Monday, September 22, 2014

பெண்



அண்டத்தின் அழகே பிரம்மனின் படைப்பு
நடை பயின்ற என்னை மட்டுமே
மன்றத்தில் பிரம்மனின் படைப்பு என்பது
வெறும் வர்ணிப்பா அல்லது பிரமிப்பா?

ஐயிரண்டு மாதம் அன்னையின் வயிற்றில்
கை இரண்டை மடக்கி வாய் பொத்தி
கருவறை என்னும் இருள் அறையில்
வாழ்ந்தது  தான் பெண்ணின்  முதல் பாடம்.

இருளைக் கண்டு மருள மாட்டேன்.

இந்த பாரம்பரியம் மட்டும் பாதுகாக்கப் படுகிறது
இன்றும் இந்த நவீன யுகத்தில்.
அதனால் தான் பெண் இன்னும் இருட்டறையில்
இருக்கிறாள்.
இதனால் தானோ அன்று சமையல் அறையும்
இருட்டாகவே இருந்ததோ .
கடவுளின் கருணை தான் என்ன
சமையல்  அறையிலும்,சாமி அறையிலும்
நெருப்பின் வெளிச்சம் காட்டி வளர்த்தான் பெண்ணை..


கருவறை தாண்டி வந்த நானோ
என் பிறந்த வீட்டை நினைத்து அழுகிறேன்.
அனால் சுற்றமும் முற்றத்தில் சிரிக்க
நான் அழுதால் ஊர் சிரிக்கும் என்ற
எனது இரண்டாம் பாடம் ஆரம்பமானது.

எனது தாயும் என்னை பார்த்து சிரிக்க
எனக்கோ மேலும் அழுகை.
என்ன செய்ய புரியாத வயது
நானும் சிரித்து விட்டேன்.

தாயின் சேலையில் வட்டம் போட்ட என்னை
கட்டம் தாண்டி, பட்டம் படித்த  என்னை
கல்யாணம் மீண்டும் தள்ளியது ஒரு இருட்டறையில்
இரண்டாம் முறை பிரிகிறேன் என் தாய் வீட்டை
அழுவதில்லை என்று சபதம் எடுத்தும்
இரண்டாம் முறை அழுகிறேன் எனது தாய் வீட்டின் பிரிவால்.
இன்றும் உலகம் சிரிக்கிறது என் திருமணம் என்று.

நான் சந்தோசமாய் வாழ்கிறேன் என்று நிருபிக்க
நான் பட்ட பாடு தான் என்ன
என் தாய்க்கு மட்டுமே தெரியும்

சந்தோசம் சுமையாய் மாற
நானும் இமையை மூடாமல்
சுகமாய் சுமக்கிறேன் என் மகவை.

நான் களித்த ஐயிரண்டு மாதம்
பின் வந்ததோ பிரம்மனின் பிரம்படி
என்னும் பிரசவ வலி.
இன்றும் அழுகிறேன் ஊர் சிரிக்கிறது
எனக்கு பிரசவம் என்று பரவசம் அவர்களுக்கு


பிரசவத்தால் சவமாய் போன நான்
மூன்றாம் முறையாக பிறந்த வீட்டை பிரிகிறேன்.
இன்று நான் அழுக வில்லை அதனால் ஊர் அழுகிறது.
கடவுளின் கருணை தான் என்ன
இருளாய்  இருக்கும் இவ்வுலகிற்கு
என்னையே நெருப்பின் வெளிச்சமாய்
தந்தான் இவ்வுலகிற்கு.
இனி என்றும் என் வாழ்வில் இருள் இல்லை.


வேதாந்தி





 




3 comments:

  1. பெண்மையின் பெருமை கூறும் அழகிய படைப்பு....

    ReplyDelete
  2. வேதாந்தி , எனக்கு போறாளே பொன்னுத்தாயி ஞாபகம் வருது, சோகத்தப் புழிஞ்சிட்டீங்க

    ReplyDelete
  3. மகேந்திரன் மற்றும் சத்யா,

    நன்றி. என் நண்பர்கள் ஆண்களும் கருவறையில் இருந்து தானே வருகிறோம். ஏன் பெண்களை மட்டும் இப்படி சொல்லுகிறீர்கள் என்றார்கள். நீங்கள் இருவரும் மாறுபட்ட கருத்தை சொல்லாமல் நான் உணர்ந்ததை சொல்லி இருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி.
    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!