா பாமரர்கள் அனைவரிடத்திலும் உள்ள பெரிய பலவீனம் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு பெருமிதம் கலந்த கருத்து அவர்களிடம் அழுத்தமாக நிலவுகிறது. கடந்து போய்விட்ட பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நல்லதாகவே இருந்தது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சீர்கெட்டு இப்பொழுது எல்லாம் கெட்டழிந்து நிற்பதாக பலர் நம்புகிறார்கள்
பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் இந்த நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கல்வித் திட்டம் செயல்படுகிறது. தமிழ் வகுப்பில் தமிழாசிரியர் சங்ககாலம் பொற்காலம் என்பார். அடுத்து வரலாற்றாசிரியர் பாடம் நடத்தும்போது குப்தர் காலம் பொற்காலம் என்பார். சலித்துப்போய் வீடு திரும்பும் மாணவனிடம் தாத்தா பேச்சைத் தொடங்குவார். அந்த காலத்தில் வெள்ளைக்காரன் ஆண்டப்போ என்று ஆரம்பிப்பார்.
இரண்டு விஷயத்தில் தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் முன்னால் தமிழர்கள் நாகரீகமாக வாழ்ந்தவர்கள் என்று அடித்துப் பேசுகிறார்கள்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றி மூத்த குடி
என்று ஆதாரம் காட்டுவார்கள். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும், ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழிகள் உள்பட எல்லா மொழிகளுக்கும் தமிழ் தான் தாய் மொழி. தமிழிலிருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றி வளர்ந்தன என்பார்கள்.
இதை ஏற்க மறுப்பவர்கள் தமிழினத்தின் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாதான் உலக நாடுகள் அனைத்துக்கும் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்தது என்ற பேச்சுக்கு எதிராக வாய் திறந்தால் நீங்கள் இந்து மத விரோதியாக பட்டம் பெற வாய்ப்பு உண்டு. உலகத்தின் எல்லா ஞானமும் நான்கு வேதங்களிலிருந்து தான் பெறப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் நீங்கள் நாஸ்திகர் என்ற பழியைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
எப்படி எல்லாம் வாழ்ந்த தமிழன் இப்படி நலிந்து போனானே என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். வடமொழி மரபும் வாடையும் வீசி தமிழின் தனித்தன்மை அழிகிறதே என்று பகுத்தறிவு வாதிகளும், தனித்தமிழ் ஆர்வலர்களும் வேதனைப் படுவார்கள்.
பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நன்றாக இருந்தது என்ற மூட நம்பிக்கை தமிழனுக்கு மட்டும் உள்ள பலவீனம் அல்ல. இந்தியாவில் மற்ற மொழி பேசுவோரிடமும் ஏதாவது ஒரு வகையில் இந்த மனநோய் பல உருவங்களில் தொடர்கிறது. உலகின் பல பகுதிகளீல் வாழும் ஓரளவு பழமையான நாகரீகச் சிறப்பு உள்ள மக்களீடம் இந்த பொற்காலக் கனவு தொடர்கிறது.
மேல்நாட்டவர்கள் கிரேக்க நாகரீகம் பற்றி இந்த பெருமிதத்தோடு பேசுவதைப் பார்க்கலாம். உலகின் முதல் ஜனநாயக அமைப்பு கிரேக்கத்தில் இருந்த நகரக் குடியரசுகளில்தான் இருந்தது என்பார்கள்.இந்த கருத்தை பல அறிஞர்கள் ஒப்புக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயம்
அன்றைய நகரக் குடியரசில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதுதான் உண்மை. சொத்துக்களும், நிறைய அடிமைகளையும் உடையவர்கள் மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் சங்ககாலம் பொற்காலம் என்று பல தமிழ் அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த பொற்காலத்தில் தமிழ் மக்கள் நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறக் கேட்கலாம். அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து வாழ்ந்தனர் என்றும் பல நூல்களில் கூறப்பட்டிருப்பதெல்லாம் வெறும் கற்பனைதான். புலவர்கள் வள்ளல்களையும் மன்னர்களையும் நயந்து பாடி வாழ்ந்தவர்கள். அவர்கள் கற்பனையாகச் சொன்ன, பாடிய பாடல்களில் உள்ள செய்திகள் உண்மை நிலையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வகைக் கற்பனைகளோடு கிரேக்கக் கவிஞர்களூம் பாடியிருக்கிறார்கள். போர் இல்லாமல், சகல வளமும் கொண்ட, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சமுதாயம் என்று மனதுக்கு இதமான கற்பனைகள் கொண்ட கவிதைகளை பழைய இலக்கியங்களில் நிரம்பக் காணலாம். இந்த பாடல்கள் கவிஞனின் நல்லெண்ணத்தையும் அவனுடைய உள்மனத்தில் கிடக்கும் ஆசைகளையும் எதிரொலிப்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.வ.ஜகந்நாதன் என்ற தமிழ் அறிஞர் கூறுகிறார்.
வேத காலம் முதல் பரமார்த்திக வாழ்க்கையை அறிந்து வாழ்ந்தவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இனி புதியதாக உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. கிடைத்த உண்மைகளைக் கொண்டு அதைக் கடைப் பிடித்து வாழ்வதே நம் கடமையாகும்.
பழங்காலத்தில் வாழ்ந்த நம் சான்றோர்கள் எல்லா உண்மைகளையும் கண்டறிந்தவர்கள் என்ற நம்பிக்கை வலியுறுத்தப்படுகிறது. முன் நாளில் வாழ்ந்தவர்கள் பிணி இல்லாமல் முற்றும் உணர்ந்தவர்களாய் வெகு நாள் வாழ்ந்தார்கள். காலப் போக்கில் மக்கள் பிணி மிகுந்தவர்களாய் சிற்றறிவு கொண்டவர்களாய் குறுகிய வாழ்நாளைக் கழித்து மாண்டார்கள் என்ற கருத்தை பல இடைக்கால நூல்களில் பார்க்கலாம் சென்ற 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திராவிடப்பிரகாசிகை என்ற நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
முதல் தமிழ்ச்சங்க காலத்தில் வாழ்ந்த அகத்தியர் படைத்த நூலின் பொருளை பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் ,சில வாழ்நாள் கொண்டவர்களா யும் எளிய அறிவு படைத்தவர்களாயும் இருந்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை அதனால். பல நூல்கள் அழிந்துபட்டன என்று கூறுகிறார் பிற்காலத்தில் வாழ்ந்த சிறு மதியாளர்கள் முந்தைய காலத்திய அறிஞர்களீன் படைப்பை புரிந்து கொள்ள முடியாததால் நூல்கள் அழிந்தன என்ற பொருளில் கூறுகிறார்..
சமயப் பிணக்காலும் குறுகிய மனப்பாங்காலும் பல நூல்கள் காப்பாற்றப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டன.கவனிப்பார் இன்றி காப்பவர் இன்றி நூல்கள் அழிந்துபட்டன என்பதுதான் உண்மை.இந்த வேதனை தரும் உண்மையை மறைத்து பழம்பெருமை பேசுகிறார் ஆசிரியர்.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளூம் மன உறுதி இல்லாமல் பலவீனப்பட்டவர்கள் தங்கள் நாடு,சமூகம் ,மொழி பற்றி பழைய பெருமைகளை விதந்து ஓதி மன நிறைவு கொள்ளச் செய்யும் முயற்சிதான் இது அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளுடன் புனையப்பட்ட பழங்காலம் பற்றிய புகழ்பாடல்களில் நாம் நம் அறிவை இழந்துவிடக் கூடாது. பழைய அமைப்பு முறைகளீல் உள்ள போற்றத்தக்க ,இன்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவற்றை சரியாக இனம் கண்டு அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தோன்றிய (14 ம்நூற்றாண்டுக்குப் பின்)
தமிழ் நூல்களெதுவும் இலக்கியமாகக் கருதத்தக்கதல்ல,ஒதுக்கப்பட வேண்டியவை என்று மறைமலையடிகள் கூறுகிறார்.அவர் வாழ்ந்த 20 ம் நூற்றாண்டின் முன் பகுதியில் படைக்கப்பட்ட பாரதி பாடல்களும் ,மற்ற கவிஞர்களின் படைப்புகளும் தோன்றிய நூற்றுக்கணக்கான நாவல்களும் மறைமலையடிகள் பார்வையில் கவைக்கு உதவாத எழுத்துக்கள். அவரைப் பொறுத்த வரையில் தமிழின் பொற்காலம் 14 ம் நூற்றாண்டோடு முடிந்து போய் விட்டது.
இப்படி விடாப்பிடியாக பழமையைத் தூக்கிப் பிடித்து பெருமை பேசுவோர் எல்லா பகுதியிலும் இருப்பார்கள்.தமிழ் நாட்டில் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைத்து முள்ளாக வளர்ந்து தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கிறது
இலக்கியத்தில் புதிய உத்திகள், மரபுகள் தோன்ற பெரும் தடையாக வளர்ந்து விட்டது.பழையன எல்லாம் கழிக்கப்படவேண்டியவை அல்ல. ஆனால் வீண் பெருமை பேசி எல்லா வகையிலும் பழமையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பது புதிய சிந்தனையோட்டத்துக்கு தடையாகி விடுகிறது. ஒரு விஷயம் பழமையானது என்பதாலேயே பூஜைக்கு உரியதாக மாறி விடுகிறது நவீன காலத்தின் வளர்ச்சியையும் பழைய முறைகளீன் இன்றைய பொருத்தப்பாட்டையும் பற்றி தெளிவான சிந்தனை இல்லை.
புது உலகக் கவிஞனாக அவதரித்த பாரதி இந்த பழமை செய்யும் கேட்டைப் பார்த்தார்.எல்லாத் துறைகளிலும் வியாபித்து நிற்கும் தடைகளுக்கு பழமை மீதான வழிபாட்டு உணர்வுதான் காரணம் என்று உணர்ந்தார்.
அதனால்தான் சரித்திரத் தேர்ச்சிகொள் என்று புதிய ஆத்திச்சூடி பாடிய பாரதி அடுத்தபடியாக பிணத்தினைப் போற்றேல் என்று பாடினார் மேலும் தெளிவாக பழமை விரும்பிகளுக்கு பாரதி அறிவுரை கூறினார்.கடந்த காலத்திலிருந்ததை எல்லாம் இழந்துவிட்டதாக புலம்பிக் கொண்டிருக்காதே புதியவை படைக்கப் புறப்படு என்றார்.
சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
என்று பாடினார்
பழமை என்பது நிகழ் காலத்துக்கான சாவி, எதிர்காலத்துக்கான வழிகாட்டி.. என்றார் ஒரு மேல் நாட்டு அறிஞர்.
பாரதி இந்த விளக்கத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். மிகப்
பெரிய இயக்கத்தை வழி நடத்த வேண்டிய மக்கள் கடந்த காலத்தின் சிறப்பையும்,அதன் இழப்பையும் எண்ணி ஏங்காமல் நிகழ்காலத் தாழ்வை நிணைத்து மனம் தளராமல் நமக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று
நம்புங்கள் என்று பாரதி முழங்கினார்
வரலாற்றை படித்து அதன் சரியான பயன்பாட்டைஎடுத்துச் சொல்கிறார்
முன்னர் நாடு நிகழ்ந்தபெருமையும்
மூண்டிருக்கும் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
என்று வரலாற்றைப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு மனம் தளர்ந்தவர்களைப் பற்றி இந்த மக்களுக்கு என்ன சொல்லி உண்மையை
உணரச் செய்வேன்,இவர்களுடைய பரிதாப நிலையைக் கண்டு என் உள்ளம் எரிகிறதே என்றுவேதனைப் படுகிறார் பாரதி.
என்ன கூறி மற்றெங்ஙன் உணர்த்துவென்
இங்கிவர்க்கென துள்ளம் எரிவதே
என்று முடிக்கிறார்
- மு.கோபாலகிருஷ்ணன்