Friday, May 20, 2016

கிரீன்ஸ்பரோ நால்வர்

இந்த வாரம் வேலை நிமித்தமாக வடகரோலினாவில் இருக்கும் கிரீன்ஸ்பரோ என்ற ஊருக்கு சென்றிருந்தேன். வேலை முடிந்ததும் சக ஊழியர்களுடன் மாலையில் அந்த ஊரின் உள்ளே ஒரு சுற்று போகலாம் என்று நடந்தோம். ஒரு தெருவுக்கு பெயர் பிப்ரவரி 1-ம் தெரு. இதில் ஏதோ கதை இருக்கலாம் என்று ரிச்மண்டில் இருந்து வந்திருந்த சக ஊழியர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு ஏதும் தெரிந்திருக்க வில்லை. அந்தத் தெருவில் ஒரு சம உரிமைப் போராட்ட அருங்காட்சியகம்(civil rights movement museum) இருந்தது.

நிச்சயமாய் ஏதோ கதை இருக்கவேண்டும் என்று நாம் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவரிடம் அலைபேசியில் முறையிட்டேன். கண் முன்னே விரிந்தது 1960 பிப்ரவரி ஒன்றாம் தேதி நடந்த ஒரு சம்பவம். அந்தக் காலத்தில் வெள்ளையர்களுக்கான உணவகங்கள் இருந்தன. அவற்றில் கருப்பின மக்களுக்கு அனுமதியில்லை. அவ்வாறான ஒரு உணவகம் உல்வொர்த். உல்வொர்த்தில் நான்கு  கருப்பின கல்லூரி மாணவர்கள் போய் உட்கார்ந்து கொண்டு உணவு கொடுக்கும்வரை போகமாட்டோம் என்று போராடினார்கள்.  வன்முறையில்லை, ஒரு கோஷம் இல்லை. பதட்டமில்லாமல் ஆரம்பித்தது இந்தப் போராட்டம். தினமும் போய் உட்கார்ந்து உணவு கேட்பது. கொடுக்கும்வரை போகமாட்டேன் என்று உட்கார்ந்து இருப்பது. இப்படி ஆரம்பித்த போராட்டம் விரைவில் வடகரோலினாவின் மற்ற ஊர்களுக்கு பரவியது. தொடர்ந்து பல தென் மானிலங்களுக்கும் பரவியது - நம் ரிச்மண்ட் உட்பட.

அனைத்து ஊர்களிலும் இதே கதைதான். போய் உட்கார்ந்து கொண்டு உணவு பரிமாறும்வரை போகமாட்டேன் என்பது... இதனால் இந்த உணவகங்கள் நஷ்டத்தில் போக ஆரம்பித்தன. அதனால் மெதுவாக உணவகங்கள் இந்த பிரிவினை பழக்கத்தை கைவிட ஆரம்பித்தன. இந்த கிரீன்ஸ்பரோ நால்வர்களுக்கு உணவு பரிமாற மறுத்த அந்த மேசையை வாஷிங்டன் ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்களாம்.

 என் சக ஊழியர்கள் மெத்தப் படித்தவர்கள்தான். ஆனாலும் அவர்களுக்கு இந்தக் கதை தெரிந்திருக்கவில்லை.  அனைவர்க்கும் அலபாமா மாண்ட்காமரியில் ரோஸா பார்க்கின் பேருந்துப் பயணம் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கதை தெரியவில்லை. இது மாதிரி எத்தனையோ கதைகள் பல ஊர்களில் இருக்கலாம். வெளியில் தெரிவதில்லை.

இந்த சம்பவத்தினால் எனக்கு நான் அமெரிக்கா வந்த புதிதில் நடந்த ஒன்று நினைவுக்கு வந்தது. அப்போது என்னுடம் சில மராத்தியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் தீவிரமான சிவசேனை பக்தர்களும் இருந்தார்கள். ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு சுதந்திரப் போராட்டத்திற்கு திரும்பியது. அவர்களில் ஒருவன் ஒரு போடு போட்டான். நீங்கள் தெற்கே அனைவரும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகள், சுதந்திரத்திற்கு போராடவில்லை என்றான். இன்னொரு மேதாவி உங்கள் ராஜாஜி ஆங்கிலேய ஆட்சி நீடிப்பதுதான் நல்லது என்று கருதினார் என்றான். நான் ஆச்சரியத்தில் வாயைப்  பிளந்தேன். 

சரி கொஞ்சம் இவர்களுடன் விளையாடலாம் என்று ஆமாமய்யா உங்கள் மராத்திய, மும்பாய் மக்களால்தான் நமக்கு சுதந்திரம்  கிடைத்தது. தெற்கே நாங்கள் எல்லாம் தொடைநடுங்கிகள். ஒன்றுமே செய்யவில்லை என்றேன். ஒருவன் கொஞ்சம் யோசித்தான். இல்லை இல்லை ஒருவர் இருந்தார் என்றான். யாரடா என்றேன். பா  பா ர தியோ என்னவோ வரும் என்றான். சுப்ரமண்ய பாரதியா? ஆமாம் அவரேதான். முண்டாசு கட்டி பெரிய மீசை வைத்திருப்பான் என்றான். மனசுக்குள் மகாகவியை வணங்கிவிட்டு சொன்னேன்.  அந்த ஆள் இருப்பதிலேயே பெரிய தொடைநடுங்கி, அவரை கைது செய்ய வந்தபோது பயந்து பாண்டிச்சேரிக்கு ஓடிவிட்டார் என்றேன்.  அனைவரும் சிரித்தார்கள். 

அப்போது ஒருவனுக்கு கொஞ்சம் பொறி தட்டியது. நான் கிண்டல் செய்கிறேன் என்று புரிந்து கொண்டான். உனக்கு இந்த பெயர் தெரியுமா அந்தப் பெயர் தெரியுமா என்று சில மராட்டிய சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள் சொல்லிக் கேட்டான். எனக்கு அவர்களில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. இவர்களெல்லாம் புகழ் பெற்ற மராத்திய வீரர்கள். இவனுக்கு இவர்களை தெரியாத மாதிரி அந்த ஊர் வீரர்கள் பற்றி நமக்கும் தெரியாமலிருக்கலாம் என்றான் மற்றத் தோழர்களிடம்.

அப்படி யார் யார் என்று கேட்டான். நான் வாஞ்சி நாதன், கொடி காத்த குமரன், வ.உ.சி போன்ற சில பெயர்களையும் அவர்களின் போராட்டங்களையும் கொஞ்சம் சொல்லிவிட்டு நீ பழித்த ராஜாஜியை காந்தியின் மனசாட்சியின் காவலர் என்பார்கள் தெரியுமா என்றேன்.  அவர்களை கேலி செய்தேன் - என்னவோ நீங்கள்தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தது போல் அளக்கிறீர்களேடா!

நீங்கள் ஒரு புது இடத்திற்கு போனால் அந்த ஊர் விஷேசம் என்ன என்று  கேளுங்கள். இது மாதிரி கதைகள் கிடைக்கக்கூடும். கிரீன்ஸ்பரோவில் இருந்த ஒரு வளைவுச் சின்னம். பெரிது படுத்திப் பாருங்கள். அமெரிக்க வரலாறே தெரியும் :-)




Tuesday, May 10, 2016

மீனாவுடன் மிக்சர் 27: காமாவுக்கு சோமா!

இப்படி ஒரு சவாலை நான் எதிர்ப்பார்க்கவே இல்லையே!  இந்த மனுஷனை என்ன தான் செய்யறது?

சின்ன வயசுல என் கூட பிறந்தவங்களோட  நான் போடாத போட்டியா? ஜெயிக்காத சவாலா?  ஒவ்வொரு ராத்திரியும் வீட்டு கூடத்துல தொங்கற அந்த ஒத்த உஷா சீலிங் fan நேர் அடியில இடம் பிடிச்சு படுக்கற போட்டியில  எவ்வளவு தில்லுமுல்லு பண்ணி என் தமக்கையோட ஜெயிச்சிருப்பேன்? சரி அப்படியே ஏதோ ஒரு போட்டியில தோத்து போயிட்டா கூட கவுந்து படுத்து அழாம இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படீன்னு தட்டி விட்டுட்டு அடுத்த சவாலை தேடிப்போற நான் இன்னிக்கு வாழ்க்கைல எதிர்ப்பாராத வந்த இந்த போட்டியில் ஸ்தம்பிச்சு போய் நிக்கறது என்னவோ உண்மை.

இந்த நூற்றாண்டிலேயே விஷயத்துக்கு வருவியா இல்ல நான் போயிட்டு நிதானமா அப்புறமா வரட்டான்னு நீங்க கோபமா கேக்கறது எனக்கு காதுல விழறது. ஏன்னா எனக்கு தான் பாம்பு செவியாச்சே!  உங்க நெற்றிக்கண் என் ஐயன் திருச்சிற்றம்பலத்துது  மாதிரி அம்சமா தான் இருக்கு. இருந்தாலும் அதை நீங்க தயவு செய்து மூடியே வைங்க.  இதோ வந்துட்டேன் விஷயத்துக்கு.

இன்னிக்கி என் புலம்பலின் காரணகர்த்தா எங்க ஊர் சாஸ்த்ரிகள்.   நல்ல மரியாதைக்குரிய மனிதர்.  வேதங்களை கரைச்சு குடிச்சவர்.   எங்க குடும்பத்தோட வைதீக காரியங்களை முன்னின்று அருமையா செய்து வைப்பவர்.  ஆனால் அதோட நிறுத்தாம  கல்யாணம் ஆகி கடல் தாண்டி வந்த என் வாழ்க்கைல கடந்த பத்து வருஷமா தமிழ் சீரியல் வில்லி மாதிரி விளையாடுவது தான் முடியலை.

இவர் சாதுர்ய போன் (அதான் smart phone) எப்போ வாங்கினாரோ அப்போ ஆரம்பிச்சது எனக்கு ஏழரை நாட்டு சனி.  இந்த குட்டி டப்பாவுக்குள்ள இத்தனை அதிசயமான்னு ஆச்சர்ய குறி போட்டு அதுக்குள்ள முழுசா ஐக்கியமானவர்  சில வாரங்களுக்கு பின்னாடி  அந்த குகையிலேர்ந்து வெளியே தலை தூக்கின போது இன்றைய கல்லூரி பசங்களை எல்லாம் தூக்கி சாப்படற மாதிரி சமூக வலைத்தள வல்லுநரா தான் வெளியே வந்தார்.   இன்னிக்கு வைதீகம் போக மிச்ச நேரம் எங்க குடும்ப மரத்தில் (family tree) இருக்கற எல்லாரோட (குஞ்சு குளுவான் உட்பட) பிறந்த நாள், மண நாள் மேலும் பல முக்கிய நாட்களுக்கு whatsapp, facebook மற்றும் ஈமெயில் மூலமா முதல் ஆளா வாழ்த்து சொல்வதை தொழிலாக செய்கிறார்.

காமாவுக்கு சோமா அப்படீங்கற வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?   என் பெரியப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சொற்சொடர் அது.  எங்க வீட்டு மூணாவது தெருவில் உள்ள ஒரு மாமி ஒரு நாள் அவங்க நாத்தனாரோட மச்சினர் பெண் கல்யாணத்துக்கு எங்களுக்கு பத்திரிகை வச்சு கூப்டுட்டு போனா.   அந்த மாமி கிளம்பி வாசல் கேட் கூட மூடியிருக்காது.  நானும் என் தமக்கையும் உடனே ஓடி போய் உள் அலமாரியை திறந்து அந்த கல்யாணத்துக்கு  எந்த புடவை கட்டலாம்னு முக்கியமான ஒரு சர்ச்சையில இருந்த போது தான் எங்க பெரியப்பா 'காமாவுக்கு சோமா' வை பத்தி எங்களை உக்கார வச்சு விளக்கமா சொன்னார்.   அதை சிரத்தையாக கேட்டுட்டு நாங்க விடாம கல்யாணம் போய் வந்தோம்ங்கறது வேற விஷயம்.

போன மாசம் என் சின்ன பெண்ணோட பிறந்த நாள்.  நான் பார்த்து பார்த்து அவளுக்கு பிடிச்ச பரிசுகள்  மற்றும் துணிமணிகள் வாங்கி முதல் நாளே பாக் செய்து ஆசையா அவள் எழுந்ததும் முதல் ஆளா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருந்தா, எங்க சாஸ்த்ரிகள் கத்தி கபடா இல்லாமலே என் கழுத்தை சூப்பரா வெட்டி சாய்த்தார்.   நடு ராத்திரி  12 மணிக்கு போர் களத்தில் படை வீரர்கள் மாதிரி வரிசையா whatsapp, email மற்றும் facebook மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை சகட்டு மேனிக்கு தட்டி விட்டிருக்கார்.  ஒரு தாய் என்ன தான் செய்ய முடியும்?

போன வருஷம் கொந்தளிச்சு எழுந்தேன் நான். இன்னிக்கு நானா நீங்களா பார்க்கலாம்னு கங்கணம் கட்டி எங்க திருமண நாளுக்கு என் கணவர் கண் திறந்ததும் அவர் போன் பாக்கறதுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லி "அப்பாடா, ஒரு வழியா சாஸ்திரிகளை beat பண்ணிட்டேன்" னு சந்தோஷமா கை தட்டி கெக்கலி கொட்டின என்னை 'ஐயோ பாவம்' ங்கற மாதிரி பார்த்தார் என் கணவர். விசாரித்ததுல முதல் நாள் இரவே சாஸ்திரிகள் ஈமெயில் வாழ்த்து அனுப்பிட்டாராம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு இல்லைன்னு என் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லற நான் காந்திஜியின் கொள்கைகளை கடைசி வரை விடாமல்  கடைப்பிடிக்க  சாஸ்த்ரிகள் விடுவாரா?  காலம் தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்.

-- மீனா சங்கரன்

Note:  There is absolutely no offense intended towards the subject of the post.  He is a highly revered man in the family and has my utmost respect.  The post is simply meant as light entertainment and should be taken as such with a pinch of salt. :-)