Thursday, June 01, 2023

காசு சேர்த்து வைக்கும் இடம் தெரியும். அறத்தை சேர்க்கும் இடம் எது?

 

 உலகில் நாம் காட்டுயிர்களாக அலைந்து திரிந்த போது இருந்து, நாகரிகமடைந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடத் துவங்கி, இன்று வரை வெல்ல முடியா சிக்கல் - பசி.

இன்றைக்கு அறிவியலின் துணை கொண்டு பெரும்பாலும் பசித்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். இருப்பினும் ஆதரவற்ற சிறுவர், முதியோர், உடல் நலிந்தோர் போன்ற சிலர் பசியில் வாடும் சூழல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறது.

அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் இயன்ற வழிகளில் எல்லாம் பசித்த மனிதன் எங்கும் இருக்கக் கூடாது என பாடுபடுகிறார்கள். அவர்களைக் காட்டிலும் தனி மனிதர்கள் சிலரின் அறமும் கொடையுள்ளமும் பல நேரங்களில் கண்கலங்க வைத்து விடுகிறது. சமீபத்தில் நண்பன் ஒருவன் தன் கைப்பொருளோடு தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளை காசாக்கி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவாகப் பரிசளித்தான். செய்தியைக் கேட்டவுடன் மனம் இளகி கண்கள் பனித்தன. இருக்கட்டும். உலகம் இயங்குவது நல்லோர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழையாலேயே. வாழ்க ஈரமனம் கொண்ட நல்லோர்.

நம் பெருங்கருணையாளரான ஐயன் வள்ளுவரும் பசி கொண்ட மனிதனைக் கண்டு கலங்கி பல இடங்களில் எழுதுகிறார். அவன் துயர் நீக்க பொருள் கொண்டவரை உதவச் சொல்கிறார். வெறுமனே, "காசு வெச்சிருக்க இல்ல, குடுடா அவனுக்கு" எனச் சொல்லவில்லை. பொருள் கொண்டவனின் அற உள்ளத்தைத் தூண்டி, மகிழ்வோடு உதவிடும் எண்ணத்தை விதைக்கிறார்.

பசி எனும் பெருந்தீயை எல்லாவற்றையும் அழிக்கும் ஒன்றாக உருவகப்படுத்துகிறார். அந்த அழித்துவிடும் பசி கொண்ட மனிதனின் பசி தீர்ந்த நிறைவே பொருள் கொண்டவன் அறத்தை சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு என்கிறார். எல்லாம் ஏழு சொற்களில்.

ஐயனே, உம்மைக் கண்டதில்லை; உம் பெயரை நாங்கள் அறிந்ததில்லை; உருவத்தில் உயரமானவரா குள்ளமானவரா தெரியாது;

ஆனால் உம் அறிவின் உயரம் அறிவோம்; தமிழை அழகுற பயன்படுத்தும் ஆற்றல் அறிவோம்; அடுத்த மனிதன் மீதான உம் கருணையுள்ளம் காண்கிறோம். வாழிய நின் புகழ்.

இல்லறத்தில் உள்ளோரிடம், இல்லார்க்கு உதவிடச் சொல்லி "ஈகை" எனும் தலைப்பில் 10 குறட்பாக்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

அற்றார் = இல்லாதவர்கள்
அழிபசி = அழிக்கும் பசி
பெற்றான் பொருள் = பொருள் பெற்றிருப்பவன் = வசதி இருக்கிறவன்
வைப்புழி = வைக்குமிடம்

பொருள் கொண்ட ஒருவன், இல்லாதவர்களின் அழித்து விடும் பசியை தீர்த்ததில் (கிடைக்கும் நிறைவே) (அறத்தை) சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு.

"வைக்கும் இடம்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறார். அறத்துப்பாலில், ஈகை அதிகாரத்தில் இல்லறவாசிக்குச் சொல்லும் அறிவுரை வேறு என்னவாக இருக்க முடியும்? பசித்தவனின் இடர் நீங்கும் போது கிடைக்கும் நிறைவில் தங்கத்தையா சேமிக்க முடியும்? அறத்தைத்தான் சொல்லாது சொல்கிறார்.

நலிந்தோர்க்கு கொடுப்பதற்கே செல்வம். அதிலும், பசிப்பிணியைப் போக்க இயன்ற போதெல்லாம் உதவிடுவோம். தழைக்கட்டும் மானுடம்.

----------

குறிப்பு:
இதனுடன் உள்ள படங்கள் மேற்சொன்ன நண்பன் ஆதரவு குன்றிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவு கொடுத்து மகிழ்வித்த போது எடுத்தவை.
 



 

Saturday, April 01, 2023

பெண் விடுதலையை யாரும் கொண்டு வந்து கொடுக்க மாட்டார்கள்.

 

உலகில் எங்கு பிறந்திருந்தாலும் என்ன மொழி பேசினாலும் புரட்சியாளர்கள் சிந்தனை ஒன்று போலவேதான் இருந்திருக்கிறது. உடன் வாழும் மனிதனை அறத்துடன், சமமான நீதியுடன் நடத்த வேண்டும் என்ற எண்ணம், அதை நோக்கிய அவர்களது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. தனக்குரியதைப் பெற, தாங்களே முனைய வேண்டும் என்கிறார்கள்.

ஆப்பிரிக்க-அமெரிக்கப் புரட்சியாளர் மால்கம்-X அவர்களின் தன்-வரலாற்றைப் படிக்கவும் ஓரிரு நேர்காணல்களையும் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. சினம் கொண்ட, கூர்மையான வாதங்கள். சட்டென சுடும் கேள்விகள். மனிதர், தன் இனத்தின் மீதான அடக்குமுறைகளை, ஏய்ப்புகளை சொற்களின் வழியே கேட்போர் முகத்தில் அறையும் வண்ணம் சுடுகிறார்.

தன் இனத்தவரின் விடுதலை மற்றவர்கள் மூலம் கிட்டாது, அவர்களே தான் போராடிப் பெற வேண்டும் என்கிறார். வெகு சூடாக.

தமிழ்நாட்டின் பெரியாரும் இதையே தனக்கேயுரிய எளிய மொழியில் பெண் விடுதலை பற்றி பேசும்போது சொல்கிறார். "எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? அப்படித்தான் பெண் விடுதலையும்." என்கிறார்.

பெண் விடுதலை, பெண் உரிமைக்கான உந்துதல் பெண்களிடம் இருந்தே வர வேண்டும், ஆண்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் எனக் காத்திருந்தால் ஏமாற்றமே எஞ்சும் என்பதுதான் அவர் சொல்லவருவது.

இப்போது ஐயன் வள்ளுவருக்கு வருவோம். இவர், 20-22 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிந்தனையாளர். தான் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் மிக உயரத்துக்குச் சிந்தித்த அறிவாளி. பசித்தவனைக் கண்டு கசிந்த கருணையாளர். இரந்தே உயிர் வாழும் சூழல் ஏற்பட்டால், அச்சூழலை ஏற்படுத்தியவனும் அங்ஙனமே கெட்டு அழியட்டும் என குரல் எழுப்பும் கலகக்காரர். இன்றிருந்தால் மேற்சொன்ன புரட்சியாளர்களைக் காட்டிலும் கூடுதலாக, காட்டமாக, அழகாகவும் பேசியிருப்பார்.

பெண் பற்றிய கீழ்காணும் தன் குறளுக்கு என்ன விளக்கம் சொல்லியிருப்பார்?

அவரது குறளுக்கு அவரே நேரில் வந்து பொருள் சொன்னால் ஒழிய எவர் புரிதலும் தவறல்ல.

கண்டிப்பாக‌, பெண்கள் தன் வலிமையை உணர்ந்து தங்களுக்கு வேண்டியதை யாருக்காவும் காத்திராமல் தாங்களே பெறவேண்டும் என்று தான் சொல்லியிருப்பார் நம் அன்புக்குரிய புரட்சியாளர் வள்ளுவர்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்


தற்காத்து = தன்னைக் காத்து
தற்கொண்டா(னை) = தன்னை அன்பில் கொண்டானை = தன் அன்புக்குரிய வாழ்க்கைத் துணையை.
பேணி = நலன் போற்றி
தகைசான்ற = பெருமைக்கு உரிய
சொல் காத்து = புகழைக் காத்து (பெற்று) - "சொல்" என்பதற்கு புகழ் என்ற பொருள் இங்கு.
சோர்வு இலாள் = அயற்சி அடையாள் (Never giving up attitude)

பெண் என்பவள், தன்னைக் காத்து, தன் அன்புக்குரிய கொண்டவனின் (வாழ்க்கைத் துணை) நலன் போற்றி, "தகைசான்ற சொல் காத்து" - பெருமைக்குரியவாறு நற்பெயர் பெற்று, என்றும் சோர்வின்றி இருப்பவள்.

மற்றவர்களுக்காக காத்திராமல், நீங்களாகவே உங்களைக் காத்துக் கொண்டு, உங்கள் காதல் துணைவனையும் பேணி, எல்லோரிடமும் பெருமைக்குரியவாறு நல்ல பெயர் வாங்கி, என்றும் எதற்கும் சோர்ந்து போகாது இருங்கள் (முன்னேறுங்கள்) பெண்களே என்று இக்குறளை பெண்கள் தின வாழ்த்தாகச் சொல்லியிருப்பார் ஐயன்.

அவருடன் நாமும் நம் பெண்களுக்கு பெண்கள் தின வாழ்த்தோடு, "உங்கள் முன்னேற்றம் உங்களால்தான் முடியும் - யாருக்காவும் காத்திராதீர்" என்ற பரிந்துரையும் சொல்வோம்.

வாழ்த்துக்கள், பெண்களே!

Wednesday, March 01, 2023

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம்

 

உலகின் தலைசிறந்த வழக்காடு மன்றத் திரைப்படப் பட்டியலில் (Court room drama) தவறாது இடம் பெறும் 12 Angry Men என்ற படத்தை மீண்டும் சென்ற வார இறுதியில் நண்பர்களோடு பார்த்தேன் என்றான் செல்வம்.

என்னடா படம் அது?

1957ல் வந்த ஒரு கருப்பு-வெள்ளை திரைப்படம். ஒரே அறையில் கிட்டத்தட்ட முழுப்படமும் நடக்கும். அமெரிக்க நீதித் துறையின் நடுவர் குழு ஒரு கொலைக் குற்றத்திற்கான தீர்ப்பை முடிவு செய்யக் கூடியிருப்பார்கள். 12 பேர். வழக்கும், சாட்சிகளும், குற்றச் சூழல் பற்றிய தகவல்களும் மிகத் தெளிவாக இருப்பதாகத் தொடங்கும்.

இருக்கும் தகவல்கள், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் பற்றிய நடுவர்களது பார்வை, சாட்சிகளின் வாக்குமூலங்கள் எல்லாம் நேர்க்கோட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை ஐயத்திற்கு இடமின்றி குற்றவாளியாக முன்னிறுத்தும்.

நடுவர்களில் 11 பேர் "ஒரு டீ போட்டு வை, ஆறிப் போவதற்குள் தீர்ப்பு சொல்லிட்டு வந்திடறேன்" என்பது போல மிகத் தெளிவாக இருப்பார்கள்.

ஒரே ஒருவரைத் தவிர.

அவர், "வெரசா வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்" என்று பரபரக்கும் குழு முன், "அவர் குற்றவாளி என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை" என்பார். மற்றவர்கள் சினம் கொள்வர். மெல்ல மெல்ல இவரின் கேள்விகளும் அதற்கு மற்றவர்களின் பொருந்தாத பதில்களும் ஒவ்வொருவர் மனதையாகத் தைக்கும். இறுதியாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரணதண்டனை உறுதி என்ற நிலையில் இருந்து குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டுக்கு வருவர்.

நடுவர்கள், தாங்கள் கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும் பொய்யாகிப் போகிறது, சரியான விசாணையிலேயே உண்மை வெளிப்படுகிறது என்பதை உணருவார்கள்.

மிக அருமையாகப் படமாக்கப்பட்ட திரைப்படம். நம் முன்-முடிவுகள், நம்மை அறியாமலேயே நாம் கொண்டிருக்கும் ஒரு பக்கமான சாய்வுகள், சாட்சியங்களின் நம்பகத்தன்மை, மனித மனம் நிலை தடுமாறும் தருணங்கள் போன்றவற்றை அட்டகாசமாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.

உவத்தலும் காய்தலும் இன்றி நடுவில் நின்று விசாரிப்பது என்பது மனத்திடத்தை சோதிப்பது.

வள்ளுவர், மன்னனுக்குத் தேவையான குணங்களில் ஒன்றாக இதனைச் சொல்கிறார். செங்கோன்மை என்ற அதிகாரத்தில், என்னென்ன செய்தால் மன்னனது செங்கோல் வளையாமல் நல்லாட்சி நடக்கும் எனும் போது, முதன்முதலாவதாக நடுநிலை தவறாத நீதி வழங்குதலைச் சொல்கிறார்.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

பொருள்கோள் முறையில் படிக்கும் போது,

"ஓர்ந்து, யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து தேர்ந்து செய்வதே முறை."

ஓர்ந்து = ஆராய்ந்து
யார்மாட்டும் = எவரிடத்தும்
கண்ணோடாது = இரக்கம் காட்டாது*
இறை புரிந்து = நடுவுநிலை பொருந்தி
தேர்ந்து = தெளிந்து (சிந்தித்து)
செய்வே முறை = செய்தலே நீதி.

* குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் பரிதாபமாகவோ, நல்லவர்/தீயவர் போலவோ இருந்து, நீதி வழங்குபவரது இரக்க மனம் அறிவை மறைக்கக் கூடாது என்பதால், இந்த இடத்தில் இரக்கம் கூடாது என்றும், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்  நல்லவரோ அல்லவரோ - மன்னன் யார் பக்கமும் சாயாமல், நன்கு ஆராய்ந்து செய்வதே நீதி என்கிறார், வள்ளுவர்.

குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், "உவத்தல் காய்தல்" இன்றி சட்டம் சொல்லும் தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். குற்றம்கடிதல் என பத்துக் குறட்பாக்களில் அதையும் தெளிவாக, உறுதியாகச் சொல்கிறார் ஐயன்.

இன்றைய மக்களாட்சி உலகில் நாம் எல்லோருமே மன்னர்கள் என்பதால், வள்ளுவர் நமக்கும் சொன்னதாக எடுத்துக்கொண்டு எவர் மீதான தகறாறுக்கும் முன்-முடிவுகள் (Prejudice), சாய்வுகள் (Bias) இன்றி விசாரித்து, குற்றம் இருப்பின் தயங்காது, சட்டப்படி குற்றம் கடிவோம். நம்முடைய உள்ளச்-செங்கோல் (moral campus) வளையாது நடந்து நல்லதொரு உலகைச் செய்வோம் என்று சொல்லி அந்தப் படம் பற்றிய உரையாடலை எங்கள் நண்பகளுக்குள் முடித்தோம்.

போதும் அரசியல், மன்னன், வழக்கு, நீதி எல்லாம்.
இது பிப்ரவரி மாதம் - "காதல் திங்கள்" என அன்பைக் கொண்டாடும் மாதம். நான் என்னுயிரைக் காண, கொண்டாட தாமதமாகிறது அப்பால வர்றேன் என்று நமுட்டுச் சிரிப்புடன் கிளம்பினான், செல்வம்.

 

Wednesday, February 01, 2023

எப்போது திருட்டு எண்ணம் வரும்?


உலகத்தில் திருட்டுப் பயலுக எல்லா இடத்திலும் இருக்கானுக நாமதான் கவனமா இருக்கணும், சரி நான் அப்புறமா பேசறேன் என்று யாரிடமோ அலைபேசியில் பேசி முடித்தபடியே வந்தான் செல்வம்.

வாடா, யாரைத் திட்டிகிட்டே வந்தே?

என் நண்பனை யாரோ தொலைபேசியில் அழைத்து ஏமாற்றப் பார்த்திருக்காங்க. வங்கியில் இருந்து பேசுவது போலவும் காவல்துறை இவனைத் துரத்துவதாகவும் ஏதேதோ கதை விட்டு இவன் வங்கி விபரங்களைக் கேட்டிருக்கிறார்கள். பயல் என்னையும் அதே அழைப்பில் இணைத்து பேசச் சொன்னான். வெற்று திருட்டுக் கூட்டம் என்பது போனவுடனேயே தெரிந்து விட்டது, இணைப்பைத் துண்டித்து விட்டு அந்த எண்ணை என் நண்பனின் தொலைபேசியில் தடை செய்யவும் சொன்னேன். தப்பித்தான்.

கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று பாடுபடுவது போலவே இணையமும் கவனமாக பாதுகாக்க வேண்டிய இடமாகிவிட்டது. சந்து பொந்துகளில் இருந்தெல்லாம் திருடர்கள் முளைக்கிறார்கள். அலைபேசிகளும், வேகமான இணையமும் அவர்களுக்கும் வசதியாகிப் போய்விட்டது.

ஆமாம்டா செல்வம், திருட்டு பெருகிப்போச்சு. காலம் மாற மாற திருட்டு எண்ணம் கூடிப் போச்சு.

அப்படியெல்லாம் ஏதுமில்லை. திருட்டு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. திருட்டு என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இயற்கையாக இருப்பது.

எத்தித் திருடும் காக்கையும், காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவதும் அதே காக்கைக் கூட்டில் இருந்து பாம்பும் கழுகும் முட்டையத் திருடுவதும், மிக எளிய எடுத்துக்காட்டுகள்.

மனிதர்கள் மற்ற உயிரினங்களிடம் இருந்து திருடுவது இல்லையா என்ன?
மாட்டிடம் இருந்து பாலைக் "கறப்பது", தேன்கூட்டில் இருந்து தேனை "எடுப்பது", கோழி முட்டையை, பட்டுப்புழுவைக் கொன்று நூல் எடுப்பது என மற்ற உயிரினங்களிடம் நாம் "வேலையை" காட்டும் போது சிக்கலில்லை. வசதியாக கண்ணை மூடிக் கொள்கிறோம். மனிதர்களிடமே திருடும் போதுதான் வம்பாகிறது.

டேய், என்னடா திருடுவது தப்பில்லை என்று சொல்வாய் போல் இருக்கிறதே?

சேசே .. அப்படிச் சொல்லவே மாட்டேன்.
திருட்டு என்பது மனிதனின் சமூக வாழ்வை கேள்விக்குறியாக்கும் செயல். திருட்டு கட்டுப்படுத்தப்படாது போனால் குழுவாக நாம் கூடி வாழ முடியாது. எனவே அதைக் குற்றமாகக் கருதி தண்டனையும் கொடுத்து கட்டுப்படுத்துகிறோம்.

ஆனாலும் திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான். திருடன்/டி எப்போது திருந்துவான்?

திருட்டை அறம் சார்ந்த ஒன்றாகக் கருதினால், திருடும் எண்ணம் அவர் மனதில் முளையிலேயே நிறுத்தப்படும்.
ஐயன் வள்ளுவர் கள்ளாமை என ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கார்.

திருடாதே, திருடாதே திருட்டினால் வரும் பொருள் முதலில் பெரிதாகத் தோன்றினாலும் முடிவில் இருப்பதையும் அடித்துக் கொண்டு போய்விடும், திருட்டு குணம் ஏற்படுத்தும் திரில் (காதல் என்கிறார்) தீராத துன்பத்தைத் தரும், அடுத்தவர் பொருளை கள்ளத்தால் கள்வோம் என நினைப்பது கூட தீங்கானது எனவே திருடலாமா என்று நினைத்துக் கூட பார்க்காதே, அளவறிந்து வாழாதோரே (living within their means) திருட்டுப் பக்கம் போகிறார்கள் - எனவே உன் சக்திக்கு உட்பட்ட வாழ்க்கையை வாழ் என்கிறார். ஊரார் பொருளை திருடி வாழ்வது, ஏய்த்து, ஊழல் செய்து வெட்டிச் செலவு செய்வது எல்லாம் "அளவின் கண் நின்று ஒழுக முடியாதவர்கள்" (Within means வாழ முடியாதவர்கள்) செய்வது என்கிறார்.

இந்த "அளவுக்குள் வாழ்" என்பதை அழுத்தி அழுத்தி பலமுறை சொல்கிறார். உன் "அளவு" கடந்த வாழ்க்கையே திருட்டு எண்ணத்தை ஏற்படுத்துகிறது, "அளவு அறிந்தவர்" நெஞ்சம் அறம் பக்கம் நிற்கும், "களவு அறிந்தவர்" நெஞ்சம் வஞ்சத்தின் பக்கம் செல்லும் - நல்லவனாக இருக்க அளவோடு வாழ், களவு செய்யாதே என்கிறார்.

ஐயன் வழி நடக்க முயலும் நான் திருட்டு சரி என்பேனா?
திருட்டு பற்றிய நம் எண்ண-முரணை (Hypocrisy) எடுத்துக்காட்டுகளோடு சொன்னேன், அவ்வளவுதான்.

ஒரு வேலையாக இந்தப் பக்கம் வந்தேன் அப்படியே உன்னைப் பார்த்திட்டு போகலாம் என்று வந்தேன். அப்புறமாக சாவகாசமாக வர்றேன் என்றபடியே கிளம்பினான், செல்வம்.

டேய் இருடா. அந்த "Within their means" குறள்ல ஒன்றையாவது எனக்கு விளக்கிட்டு இந்த தேநீரைக் குடுச்சிட்டு போ.

சரி சொல்றேன் கேள். அப்படியே புரியும். மிக எளிய குறள். அதன் சரக்கு தான் கனம்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்


அளவின்கண் = அளவுக்குள்
நின்று ஒழுகல் ஆற்றார் = நின்று வாழ முடியாதவர்
களவின்கண் = களவுக்குள்
கன்றிய = மிகுந்த
காதலவர் = ஆசையுடையவர்

அளவுக்குள் வாழ முடியாதவரே
திருட்டுக்கு ஆசை படுகிறவராகிறார்.


யோசிச்சுப் பாரேன். சோத்துக்கு இல்லாம திருடுறவன் வெகு குறைவு. பேராசையில் திருடுபவரே மிகப் பெரும்பாலும்.

எனவே, நாம் அளவறிந்து வாழ்வோம், தனிச்சொத்தோ பொதுச் சொத்தோ - கள்வோம் என்ற எண்ணம் கூட வராது வாழ்வோம், திருட்டுப் பசங்களிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

நேரமாயிடுச்சு இன்னொரு நாள் வர்றேன், காபி நல்லாயிருந்துச்சு என்றபடியே கிளம்பினான்.

டேய், அது "டீ" டா.

 

Sunday, January 01, 2023

எவ்வளவு விரைவாகக் கொடுக்க வேண்டும்?

 

உலகின் மிகப்பெரும் கருணையாளர்கள் எனப் பட்டியலிட்டால் கண்டிப்பாக வள்ளுவர் அதில் இடம்பெறுவார்.

துன்பம் கொள்ளும் மனிதனைக் கண்டு கசிந்து உருகுகிறார். வசதியானவர்கள் வறியவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் உதவிட வேண்டும் என்கிறார். தன்மானக்காரர் வேறு. வறுமை பீடித்து இரக்கும் நிலை (begging) போல இழிநிலை வேறு இல்லை என்கிறார். இரவு (இரத்தல் - begging பற்றியது), இரவு - அச்சம் (இரப்பதற்கு அஞ்சவேண்டும்) என்று இரு முழு அதிகாரங்கள் எழுதியிருக்கிறார்.

எவ்வளவு முயன்றும் இரந்தே உயிர் வாழவேண்டும் என்ற நிலை ஒருவனுக்கு உருவாகிவிடுகிறது என்றால், அப்படியான சூழலை உண்டாக்கியவனும் அப்படியே இரந்து கெட்டு அழியட்டும் என கலகக்குரல் எழுப்புகிறார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, செல்வம் சேர்ந்து இருப்பவரிடம் "தாராளமாகக் கொடு-கெட்டுப்போகமாட்டாய்" என முழுதாக 10 குறட்பாக்களை எழுதுகிறார்.
இல்லறத்தில் இருப்பவரிடம் ஈகை எனும் கொடுக்கும் குணம் பற்றி கூறும் போது இவ்வாறு சொல்கிறார்.

பெரும்பாலான அற நூல்கள் கொடுப்பதை மகிழ்வான, உயர்ந்த, பெருமைப்படும் ஒன்றாகவே சொல்லும். ஐயன் மாறுபடுகிறார். கொடுப்பதால் தலைக்கனம் கூடி விடக் கூடாது என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

உதவி கேட்டு வந்தவரது இயலாமையைக் கேட்டுக் கொண்டு இருந்து தாமதிக்காதே என்கிறார். இரப்பவனது முகம், கிடைக்கும் உதவியினால் மலரும் வரை உதவிடும் உனக்கு மகிழ்ச்சியில்லை, எனவே உடனடியாக துன்பம் களை என்கிறார்.

நின்று நிதானித்து யோசியுங்கள்.
நீங்கள் ஒருவருக்கு உதவுகிறீர்கள். எதிரில் இருப்பவரோ தன்மானம் தடுத்தும் வேறுவழியின்று இரந்து நிற்கிறார். துன்பத்தில் இருக்கிறார். பொருள் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் அவர் முகம் மலரும் கணம் வரை உனக்கும் துன்பமே என்ற சிந்தனை எவ்வளது மனிதம் கொண்டது.

குறள் இதுதான்:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

பொருள்கோள் வகைப்படி மாற்றி அமைத்துப் பார்க்கும் போது,

இரந்தவர் இன்முகம் காணும் அளவு
இரக்கப் படுதல் இன்னாது


/* இரந்தவர் = உதவி கேட்டு வந்தவர்
இன்முகம் = மலர்ந்த, மகிழ்வான முகம்
காணும் அளவு = காணும் வரை
இரக்கப்படுதல் = உதவலாம் என்று நினைக்கும் ஈகை உள்ளம்
இன்னாது = இனிமை அடையாது */

உதவி கேட்டு வந்தவரது துன்பக்கதையைக் கேட்டு காலம் தாழ்த்துதல் இன்பம் தராது, இரப்பவரது முகம் மலரும்படியாக உடனடியாக உதவிடு என்கிறார்.

சொல்லாமல் புரிய வைத்தது மேற்சொன்ன பணிவும், இரப்பவனது நிலையை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு விரைவாக மாற்ற உதவிடு என்ற கருத்தும்.

தன்மானம் தடுத்தும் வேறு வழியின்றி இரந்து நிற்கும் மனிதனது பதைபதைப்பைக் கண்டு ஐயன் கலங்குகிறார். உதவிடும் நிலையில் உள்ளவனிடம் உடனடியாக உதவு, அவன் முகம் மலரும் அளவுக்கு உதவு, அவன் பதைபதைப்பு விலகும் வரை உனக்கும் இன்பம் இல்லை என்கிறார்.

முதல் முறை படித்தபோது இக்குறளின் அடர்த்தி வெகு நாட்களுக்கு அலைகழித்தது.