சென்ற செப்டெம்பர் மாதம் 27 ம் தேதி பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பற்றி காரசாரமான விவாதங்களும், பரபரப்பான சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன. திரும்பவும் தொடர்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு.
ஆனால் எந்த பின்னணியில் இந்த தீர்ப்பு வந்தது என்பதை கவனத்தில் கொண்டால்தான், படித்த மக்கள்,நாட்டின் பொதுவாழ்வு, மற்றும் நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பின் பாதுகாப்பு பற்றி அக்கறை கொண்டவர்கள் அறிந்து அதை கவனத்தில் கொண்டால்தான் நாட்டுக்கு நல்லது. அதனால் இந்த வழக்கு தொடர்பான பல ருசிகர சம்பவங்களை, தகவல்களை காலம் கடந்தாவது எழுத வேண்டியது அவசியமாகிவிட்டது.
இந்த வழக்கு 1996 முதல் தொடங்கி 18 ஆண்டுகள் நடைபெற்றது. 200 முறை ஒத்திவைக்கப்பட்டது. 130 முறை குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் ) நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து பல மனுக்கள் கொடுத்தார்கள். அந்த மனுக்கள் மீது கொடுத்த தீர்ப்பை எதிர்த்து பலமுறை உயர்நீதி மன்றத்துக்கும் உச்ச நீதி மன்றத்துக்கும் போனார்கள்.
பலநாட்களில் விசாரணைக்கு வராமல் வாய்தா கேட்டார்கள் சாதாரணமாக மற்ற வழக்குகளில் ஒப்புக் கொள்ளப்படாத காரணங்களூக்காக வழக்கை ஒத்தி வைக்கக் கோரி மனு கொடுத்தார்கள். ஆஙகிலம் தெரியாது ஆகையால் சில ஆவணங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்கள். தமிழில் மொழி பெயர்க்க வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதில் இடஒதுக்கீடுக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்று புகார் கூறி ஆட்சேபனை மனு கொடுத்தார்கள்.
நீதிமன்றத்துக்கு வராமல் வாய்தாவும் கேட்காமல் பல நாட்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு நீதிபதி அழாத குறையாக சொல்லியிருக்கிறார். இந்த வழக்கை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆறு மாத காலமாக எந்த விசாரணையும் நடத்த முடியவில்லை. நான் கடந்த ஆறு மாத காலமாக நீதி மன்றத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.தனிச் சிறையில் தண்டனை அனுபவிப்பது போல் உணருகிறேன் என்று கூறி அந்த நீதிபதி புலம்பியிருக்கிறார்.
பத்து நீதிபதிகள் மாறியிருக்கிறார்கள். வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. 64 சாட்சிகள் முன்னால் சொன்ன விவரங்களை மாற்றி பேசினார்கள். அவர்களை எந்த குறுக்கு விசாரணையும் இல்லாமல் அவர்கள் கூறியது ஏற்றுக் கொள்ளப்பட்டது. வழக்கறிஞர்கள் சிலர் தாக்கப்பட்டார்கள் ஜெயலலிதா சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் சிலர் அரசாங்க வழக்கறி ஞர்களாக நியமிக்கப்பட்டனர் சிலருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைத்தது.
. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்ய்பட்டார்.நீதிபதி வேறு மாநிலத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிப்போனார். கஞ்சா கடத்தல் வழக்கு கைவிடப்பட்டது.
கர்நாடக அரசாங்கம் நியமித்த அரசாங்க வழக்கறிஞர் ஆச்சார்யா மீது நிர்ப்பந்தம் கொண்டு வந்து அவரை வழக்கை விட்டுவிலகச் செய்ய முயற்சி நடந்தது. மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவும் அவருக்குப் பின் பதவிக்கு வந்த சதானந்த கொடாவும் ஆச்சர்யாவை பதவியிலிருந்து மாற்ற முயற்சி செய்தார்கள். பலிக்கவில்லை. இனம் இனத்தோடு சேரும் என்ற பழமொழி இங்கே நினைவுக்கு வரும்.
கடைசியாக வழக்கறிஞர் ஆச்சார்யாவே சலித்துப்போய் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த அனுபவத்தைப்பற்றி ஆச்சார்யா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் அந்த புத்தகத்தில் 15 பக்கங்களீல் பல விவரங்களை கூறியிருக்கிறார், ஜெயலலிதா வழக்கைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுதலாம் அதற்கு வாய்தா புராணம் என்று பெயர் வைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்
சொத்துக்கள் வாங்கிக் குவித்த விவரங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவை
32 பினாமிக் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அந்த 32 கம்பெனிகளீல் 9 கம்பெனிகள் ஒரே நாளில் பதிவு செய்யபட்டிருக்கிறது
இந்த நிறுவனங்கள் எந்த பொருளையும் உற்பத்தி செய்யவில்லை.எந்த பொருளையும் வாங்கவில்லை, விற்கவில்லை. ஆனால் அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் அவ்வப்போது பணம் செலுத்தப்பட்டது.ஜெயலலிதா பெயரில் ஏற்கெனவே இருந்த 12 வங்கிக் கணக்குகளோடு இந்த 32 நிறுவனங்களும் 52 கணக்குகளை தொடங்கின.
இந்த நிறுவனங்கள் பெயரிலும் தனிப்பட்ட நபர்கள் (ஜெயலலிதா மற்ற மூவர் ) பெயரிலும் வங்கியில் பணம் செலுத்தப்பட்டது.29-11-1994 முதல்- 12-1-1995 முடிய 35 நாட்களில் 1 கோடி 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டி ருக்கிறது.
இந்த நிறுவனங்களைப் பதிவு செய்த அதிகாரி தன்னுடைய மேலதிகாரி உத்திரவின் பேரில் தன் வேலையைச் செய்ததாகக் கூறியிருக்கிறார் அவர். குறிப்பிட்ட அந்த மேலதிகாரி தற்போது பதவி உயர்வு பெற்று மாநில தேர்தல் ஆணையராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பதிவு செய்யப்பட்ட எல்லா நிறுவனங்களிலும் இந்த 4 பேர் மட்டுமே பங்குதாரர்கள்.தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருடைய பங்குத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் இல்லை.
இந்த நிறுவனங்கள் தொடங்கிய காலத்திலிருந்து எந்த வருமான வரிக் கணக்கையும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததில்லை. வருமானவரி கட்டியதில்லை.
இந்த நிறுவனங்கள் பெயரிலும் நான்கு தனிநபர்கள் பெயரிலும் சென்னை நகரத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் 300000 (மூன்று லட்சம் )சதுர அடி நிலம் வாங்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகள்,வணிக நிறுவனங்கள் நிலம் வாங்கப்பட்டது
மொத்தமாக மாநிலத்தின் பல பகுதிகளில் 3000 (மூவாயிரம் ) ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது, வாங்கும் போது எந்த சரியான வழிமுறைகளும் அனுசரிக்கப்படவில்லை
இந்த சொத்துக்களை பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் போயஸ் கார்டன் வீட்டுக்குப்போய் பதிவு செய்தார். ஸ்டாம்ப் சட்ட விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. வாங்குபவர்கள் குறிப்பிட்ட தொகைக்கே பதிவு செய்யப்பட்டது. 6 பத்திரங்களில் சொத்து வாங்கியவர் பெயர் கூட எழுதப்படவில்லை. .
900 ஏக்கர் கொண்ட கொடநாடு எஸ்டேட் 7.6 கோடிரூபாய்க்கு (ஏழு கோடி 60 லட்சம் )வாங்கப்பட்டதாக பத்திரம் பதிவாகியிருக்கிறது.
கல்யாண வைபோகமே
தத்துப்பிள்ளை சுதாகரன் திருமணத்துக்கு ஏற்க்குறைய 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா வாக்குமூலத்தில் பெண் வீட்டார்தான் எல்லா செலவுகளையும் செய்ததாகக் கூறியிருக்கிறார்.
ஆனால் பல செலவினங்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்ட காசோலைகள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும் மைதானத்தில் நடைபெற்ற அந்த திருமணத்துக்காக பெரியதும் மிகப் பெரியதுமான 5 பந்தல்கள் போடப்பட்டன. மிகப் பெரிய பந்தலின் பரப்பளவு மட்டும் 60000 சதுர அடி (அறுபதினாயிரம்) அடுத்த பந்தல்கள் 35000, 27000 இப்படி யாக கடைசி பந்தலின் பரப்பளவு 12000 சதுர அடி.நீர் கொண்டு செல்ல 10.கிலோவாட்ஜெனெரேட்டர்கள் பல பயன்படுத்தப்பட்டன. 1 கிலோமீட்டர் பாதைக்கு சாலை அமைக்கப்பட்டது. அரசு யந்திரம் பயன்படுத்தப்பட்டது. பல அரசாங்க ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்தார்கள்.
நமது எம்.ஜி.ஆர்.பத்திரிகை சந்தாதாரர்கள் என்ற பெயரில் சொல்லப்பட்ட ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தார்கள். ஆனால் 2 ஆண்டுகளூக்குப் பிறகு தொலைந்ததாகச் சொல்லப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். எல்லா ஆவணங்களும் பழையது என்று தோற்றம் கொடுப்பதற்காக புகையில் காட்டியும் கசங்கியும் இருந்த நிலையில் கொடுத்தார்கள்.ஆனால் அந்த ஆவணங்களில் காணப்பட்ட கையெழுத்துக்கள் பளிச்சென்று புதியதாக தோற்றம் கொடுத்தன. மேலோட்டமாகப் பார்க்கும்போதே செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று தெரிந்துவிடும்.
சிறுபிள்ளை கூட ஏமாறாத அளவுக்கு முரண்பாடாக இருந்த அந்த ஆவனங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் உள்ளவர்களை முட்டாளாக்கும் முயற்சி நடந்தேறியிருக்கிறது.
இவ்வளவு விவரங்களும் 1300 பக்க தீர்ப்பில் உள்ள செய்திகள். கற்பனை அல்ல. காழ்ப்பு உணர்ச்சியில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல
ஜெயலலிதா வீட்டிலிருந்து 23 கிலோ தங்கம்,இதர வெள்ளி, சாமான்கள் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.இதை தவிர 42 நகைப் பெட்டிகளீல் 140 வகையான நகைகளூம் பல கைக்கடியாரங்களூம் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இந்த நகைகள் வாங்கிய நேரம் காலம் செலவு செய்த தொகை அதற்கான வருவாய் பற்றி திருப்திகரமான பதில் கொடுக்க முடியவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு இல்லை, தெரியாது. நினைவு இல்லை என்ற பதில்தான் வந்தது
தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி திரும்பவும் வந்த பிறகு விசாரணை இங்கே சரியாக நடக்கவில்லை அரசாங்க வழக்கறிஞர்கள் குற்றவாளிகளோடு ஒத்துழைத்தார்கள் என்ற புகாரின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழக்கை கர்நாடகத்திற்கு மாற்றியது. பல நிர்ப்பந்தங்களூக்கு இடையில் வழக்கு தொடர்ந்து நடந்து ஒரு வகையாக முடிவுக்கு வந்தது. உச்சநீதி மன்ற உத்திரவின்படி கர்நாடக அரசாங்கம் வழக்கை நடத்த தேவையான சகல உதவிகளையும் செய்தது
அந்த பாவத்துக்காக இன்றைய கர்நாடக அரசாங்கத்தின் மீது பழி கூறி போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை செய்வது, தீர்ப்பு எழுதிய நீதிபதியை கொச்சைப்படுத்துவதெல்லாம் நடந்தேறியிருக்கிறது.அதோடு விடவில்லை.ஒரு போஸ்டரில் தமிழர்கள் படையெடுத்துவருவார்கள்,சிறையிலிருந்து அம்மாவை மீட்டு வருவார்கள் என்ற வாசகத்தை படிப்பதற்கு வேதனையாக இருக்கிறது. சிரிப்பும் வருகிற்து தேச ஒற்றுமையைச் சீர் குலைக்கும் சக்திகளை மக்கள் சரியாக இனம் கண்டு கொள்ள வேண்டும் . இவ்வளவுக்கும் பிறகு அம்மாவுக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்று யாராவது பூசி மெழுகி பேசி பிரச்னையை திசை திருப்ப முயற்சித்தால் அவர்களுக்கு ஒரே பதில்தான் சொல்லியாக வேண்டும். ஹிட்லர் கூட பெரும்பான்மை மக்கள் ஆதரவோடுதான் பதவியில் அமர்ந்தான். இதுதான் பதில்.
- மு.கோபாலகிருஷ்ணன்.