அமெரிக்காவில் நவராத்திரி கொண்டாடும் பெண்கள் அனைவர் சார்பிலும் தான் இதை நான் சொல்லறேன். வீட்டுக்கு வீடு கணினியோட குடும்பம் நடத்துற கணவர்கள் இருந்து எங்களுக்கு என்ன பிரயோஜனம்? எத்தனை தரம் தும்மினோம் , எத்தனை தரம் ஏப்பம் விட்டோம் அப்படீன்னு பார்க்கறதுக்கு எல்லாம் app வந்தாச்சு. ஆனா பேக்கு மாதிரி நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரம் Evite invitations ஐ தூக்கிண்டு ரோடு ரோடா அலையும் எங்களுக்கு உதவ ஒரு app ஐயும் இது வரை காணும்.
இந்த கணவர்கள் குழு எங்கயாவது கூட்டு சேர்ந்தா GOP கட்சி உறுப்பினர் Donald Trump ஒரு அக்மார்க் வில்லனா இல்லை அரை லூசா அப்படீன்னு தீவிரமா தர்க்கம் பண்ணி நேரத்தை வீணாக்கறதை விட்டுட்டு கால் கடுக்க தெருத்தெருவா சுண்டல் வாங்க சுத்தற மனைவிகளுக்கு உதவ ஒரு app எழுதலாம்.
எங்க ஊருல போன வருஷத்தை விட கூடுதலா ஒரு ஐம்பது வீடாவது இந்த வருஷம் கொலு வச்சு கூப்பிட்டு இருக்காங்க. மின்னல் மீனா அப்படீன்னு பெயர் எடுக்கற அளவுக்கு சும்மா சுனாமி மாதிரி சுத்தி சுத்தி சுண்டல் பாக்கெட் வாங்கி, நவராத்திரி ஆரம்பிச்சு நாலே நாளுல சுரம் வந்து படுக்கற நிலையில் இருக்கிறேன். வாட்ஸாப்ப், Evite பத்திரிகைகளையே சமாளிக்க முடியாம முழி பிதுங்கற எங்களை போற வீட்டு கொலுவில் பார்க்கறவங்க வேற ஆசையா கூப்பிடராங்க. இனி யார் கையிலாவது குங்குமச்சிமிழ் பார்த்தா சட்டுன்னு தலை மேல் போட்டுக்க ஒரு முக்காடை இப்ப தான் கைப்பையில் எடுத்து வச்சிருக்கேன். வாழ்க்கையோட சவால்களை சமாளிக்க நாம் தயாரா இருக்கறது அவசியம் இல்லையா?
இதெல்லாம் ஒரு சவாலான்னு எங்களை பார்த்து சிரிச்ச விதி இன்னிக்கு காலையில் 'இக்கட சூடு' ன்னு ஒரு பெரிய புயலை எங்க ஊர் பக்கமா தூக்கி போட்டு பார்த்தது. ஹா!!! ஜுஜுபி!!! இதுக்கெல்லாம் அசர்றதுக்கு இந்திய பெண்கள் என்ன கை சூப்பும் வாண்டுகளா? பட்டு புடவை, நகை நட்டு போட்டு அம்மன் ரோல் கே ஆர் விஜயா மாதிரி ஒரு இந்திய பெண்கள் அணி இன்று மாலை சுமார் 3 மணி தருவாயில் வீட்டை விட்டு குடை சகிதம் கிளம்பி கொட்டும் மழைல முழ நீள லிஸ்டில் உள்ள அத்தனை கொலு வீட்டுக்கும் போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை. எப்படி நிச்சயமா சொல்லறேன்னா அது எங்க அணி தான். என் தோழிகளும் நானும் அந்த அடாத மழையிலும் விடாது குடை பிடிச்சு கொலு வீடுகளுக்கு போனதை நினைச்சா எனக்கே புல்லரிச்சு உடம்பு சில்லிட்டு போறது. இது மழைல நனைஞ்சதால வந்த சில்லுப்பு இல்லைன்னு சொன்னா வீட்டுல தான் யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க.
ரொம்ப சுவையான ஒரு சம்பவம் இன்னிக்கு நடந்தது. வழக்கம் போல் ஒரு வீட்டுக்குள் நுழையும் போதே நாங்க சுருதி பெட்டி மேல பாய்ஞ்சு ஆன் செய்து பாட தயாரான அந்த நேரம் இன்னொரு நல்ல தோழி குடையோட நுழைந்தாள். அருமையான பாடகி. எங்க எல்லோருக்கும் ஒன்னு ரெண்டு பாட்டு சில வருஷங்களுக்கு முன்னாடி சொல்லி கொடுத்திருக்கா. சரி அதுல ஒரு பாட்டை எல்லோருமே சேர்ந்து பாடறதுன்னு தீர்மானம் பண்ணி ஆரம்பித்தோம்.
முதல் சங்கதி முடிக்கறதுக்கு முன்னாடி வாசல் கதவு தட்டி குடையோடு நுழைந்தார் மற்றுமொரு தோழி. பார்த்தா அவங்களுக்கும் அந்த பாட்டும் தெரியுமாம். நுழைந்த வேகத்தில் பாய்ந்து எங்களோட அவரும் பாட ஆரம்பித்தார். கூடிய சீக்கிரத்தில் பாதி கூடம் நிரம்பி வழிந்து எல்லோரும் எங்களோட சேர்ந்து அதே பாட்டை பாட ஆரம்பித்தார்கள். அப்ப தான் எனக்கு அந்த ஐடியா வந்தது. சினிமாவுல வருமே குடும்பப்பாட்டுன்னு? அது மாதிரி இப்ப எங்களுக்கு ஊர் பாட்டுன்னு ஒண்ணு இருக்கு. எங்க ஊர்க்காரர் எங்கயாவது தொலைஞ்சு போய்ட்டா இந்த பாட்டு முதல் வரி பாடினா போதும். நாங்க யாரவது அடுத்த வரியை பாடிண்டே நடந்து போய் உடனே அவரை கண்டு பிடிச்சிடுவோம். ஊர் பாட்டு வைத்திருக்கும் ஒரே ஊர் எங்க ஊர் தான் அமெரிக்காவில் அப்படீன்னு நினைச்சா பெருமைபடாம இருக்க முடியலை.

எல்லோர் வீடுகளிலும் தரும் பல விதமான சுண்டல்களை நிச்சயமா நான் அனுபவிச்சு தான் சாப்பிடறேன். அதுல சந்தேகமே இல்லை. இருந்தாலும் யாராவது சுண்டலோட கொஞ்சம் பஜ்ஜி பக்கோடா தந்து ஒரு கப் காப்பி தந்தால் வேண்டாம்னு சொல்லிடப்போறேனா என்ன? நாளைக்கு போக வேண்டிய வீடுகளில் வாழும் தோழிகள் யாராவது இந்த ப்ளோக் படிப்பார்கள்னு ஒரு நம்பிக்கையோட எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுவது உங்கள் மீனா சங்கரன்.