என்னய்யா யூட்யூபை வைத்து பதிவு நடத்துகிறாய் என்று அனைவரும்(சரி - ரிச்மண்டில் இருக்கும் இருவர்) கலாய்க்கிறார்கள். அதனால் யூட்யூப் பஜனை இல்லாத பதிவு இது.
முதலில் ஒரு அபூர்வமான படத்தைப் பாருங்க இங்கே. எல்லா ஆரஞ்சு கொக்குகளும் (அதாங்கோ ஃப்ளாமிங்கோ) சேர்ந்து ஒரு பெரிய ஆரஞ்சு கொக்கு செய்திருக்கின்றன. எங்கே ரூம் போட்டு யோசிச்சதுகளோ தெரியலை...
நேற்று ஒரு புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். A Certain Ambiguity: A Mathematical Novel - by Gaurav Suri & Hartosh Singh Bal
கணிதமேதையான ஒரு தாத்தா தன் பேரனுக்கு ஒரு கால்குலேட்டர் கொடுத்து புதிர்களின் மூலம் கணிதத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். பேரன் அமெரிக்கா போய் கணிதம் கற்கவேண்டும் என்று சொத்தை எழுதிவைத்து செத்துப் போகிறார். பேரன் அமெரிக்கா வந்து ஸ்டான்ஃபோர்டில் படிக்கிறான். தாத்தா 1919ல் நியுஜெர்ஸியில் சிறைத்தண்டனை பெற்றதை அறிகிறான். அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கணிதத்தை நாடுகிறார். புத்தகம் கைக்கு வந்ததும் மேலே சொல்கிறேன். :-) வேண்டுமானால் முதல் அத்தியாயத்தை படித்துக் கொள்ளுங்கள் இங்கே.
கணிதம் என்றதும் ஞாபகத்துக்கு வருவது சைமன் சிங்கின் புத்தகங்கள். அவருடைய கோட் புக் மிகவும் சுவாரசியமானது. ஆதி காலத்திலிருந்து இந்த காலம் வரை மனிதன் எப்படி ரகசியமாக சங்கேத மொழியில்(encryption) தொடர்பு கொண்டிருக்கிறான் என்று விளக்குகிறார். ஜூலியஸ் சீஸர், ஸ்காட்லாந்து ராணியில் துவங்கி, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா-இங்கிலாந்து ரகசிய தொடர்பு கொள்ள என்ன உத்திகள் எல்லாம் கையாண்டார்கள் என்று சுவாரசியமாக போகிறது புத்தகம்.
இந்த கணிணி உலகில் புழக்கத்தில் இருக்கும் என்கிரிப்ஷன் வகைகளும் சுலபமாக புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறார். மாணவர்கள் படிக்க நல்ல அழகான முறையில் விளக்கியிருக்கிறார். ஜெர்மனி உபயோகப்படுத்திய எனிக்மா கருவி மாணவர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்ய அருமையான தலைப்பு. வர்ஜினியாவில் புதையுண்டு இருக்கும் பொக்கிஷம் பற்றிய கதையும் சுவாரசியமானது. அதற்கான் வேட்டை இன்னும் வர்ஜினியாவின் லின்ச்பர்க் நகரில் நடக்கிறதாம். அடுத்த முறை அந்த பக்கம் போகும்போது கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.
அவருடைய பிக் பேங் தியரி பற்றிய புத்தகமும் அருமையானது. இந்த புத்தகமும் ஆதி காலத்திலிருந்து பல நாகரீகங்களில் உலகம் மற்றும் அண்டவெளியைப் பற்றி இருந்த பலவிதமான நம்பிக்கைகளில் ஆரம்பித்து இந்த நாள் வரை உலகம் உருவானதற்கான ஆராய்ச்சியைக் கோவையாக சொல்கிறார் சைமன். இவருடைய ஃப்ர்மட் தியரம் பற்றிய புத்தகமும் இந்த வகையில் ஆதிகாலத்து கணித மேதைகளில் ஆரம்பித்து தற்போதைய கண்டுபிடிப்பு வரை விளக்கியிருக்கிறார். இந்த புத்தகம்தான் பாதிக்கு மேல் எனக்கு OHT ஆகிவிட்டது(overhead transmission).
இந்த புத்தகங்களை எல்லாம் அண்மையில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் ஒன்றிருக்கிறது. பத்ரி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிக் இன்ஃபோ போன்ற தளங்களுக்கு காரணகர்த்தா. இப்போது இந்தியா திரும்பி கிழக்கு பதிப்பகம் என்ற பேரில் தமிழில் புத்தகங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த கிழக்குப் பதிப்பகம் அண்மையில் ஒருவரின் வரலாற்றை புத்தகமாக போட்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த நபர் அகால மரணம் அடைந்தபோது நான் அடைந்த சோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.
இவர் இறந்து போன செய்தி கேட்டு, என் நண்பன் ஒருவன் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'தூக்கம் போச்சிடி அம்மா' என்று புலம்பிக் கொண்டிருந்தான். கரெக்ட்! சிலுக்கின் வாழ்க்கை வரலாறுதான் புத்தகமாக வந்திருக்கிறது. இந்த தாளாத துயரத்தைத் தணிக்க - புத்தகம் வந்ததற்கல்ல - எத்தனை முறை மூன்றாம் பிறை பார்த்தாலும் போதாது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் யாராவது இந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தால் என் ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுக்கிறேன்.(தமிழ் சங்க பொருளாளரிடம் சொல்லாதீர்கள்)
இப்போது நான் படித்துக் கொண்டிருப்பது மீரா காம்தார் எழுதிய Planet India. 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் சைனாவுக்கும்தான் சொந்தம் என்கிறார். உலகநாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது இந்தியா என்கிறார். தட்பவெப்பத்தில் பார்த்தால் இமாலயக் குளிரிலிருந்து ராஜபுதன பாலைவன சூடுவரை... அரசியலில் பார்த்தால் கம்யூனிஸ்டுகளில் இருந்து மன்மோகன் சிங் வரை.... சினிமா, பொருளாதாரம், ஏழ்மை, பணம் அனைத்து எல்லா விளிம்புகளையும் அடங்கியதால், இந்தியாவே ஒரு சிறிய உலகம் போன்றது என்றும், எப்படி இந்தியா உலகத்தின் முக்கிய நாடாக திகழப்போகிறது என்று சொல்கிறார் மீரா.
நான் சதங்காவுடன் கூட்டணியை முழுமையாகத் துண்டித்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனிக்கட்சிக்காக அல்ல. சுஜாதாவைப் பிடிக்காதாம். அதாவது படித்ததே இல்லை என்கிறார் மனுஷன். தமிழ்நாட்டில் எந்த குகையில் இருந்தார் என்று தெரியவில்லை. சுஜாதா படிக்காத நபர் யாராவது இருப்பார்களா? பிடிப்பது பிடிக்காதது அடுத்த விஷயம். அப்புறம் பிடித்த எழுத்தாளர் என்று நான் கேள்விப்படாத பெயர் எல்லாம் சொல்கிறார். அவருடைய தமிழ் வாத்தியார் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த மற்றொரு எழுத்தாளர் அண்மையில் மறைந்த ஆர்ட் பக்வால்ட். ஞாயிற்றுக்கிழமை ஹிந்து கடைசி பக்கம் நினைவிருக்கிறதா? அதற்காக வாரம் முழுவதும் காத்திருப்பேன். பள்ளியில் ஒருமுறை நான் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு என் ஆசிரியர் 'ஆர்ட் புக்வால்ட்' ரொம்ப படிப்பியா என்று கேட்டார். நியுயார்க் டைம்ஸில் புகழ்பெற்ற மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே கடைசி பேட்டி காண்கிறார்கள். அதில் அவருக்கே உரித்த பாணியில் அவருடைய மரணத்தை அவரே அறிவிப்பதை பாருங்கள். மனுஷன் சிரித்துக் கொண்டே அழவைக்கிறார். சிரிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் P.G.Wodehouse. ரொம்ப நாள் கழித்து சில புத்தகங்களை படித்தேன்(மகனும் விரும்பிப் படிக்கிறான் - மகனுடன் புத்தகத்துக்கு சண்டை போடுவேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை). உங்களுக்கு இரண்டு வினாடி வினா கேள்விகள்(அது என்ன வினா கேள்வின்னு கேக்கப்படாது).
1. ஜீவ்ஸின் முதல் பெயர்(first name) என்ன?
2. பெர்ட்ரம் வூஸ்டரின் நடுப் பெயர்(middle name) என்ன?
சரியான பதில் அளிப்பவருக்கு சிலுக்கு புத்தகத்திற்கு கொடுத்தது போக அடுத்த பாதி ராஜ்ஜியம்.
வர்ட்டா.... Toodle-oooo!!!