Showing posts with label தயிர்சாதம். Show all posts
Showing posts with label தயிர்சாதம். Show all posts

Wednesday, September 24, 2014

தயிர்சாதம் (டே!)

எதெதுக்கோ 'டே (நாள்)' வைத்துக் கொண்டாடும் நாம், தயிர்சாதத்திற்கும் ஒரு டே வைத்துக் கொண்டாடவேண்டாமா?!.  இதை தமிழக முதல்வர் கவனதுக்குக் கொண்டு சென்று, ஒரு 'டே'வை உருவாக்கி, அதை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  ஏனெனில் நாம தான் உலகெங்கும் வியாபித்திருக்கிறோமே!  பத்தாததற்கு வெள்ளையப்பர்கள் பங்குக்கும் தயிரை டப்பா டப்பாவாக உள்ளே தள்ள ஆரம்பித்திருக்கிறார்களே!  'யோக'ர்ட்னு பேர் போட்டதுனாலேயோ என்னவோ, இத்த சாப்பிட்டா யோகா பண்ணதுக்கு சமம்னு நெனச்சுட்டார்களோ என்னவோ!

'இட்லி', 'தயிர்சாதம்' என்றால் நம்மில் பலருக்குப் பிடிப்பதில்லை.  அது ஒரு பழங்கால உணவு என்றும், நம் தகுதிக்கு ஏற்றது அல்ல என்றும் நினைப்பவர் உண்டு.
Photo Credit: Google
இந்த எண்ணிக்கை எனது நண்பர்கள் வட்டத்திலேயே அதிகம்.  பல காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம்.  ஆனால், இவர்கள் இதன் அருமை தெரியாதவர்களே!  பள்ளி காலம் முதல் கல்லூரி வரை பிரம்ம முகூர்த்ததில் உலை வைத்து கதிரவன் வருகைக்கு முன்னரே டப்பா டப்பாவாக எங்களுக்கு கட்டுசாதம் கட்டி அனுப்பும் எனது தாயாரின் கைவண்ணத்தில் வாரத்திற்கு மூனு நாளாவது நம்ம ஹீரோ தயிர் சாதம் இருப்பார்.  இது பல வீடுகளில் நான் கண்டதுண்டு.  தாய்மார்களுக்கு சுலபம் என்றாலும், நம் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும் உணவும் கூட. என்னைப் போல சோறுகட்டிச் செல்லும் கூட்டத்தில், இதுபோல பலரின் மதிய பிரதான உணவு தயிர்சாதம்.

அப்படி என்னதான் இவற்றில் ஈர்ப்பு எனப் பார்த்தால், இவற்றிற்காக தொட்டுக் கொள்ள வைக்கும் பதார்த்தம் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம்.  இட்லிக்கு ஒரு சாம்பார், அவியல், தேங்காய் சட்னி, மிளகாய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, மல்லிச் சட்னி என அடுக்கிக் கொண்டே போவது போல, தயிர் சாதத்திற்கும், மோர் மிளகாய், உருளைக் கிழங்கு மசாலா பொரியல், வாழைக்காய் பொரியல், தக்காளிப் பருப்புப் பச்சடி, வெண்டைக்காய் பச்சடி, சுண்டைக்காய்ப் பச்சடி, பலவகை வற்றல்கள், இது எதுவுமே இல்லை என்றால் ஒரு விரல்நுனி ஊறுகாய்  என கல்யாணவீட்டு மளிகை சிட்டை கணக்கா அடுக்கலாம்.

Photo Credit: Thulasi teacher
வீடுகளில் செய்வது போக தயிர்சாதத்திற்கென பேர் போன (?!) கோயில் உண்டக்கட்டிகளும், உணவகங்களும், நம் நினைவிற்கு வருபவை.  எங்க ஊரு பெருமாள் கோயில் தயிர்சாதம், அப்படியே நெய் வடியும்.  பொங்கலில் போடுவதற்கு பதில் தயிர்சாதத்தில் ஊற்றியது போல இருக்கும்.  கடுகும், உளுந்தும், வரமிளகாயும் போட்டு தாளித்து, அப்படியே ஒரு கை வில்லல் நம் கையில் போடுவார் பெருமாள் கோயில் அர்ச்சகர்.  அப்படியே வழுக்கிட்டுப் போகும் நம் தொண்டைக்குள்.  பிறகும் உள்ளங்கையில் நெய் வடியும்.  இதுபோக சென்னை போன்ற பெருநகர உயர்தர உணவகங்களில், தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டு பலநூறுகள் செலவழிப்போரும் நிறைய உண்டு.

தேச வரையரையின்றி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு தயிர்சாதம்.  அப்பேர்ப்பட்ட தயிர்சாதத்திற்கு டே போடுறோமோ இல்லியோ, இப்ப ஒரு பதிவு போட்டாச்சு :)