Tuesday, August 28, 2012

செய்திகள் வாசிப்பது - முரளி - 3

ஆரத்தியின் திருமணம் - பகுதி 2.

"என்னப்பு, டக்கு டக்குன்னு ரெண்டு-மூனுன்னு பதிவைப் போட்டு வாங்கரே, என்ன சமாசாரம்"ன்னு நீங்க கேக்க நெனைக்கரது எனக்கு தெரியும்.  அப்படி ஒரு நெனைப்பே இல்லைன்னாலும், இருக்கரமாதிரி  நடிக்கவாவது செய்ங்கப்பா.

நீங்க நெனைச்சாமாதிரியும் அதுக்கு நான் பதில் சொன்னா மாதிரியும் இந்த பதிவுன்னு வெச்சுக்கங்க.

என்னோட சில அன்பு நண்பர்கள் ஃபோன் பண்ணி, "யோவ், நாங்க ஆரத்தி கல்யாணத்துல டான்ஸ் ஆடினோம்னு பொத்தாம் பொதுவா சொன்னியே, அதுக்கு முன்னாடி நாங்க எவ்வளவு பொறுமையா சாப்பாட்டை வெளுத்து வாங்கினோம்னு சரியா சொன்னியா? அதுல என்ன என்ன வெரைட்டின்னு சொன்னியா? அது முடிஞ்சதும், ஸ்நாக்ஸை ஒரு கட்டு கட்டினோமே அதை பத்தி எழுதினியா இல்லை? அதுல என்ன ஐட்டம் இருந்ததுன்னு எழுதினியா?  அட அதெல்லாம் போகட்டும், இதை எல்லாம் பார்த்து பார்த்து ஏற்பாடு பண்ணின  ஷீலாவைப் பத்தி எழுதாம உன் ஃப்ரெண்ட் கார்த்தியைப் பத்தி மட்டும் எழுதினியே, என்ன பொட்டி கிட்டி வாங்கினியா?   கார்த்தியோட ஸ்பீச்சைப்  பத்தி எழுதினியா? அவர் பையன் அர்ஜுன் பேசி வெளுத்து வாங்கினானே அதைப் பத்தி எழுதினியா" ன்னு கேட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையை கேள்வி கேட்டா மாதிரி கேட்டுட்டானுவ.

இதுல இவங்க சொல்லாத ஒன்னு மாலை மாத்தும்  விளையாட்டையும் விடாத நடத்தினதை நான் சொல்லாததை யாரும் கண்டுபிடிச்சி திட்டலை.  நீங்களும் சொல்லாதீங்க.  அப்புறம் அதுக்கும் சண்டை பிடிக்கப் போறாங்க.

ஒரே ஒரு நண்பர், "ஏம்பா இவ்வளவு எழுதினியே, சாயங்காலம், வெஸ்டர்ன் ஸ்டைல்ல நடந்த கல்யாணத்தைப் பத்தி ஒன்னும் சொல்லலியே அதப் பத்தியும் சொல்லிடு.  ஏன்னா நீ நல்லா அனுபவிச்சு ரசிச்சு இந்தக் கல்யாணத்தைப் பார்த்துட்டு இருந்தே" அவர் இப்படி சொல்லவும், எனக்கு என்னவோ, என்னோட கதைக்கு ஒரு 'சாகித்ய அகாடமி' அவார்ட் கொடுத்தா மாதிரி இருந்தது, அதுவும் ஒரு ரெண்டு செகண்டு தான், உடனே அவர், "நாங்க எல்லாம், வெள்ளிக்கிழமை காலைல இருந்து சனிக்கிழமை சாயங்காலம் ஒரு 7-7:30 மணி வரைக்கும் கல்யாணத்துல அவ்வளவு வேலை பார்த்திட்டிருந்தோம், கல்யாணத்தை சரியா பாக்க முடியலை.   நீதான், ஒரு வேலையும்  செய்யாம பெரிய எழுத்தாளன் கணக்கா வேஷ்டி ஜிப்பா மூக்குக் கண்ணாடியோட போஸ் கொடுத்திட்டு இருந்தே, அதனால கண்டிப்பா கல்யாணத்தை நல்லா வேடிக்கை பார்த்திருப்பே, நீ ப்ளாகுல எழுதினா அதை படிச்சுக்கரோம்"ன் சொல்லி என் சாகித்ய அகாடமி கனவுல கத்தியை சொருகிட்டார்.

எல்லாரும் (யார் அந்த எல்லாரும் னு எல்லாரும் எல்லார் கிட்டயும் கேக்கரமாதிரி யாரும் யார் கிட்டயும் இனிமே கேக்காதீங்க.  உஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!)  கேட்ட எல்லா கேள்விகளுக்கு பதில் சொன்னா விடிஞ்சுடும்.

கார்த்திக்கு க்ரியேடிவிட்டி அதிகம்னா, அதை தூண்டிவிட்டு அதை அணையாம பார்த்துக்கரது ஷீலான்னு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதுலயும் இந்தக் கல்யாணத்துல அவங்க எப்படி டென்ஷனே ஆகாம சிரிச்சுகிட்டே எல்லா வேலையையும் செஞ்சாங்கன்னு யோசிச்சா ஆச்சர்யமா இருந்தது.  ஒரு சின்ன சமாச்சாரம் சொல்லிட்டு அடுத்த விஷயத்துக்கு போயிரலாம்னு இருக்கேன்.  கமல் நடிச்ச மூன்றாம் பிறை படத்துக்கு அவருக்கு 'பாரத்' - இந்தியாவுல அந்த வருடத்துல வந்த படங்கள்ல நல்லா நடிச்ச ஹீரோவுக்கு கொடுக்கர பரிசு, கெடச்சதுக்கு படத்தோட டைரக்டர் பாலு மகேந்திராவை பேட்டி காண்றாங்க அப்போ அவர ஒருத்தர் கேட்டார், இந்தப் படத்துல கமல் கடைசி சீன்லதான் கொஞ்சம் ஏதோ நடிச்ச மாதிரி இருந்துது அதுக்கு அவருக்கு 'பாரத்' அவர்டா?  ஶ்ரீதேவி படம் பூரா சூப்பரா மனநிலை சரியில்லாத ஒரு சின்னப் பொண்ணா நடிச்சங்களே அதுக்கு அவங்களுக்கு ஏன் 'ஊர்வசி' அவார்ட் தரலைன்னு.  இதுக்கு பாலு மகேந்திரா சொன்னார், "ஶ்ரீதேவிங்கர காட்டாறு எப்படி வந்துச்சுன்னு நீங்க படத்துல பார்த்தீங்க, அந்தக் காட்டாற்றோட இருக்கர கமல் தனக்கும் நடிக்கத் தெரியுங்கரதுனால நடிச்சிருந்தா அந்தக் கேரக்டர் கெட்டுப் போயிருக்கும், அவர் தன்னால இப்படி அமுக்கமாவும் நடிக்க முடியும்னு நிருபிச்சுட்டு அவர் கடைசி சீன்ல ஶ்ரீதேவியோட நிலைமைக்கு வந்ததும் ஶ்ரீதேவியை தூக்கி சாப்பிடரமாதிரி நடிச்சார் அதனால அவருக்கு பாரத் அவார்ட் கொடுத்தாங்க.  ஶ்ரீதேவிக்கு ஏன் கொடுக்கலைன்னு நீங்க எல்லாம் அந்தக் கமிட்டிக்கு தந்தி அடிங்க"ன்னா ர்.  அந்த ரிப்போர்டருக்கு இருந்த குறை உங்களுக்கெல்லாம் இருக்கக் கூடாதுன்னு, ஶ்ரீதேவி மாதிரி வேலை பார்த்த கார்த்திக்கு அவார்ட் கொடுத்துட்டு, கமல் மாதிரி அநாயசமா எல்லா வேலையையும் பார்த்த ஷீலாவுக்கு அவார்ட் தரலை.  யப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.  ஒரு கவனக் குறைவுல விட்டுடேன், அதப் பெரிசாக்கி, எங்க வூட்ல வேர சொல்லி அவங்க பங்குக்கு இடிக்க.  யம்மா, இனிமே அடிவாங்க நம்ம ஒடம்புல சக்தியில்லை.  விட்டுடுங்க.

மத்தியானம் நடந்த வெஸ்டர்ன் கல்யாணம் நான் மொத மொதலா பாத்த வெஸ்டர்ன் ஸ்டைல் கல்யாணம்.  இதுக்கு கோ-ஆர்டினேடர்கள் - ராஜி தேவதாசனும், க்ரிஸ்டஃபர் தேவதாசனும்.  இவங்க இந்த நிகழ்ச்சிக்கு பக்காவா ப்ளான் பண்ணியிருந்தாங்க.  இடது பக்கம் இத்தனை சேர்ஸ், வலது பக்கம் இத்தனை சேர்ஸ்ங்கரது வரைக்கு ப்ளான் பண்ணியிருந்தாங்கன்னா பார்த்துக்கங்க.

மொதல்ல அந்த சேர்ஸ்ல உக்காரதுக்கு மைக்கேல் சார்புல அவரோட அம்மா, அப்பா, தாத்தா பாட்டி வந்தாங்க, ஆரத்தி சார்புல ஷீலா, ஷீலாவோட அம்மா, சகோதரி, அர்ஜுன் வந்தாங்க.  அதுக்கு அப்புறம்,  ஆரத்தி சார்புல ஒரே மாதிரி புடைவை கட்டிகிட்டு 5 பெண்கள் வந்தாங்க அதே மாதிரி மைக்கேல் சார்புல ஒரே மாதிரி குர்தா பைஜாமா போட்டுண்டு 5 பசங்க வந்தாங்க.  அப்புறம் எல்லோரும் எழுந்து நிக்க கார்த்தி ஷீலாவை அழைச்சுண்டு வந்தார்.  மேடைக்கு கீழ மைக்கேலும், ப்ரீஸ்டும் இருந்தாங்க, கார்த்தி வந்து ஆரத்தி கையை மைக்கேல் கைல கொடுத்துட்டு நகர்ந்துட்டார்.  அதுக்கப்புறம் ப்ரீஸ்ட் கல்யாணம்ங்கரது எவ்வளவு முக்கியங்கரதைப் பத்தி சொல்லிட்டு பைபிள்ல இருந்து ஒரு சில வாக்கியங்களப் படிச்சுட்டு, ரெண்டு பேரையும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டுட்டு, அவங்களை உறுதி மொழி எடுத்துக்க வெச்சுட்டு, மோதிரம் மாத்திக்கச் சொல்லி, கல்யாணம் முடிஞ்சாச்சுன்னு சொன்னார்.  இது ரத்ன சுருக்கமா இருந்தாலும், ஒரு ஒழுங்கு இருக்கரதா எனக்குப் பட்டுது.  இதுக்கு அப்புறம்தான் தாகசாந்தி, ஸ்நாக்ஸ், டான்ஸ் (என்கிற உடான்ஸ்) எல்லாம்.

கடைசியா கேக் கட் பண்ணினதும், கார்த்தி வழக்கம் போல நல்லாத்தான் பேசினார், ஆனா அவர் பேச்சை தூக்கி சாப்டு ஏப்பமே விட்டுட்டான் அர்ஜுன்.  மைக்கேலோட ஃப்ரெண்டு ஒருத்தர் பேச வந்துட்டு, டெல்லி தமிழ்காரங்க "எனக்கு அவ்வளவா பேஷ வராது, மன்னிச்சுக்கோங்கோ"ன்னு மழலைத் தமிழ்ல பேசரமாதிரி, ஆரம்பிச்சுட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடி தோத்து போர ரேஞ்சுக்கு பேசி அசத்தினார்.

அடுத்தது தமிழ்நாட்டு விஷயம்:

நித்திக்கும் - ஆதீனம் அருணகிரிக்கும் லாடாய்ன்னு சில பத்திரிகைகள்ல போட்டிருக்காங்க.  நிஜமான்னு தெரியலை.  க்ராணைட் குவாரில ஊழல்ன்னு எல்லாரும் தாம் தூம்னு குதிக்கராங்க.  அதுல   பெரிய தலைன்னு ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.  அழகிரி பையன் தலைமறைவா இருக்கானாம்.  என்னய்யா காமெடி பண்றீங்க, எப்படியா இவ்வளவு பேருக்கு தெரிஞ்ச ஒருத்தன் சட்டுன்னு தலைமறைவாக முடியும்.  இதே ரேஞ்சுல போனா, தாத்தாவும்  சக்கர நாற்காலியோட காணலன்னு சொன்னாலும் சொல்வாங்க.  பாராளுமன்றத் தேர்தல் சீக்கிரம் வரலாம்னு ஒரு புரளி இந்தியாவுல ஓடுது, அதுக்கு ஜெவும் தேர்தல் வந்துட சான்ஸ் இருக்குனு கருத்து சொல்லிட்டு ஒரு நால்வர் அணியை ஃபார்ம் பண்ணியிருக்கார்.  அது எதுக்குன்னு தெரியலை, எப்படியும் இவர்தான் முடிவெடுக்கப் போரார், அப்புறம் எதுக்கு நால்வர் அணி?

தமிழ்ப் படம் நான்
விஜய் ஆண்டனி தயாரிச்சு, நடிச்சு, ம்யூசிக் போட்டு இருக்கர படம் நான்.  கதை Talented Mr. Ripley படத்தோட கதையையும் Taking Lives கதையையும் மிக்ஸ் பண்ணி அங்கங்க திகிலை சேர்த்து, சில இடங்கள்ல திரைக் கதைல சொதப்பி எடுத்திருக்காங்க.  சுமாரா ஆக்ட் பண்ணியிருக்கார் விஜய் ஆண்டனி.  பாட்டு சுமார்ன்னு வெப்ல பல இடங்கள்ல சொல்றாங்க எனக்கு அப்படி ஒன்னும் பெரிசா தெரியலை.  போரடிச்சா பாருங்க.

இனிமே அடுத்த வாரம் அலாஸ்கா பயணக் கட்டுரை 2ல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.


Monday, August 27, 2012

செய்திகள் வாசிப்பது - முரளி - 2

அலாஸ்கா பயணம் பத்தி அடுத்த பகுதி எழுதரதுக்கு முன்னாடி கொஞ்சம் லைட்டா சமீபத்துல ரிச்மண்ட்ல நடந்த ஒரு கல்யாணம் அதுக்கப்பரம் சமீபத்துல நான் பார்த்த சில சினிமா பத்தி எழுதிடரேன்.

ஆகஸ்ட் 25ம் தேதி நம்ம தமிழ்சங்கத்து முன்னாள் செயலாளர், எங்க நாடகக் குழு (தமிழ்த்தென்றல் நாடகக் குழு)வின் ஆஸ்தான இயக்குனர், நடிகர், கதாசிரியர், ஓவியர், யோகா மாஸ்டர், பல மொழி வித்தகர், பண்முகக் கலைஞர், திரு கார்த்திகேயனின் மகள் ஆரத்திக்கும், மைக்கேல் சலாட்டிக்கும் நடந்த கல்யாணத்துக்கு போய் நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு ஒரு வேலையும் செய்யாம,  செஞ்சாமாதிரி ஆஸ்கார் அவார்ட் ரேஞ்சுல நடிச்சுட்டு வரும்போது சாத்துக்குடி பையும் வாங்கிண்டு வந்தேன்.

சாவியின் வாஷிங்டனில் திருமணம் எத்தனைப் பேர் படிச்சீங்களோ தெரியாது, அதை நேர்ல பார்த்தேன்னுதான் சொல்லனும்.  கார்த்தால நம்ம ஊர் மாதிரி கல்யாணம், மத்தியானம் அமெரிக்க ஸ்டைல்ல கல்யாணம்னு கலக்கிட்டாங்க.  மொதல்ல காசியாத்திரைல ஆரம்பிச்சு, ஊஞ்சல், பாலிகை தெளிக்கரது, கூரப்புடைவை தரது, கன்யாதானம்னு நம்மூர் கல்யாணத்தை சூப்பரா நடத்தினார்  நம்ம கண்ணன் சாஸ்திரிகள்.  கடைசியா மைத்துனன் அர்ஜுன் பொரி தர அதை ஆரத்தியும்,   மைக்கேலும்  யாக குண்டதுல இட்டுட்டு எல்லோருக்கும் சாஷ்டாங்கமா கீழ விழுந்து நமஸ்காரமும் பண்ணினாங்க.

கல்யாணம் ஃபங்ஷன்ல,  என்ன ஒரு பர்ஃபெக்ட் ப்ளானிங், என்ன ஒரு டைமிங், என்ன ஒரு அரேஞ்மெண்ட்னு எந்த ஒரு ஏரியாவை பார்த்தாலும் அதை நகாசு பண்ணி அசத்தியிருந்தாங்க.  யார் எந்த வேலை செஞ்சிருந்தாலும் அதுக்கு சூத்ரதாரி, இயக்குனர் எல்லாம் கார்த்திக்னு யாருக்கும் தெரியாத மாதிரி சூப்பரா ஆக்ட் வேற கொடுத்தார்.  நடுவுல ஆரத்தி கூட டான்ஸ் ஆடரேன் பேர்வழின்னு இங்கயும் அங்கயும் நடந்து நடந்தே ஒப்பேத்திட்டார்.

சாயங்காலம் எல்லாரும் தாக சாந்தி பண்ணிட்டு அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு யோசிச்சு, சாப்பிட்ட லஞ்ச், ஸ்நாக்ஸ் எல்லாம் செறிக்கனும்னு டான்ஸ் வேற ஆடினாங்க.  அதுல நாகு, ஹரி, ரவின்னு பல பேர் குதி குதின்னு குதிச்சாங்க அது மாக்கரீனா டான்ஸுன்னு நாம நம்பிடனும்.  (இன்னும் நிறைய பேர் குதிச்சாங்க, எல்லார் பேரையும் சொன்னா, வெளில வாசல்ல பாத்தா கண்டிப்பா தர்ம அடிதான் எனக்கு).

இனிமே சினிமா பத்தி கொஞ்சம்.

மொதல்ல மார்ஜின் கால் (Margin Call).  கெவின் ஸ்பேசி, டெமி மூர் மற்றும் பலப் பலர் நடிச்சு வந்திருக்கர படம்.  படத்துல அடிதடி இல்லை, கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் இல்லை, நல்ல நடிப்பு, ஒவ்வொரு சீனும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்காங்க.  ஒரு ரெண்டு மணிநேரம் நல்ல படம் பாக்க ஒதுக்க முடியும்னா கண்டிப்பா பாக்கவேண்டிய படம்.  கதை: ஒரு ஃபைனான்சிங் கம்பெனில ஒரு நல்ல நாள் பார்த்து 80% ஆளுங்களை வீட்டுக்கு அனுப்பராங்க, அதுல ஒருத்தர் வீட்டுக்கு வருத்ததோட போறப்ப, தன் கீழ வேலை செய்யர ஒரு சின்ன பையன் கிட்ட ஒரு ஃப்ளாஷ் டிரைவை கொடுத்து இதை கொஞ்சப் பார்த்துடு ஆனா ஜாக்கிரதைன்னு சொல்லிட்டு போயிடரார்.  அதுக்கு அப்புறம் இருக்கர ஒரு 12 மணி நேரம் என்ன ஆகுதுங்கரதுதான் கதை.


ரெண்டா வது க்ராண்ட் மாஸ்டர் (மலையாளம்)
மோகன்லால், நரேன் (சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ல நடிச்சவர்), ப்ரியாமணி, சீதா, ஃபாத்திமா பாபு, ஜகதி ஶ்ரீகுமார், பாபு ஆண்டனி அப்புறம் தேவன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.  இந்த ரோலை, கமல், அமிதாப் ஏன் ரஜனி கூட பண்ணலாம். என்ன மோகன்லால் மாதிரி நடிப்புல அடக்கி வாசிக்கனும்.   தோள்ள துண்டைப் போட்டுன்டு கூட இருக்கர எல்லோருக்கும் சேர்த்து நடிக்கக் கூடாது.   கதை மோகன்லால் MCSC (Metro Crime Stoppers Cell)க்கு தலைவர்.  இவரோட முன்னால் மனைவி ப்ரியாமணி.  இவரை டைவர்ஸ் பண்ணினதும் இவர் ரொம்ப தனிமைப் பட்டுப் போய் எந்த ரெஸ்பாண்சிபிலிடியும் இல்லாம இருக்கரவர்.  இவரை சவால் விட்டு ஒரு சீரியல் கில்லர்  கொலைகளை செய்ய ஆரம்பிக்க, இதுக்கு நடுவுல இன்னொரு போலீஸ் ஆஃபீஸர் கொடச்சல் கொடுக்க ஆரம்பிக்க,  இவர் எப்படி எல்லோரையும் சமாளிக்கரார்ங்கரதுதான் கதை.  ஃபைட்டு,  பாட்டு, செண்டிமெண்ட், த்ரில் என்ன வேணும்னாலும், இந்தப் படத்துல இருக்கு.  கண்டிப்பா பாருங்க.

மூனாவது தமிழ்ப் படம் கலகலப்பு.
சுந்தர் சி டைரக்ட் பண்ணியிருக்கர படம்.  விமல், சந்தானம், மனோபாலா, மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, வி.எஸ். ராகவன் இவங்களையெல்லாம் தூக்கி சாப்பிடர ரோல்ல இளவரசு நடிச்சு வந்திருக்கர படம்.  லாஜிக் பாக்காம, காமெடி காமெடி காமெடி (சரி சரி ஒரே ஒரு டப்பாங்கூத்து டான்ஸும்) பாக்க ரெடின்னா கண்டிப்பா வீட்டுல எல்லோரோட பாக்கலாம்.  விமல் ஒரு டப்பா ஓட்டல் நடத்தரார், அவர் தம்பி மிர்ச்சி சிவா திருடன் வீட்டுக்கு பரோல்ல வந்திருக்கான், ஓவியா அந்த ஓட்டல் சரக்கு மாஸ்டர் வி.எஸ். ராகவனோட பேத்தி(சிவாவுக்கு ஜோடி), அஞ்சலி ஹெல்த் இன்ஸ்பெக்டர் (விமலுக்கு ஜோடி), 5 வட்டி அளகேசனா இளவரசு, அஞ்சலியோட முறை மாமன் வெட்டுப் புலியா சந்தானமும், அவரோட மாமனா மனோபாலாவும் வந்து கல்லா கட்டியிருக்கர படம்.

நாலாவது பில்லா 2
அஜித் அடிக்கடி ஸ்க்ரீன்ல நடக்கரார், அடிக்கரா, சுடரார்.  ஹூம். அப்பப்ப டான்ஸ் ஆடர சாக்குல குதிகரார்.  பாட்டு எல்லாம் தண்டம். ஃபைட் சூப்பர்.  படம் எடுக்கும் போது எந்த ஆர்டிஸ்ட் பணம் கேட்டாலும் படத்துல உடனே போட்டு தள்ளிடராங்க.  கடைசியா அந்த டைரக்டரையும் போட்டு தள்ளியிருக்கலாம்.  தமிழ்நாட்டுக்கு அகதியா வந்திருக்கர டேவிட் பில்லா (அஜித்), எங்கயிருந்துன்னு காமிக்கல, நாம அது இலங்கைன்னு யூகம் பண்ணிக்கனும்னு சொன்னா அத விட கேவலம் இல்லை.  ஒருத்தர் கூட இலங்கைத் தமிழ் பேசல.  மொதல்ல சின்னதா கள்ளக் கடத்தல் பண்ண ஆரம்பிச்சு பெரிய அளவுல எப்படி தொழில் பண்றார்ங்கரதுதான் கதை.

5வது படம் ஸ்நாட்ச் (Snatch)
இது ஒரு விதமான படம், இந்தப் படத்தை மாதிரி இந்தியாவுல படம் வந்தாலும் மக்களுக்கு புரிஞ்சு ஓட ஆரம்பிக்கரதுக்குள்ள மாதுரியோட பேரன் பேத்திக்கே பேரன் பேத்தி வந்திருக்கும்.  அங்கங்க நடக்கர பலதை ஒரு புள்ளிக்கு கொண்டு வந்து அசத்தியிருக்காங்க.  எனக்கு ப்ராட் பிட், ஜேசன் ஸ்டாதம் ரெண்டு பேரோட நடிப்பு ரொம்ப பிடிக்கும்.  இந்த படத்துல ப்ராட் பிட்  அடிக்கர கூத்தும், அவர் பேசர ஸ்டைலும் சூப்பர்.  வீட்டுல குழந்தைங்க இருந்தா அவங்களை வெச்சுண்டு பாக்காதீங்க.

6வது படம் கேப்டன் அமெரிக்கா
அம்புலிமாமா கதை, படம். அதுக்கு மேல இதுல ஒன்னும் இல்லை.

கடைசியா சங்கத் தலைவர் சத்தியாவோட உணர்வுகளைத் தூண்டும் ஒரு யூ ட்யூப் வீடியோ.

http://www.youtube.com/watch?v=BzmDgxduteM&feature=player_embedded

என்சாசாசாசாய்ய்ய்ய்ய்ய்ய்ய்......


சரி சரி எல்லோரும் "டேய் அடங்குடா"ன்னு சொல்றது காதுல விழுது, அதனால,  அடுத்து அலாஸ்கா பயணக் கட்டுரை ரெண்டுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, August 23, 2012

அலாஸ்கா பயணக் கட்டுரை - 1

காஸ்ட்கோவில் போனவாரம் ஒரு சிறிய உரையாடல்:

ரவி திருவேங்கடத்தான்: "ஹேய் முரளி, என்னப்பா அலாஸ்காலாம் போயிட்டு வந்தாச்சா, இல்லை இனிமேதான் போகப் போறியா?"

நான்: "போயிட்டு வந்தாச்சுப்பா, ஏன் என்ன திடீர்ன்னு கேக்கர?"

ரவி: "என்னமோ இதோ அடுத்த வாரம் அதப் பத்தி எழுதப் போறேன்னு சொன்னியே, அப்படி சொல்லி 7-8 வாரம் ஓடி போச்சே, அதான் கேட்டேன்.  ஒரு சின்ன தடயம் கதையே 5-6 வருஷமா நம்ம ப்ளாகுல ஓடுது, இது என்ன ஜுஜுபி."

நான்:  "இருப்பா ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, அதுக்குள்ள இப்படி பப்ளிக்கா மானத்தை வாங்காதே.."

ரவி: "உங்க ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை ஜாஸ்தியா, யார் கிட்ட காது குத்தரே, என் தம்பியும் அங்கதான் வேலை செய்யரான்.  இந்த சம்மர் லீவுல பாதி பேர் வேலைக்கே வரப்போரதில்லை.  ஹூம் நீயும் நல்லா கதை விடர, நானும் நம்பறமாதிரி கேட்டுக்கரேன். "

நான்: "யப்பா இன்னும் ஒரு வாரத்துல ஆரம்பிச்சுடரேன்.  போதுமா?"

ரவி:  "தடயம் கதை மாதிரி, ஆரம்பிச்சா மட்டும் போதாது ஒழுங்கா முடிக்கனும்."

ரவி அடுத்த விஷயம் பேச ஆரம்பிக்கரதுக்குள்ள வுடு ஜூட்.

பூர்வாங்க வேலைகளை பத்தி ரொம்ப சொல்லாம, டைரக்ட்டா அலாஸ்கா டிரிப் பத்தி சொன்னா க்விண்டின் டராண்டினோ படம் மாதிரி இருக்கும் அதனால ரவியோட நடந்த ஒரு சின்ன பேச்சை மொதல்ல போட்டுட்டேன், இப்ப மெயின் கதைக்கு வருவோம்.

அலாஸ்கா க்ரூய்ஸ் டிரிப் போகலாம்னு மொதல்ல ஒரு பிட்டை போன வருஷம் ஆகஸ்ட்-செப்டம்பர்ல போட்டது,  என் வீட்டுக்காரம்மாவோட அம்மாவோட அக்காவோட ரெண்டாவது பையன்(அதாவது மாலதியோட கசின், சுருக்காமா சொன்னா சுவாரசியமா இருக்காதுன்னு கொஞ்சம் இளுத்து புடுச்சு எளுதிட்டேன்).  அவன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்.  வடிவேலு மாதிரி ஒரு பெரிய பிட்டை போட்டுட்டு, சும்மா இருந்த சங்கை நல்லா ஊதி விட்டு, அமெரிக்காவுல இந்தக் கோடியில எங்க வீடும், அடுத்த கோடி கலிஃபோர்னியாவுல ஒரு 7 வீட்டு மக்களும், சியாட்டில்ல ஒரு வீடும் சேர்ந்து பேசிப் பேசிப் பேசிப் பேசிப் (நிஜமாவே அவ்வளவு பேசியிருக்காங்க) பேசி ஒரு வழியா 44 பேர் சேர்ந்து க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினாங்க.

(நாகு: "என்னது முடிவு பண்ணினாங்கன்னு எழுதர அப்போ நீ முடிவு பண்ணலையா? "

நான்: "நானும் சேர்ந்து முடிவு பண்ணலா மா?  சொல்லவே யில்லை!!!!  அடுத்த வாரம் காஸ்ட்கோ போய் பால், தயிர் பர்ச்சேஸ் பண்ணும் போது நானே முடிவு பண்ணி ஒரு செட் சாக்ஸ் வாங்கிட்டு வரப்போறேன் அப்பதான் இவங்களுக்கு நம்ம பவர் என்னன்னு தெரியும், எப்ப்புடி?"

நாகு: "சூப்பர் இப்படியே இரு,  வெளங்கிடும்.... " )

உடனே இருவர் குழுவை ஃபார்ம் பண்ணி அவங்க ரெண்டு பேர் மட்டும் காஸ்ட்கோ கிட்ட பேசி நல்லா  திட்டம் போட்டு, தேவையான ரூமெல்லாம் புக் பண்ணி ஒரு வழியா புக்கிங் விஷயம் முடிச்சதும், எதிர்பாராத விதமா சில பேர் வரமுடியாத சூழ்நிலை உருவாகி, கடைசியா 18 பேர் மட்டும் க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினோம்.  இதுல காமெடி என்னன்னா,  க்ரூய்ஸ் போகலாம்னு பிட்டை போட்ட மகானுபாவன் ஜகாவாங்கிட்டு, பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான், அவனை அப்பால பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். (வேற வழி).

காஸ்ட்கோ நல்லாவே டிரிப்பை மேனேஜ் பண்ணினாங்க.  அப்பப்போ என்ன கேள்வி கேட்டாலும், டக்குன்னு பதில் சொல்லி, தேவையானதை தேவையான நேரத்துல செஞ்சு கொடுத்தாங்க.  மொதல்ல புக் பண்ணும் போது ஒருத்தருக்கு  100$ ந்னு வாங்கிட்டு இந்த வருஷம் ஏப்ரல் மாசம் மொத வாரம் மொத்த பணத்தையும் கட்டினா போதும்னு சொல்லிட்டாங்க.  இது ரொம்ப சவுகரியமா இருந்தது, மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வெச்சுட்டு அதை ஏப்ரல் மாசம் கட்டிட்டோம்.

க்ரூய்ஸ் ஸ்டார்ட் பண்றது சியாடில்லருந்து அதுக்கு நாலு பேருக்கு டிக்கெட் போட்டு அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணினா, ரிச்மண்ட் ஏர்போர்ட் போனதும் அதுக்கு ஒரு கேட்டை போட்டுடானுவ.  எங்க டிரிப் ரிச்மண்ட் - சார்லேட் - சியாடில், அதுல ரிச்மண்ட் - சார்லேட் ஃப்ளைட் சார்லேட்லயிருந்து வரும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதுன்னு ப்ளைட் கிளம்பர டைமுக்கு 5 நிமிஷம் முன்னாடி சொன்னானுவ,  சொல்லிட்டு, இங்க வாங்க நாங்க நாளைக்கு ஃப்ளைட்டுக்கு டிக்கெட் போட்டு கொடுக்கறோம்ன்னு சொல்லி ஒரு லைன் ஃபார்ம் பண்ண சொன்னாங்க.  குடும்பமே கெளண்டர் முன்னாடி லைன்ல நின்னுகிட்டே மெதுவா ஹரே ராமா மஹா மந்திரம் சொல்ல ஆரம்பிச்சோம்.  5 நிமிஷம் கூட சொல்லியிருக்க மாட்டோம், நம்ம நாட்டுகாரர் ஒருத்தர் திடீர்ன்னு வந்து "நான் யு.எஸ் ஏர்வேஸ்லதான் வேலை செய்யரேன், வாங்க நான் ஏற்பாடு பண்றேன்" சொல்லி யார் யாரையோ பிடிச்சு 15 நிமிஷத்துல ஃபிலடெல்ஃபியா வழியா சியாட்டில் போக ஏற்பாடு செஞ்சு தந்தார்.  மஹா மந்திரத்துக்கு பலன் உண்டுன்னு மனப்பூர்வமா நம்பர ஆளுங்க நாங்க, ஆனா இப்படி சொன்ன 5 நிமிஷத்துல பலன் கை மேல கிடைச்சதும், ஏர்போர்ட்ல டான்ஸ் ஆடாத குறைதான்.  டிக்கெட் போட்டு கொடுத்ததும், அவருக்கு தாங்க்ஸ் சொன்னா, "முரளி என்னை தெரியலையா, நான் உன்னை நிறைய தடவை நம்ம கோவில்ல பாத்திருக்கேன்.  உனக்கு என்னை நியாபகம் இல்லை போல இருக்குன்னு" போற போக்குல ஹிந்தில அடிச்சு விட்டார்.

ஒருவழியா ஃபிலி வழியா சியாட்டில்ல மாலதியோட கஸின் (சிஸ்டர்) வீட்டுக்கு ராத்ரி 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம்.  காலைல 10:30 மணிக்கு கிளம்பி சியாட்டில் ஹார்பர் போய் நாங்க போக வேண்டிய நார்வேஜியன் க்ரூய்ஸ் கப்பல்ல ஏறினோம். 



மஹிமா இழுத்து பிடிச்சு கட்றாளே இந்த கப்பல்தான் அது.  இந்தக் கப்பல மொத்தம் 14 மாடி அதுல 13, 14 மாடி கொஞ்சம் பெருந்தனக்காரங்களுக்காம்,  என்னைய மாதிரி ஏழை பாழைங்களுக்கு கிடையாதாம், சீசீ அலாஸ்கா குளிர்ல 14ம் மாடில போயி எவன் இருப்பான்னு நாங்களும்  போகல.

ஆக, அலாஸ்கா கப்பல்ல ஏறியாச்சு.  அடுத்து, அலாஸ்காவோட காபிடல் ஜுனு போன கதை அடுத்த பாகத்துல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.