உலகின் தலைசிறந்த வழக்காடு மன்றத் திரைப்படப் பட்டியலில் (Court room
drama) தவறாது இடம் பெறும் 12 Angry Men என்ற படத்தை மீண்டும் சென்ற வார
இறுதியில் நண்பர்களோடு பார்த்தேன் என்றான் செல்வம்.
என்னடா படம் அது?
1957ல்
வந்த ஒரு கருப்பு-வெள்ளை திரைப்படம். ஒரே அறையில் கிட்டத்தட்ட
முழுப்படமும் நடக்கும். அமெரிக்க நீதித் துறையின் நடுவர் குழு ஒரு கொலைக்
குற்றத்திற்கான தீர்ப்பை முடிவு செய்யக் கூடியிருப்பார்கள். 12 பேர்.
வழக்கும், சாட்சிகளும், குற்றச் சூழல் பற்றிய தகவல்களும் மிகத் தெளிவாக
இருப்பதாகத் தொடங்கும்.
இருக்கும் தகவல்கள், குற்றம்
சாட்டப்பட்டிருப்பவர் பற்றிய நடுவர்களது பார்வை, சாட்சிகளின்
வாக்குமூலங்கள் எல்லாம் நேர்க்கோட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை ஐயத்திற்கு
இடமின்றி குற்றவாளியாக முன்னிறுத்தும்.
நடுவர்களில் 11 பேர் "ஒரு டீ போட்டு வை, ஆறிப் போவதற்குள் தீர்ப்பு சொல்லிட்டு வந்திடறேன்" என்பது போல மிகத் தெளிவாக இருப்பார்கள்.
ஒரே ஒருவரைத் தவிர.
அவர்,
"வெரசா வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்" என்று பரபரக்கும் குழு
முன், "அவர் குற்றவாளி என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை" என்பார்.
மற்றவர்கள் சினம் கொள்வர். மெல்ல மெல்ல இவரின் கேள்விகளும் அதற்கு
மற்றவர்களின் பொருந்தாத பதில்களும் ஒவ்வொருவர் மனதையாகத் தைக்கும்.
இறுதியாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரணதண்டனை உறுதி என்ற நிலையில்
இருந்து குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டுக்கு வருவர்.
நடுவர்கள்,
தாங்கள் கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும் பொய்யாகிப் போகிறது, சரியான
விசாணையிலேயே உண்மை வெளிப்படுகிறது என்பதை உணருவார்கள்.
மிக
அருமையாகப் படமாக்கப்பட்ட திரைப்படம். நம் முன்-முடிவுகள், நம்மை
அறியாமலேயே நாம் கொண்டிருக்கும் ஒரு பக்கமான சாய்வுகள், சாட்சியங்களின்
நம்பகத்தன்மை, மனித மனம் நிலை தடுமாறும் தருணங்கள் போன்றவற்றை அட்டகாசமாகக்
காட்டியிருப்பார் இயக்குனர்.
உவத்தலும் காய்தலும் இன்றி நடுவில் நின்று விசாரிப்பது என்பது மனத்திடத்தை சோதிப்பது.
வள்ளுவர்,
மன்னனுக்குத் தேவையான குணங்களில் ஒன்றாக இதனைச் சொல்கிறார். செங்கோன்மை
என்ற அதிகாரத்தில், என்னென்ன செய்தால் மன்னனது செங்கோல் வளையாமல் நல்லாட்சி
நடக்கும் எனும் போது, முதன்முதலாவதாக நடுநிலை தவறாத நீதி வழங்குதலைச்
சொல்கிறார்.
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
பொருள்கோள் முறையில் படிக்கும் போது,
"ஓர்ந்து, யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து தேர்ந்து செய்வதே முறை."
ஓர்ந்து = ஆராய்ந்து
யார்மாட்டும் = எவரிடத்தும்
கண்ணோடாது = இரக்கம் காட்டாது*
இறை புரிந்து = நடுவுநிலை பொருந்தி
தேர்ந்து = தெளிந்து (சிந்தித்து)
செய்வே முறை = செய்தலே நீதி.
இன்றைய மக்களாட்சி உலகில் நாம் எல்லோருமே மன்னர்கள் என்பதால், வள்ளுவர் நமக்கும் சொன்னதாக எடுத்துக்கொண்டு எவர் மீதான தகறாறுக்கும் முன்-முடிவுகள் (Prejudice), சாய்வுகள் (Bias) இன்றி விசாரித்து, குற்றம் இருப்பின் தயங்காது, சட்டப்படி குற்றம் கடிவோம். நம்முடைய உள்ளச்-செங்கோல் (moral campus) வளையாது நடந்து நல்லதொரு உலகைச் செய்வோம் என்று சொல்லி அந்தப் படம் பற்றிய உரையாடலை எங்கள் நண்பகளுக்குள் முடித்தோம்.
போதும் அரசியல், மன்னன், வழக்கு, நீதி எல்லாம்.
இது பிப்ரவரி மாதம் - "காதல் திங்கள்" என அன்பைக் கொண்டாடும் மாதம். நான் என்னுயிரைக் காண, கொண்டாட தாமதமாகிறது அப்பால வர்றேன் என்று நமுட்டுச் சிரிப்புடன் கிளம்பினான், செல்வம்.
No comments:
Post a Comment
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!