Sept 16, 2006
நடராஜமூர்த்தி சுப்ரமணியம்
உயிருள்ள சொற்றொடர்கள் - 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்'
நம் இலக்கியங்கள், பாடல்கள், ஏன் சினிமாவில் கூட வரும் சில சொற்றொடர்கள் நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விடுகின்றன. கதைப்போக்கும், கதாபாத்திரங்கள் அச்சொற்களைப் பயன்படுத்திய நோக்கமும், அதன் விளைவுகளும், அந்தச் சொற்றொடருக்கு ஒரு உயிரையே அளித்து விடுகின்றன. உதாரணங்களாக, 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்', 'எடுக்கவோ, கோர்க்கவோ', 'சபாஷ், சரியான போட்டி' இவைகளைச் சொல்லலாம். இந்த வகையில் வருவது தான், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் கூறப்படும் 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்'. அதன் விளக்கம் இதோ.
சிவனடியார்களில் சிறந்த 63 நாயன்மார்களின் சரிதம் பெரிய புராணம். அவர்களில் ஒருவர் திருநீலகண்ட நாயனார். மண் பாண்டங்கள் செய்து விற்று வாழ்க்கை நடத்தி வந்த அவர், சிவபெருமானிடத்திலும், சிவனடியார்களிடத்திலும் மிகுந்த அன்பு கொண்டு தொண்டு செய்து வந்தார். சிவனிடத்தில் இருந்த பற்றினால் எந்த ஒரு காரியம் செய்தாலும், 'திருநீலகண்டம்' என்று கூறிக்கொண்டே செய்வது அவர் வழக்கம். இதனாலேயே திருநீலகண்ட நாயனார் எனப் பெயரும் பெற்றார்.
நல்ல குணங்கள் நிறைவாகப் பெற்ற அவரிடத்தில் ஒரு குறை இருந்தது. தன் மனைவி அல்லாத மற்ற மாந்தர்களிடம் பழக்கம் கொண்டிருந்தார் (இன்பத் துறையில் எளியராய் - சேக்கிழார்). இத்தனைக்கும் அவர் மனைவி குணத்திலும் அழகிலும் மிகச் சிறந்தவர் (உருவில் திருவை ஒத்தார் - சேக்கிழார்). கணவரின் செய்கையால் மனம் நொந்த அவர், திருநீலகண்டரைத் தன்னைத் தொட அனுமதிக்கவேயில்லை. அவர்கள் வாழ்க்கை இவ்வாறு நடந்து வந்தது.
ஒரு நாள், இயற்கை வேகத்தால் உந்தப்பட்டு, திருநீலகண்டர் மனைவியைத் தொட முயன்றார். தூர விலகிய அவர் மனைவி, அது மட்டுமல்லாமல் 'தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம்' என்று கூறினார். இதற்கு 'திருநீலகண்டர் மீது ஆணை, எம்மைத் தொடாதீர்' என்று பொருள். அவர் சொல்ல நினைத்ததோ, 'என்னைத் தொடாதீர்' என்று. சொன்னதோ 'எம்மைத் தொடாதீர்' என்று நடைமுறை வழக்கப்படி பன்மையில் (நம்ம கிட்டே விளையாடாதே என்பது போல்). இது திருநீலகண்டருக்கு 'எம்மைத் தொடாதீர்' என்று பன்மையில் உரைத்ததாகத் தோன்றியது. 'திருநீலகண்டர் மீது ஆணை, என்னைப் போல் எந்த ஒரு மாதரையும் தொடாதீர்' என்ரு கூறியதாக அவர் பொருள் கொண்டார். அது இறைவனின் திருவிளையாடல் தான். சிவபெருமான் மீது ஆணையிட்டுக் கூறப்பட்ட இவ்வாக்கியத்திற்குக் கட்டுப்பட்ட அவர் 'இந்தக் கணம் முதல் உன்னை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணையும் தொட மாட்டேன்' என்று உறுதி செய்து அதன் படியே வாழ்ந்தார். அவர் குணத்திலிருந்த மாசு நீங்கியது.
சிவபெருமானே ஒரு சிவனடியார் உருக்கொண்டு வந்து அவ்விருவர்களையும் மீண்டும் சேர்ந்து வாழ வகை செய்து அருளியது, திருநீலகண்டரின் அதன் பின் வரும் வரலாறு.
---------