Saturday, July 15, 2017

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை
சிறு வயதில் நாம் படித்த இலக்கணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கொஞ்சம் நினைவு கூறலாம்.
நான் எட்டாவது படித்துக்கொண்டு இருக்கும்போது தமிழாசிரியர் இலக்கணக் குறிப்பு என்று பலகையில் எழுதித் தள்ளுவார். ஆனால் அது பாடத் திட்டத்தில் கிடையாது. தேர்வில் கேள்விகள் ஒன்பதாம் வகுப்பில் மாத்திரமே வரும். அதனால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

தமிழ் போல நுணுக்கமாக இலக்கணக் குறிப்புகள் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கும் ஒரு இலக்கண குறிப்போடு விளக்கும்போது அந்த வார்த்தைகளின் அர்த்தம் மேலும் மெருகு கூடுகிறது.

எளிதாக ஆரம்பிக்கலாம். எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

"ஊறுகாய்" : வினைத்தொகை. ஊறுகாயை "ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊரும் காய்" என்று எந்த காலத்துக்கும் ஒவ்வுமாறு கூற முடிவதால், வினை மறைந்திருக்கிறது. எனவே வினைத்தொகை.

மேலும் சில எளிய இலக்கணக் குறிப்புகள்
  • எல்லோருக்கும் தெரிந்த மறக்க முடியாத ஒன்று "ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம்" - உதாரணம் - அணையா விளக்கு. அணையாத விளக்கில் "" -வை நாம் ஒதுக்கி விடுவதால் இந்த பெயர்.
  • வாழ்க , வருக - இவற்றை "வியங்கோள் வினைமுற்று" என்பார்கள்.
  • வந்தவன் சென்றான் - இந்த "வந்தவனை" வினையாலணையும் பெயர் என்று கூறுவார்கள்.
அடுத்து சில உயர்வு , தாழ்வு சிறப்புகள். சில இடங்களில் "உம்" அல்லது "ஏ" இவை உயர்வு அல்லது தாழ்வைக் குறிக்கும். நான் சாத்தூரில் 11 -ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது, ஆசிரியர் ஒரு மன்னர் போர் செய்த கதையை விளக்கும்போது அதில் "மன்னனும் தோற்றான்" என்ற வாக்கியம் வந்தது. அவர் அதை "தோற்கக் கூடாத மன்னனே தோற்று விட்டான், இந்த உம்மை "தாழ்வுச் சிறப்பும்மை" என்று கூறினார். நான் உடனே எழுந்து "இந்த இடத்தில் தோற்க மாட்டான் என்று எதிர் பார்க்கப்பட்ட மன்னனே தோற்று விட்டான், அந்த உம்மையில் மன்னனின் உயர்ச்சி வெளிப்படுகிறது, அதனால் இது "உயர்வுச் சிறப்பும்மை" என்று கூறினேன். அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அந்த வகுப்பில் நான் புதிய மாணவனும் கூட. நல்ல வேளையாக அவர் தவறாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் வகுப்பில் அவர் நுழைந்த உடன், என்னை எழுப்பி உன் பெயர் என்ன அன்று கேட்டு விட்டு, இந்த "மன்னனும்" பற்றி நான் மற்ற இரண்டு தமிழ் ஆசிரியர்களிடம் விவாதித்திருந்தேன். அது உயர்வுச் சிறப்பும்மை - தான் அன்று பெருந்தன்மையாக தன தவறை திருத்திக் கொண்டார்.

தாழ்வு சிறப்பும்மை - ஹர்பஜன் சிங்கும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். இந்த இடத்தில் "உம்" ஹர்பஜன் சிங் ஒரு நல்ல மட்டையாளர் அல்ல என்று உணர்த்துகிறது. எனவே தாழ்வு சிறப்பும்மை.

இது போல ஏகாரம். ஸ்ரீதர் நல்ல கேரம் வீரர். நான் உப்புச் சப்பிலாமல் ஆடி அவரை எப்படியோ வென்று விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். அவர் கூறுகிறார் "இவன் என்னையே ஜெயித்து விட்டான்". இது ஸ்ரீதரின் திறமையை உயர்வாகக் குறிப்பிடும் "உயர்வுச் சிறப்பு ஏகாரம்". நான் கூறுகிறேன். "நானே ஸ்ரீதரை ஜெயித்து விட்டேன்" இது என்னுடைய திறமையின்மையைக் குறிக்கும் தாழ்வுச் சிறப்பு ஏகாரம்"

இன்னொரு வித்தியாசமான "உம்மை". வகுப்பறைக்கு ஆசிரியரும் வந்து விட்டார் என்ற தொடரில் உள்ள "உம்", மாணவர்கள் ஏற்கனவே வந்து விட்ட ஒரு விஷயத்தை தெரிவிக்கிறது. இது "இறந்தது தழுவிய எச்ச உம்மை" என்று கூறப் படுகிறது.

அன்மொழித் தொகை - இது சற்று புதிரானது.

செங்கொடி வந்தாள் - இதில் செங்கொடி என்பது "செம்மையான கொடி". செம்மை என்பது ஒரு பண்பு. அது மறைந்து வருவதால் இது ஒரு பண்புத்தொகை. ஆனால் இங்கு செங்கொடி என்பது செம்மையான கொடி போன்ற ஒரு பெண்ணைக் குறிக்கிறது. அதனால் இது " பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படுகிறது.

இது போல் தேன்மொழி வந்தாள் என்ற தொடரில் தேன்மொழி "உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படும். (தேன் போல மொழி பேசும் பெண் வந்தாள்)

ஓடு -
இந்த சிறிய வார்த்தையின் இலக்கணக் குறிப்பு கொஞ்சம் நீளமானது. செய் எனும் வாய்பாட்டு ஏவல் ஒருமை வினைமுற்று.

தமிழ் இலக்கணம் பற்றி பேச ஆரம்பித்தால் அது ஒரு கடல், நாம் கொஞ்சம் கையில்
அள்ள முடிந்தால் நம்முடைய பாக்கியம்.

நன்றி.






8 comments:

  1. பயனுள்ள பதிவுக்கு நன்றி.

    ஒற்று போடுவதில்தான் அதிகம் பிழை ஏற்படுகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் எழுதுங்களேன்...

    ReplyDelete
  2. உயர்வு சிறப்பு ஏகாரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது சீரங்கத்தில் இருந்து வந்த நண்பன் யாராவது 'நானே இதை செய்து விட்டேன்' என்ற மாதிரி பேசினால், "நானே என்ன ராஜமாணிக்கமே" என்பான். அதன் விளக்கம். அந்த காலத்தில் ராஜமாணிக்கம் என்று ஒரு புகழ்பெற்ற நாடக நடிகர் இருந்தாராம். அவர் ஒரு சமயம் ராமாயணத்தில் ராவணனாக நடித்தாராம். அதற்கான விளம்பரம்:

    "ராஜமாணிக்கமே ராவணனாக நடிக்கும் சம்பூர்ண ராமாயணம்".

    அப்படி என்றால் அதில் ராமராக நடித்தவர் எப்படிப்பட்ட பேர்வழியோ.

    மாணவர்கள் அடுத்த வரிகளில் வரும் உயர்ச்சி தாழ்வு உம்மைகளையும் ஏகாரங்களையும் அலசவும்.

    நானும் இனி சினிமா பற்றி எழுதப் போகிறேன். ஏனென்றால் இவ்வளவு விஷயங்கள் வைத்துள்ள சத்யாவே சினிமா பற்றி எழுதுகிறார். :-)

    கவிநயா - ஒற்று நிறைய விட்டுப்போவதற்கு காரணம் நான் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தையாகத் தான் யோசிக்கிறேன். அதுவும் கூகுள் வழி உள்ளீட்டைப் பயன்படுத்தும்போது இது நிறைய நடக்கிறது. அடுத்த வார்த்தையை நினைவில் வைத்துக் கொண்டால் ஒற்று விட்டுப்போவது கொஞ்சம் குறைகிறது. ஒற்றே இல்லாமல் எழுதும் பிரகிருதிகளும் இருக்கிறார்கள். :-)

    ReplyDelete
  3. கவிநயா சொல்வது போல ஒற்றுப் போடுவதின் இலக்கணம் யாராவது விவரித்தால் நல்லது. உதாரணத்திற்கு - "ஒற்றுப் போடுவதா" அல்லது "ஒற்று போடுவதா"!! :-) நான் தோராயமாக எனக்கு எது சரியாகப் படுகிறதோ அப்படி எழுதுவேன். உறுதியாகத் தெரியாது.

    "எதுச் சரியாக" சரியாகப் படவில்லை.

    ReplyDelete
  4. சத்யா, எங்க +2 தமிழாசிரியை முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர். நாகு, இந்த சுட்டியில் சில உதாரணங்களுடன் விளக்கம் உள்ளது. http://www.pollachinasan.com/kal/arachi/innov/innov36-u8.htm .

    ReplyDelete
  5. ஒற்று பற்றிய இந்த அட்டவணை பயனுள்ளதா பாருங்க நாகு - http://pksivakumar.blogspot.com/2006/01/blog-post_24.html

    ReplyDelete
  6. இந்த உயர்வுச் சிறப்பு ஏகாரம், தாழ்வுச் சிறப்பு ஏகாரம் இதெல்லாம் நான் படிச்சதே இல்லை. நாங்க பழைய SSLC. இந்தப் பக்கத்தில் இதைப் பற்றி தெரிந்து கொண்டேன் இது போல மேலும் பல நல்ல தகவல்களைத் தொடர்ந்து வழங்கவும்

    ReplyDelete
  7. தமிழ் ஒரு கடல்.ஆழ்ந்து இறங்கினால் முத்துக்கள் போல் காவியங்கள் கிட்டும்

    ReplyDelete
  8. இலக்கணத்தைச் சுயமாகப் புரிந்துகொண்டு, சொந்தமாக எழுதிப் பாரத்தால்தான் எளிதில் வசப்படும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!