Saturday, December 23, 2017

கர்நாடக சங்கீத ஸ்வரங்களின் மேற்கத்திய ஒப்பீடு

இந்தப் பதிவு கர்நாடக சங்கீத விற்பன்னர்களுக்காக அல்ல. கீபோர்டுகளை உபயோகித்து கர்நாடக சங்கீதம் அடிப்படையிலான இந்திய மொழிப் பாடல்களை வாசிக்க ஆர்வம் உள்ள நண்பர்களை நோக்கி எழுதப்பட்டது. கீபோர்டு பற்றி குறைந்த பட்ச அறிவு அவசியம். (மிடில் C மற்றும் octave குறித்த அறிமுகம் )

முதலில் "ஏழு ஸ்வாரங்களுக்குள் எத்தனை பாடல்" என்று கேட்டு விட்டு கீபோர்டைப் பார்த்தால் 12 கீ உள்ளதே என்று உடனே குழப்பம்.

சில விபரங்களைப் பார்ப்போம்

கர்நாடக சங்கீத ஸ்வரங்கள் (7)





Keyboard (12 keys )







முதலில் நாம் அறிய வேண்டிய விபரம் கர்நாடக சங்கீதத்தில் 7 ஸ்வரங்கள் இருந்தாலும் அவற்றில் பல ஸ்வரங்களுக்கு சிறிய மாறுபாடுகள் உண்டு. அவை 7 ஸ்வரங்களை 72 விதமான வகைகளாகப் பிரிக்கலாம் என்பது புரிய வரும்


கீழ்கண்ட பிரிவில்  அதில் உள்ள வேறுபாடுகள் உள்ளன.  மேலும் விபரங்களுக்கு https://ccrma.stanford.edu/~arvindh/cmt/the_12_notes.html



ரி1 ரி2 ரி3

க1 க2 க3

ம1 ம2

ப 

த1 த2 த3

நி1 நி2 நி3

அலைவரிசைப் படி

ரி2 = க1
ரி3 = க2
த2 = நி1
த3 = நி2


விதி முறைகள்


ரி1 உடன் நாம் க1 க2 க3 ஏதாவது ஒன்றை இணைக்கலாம்.

ரி2 உடன் நாம் க2 க3 ஏதாவது ஒன்றை இணைக்கலாம்.

ரி3 உடன் நாம் க3 மட்டுமே  இணைக்கலாம்.

மேற்கண்ட கோட்பாடுகள் படி, ரி மற்றும்  க மாத்திரம் 6 விதமான முறைகளில் இணையலாம்


அதே கோட்பாடுகள்  த வுக்கும் நி யுக்கும் - 6 விதமான முறைகளில் இணையலாம்

ம1 அல்லது ம2 - 2 வாய்ப்புகள்

இதைக் கணித முறையில் பெருக்கிப்  பார்த்தால்  - 2 x 6 x 6 = 72

ஒரு உதாரணம் பார்ப்போம் - எல்லாரும் அறிந்த ஒரு ராகம் கல்யாணி - அதன் இலக்கணம் ச ரி2 க3 ம2 த2 நி3. . மேற்கத்திய keyboard - இல்  இவ்வாறு இருக்கும்.



இது போல மொத்தம் 72 முதன்மை ராகங்கள் உள்ளன. இவை மேளகர்த்தா ராகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. மற்ற எல்லா ராகங்களும் இவற்றின்  குழந்தை ராகங்களாகும்.

இப்போது ஒரு மேற்கத்திய கீபோர்டில் இவற்றை எப்படி வாசிப்பது என்று பார்ப்போம்.

அதற்க்கு முதல் படி நாம் அறிய வேண்டியது சுருதி அல்லது Pitch மற்றும் அலைவரிசை (frequency )

மேற்கத்திய கீபோர்டில் உள்ள Middle C என்ற key 261.6 ghz அலைவரிசையில் உள்ளது. அதன் அடுத்துள்ள C# 261.6 * 1.059 =  277ghz  அலைவரிசையில் உள்ளது. இப்படியே போனால் அடுத்த C  (next octave ) 523 ghz அலைவரிசையில் உள்ளது. இது Middle C போல இரு மடங்காகும்

ஒவ்வொரு நபருக்கும் சுருதி மாறுபடலாம். ஆண்கள் பெரும்பாலும் 261ghz (Middle C அருகில் ) அலைவரிசையின் அருகிலும் பெண்கள் பெரும்பாலும் 391ghz (Middle G  அருகில்) இருப்பார்கள். ஒவ்வொரு நபரும் கீழ் ப முதல் மேல் ப வரை சிரமமின்றிப் பாட வேண்டும், அதைப் பொறுத்து அவரவர் முடிவு செய்யப் படுகிறது.

ஒவ்வொருவர் கீபோர்டில் எங்கு ஒத்துப் போகிறதோ அதைப் பொறுத்து மற்ற ஸ்வரங்கள் முடிவாகிறன

எளிமைக்காக ஒருவரது மிடில் C என்று வைத்துக்கொள்வோம்

அதன்படி

C - ச
C# - ரி1
D -  ரி2, க1
D# - ரி3, க2
E - க3
F - ம1
F# - ம2
G - ப
G# - த1
A - த2, நி1
A# - த3, நி2
B - த3
C - மேல் ச


ஒருவரது ச மிடில் G  என்று வைத்துக்கொள்வோம்

G  - ச
G# - ரி1
A -  ரி2, க1
A# - ரி3, க2
B - க3
C - ம1
C# - ம2
D - ப
D# - த1
E - த2, நி1
F - த3, நி2
F# - த3
G - மேல் ச

ஒவ்வொரு பாடலும் அதன் இயற்கைக்குத் தக்க மாறுபடலாம். சில பாடல்களில் ச Middle C ஆக இருக்கலாம், சில பாடல்களில் ச  Middle D ஆகவோ Middle E ஆகவோ (அல்லது மற்ற எந்த note ம் ) இருக்கலாம்.

அதை போல பாடல் எந்த சுருதியில் இருந்தாலும் நாம் குறைத்தோ கூட்டியோ பாடினால் பாடல் தவறாகத் தெரியாது, அசலில் இருந்து மாறுபடலாம், ஆனால் தவறில்லை. இதைத் தெரிந்து கொள்வது அவசியம். சரியான சுருதியில் பாடினால் பாடலின் மேன்மை குறையின்றி வெளிப்படும். அதே சமயம் முழுப்பாடலையும் அதே சுருதியில் பாட வேண்டும், இல்லையென்றால் குறைகள் உடனே வெளிப்படும்

இப்போது நாம் ஒரு உதாரணப் பாடலை எடுத்துக் கொள்வோம். இளையராஜாவிற்கு மிகவும் பிடித்த ஜனனி ஜனனி

எளிமைக்காக பாடலின் கமகங்களை விட்டுவிடுகிறேன்   - (கமகம் என்பது ஸ்வரங்களின் அசைவு, தேர்ந்த பாடகர்களால் மட்டுமே அவற்றை நன்றாகப் பாட முடியும் )

இந்த பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்தது.  எளிமைக்காக நாம் ச = Middle C

ராக இலக்கணம் - ச ரி2 க3 ம2 த2 நி3 ச - எளிமைக்காக கீழே ச ரி க ம ப த நி ச என்றால் அழைப்போம்.

(Keyboard notes without suffix are in middle octave  like CDEFGAB, lower is B3 etc, higher is C5 etc)

janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
B3B3c  C C C   CB3 .    D .   CC .  C


 jaga   kaarani nee paripoorani nee
 மம     ப  மக   ரி     சநிரி     சச  ச
 F#F#  G  F#E D .   CBD .   CC C

jaga kaarani nee paripoorani nee
நிநி  ச   நிநி  த    பப  ம   கக   ரி
BB . C5 BB .A .  GG F#  EE . D

janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
B3B3c  C C C   CB3 .    D .   CC .  C

இந்தப் பாடலையே D சுருதியில் பாட வேண்டும் என்றால், சிறிய மாற்றங்களே. எல்லா key களும் 2 முறை முன் போகவும் உதாரணம் C -> D , E -> F# ...


janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
C#C#D  D D D   DC# .   E .   DD . D


 jaga   kaarani nee paripoorani nee
 மம     ப  மக      ரி     சநிரி     சச  ச 
 G#G# A  G#F# E .   DC#E .  DD D

jaga   kaarani     nee paripoorani nee
நிநி    ச   நிநி      த    பப  ம   கக       ரி 
C#C# D5 C#C# .B .  AA G#  F#F# . E

janani   janani    jagam  nee  agam nee
நி நி ச   ச ச ச    சநி       ரி     சச   ச
C#C#D  D D D   DC# .   E .   DD . D

இந்த முறையைப் பயன் படுத்தி பல்வேறு கர்நாடக பற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதம் அடிப்படையிலான தமிழ் மற்றும் பற்று மொழிப் பாடல்களை எளிதாக வாசிக்கலாம்

பயிற்சி செய்ய வேண்டும் என்றால் பின்வரும் பாட்டை முயற்சி செய்யவும்

பனி விழும் மலர் வனம் , ராகம் சல நாட்டை

இலக்கணம் - ச ரி3 க3 ம1 ப த3 நி3 ச 



சந்தேகங்களுக்கு அணுகவும் - ச.சத்தியவாகீஸ்வரன் - vagees@gmail.com @vagees


Monday, December 18, 2017

மழலை மலர்க்கொத்து

இது என் மழலை மலர்க்கொத்து

அன்பால் ஆர்வத்தால்
அரவணைப்பால் ஆவலால்
என் ஞாயிற்று கிழமையை
மகிழ்விக்கும் என் மழலை மலர்க்கொத்து

புன்னகையால் பொலிவால்
கேள்விகளால் குறும்பால்
புத்துணர்வை தரும் என் மழலை மலர்க்கொத்து

இனிமையாய் இயல்பாய்
இன்பமாய்
அத்தையென்றும் ஆன்டியென்றும்
ஆசிரியையென்றும்
பொலிவூட்டும் என் மழலை மலர்க்கொத்து

சிரிப்பால் பண்பால்
மட்டுமின்றி
என் தாய்மொழியான தமிழ்மொழிக்கு
உங்கள் மழலைச் சொற்களால்
பெருமை சேர்க்கும் என் மழலை மலர்க்கொத்து

ஆயிரம் வணக்கங்களுடன்
சமர்ப்பிக்கிறேன்
- சுனிதா சந்திரமோகன்

(நம் தமிழ்ப் பள்ளியில் எழுத்தறிவிக்கும் ஆசிரியை சுனிதா தம் வகுப்பு மாணவர்களுக்காக எழுதியது)

Thursday, November 30, 2017

அருண் பக்கங்கள் - ரசனை


விடிவுக்கு முடிவில்லாமல் சுத்தும் பூமி...
ஆரஞ்சு நிறத்தில் வெளிச்சமான வானம்...
உடையும் முன் பெரிதாகும் குமிழி...
உயிர் இல்லாவிடினும் பறக்க துடிக்கும் இறகு...
கண் பார்வை முழுவதிலும் கடல்...
கைகளை கட்ட வைக்கும் குளிர்...
இரைச்சலான அருவி...
இளஞ்சூடான வெள்ளை பனி...

கமல புராணம் - உரை ரிச்மண்ட் மக்கள்


“கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.  நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது”  - கமலஹாசர் டிவிட்டரில்....


நாகேந்திரனார் உரை:

கடவுள் கிடையாது. ஆனால் சாதி உண்டு. கடவுளை நம்பறவன் என் சாதி.


முரளியார் உரை:

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். 

கோயில்ல கை வெச்சுகினா அவ்வளவுதான் என் கைல நாஸ்த்தி ஆயிடுவ

நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி.

நான் சாமியை நம்பரன்னா இல்லியான்னு செக் செய்ய தாவல

நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல.

நீ நம்பிகினா உன்னை கண்டுக்காம போயிகினே இருக்கரது சாமி கெடையாது, அது இந்த பால்டீக்ஸ் ஆளுங்க செய்ரது


பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.

நம்பர ஆளுங்க நெற்ய டைப்ஸ் கீது, அதுங்க எல்லாம் என் ஜனம்தான்

ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது

அத்தொட்டு இந்த ஜாதி பேசிகினா அது என்னாண்ட ஆவாது,  சாமிக்கும் ஆவாது சொல்டன்.


உள்ளூர்காரர் உரை:


//கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்.  நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. 
என் கடவுள் நம்பிக்கை கோவில் கொள்ளையரை காப்பாற்றாது.

//நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல.
உன்னைக் கைவிட்டது நீ தேர்ந்தெடுத்த ஆள்வோர் செயல். நீ நம்பும் செயல்படாத ஆண்டவன் அல்ல.

//பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர்.
எல்லா வகை பக்தர்களும் என் உறவினர்.

//ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது
ஆனால் எல்லோரையும் உறவினார்ன்னு சொல்வதை சாதி ஒத்துக்காது. நாமும் சாதியை ஒத்துக்கொள்ளக் கூடாது.

Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - ஜாதகங்கள்


வெளி வரும் நேரம் யாரும் கணிக்காமல் பிறந்தோம் ஆயினும் ஜாதகம் உருவாக்கினர் ....
மனிதனை மதம் என்ற நீரினால் குளிப்பாட்டினர்...
கல் என்ற வாயினில் கட்டாய கடவுளை திணித்தனர்...
இன்னொருவரின் விருப்பத்தில் நம் பெயரை அழைத்தனர்..

வளரும் பொழுதுகளில் நம் வார பலனை வாசித்தனர்....
வாங்கிய வேலையும் கூட குருவின் பெயர்ச்சியே என நம்ப வைத்தனர் ...
வண்டிக்கும் கூட பூசைகள் தவறவில்லை.....

இப்பொழுது வாழ்க்கையின் முக்கிய தேர்வு
வகை வகையாய் பலகாரங்களுடன் சேர்த்து வரிசையாக நிராகரிக்கப்படுகின்றனர் என் நண்பர்கள்

மணப்பொருத்தம் என்ற ஒரே வார்த்தையினால்....

அருண் பக்கங்கள் - இந்திய விடுதலை...


நாட்டுக்குன்னு நாகரிகத்தை ஐந்து திணைகள் ஆக்கி...
திட்டமிட்டு திணைக்கொரு தொழில் என பெயரிட்டு..
தொல்ல வராம இருக்க தொழிலுக்கொரு கடவுளை உருவாக்கி...
பட்ட சாராயம் காய்ச்சி படச்சவனுக்கும் படச்சுபுட்டு
நட்ட நடு நெத்தி மட்டும் விட்டு புட்டு மொத்தமா பட்டை அடிச்ச
என் பாட்டன் வழிபட்ட வழிபாடு சத்தமே இல்லாம
மொத்தமா மாறி போச்சு...

கண்மசி கவிதைகளை கண்ணியர்களே சிந்துனப்போ
மண் ஏறி வந்த பய மசியம் என்ன தான் செஞ்சானோ...
உள்ள மொழி மறந்து வெளிநாட்டு மோகம் தின்ன
உட்கார்ந்து ராஜ்ஜியம் பாருன்னு மேற்கால பிரபுவ
ஒட்டகம் கூடாரம் நொழைஞ்ச கதை ஆட்டம் உள்ள தான் சேர்த்தாங்க....

பொருள் விக்க வர்றேன்னு இருள கூட்டிகிட்டு வந்த பயலுக
அருளோட இருந்த நாட்ட அங்க அங்க துண்டாடுன சண்டாளனுங்க...

மொதல்ல மொழியறுத்தான்....முக்கியமா அறிவழிச்சான்
வெள்ள தோல கொஞ்சம் கட்டி மெல்ல நம்ம நாடு புடிச்சான்....

தர்மம்னு வளர்ந்த மண்ணுல தாறுமாறா ஆசை வெதச்சான்...
மொத்த ஊரையும் ஏப்பம் போட்டு கப்பமுன்னு கட்ட வெச்சான்...
ரத்தம் சுண்டுன எலும்பையும் நாய் வாய் விடாம உறிஞ்சத போல்
உலக போர்ல அடி வாங்கி உனக்கு தான் விடுதலைன்னு கொக்கரிச்சான்....

போற நன்னாரி பொத்திகிட்டு போயிருக்கலாம்...
சுரண்டுனது பத்தாது வளர விட கூடாதுன்னு....
மதம்னு ஒரு பெரிய மலையையே மண்ணுக்குள்ள வெதச்சு புட்டான்...
அதுக்கு மேல நான் என்ன சொல்ல அதான் நிதமும் பாக்குறீங்களே...

அப்புடியே ஒரு மதத்தான் ஆனாலும் கூடவே வளந்த சாதி கொஞ்சமும் வளர விடலையே..
அவசரத்துக்கு ரத்தம் வாங்கும் பொழுது மட்டும் ஞாபகம் வராத சாதி...

நூறு கோடி சேர்ந்து இருக்கோம்னு தான் பேரு..
வட மொழி பேசுறது தெற்குல பெரிய தப்பது....
தண்ணி கேட்குற தமிழன சுத்தி மாநிலம் துப்புது...

ஹிந்தி தெரியாதவன் இந்தியாவோட இடுப்புக்கு மேல போக முடியாது....
தெரியாம போயிட்டாலும் தெரு தெருவா சுத்த வேண்டியது தான்....

தங்கத்துல இருந்த வணிகத்தை தெளிவா ஆயிலுக்கு மாத்தி புட்டான்...
நோட்டடிக்கிற மெஷின் இருந்தும் நொண்டி மட்டும் தான் அடிக்கிறோம்..

எங்குட்டோ இருந்து வந்த கணினி இப்போ நம்மளை காக்குதுங்க....
எதிர்காலத்துல எல்லாரும் ஆயில்ல தான் ஆயுள்னு சொன்ன எங்க அண்ணாச்சி போக நம்ம...

திருக்குறளையும் கற்பனை காப்பியம்னு இன்னும் கொஞ்ச வருசத்துல சொல்லி புட்டா
ஒட்டு மொத்த பிரச்னையும் ஒரேயடியா முடிஞ்சுது
நம்ம பேரன் ஆப்பிள் ல படிப்பான் ஐரோப்பால இருந்து பிரிஞ்சது தான் இந்தியாவாம்லன்னு...

எனக்கென்னப்பா பஞ்சாயத்து....எங்கப்பன் ஆயி ஆசைக்கு ஒரு வீடு....
என் பொஞ்சாதி பிள்ளைங்களுக்காக ஒரு வீடு அப்புறம் சின்ன காரு...
வகை தொகை தெரியாம தின்ன தொப்பை வயிறையே மறச்சு கெடக்க...
சந்தனம் குங்குமம் வித தெருக்கள்ள இப்போ நெறஞ்சு கடக்க சாராயத குடிச்சு புட்டு
குப்புற தெனம் படுத்து குதூகலமா செல்ல நோண்டுனா
வருசத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் கேப் விடாம வர்ற மெசேஜ் தான்
தொப்புள் கொடிய பெசையுதப்பா......

அது ஆசையோட என் நண்பர்கள் அனுப்புற விடுதலை திருநாள் வாழ்த்துக்கள் மாப்ளன்ற
பல்லாயிரம் வீரம் விவேகம் நுண்ணறிவு மண்ணோடு போன கண்ணீர் கதை பொதிந்த ஒரு வரி சின்ன கவிதை.....

அருண் பக்கங்கள் - கடவுள்


வாழ்க்கையின் வருத்தத்தை போக்குவதற்கான நிவாரணி நீ என்கிறார்கள்...
இன்ப துன்பம் இல்லாவிடில் வாழ்க்கை ஏது?

மகிழ்வான தருணங்கள் உன்னால் அதனால் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள்...
நன்றி கேட்டுக்கொள்ள எங்கிருக்கிறாய் நீ இந்த அறிவியல் உலகில்?

கல்லிலும் கட்டையிலும் கம்பளங்களிலும் நீ என்கிறார்கள்....
அதனை உண்டாக்கும் என் கைகளில் இருந்து தான் நீ அதற்குள் சென்றாயோ?

அதிகம் பேசாதே அகராதி என் அறிவே உன்னிடமிருந்து என்கிறார்கள்...
நாகரீகம் வளராது சண்டையில் மடிந்த உலகத்தை ஒற்றுமையாக்க உபயோகிக்கப்பட்ட பயம் அல்லவா நீ?

ஒரு முறை மட்டுமே வாழப்போகும் இந்த பூலோக வாழ்க்கையிலேயே பலருக்கு நிம்மதி இல்லை....
வான அறிவியல் கண்டறியாத அந்த மற்ற லோகங்களும் வேண்டுமா?

நினைத்தது நடவாவிடில் பக்தி குறைந்து விட்டது இன்னும் ஏற்றுங்கள் என்கிறார்கள்...
இறை நாட்டம் என்பது எப்போது சமையல் குறிப்பானது?

காண கண்கள் தேவை இல்லை....உணர மனம் வேண்டும் என்கிறார்கள்...
அதற்கு கண்ணை மட்டும் மூடினால் போதுமே...கதவுக்கு வெளியில் ஏன் காக்க வேண்டும்?

நாளும் கிழமையும் தவறாது உன் அலுவலகம் வந்து வருகை பதிவேடு தந்தவனும்
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும் உன்னை போற்றி துதித்தவனும்
நாணிய வாழ்க்கை வாழ்ந்து அழிபவனுக்கும் மூச்சு என்னோவோ ஒரே போல் தானே வெளியேறுகிறது
நான் பார்த்த வரையில்?!

அதிலும் கொடுமை உனக்காக அடித்து செத்தவர்களுக்கும் கூட சேர்த்து தான்...

இன்று இப்படி நாளை வேறு என்ற இயற்கையின் எதார்த்தம் புரியாதவர்களும்
தன்னால் நடந்தது என்பதை செருக்கில்லாமல் உணர தெரியாதவர்களும்
மீண்டும் முயலலாம் என்ற  தன்நம்பிக்கை இல்லாதவர்களும் சேர்ந்து உருவாக்கிய உருவகமே...

இது செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு மனிதன் எழுதிய உண்மையின் உரைகல்
சற்றே உரசிய கல்.....இது பலநூறு வருடங்களுக்கு பிந்தைய சந்ததிகளுக்கு
ஏனெனில் பூமி முழுவதும் நீ ஏற்கனவே பரவி விட்டாய்....

அருண் பக்கங்கள் - ஒரு கிராமத்து மென்பொறியாளன்

காலேஜ் வாழ்கையில கண்ணடிச்சப்போ தெரியல....
அவ கண்ணாடி அழுததுல காரணம் கொஞ்சம் வெளங்கிச்சு...
வேலை வெட்டி தேடும்போது வெவரம் ஏதும் பத்தல..
வாங்குன வேலைய பார்க்கையிலே வெட்டியாவே இருந்து இருக்கலாம்னு தோணுது ..

எங்க வீட்டு பொறியாலன்னு என்னைய படிக்க வெச்சாங்க..
மங்கலாக நானும் படிச்சு மதுரைல இருந்து கெளம்புனேன்.....
பட்டைய போட்டு படிச்சுகிட்டு போனாலும் நெட்டையா ஒருத்தன் வந்து உனக்கு இங்க வேலை இல்லேம்பான்...

போட்ட சட்டையும் தாகத்துல ஒரு நாளைக்கு தாங்காது...
குட்டையில கூட தண்ணீ இங்க தேங்காது.....
சென்னைன்னு அது பேரு இருந்தாலும் தொன்னையில தான் சோறு திங்கணும்....

வேண்டி வேண்டி வேலை தேட போனாலும் ஆண்டி கோலம் தான் திரும்பும் போது அதிகம்....
அந்த ஆண்டிய என் ஆத்தா அதிகமா வேண்டுனதுனாலவோ என்னவோ கடைசில ஒரு வேலைய கொடுத்தான்...
கழுத்து காலர் மேல மாட்டு கயிற கொடுத்தான்.....

செக்கு மாடு வட்டம் கூட ஆரம் மாறும்.....
பத்து வருஷம் ஆனாலும் பட்டன் மட்டும் தான்....

பக்கத்துல பொண்ணாச்சேன்னு பயத்தோட நான் இருப்பேன்..
கக்கத்துல நெருப்பெடுத்து கல கலன்னு அவ பொகைக்கிரா.....

சத்தியமா புரியலப்பா சனி ஞாயிறு என்ன பண்ணணு...
குப்புறவே படுத்து கெடப்பேன் ஹோட்டல் சாப்பாடு வேணாமுன்னு...
சத்தம் இல்லாம மாமி வீட்டு சட்டி வாசம் கொடுக்கையில
சுத்தம் பண்ணாத தொண்டை சங்கு லேசா ஊதும்....

எந்த பக்கம் போனாலும் எவனோ ஒருத்தன் குடிக்கிறான் ...
எமகாதகனா பார்த்து தான் எல்லாருக்கும் மேனேஜர் ஒருத்தன் இருக்கிறான்...
நொட்ட சொல்லி நொட்ட சொல்லியே நோக வைச்சாலும்..
பார்ட்டின்னு ஒன்னு வெச்சா பல்லுல மொகம் காட்டுறான்...

நட்டு வச்ச செடி கூட நல்ல பெரிய மரம் ஆயாச்சு
பொட்டு பணம் சேரலையே என் வீட்டு பொட்டியில
நாளைக்குன்னு ஒரு நாள் விடியும்னு நம்பிக்கைல தூங்குனாலும்
காலர் மேல கட்டுன கயிற மட்டும் கடைசி வர கழட்ட
தைரியம் இன்னைக்கும் இல்ல.....

கடைசியா ஒண்ணு மட்டும் புரியுது.....
இதுக்கு எங்கப்பன் கையில புடிச்ச மாட்டு கயிறே மேல  தான்டோய்....

அருண் பக்கங்கள் - நட்பு


அறியாத வயதினில் அவன் எறிந்த கல்லின் கரையாத காய தழும்பு நட்பு....
.
அரைக்கால் டிராயரை அவிழ்த்து விளையாட்டு காட்டினாலும்
 அழும் நீரினில் முகம் சுருங்குவதும்
கரை ஏறி கண்மாய் ஏறி நுரை பொங்க நீச்சலடித்ததும்
மழையின் கூதல் போக்க மண் பூசி விட்டதும்
பட்டாசு வெடிக்க காசில்லாத பொழுதுகளில் பாலிதின் பைகளிலே தீபாவளி காட்டியதும் நட்பு.....

தோற்றுப்போன தேர்வுகளின் முடிவுகளை நீர்த்து போக செய்யும்
நீயும் என் பக்கம் தான் நிற்கிறாய் என்ற எண்ணம்...
படிப்பதற்காக கூடிய பல இரவுகளில் நாம் படக்கதைகள் பேசியது தான் அதிகம்....

எவனோ ஒருவன் மணக்கும் பெண்ணிற்காக என் நண்பனுடன் சேர்ந்து நானும் வாங்கிய அடி
இன்னும் சிரிக்க வைக்கிறது என் இதழ்களை.......

பார்த்த பொழுதுகளில் எல்லாம் பரவசமாக பாட்டில்களை தேர்ந்து எடுத்தாலும்
என் பாதி நோயையையும்  பகிர்ந்து கொண்டவன் என் நண்பன் ......

சில நேரங்களில் சிரிக்க விட்டு, பல நேரங்களில் அழ வைக்கும் காதல் நோய்க்கான கடவுளின் மருந்து நட்பு...
எதற்காக பேசுகின்றான் என்ற எண்ணம் துளியும் எழாமல் எனக்காக நீ ஆட்டிய தலை அதன் பெருமை சொல்லும்....

திருமண சந்தையில் எடை போகும் நாட்களிலும் விடை பெற போகும் வேதனை நொடிகளிலும்
விளையாட்டாய் எனை பார்த்து நீ உரைப்பாய் ."விடுடா எல்லாமே வாழ்க்கைல வர தானே செய்யும்"....

சொட்டு சொட்டாய் சேர்த்து வைத்த நட்புதனை பட்டு நூல் முள்ளாய் கிழித்து எரிந்தது காலம்...
எட்டு வைத்து நாம் முன்னேறும் எல்லா பொழுதுகளிலும் விட்டு விட்டே செல்கின்றோம் சில நட்புகளை....

உன் துக்கத்தினை உறவுகள் இரு மடங்காக்கும்....
உன் மனைவியின் உடல் நலம் உன்னை யோசிக்க வைக்கும்...
தள்ளாத வயதினில் தாய் தந்தையிடமும் பகிர முடியாமல் நிற்கையிலே
தோளுக்கு பின் கேட்கும் ஒரு குரல் உன் உயிர் காக்கும் "என்ன ஆச்சு மாப்ள?"...........

உதிரத்தில் உறவு கொண்டாட முடியாத இந்த அதிசயத்தை சேர்த்து வைக்கும் தெருமுனை தேநீர் கடைகளுக்கு நன்றி........

அருண் பக்கங்கள் - கம்பம்


அன்றொரு நாள் மாலையிலே
அந்த மாமரத்தின் கிளையின் பின்னே ஒளிந்து விளையாடியது...

பல நேரங்களில் பசுமையாக காட்சி அளிக்கும்....
பல முகத்தினில் சிரிப்பை வரவழைக்கும்....

சில நொடி பொழுதில் மட்டும் அதன் கண்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 ...பூ விழுந்து விட்டது என எண்ணி கொள்வேன்....

அடர்ந்த வாகனங்களால் பாவம் அதன் கண்கள் அதிக நேரம் சிவந்தே காணப்படும்.....

முன்னர் பெய்த கடும் மழையினில்
அதன் உடல் சரிந்து கிடந்தது
கண்கள் திறக்கவில்லை நெடுநேரமாய்...

எல்லோரும் முண்டியடித்து சென்று கொண்டே இருந்தனர்....
நின்று நெடுநேரம் பார்த்து கொண்டே இருந்தேன்
என்னை பார்த்து கண்ணடிக்காத அந்த சிக்னல் கம்பத்தினை.....

அருண் பக்கங்கள் - அப்பா



மொதோ தரம் முழிக்கையிலே மூச்சு கொஞ்சம் விட்டீங்க...
மூணாவதா பெத்தாலும் மொளைக்க வெச்சு ரசிச்சீக ...
காலெடுத்து வைக்கையிலே கரம் புடிச்சு நின்னீங்க...
மேலெடுத்து தூக்கி வாரி மேய்ச்சு என்ன வளர்த்தீக...
பயலுக்கு சுடு கஞ்சீனு பழைய சோத்த ருசிச்சீக...
பச்சை மொளகா போதுமுன்னு கடை பல்ல சிரிச்சீக....
காசுன்னு கேக்கும் முன்னே கைக்குள்ள ஆயிடுமே....
காய்ச்சல்ல கொதிக்கையிலே கட்டி புடிச்சா போயிடுமே...
முத்தமுன்னு கொடுத்ததில்ல மொத்தத்தையும்  கொடுத்தீக...
பெத்த புள்ளைய படிக்க வெச்சு சொத்தெதுவும் சேர்க்கலையே...
ஒன்னாம் தேதி ஆகி போனது  ரெண்டாம் நாளும் கூட மறந்து போகும்...
ஆனா ஒரு மாசமும் தவறாம உங்க சைக்கிள் முன்னாடி சக்தி ஸ்வீட்ஸ் பை ஆடும்....
பொங்கல் தீபாவளி வந்தா எத்தனை காசு கேட்டு அரிச்சிறுப்போம்....
எங்களுக்குன்னு எல்லாத்தையும் கொடுத்து புட்டு  திரி பிரிச்சு சிரிச்சு நிப்பே....
மொதோ மொறையா உன் கருப்பு முடி நரைக்கையிலே
மொத்த சத்தியும் விட்டு போச்சு....
நரச்ச முடி இருந்த இடம் நாளடைவில கொட்டி போச்சு...
இரும்பு தேகம் கொஞ்சம் இப்போ இளகி தான் போயிடுச்சே...
கரும்பு உடச்ச கரம் ரெண்டும் நரம்பு மட்டும் காட்டிடுச்சே....
தள்ளாட நா நடந்தப்போ தாங்கி தான் நின்னீக..
தாங்கி தாங்கி நீ நடக்கும் காலமுன்னு நான் காண வந்ததும் ஏன்?...
கள்ளழகர் காட்ட சொமந்த வைர தோளுக்கு என்னாச்சு
காலம் என்னும் கயிறு இறுக்கி காய்ஞ்சு போன மண்ணாச்சு....
பண பாரம் கொறைக்க நான் உன்ன விட்டு வெகு தூரம் வந்தாலும்
என் மன ஆரம் என்னவோ உன் வட்ட முகம் மட்டும் சுத்துதேப்பா.....
உன் கூட ஊரு சுத்தி ரொம்பவும் தான் நாளாச்சு...
பன்னாட வயசு ஆகி இப்போ ரொம்ப பாழ் ஆச்சே....
வயித்தில மட்டும் தான் நீ சொமக்கல....
ஆனா உன் வயசு முட்டும் சொமந்தியே....
ஒழுங்கா நீ  நடக்கையிலேயே நான் ஊரு வந்து சேரணுமே.....

நான் அப்பனாவே ஆனாலும் என் அப்பா போல மாறணுமே!!......

அருண் பக்கங்கள் - காலம்


சனிக்கிழமை காலையில் எண்ணெய் தேய்க்க வரும் அம்மாவிடம் இருந்து தப்பி ஓடுவேன் என் பம்பரத்தை எடுத்து கொண்டு........
குமார் அண்ணன் வந்த உடனேயே சில்லாக்கு ஆரம்பமாகும்....
நிழலுக்கும் வேர்க்கும் கோடை வெயிலில் தான் எங்கள் கில்லி தாண்டு உச்சமெடுக்கும்...........
பச்சை குதிரை தாண்டியே பாதி காயம் பட்டிருக்கும்........
பல்லாங்குழி ஆட பாசமாக என் அக்காள் காத்திருக்கும்.....
உள்ளங்கை வேர்த்துவிடும் கம்பு தள்ளி......
கை முட்டி தேய்ந்தது சொட்டாங்கல்லில்.....
இருட்டும் பொழுது ஒளிய தொடங்குவோம் ஒருவனை கண்டு பிடிக்க சொல்லி......
இரவின் முன்னே விளையாடுவோம் ராஜா ராணி........
வெள்ளி கிழமை மட்டுமே வரும் கோயில் யானை.....
புகை கக்கி பின்னாலே இழுத்து செல்லும் கொசு வண்டி....
மின்சாரம் தடைபட்டால் எங்கள் தெரு மெழுகின் சொர்க்கம்...
இமை மூடாமல் தானாகவே தூக்கம் சொக்கும்.....
இத்தனையும் தோன்றும் கதை போல் என் மகனுக்கு !!.....

கதையாவது கேட்க பிடிக்குமோ அவன் பிள்ளைக்கு ??.......

Thursday, November 16, 2017

தெய்வக் குற்றம்

திடீர் காப்பிப் பொடியை
வென்னீரில் கலந்து தந்தாள் பணிப்பெண்
கும்பகோணத்துக்கு மேலே பறந்து கொண்டு இருந்த
விமானத்தில்.

Tuesday, September 26, 2017

மீனாவுடன் மிக்சர் 31 - {நவராத்திரி நினைவலைகள் - 2017}

வழக்கம் போல ரிச்மண்டில் இந்த வருஷமும் கொலு சீசன் களை கட்ட ஆரம்பித்து இன்னியோட நாள் ஆறு.  வாசல்  கதவை திறந்து வெளியே வந்தாலே  தாளித்த சுண்டல் வாசனைல ஊரே மணக்குது.  அடுத்தடுத்து வடையும், கேசரியும், சு ண்டலும், சர்க்கரைப் பொங்கலுமா வீட்டுல மணத்ததுல எங்க வீட்டு நாய்கள் திடீர் உண்ணாவிரதம். இந்த அச்சுபிச்சு pedigree உணவு அவங்களுக்கு இனி வேண்டாமாம். எங்களுக்கு மட்டும் இதென்ன நாய் பொழப்புன்னு அவங்க வருத்தப் படறதுலயும் ஒரு நியாயம் இருப்பதை மறுக்க முடியலை.

எங்க ஊரை பத்தி இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்.  பத்து வருஷத்துக்கு முன்னாடி,  கல்யாண வீட்டு வாசல்ல சும்மா பாவ்லா காட்டி தெளிப்பாங்களே, அந்த பன்னீர் துளி மாதிரி இங்கொண்ணு அங்கொண்ணுன்னு  தான் இருந்தது இந்திய குடும்பங்கள்.   தெரியாம ரெண்டு கூமான்  (Kumon) சென்டர் திறந்தாலும் திறந்தாங்க, அவ்வளவு தான் அமெரிக்காவுல கூமான் இல்லாத ஊரிலிருந்து நம்ம மக்கள் எல்லோரும் அடிச்சு பிடிச்சு ரிச்மண்டுக்கு ஓடி வந்துட்டாங்க.  களை எடுக்காம விட்டத் தோட்டத்துல கட்டுக்கடங்காம வளருமே காட்டுச்செடி அந்த மாதிரி இந்திய மக்கள் தொகை இன்னிக்கு ரிச்மண்டில் பெருகிட்டு வருது. 

ஊர்ல எந்த வீடு விலைக்கு வந்தாலும் அத வாங்கறது ஒரு இந்தியக் குடும்பம் தான்னு bet வைக்கலாம் வரியான்னு கூப்பிட்டா  ஒரு சின்னக் குழந்தை கூட அந்த ஆட்டத்துக்கு வர மாட்டேங்குது. இவ்வளவு புத்திசாலியா நானும் சின்ன வயசுல இருந்திருக்கேனாம்மான்னு  எங்க அம்மா கிட்ட கேட்டா  சந்தோஷத்துல (?) எங்க அம்மாவுக்கு தொண்டை அடைச்சு பேச்சே வர மாட்டேங்குது. 

இந்த பெருகி வரும் இந்திய குடும்பங்களை பார்த்து யார் அதிகமா சந்தோஷப்படறாங்கன்னா அது அமெரிக்க வியாபாரிகள் தான்.   நவராத்திரி சீசன்ல தூக்கி விட்டெரியும் உணவு தட்டுக்கள் மற்றும் டம்பளர்களை   வண்டியோட அள்ளிக்கொண்டு போகும் இந்திய பெண்களை குலதெய்வமாவே  இவங்க கொண்டாடறாங்கன்னு  ஊர்ல பேசிக்கறாங்க. .  நாயகன் ஸ்டைல்ல சொல்லணும்னா நாலு பேருக்கு உதவும்னா இன்னும் நாலு தட்டை எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டெறிய  ஒரு இந்தியன் என்னைக்குமே தயங்க மாட்டான். புல்லரிக்க வைக்கக்கூடிய புள்ளி விவரங்களில் இதுவும் ஒன்று.

ஆனா உதவிக்கரம் நீட்டறதுல துளி கூட பாரபட்சம் பார்க்காதவங்க நம்ப இந்திய பெண்கள்.   Racial  discrimination அப்படிங்கற வார்த்தையை இந்த ஊர்ல அடிக்கடி கேட்டு காது புளிச்சு போய் தான் அவங்க இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது என்னோட அனுமானம்.  இந்திய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் எங்க அருள் உண்டு அப்படீன்னு இந்த மாசம் இந்திய  மளிகை கடைல உள்ள பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, வேர்க்கடலை போன்ற தானியங்களை ஒரு பாக்கெட் விடாம வழிச்செடுத்து  வாங்கி வந்து சுண்டலுக்கு ஊற வச்சிட்டாங்க ன்னு நினைக்கறச்ச பெருமை படாம இருக்க முடியலை.

அதென்னவோ இந்த வருஷம் சொல்லி வெச்சா மாதிரி பெண்கள் எல்லோரும்  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் புடவைகளை தான் விரும்பி இந்த சீசனுக்கு உடுத்தியிருக்காங்க.  புடவைக் கலர்ல தான் மாற்றம் இருக்கே தவிர அவங்க போடும் அகல ஜன்னல் போட்ட  காத்தோட்டமான ஜாக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லைங்கறது விசேஷம்.

ஒரு பெண் எவ்வளவு வீட்டு கொலுவுக்கு போகிறாள் அப்படிங்கறதை அவ சுண்டல் கலெக்ஷனுக்காக எடுத்துப் போகும் பையை வைத்தே சுலபமா சொல்லிடலாம்.  IIT காலேஜ் பசங்க தூக்கிட்டு போற ஜோல்னா பை மாதிரி இருந்தா, அவள்  ஒரு ஐந்தாறு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறாள்னு அர்த்தம்.  நம்மூர் வண்ணாத்தி சைக்கிளுக்கு பின்னாடி கட்டியிருக்கும்  சலவை துணி பை  சைசில் இருந்தால் அவளுக்கு ஒரு பத்து வீட்டில் அழைப்பு இருக்குன்னு அர்த்தம்.  கோயம்பேடு காய்கறி சந்தைல வந்திறங்கும் கோணிப் பை ரேஞ்சுல பார்த்தீங்கன்னா சர்வ நிச்சயமா அவள் அன்று  நடுராத்திரி வரைக்கும் தெருத்தெருவா சுண்டலுக்கு சுத்தப் போகிறாள் அப்படீங்கறதுல சந்தேகம் இல்லை. 

போன வருஷம் நவராத்திரி blog ல நான் புலம்பினதை ஞாபகம் வச்சிருந்த சில நல்ல மனங்கள் சுண்டலோட இந்த முறை பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் அருமையான டீ போட்டு கொடுத்து என் மனசை குளிர வச்சிட்டாங்க.  தெருத்தெருவா சுத்தறதுக்கும் ஒரு தெம்பு வேண்டாமா? நன்றி தோழிகளே. 

இந்த கணவர்கள் சங்கம் தான் என் குரலுக்கு இன்னும் செவி சாய்க்க மாட்டேங்கறாங்க.  மனைவிகள் கஷ்டப்பட்டு வீடு வீடா போய் வாங்கி வர்ற சுண்டல்ல சரி பாதி பங்குக்கு மட்டும் கேக்காமயே வர்றவங்க கொலு அழைப்புக்களை வரிசைப்படுத்தி கொடுக்க ஒரு app  எழுதிக் கொடுக்க கூடாதா?  தெரியாம தான் கேக்கறேன்.  இந்த உலகத்துல கருணை கபடி ஆட போயிருக்கா?  இல்ல நியாயம் தான் கிரிக்கெட் விளையாட போயிருக்கா?  

காலம் இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சொல்லும்னு நம்பிக்கையோட  எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

Monday, September 25, 2017

கொடுந்தமிழ். ​அப்படின்னா?

​செந்தமிழ் தெரியும், பைந்தமிழ் கூட தெரியும், அதென்ன கொடுந்தமிழ்?
கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்ததா எனப் பார்த்து விடுவோம்.

Spoiler: அது எதிர்மறைச் (negative) சொல் அல்ல.

இலக்கண விதிகள் வழுவாமல் சொற்கள் அப்படியே இருத்தல் நலமே. ஆனால் மக்கள் பல திசைகளுக்கு பணி நிமித்தமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் போய் வரும்போது அந்தந்த வட்டாரங்களின் தன்மைக்கேற்ப தமிழையும் வளைத்து பேசுவர். அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்கத் தேவை இல்லாததும் கூட.

மேலே  உள்ள பத்தியில் 2 விசைச் சொற்கள் (keywords) உள்ளன. திசை, வளைத்து ஆகியன. வேண்டுமென்றேதான் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. எதற்காக என பார்ப்போம்.

தமிழ் பேசப்பட்ட நிலம் செந்தமிழ்-நிலம் (Mainland). அதைச் சுற்றி அமைந்த மற்ற நாடுகளில் இருந்து வந்து போகும் மக்கள் மூலமாக தமிழுக்குள் வரும் சொற்களை திசைச்சொற்கள் என்கிறார் தொல்காப்பியர். அதாவது, ஒரு பொருளைக் குறிக்க வழக்கமான சொல்லைத் தவிர்த்து வேறு புதிய ஒரு சொல்லை பயன்படுத்துவது. எகா: சிறுகுளம் என்பதை கேணி என்று ஆற்காடு பக்கம் சொல்வது.

இப்படி மொழியை வளைத்து, ஒரு பொருளை வேறு ஒரு திசையில் இருந்து வந்த சொல்லின் வழியாக குறிக்கும் போது அந்தச் சொல் "திசைச்சொல்".

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொ.கா)


ஆச்சா..
இப்போ, ஏன் "கொடுந்தமிழ்"?
கொடு என்றால் வளைதல்.

எகா:
கொடுவாள் (வளைந்த வாள்), கொடுங்கோல் (வளைந்த அரசு - அறத்தில் இருந்து வளைந்த அரசு), கொடுக்காப்புளி, கொடுக்கு..

அதன்படியே, வளைந்த தமிழ் = கொடுந்தமிழ்.

​நன்னூல் வரை திசைச்சொல் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள். நன்னூலுக்கு உரை எழுதும்போது தான் "வளைந்திருக்கிறது".​

​இப்போது அதையே நாம் வட்டார வழக்கு என்று சொல்கிறோம்.​

​வீட்டுப்பாடம்:
உங்களுக்கு தெரிந்த கொடுந்தமிழ்/திசைச்சொல்/வட்டார வழக்குகளை குறிப்பிடுங்கள்.​

Monday, September 18, 2017

​தமிழின் மிக நீண்ட சொல்


ஆங்கிலத்தில் மிகப் பெரிய (நீண்ட) சொல் எது எனக் கேட்டால் நம்மில் சிலர் கூகுளை கேட்காமலேகூட சொன்னாலும் சொல்லி விடுவோம்.

தமிழில்?

தமிழின் எளிமை அப்படி நீண்ட தனிச் சொற்களை ஊக்குவிப்பதில்லை. எது "சொல்" என்பதற்கே நாம் தெளிவான வரைமுறை வைத்திருக்கிறோம்.
பெயர், வினை. அவ்வளவுதான் வகைகள்.
இடைச்சொல், உரிச்சொல் எல்லாம் பெயர், வினைச் சொற்களைச் சார்ந்தது.

இதிலும்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொ.கா) 
என்ற கட்டுப்பாடு வேறு ​உண்டு.

இப்படி அமையும் சொற்களைப் பிரிக்க (பகுக்க) முடிந்தால் அவை தனிச் சொற்கள் அல்ல. கூட்டுச் சொற்கள்.

அதன் Grammatical terms: பகுபதம், பகாபதம்.
பகும் (பிரியும்) சொற்கள் (பதம்) - பகுபதம்.
பகாச் சொற்கள் - பகாபதம்.

எகா:
படித்தான் = படி + ஆன். இது பகுபதம் (பிரியும் சொல்).
படி என்பதை மேலும் பகுக்க முடியாது​. எனவே பகாபதம். (பிரியாச் சொல்)

ஆச்சா?
இப்போ வருது நன்னூல் உதவி:
பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் 
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

அதன்படி உயர் அளவாக,
பகாபதம்: 7 எழுத்துக்கள்.
பகுபதம் : 9 எழுத்துக்கள்.

ஆக, technically உயர்ந்த அளவாக 9 எழுத்துக்களே இந்தச் சொல்லிலும் வர முடியும். இதைக் காட்டிலும் நீண்ட சொற்கள் எல்லாம் பல சொற்களை நாமாக சேர்த்து எழுதியதாகத்தான் இருக்கும் என்கிறார்கள். மறுப்போரும் உண்டு. ஆனால் நன்னூல் சொல்வது மேலே குறிப்பிட்டது போலத்தான்.

எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகள்?
புதிய சொற்களை ஆக்கும் போது அவை பயனுள்ளதாக மட்டுமின்றி எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

Wednesday, September 06, 2017

இது உனக்கான பயணம்...!!!

இது உனக்கான பயணம்...!!!

பயணம் தொடர நேரம் வந்தாயிற்று
எத்தனை நேரம்  என் கைகளுக்குள் 
உனது கைகளைப் பொதித்து 
கொள்வது!!

சத்தியமாக உனக்கான பிடி
இங்கு இல்லை அதோ
அங்குள்ளது!
அதைப் பிடித்துக்கொள்வாயாக...!!

நான் உன் ஒரு கையைப் 
பிடித்து இருந்தாலும் 
நீ உன் இன்னொரு கையால் இந்த 
உலகத்தின் கைகளை பற்று!!

உனக்கான நேரத்தில் 
உன் கால்கள் உலகத்தின் மடியில் பட்ட  
மறுநொடி உனக்கான தேடல் ஆரம்பிக்கும்...
உனக்கான பாதுகாப்பை  
நீயே விரைந்து
உறுதி செய்துகொள்....!!

உன் கரம் பிடிக்க நாங்கள் இருந்தாலும் 
சுற்றி உன்னை அறியா பலர் 
உன்பால் அறிந்து அன்பால் உன்னை
மறிக்க கூடும் ...
நீ உன் தேவையறிந்து
இருகப்பற்று 
உனக்கான வாய்ப்பை !!

பல இன்ப துன்பங்கள் கடக்க 
இருக்கும் நீ...
எந்த நிலையிலும் உனை நீயே 
நலம் காக்க கற்றுக்கொள்!!

இவ்வுலகு உனக்கு எதை தர காத்திருக்கிறதோ...
அதை துணிவுடன் எதிர்கொள்!!

அச்சம் உன்னை பின்னுக்கு தள்ளும் 
தைரியம் துணிவுடன் உன்னை 
வெற்றி மேடை ஏற்றும் ...!!

அரசே கூட உனக்கெதிராக சட்டம் 
அமைக்க கூடும்....
அநீ(ட்)திக்கு எதிராக போராடு 
பதில் வரும் வரை...!!

பூக்கள் தேவைப்படாது ஆனால் 
சாட்டை தேவைப்படும்
சில நேரத்தில்...!!

வா உன்னை வரவேற்க 
காத்திருக்கிறது 
சவாலான பயணம்...!!!
  • ப்ரியன்



Sunday, July 16, 2017

ஒரு சக்களத்திச் சண்டை


என்னமோ ஏதோன்னு பதறிட வேண்டாம். இது தப்பான தொடர்பு பற்றியதல்ல. ​தமிழ் இலக்கணம் தொடர்பானது.

தமிழில் இருபிறப்பி என்று ஒரு சொற்பிரிவு (category) உண்டு. இரு வேறு மொழிகளின் பகுதிகள் இணைந்து புதியதாக ஒரு தமிழ்ச் சொல்லைத் தருவது.

இருபிறப்பி =  Hybrid.
இதுதான் இன்றைய குறிப்பிற்க்கான அடிப்படை.

சக்களத்தி தப்புன்னு தெரியும், சக்களத்தி -ன்னு சொல்வதும் தப்புங்கிறாங்க.
சக + களத்தி = சக்களத்தி.
களத்தி  = துணைவி.
ஆக, இன்னொரு களத்தி = சக களத்தி = சக்களத்தி.

அப்படியானால் அவரவர் தங்களின் "திருமதி மட்டும்"-ன்னு இருந்துட்டா தப்பில்லை; இல்லையா?
Socially சரி. ஆனால் இலக்கணப் படி "திருமதி"-யும் தப்புங்கறாங்க.

ஸ்ரீமதி என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாம் அது. "அப்படியே" பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்துட்டாங்க போல.
ஸ்ரீ + மதீ => திரு + மதி. ஏற்கனவே நம்மிடம் மதி = அறிவு* என்று இருப்பதால் அப்படியே விட்டுடாங்களோ என்னவோ.
*(மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் - திருக்குறள்)

இருப்பினும், மனைவி மதி நிறைந்தவராக இருத்தல் மகிழ்வே.

அப்போ எப்படி மணமான பெண்ணை மதிப்போடு குறிப்பிட?
திருவாட்டி என்பதே சரியாம்.

சக்களத்தியை?
எங்கையர்.

ஒரு பாட்டுல, பாணன் கிட்ட புலப்புகிறாள் ஒரு தலைவி.
"அறிவு கெட்டுப் போய் இங்க ஏன்டா வந்த, அவன் அங்கன எங்கைகிட்ட இருப்பான் போ"-ங்கற மாதிரி வரும்.

நீதானறிவயர்ந் தெம்மில்லு ளென்செய்ய வந்தாய்
நெறியதுகா ணெங்கைய ரிற்கு (ஐந்திணையைம்பது)


இப்போ இருபிறப்பிகள் என்னென்ன புழங்கறோம் யோசிச்சு பாருங்க.
தமிழ் + <பிற மொழி >

=====================

இச்சொல்லை வைத்து ஒரு நாடகக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்:

-------------
காட்சி 1:
அவள் : எங்கய்யா, வீட்டுக்கா போயிட்டு வர?
அவன்: எங்கையா வீட்டுக்கு போயிட்டு வரேன்.
அவள்: எங்கே போயிட்டு வர???
அவன்: அதான் சொல்றேனே. எங்கையா வீட்டுக்கு.
அவள்: எடு அந்த தொ.. கட்டையை..

அவன் ஓட, அவள் துரத்த, காட்சி முடிகிறது.
-------------

:-)

Saturday, July 15, 2017

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை
சிறு வயதில் நாம் படித்த இலக்கணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கொஞ்சம் நினைவு கூறலாம்.
நான் எட்டாவது படித்துக்கொண்டு இருக்கும்போது தமிழாசிரியர் இலக்கணக் குறிப்பு என்று பலகையில் எழுதித் தள்ளுவார். ஆனால் அது பாடத் திட்டத்தில் கிடையாது. தேர்வில் கேள்விகள் ஒன்பதாம் வகுப்பில் மாத்திரமே வரும். அதனால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

தமிழ் போல நுணுக்கமாக இலக்கணக் குறிப்புகள் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கும் ஒரு இலக்கண குறிப்போடு விளக்கும்போது அந்த வார்த்தைகளின் அர்த்தம் மேலும் மெருகு கூடுகிறது.

எளிதாக ஆரம்பிக்கலாம். எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

"ஊறுகாய்" : வினைத்தொகை. ஊறுகாயை "ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊரும் காய்" என்று எந்த காலத்துக்கும் ஒவ்வுமாறு கூற முடிவதால், வினை மறைந்திருக்கிறது. எனவே வினைத்தொகை.

மேலும் சில எளிய இலக்கணக் குறிப்புகள்
  • எல்லோருக்கும் தெரிந்த மறக்க முடியாத ஒன்று "ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம்" - உதாரணம் - அணையா விளக்கு. அணையாத விளக்கில் "" -வை நாம் ஒதுக்கி விடுவதால் இந்த பெயர்.
  • வாழ்க , வருக - இவற்றை "வியங்கோள் வினைமுற்று" என்பார்கள்.
  • வந்தவன் சென்றான் - இந்த "வந்தவனை" வினையாலணையும் பெயர் என்று கூறுவார்கள்.
அடுத்து சில உயர்வு , தாழ்வு சிறப்புகள். சில இடங்களில் "உம்" அல்லது "ஏ" இவை உயர்வு அல்லது தாழ்வைக் குறிக்கும். நான் சாத்தூரில் 11 -ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது, ஆசிரியர் ஒரு மன்னர் போர் செய்த கதையை விளக்கும்போது அதில் "மன்னனும் தோற்றான்" என்ற வாக்கியம் வந்தது. அவர் அதை "தோற்கக் கூடாத மன்னனே தோற்று விட்டான், இந்த உம்மை "தாழ்வுச் சிறப்பும்மை" என்று கூறினார். நான் உடனே எழுந்து "இந்த இடத்தில் தோற்க மாட்டான் என்று எதிர் பார்க்கப்பட்ட மன்னனே தோற்று விட்டான், அந்த உம்மையில் மன்னனின் உயர்ச்சி வெளிப்படுகிறது, அதனால் இது "உயர்வுச் சிறப்பும்மை" என்று கூறினேன். அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அந்த வகுப்பில் நான் புதிய மாணவனும் கூட. நல்ல வேளையாக அவர் தவறாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் வகுப்பில் அவர் நுழைந்த உடன், என்னை எழுப்பி உன் பெயர் என்ன அன்று கேட்டு விட்டு, இந்த "மன்னனும்" பற்றி நான் மற்ற இரண்டு தமிழ் ஆசிரியர்களிடம் விவாதித்திருந்தேன். அது உயர்வுச் சிறப்பும்மை - தான் அன்று பெருந்தன்மையாக தன தவறை திருத்திக் கொண்டார்.

தாழ்வு சிறப்பும்மை - ஹர்பஜன் சிங்கும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். இந்த இடத்தில் "உம்" ஹர்பஜன் சிங் ஒரு நல்ல மட்டையாளர் அல்ல என்று உணர்த்துகிறது. எனவே தாழ்வு சிறப்பும்மை.

இது போல ஏகாரம். ஸ்ரீதர் நல்ல கேரம் வீரர். நான் உப்புச் சப்பிலாமல் ஆடி அவரை எப்படியோ வென்று விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். அவர் கூறுகிறார் "இவன் என்னையே ஜெயித்து விட்டான்". இது ஸ்ரீதரின் திறமையை உயர்வாகக் குறிப்பிடும் "உயர்வுச் சிறப்பு ஏகாரம்". நான் கூறுகிறேன். "நானே ஸ்ரீதரை ஜெயித்து விட்டேன்" இது என்னுடைய திறமையின்மையைக் குறிக்கும் தாழ்வுச் சிறப்பு ஏகாரம்"

இன்னொரு வித்தியாசமான "உம்மை". வகுப்பறைக்கு ஆசிரியரும் வந்து விட்டார் என்ற தொடரில் உள்ள "உம்", மாணவர்கள் ஏற்கனவே வந்து விட்ட ஒரு விஷயத்தை தெரிவிக்கிறது. இது "இறந்தது தழுவிய எச்ச உம்மை" என்று கூறப் படுகிறது.

அன்மொழித் தொகை - இது சற்று புதிரானது.

செங்கொடி வந்தாள் - இதில் செங்கொடி என்பது "செம்மையான கொடி". செம்மை என்பது ஒரு பண்பு. அது மறைந்து வருவதால் இது ஒரு பண்புத்தொகை. ஆனால் இங்கு செங்கொடி என்பது செம்மையான கொடி போன்ற ஒரு பெண்ணைக் குறிக்கிறது. அதனால் இது " பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படுகிறது.

இது போல் தேன்மொழி வந்தாள் என்ற தொடரில் தேன்மொழி "உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படும். (தேன் போல மொழி பேசும் பெண் வந்தாள்)

ஓடு -
இந்த சிறிய வார்த்தையின் இலக்கணக் குறிப்பு கொஞ்சம் நீளமானது. செய் எனும் வாய்பாட்டு ஏவல் ஒருமை வினைமுற்று.

தமிழ் இலக்கணம் பற்றி பேச ஆரம்பித்தால் அது ஒரு கடல், நாம் கொஞ்சம் கையில்
அள்ள முடிந்தால் நம்முடைய பாக்கியம்.

நன்றி.






Sunday, July 09, 2017

இரண்டு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருமா, எப்படி? (ஞா.போ)


ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது மேலே உள்ள கேள்வி வந்தது.

மகிழ்ச்சி. பார்த்திடுவோம்.
 
தலைப்பிற்குள் போகும் முன் இன்னொரு குறிப்பு:
அமெரிக்கச் சாலைகளின் 1 U turn = 2 left turns என்று தனித்தனியாகக் கருதும் விதியைப் போல தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் மெய் + உயிர் என்று தனித்தனியாகவே கருதப்படுகிறது. அசை பிரிக்க மெனக்கெட வேண்டியதில்லை.
 
எ.கா:
அம்மா = அ + ம் + ம் + ஆ

இப்படி, இரு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவதை வெகு இயல்பாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோல வரும் மெய்யெழுத்து பயன்பாட்டிற்கு ஒரு கலைச்சொல் (Technical term) இருக்கிறது.

மெய் மயக்கம்.

அதில் உட்பிரிவுகள் உண்டு. என்னென்ன எழுத்துக்கள் எதனை தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு. தமிழ் கற்போரை மிரட்ட அல்ல; கவிதைகளின் (பாடல்/பா/செய்யுள்) ஓசை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விதிகள்.

மெய்ம்மயக்கத்தில் ஒரு வகை உடனிலை.
அம்மா = ம் என்ற மெய், தன்னுடன் இன்னொரு முறை தானே வரும் நிலை.
உடன் + நிலை.

அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை (தொ.கா)
இது போல் எளிய வகைகளும் அதனைக் குறிக்க விதிகளும் உள்ளன.

இப்போதைக்கு முதல் வரியில் கேட்ட கேள்விக்கு பதில்:
மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும். அதற்கு பெயர் மெய்மயக்கம் (மெய்ம்மயக்கம் என்றும் சொல்வதுண்டு).

மெய் எழுத்தைத் தொடர்ந்து உயிர்மெய்யாக இல்லாது straight-ஆக இன்னொரு மெய் எழுத்து வருவது ஈரொற்று மயக்கம்.
பெரிசா ஒன்னும் இல்லை.
இரண்டு ஒற்று மயக்கம் = ஈரொற்று மயக்கம். அவ்வளவுதான்.

மூன்று மெய்கள் கூட மயங்கி (சேர்ந்து) வரும்: வாழ்த்து = வா + ழ் + த் + த் + உ

Btw, மயக்கம் என்றால் சேர்ந்து வருதல். தலை சுற்றல் மட்டுமில்லை.
தமிழ் படிக்கையில் தலைசுற்றல் இருக்கக் கூடாது. :)

என் பங்குக்கு இரு சொற்களை இரண்டாம் வரியில் சொல்லி இருக்கிறேன். 
(மகிழ்ச்சி, பார்த்(த்+இ)டுவோம் = பார்த்திடுவோம்)
படிப்பவர்களும் உங்கள் பங்குக்கு முயன்று பாருங்கள்
​இனிய, எளிய தமிழ்.
வாழ்க.​
 
 


 

Sunday, June 25, 2017

நமக்கு எதுக்கு 'ப்ரச்ன' ? (ஞாயிறு போற்றுதும்)

சில நாட்களுக்கு முன் 'அறிவோம் நம் மொழியை' என்னும் பகுதியில் ஒரு நாளிதழில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து:

"இந்தப் 'ப்ரச்ன'யை எப்படித் தீர்ப்பது?" என்பது தான் அதன் தலைப்பு (https://goo.gl/BdMVjI)

"ப்ரச்ன" எனும் இந்த சமற்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதற்கு முன், அந்தச் சொல் தமிழுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பார்ப்போம்.

----------------------------------
ஒரு மொழியில் ஒவ்வொரு செயலின்/பொருளின் மெல்லிய வேறுபாட்டையும் குறிக்க சொற்கள் இருப்பது அதன் அழகு, சிறப்பு.
சரியான சொற்களைப் பயன்படுத்துவது குழப்பமில்லாமல் செய்தியைத் தெரிவிக்கும். இல்லையா?
இப்போ "பிரச்சினை"க்கு வருவோம். 
எந்த ஒரு எதிர்மறை நிகழ்வைச் சொல்லவும் "பிரச்சினை" என்கிறோம். யோசிச்சு பாருங்க, பொருத்தமான சொற்கள் தமிழில் பல இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாது "பிரச்சினை"யைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

நம்மிடம் ஏற்கனவே இருக்கும் எதிர்மறைச் சொற்கள் சில:
சிக்கல், தகராறு, மனவருத்தம், சண்டை, கோளாறு, பற்றாக்குறை, குறைபாடு, இடைஞ்சல், வம்பு, குழப்பம், குளறுபடி, தவறு, பழுது...
மேலே சொன்ன எல்லாச் சொல்லுக்கும் இப்போது நமக்கு புழக்கத்தில் உள்ளது ஒரே "பிரச்சினை" தான்.
கோபுரத்துக்கெல்லாம் அடி அடின்னு சுண்ணாம்பு அடிச்சு வைக்கிறோமே அது போல. எல்லாமே பிரச்சினை தான். வண்ணப் பூச்சே கிடையாது. வெறும் வெள்ளையடித்தல் மட்டுமே.

"அங்கே ஏதோ பிரச்சினை". அவ்வளவுதான்.
அது சண்டையாகவும் இருக்கலாம், பற்றாக்குறையாகவும் இருக்கலாம், குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம், என்ன வேணா இருக்கலாம். ஆனால் ஒரே "பிரச்சினை" தான். அது என்னன்னு சொல்ல கூடுதல் விளக்கம் தேவைப்படும்.

அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே இதுல உங்களுக்கு என்னங்க பிரச்சினை-ன்னு யாரவது கேட்டால், ​எங்களுக்கு எப்பவுமே பிரச்சினை வேண்டாங்க, இது என் ஆதங்கம்-ன்னு சொல்லலாம். :)

Vocabulary-யை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுவே மொழிக்கும் பேசுபவருக்கும் அழகு & பலம்.

வேறு சில "பிரச்சினை" சொற்களை பட்டியலிடுங்கள்.

Tuesday, June 20, 2017

தாயுமான என் தாய்மாமன் வெ.பாலன்.




பிறந்த நொடி முதல் என்னை தன் மகளாய் பாசத்தை கொட்டி வளர்த்தீர் - எனது வாழ்க்கையை மிக அழகாக செதுக்கியதற்கு கோடி நன்றி!
தங்கை மகளுக்கு இன்னொரு தகப்பனாய் என் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கினீர் - நீர் எமக்கு செய்தவை எண்ணில் அடங்கா!
வாயார 'அம்மா' என்று அழைக்கும் அந்த பாசக் குரலையும், கம்பீர சிரிப்பை கேட்கவும், வாரா வாரம் கிடைக்கும் அந்த அன்பு முத்தமும் இனி நான் அழுது புரண்டாலும் கிட்டாது!
மடிமீது அமர்த்தி காது குத்தியது முதல், என் முதல் வாகன பூஜை வரை அனைத்தும் முன்னின்று செய்தீர்கள்.
என் நலத்தில் என்னைவிட அதிக அக்கறை கொள்வீர் - நீர் எமக்கு என்றுமே கடவுளின் அன்புப் பரிசு!

பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் முதல்நாள் அரிசியில் 'அ' என எழுதி, என் கல்வி வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது தொடங்கி, நான் பல்கலைக்கழக பட்டம் பெறும் வரை எனக்கு தூண்டுகோலாய் விளங்கினீர் - எனது ஒவ்வொரு வெற்றிக்கும் தாங்களே முதன்மை காரணம்.

என் முதல் ஆசானாய், ஆலோசகராய், நண்பராய், நல்ல மனிதராய், எழுத்தாளராய், சிறந்த தலைவராய், சமுதாய நலன்விரும்பியாய் பல பரிணாமங்களில் திகழ்ந்தீர் - உங்களின் மறைவு நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சமூதாயத்திற்கே பேரிழப்பு!

இந்நேரம் சொர்க்கமும் தங்கள் வரவால் மகிழ்ந்திருக்கும்!
தாய் மாமன் எனும் உறவிற்கு தங்களைவிட வேறு எவராலும் பெருமை சேர்த்திருக்க முடியாது!

நீர் எமக்கு செய்த அனைத்திற்கும் நன்றி நவில வார்த்தைகள் போதாது மாமா.
எனது முதல் கவியையும் கண்ணீரையும் சமர்பிக்கின்றேன்!
நீர் எமக்கு தாய் மாமன் மட்டுமல்ல - தாயுமானவர்!

 - பா.பவித்ரா

(மலேசியாவில் பிறந்து வளர்ந்த பவித்ரா, அண்மையில் மறைந்த தாய்மாமனுக்காக எழுதிய தந்தையர் தின கவிதை. புகைப்படமும் அவர்களுடையதுதான்...)

Monday, June 12, 2017

மீனாவுடன் மிக்சர் 30 - தில்லாலங்கிடி மோகனாம்பாள்: ஒரு அலசல்

ரிச்மண்ட் நகருக்கு  எங்க குடும்பம் குடி வந்து இதோட பத்து வருஷம் ஆகப் போகுது.  ஒரு சராசரி NRI தமிழச்சி தன் வாழ்க்கையில் கொட்டற குப்பைக்கு எந்த விதத்துலயும்  குறையாம அதே இத்துப்போன  பக்கெட்ல நானும் கொட்டறேன்னு மிதப்பா நினைச்சிட்டிருந்த  என் வாழ்க்கைல நேத்து ஒரு ஆச்சரிய குறி போடும் புது அனுபவம்.

இது நாள் வரைக்கும் தமிழ்ச்சங்கம் தொகுத்து வழங்கியிருக்கும் பல கலை நிகழ்ச்சிகளை சமோசா டீ சகிதம் பல முறை ரசிச்சிருக்கேன் நான்.   சங்கீதம், நாட்டியம், பட்டிமன்றம் எல்லாம் எங்க ரிச்மண்ட் மக்களுக்கு தண்ணி பட்ட பாடு.  ஒரு சிலருக்கு இளையராஜா  ஒண்ணு விட்ட சித்தப்பா முறைனா பலருக்கு  தியாகராஜ ஸ்வாமிகள் வருஷா வருஷம் பொங்கலிட்டு தீ மிதிக்கும் குலதெய்வம்.  இது குயில் பறக்கும் ஊர் அப்படீன்னு  யாரைக் கேட்டாலும் உங்க தலைலயே நச்சுனு அடிச்சு சொல்லுவாங்க.

சரி பாட்டை விடுங்க. வீட்டுக்கு ஒரு மரம்  வளர்த்து நீங்க நிச்சயம் பாத்திருப்பீங்க.  ஆனா தெருவுக்கு ஒரு பெண் குழந்தையை நாட்டியப் பேரொளியாய் வளர்க்கும் ஊரை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?  பரதம், குச்சிப்புடி,  கோலிவுட், ஹாலிவுட் அப்படீன்னு முழுசா நாங்க நாட்டிய சாஸ்த்திரத்தை  குத்தகைக்கு எடுத்து ரொம்ப நாளாச்சு.  பட்டிமன்றமா? ஹா! நாங்கள் வாய்ச்சொல்லிலும் வீரரடி. வீட்டுக்குள்ளயும் அடிச்சுக்குவோம் அப்புறம் டக்குனு குதிச்சு மேடை ஏறி ஊரறியவும் அடிச்சுக்குவோம்.  கூச்ச நாச்சமெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. சொற்போரில் எங்களை வெல்ல இன்னொரு பாப்பையா பிறந்து தான் வரணும்னு பரவலா ஒரு கருத்து இருப்பது உண்மை.

எதுக்கு இத்தனை பெரிய முகவுரைன்னு குழப்பமா இருக்கா?  ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாம்னு சொன்ன அதே தமிழ் மரபு,  ஒரு பக்கப் பதிவை எழுத முடியாம முழி பிதுங்கி  தவிக்கும் ஒரு அப்பாவி தமிழ் பெண் (நாந்தேன்) நாற்பது வார்த்தையை கூட்டி எழுதினா கோவிச்சுக்கவா போறது?  சரி சரி, நீங்க நெற்றிக்கண்ணை மூடுங்க. விஷயத்துக்கு வந்துட்டேன்.

இந்தியாவிலிருந்து வந்து Y.G. மதுவந்தியின் தலைமையில் நடக்கும் மஹம் கலைக்குழு நேத்து சாயந்திரம் ரிச்மண்ட் இந்துக்  கோவிலில் 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' அப்படீன்னு ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம் போட்டு அசத்தினாங்க.  ரெண்டு மணி நேரம் சிரிப்பலையில் அந்த அரங்கமே ஆட்டம் கண்டு போச்சு.  வாய் விட்டு சிரிப்பது ஒரு வரம்.  ஒரு சில மணி நேரம் எல்லாக் கவலையையும் மறந்து ஒரு ஊரையே சிரிக்க வச்ச புண்ணியம் தில்லாலங்கிடி குழுவினருக்கு தான் சேரும்.

மேடை நாடகம் எப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான கலைன்னு நேத்து வரைக்கும் எனக்கு தெரிஞ்சதில்லை. நடிகர்கள் அவங்க வரிகளை மறந்தா இதுல  take 2 கிடையாது. பார்வையாளர்கள் டீ குடிக்கற ஜோர்ல ஜோக்கை கோட்டை விட்டாங்கன்னா நிறுத்தி அவங்களுக்கு மறுபடியும் எடுத்துச் சொல்ல pause பட்டனும் கிடையாது.  ஒவ்வொரு ஸீனுக்கு நடுவிலும் backdrop மாத்துவதிலிருந்து, லைட்ஸ் சவுண்ட் set பண்ணுவது வரை பல விதத்திலும் கடினமான கலையாக தெரியும் மேடை நாடகத்தை அசால்ட்டாக நேற்று செய்தனர் மஹம் கலைக்குழுவினர்.

சரி இவங்களாவது நாடகம் மேடை ஏத்தறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்கன்னு சொல்லலாம்.  தினந்தோறும் கணினியோட வேலையில் மாரடிக்கும்  சில ரிச்மண்ட் வாசிகளும் இதில் பங்கேற்று மிக அருமையாக நடித்து பார்வையாளர்களை அசத்தியது தான் இன்னும் சிறப்பான அம்சம்.

இதுக்கு முன்னாடி வாயை குவித்து எத்தனையோ முறை விசிலடிக்க பாத்து தோத்து போயிருக்கிற  நான் நேத்து எங்க ஊர் ரிச்மண்ட் மக்களை நாடக மேடையில் பார்த்த சந்தோஷத்துல உணர்ச்சி வசப்பட்டு  ஊதிய வேகத்துல எனக்கு முன்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவரோட அழுந்த வாரிய தலைமுடி கலைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்.  அவர் திரும்பி பார்த்து முறைச்சதும் இனி இப்படி பாசப்பறவையை அடிக்கடி பறக்க விடமாட்டேன்னு அவருக்கு வாக்கு வேற கொடுத்திருக்கேன்.

மஹம் குழுவிற்கும், அவர்களை இங்கு வரவழைத்து 'தில்லாலங்கிடி மோகனாம்பாள்' நாடகத்தை எங்களுக்கு அளித்த ரிச்மண்ட் executive committee குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

- மீனா சங்கரன்

Sunday, June 11, 2017

வல்லினம் @ இருபெயரொட்டுப் பண்புத்தொகை (ஞாயிறு போற்றுதும்)

அடிக்கடி கண்ணில் படும் ஒரு ஒற்றுப் பிழையை குறித்து இன்றைய குறிப்பு.

தமிழில் எங்கு வலி மிகும்/மிகாது என்று வகுக்க விதிகள் இருப்பது தெரியும். அதில் ஒன்று இது.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.

இரண்டு தனிப் பெயர்கள் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைக் குறித்தல் இரு பெயரொட்டு பண்புத்தொகை.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை = இரு பெயர்கள் ஒட்டி வந்து பண்புத்தொகை ஆதல்.
அவ்வளவுதான்.

அப்படி இரண்டு பெயர்ச் சொற்கள்* அடுத்தடுத்து வரும் போது நடுவுல பசை (ஒட்டு/ஒற்று) போட்டுட வேண்டியதுதான்.
*இரண்டாவது சொல் வல்லினத்தில் (க,ச,ட,த,ப,ற) துவங்கினால்.
எ.கா:
தமிழ். சங்கம்.
இரண்டும் தனித்தனி பெயர்ச் சொற்கள். ஒன்றைச் சார்ந்து மற்றோன்று இல்லை. ஆனால் அடுத்தடுத்து வரும்போது முதல் சொல் இரண்டாம் சொல்லின் பண்பைச் சொல்லிவிடுகிறது. அந்த சங்கம் கன்னட/தெலுங்கு சங்கமெல்லாம் இல்லை, அது தமிழ் தொடர்பான சங்கம்-ன்னு அதன் பண்பைச் சொல்லிவிடுகிறது.

இப்போ,
என்ன சங்கம்? தமிழ்ச் சங்கம். 

சொற்களை மாற்றிப் போட்டாலும் விதி அதே.
என்ன தமிழ்? சங்கத் தமிழ்.
சங்கத் தமிழ் மட்டுமில்லை, சென்னைத் தமிழுக்கும் அங்ஙனமே.
சென்னை + தமிழ் = சென்னைத் தமிழ்.

மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள:
எப்போதும் பண்பைச் சொல்கையில் அழுத்திச் சொல்லணும். 
 
[தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் பள்ளியில் என் செல்ல குட்டி படிக்குது-ன்னு யாரவது "மேலாக" எழுதினா அவர்களை என்ன செய்யணும்ன்னு யோசிச்சு வையுங்க. செய்திடுவோம். :) ]

மேலும் சில எ.கா:
பட்டு + குட்டி
உயிர் + தோழி/ழன்.
தமிழ் + பள்ளி
 
வேறு சில சொற்களை முயன்று பாருங்கள்.

Sunday, June 04, 2017

ஞாயிறு போற்றுதும் - முயற்சி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த 'முயற்சி' என்ற சொல் தொடர்பாக இன்று ஒரு குறிப்பு.

I am trying என்பதை எப்படிச் சொல்வோம்?
முயல்கிறேன் என்பது சரியான பயன்பாடு. முயற்சிக்கிறேன் என்பது? தப்புதாங்க.

பயிற்சி என்பதை சொல்லிப் பாருங்கள். செய்து கொண்டிருக்கும் பயிற்சியை "பயிற்சி செய்கிறேன்" என்றோ, பயில்கிறேன் என்றோதான் சொல்கிறோம். பயிற்சிக்கிறேன், பயிற்சித்தான் என்றெல்லாம் கொத்து பரோட்டா போடுவதில்லை. ஆனால் பாவம், முயற்சி மட்டும் மாட்டிக்கொண்டுவிட்டது.

சரி,
முயற்சிக்கிறேன், முயற்சித்தான்/ள்/ர் எல்லாம் தப்புன்னு ஆகிடுச்சு.
ஆனால், யோசிச்சிச்சு பார்த்தால் இந்த மாதிரி சொற்களை நாம எல்லா நேரங்களிலும் தவறாகப் பயன்படுத்துவதில்லை.
"பண்ணி" போட்டு ஒரு மாதிரி சமாளிச்சுடுறோம்.
முயற்சி பண்ணினேன் / முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் /முயற்சி பண்ணுவேன்.
இது ஒரு மாதிரி தவறில்லாத பயன்பாடு. பண்ணியை தொறத்திட்டு "செய்" என்ற கட்டளைச் சொல்லை பயன்படுத்தினால் இன்னும் கொஞ்சம் சரியாகிடும். முழுமையாக இல்லைன்னாலும் just pass-ஆவது செய்திடும்.
முயற்சி செய்தேன் / முயற்சி செய்கிறேன் / முயற்சி செய்வேன்.
ஏன் just-pass என்றால், முயற்சி என்பது பெயர்ச்சொல். முயல் என்பதே வினைச்சொல். ஆனாலும் "முயற்சி செய்வதில்" இலக்கணப் பிழை இல்லாததால் கருணை-பாஸ்.

எழுதும் போது இப்படிச்
​சரியாக ​
எழுதலாம்:
முயன்றேன் / முயல்கிறேன் / முயல்வேன்

கவனிக்க: பெயர்ச்சொல்லில் காலம் அறிய முடியாது. ஆனால் வினைச் சொல்லில் காலம் அறியலாம். அந்த வினை முற்றிற்றா இல்லையா என்பதை அச்சொல் தெரிவிக்கும். (காலமொடு வரூஉம் வினைச்சொல் - (தொ.கா))

சொற்சிக்கனம் கூடுதல் சலுகை/நன்மை.

"பண்ணி" suffixed சொற்கள் எல்லாம் இப்படி கழுத்து நெறிக்கப்பட்டுக் கொண்டு இருப்பவையே.

இப்போ என்னென்ன சொற்களை* இப்படி "பண்ணி" வெச்சிருக்கோம்-ன்னு யோசிச்சு பாருங்க.

* இந்த, "திங்க் பண்ணி", "லேட் பண்ணி" எல்லாம் விட்டுடலாம். அதெல்லாம் தெரியாமல் செய்வதில்லை.

Thursday, June 01, 2017

ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு இலக்கணக் குறிப்பு


உள்ளுர்க்காரர் ஒருவர் வாரந்தோறும் ஏதாவது ஒரு சிறு தமிழ் இலக்கணக் குறிப்பினை ஒரு உரையாடல் குழுவிற்காக எழுதி வருகிறார். அதை நம் வலைப் பக்கத்திலும் பதியுங்கள் என்று கேட்டிருக்கிறோம். அடி விழாது என்ற உறுதியின் பேரில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். நாங்க எல்லாரும் ரெம்ம்ம்ப நல்லவிங்க பயப்பட வேண்டாம்-ன்னு சொல்லியிருக்கோம். முடிஞ்ச அளவு வன்முறையை தவிர்ப்போம். என்ன, சரியா? :)

ஞாயிறுதோறும் ஒரு குறிப்பினை பார்ப்பதால் (போற்றுவதால்), இளங்கோ அடிகளிடம் இருந்து "ஞாயிறு போற்றுதும்"-ங்கறதை கடன் வாங்கி அந்தத் தலைப்பில் எழுதுகிறார். அதே தலைப்பில் நம் வலைப் பக்கத்திலும் பதியச் சொல்லலாம். படிக்கிறவங்க என்ன கிழமையில படிச்சாலும், புரிஞ்சா சரிதானே?


Friday, May 26, 2017

தமிழ் நாட்டின் இன்றைய பரிதாப நிலை


தமிழ்நாட்டு அரசியல் பற்றி எழுத வேண்டாம் என்று பல நாட்களுக்கு முன்  உறுதி எடுத்துக் கொண்டிருந்தேன் .ஆனால் நடக்கும் தொடர் சம்பவங்கள் என் உறுதியை குலைத்து விட்டது.தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடக்கும் சம்பவங்கள் இந்திய அரசியலை திசை மாறி பயணிக்க செய்துவிடுமோ என்ற கவலை எல்லோரையும் பேச வைத்திருக்கிறது.

பொதுவாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சென்ற சில ஆண்டுகளாக இந்திய அரசியலை உற்சாகத்துடன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.அவர்களுடைய கனவுகள் பற்றி பேச இப்பொழுது தயாராக இல்லை அந்த கனவு கலையும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  ஆனால் படித்த மத்திய தர வர்க்க மக்கள் தமிழ்நாட்டு அரசியலை கலைஞர் எதிர்ப்பு உணர்வுடன் பார்த்து வந்ததை கவனித்துக் கொண்டிருக்கிறேன் அந்த காரணத்துக்காகவே அவர்கள் ஜெயலலிதாவின் அரசியலை ஆதரித்துப் பேசி வந்ததும் தெரியும் எதிரிக்கு எதிரி நண்பன்  என்ற அந்த தவறான கருத்து தமிழ்நாட்டிலும்  பரவலாக  அரங்கேறிக் கொண்டிருந்த காலம் உண்டு.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அரசியல் சார்பு இல்லாமல் நாட்டு நலன் கருதி சிந்திக்கும், பேசும் மக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.  அவர் இருக்கும்போது எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று இதற்கு அர்த்தம் அல்ல.  ஆர்.  கே நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதன் பிண்ணனியை அறிந்தவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக பட்டப் பகலில் ஒரு வாக்குக்கு ருபாய் 4000 கொடுக்கும் காட்சி தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கமுடியும்,என்ற மோசமான நிலைமை .  உருவாகியிருக்கிறது.  ஆளும் கட்சியின் இரண்டு அணிகளும் மத்திய அரசாங்கத்தின் தயவைப் பெறுவதற்கு போட்டி  போட்டுக் கொண்டிருக்கின்றன.ஆளும் கட்சியின் சட்டசபை உறுப்பினர்களுக்கு :ள்ள ஒரே நோக்கம் எப்படியாவது ஐந்தாண்டு சட்டசபை உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.  அதற்காக அவர்கள் கூண்டோடு விலை போகத் தயாராக இருக்கிறார்கள் சில்லரையாகப் போனால் சபை கலைக்கப்படும் அபாயம் இருக்கிறது.  எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை சட்டசபை கலைக்கப்படாது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.  இடையில் பல உறுப்பினர்கள் கோஷ்டியாகப் பிரிந்து கிடைத்தவரை சுருட்ட பேரம் செய்கிறார்கள்.  சாதி வாரியாகவும் மாவட்ட வாரியாகவும் இது நடக்கிறது
 கொடநாடு பங்களாவின் ரகசியம் முழுவதும் இன்னும் வெளியாகவில்லை .அங்கே உள்ள பெரிய மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடிக்க உள்விஷயம் தெரிந்தவர்கள் நடத்திய நாடகம்தான் அது என்று மக்கள் சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது அதையொட்டி  இது வரை  4 அல்லது 5 கொலைகள் நடந்திருக்கிறது.  சந்தேப்படும்படியான சில விபத்துகளில் சம்பந்தபட்ட சிலர் இறந்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டு காவல்     துறை இது பற்றி நியாயமான, உண்மையான விசாரனை நடத்த வாய்ப்பில்லை.  மத்திய அரசாங்கம் இதில் தனக்கு ஏதாவது அரசியல் லாபம் இருக்குமா என்றுதான் நினைப்பதாகத் தெரிகிறது.

 ஏற்கெனவே இரு கோஷ்டிகளில் எது தன் பக்கம் சாயும் என்று மத்திய அரசாங்கம் கணக்கு போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது தங்கள் பலவீனத்தை சரியாகத் தெரிந்து இரு அணிகளும் மத்திய அரசாங்கத்தின் கருணைக்கு மணு போட்டுக் கொண்டிருக்கின்றன.  இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் மாற்றி மாற்றி பிரதமரை சந்தித்து பேசுகிறார்கள் விவசாயிகளை சந்திக்க.நேரம் இல்லாத பிரதமர் இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க முடிகிறது.  கொள்ளைக்காரர்களில் வல்லமை படைத்தவனை ஆதரித்து சிம்மாசனத்தில் உறுதியாக அமர்த்த மத்திய அரசாங்கம் நியாயம் தேடிக் கொண்டிருக்கிறது.  மற்றபடி இந்த நாடகத்தில் தர்மம் நியாயம்  சமூக அக்கரை எதைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை.ஒரு தொகுதியில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு 89 கோடி ருபாய் செலவிட ஒருகட்சி தயாராக இருந்தால் அந்த கட்சியின் தரமும்,பணபலமும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தால் நம்முடைய ஜனநாயகம் போன கதி தெரியும் .  
தினம் தினம் நடக்கும் குழப்பத்துக்கு இடையில் மேலும் ஒரு பெரிய குழப்பம் வர வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. அதுதான் ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசம். ஒவ்வொரு படத்தின் வெற்றிக்குப் பிறகும் ரஜனி அரசியலுக்கு வருகிறார் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது இந்த முறை தீவிரமாகப் பேசப்படுவதன் உள்நோக்கம் எல்லோருக்கும் புரிகிறது .  திரைப்படங்களில் மகாராஜா வருவதற்கு முன் பராக் பராக் என்று காவலாளி கூறிக் கொண்டு வருவது போல ஏகப்பட்ட அமர்க்களம்.காலம் கூடி வருவதாகவும் ஆண்டவனே நேரம் பார்த்து கொடுத்து விட்டதாகவும் சொல்லுகிறார்கள்.மத்திய அமைச்சர்கள் ரஜனியோடு தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் என்ற செய்தியும் உண்டு.அவர் தனிக் கட்சி தொடங்காமல் தன்னுடன் இணைந்து அரசியல் செய்தால் பாரத தேசத்தின் புனிதத்தையும் பழம்பெருமையையும் காப்பாற்றலாம் என்று மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சி நினைக்கிறது சிவாஜிகணேசன் விஜய காந்த் போன்றவர்கள்  அரசியலுக்கு வந்து பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும் இப்பொழுது விஜகாந்த் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை சாராய நெடி வரும் திசையைத் தேடிப் போனால் ஒருவேளை அவரைக் கண்டு பிடிக்கலாம்.
 
ரஜனி அரசியலுக்கு வந்தால் ஒரே லாபம்  சி.  பி.  .  ரெய்டு வருமான வரித் துறை ரெய்டு என்று அவருக்கு எதுவும் இருக்காது
ஒரு  நூற்றாண்டு காலம் தமிழ்நாடு கூத்தாடிகள் கையில் அகப்பட்டு சீரழிய வேண்டும் என்று ஒரு சாபம் இருப்பதாக நாலும் தெரிந்த ஒரு ஜோசியர் கூறுகிறார் எனக்கு தனிப்பட்ட முறையில், அவருடைய ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை ஆனாலும் ஒரு ஜாக்கிரதைக்காக இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்டறிய வேண்டும் வடநாட்டில் மதத்தையும்  சாமியார்களையும் வைத்து அரசியல் செய்வதைப் போல தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களை வைத்து அரசியல் நடத்தினால் தான் பிழைப்பு ஓடும் என்று தெரிந்து கொண்டிருக்கிறர்கள். 
மாநிலத்தின் மிகப்பெரிய நதியான காவிரியில் நீர் இல்லை வறண்டு கிடக்கிறது.வளமான தஞ்சை மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழில் தேடி நகரங்ளில் கூலிவேலை செய்து பிழைக்க வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலான அணைக்கட்டுகளில் அடிமண் மட்டுமே தெரிகிறது ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அரசாங்கத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளத்தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது மற்ற கட்சிகளூம் ரஜனியின் அரசியல் வருகை ஏதோ ஒரு யுகப்;பரட்சி போல அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  பொறுப்பான தினசரிகளில் கூட இது பற்றி செய்தி கட்டுரையும் தலையங்கமும் வருகிறது
சில சமயங்களில் நம்பிக்கை தரும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது அதுதான் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் செய்யும் கலகம்.

உச்ச நீதி மன்ற்ம் கொடுத்த தீர்ப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.  உடனே தேசிய நெடுஞ்சாலைகளின் விளக்கத்தையே மாற்றி விட்டது மாநில  அரசாங்கம்  பல தேசிய நெடுஞ்சாலைகள் மாநில சாலைகளாக அவதாரம் எடுத்தன. எல்லாம் மத்திய அரசாங்கத்தின் உடன்பாட்டோடுதான் செய்தார்கள்.அதே நெடுஞ்சாலைகளில் அதே மதுக்கடைகள் வழக்கம் போலச் செயல்பட்டன. அதன் பிறகு தொடங்கியது பெண்கள் எழுச்சி .  நூற்றுக்கணக்கான இடங்களில் பல்லாயிரக்கண்க்கான பெண்கள் கூடி மதுக்கடைகளை முற்றுகையிடத் தொடங்கினார்கள் ஒரு மாதத்துக்கு முன் தொடங்கிய இந்த போராட்டம் முடிவு இல்லாமல் நடக்கிறது எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியும் இதில் முனைப்பு காட்டவில்லை .  நகரங்கள் கிராமங்கள் என்ற வேற்றுமை இல்லாமல் எல்லா பகுதிகளிலும் மறியல் தொடர்கிறது தொடக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு எதிராக ஆரம்பமான இயக்கம் எல்லா பகுதிக் கடைகளுக்கும் எதிராகத் திரும்பிவிட்டது.இதற்கு முக்கிய காரணம் தேசிய நெடுஞ்ச்சாலைக்கான விளக்கத்தை அரசாங்கம் மாற்றியதுதான்.கூட்டுசதியை மக்கள் புரிந்து கொண்டதுதான். 
வெறும் மறியலில் தொடங்கிய இயக்கம் படிப்ப்படியாக எல்லா மதுக்கடைகளுக்கும் எதிராகத்  திரும்பியது மறியலோடு மட்டுமல்லாமல்  கடைகளில் புகுந்து பாட்டில்களை எடுத்து உடைத்து வீதியில் எறிகிறார்கள்.  எல்லாம் பெண்கள்தான்.எந்த காவல்துறையும் அவர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையால் எந்த பயனும் இல்லை.  கலகம் அதிகமானது மட்டுமல்லாமல் பல புதிய பகுதிகளுக்கும் பரவியது
எல்லா தொலைக்காட்சிகளும் தொடர்ந்து நடக்கும் கலகத்தை ஒளி ;பரப்பிக் கொண்டிருக்கின்றன. திருப்பூரில் ஒரு தெருவில் மறியல் செய்த ஒரு பெண்ணை கன்னத்தில் ஒரு அறை விட்டார் ஒரு காவல்துறை அதிகாரி.அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தன் கன்னத்தை தடவிக் கொண்டார்கள். அந்த அளவுக்கு பலமான அடி அந்த பெண்ணுக்கு காது செவிடு ஆகிவிட்டது என்று செய்தி.  ஆனால் அதைக் கண்டு எந்த பெண்ணும் பயந்து போராட்டத்தில் ஈடுபட தயக்கம் காட்டவில்லை.  பெரும்பலும் குடித்து வீணாகும் இளைஞர்களின் தாயார், னைவி, குழந்தைகள் இப்படி குடும்பம்.குடும்பமாக பலர் வீதிக்கு வந்துவிட்டனர். தன்னெழுச்சியாகத் தொடங்கிய இந்த போராட்ட்த்தைப் பார்த்து அரசாங்கம் ஆடிப் போய் விட்டது.எந்த அமைச்சருக்கும் மக்களை சந்திக்கும் துணிவு இல்லை. பெண்களின் இந்த போராட்டம் தொடர்கிறது.
இப்படி எல்லாமே குறைகள் நிறைந்த அறிக்கையாக இந்த கட்டுரை அமைந்து விட்டதாக யாரும் குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம். படிப்பவர்கள் சிரிக்க ஒரு செய்தியோடு முடிக்கலாமென்று நினைக்கிறேன்.அந்த செய்திகூட நடிகர் கட்சி மாறியது தொடர்பான செய்திதான். ராதாரவி என்ற சினிமா நடிகர் சமீபத்தில் .  தி.  மு.கவிலிருந்து விலகி தி.மு..வில் சேர்ந்தார், அதற்கு அவர் பத்திரிகை நிருபர்களிடம் கொடுத்த காரணம். அவருடைய தாயார் இறந்த போது எந்த .  தி.  மு.  தலைவரும் இவரை சந்தித்து ஆறுதல் கூறவில்லையாம்.  ஸ்டாலின் ஒருவர் மட்டுமே  துக்கம் விசாரித்து இவருடைய கண்ணீரை துடைத்து விட்டாராம். அதனால்தான் திமுவில் இப்பொழுது சேர்ந்தாராம்.  அந்த தாயில்லா பிள்ளை கொடுத்த   கொடுத்த விளக்கம் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ராதா ரவியின் தாயார் இறந்து 9 வருடம் ஆகி விட்டது.