Showing posts with label பித்தனின் விமர்சனம். Show all posts
Showing posts with label பித்தனின் விமர்சனம். Show all posts

Wednesday, May 09, 2007

தமிழ்ச் சங்க தமிழ் இசை விழா

இந்தப் பதிவை நான் வெளியிடும் நேரம் தமிழ் இசை விழாவின் பாதிப்பு சற்று ஓய்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
பல விளம்பரதாரர்களைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற நிகழ்ச்சியின் DVD விற்பனை மிக நல்ல முயற்சி. இதை தொடர்ந்து செய்தால், பல பெற்றோர்கள் காம்கார்டரும் கையுமாக அலையாமல் நிம்மதியாக நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.
குழந்தைகள் சற்று அமைதியாக இருக்க என்ன வழி என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவர்களுடைய பங்கேற்றல் முடிந்தவுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி சற்று தாங்க முடியவில்லை. நல்ல யோசனை சொல்பவர்களுக்கு ஏதேனும் இலவசம் என்று அறிவிக்கலாம் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையின் குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருட தமிழ் சங்கத்தின் சந்தா தள்ளுபடி என்று ஆசை காட்டி பார்க்கலாம்.
முதலில் சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள்:
அவர்கள் மேடையேறி பாடும் போதும் சரி, ஆடும் போதும் சரி, என்ன ஒரு கம்பீரம்! அவர்களுக்கு இணை அவர்களேதான். குறிப்பாக யாரையும் சொல்லப் போவது இல்லை. அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் வந்து விடக் கூடாது என்பதல்ல காரணம், அவர்களில் இவர் முதல், அவர் அடுத்து என சொல்லி அவர்கள் உழைப்பை, உற்சாகத்தை, முயற்சியை, உறுதியை கேள்வி கேட்கும் எந்தத் தகுதியும் எனக்கு இல்லாததுதான் காரணம்.
மெல்லிசை நிகழ்ச்சி`
ரிச் மெலோடீஸ் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சியில் பல புது முகங்களை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மெல்லிசை குழுவிற்கு புது முகங்களே தவிர தமிழ் சங்கத்துக்கு நன்கு பரிச்சயமானவர்களே.
பயிற்சி என்பது இது போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முக்கியம். பாடல் வரிகளை மறப்பதோ, தவறாகப் பாடுவதோ, பின்னனி இசையை மாற்றி வாசிப்பதோ ஒப்புக் கொள்ளக்கூடியதாக இல்லை.
பாட்டுத் தேர்வில் குழுவினர் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 'மெலோடீஸ்' என்ற பெயருக்கு ஏற்ப பாடல்களைத் தேர்ந்தெடுத்தால், ரசிகர்களைக் கட்டிப் போடுவது ரொம்ப கடினம். தேவுடா தேவுடா மட்டுமே வேகப் பாட்டு அதுவும் நிகழ்ச்சியின் கடைசியில் என்றால் என்னைப் போன்ற மெல்லிசை மோகர்களுக்கு போதாதுங்கோ.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒரு ரசிகர், குழுவினரிடம் உங்களுக்கு ஒரு தகுதியான ஒலிப் பொறியாளர் (Sound Engineer) உடனடித் தேவை என சொல்லிக் கொண்டிருந்தார். அதை நானும் வழிமொழிகிறேன். அது நிகழ்ச்சிக்கு நன்கு மெருகூட்டியிருக்கும். பல இடங்களில், சுரேஷின் Bass Guitar-ன் திறமை வெளிப்படவே இல்லை. கார்த்திக்கின் தபலாவும், மிதுனனின் ட்ரம்ஸும், சிவாவின் இசையும் ஏன் மார்லானின் ரிதம் கிடாரின் இசையும் கூட சரிவர கேட்கவில்லை.
அரவிந்தும் சிவாந்தியும் வழக்கம் போல கலக்கினார்கள், சிவாந்தியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. நாராயணன் மேடையில் பாடுவது நமக்கு புதிதல்ல, மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவது புதிது. ஆனால் அதுவும் தனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்பதை நிருபித்தார்.
சித்ரா அவர்கள் மேடையில் கர்னாடக சங்கீதம் பாடி, கேட்டு மயங்காத ரிச்மண்ட் வாசிகள் இருக்க முடியாது. அவர் பாடியது நன்றாக இருந்தது. இருந்தாலும் அவர் சற்று வேகமான பாடலை எடுத்துக் கொண்டு கையாண்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இது, அவர் மீது என் போன்ற சிலரின் அதீத எதிர்பார்பே அன்றி வேறு இல்லை. அவர் மெலோடியஸாக பாடலகளை select செய்து பாடியது, பாம்பே ஜெயஸ்ரீ மேடையேறி, தமிழ்தாய் வாழ்த்து மட்டும் பாடிவிட்டு சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
ஆரதி, தான் சிவாந்தியின் தங்கை என்பதை just like that நிருபித்து விட்டார் அவர் பாடிய 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம். கலா நன்றாக பாடினார், அவரும் சற்று வேகமான பாடல்களை பாடுவதற்கு முயல வேண்டும். பாடிய மற்றவர்களிடம் குறை என்று பெரிதாக ஏதுமில்லை, பயிற்சிக் குறைவைத் தவிர.
ஒரு முறை யாரோ சொல்லி கேட்டது, A critic need not be a professional என்று, அதை முழுவதுமாக பின்பற்றும் ஒரு சிலரில் நானும் ஒருவன்.
பின்னர் வழக்கமான கிறுக்கல்களில் சந்திக்கிறேன்.
- பித்தன்.
இந்த பதிவை எனது வளைப்பதிவிலும் படிக்கலாம்: http://pkirukkalgal.blogspot.com/2007/05/blog-post.html