Showing posts with label கூகுள். Show all posts
Showing posts with label கூகுள். Show all posts

Sunday, October 21, 2012

எங்க வீட்டு கொலு...


புதுசு புதுசாக வரும் தொழில் நுட்பங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பிறகு பயன்படுத்த ஆரம்பித்தால் நல்லது. இந்தப் பாடத்தை கடந்த இரண்டு நாட்களில் நன்றாகக் கற்றுக் கொண்டேன்.

கூகுள் ப்ளஸ்ஸில் ஈவண்ட்ஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை அங்கே போட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது ஒரு ஹேங்க் அவுட் ஆரம்பித்து வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அண்மையில் ஒரு நண்பன் வீட்டு பூஜையில் ஹேங்க் - அவுட் மூலம் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் பூஜை, ஹோமம் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தார்கள். மதுரையில் உட்கார்ந்து கொண்டு நியுஜெர்ஸி பூஜையில் ஐயரை ஓட்டினார் என் நண்பனின் தந்தை!

அதிலிருந்து எனக்கு ஈவண்ட்ஸ் ரொம்ப பிடித்து விட்டது. இங்கே ரிச்மண்டில் கொலுவுக்காக நண்பர்களிடம் இருந்து ஈவைட் மூலம் அழைப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு யோசனை. நவராத்திரி கொலுக்காக ஈவண்ட் ஆரம்பித்தால் அதில் உலகெங்கிலும் இருந்து அவரவர் கொலு படங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே?  அனைவரும் பார்க்கும்படியாக ஒரு பொது நிகழ்ச்சி(பப்ளிக் ஈவண்ட்) ஆரம்பித்து அனைத்து நண்பர்களையும் சேர்த்து விட்டு மற்ற வேலைகளில் மும்முரமாகிவிட்டேன்.

அரைமணி கழித்துப் பார்த்தால், அதில் ஒரு நண்பர் அழைப்புக்கு நன்றி, நாளை மாலை சந்திக்கலாம் என்று எழுதியிருந்தார். சரி யார் வீட்டு கொலுவிலாவது சந்திப்போம் என்று எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சில மணி நேரம் கழித்து திடீரென்று தோன்றியது - மனிதர் நம் வீட்டில் கொலு என்று நினைத்துவிட்டாரா என்று. உடனே  அவருக்கு பதில் போட்டேன். ஐயா - என் வீட்டில் கொலு இல்லை. நீங்கள் கொலு போகும்போது படம் எடுத்தால் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ஈவண்ட். அவரும் விளக்கத்துக்கு நன்றி என்று எழுதினார்.

மறுநாள் தொடர்ந்தது வேடிக்கை. காலையில் ஒருவர் மின்னஞ்சலில் என் முகவரி கேட்டிருந்தார். தொலைபேசியில் இருவர் அதே மாதிரி கேட்டிருந்தார்கள். தங்கமணி வேறு போன வாரம்தான் கிளம்பி இந்தியா போயிருக்கிறார். அது தெரிந்த சிலர், வீட்டில் அம்மணி வேறு இல்லையே, புதுசாக கொலு வேறு வைத்திருக்கிறாயா என்றார்கள்.  நானும் என் பிள்ளைகளும் கொலுவிருக்கிறோம், நீங்களெல்லாம் சுண்டல் கொண்டு வாருங்கள் என்றேன்.

ஒரு சிலர் விஷயத்தைப் புரிந்து கொண்டு தொலைபேசியில் இதோ வந்து கொண்டிருக்கிறோம், அதோ வந்து கொண்டிருக்கிறோம் என்று கிண்டலாக மெசேஜ் விட்டார்கள் (வாய்ஸ் மெயிலுக்கு தமிழில் என்ன?) இது ஏதடா வம்பாகி விட்டது என்று நேற்று நாலு மணியில் இருந்து கொலு பார்க்கும் சாக்கில் வீட்டிலிருந்து ஜூட்.

இன்னொரு நண்பர், என்னடா தங்கமணி வேறு இல்லாமல் நீ கொலு வைத்திருக்கிறாய்.  'எந்த மாதிரி' கொலு என்று கடுப்பேத்தினார்.

நியுசிலாந்தில் இருந்து துளசி டீச்சர் ரிட்மண்ட் சற்று தொலைவில் இருப்பதால் வரமுடியவில்லை, எங்கள் கொலுவுக்கு வேண்டுமானால் வாருங்கள் என்று கிண்டலடித்தார்.

ஒரு ஈவண்ட் மற்றவர்களிடம் பகிர்ந்த் கொள்ளும்போது, அந்தப் பகிர்வு ஒரு அழைப்பாகப் போகிறது -  அதுதான் குழப்பத்தின் காரணம். ஆகவே மக்களே - எங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலு பற்றிய கூகுள் ஈவண்ட்  இங்கே பார்க்கலாம். இதுவரை ரிச்மண்ட், ப்ரிட்ஜ்வாட்டர்-நியுஜெர்ஸி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் வைத்திருக்கும் கொலு படங்கள் பகிரப் பட்டிருக்கின்றன. நான் பார்த்த கொலுக்கள் பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

Tuesday, May 26, 2009

என்னடா இது உடுப்பிக்கு வந்த சோதனை?

நாமதான் உடுப்பி ரெஸ்டாரெண்டுன்னு அடிச்சிக்கனும். உடுப்பில மக்கள் என்ன சாப்பிடறாங்க தெரியுமா? கூகுள்ல உடுப்பி ரெஸ்டாரெண்டு மெனுன்னு தேடினா என்ன வந்து நிக்குது பாருங்க...

Wednesday, November 12, 2008

ஜீமெயிலில் குரல் மற்றும் வீடியோ அரட்டை

நான் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவர் நேற்று ஒரு அசத்தலான காரியம் செய்தார். அரட்டை அடிப்பதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் வேறுவேறு மென்பொருள் ஏனடா உபயோகிக்கிறாய் மானுடனே - உலாவியை விட்டு விலகாதே - இங்கேயே குடியிரு என்று உலாவியில் இருந்தே ஜீமெயிலில் பேச்சும் படமும் தெரிகிறமாதிரி அருள் புரிந்து விட்டார். நீங்கள் ஏதாவது குகையில் வாழ்பவராயிருந்தால்தான் இதை இந்நேரம் வரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

 நீங்கள் இதுவரை இதைப் பயன்படுத்தி இருக்காவிட்டால், உடனே இங்கே சென்று  ஜென்மசாபல்யம் அடையுங்கள்.  சக்தி கூகுள், வீர கூகுள்!

Wednesday, September 03, 2008

கூகுள் குரோம்!


கூகுள் யாரும் எதிர்பார்க்காதபோது ஒரு உலாவியை வெளியிட்டு உள்ளது. கூகுள் குரோம்!  ஏன் இன்னொரு உலாவி என்று சிலர் கேட்கலாம். அதற்கான காரணங்களை  இங்கே விளக்குகிறார்கள் அவர்களே.

நான் அதை நிறுவிப் பார்த்ததில் தெரிந்தவை:

1. வலைப் பக்கங்கள் வேகமாக லோட் ஆகின்றன
2. முகவரிகள் அடிக்கும்போது - கூகுள் சஜஸ்ட் பாணியில் சாய்ஸ்கள் வருகின்றன.
3. எகலப்பை மூலமாக தமிழில் தட்டச்ச முடியவில்லை. இந்த பதிவை வெட்டி ஒட்டுகிறேன் :-(  ஏதாவது வழி இருந்தால் சொல்லவும்.
4. ஒவ்வொரு tab-ம் தனித்தனி processகள். ஒரு tab தொங்கினால் உலாவியே தொங்காது.


குரோமின் மற்ற சிறப்பம்சங்களின் பட்டியல் இங்கே பார்க்கலாம்.

கூகுள் குரோமை சேர்த்து என் கணினியில் நான்கு உலாவிகள். ஐஈ, நெருப்பு நரி(எனக்குப் பிடித்தது), ஆபரா மற்றவை. என் சக ஊழியன் குரோம் தெரியுமா என்று கேட்டால் போகோ தான் உலகின் தலைசிறந்த உலாவி என்கிறான்!  போச்சுடா. இன்னொன்னா?

Tuesday, August 21, 2007

அதிர வைக்கும் கூகுள்

எங்கும் வியாபித்திருக்கும் எம்பெருமான் கூகுளை விட்டுவைப்பாரா? கூகுள் 60வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்களுக்கு சில மென்பொருள்களை வழங்கியிருக்கிறது.

தமிழில் தேட வசதியாக ஒரு விட்ஜெட் அளித்திருக்கிறார்கள். அதில் உதாரண தேடுசொல் அதிர வைக்கிறது. வாழ்க கூகுள். தமிழில் தேடுவதற்கு மிக எளிய முறையில் வசதி இருக்கிறது இந்த விட்ஜெட்டில். இந்த விட்ஜெட் வலது பக்கத்தில் சேர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். அதுவரை கீழே தமிழில் அடித்துவிட்டு, வலப்பக்கத்தில் வெட்டி ஒட்டி இந்தப் பதிவில் தேடலாம்.



மேலே தமிழைத் தடவித் தடவி அடித்து என்ன ஆகிறது என்று பாருங்கள். தேடல் பக்கம் முழுவதும் தமிழில்!

நிரல் துண்டை உடனே அனுப்பிய நம் வெப்மாஸ்டர் ஜெயகாந்தனுக்கு ஒரு 'ஓ'

Sunday, April 01, 2007

இலவச இன்டெர்நெட்

வரப்போகிறது, வரப்போகிறது என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கூகுளின் இலவச இன்டெர்நெட் சேவை வந்தே விட்டது. Project Teaspoon வழக்கம்போல அனைவரும் பயன்படுத்துமாறு மிகவும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக router ரும், எப்படி நிறுவுவது என்ற விவரங்களும் மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கின்றன. சிறு குழந்தைகூட - மன்னிக்கவும் - இந்த விஷயங்களில் அவர்கள்தான் சூரர்களாயிற்றே... - எல்லா அம்மா, அப்பாக்களுக்கு கூட புரியும் வண்ணம் என்று சொல்லவேண்டும். வழக்கம்போல ஒவ்வொரு கூகுள் செயலிகளைப் பார்த்து வரும் அதே கேள்விதான். ஏன் இது இத்தனை நாள் மற்றவர்களுக்கு தோன்றவில்லை?