Showing posts with label கிறிஸ்துவம். Show all posts
Showing posts with label கிறிஸ்துவம். Show all posts

Saturday, September 22, 2012

கை வந்த கலை

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை நகரத்துக்குப் போயிருந்தேன். எந்த நகரத்துக்குப் போனாலும் அந்த நகரத்தில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்வது என் வழக்கம். குறிப்பாக மதுரை நகரத்தில் பழைய நாடக நூல்களும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்களும் நிறையவே கிடைக்கும்.அந்த வகையான புத்தகங்களைத் தேடிச் சென்ற எனக்கு இந்த முறை சற்று ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஆனால் எதிர்பாராவிதமாக வேறு ஒரு நூல் கிடைத்தது. அது சைவ சித்தாந்தம்
பற்றிய ஒரு சிறிய புத்தகம். ஏற்கனேவே என்னிடம் சைவ சித்தாந்தம் பற்றிய புத்தகங்கள் இருந்த போதிலும் நான் அந்த புத்தகத்தை வாங்கினேன். அதை
நான் வாங்கியதற்குக் காரணம் சைவ சித்தாந்தம் பற்றிய அந்த புத்தகத்தை
எழுதியவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு கிறிஸ்தவர் சைவ சித்தாந்தம் பற்றி என்ன
எழுதியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் வாங்கினேன்

தங்கி இருந்த அறைக்குத் திரும்பி வந்து புத்தகத்தை படிக்கத் தொடங்கியதும் வேறு சில உண்மைகளையும் தெரிந்து கொண்டேன். கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கு சமயப் பிரச்சாரம் செய்ய பயிற்சி கொடுக்கும் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி தெளிவு கொடுப்பதற்காக அந்த புத்தகம் எழுதப்பட்டது என்ற செய்தியை தெரிந்து கொண்டேன். இந்த
வகையில் வைணவம் பற்றியும், மற்ற இந்திய சமயங்கள் பற்றியும் பல புத்தகங்களை அவர்கள் எழுதிவெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் அறிந்தேன். இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ மிஷினரிகள் நடத்தும் பாதிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில்உள்ள மற்ற சமய நிறுவனங்கள் வைணவமோ, சைவமோ, அல்லது பிற சமயத்தார்களோ இத்தகைய பயிற்சியை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதாக நான் கேள்விப் பட்டதில்லை. பொதுவாக எல்லா சமய நிறுவனங்களும் மற்ற சமய நூல்களைப் படிக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். சமண சமயத்தவர் எழுதிய நீதி நூல்களைக் கூட படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சைவ சமயத் தலைவர்கள் கூறியிருப்பது பலருக்கும் தெரியும். வைணவர்களும் அப்படியே என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்என்று நினைத்தேன்.  16,17ம் நூற்றாண்டுகளில் பல ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவுக்கு வாணிபம்  செய்ய வந்த பிறகும்,குறிப்பாக, பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நாட்டில் வேரூன்றிய பிறகும் பல மேல்நாட்டு அறிஞர்கள் இந்திய சமய நூல்களை படிக்கத் தொடங்கினார்கள். இந்திய சமயங்களின்
அடிப்படைத் தத்துவங்களையும் இந்திய சமூக அமைப்பையும் தெளிவாகப் புரிந்து கொள்வதிலும் அதிக அக்கறை காட்டினார்கள். ஆனால் அனைவரும் ஒரே நோக்கத்தோடு படித்தார்கள் என்று சொல்வதற்கில்லை.

இந்திய சமயங்களின், குறிப்பாக இந்து சமயத்தின், பலவீனங்களை
கண்டறியும் நோக்கத்தோடும் இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தோடும் அவர்கள் இந்திய சமயநூல்களைப் படிக்கத் தொடங்கினார்கள் என்பதுதான் உண்மை.

சைவ, வைணவ, அத்வைத சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்தால்தான் இந்தியர்களை புரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்தோடு பாதிரியார்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி பாடம் நடத்தப்பட்டது.

சாதாரண மக்களுக்கு அவர்களுடைய பழக்கவழக்கங்களிலிருந்து உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகளையும் கூறினால்தான் எளிதில் விளங்கிக் கொள்வார்கள். இந்த சாதாரண உண்மையை கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். பல நூற்றாண்டுகளாக மற்ற மதத்தினரை தன் மதத்துக்கு மாற்றுவதில் தனிக் கவனம் செலுத்திய அவர்களுக்கு இது கை வந்த கலையாக இருந்தது. தமிழ்நாட்டில் மதப் பிரச்சாரம் செய்து தமிழுக்கும்தொண்டு செய்த வீரமாமுனிவர் பிராமணர் போல் உடை அணிந்து பூணுலுடனும் காவி உடையுடனும் வாழ்ந்தார். காலில் கட்டையால்  ஆன காலணி அணிந்துதான் நடந்தார் என்பது நன்கறிந்த செய்தியாகும்.

தங்கள் மதத்தை பரப்ப அவர்கள் இந்திய சமயங்களை மிக மோசமாக கொச்சைப் படுத்தினார்கள். தப்பித் தவறி அவர்களுடைய பார்வையில் நல்லதாகப் பட்ட அம்சங்களை இந்துக்கள் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கியதாகவும், காப்பி அடிக்கப் பட்டதாகவும் கூறிப் பிரச்சாரம் செய்தார்கள்.

உதாரணத்துக்கு ஒரு செய்தி.

ஹோரஸ் ஹேமாஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் 1840ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.

இந்திய சமயங்களில் காணப்படும் குற்றம், குறைகளை மெய்ப்பித்துக் காட்டி இந்திய மக்களை கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும்படி தூண்டும் பொருட்டு இந்திய சமயங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வது மிக முக்கியமான கடமையாகும். இருளில் மூழ்கிக் கிடக்கும், அதே நேரத்தில் மதிநுட்பம் மிக்க இந்தியர்களை அவர்களுடைய சமயப் பொய்மைகளிலிருந்து காப்பாற்றி கிறிஸ்தவ சமய உண்மைகளை உணரச் செய்ய வேண்டும்.

இது அவருடைய உரையின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். பலகலைக் கழக உரையே இந்த தரத்தில் இருந்தால் இந்தியாவில் பாமர மக்களிடையில் பிரச்சார மேடையில் எப்படி பேசியிருப்பார்கள் என்று அனுமானம் செய்து கொள்ளலாம். இவர்தான் விஷ்ணு புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல புராணங்களை ஆராய்ச்சி செய்து பல (கிறிஸ்தவ மதப் பிரச்சார ) கட்டுரைகளை எழுதினார்.

இவருடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கல்கத்தா பல்கலைக் கழகம் இந்திய சமயங்களின் அடிப்படைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு துறையை ஏற்படுத்தியது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல ஐரோப்பிய நாட்டு அறிஞர்கள் இந்திய சமயங்கள் பற்றி ஆரரய்ச்சி கட்டுரை எழுதி வெளியிட்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு பல பாதிரியார்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் பல மதப் பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிட்டனர். கிருஷ்ண பகவான் மற்றும் கிருஷ்ண னுடைய பிறந்த நாள் பண்டிகை(கோகுலாஷ்டமி ) பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிய வெபர்  என்பவர் வைணவ சமயத்தில் உள்ள பக்தி மார்க்கம் பற்றிய கொள்கைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்று எழுதினார்.

(An investigation into the origin of kirishna janmaashtami)

இந்த முறையில் எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் உலகத்தில் எந்த மூலையில் ஏதாவது நல்ல அம்சம் இருந்தால் அது ஐரோப்பிய நாகரீகத்தின் பங்களிப்பு என்றும், கிறிஸ்தவ சமயமே மனித குலத்தை நாகரீகப் படுத்த தோன்றிய முதல் மதம் என்றும் கூசாமல் எழுதினார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய வல்லது கிறிஸ்தவ சமயம் மட்டுமே என்று பிரச்சாரம் செய்தார்கள்.

மாக்ஸ் முல்லர் என்ற மேல்நாட்டவரும் இதற்கு விலக்கல்ல. லண்டனில் உள்ள இந்திய செயலாளருக்குஎழுதிய கடிதத்தில் அவர் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டார். இந்து சமயம் கூடிய சீக்கிரம் அழியப் போகிறது. அந்த காலிஇடத்தை இட்டு நிரப்பும் கடமையை மேல்நாட்டு கிறிஸ்தவ சமயம்தான் செய்தாக வேண்டும். இதற்கான எல்லா உதவியையும் அரசாங்கம்
செய்ய வேண்டும்.

இவர்தான் கீழ்த் திசை நாடுகளின் புனித நூல்கள் என்ற தொகுப்பை தயாரித்தார். அந்த நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் இவருடைய நோக்கத்தையும் சமயச் சார்பையும் தெளிவாகப் புரிந்து
கொள்ளலாம். ஆராய்ச்சி கட்டுரை என்ற பெயரில் இத்தகையவர்கள் எழுதிய
எல்லாவற்றிலும் மேல் நாட்டவர்கள் மட்டுமே உலகத்தை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதை காணக் கிடக்கிறது.

நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிக் கிடந்த ஆப்பிரிக்க நாடுகளைப் போல்
அல்லாமல் இந்தியாவில் அவர்கள் முழுமையான நாகரீகம் உள்ள சமுதாயத்தை கண்டார்கள்.இங்கே அவர்களுடைய கடையை விரித்து ஆன்மீக வியாபாரம் செய்ய இந்து சமய நிறுவனங்களும், கல்வியில் சிறந்த ஒரு சில மேன்மக்களும் தடையாக இருந்ததை அறிந்தனர். அந்த தடைகளை உடைத்தெறிய அவர்கள் செய்த முயற்சியாக பல  ஆராய்ச்சி( ?) கட்டுரைகள் அமைந்தன.

எல்லா மேல்நாட்டு அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று
கூறமுடியாது. சிலர் ஒவ்வொரு சமூக வளர்ச்சியிலும் பல்வேறு சமயங்கள் எப்படி தொழிற்பட்டிருக்கிறது என்பதை கண்டறியும் ஆர்வத்தில் ஆராய்ச்சி
மேற்கொண்டனர்.

இந்த வகையில் ஆராய்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல இந்திய நாட்டு அறிஞர்கள் மறுப்புக் கட்டுரைகள் எழுதினார்கள். ஆர் ஜி.பண்டார்கர் என்ற அறிஞர் இவர்களில் மிக முக்கியமானவர். இந்து சமயம் தன் பலவீனங்களை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியர்களுக்கு அறிவுரை கூறினார். மற்ற சமயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்இந்திய சமயங்களின் நிறை, குறைகளை கண்டறிய வேண்டும் என்றார் அவர். பிரஜெந்திரநாத் என்ற அறிஞர் ரோம் நகரத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பேசும்போது கிறிஸ்தவ சமயத்தோடு ஒப்பிடும்போது,கீழை நாட்டு சமயங்கள் மிகச் சாதாரணமானவை என்ற மேல்நாட்டு அறிஞர்கள் கருதுவது பற்றி கடுமையாக விமர்சித்தார். 20. மநூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழி காட்டக் கூடிய விலை மதிப்பற்ற அம்சங்கள் இந்திய சமயங்களில் உண்டு என்று கூறி பதிலடி கொடுத்தார்.


அச்சுத் தொழில் ஓரளவு வளர்ந்த பிறகும் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் மட்டுமே அச்சகங்களை வைத்துக் கொள்ள உரிமை பெற்றிருந்தார்கள். உள்நாட்டவர்கள் அச்சு யந்திரங்கள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட யந்திரங்கள் விலை மிகுந்திருந்தது. இந்தியர்கள் அச்சகங்களை இயக்க பெரும் தொகையை காப்புத் தொகையாக அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிதாயிற்று.


பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான பிரசுரங்கள் அச்சடிக்கப் படுவதை
தவிர்க்கவே இத்தகைய கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. இந்த வகையான கட்டுப்பாடுகள் இல்லாத கிறிஸ்தவ மிஷினரிகள் நிறைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தன. 19 ம நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகளில் (1880 to 1900 ) வெளியாகிக் கொண்டிருந்த பிரசுரங்களில் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்டவை கிறிஸ்தவ சமயப் பிரச்சார ஏடுகள்தான் என்ற உண்மை இன்று நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் காரணமாக இந்திய சமயங்களை மேலை நாட்டு சமயங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் முறையும் வளரத் தொடங்கியது. அதன் விளைவாகத்தான் பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் வளர்ந்தன. சாதி என்ற அமைப்பு இந்து சமயத்தை பலவீனப் படுத்தி சமூக ஒற்றுமையை சிதைக்கிறது என்ற செய்தி மக்களிடம் பரவியது. அரசாங்க ஆதரவோடு கிறிஸ்தவ மிஷினரிகள் தொடங்கிய சமயப் பிரச்சாரமும்,இந்து சமய எதிர்ப்பு பிரச்சாரமும் இந்திய மக்களிடம் முதன் முறையாக ஒரு நெருடலை ஏற்படுத்தியது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நிலைபெற்று இறுகிப் போன சாதி அமைப்பில் இந்த காலகட்டத்தில்தான் ஒரு கீறல் விழத் தொடங்கியது. ஆனால் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடக்கூடிய அளவில் அது வளரவில்லை.

பிற்காலத்தில் இந்து சமயத்தவர்களும் பொறுப்புள்ள பொதுவாழ்வு பிரமுகர்களும் அது பற்றி கவனமாக சிந்திக்கத் தொடங்கினார்கள். கிறிஸ்தவ மிஷினரிகள் இந்து மதத்தின் மீது தொடுத்த பிரதானமான தாக்குதல் இந்த சாதி வேறுபாடு மீதுதான். ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்கள் மத்தியிலும் சாதி அமைப்பும் அதன் அடிப்படையிலான வேறுபாடும் இன்றும் தொடர்கிறது என்பதுதான் உண்மை

படிப்படியாக இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் சகல மக்களிடமும் கல்வி வளர்ச்சி பற்றிய நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

பர்மா,சிலோன் (இன்றைய மியான்மர், ஸ்ரீலங்கா ) போன்ற மற்ற காலனி நாடுகளிலும் பௌத்த சமயத்தவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் புத்தருடைய வாழ்க்கை வரலாற்றையும் பௌத்த மதக் கொள்கைகளையும் திரித்தும்,மலினப் படுத்தியும் பல நூல்களை வெளியிட்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இனக்குழுக்களின் சச்சரவைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை வளர்த்து அந்த மக்களை அடிமைப் படுத்திய வரலாறு மிகக் கொடுமையானது. ரத்தக் கறை படிந்த அந்த வரலாறு பற்றி எழுதிய ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளருடைய வாசகத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மதப் பிரச்சாரத்தின் சுயரூபத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி தோல் உரித்துக் காட்டும் அந்த வாசகம் இதுதான்.

அவர்கள் வந்தபோது எங்கள் கையில் நிலம் இருந்தது,
அவர்கள் கையில் பைபிள் இருந்தது.
இப்பொழுது எங்கள் கையில் பைபிள் இருக்கிறது.
அவர்கள் கையில் நிலம் இருக்கிறது.
- மு.கோபாலகிருஷ்ணன்