Showing posts with label ஸ்ரீகாந்த். Show all posts
Showing posts with label ஸ்ரீகாந்த். Show all posts

Sunday, May 31, 2009

மட்டை தேங்காய் தெரபி

என்னை மறை கழண்ட கேஸ்னு அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. அடிக்கடி டென்ஷன் ஆகற ஆளா இருந்தீங்கன்னா நீங்க கூட இந்த தெரபியை முயற்சி பண்ணலாம். அது என்ன மட்டை தேங்காய் தெரபி ன்னு கேக்கறீங்களா? அதை ஒரு கதை மூலம் உங்களுக்கு சொல்லறேன். தமிழ் சினிமாவில் flash back காமிக்க வட்டமா ஒரு சக்கரம் சுழன்று சுழன்று போகும் பாத்திருக்கீங்களா? இப்போ உங்க மனக்கண்ல அத பாத்துகிட்டே இந்தக் கதையை கேளுங்க. இது ஒரு உண்மை சம்பவம்.

------------------------------------------------------------------------
"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் சமையல் கடையை முடியுங்கோ." பெரியப்பா சொல்லிட்டு பரண் மேல் ஏறி மட்டை தேங்காய்களை இறக்க ஆரம்பித்தார். அப்பா பூஜை அறையில் கணீர்னு ருத்ரம் சொல்லறது கேக்கறது. கடிகாரத்தை பார்த்தேன். இன்னிக்கு தினத்தை விட அப்பா ரொம்ப நேரமா பூஜை பண்ணறா. காரணம் எல்லோருக்கும் தெரியும். அது தான் இன்னும் அரை மணில ஆரம்பிக்கப் போறதே.

"ஸ்கூல் ஹோம்வர்க் எல்லாம் முடிச்சாச்சா? இன்னும் அரை மணியில ஆரம்பிச்சிடும். அப்புறம் உங்க யாரையும் பிடிக்க முடியாது. இப்பவே முடுச்சு வச்சுண்டா உங்களுக்கு தான் நல்லது" அம்மா அங்கலாய்ச்சிண்டே சமையல் அறைக்கு போறா. "இன்னிக்கு மைசூர் பாக் கிண்டிப் பார்ப்போம். சமையலோ சீக்கிரம் முடிஞ்சுடும். என்ன சொல்ற?" பெரியம்மா அம்மாவிடம் கேட்பது காதில் விழுந்தது. "இன்னும் அரை மணியுல இவாள்ளாம் பிசியாயிடுவா. நம்பள யாரும் புடுங்க மாட்டா. அப்போ ஸ்வீட் கிண்டலாம்." அம்மாவும் பெரியம்மாவும் சர்க்கரைப்பாகு எந்த பதத்துல இருக்கணும்னு வாதம் பண்ணறது கோடியாத்து வரைக்கும் கேட்டிருக்கும்.

"வாசல்ல தாழ்பா திறக்கற சத்தம் கேக்கறது. யாருன்னு பாருங்கோ." பெரியப்பா உள் அறையிலேர்ந்து சத்தம் போடறா. எட்டிப் பார்த்தேன். எதிர் ஆத்து மாமா வந்துண்டு இருந்தார். பூஜையை முடிச்சிண்டு அப்பா அப்போ தான் வெளியே வந்தார். "வாங்கோ கோபாலகிருஷ்ணன் சார். பூஜை இப்ப தான் முடிச்சேன். பிரசாதம் எடுத்துக்கோங்கோ." அப்பா தட்டை நீட்டினார். "ஒ இன்னிக்கி ஸ்பெஷல் பூஜையா? வெரி குட் வெரி குட். God is great. கடவுள் துணை நமக்கு இன்னிக்கு ரொம்ப வேணும் சார். இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு. சரியான நேரத்துல எங்காத்துல கரண்ட் போயிடுத்து. மாப்பிள்ளைகள் ரெண்டு பெரும் வேற இதுக்குன்னே இன்னிக்கு வந்திருக்கா." மாமா குரல் கவலையில் கனத்திருந்தது. "அதுக்கென்ன, எல்லாரையும் அழைச்சுண்டு இங்கே வந்துடுங்கோ." அப்பா சொல்ல கூடத்துல நுழைந்த பெரியப்பாவும் ஆமோதித்தார். "இதோ போய் எல்லோரையும் கூட்டிண்டு வந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ் சார்." மாமா வேக வேகமா சொல்லிட்டு கிளம்பினார்.

நாலு நாற்காலியையும் பின்னால் தள்ளி விட்டுட்டு கூடத்தில் மூணு பாயை தரையில் விரித்து போடும் போதே பக்கத்தாத்துலேந்து என் தோழி ஷோபா வந்து சேர்ந்தாள். அடுத்த பத்து நிமிஷத்தில் அப்பா, பெரியப்பா, நான், என் அக்கா, தங்கை, ஷோபா, எதிராத்து மாமா, ரெண்டு அக்காக்கள், அவங்க கணவர்கள், குழந்தைகள்னு கூடத்துல இருபது பேர் ஆஜரானோம். டீவியை ஆன் பண்ணிட்டு பெரியப்பா உட்கார்ந்தார். ரொம்ப டென்ஷனா இருந்தார். இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் மேட்ச் அப்படின்னாலே அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் டென்ஷன் தான்.

டாஸ் ல இந்தியா பேட் செய்ய வேண்டி வந்தது. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் தான் ஆரம்ப மட்டையாளர்கள். ஸ்ரீகாந்த் வழக்கம் போல பெவிலியன்லேந்து வரும் போது அண்ணாந்து சூரியனை பார்த்துண்டே மைதானத்துக்குளே வந்தார். சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அப்பா ஏதோ சுலோகம் முனுமுனுத்துண்டே பூஜை அறைக்குள் போவது தெரிந்தது. ஆட்டம் ஆரம்பிக்கரத்துக்குள்ள இப்படி டென்ஷன் படராறேன்னு நான் நினைக்கரச்சையே எதிர் ஆத்து மாமா "முருகனின் நாமத்தை சொல்லேண்டா; அந்த முகுந்தன் மருகனை வேண்டினேண்டா; சரவண பவனை கூப்பிடடா; அந்த கார்த்திகேயனை கேளேண்டா" அப்படின்னு பாட ஆரம்பிச்சார். பெரிய முருக பக்தர் அவர். சகலத்துக்கும் முருகனை கூப்பிடுவார்.

ஸ்ரீகாந்த் முதல் பந்தில் ஆறு அடித்து அமர்க்களமாக ஆரம்பிக்கிறார். எங்க எல்லோர் முகத்திலேயும் பரம சந்தோஷம். திடீர்னு எதிர் ஆத்து அத்திம்பேர் ஒரு கையளவு வெங்கடாசலபதி படத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து டீவீயில் ஸ்ரீகாந்த் முன் காமிக்கிறார். பாகிஸ்தான் பௌலேர் படம் டீவியில் வந்தவுடன் சடக்குன்னு வெங்கடாச்சலபதி படத்தை மறைச்சுட்டார். ரொம்ப தீவிர கிரிகெட் பிரியர்னு புரிஞ்சிண்டேன். ஸ்ரீகாந்த் இரண்டாவது பந்தை சுழன்று அடித்து நாலு ரன்கள் குவித்தார். திரும்பிப் பார்த்தேன். பெரியப்பா துண்டால் நெத்தி வேர்வையை துடைக்கறது தெரிந்தது. அடுத்த பந்தை தட்டி விட்டுட்டு ஒரு ரன் ஓட பார்த்து ரன் அவுட் ஆகத் தெரிந்தார் ஸ்ரீகாந்த். நல்ல காலம் மயிரிழையில் தப்பித்தார். டென்ஷனில் முகம் சிவக்க எழுந்த பெரியப்பா தனக்கு தெரிந்த இரண்டு கெட்ட வார்த்தையால் ஸ்ரீகாந்தை திட்டியபடி வேக வேகமாக சமையல் அறைக்கு சென்றார். பரணில் இருந்து காலையில் இறக்கிய மட்டை தேங்காய் ரெண்டை எடுத்துண்டு கொல்லைபுரத்துக்கு சென்று வெறி வந்தது போல அரிவாளால் தேங்காய் உரிக்க ஆரம்பித்தார். சமையல் அறை ஜன்னல் வழியா பார்த்த அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம். ராத்திரி அவியலுக்கு தேங்காய் இல்லைன்னு கவலையா இருந்தா. இந்த கிரிகெட் மேட்ச் முடியரதுக்குளே பத்து தேங்கயாவது நிச்சயம் உரிச்சிடுவான்னு சந்தோஷத்துல வேலையை கவனிக்க போனா. தேங்காய் உரிச்சு முடிச்சதும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த பெரியப்பா மறுபடியும் கூடத்துக்கு சென்று உட்கார்ந்தார்.

-----------------------------------------------

அவ்ளோ தாங்க கதை. மட்டை தேங்காய் தெரபி புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா பரவாயில்லை விட்டுருங்க. அப்படி ஒண்ணும் தலை போற விஷயமில்லை.

-மீனா சங்கரன்