Sunday, November 23, 2014

நாட்டைக் குலுக்கிய தீர்ப்பு - விளக்கம்

என்னுடைய செய்திக்கட்டுரைக்கு மறுமொழியாக ஒரு மறுப்புக் கட்டுரையே எழுதித் தள்ளிவிட்டார் நண்பர் முரளி. சோ பற்றிய என்னுடைய கருத்துதான் அவரை இப்படி வேகமாக எழுத வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
    நான் சொன்ன செய்தி தேர்தல் நேரத்தில் பல கட்சியினரால் பேசப்பட்டசெய்திதான். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி கருத்தரங்கத்தில்  கூட ஒரு பேச்சாளர் சோ பற்றிய இந்த செய்தியைக் குறிப்பிட்டுப் பேசினார். அவர் எந்த ஊடகத்தின் வழி இந்த செய்தியை மறுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நான் துக்ளக் பத்திரிகையின் வாசகன் அல்ல…நண்பர் முரளி எழுதிய செய்தி உண்மையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
 அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மட்டுமன்றி எல்லா மாநிலங்களிலும் பிற மாநிலத்தினர் மீது வெறுப்பு இருப்பதாக அவர் கூறியிருப்பது சரியென்று எனக்குத் தோன்றவில்லை. இரு மாநிலத்தையும் பாதிக்கும் பொதுவான பிரச்னை கிளம்பினால், அதையொட்டி சில நாட்கள் கிளர்ச்சிகள் இருக்கலாம். அடுத்த மாநிலத்தவரைப் பற்றி அவதூறாகப் பேசலாம். ஆனால் அது நிரந்தரமான கருத்தாக சதாரண மக்களீடம் நிலை பெறுவதில்லை.
சமீபத்திய ஆந்திரா தெலிங்கானா பிரிவினைக்குப் பிறகு அரசியல்வாதிகள் பேச்சு இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையை நினைவுக்குக் கொண்டு வந்தது. இந்த நிலை சமீப காலத்தில் எல்லா மாநிலங்களூக்கும் பரவி வருகிறது என்றுதான் குறிப்பிட்டேன்.
.   தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்தான் மொழி அடிப்படையில் அரசியல் நடத்துகிறார்கள். ஒரு வகையான தமிழ்ப் பேரின வாதத்தை தூண்டி விட்டு அரசியலில் குளிர் காய்ந்து  கொண்டிருக்கிறார்கள். ஈழப்பிரச்னை, காவிரிப் பிரச்னை, நதிநீர்ப் பங்கிட்டுப் பிரச்னை இவையெல்லாம் இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகிறது. இது திராவிட இயக்கம் வளர்த்து விட்ட வியாதி.
 கர்நாடகாவை பொறுத்தவரையில் அந்தக் குற்றச்சாட்டைச் சொல்ல முடியாது. மற்ற மொழியினரை கீழானவராக நினைக்கும் பலவீனம் அங்கே இல்லை. பெங்களுரு நகரத்தில் 30 சதவிகித மக்கள் கன்னடம் அல்லாத மொழி பேசும் மக்கள் தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழி பேசுவோர் என்பது உண்மை. என்னுடைய உத்தியோக வாழ்க்கையில் 14 ஆண்டு காலம் கர்நாடகாவில் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். இந்த மாநிலத்திற்கு அந்நியமானவன் என்று நான் நினைக்கும்படி எந்த கன்னட மொழிக்காரனும் என்னிடம் நடந்து கொள்ளவில்லை. அந்த வாழ்க்கையை நினைவில் கொள்ளூம் வகையில் என்னுடைய வீட்டுக்கு ஹுப்ளீ ஹவுஸ்  (Hubli House ) என்று பெயர் வைத்தேன். ஆகையால் இது தொடர்பான முரளீயின் கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். அலைபோல எழுந்து ஓய்ந்துவிடும் அரசியல் சம்பவங்கள் ஏற்படுத்தும் தற்காலிகமான நிலையையும் அதையொட்டிய பேச்சுக்களையும் கணக்கில் கொள்ள வேண்டாம்
 பிரச்னையை திசை திருப்பும் வகையில் பதில் அளித்தவர்களைப் பற்றித்தான் நான் கேலி செய்திருக்கிறேன். நடுநிலையாகப் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு தன்னுடைய அரசியல் சார்பை நேரடியாகச் சொல்ல வெட்கப்படுபவர்கள் மீது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  வழக்கு தீர்ப்பு பற்றி என்னுடைய கட்டுரை பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. முரளியும் உடனடியாக மனமுவந்து பாராட்டியிருக்கிறார். நாகுவுக்கு  நன்றி. பட்டுக்கோட்டையார் பாடலை சரியான நேரத்தில் பயன்படுத்தியிருக்கிறார். வேதாந்திக்கும் நன்றி.
  நேரம் கிடைத்தால் இந்த வழக்கு பற்றி பல சுவாரசியமான தகவல்கள் தொடரும் அரசியல்வாதிகள் வழக்கு என்றால் இந்த நாட்டில் நீதிமன்றங்களும் நீதிபதிகளூம் படும் பாட்டை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
                                         - மு.கோபாலகிருஷ்ணன்.

1 comment:

 1. மு.கோ
  திட்டாமல் திட்டிட்டீங்க. திட்ட திட்ட திண்டுக்கல், வைய வைய வைரக்கல்னு அம்மா (எங்க அம்மா, தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் இல்லை) அடிக்கடி சொல்லிச்சொல்லி ஒரு வீடு கட்ற அளவுக்கு கல் சேர்த்தாச்சு.

  காவிரி ப்ரச்சனையும் ஒகேகனக்கல் ப்ரச்சனையும் தலைவிரிச்சு ஆடினப்ப வாட்டாள் நாகராஜ் சொன்னதும் அதுக்கு ரஜனி சொன்னதும் அதுக்குள்ள எல்லாருக்கும் மறந்து போச்சா. சரிதான்.

  //நடுநிலையாகப் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு தன்னுடைய அரசியல் சார்பை நேரடியாகச் சொல்ல வெட்கப்படுபவர்கள் மீது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்//

  இதுக்கும் சோ வோட ஒரு உதாரணம், நடு நிலைன்னு ஒன்னு கிடையவே கிடையாது. உதாரணத்துக்கு ஒருத்தன் நல்லவன், ஒருத்தன் கெட்டவன், நாம நல்லவன் பக்கம் நின்னா அது நடு நிலைமை இல்லை, அது ஒரு பக்கம் நாம இருக்கர நிலைமை, இதுல நடு நிலைமைன்னா, நல்லவனுக்குப் பக்கத்திலும் இல்லாம, கெட்டவனுக்குப் பக்கத்துலயும் இல்லாம, நம்ம வீட்டு ஜன்னல் கதவு பத்திரமா இருக்கான்னு மட்டும் பாக்கர கோழைத்தனம். அதுதான் நடு நிலைமைன்னா அது எனக்கு வேண்டாம்"ன்னு அவர் ஒருமுறை சொல்லியிருவ்தார். அதுதான் சரின்னு எனக்கும் படுது.

  சோ, சசிகலாவின் கம்பெனிகளின் இயக்குனர் இல்லைன்னு அவரே துக்ளக்கின் கேள்வி பதிலில் மறுத்திருந்தார், அதை மறுத்து யாரும் பேசியதாகவோ, அல்லது அவர் சொன்னது பொய்ன்னோ யாரும் இதுவரைக்கு நிருபிச்சதா எனக்குத் தெரியலை. (எனக்குத் தெரிஞ்சுதான் ஆகனும்னு ஒன்னும் இல்லை).

  பதிவு கண்டிப்பாக ஒரு நல்ல பதிவுதான். ஒரு சோ, ஒரு அருண் ஷோரி ஒரு குருமூர்த்தி சொல்றத வெச்சு யாரும் எதையும் முடிவு பண்றதில்லை. அவங்க அவங்க எது சரின்னு நினைக்கிறாங்களோ அதை செய்யராங்க அவ்வளவுதான்.

  முரளி.

  ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!