Showing posts with label மீனாவுடன் மிக்சர். Show all posts
Showing posts with label மீனாவுடன் மிக்சர். Show all posts

Monday, October 26, 2015

மீனாவுடன் மிக்சர் 25: சுண்டலோ சுண்டல்!

உங்க ஊரை பத்தி எனக்கு தெரியாது ஆனா எங்க ஊர்ல வர வர நவராத்திரி பண்டிகை கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் ஓட்ட பந்தயம் மாதிரி ரொம்பவே விறுவிறுப்பா தான் நடக்குது.  வருஷா வருஷம் மேலும் பல பல வீடுகள் ல  கொலு வைத்து எல்லோரையும் கூப்பிட்டு அசத்தறாங்க.  கூகிள் காலேண் டரே  எங்க கொலு schedule லை பார்த்து கதி கலங்கி போய் browser tab  ஐ இழுத்து மூடி படுத்துக்குதுன்னா பாருங்க.     

நவராத்திரி ஆரம்பிக்கருதுக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடியிலேர்ந்து வந்து குவிய ஆரம்பிக்கற கொலு பத்திரிகைளை சரி பார்த்து Excel spreadsheet ல போடறது தான் முதல் ஜோலி.   ஒரு ஏழு வருஷத்துக்கு முன் பத்து பேர் கூப்பிட்டுட்டு இருந்த நிலைமை மாறி இன்னிக்கு குறைஞ்சது ஒரு ஐம்பது பேர் வீட்டிலாவது கூப்பிடறாங்க.   துண்டு பேப்பர்ல எழுதி வச்சிண்ட காலமெல்லாம் மலை ஏறியாச்சு.  முன்னாடி மின்னஞ்சல்ல மட்டும் தான் பத்திரிகை அனுப்புவாங்க எங்க பெண்கள்.  ஆனா இப்பல்லாம் Evite , whatsapp மூலமா கூட அனுப்பறாங்க.  இது போறாதுன்னு  Kumon சென்டர் மற்றும் Kohls வாசல்ல எல்லாம் குங்குமச்சிமிழ் வச்சு நின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்கன்னு வேற பேசிக்கறாங்க.   Spreadsheet உதவி மட்டும் இல்லைன்னா எத்தனையோ சுண்டல் பாக்கெட்டுகள் பல வீடுகள்ல சீந்துவார் இன்றி அனாதையா கிடக்கும். 

Spreadsheet ல நாள் வாரியா, zone வாரியா, நேரம் வாரியா  பிரிச்சு பிரிண்ட் ஔட் எடுத்து நிமிர்றதுக்குள்ள நாக்கு  வறண்டு ஒரு பன்னீர் சோடா கிடைக்காதான்னு ஏங்கி போய் நான் ஒரு சுத்து இளைச்ச மாதிரி இருக்கும் எனக்கு.  ஆனா பாருங்க முதல் நாள் புடவை கட்டறச்ச பாதி கை மட்டும் ஏறி வேலை நிறுத்தம் செய்யற  என் blouse அந்த நினைப்புக்கு  மிகப் பெரிய ஆப்பு ஒண்ண  சத்தமில்லாம வைக்கும்.   ஆனால் அதுக்கெல்லாம் அசர்ரதுக்கு நீங்க வேற ஆளை பார்க்கணும்.  

விக்ரமாதித்யன் கதைல வர்ற மாதிரி என் உயிர் நவராத்திரியின்  போது மட்டும் ஏழு தெரு தாண்டி, ஆறு மாடி ஏறி, அஞ்சு வீட்டுக்குள்ள இருக்கிற நாலு விதமான சுண்டல் ல தான் மறைஞ்சு இருக்கும். ஒன்பது நாளும் சுண்டல் பாக்கெட் வாங்குவதில்  எந்த ஒரு தடங்கல் வந்தாலும் இந்த மீனா பொங்கி எழுந்திடுவாங்கற உண்மை ஊர்ல பல பேருக்கு தெரியும்.   அஞ்சா நெஞ்சத்தோடு பாரதியின் புதுமை பெண் மாதிரி நிமிர்ந்து நின்னு எல்லாத் தடங்கல்களையும்  எதிர் நோக்கி வீர நடை போட்டு எனக்கு வர வேண்டிய சுண்டல் பாக்கெட்டுகளை கைபற்றர வரைக்கும்  நான் ஓயவே மாட்டேன்.   என்னை பெத்தவங்களுக்கு கூட இந்த விஷயத்துல என்னை நினைச்சு ரொம்ப பெருமை. 

நவராத்திரி ஒன்பது நாளும் மாலை மூணு மணிக்கு ஆரம்பிச்சா எங்க ஓட்டம் ஒரு பத்து மணிக்கு தான் நிக்கும்.  இந்த சீசன்ல எல்லா தெருக்களிலும் பட்டு புடவை கட்டி, நகை நட்டு போட்டு மங்களகரமா இருக்கற பெண்களால தான் அதிக டிராபிக் ஜாம்.   பல சமயம் 2 அல்லது 3 பேரா சேர்ந்து கூட கொலு ரௌண்ட்ஸ் போவாங்க.  நான் பார்த்த வரைக்கும் முக்கியமான ஒரு விஷயம் பாட்டு பாடலைன்னா எங்க ஊர் மக்கள் சுண்டல் கொடுக்கரதில்லை.  இதனால பாட தெரியாதவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து மூளைபுயல் மூலமா (அதான் brainstorming) இதுக்கு ஒரு தீர்வு கண்டிருக்காங்கன்னு கேள்வி.  அதி புத்திசாலியான இந்திய பெண்கள் இப்ப பாடறதை கூட outsource பண்ணிடறாங்களாம் .  

இதை நானே போன வாரம் கண் கூடா பாத்தேன்.  ஒரு தோழி அவங்க வயதான அம்மாவை கூட கூட்டிகிட்டு தெரு தெருவா ஏறி எறங்கிட்டிருந்தாங்க.  ஒரு கொலு வீட்டுல நுழைஞ்சு 5 நிமிஷத்துல இந்த தோழி அவங்க அம்மாவை பாத்து, விவேக் பாஷைல சொல்லனும்னா, cute ஆ கண்ணடிச்சாங்க.  உடனே அவங்க அம்மா தொண்டைய செருமிகிட்டு டக்குனு பாடி கலக்கிட்டாங்க.  நான் அசந்தே போயிட்டேன்.  என்ன ஒரு மாஸ்டர் பிளான்!  கொலுவுக்கு பாடறது நீங்க நினைக்கறா மாதிரி ஈசியான வேலை இல்லை.  ஒரே ஒரு பாட்டை வச்சு தேய்க்க முடியாது.  நம்ம போற வீட்டுக்கெல்லாம் நம்ம பின்னாடியே ஒரு கும்பல் வருவாங்க.  ஒரே பாட்டை எல்லா இடத்துலயும் பாடினா நம்ம வண்டவாளம் ஊர் தண்டவாளத்துல அன்னிக்கு ராத்திரிக்குள்ளயே அமோகமா வளைய வரும்.  

நவராத்திரி முதல் நாளைக்கப்புறம் எங்க closet பக்கம் போகாம இருப்பது உங்க இருதயத்துக்கு தான் நல்லது.  வரிசையா தினமும் நாங்க உருவி போடற புடவைங்க வழிஞ்சு ஒரு மினி சுனாமியை ஞாபகப்படுத்தும்.  ஆயிரக்கணக்கில் குடுத்து வாங்கின பட்டு புடவைகளை நாங்க கூசாம ஒரு ஓரமா விட்டெறிவோம் இந்த ஒன்பது நாட்களும்.  பொதுவா கணவர்களுக்கு ரத்த கொதிப்பு அதிகமாவது இந்த சீசனில் தான்னு ஆராய்ச்சி பண்ணினால் யாராவது கண்டு பிடிக்கலாம்.  கொலு பொம்மைகளை கட்டி மேலே போட்டு  மூச்சு விட்டப்புறம் தான் நாங்க புடவை கடையை கவனிக்கவே  வருவோம்.   

இந்த வருஷம் நவராத்திரி முடிஞ்சு நாலு நாள் ஆச்சு.  வீடு புயல் அடிச்சு ஓய்ந்தாப்பல இருக்கு.  வீடு  வீடா ஏறி ஏறி கால் கழண்டு போச்சு.  சர்வ வியாதி நிவாரணியான Tylenol துணையோட என்னை மாதிரி பல பெண்களின் வாழ்க்கை மெதுவா அவங்களோட அன்றாட பாதைக்கு திரும்பிண்டிருக்கு.  வேர்கடலை, கொண்டைகடலை, பட்டாணி, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, காராமணி, பச்சை பயறு இப்படி பலவிதமான சுண்டலை ஒன்பது நாளா மாத்தி மாத்தி சாப்பிட்ட திருப்தியில்(?), இனி ஒரு வருஷத்துக்கு சுண்டல் பேரையே யாரும் சொல்ல கூடாதுன்னு பல வீடுகளில் ஒரு புது விரதம் எடுத்திருக்காங்களாம்.


இதுக்கு மேல மொக்கை போட்டு உங்க பொறுமையை சோதிக்காம இந்த வருஷ நவராத்திரியின் இனிமையான நினைவுகளோடு உங்களிடமிருந்து விடை பெறுவது:

-மீனா சங்கரன். 

  இந்த ஆண்டு கொலுப் படங்களை பார்க்க இங்கே செல்லவும்.

Sunday, July 05, 2009

மீனாவுடன் மிக்சர் - 7 { கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்)

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு இந்த விளம்பரத்திற்கு பின் தொடரும்.

"அம்மா...இன்னிக்கு டின்னருக்கு என்ன? இட்டிலியா? வேண்டாம். தோசையா? வேண்டவே வேண்டாம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ்ஸில் பீட்சா வாங்கலாமா? தேங்க்ஸ் அம்மா. நீ தான் என் செல்ல அம்மா."

இட்டிலி தோசையெல்லாம் அந்தக் காலம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ் பீட்சா வாங்கி கொடுங்கள். நல்ல அம்மா என்று பெயர் எடுங்கள்.
-----

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.

வணக்கம். இன்றைய காணாமல் போனவர் அறிக்கையில் முதலிடம் பெறுவது எளிமையில் பொலிவுடன் ஜொலித்த அழகுச் சென்னை. இந்நகர் தொலைந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காணாமல் போன இந்நகரை கண்டு பிடிக்க உதவும் சில முக்கிய அடையாள அம்சங்கள் - தெருவில் பல்பத்தில் கோடு கிழித்து பாண்டி விளையாடும் குழந்தைகள், பாவடை சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம் பெண் குழந்தைகள், செல் போனில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் செய்து சுற்றியுள்ள உலகத்தை மறக்காத நகர் மக்கள், இடிக்காமல் நடக்க இடமில்லாத ஊரில் அடுக்கடுக்காக கட்டடங்கள் கட்டி 'ஷாப்பிங் மால்' என்று நெரிசலை அதிகரிக்காத கடைகள், பாஸ்ட் புட் அல்லது காபி அரங்கங்களை விடுத்து தெருவோர கல்வெட்டில் கூடி அரட்டை அடிக்கும் கல்லூரி மாணவர்கள். இந்நகரைக் கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு 'காணாமல் போனவர் நிதியில்' இருந்து தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்த காணாமல் போன நப(க)ரைப் பற்றிய விவரம் தெரிந்தால் நீங்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 555-5555.

----

ட்ரிங் ட்ரிங்......ஹலோ, யாரு பேசறது? மீனா சங்கரனா? ஆமாம் காணாமல் போனவர் தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி எண் இது தான். சொல்லுங்க. என்னது, காணாமல் போன சென்னையை கண்டு பிடிச்சுட்டீங்களா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. (தொலைபேசியின் வாயை மூடி கொண்டு சுற்றியுள்ளவர்களிடம் பரபரப்புடன் "யாரோ மீனா சங்கரனாம்....தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சுட்டாராம்." சக ஊழியர் "முதலில் எல்லா விவரங்களையும் லைன் கட்டாகரத்துக்கு முன்னாடி வாங்கு. அப்புறம் சந்தோஷப்படலாம்."

"மேடம், சொல்லுங்க. எங்க பாத்தீங்க சென்னையை? மைலாப்பூர் கபாலீச்வரர் கோவில் தெப்பக்குளம் பக்கத்திலா? நீங்க பார்த்த அடையாளங்களைச் சொல்லுங்க....நான் எழுதிக்கறேன்.

குறுகிய சந்நிதி தெருவில் நடக்கவே இடமில்லாமல் நிரம்பி இருந்த தெருவோரக் கடைகள்ள பூஜை சாமான்கள், அர்ச்சனைக்கு தேங்காய், மண் பானைகள், பச்சை காய்கறிகள், மல்கோவா மாம்பழம், முல்லை, மல்லி, சாமந்தி பூக்கள் எல்லாம் விற்பனைக்கு பரத்தி வச்சிருக்கும் போது , எப்படியோ நாலு கார்கள், அஞ்சு ரெண்டு சக்கர வண்டிகள், எட்டு ஆட்டோ எல்லாம் ஒரு பத்து மாடுகளோடு போட்டி போட்டுண்டு இடிச்சுண்டு போறதை பார்த்தீங்களா?

அப்புறம்? திருவெல்லிக்கேணி வீடுகள் மாதிரி இரும்புக் கம்பி வெச்ச ஜன்னல்கள் கொண்ட பழங்கால வீடுகள் அங்கே இருந்ததா? அதில் பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா. வெரி குட், வெரி குட்.

வடக்கு, தெற்கு மாட வீதிகளில் பல கடைகளில் சீசன் இல்லாத போது கூட கொலு பொம்மை வச்சு விக்கறாங்களா? பெப்சியும், கோக்கும் குடிச்சு அலுத்து போன உங்களுக்கு அருமையான கரும்பு ஜூஸ் கிடைச்சுதா? எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? கிரி ட்ரேடிங் கடைக்குள் நுழையும் போதே தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறதா? கோவில் பக்கத்தில் வீட்டில் செய்யறது போல வெல்லக் கொழுக்கட்டையும், உப்புக் கொழுக்கட்டையும் வாங்கி சாப்டீங்களா?

மேடம், தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சு விவரம் சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. சன்மானம் விவரத்துக்கு இன்னொரு நாள் கால் பண்ணுங்க.

---------------------------------

-மீனா சங்கரன்

Saturday, June 27, 2009

மீனாவுடன் மிக்சர் - 6 {பாம்பு செவியா? எனக்கா?}


எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னாங்க. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம். மனசுக்குள்ளே நான் சிரிச்சுண்டேன். ஒரு இருபது வருஷத்துக்கு முன் என் காது அடிச்ச கூத்து இவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை. சரியா சொல்லணும்னா என் காதை வச்சுண்டு என் அம்மாவும், ஒரு காது மூக்கு தொண்டை வைத்தியரும் அடிச்ச கூத்துன்னு சொல்லணும். எனக்கு காது சரியா கேக்கும்னு நம்பிக்கை போய் வீட்டுல எல்லோரும் Charades விளையாட்டு ஆடி சைகை செய்ய பழக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாருங்களேன். சுருக்கமா சொல்லணும்னா.......அனாவசியமா எதுக்கு சுருக்கணும்? அப்புறம் பதிவை நான் எப்படி ஜவ்வாட்டம் இழுக்கறது? முழுசாவே சொல்லறேன். கேளுங்க.

----------------------------------------------

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே எனக்கு முணுமுணுன்னு ஒரே காது வலி அன்னிக்கு. பையை வீசி விட்டு நேரா அம்மாகிட்ட போய் சொன்னேன். அம்மியில் ஏதோ துவையல் அரைச்சிண்டு இருந்த அம்மா நொடியில் டாக்டரா மாறி "மார்கழி மாச குளுரில் ஜில்லுனு தண்ணியில் காலங்கார்த்தால தலைக்கு குளிக்காதேன்னு நான் சொன்னா யார் கேக்கறா? அதான் சளி பிடிச்சு காது வலிக்கறது" அப்படீன்னு பளிச்சுன்னு டியாக்னோசிஸ் கொடுத்தா. "அதெல்லாம் இல்லைம்மா. காதுக்குள்ள ஒரு கட்டி இருக்குன்னு நினைக்கிறேன்" ன்னு நான் சொன்னவுடன் அம்மா மட மடன்னு வீட்டுக்குள்ளே போய் டார்ச் எடுத்துண்டு வந்தா .

இதை டார்சுன்னு சொல்லறதை விட பீமனோட கதைன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அத்தனை பெருசா இருக்கும். இந்த டார்ச் கூடிய சீக்கிரத்தில் மைகல் ஜாக்சனை விட பிரபலமாக போகுதுன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. சொர்கலோகத்து கதவு திறந்தால் என்ன மாதிரி ஒளி வரும்னு எங்க வீட்டு டார்ச் லைட் அடிச்சு பார்த்தா உங்களுக்கு புரிஞ்சுடும். டார்ச்சை என் காதுக்குள் அடித்து பார்த்த அம்மா அதிர்ந்து போனாள். "என்னடி இது, பிள்ளையார் சதுர்த்தி வெல்ல கொழுக்கட்டை சைசுக்கு இருக்கு இந்த கட்டி" அப்படீன்னு கவலையில் ஆழ்ந்தாள். இதை தொடர்ந்து நாலு நாட்கள் மஞ்சளும், உப்பும் அரைத்து கை வைத்தியம் செய்து பார்த்து தோற்ற அம்மா இனி டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

எங்க குடும்ப வைத்தியரை பத்தி தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. விடிகாலை சூரியன் உதிக்கும் முன் அவர் க்ளினிக்குக்குள்ளே போய் டென்ட் கட்டி கயித்து கட்டில் போட்டு படுக்க தயாரா இருந்தா தான் அங்கே போகணும். அதுக்கு நேரமோ பொறுமையோ இல்லாமல் நானும் என் அம்மாவும் நாலு தெரு தள்ளி புதுசா திறந்திருந்த ஒரு காது, மூக்கு, தொண்டை வைத்தியரிடம் போக தீர்மானித்தோம். "கோடியாத்து மாமி நேத்தி என் கிட்ட சொன்னா...இந்த டாக்டர் ரொம்ப படிச்சவராம். அதுவும் காதை பத்தி மட்டுமே ரெண்டு வருஷம் தனியா படிச்சிருக்காராம். நிச்சயம் சரி பண்ணிடுவார்." அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த டாக்டரிடம் நேரம் குறித்து கொண்டு ஒரு வழியாக செக்கப்புக்கு போனோம்.

என் அம்மாவை பத்தி ஒரு விஷயம் இங்கே சொல்லணும். கொடுக்குற காசு வீணாகாம டாக்டர்கிட்ட நிறைய கேள்வி கேட்பா. நிறைய விஷயம் சொல்லுவா. இந்த காது டாக்டர் முன் போய் உட்கார்ந்ததும் அம்மா பேச்சை துவங்கினாள். "வணக்கம் டாக்டர். என் பொண்ணுக்கு நாலு நாளா காதுல கட்டி. புதன்கிழமை அன்னிக்கு ஆரம்பிச்சது. அன்னிக்கி கார்த்தால ரசம் சாதம் சாப்டுட்டு போனா ஸ்கூலுக்கு. கொஞ்சம் மாம்பழம் நறுக்கி கொடுத்தேன். அதனால சூடு ஜாஸ்தியாகி இந்த கட்டி வந்ததோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை ஜாஸ்தி டாக்டர். இவள் காதை நன்னா செக் பண்ணி உள்ளுக்கு சாப்பிட நாலு மாத்திரையும், வெளியே தடவ ஒரு களிம்பும் எழுதி குடுத்திடுங்கோ. அடிக்கடி வந்துட்டு போறது கொஞ்சம் சிரமம். ஆனா பாவம் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அதனால பாத்து நல்ல மாத்திரையா எழுதுங்கோ." அம்மா மூச்செடுத்து மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ளே டாக்டர் புகுந்தார். "முதல்ல செக் பண்ணலாம் அம்மா. அப்புறம் எப்படி ட்ரீட் பண்ணனும்னு நான் சொல்லறேன்." என்னை பக்கத்து நாற்காலியில் உக்கார சொல்லி வாயை திறந்து நாக்கை நீட்ட சொன்னார். அவ்வளவு தீவிரமா அவர் என் வாய்க்குள்ளே டார்ச் அடித்து பார்ப்பதை பார்த்தால் கோகுல கிருஷ்ணன் வாய்க்குள் தெரிந்த உலகம் என் வாய்க்குள்ளேயும் தெரியுதோன்னு எனக்கு பயங்கர சந்தேகம். அப்படியே திறந்த வாக்கில் உறைஞ்சு போயிடுமோன்னு பயந்திருந்த என் வாயை ஒரு வழியா மூடிய போது, டாக்டர் டார்ச்சை மூக்கின் பக்கம் திருப்பினார். மூக்கை செக் செய்து விட்டு மருந்து சீட்டு எழுதி அம்மா கையில் கொடுத்தார். "இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு பத்து நாளைக்கப்புறம் வாங்க" ன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சுட்டார். வெளியே வந்த நாங்க குழம்பி போய் நின்னோம். கிளினிக் வாசலில் இருந்த பெரிய போர்டை மறுபடி படித்து பார்த்தால் "காது" டாக்டர்னு தான் போட்டிருந்தது. ஹ்ம்ம்...காதை தவிர மத்ததை தானே இவர் செக் பண்ணினார்? நிஜமாவே பெரிய டாக்டர் தான் போல இருக்கு. கட்டியை பாக்காமலே மாத்திரை குடுத்துட்டாரே?

அடுத்த பத்து நாளும் வீடு ஒரே சர்க்கஸ் தான். மாத்திரை சாப்பிட்டு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது கட்டி சௌபாக்யமா இருந்தது. ஒரு நாளைக்கு நாலு தரம் அம்மா என் காதுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து புலம்புவா. அதோட நிக்காமல் வாசல் கதவை திறந்து உள்ளே வரும் ஒருவரையும் விட்டு வைக்காமல் கூப்பிட்டு "கொஞ்சம் இப்படி வாங்கோளேன். எங்க மீனா காதுல கட்டி. பெரிய காது டாக்டரிடம் காமிச்சும் ஒண்ணும் சரியா போற மாதிரி இல்லை. இதோ டார்ச். மீனாவை கூப்பிடறேன். நீங்க கொஞ்சம் செக் பண்ணுங்கோ, சரியா? மீனா.....இங்க வந்து உன் காதை கொஞ்சம் காமிம்மா." என்னவோ பெருமையா ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து காமின்னு சொல்லரா மாதிரி அம்மா என்னை கூப்பிடுவா. ஒரு நாள் எங்க தெரு கீரைக்காரி கஷ்டப்பட்டு தலையில் இருந்த கூடையை இறக்கி வச்சுட்டு என் காதை டார்ச் அடிச்சு பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நாலு கை வைத்தியத்தை சொல்லிட்டு போனாள். வாசக்கதவு பக்கமா டார்ச் வைக்க ஸ்பெஷல் தட்டு ஒண்ணு கட்டலாமான்னு கூட வீட்டில் பேச்சு நடந்தது. ஒரு வாரம் அம்மா கூப்பிடவுடன் வந்து டார்ச் வெளிச்சத்தில் காதை காமித்து பழகி போய் அப்புறம் நானே வாசக்கதவு திறக்குற சத்தம் கேட்டால் டக்குனு போய் டார்ச் எடுத்துண்டு நின்னுடுவேன்னா பாருங்களேன்.

ஒரு வழியா பத்து நாள் மாத்திரை சாப்பிட்டு முடித்து விட்டு கட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது டாக்டரிடன் மறுபடியும் போனோம். இந்த முறை அவரிடம் காதை எப்படியாவது காட்டி விடணும் அப்படீங்கற தீர்மானத்தோடு போனோம். போய் நாற்காலியில் உட்காரும் போதே திரும்பி காது அவர் கண்ணுக்கு தெரியும் படி உட்கார்ந்தேன். இப்ப அவராலே எப்படி மிஸ் பண்ண முடியும்? ஆனால் அவர் "நேரா உட்கார்ந்து வாயை திறந்து நாக்கை நீட்டும்மா" ன்னாரு. வேறு வழியில்லாமல் அவர் சொன்ன படி உட்கார்ந்தால் பழைய படி தொண்டையையும், மூக்கையும் செக் செய்து விட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சார். நொந்து போய் "டாக்டர், எனக்கு கட்டி காதுல" ன்னு மெதுவா சொன்னேன். "ம்ம் தெரியும்மா. இந்த மாத்திரையை ஒரு அஞ்சு நாள் சாப்பிட்டுட்டு வா. கட்டி கரயலைனா கீறி எடுத்துடலாம்." என்னவோ மைசூர் பாகை கீறல் போடற மாதிரின்னாவது சொல்லறார். அங்கே நாங்க எடுத்த ஓட்டம் எங்க குடும்ப வைத்தியர் கிளினிக் வாசல்ல தான் நின்னுது. என் காது கூத்தை கேட்டு சிரிச்சுண்டே ஒரு களிம்பு எழுதி கொடுத்த எங்க வைத்தியர் "உனக்கு காசு ரொம்ப இருந்தா போய் அட்மிட் ஆகி ஆபரேஷன் எல்லாம் பண்ணிக்கோ. இல்லைன்னா இதை தடவிப்பாரு" அப்படீன்னாரு. ரெண்டே நாளுல கட்டி இருந்த இடம் தெரியாமல் போயிடுத்து. டார்ச்சை நல்லா துடைச்சு உள்ளே வச்சோம். அதுக்கும் தான் பாவம் ஓய்வு வேண்டாமா?

-மீனா சங்கரன்

Sunday, June 07, 2009

மீனாவுடன் மிக்சர் - 3 {வெள்ளிக்கிழமையா? பூசாரியை கூப்பிடுங்க.}

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

என் உச்சி மீது வான் இடிஞ்சால்லாம் நான் பயப்பட மாட்டேங்க. அது பாட்டுக்கு விழுந்திட்டு போகட்டும்னு விட்டுடுவேன். நான் பயத்துல நடுங்கறது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான். அது தான் வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தாலே நான் 'உலக மகா கோழை' அப்படீங்கற பட்டத்தை வாங்க தயாராயிடுவேன். ஊர் உலகத்துல எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா "அப்பாடா, இனி ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டாம், ஸ்கூல் போக வேண்டாம்"னு சந்தோஷமா இருப்பாங்க. நான் மட்டும் அம்மன் கோவில் பூசாரியை வேப்பிலை அடிக்க கூப்பிடும் நிலையுல இருப்பேன். என்னோட இந்த பயத்துக்கு என்ன காரணம்னு சொல்லறேன் கேளுங்க.

என் குழந்தைகளுக்கு 102 டிகிரி ஜுரம் வந்தா, அது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் வரும்னு ஒரு தீர்கதரிசியோட தீர்மானத்தோட என்னால சொல்ல முடியும். திங்கள் லேந்து வெள்ளி சாயந்திரம் வரை ஒரு பூச்சி பொட்டு கூட கடிக்காம மிகச்சிறந்த உடல் நிலையில் இருக்கும் என் குழந்தைங்களுக்கு வெள்ளிகிழமை ராத்திரிக்குள் ஜுரம், வாந்தி, பேதி, தலை வலி, வயித்த வலி, பல் வலி மற்றும் இதர பல உடல் உபாதைகள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம். ஐந்து மணிக்கு குழந்தை வைத்தியர் ஆபீஸ் இழுத்து மூடியாச்சா என்று உறுதிப்படுத்திண்டு தான் எல்லா உபாதைகளும் ஆரம்பிப்பது போல இருக்கும்.

அது மட்டும் இல்லைங்க. வாழ்க்கைக்கு எங்களுக்கு அதி அவசியமா தேவைப்படும் எல்லா இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா சொல்லி வச்சா மாதிரி பட்டுன்னு உயிர் விட்டுடும். வெய்யில் காலத்தில் குளிர் சாதன பெட்டி வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான் விறைத்து போய் நிற்கும். குளிர் காலத்தில் வெப்ப நிலை பெட்டி பொசுங்கி சாம்பலாவது வெள்ளி அன்று தான். பாத்ரூம் பைப்பெல்லாம் உடைஞ்சு வீட்டை வெள்ளத்துல ஆழ்த்துவது சர்வநிச்சயமா வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான். ரிப்பேர் செய்பவர்கள் இனி இரண்டு நாள் கழித்து திங்களன்று தான் வேலைக்கு வருவார்கள் அப்படீன்னு உறுதிப்படுத்திண்ட பின்பு தான் எங்கள் வீட்டு துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்வதை நிறுத்தும். உயிரில்லாத இந்த இயந்திரங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு புத்திசாலித்தனம் வருதுன்னு எவ்வளவு யோசனை பண்ணியும் எனக்கு புரியலைங்க.

என் கணவரின் புத்தம் புது நூறு டாலர் சூட்டில் அரை கப் சாம்பாரை நான் கொட்டினால் அது சர்வ நிச்சயமா வெள்ளி இரவாய் தான் இருக்கும். Dry Cleaners கடை திறந்திருக்கும் போது ஏன் இப்படி நடக்கமட்டேங்கறது அப்படீங்கற என் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கலைங்க. மொத்ததுல என்னை கதறடிக்க கூடிய திறன் வெள்ளிக்கிழமையிடம் தான் இருக்கு.

அய்யய்யோ மறந்தே போயிட்டேனே....இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பக்கத்து அம்மன் கோவில் பூசாரி இன்னும் கொஞ்ச நேரத்துல வேப்பிலைய எடுத்துண்டு வந்துடுவாருங்க.

போகறத்துக்கு முன்னாடி இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டுண்டே போங்க.

-மீனா சங்கரன்

Thursday, June 04, 2009

மீனாவுடன் மிக்சர் - 2 {ராக்பெல்லர் மாமி எங்கே? நரிக்கொரவாஸ் எங்கே?}

சில வருஷங்களுக்கு முன்னாடி நான் கலிபொர்னியாவில் வசித்த போது ஒரு தோழியின் தங்கைக்கு கல்யாணம் நிச்சயித்து பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலிலேயே செய்வதா சொன்னாங்க. ஒரு மாதம் முன்பே கல்யாண பத்திரிகை குடுத்து எங்களை அவசியம் வர வேண்டும் அப்படீன்னு சொல்லிட்டு போனாங்க.

உங்களைப் பத்தி எனக்கு தெரியாதுங்க. எனக்கு நம்மூர் கல்யாணம்னாலே ஒரு தனி குஷி. அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்க போற முதல் இந்திய கல்யாணம் இது தான். சின்ன வயசில் எழுத்தாளர் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ங்கர புத்தகத்தை நான் படிச்சு படிச்சு கிழிச்சதுல என் தொல்லை தாங்காம ஒரு நாள் அந்த புத்தகம் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு சந்நியாசம் வாங்கிண்டு போயிடுத்துங்க.

அமெரிக்காவுல கல்யாணம்னா சும்மாவா? பெண் வீட்டுக்காரங்களுக்கு தான் எத்தனை வேலை இருக்கும்? இந்தியாலேந்து வண்டி(விமானத்த தான் சொல்லறேங்க) வச்சு எத்தனை சாமான் கொண்டு வரணும்? எத்தனை பேரை கூட்டிண்டு வரணும்? அதான் நம்ம எழுத்தாளர் சாவி அமெரிக்காவில் கல்யாணம் செய்தா என்னென்ன பண்ணனும்னு அவர் புத்தகத்துல பிட்டு பிட்டு வச்சிருக்காரே.

* தட்டானை வரவழைச்சு கல்யாண பெண்ணுக்கு வேண்டிய ஒட்டியாணம், வங்கி, வளையல்கள், ஹாரம், திருமாங்கல்யம் போன்ற நகைகளை செய்தாகணும்.
* வயசான பல பாட்டிகளை கூட்டி கொண்டு வந்து அப்பளம் இட்டு காய வைத்து கல்யாண விருந்துக்கு தயார் பண்ணியாகணும்.
* இட்ட அப்பளங்களை காய வைக்க பெரிய கட்டடங்களோட மொட்டை மாடியை வாடகைக்கு எடுத்தாகணும்.
* மடிசார் கட்டிக்க ஆசைப்படற பெண்களுக்கு, (ராக்பெல்லர் மாமி உட்பட) அதை சொல்லித்தர பாட்டிகளை ஏற்பாடு செய்தாகணும்.
* புரோகிதர்களை வரவழைத்து அவங்க தங்கரத்துக்கு இட வசதிகள் செய்து கொடுத்தாகணும்.
* வைதீக காரியங்களுக்கு மடியா தண்ணி வேணும்னு சொல்லற புரோகிதர்களுக்கு புதுசா கிணறு வெட்ட ஆட்களை வரவழைக்கணும்.
* மாப்பிளையை கார்ல ஊர்வலமா அழைச்சுண்டு போற ஜானவாச ரூட்டுக்கு கவர்மென்ட் பர்மிட் வாங்கணும்.
* ஜான்வசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.
* நலங்கில் பெண்ணும், மாப்பிள்ளையும் உருட்டி விளையாட தேங்காய் வரவழைக்கணும்.
* கல்யாண சத்திரம் வாசல்ல கட்ட வாழை மரம் வரவழைக்கணும்.
* பந்தியில் பரிமாற வாழை இலை வரவழைக்கணும். வடு மாங்காய் வரவழைக்கணும். வெள்ளைக்காரர்கள் பந்தியில் உட்கார்ந்து வடு மாங்காய் சாப்பிட்டு விரலை கடித்து கொண்டால் அவங்க கைக்கு பேண்ட் ஐட் போட தேவையான first aid boxes வரவழைக்கணும்.

நினைக்கவே எனக்கு மலைப்பா இருந்தது. என் தோழி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண ஏற்பாடுகள் பண்ண எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க செய்யறேன் அப்படீன்னு சொன்னதுக்கு எல்லாம் 'under control' அப்படீன்னு சொன்னாங்க. சரி தான். நிறைய ஆள்பலம் இருக்கும் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

கல்யாண நாள் கிட்ட நெருங்க நெருங்க எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எனக்கு ஒரே பரபரப்பு. தினமும் நான் அலமாரியை திறந்து நாலு தரம் கட்ட வேண்டிய பட்டு புடவைகளையும் நகைகளையும் சரி பார்த்து வைப்பதை பார்த்து என் கணவருக்கு ஒரே குழப்பம். அமெரிக்காவில் பட்டுப் புடவை கட்டிண்டு ஜானவாச கார் பின்னாடி நடக்கவும், நலங்கு போது கலாட்டா பண்ணி பாட்டு பாடவும், வாழை இலை கட்டி மாக்கோலம் போட்டிருப்பதை பாக்கவும் ஒரு குடுப்பினை வேண்டாமா? 'வாஷிங்டனில் திருமணம்' கதை போல நடக்கவிருக்கும் கலிபோர்னியா கல்யாணத்தை பாக்க எனக்கிருந்த ஆர்வம் அவருக்கு புரியலை.

கல்யாணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டுக்காரங்களை விட அதிக கவனத்தோட நான் ஜானவசத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த போது எதேச்சையா என் வீட்டுக்கு வந்த இன்னொரு தோழி என்னை பாத்து குழம்பி போய் நின்றாள். விசாரிச்சா கல்யாணத்துல ஜானவாசமே கிடையாதாம். அது மட்டுமில்லை. அடுத்த நாள் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தாலி மட்டும் கட்டி அரை மணியில முடிஞ்சுடுமாம். அப்புறம் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் buffet சாப்பாடு சாப்பிட்டு போகணுமாம்.

என்ன அக்கிரமம்க இது? ஒரு ஜானவாச கார் கிடையாதாம். கார் பின்னாடி நடக்கற ஊர்வலம் கிடையாதாம். ஊர்வலத்துக்கு காஸ் விளக்கு தூக்கிண்டு நடக்கும் நரிக்குரவங்க கிடையாதாம். மடிசார் கட்டிய ராக்பெல்லர் மாமி கிடையாதாம். உட்கார வச்சு வாழை இலைல பரிமாரற விருந்து கிடையாதாம். ரொம்ப ஏமாத்தமா இருந்துதுங்க. எனக்கு இருந்த கோவத்துல ஆசை காமிச்சு மோசம் பண்ணினதுக்கு திருவாளர் சாவி மேல கேஸ் போடலாமான்னு கூட யோசனை பண்ணினேன். நல்ல காலம் அப்படியெல்லாம் செய்யாமல் விட்டேன். இல்லேன்னா இப்போ அவர் பேரை சொல்லி ப்ளாக் எழுதினத்துக்கு என் பேர்ல கேஸ் போடுவாங்களே.

-மீனா சங்கரன்






Tuesday, June 02, 2009

மீனாவுடன் மிக்சர் - 1

தொலைக்காட்சியில் 'அனுவுடன் காப்பி' (அதாங்க Koffee with Anu) என்று ஒரு தொடர் வருகிறதாமே? கேள்விப்பட்டேன். அனுவோட காப்பி குடிக்கரச்ச மீனாவோட மிக்சர் சாப்பிட கூடாதா? அப்படி நினைச்சு தான் இப்படி ஒரு பேர் வச்சிருக்கேன். ர்ய்மிங்கா வேற இருக்கு.

இந்தாங்க கொஞ்சம் மானசீக மிக்சரை சாப்பிட்டு கொண்டே மேற்க்கொண்டு படிங்க.

---------------------------------------------------------------------------------------------
சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.

எல்லாருக்கும் கனவுகளும் ஆசைகளும் உண்டு. கண் மூடி கனவுகளில் திளைக்கையில் சிலருக்கு வைர வைடூரியங்கள் தெரியலாம். சிலருக்கு எழுபது இன்ச் தொலைக்காட்சிப் பெட்டி தெரியலாம். சிலருக்கு சமீபத்தில் வெளி வந்த புது மாடல் செல் போன் தெரியலாம். இன்னும் சிலருக்கு ஐரோப்பாவில் விடுமுறை நாட்களை கழிப்பது போல தெரியலாம். எல்லாமே வெளியே சொல்லி கொள்ளும்படியான அழகான கனவுகள்.

எனக்கு கனவில் தெரிவதெல்லாம் ஒரு கிண்ணத்தில் சாம்பார் வடை தான். அதுவும் சரவண பவன் ஹோட்டல் சாம்பார் வடை. சின்ன வெங்காயம் வாசனை மூக்கை துளைக்க (சத்தியமாக எனக்கு கனவில் வாசனை வருதுங்க), மின்னும் எவர்சில்வெர் கிண்ணத்தில் மேலே பொடிப்பொடியா நறுக்கின வெங்காயமும் கொத்தமல்லியும் மிதக்க சரவண பவனோட சாம்பார் வடை சமீப காலமாக என் கனவில் வந்து என்னை ரொம்ப தொல்லை செய்கிறது. யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? "ஐயோ பாவம், பல வருடங்களாக பட்டினி போல இருக்கு" என்று நினைக்க மாட்டார்களா? இந்த கனவை எப்படியாவது மாற்றி ஆக வேண்டும் என்று நேற்று இரவு படுக்க போவதற்கு முன் மனக்கண்ணில் அழகான பட்டு புடவைகளும் ஜொலிக்கும் நகைகளையும் கொண்டு வந்து பார்த்து விட்டு படுத்தேன். நாலு பேரிடம் சொல்லி கொள்வது போல் ஒரு கனவு வர வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணி விட்டு தூங்கினால் என்ன கனவு வந்தது சொல்லுங்கள்? அதே கிண்ணம், அதே வடை, அதே சாம்பார்.

இன்னும் பதிமூன்றே நாட்களில் இந்தியாவில் இருப்பேன். இன்றிலிருந்து இரண்டாவது திங்கள் விடிகாலை மூன்று மணியளவில் விமானம் சிங்காரச் சென்னையில் இறங்குகிறது. விமானத்தளத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சரவணபவன் ஹோட்டலில் இறங்கி சாம்பார் வடை சாப்பிட்டு விட்டு செல்லலாமா என்று நான் கேட்டதற்கு வீட்டில் கீழ்ப்பாக்கத்தில் வேண்டுமானால் நிறுத்தி விட்டு செல்லலாம் என்று சொல்கிறார்கள். என் மூளை மிகப்பெரியது இல்லை தான். ஒத்துக்கொள்கிறேன். அதற்காக மூளைக் கோளாறு மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையா? இது கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை?

ஒரு விஷயம் எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இவர்களை எல்லாம் நம்பினால் என் சரவண பவன் சாம்பார் வடை ஆசை படு குழியில் தான் விழப்போகிறது. என் காலே எனக்குதவி என்று ஊருக்கு சென்ற மறுநாள் ஒரு ஆட்டோ பிடித்து சரவணபவனுக்கு போய் சாம்பார் வடைக்கு ஒரு சலாம் போட்ட பிறகு தான் தங்கமாளிகை பக்கம் நகை வாங்க செல்லுவேன். சூளுரைத்து சொல்கிறேன். இது என் சபதம்.