Showing posts with label டீப் ரன். Show all posts
Showing posts with label டீப் ரன். Show all posts

Monday, August 11, 2014

ரிச்மண்டில் பிடித்த இடம்

கொஞ்ச நாட்களுக்கு முன் ரிச்மண்ட் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதலாம். உங்கள் அனைவருக்கும் ரிச்மண்டில் ஏதாவது ஒரு இடம் மிகவும் பிடித்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் ஒன்று இருக்கிறது. ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. என் வீட்டிலிருந்து சில நிமிடங்கள்தான் ஆகும் போவதற்கு.



எந்த இடம் என்று தெரிகிறதா?

 டீப் ரன் பார்க்!

சிறு குழந்தைகள் முதல் என்னைப் போன்ற முதியவர்கள்வரை அனைவரும் பொழுது போக்கலாம் இங்கே. இந்தப் பூங்காவில் பல மகிழ்ச்சியான நினைவுகள், நிகழ்ச்சிகள். தமிழ் சங்கப் பிக்னிக்குகள், பார்க்கில் இருக்கும்  அனைத்து விளையாட்டு இடங்கள், கால்பந்தாட்டம், கிரிக்கெட், நடைபாதைகள், சாரண முகாம், மீன்பிடிப்பு, குளத்தில் ஆமைகள், வாத்துகள், மீன்கள், துவக்கப் பள்ளி புத்தகப் போட்டி( Book Bowl),  கோடைகாலப் பசுமை, இலையுதிர் கால வண்ணக் கோலம், குளிர்காலத்தில் உறைந்த குளம்,  சைக்கிளோட்டம், சாரணர்களுடம் புதையல் தேடல்(Geocacahing), நாயுடன் நடை,  அங்கிருக்கும் கட்டிடத்தில் நண்பர்களுடன்  பேட்மிண்டன், நிறைய பார்ட்டிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எனது அனுபவங்களை...

இத்தனை வருடங்களில் இந்தப் பூங்காவில் நிறைய மாறுதல்களைப் பார்த்திருக்கிறேன். பாதைகள் அகலமானது. சரிவான பாதையை மேடாக்கி குளக்கரையை பலப் படுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டிடத்தில் நிறைய புது விளையாட்டு சாதனங்கள்.  காடாய் அழகாய் இருந்த பூங்காவை சிதைத்து நட்ட நடுவே ஒரு பூதாகரமான கட்டிடம்! ஆனால் அந்தக் கட்டிடமும் நிறைய உபயோகமாகத்தான் இருக்கிறது. சின்னதாக ஆரம்பித்த மூங்கில் புதர் இப்போது மூங்கில் காடாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் குளத்தின் பக்கத்தில் ஒரு இயற்கை மையம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இங்கு நடந்து போக எத்தனை பாதைகள் இருக்கின்றன தெரியுமா? நான் அகலமாக ரோடு மாதிரி இருக்கும் பாதைகள்களைச் சொல்லவில்லை. ஒற்றையடி பாதை மாதிரி நிறைய இருக்கின்றன... அடுத்த முறை போகும்போது கவனியுங்கள்.  அவற்றில் போய்ப் பாருங்கள். எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். மரங்களின் பெயர்கள், பறவைகள் வகைகள், ஆமை வகைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு இடத்திற்குப் போகும்போதும், ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் முதல் முதலாகப் போவது போல், சந்திப்பது போல் எண்ணிப் பாருங்கள். அந்த இடத்தைப் பற்றி, அந்த மனிதரைப் பற்றி புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பூங்காவில் எடுத்த சில படங்கள்.