Showing posts with label பண்ருட்டி. Show all posts
Showing posts with label பண்ருட்டி. Show all posts

Saturday, June 04, 2022

கடிலக்கரையினிலே - பண்ருட்டி பலாச்சுளைகள் - 2

பண்ருட்டியில் எங்கள் வீட்டில் எப்போதும் நண்பர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பக்கத்து ஊர்களான கடலூர், விழுப்புரத்தில் கலைக்கல்லூரிகள் இருந்தன. தினமும் மாணவர்கள் ரயிலில் போவார்கள். விழுப்புரத்திலாவது கல்லூரி ரயில்நிலையத்துக்கு அருகில் இருந்தது. கடலூரில் ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் வேறு போகவேண்டும். இருந்தாலும் மாணவர்களுக்கு ரயில் சீசன் பாஸ் சலுகையில் கிடைப்பதால் அனைவரும் ரயிலில்தான் போவார்கள். பண்ருட்டியில் இருந்து தினமும் சிதம்பரத்தில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கு போன மாணவர்களும் உண்டு.


அண்ணன்கள் வீட்டில் இருக்கும்போது கடலூர் மாணவர்கள் காலையில் வீட்டுக்கு வந்துவிட்டு ரயிலடிக்குப் போவார்கள். அதில் ஒருவர்தான்…


ராஜா!


ராஜா என்கிற முருகன். வீட்டிற்கு ஒரே பிள்ளை. அம்மா செல்லம் என்று நினைவு. என்னுடைய நினைவுகளில் தங்கியது இவரின் ஒரு வினோத பழக்கம். நடந்து வரும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும் கைவிரல்களை நீட்டி மடக்கிக் கொண்டே இருப்பார். நான் சிலநாள் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏன் அப்படி செய்கிறார் என்று மண்டையை உடைத்துக் கொண்டேன். ஒரு நாள் அவரிடமே கேட்டு விட்டேன். என்ன செய்கிறீர்கள் விரல்களை? 


டைப் அடிக்கறேண்டா!


டைப்பா!!!???


ஆமாம்! அப்போதுதான் டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்திருந்தார். எழுத்துக்கள் இடம் பழகும்வரை மனசுக்குள்ளே ஏதாவது  வார்த்தை சொல்லி அதை எப்படி டைப் செய்வது என்று பழகிக் கொள் என்று டைப்பிங் வாத்தியார் உபதேசம் செய்தாராம். இவர் அதற்கு ஒரு படி மேலே போய், நாமெல்லாம் சிறுவயதில் காற்றில் கிடார் வாசிப்போமே, அது மாதிரி காற்றில் டைப் அடித்துக் கொண்டிருந்தார். நடக்கும்போது, உட்கார்ந்திருக்கும்போது  காதிலோ கண்ணிலோ விழும் சொற்களை காற்றில் டைப் அடித்துக் கொண்டே இருப்பார். 


ராஜா என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது சங்கராபரணம். அதில் ஆண்டாளு என்ற சிறுமி திண்ணையில் ஒரு பாட்டு வாத்தியாரிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் காட்சி வரும். அந்த வாத்தியார் கர்நாடகமாக இன்னும் பாடிக் கொண்டிராமல் நவீனமாக பாடவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். அப்போது வீதியில் வரும் சங்கர சாஸ்திரி வாத்தியாரை திட்டிவிட்டுப் போவார். அந்த காட்சி ராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. எப்போது வந்தாலும் சங்கராபரணம் கேஸட்டில் அந்த இடத்திற்கு தள்ளி கேட்போம். அதை கேட்பதைவிட அந்தக் காட்சியை ராஜா ரசிப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்பது போல் ஒரு பரவசத்தில் இருப்பார். சிரிப்பை அடக்க முயல்வார். அதுவும் அந்த "ராக்கெட்லு ஜாக்கெட்லு ஜெட்லு" வரும்போது அடக்கவே முடியாது. அப்படி சிரிப்பார்.  பிறகு வாத்தியார் "புரோச்சேவா ரெவருரா"வை பிரித்து மேயும்போதும் தாங்க முடியாமல் சிரிப்பார். அந்த காட்சி முடிந்தவுடன் கேஸட்டை நிறுத்தி விடுவோம். அடுத்த சில நிமிஷங்கள் ராஜா தெரிந்தவரை அந்த டயலாக் எல்லாம் சொல்லிச் சொல்லி சிரிப்பார். தவறாமல் "ராக்கெட்லு ஜாக்கெட்லு" உண்டு. வீடே அதிரும்.


ராஜா சில தெலுங்கு ஜோக்குகள் சொல்வார். ஒரு தமிழன் ஆந்திராவில் ரயிலில் போய்க் கொண்டிருந்தானாம். ஒரு இடத்தில் ரயில் நின்றவுடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனிடம் தமிழில் "இது என்ன ஊர்" என்று கேட்டானாம். அவன் கேட்டது புரியாமல் "ஏமண்டி" என்றானாம். ஓஹோ அப்படியா, நன்றி! அடுத்த ஊர் வந்தவுடன், அதே கேள்வி. அவனும் "ஏமண்டி" என்று பதில். சரி அது மேல் ஏமண்டி, இது கீழ் ஏமண்டி போல இருக்கும் என்று அமைதியாகி விட்டான். அடுத்த ஊரில் அதே நடந்தது. தமிழனுக்கு வந்ததே கொலைவெறி. என்னடா நானும் பாக்கறேன், ஒவ்வொரு ஊரிலும் ஒரே பெயரை சொல்லி ஏமாத்தற, என்ன பாத்தா நக்கலா தெரியுதான்னு அடிக்கப் போனானாம். பதறிப் போன தெலுங்கன் கொட்டகா, கொட்டகா என்றானாம். ஓ - இந்த ஊர் கொட்டகாவா - ஒழுங்கா சொல்ல வேண்டியதுதானே என்று அமைதியானானாம்.


ராஜாவின் வீட்டருகில் ஒரு இளம் தம்பதி குடியிருந்தார்கள். அந்த தம்பதிகளின் சண்டை தெருவில் பிரசித்தம். ஒவ்வொரு முறை வரும்போதும் அன்றைய சண்டை குறித்து ராஜா கதை சொல்வார். அதில் ஒரு நாள் நினைவில் நிற்கிறது. அன்று சண்டை அதிகமாகி ஒரே களபரம். சாமான்கள் எல்லாம் உருண்டது. திடீரென கதவைத் திறந்து கணவன் எடுத்தார் ஓட்டம். யாரோ எதோ காரணம் சொல்லி உள்ளே போய் பார்த்தால். நிறைய தட்டு பாத்திரம் எல்லாம் இரைந்து கிடந்தன. அனைத்துக்கும் மேலே - சுவற்றில் டால்டாவோடு ஒட்டிக் கொண்டிருந்த கரண்டி! 


இப்போது பண்ருட்டி வாட்சப் குழுவிலும் ராஜா கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Sunday, May 01, 2022

பண்ருட்டி பலாச்சுளைகள் - 1

 

பண்ருட்டியில் எங்கள் வீட்டைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் எழுதியதில் இருந்து ஒரு யோசனை. நண்பர்களைப் பற்றி எழுதினால் என்ன? தேவதைகள் என்ற தலைப்பில் ஒரு ஶ்ரீரங்கத்துக்காரர் எழுதிவிட்டார். அங்கு கோவில்கள் அதிகம் என்பதால் இருக்கலாம். எனக்கு பண்ருட்டியில் பலா, முந்திரியைத் தாண்டி வேறு என்ன தோன்றப் போகிறது. "பண்ருட்டி பலாச்சுளைகள்" என்கிற தலைப்பில் பண்ருட்டி நண்பர்களைக் குறித்து தொடரப் போகிறேன்!


குலாம்!


இந்தப் பெயரைக் கேட்டாலே என் நண்பர்கள் அனைவர்கள் முகத்திலும் ஒரு புன்சிரிப்பாவது வராமல் இருக்காது. அந்த அளவுக்கு அனைவருக்கும் நண்பன், சிரிக்க வைப்பவன். எப்போதும் முகத்தில் சிரிப்புதான். வகுப்பின் கோமாளி! அவனை கோபமாகவோ, வருத்தமாகவோ பார்த்ததாக நினைவே இல்லை. 


எல்லா ஆசிரியர்களையும் வம்புக்கிழுப்பான். சட்டையின் மேல் பித்தான்கள் போட்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்திய ஒரு ஆசிரியர் பித்தான்களை திறந்து போட்டிருக்கும் மாணவர்களை அடித்து பித்தான்களை போடச் சொல்லுவார். அவரே இவனை அருகில் அழைத்து பித்தான்களை போட்டுவிட்டிருக்கிறார். ஆங்கில வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்கள் தமிழ் பாடம் வராமல் ததிங்கணத்தோம் போடுவது சகஜம். ஆனால் இவன் ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியரிடம் ஏழாவது எட்டாவது வகுப்பிற்குமேல் தமிழ் பாடம் தேவையில்லை என்று ஒரு நாள் வாதம் செய்தான். எங்களுக்குத்தான் தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமே இனிமேல் எதற்கு என்று. ஆசிரியரும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். கடைசியில் உனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்தானே. ஞமலி என்றால் என்ன என்று கேட்டார். இவன் தெரியாது சார், அப்படி என்றால் என்ன என்றான். நாய் என்றார். இவன் - நான் நாய் என்று சொல்லிவிட்டுப் போகிறேன், எதற்கு ஞமலி, கிமலி எல்லாம் என்றான். வகுப்பே அதிர்ந்தது. ஆசிரியருக்கு என்ன சொல்வதே என்று தெரியவில்லை.


ஒன்பதாவது படிக்கும்போது ஒரு நாள் ஆங்கில ஆசிரியரை ரொம்பவே சீண்டிவிட்டான். கோபம் வந்து வேப்ப மரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இவனை போட்டு விளாசி விட்டார். இவனுக்கு நீண்ட காது - புத்தர் காதன் என்று ஒரு பெயர்கூட உண்டு - அதை பிடித்து இழுத்து அடித்ததால், காதே கொஞ்சம் பிய்ந்தமாதிரி ரத்தம் வேறு. பையை எடுத்துக் கொண்டு உங்களை பாத்துக்கறேன் சார் என்று சவால்விட்டு கிளம்பி போய்விட்டான். ஆசிரியர் சினம் தணிந்து உட்கார்ந்தார். குலாம் என்ன பண்ணப் போகிறானோ என்று கொஞ்சம் பயந்துவிட்டார். பையன்கள் வேறு - சார், அவனுக்கு பனங்காட்டுத் தெருவில் நிறைய நண்பர்கள் உண்டு என்று அவர் பீதியை இன்னும் கொஞ்சம் கிளப்பிவிட்டார்கள். "வீரர்கள்" நிறைந்த தெரு, அவன் வீட்டருகில் இருக்கும் பனங்காட்டுத் தெரு. அவர் அமைதியாக பாடம் நடத்தத் தொடங்கினாலும், புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்கிக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் என்ன ஆகப் போகிறதோ என்று காத்திருந்தோம். மதிய உணவு இடைவேளைப் பிறகு அழகாக மாப்பிள்ளை மாதிரி முகம் கழுவி பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தான். எங்கடா போனே என்று கேட்டோம். நான் வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போட்டு, மதியம் சாப்பிட்டு வந்தேன் என்று சிரித்தான். சும்மா உதார் விட்டிருக்கிறான்.  


பத்தாவது படிக்கும்போது தமிழ் ஆசிரியரை படாத பாடு படுத்தினான். இவனை ஏதோ கேள்வி கேட்டு இவன் பதில் தப்பாகச் சொன்னான். இவன் அருகில் வரலாம் என்று இருக்கையில் இருந்து ஆசிரியர் எழுந்தார். கிட்ட வராதீங்க சார், வந்தா அடிப்பீங்க என்றான். இல்லடா, நான் வந்து நீசொன்னதை திருத்தி சொல்லித் தறேன் என்றார். அதற்கு குலாமின் பதில்: அங்கிருந்தே திருத்துங்க சார்! மேஜை மேல் ஏறி தாவித் தாவி அடிக்கு தப்புவதெல்லாம் சகஜமாக நடக்கும். பத்தாவது பரீட்சையில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தான். ஒவ்வொரு நாளும் வரும் கண்காணிப்பாளரிடம் எங்களுக்கு இந்தப் பாடம் நடத்த ஆசிரியரே இல்லை, அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று தயங்காமல் ரீல் விடுவான். கொஞ்சம் சம்மதம் மாதிரி தெரிந்த அன்றெல்லாம் அவ்வளவுதான் - அப்படியே என் பதில்களை ஜெராக்ஸ் எடுத்தான். ஒரே சிரிப்பும், கும்மாளமும். பத்தாவது பரீட்சை மாதிரியே இருந்ததில்லை இவன் செய்த கலாட்டாவினால்.


பள்ளியில் இவ்வளவு வால்தனம் பண்ணுகிறவனை அவர்கள் கடையில் பார்த்தால் நம்பவே முடியாது. அண்ணனுக்கு பயந்தவன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவி போல் பவ்யமாக உட்கார்ந்திருப்பான். மாலையில் மளிகை பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப் போவான். எதாவது ஒரு சினிமாவில் நுழைந்து கொஞ்சம் நேரம் படம் பார்ப்பான். "அலைகள் ஓய்வதில்லை" ஓடும்போது இது தினம் நடந்தது.  எங்கள் வீட்டுப் பக்கம் வசூலிக்க வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவான். என்னவோ என் ஒரு அண்ணன் மேல் அதீத பாசம். அவனை அடித்துக் கொண்டோ கிள்ளிக்கொண்டேதான் இருப்பான். அண்ணனும் பொறுத்துக் கொள்வான். இவனை கோபித்து அடிக்கக்கூட மனம் வராது. செய்வதை எல்லாம் சிரித்துக் கொண்டே செய்பவன்.  இவன் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ரொம்பவே அதிர்பவர் எங்கள் அப்பாதான். ஏனென்றால் அவனை அவர்கள் கடையில் எப்படி இருப்பான் என்று பார்த்தவர். 


இவன் பயன்படுத்தும் சில பல சொற்றொடர்கள் என் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம். இன்றும் பள்ளி நண்பர்களுடன் பேசினால், குலாமின் சொற்கள் இல்லாமல் பேச்சு முடியாது.


அப்படி இருந்த குலாம் எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுத்தான். "குலாம் போயிட்டாண்டா" என்று சிங்கப்பூரில் இருந்து அழைத்து  ரஃபி அழுதுகொண்டே சொன்னதை என்றும் மறக்க முடியாது. 

Sunday, May 05, 2019

கடிலக்கரையினிலே... புரூக் பாண்ட்

சென்ற வாரம் கடைக்கு போயிருந்தபோது ஒரு புதிய தேநீர் பொட்டல வகையைப் பார்த்தேன். நமக்கு புதியது. அதில் தேநீர் போட்டு அருந்தினால் அப்படியே நம்ம ஊர் டீக்கடை அனுபவம் வருகிறது. அதைவிட விசேஷம் அதன் வாசம்.  டப்பாவை திறந்து முகர்ந்தால்...... ஜிவ்வ்வ்வ்வ்வ்வென்று அடுத்த கணம் பண்ருட்டியில் என் அப்பாவின் டிப்போ!

என் அப்பா புரூக்பாண்ட் கம்பெனியின் பண்ருட்டி சேல்ஸ்மேன். ஊரில் அவர் பெயர் சொன்னால்கூட நிறைய பேருக்கு தெரியாது. புரூக்பாண்ட்காரர்தான்! மெட்ராஸ் ரோட்டில் ரயில்வே கேட்டுக்கு அருகில் இருந்தது அப்பாவின் டிப்போ. டிப்போவில் எங்கு பார்த்தாலும் பெட்டி பெட்டியாக டீயும் காபியும் இருக்கும். ஆனால் எண்ணிக்கை அதிகமானதாலோ என்னவோ டீ வாசம்தான் ஓங்கி இருக்கும். உள்ளே நுழைந்தாலே டீ வாசம்தான் மூக்கைத் துளைக்கும்....

அப்பாவின் இருக்கைக்கு மேலே ஒரு மின் விசிறி. கொஞ்சம் கவனித்தால்தான் தெரியும். அது ஒரு மேசை மின் விசிறி! உஷா ப்ராண்ட். சாதாரண மின்விசிறி கூட போட இடமில்லாததால், அப்பா மேசை மின்விசிறியையே ஒரு பலகை அடித்து மாட்டியிருந்தார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அந்த மின்விசிறியையும் கழட்டிக் கொண்டுவந்து விட்டார் - அவனுங்க எங்க குடுத்தாங்க. நான் என் ஃபேனைத்தான் போட்டேன்.  அதனுடைய கனத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அப்பா - இதுக்கு நேர் கீழ எப்படி இவ்வளவு நாள் தைரியமா உக்காந்த? டேய் அது ஷாப்ஜான் மாட்டினதுடா. அவ்ள சீக்கிரம் விழுந்துடுமா? ஒரு தடவை இப்படித்தான் டீ டிஸ்டிரிபியூட் செய்யும்போது ஆத்துல தண்ணி நிறைய வந்துடுச்சி. ஷாப்ஜான் என்னை தோளில் தூக்கிட்டு போனான், தெரியுமா? அந்தக் காலத்து லாயல்டி இரண்டு பக்கமும் அதிகம். ஷாப்ஜான் அப்போதே புதுவைக்கு வேலை மாறி சென்று புரூக்பாண்ட் வேன் டிரைவராக முன்னேறியிருந்தார். எப்போதாவது அப்பாவைப் பார்க்க வருவார். ராமரின் முன்னே அனுமன் மாதிரி அவ்வளவு பயபக்தியுடன் நிற்பார்.

அப்பாவின் டிப்போ என் துவக்கப்பள்ளியிலிருந்து வரும் வழியில் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது நண்பர்கள் சில சமயம் நச்சரிப்பார்கள் - டேய் அட்டை போடனும் பிரௌன் பேப்பர் வாங்கி குடுடா....  டீ பொட்டலங்கள் வரும் பெட்டியில் உள்ளே ஒரு பழுப்பு நிறத்தில் மிகவும் கனமான காகிதம் இருக்கும். பாட புத்தகங்களுக்கும், நோட்டுப் புத்தகங்களுக்கும் அட்டை போட மிகவும் வசதியானது. அதை அட்டையாக போட்டால்  எடை கூடிவிடும் அவ்வளவு கனம். புத்தகங்கள் புல்லட் ஃப்ரூப் ரேஞ்சுக்கு பாதுகாப்பாக இருக்கும். சில ஆசிரியர்கள் படுத்துவார்கள். கட்டுரை நோட்டுகளுக்கு கடையில் வாங்கிய பிரௌன் பேப்பர்தான் போட வேண்டுமென்பார்கள். இந்த அட்டையை என் அண்ணன் அன்னிய செலாவணி அளவுக்கு பண்டமாற்றுக்கு பயன்படுத்துவான். இதற்கு ஒரு அட்டை, அதற்கு இரண்டு அட்டை என்று அப்பாவுக்கு தெரியாமல் ஒரு கள்ளச் சந்தையையே உருவாக்கியிருந்தான். அந்த அட்டை மீது அப்பாவுக்கும் அபார நம்பிக்கை. அந்த அட்டையை மடித்துத் தைத்து ஒரு போட்டோ ஆல்பமே செய்திருந்தார், போட்டோ எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் என்று. ஆனால் நாளாக நாளாக அந்த அட்டையின் நடுவே இருக்கும் தார் நிறத்தில் இருக்கும் கோந்து ஊறி வெளியே வரும். அப்பாவின் பழைய போட்டோக்களில் எல்லாம் அந்த சாயம் ஏறி வீணாகியிருக்கிறது.

அப்பா மாதாந்திர விற்பனை டார்கெட் முறியடிப்பதில் மன்னன். டிவிஷனிலேயே நாந்தான் நிறைய தடவை டார்கெட் பீட் செய்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லுவார். இருக்கும் அதே ஊர் சுற்றுவட்டாரங்களில் எப்படி  மேலும் மேலும் அதிகமாக விற்க முடிகிறது என்பது எங்களுக்கு பெரும் புதிர். பலமுறை இவருடைய ஸ்டாக்கை தீர்த்துவிட்டு பக்கத்து ஊர் டிப்போக்களில் இருந்து தருவிப்பார்.

புரூக்பாண்ட் சின்னம் பொறித்த டைகள் (ties) இரண்டை பொக்கிஷமாக வைத்திருந்தார்.  விற்பனை மன்னராக இருந்ததால் நிறைய பரிசுகள் அடுக்கு டிபன் கேரியர் போன்ற பரிசுகள்.  25 ஆண்டுகள் புரூக்பாண்ட் சேவைக்காக ஒரு கனமான் வெள்ளித்தட்டு, தம்ள்ர் எல்லாம் காத்ரேஜ் பீரோவின் லாக்கரில் இருக்கும். அந்த இரண்டு டைகளுடன். புரூக்பாண்டே உலகமாக வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பான் என்று ஒரு  காபி வந்ததாம்.. அந்த காபி ஒரு நல்ல தரமான ப்ளாஸ்டிக் டப்பாவில் வரும். வீட்டில் நிறைய பருப்பு பாத்திரங்கள் அந்த பான் டப்பாவில்தான். இந்த ஆண்டு ஊருக்குப் போயிருந்தபோதும் பார்த்தேன். இன்னும் சில டப்பாக்கள் இருக்கின்றன.  புரூ காபியின் மணம் சொல்லவே தேவையில்லை.  இங்கே நான்கூட புரூவில் இருந்து மாறிவிட்டேன். ஆனால் நம் முன்னாள் சங்கத் தலைவர் சத்தியவாகீஸ்வரன் போன்ற புரூ பக்தர்கள் நிறைய இருக்கிறார்கள்.  சத்யா வீட்டிற்கு எப்போது போனாலும் புரூ போட்டு அழகாக ஆற்றிக் கொடுப்பார்.
அப்போது புரூக்பாண்டின் எதிரி லிப்டன்! லிப்டன் சேல்ஸ்மேன் பாப்பையாவும் அப்பாவும் நண்பர்கள்தான். நாங்கள் என்னவோ இருவரும் எதிரிகள் போல பேசிக்கொள்வோம். அந்த வீட்டு பிள்ளைகளைப் பார்த்தால் முறைத்துக் கொண்டு போவோம்.

கிரீன் லேபில், ரெட் லேபில், த்ரீ ரோஸஸ் என்று பல. கிரீன்லேபில் விலை குறைந்தது என நினைவு. டீக்கடைகளில் எல்லாம் அதுதான் இருக்கும். எனக்கு த்ரீ ரோஸஸ் பிராண்ட் வெளிவந்ததுகூட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் வென்னீரில் தோய்க்கும் பொட்டலங்களும் வந்தது. அப்பா அதை ச்ற்றும் பிடிக்காமல்தான் விற்பனை செய்ய முயன்றார். யாரும் அதை நம்பவில்லை. சும்மா வென்னீர்ல இத போட்டா போதுமா சார்? அவ்ள ஸ்ட்ராங்கா வருமா?? போன்ற கேள்விகள் நிறைய…  இலவசமாகக்கூட கொடுத்துப் பார்த்தார்கள். கி.ரா. அந்தக் காலத்தில் மக்களை கருப்பட்டி காபியில் இருந்து மாற்ற எவ்வளவு ததிங்கினத்தோம் போட வேண்டியிருந்தது என்று ஒருமுறை எழுதியிருந்தார்.

அப்பா டீ எப்படி போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தண்ணீர் கொதிக்கவைத்து அதை பாத்திரத்தில் வைத்திருக்கும் டீயில் சேர்க்க வேண்டும். டீயை நேராக கொதிக்க விடக்கூடாது. பிறகு வடிகட்டி அதில் பால் சேர்க்க வேண்டும். பின்னாளில் அண்ணன் வீட்டில் சில நாட்கள் இருந்துவிட்டு வந்தபோது என்னடா உன் அண்ணி பால், டீ எல்லாத்தையும் ஒண்ணா போட்டு கொதிக்கவச்சி குடுக்கறா என்று ஆதங்கத்துடன் சொன்னார். இப்போ எல்லாம் அப்படித்தாம்பா, யாருக்கு நேரம் இருக்கு என்று சமாதானப்படுத்தினேன்.  அமெரிக்கா வந்திருந்தபோது வெளியே காபி வாங்கினோம். என்னடா டிகாக்‌ஷன் மட்டும் கொடுக்கிறான் என்றார் அப்பா. நாம்தான் எல்லாம் கலக்கிக்கனும்பா என்று சர்க்கரை, பால் சேர்த்து கலந்து கொடுத்தேன். அப்பறம் இவனுங்க எதுக்கு இருக்கிறானுங்க என்றார். நல்லகேள்விதான்.

பின்னாளில் அப்பாவின் விற்பனையில் சம்பந்தமே இல்லாமல் ஸ்விஷ் ப்ளேட் சேர்க்கப்பட்டது. இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தது என் அண்ணன் மட்டுமே. புது பிராண்ட் என்பதால் வண்ண வண்ண போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் எல்லாம் அவன் கள்ளச் சந்தையை மேம்படுத்தின.

பின்னாளில் அப்பா ஓய்வு பெற சில ஆண்டுகளே இருந்த போது ஒரு கீழ்நிலை பணியாளர் பிரச்சினையால் டிப்போவை மூடி அப்பாவுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விட்டார்கள். கம்பெனியின் லாயல்டி அவ்வளவுதான். அப்பா மலை போல நம்பியிருந்த யூனியனும் அந்த சமயத்தில் கைவிட்டு விட்டது.

இப்போது அந்த டிப்போ சேல்ஸ்மேன் மூலமான நேரடி விற்பனைமுறையே மாறி ஏஜென்சிகள் வந்து விட்டன. அந்தக் காலத்தில் புரூக்பாண்ட் சொந்த டீ எஸ்டேட்டுகளில்  வளர்ப்பதில் இருந்து விற்பனைவரை எல்லாமே செய்து கொண்டிருந்தது. இப்போது அந்த நிறுவனமே இல்லை என்று நினைக்கிறேன். ஒரு சகாப்தமே முடிந்த மாதிரி இருக்கிறது. அப்பாவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இந்தியாவில் இப்போது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், புரூக்பாண்ட் லிப்டன் இரண்டையுமே விற்கிறது. ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாதது அது. இன்னும் சில நாட்களில் ஆப்பிள் கைபேசிகளும் சாம்சங் கைபேசிகளும் ஒரே நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்!!??

Wednesday, February 15, 2017

கடிலக்கரையினிலே - கொய்யா(மரத்து)ல...


ராட்டடூயி படத்தில் ஒரு காட்சி வரும். உணவு விடுதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரு உணவு விமர்சகர் ஒரு கரண்டி உணவை எடுத்து வாயில் வைத்து மெல்லுவார். அப்படியே அது அவரை சிறு வயதில் அம்மா சமைத்த சாப்பாட்டில் கொண்டு விட்டுவிடும். அதைப்போல எனக்கு இந்த வாரம் நேர்ந்தது. வால்மார்ட்டில் கொய்யாப்பழங்கள் பார்த்தேன். ஒரு டப்பாவில் டஜன் வைத்திருந்தார்கள். சாப்பிட்டு நாளாயிற்றே என்று வாங்கியிருந்தேன்.

வீட்டுக்கு  வந்து அதில் ஒன்றை எடுத்துக் கடித்தேன்....  ஜிவ்வென்று அப்படியே பண்ருட்டி எதிர் வீட்டு தோட்டத்து கொய்யா மரத்துக்கு டைம் டிராவல்! அந்த செங்காயின் மணமும், சுவையும் அந்த நாளுக்கு கொண்டு சென்று விட்டது. கடைகளில் எப்போதோ பறிக்கப்பட்டு பழுத்த கொய்யாக்களை தின்று அந்த சுவையும் மணமும் மறந்தே போய் விட்டது.

பண்ருட்டியில் எதிர் வீடு ஒரு ரயில்வே காலனி வீடு. வீட்டை சுற்றி பெரிய தோட்டம். முருங்கை, மருதாணி,ஆமணக்கு, காய்கறிகள் என பலவிதமான மரஞ்செடிகொடிகள். அவரை,பாகற்காய் போன்ற கொடிகள் தினமும் படர்ந்து வேகமாக வளர்வதை கண்டு அதிசயித்திருக்கிறேன். வெண்டை, கத்திரி, சுண்டை என்று பலவும் உண்டு. அண்மையில் ஒருவர் கத்திரி செடியில் வளருமா கொடியில் வளருமா என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

அந்த தோட்டத்தில் மிகவும் பிடித்தது கொய்யா மரம். அவ்வளவு பெரிய மரம் கூட கிடையாது. உங்களுக்கு கொய்யாமரம் பற்றி தெரியுமா? மிகவும் வலுவான மரம். சிறிய கிளையாக இருந்தாலும் வழுவழு என்று வலிமையாக இருக்கும். இந்த ஊரில் கிரேப் மர்டில் என்று ஒரு புதரா மரமா என்று குழப்பும் ஒரு மரம் உண்டு. அதன் கிளைகளைப் பார்க்கும்போதெல்லாம் கொய்யா மரம்தான் நினைவுக்கு வரும்.

அந்த வீட்டில் மூன்று சகோதரர்கள் - கண்ணன், ரவி, பாபு. சுருக்கி கண்ராவி பாபு என்போம்! கண்ணன் என்னைவிட ஒரு வயது சிறியவன், ரவி ஒரு வயது பெரியவன், பாபு என்னும் பாலகிருஷ்ணன் இன்னும் சற்று மூத்தவன். எங்கள் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் பாபுதான். கோடைக்காலங்கள் நிறைய அங்கேதான் கழித்தேன். அவர்கள் விளையாட்டிலும் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அப்பா எங்களுக்கு நிறைய விளையாட்டுப் போட்டி நடத்துவார். ஹை ஜம்ப், லாங் ஜம்ப், கிட்டிப்புள் எல்லாம் அங்கேதான்.

கொய்யா மரத்தில் நன்றாக லூட்டி அடிப்போம். கொய்யாக்காய்கள் கொஞ்சம்கூட வளரவே விடமாட்டோம். கொஞ்சம் நெல்லிக்காய் அளவு தாண்டியதும் அம்பேல். பழுக்காத காய்கள் நிறைய தின்றதால்தானோ என்னவோ வால்மார்ட்டின் செங்காய்கள் அந்த சுவையை நினைவூட்டின. சிறிய கிளைகள் உடைந்துவிடும் என்ற பயம் இருந்தாலும் ஒரு கிளை கூட நாங்கள் ஏறி முறிந்ததாக நினைவில்லை. மேல், கீழ் கிளைகளில் நின்று கொண்டு மரமே அதிரும் அளவு குதித்து கிளைகளை ஆட்டி விளையாடுவோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சில பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மேமான்ட் பார்க் போயிருந்தேன். அங்கே கழுகுகள் இருக்கும் இடத்திற்கு எதிரில் ஒரு மேடான பகுதி இருக்கிறது. அங்கே ஏறினால் முந்திரி மரம் மாதிரி தரையில் அடர்ந்து பரந்து வளர்ந்த ஒரு மேக்னோலியா மரம் இருக்கிறது. அதனுள் போய் பிள்ளைகள் மேலே ஏறி லூட்டி அடித்தார்கள். ஒரு பிள்ளையை என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. அவ்வளவு மேலே ஏறியிருந்தான்.


https://youtu.be/7cRpWwWJFD4

https://www.youtube.com/watch?v=GYpDXZ2iZuQ



Wednesday, August 05, 2015

கடிலக்கரையினிலே... ரெண்டாவது ஈ

குள்ளக் குள்ளனே
குண்டு வயிறனே
வெள்ளிக் கொம்பனே
விநாயக மூர்த்தியே!

முத்தையர் பள்ளியில் 'ரெண்டாவது ஈ' வாத்தியார் சொல்லிக் கொடுத்தது. இன்றும் எந்த  பிள்ளையார் சன்னிதியில் நின்றாலும் மனதுக்குள் சொல்லும் பாட்டு.  எங்காவது உனக்கு பிடித்த குருவை நினைத்துக் கொள் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது தங்கராசு வாத்தியார்தான். முத்தையர் பள்ளியில் ஆசிரியர்களை பெயர் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. ரெண்டாவது ஈ வாத்தியார், மூனாவது சி டீச்சர், நாலாவது டீ வாத்தியார் இப்படித்தான். இங்கே கிண்டர்கார்டனில் பிள்ளைகள் மிஸஸ் வாட்ஸன் என்று அழைப்பதை பார்த்து அதிர்ந்தவன் நான். இன்றும் அவசரத்தில் பெயர் மறந்து 'உங்க கணக்கு சார்' என்று என் மனைவி சொல்லும்போது பிள்ளைகள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். 

நான் படிக்கும்போது பண்ருட்டியில் சில ஆரம்பப் பள்ளிகள்தான் இருந்தன. ஊருக்கு கிழக்குப் பக்கம் இருப்பவர்கள் முத்தையர் பள்ளியில் - முத்தைஸ்கூல்! ஊருக்கு மேற்குப் பக்கம் இருப்பவர்கள் ஏ.வி. ஸ்கூலில். நானும், நம் வெங்கட் செட்டியார் மாமனாரும் படித்தது முத்தைஸ்கூலில். ஒரே சமயத்தில் அல்ல. கான்வென்டில் படிக்க ஆசைப்படுபவர்கள்  பாலவிஹார் ஆங்கிலப் பள்ளியில் அல்லது மஹேஸ்வரி நர்சரியில் காசு கட்டிப் படிப்பார்கள். இன்னும் சில மிகவும் சின்ன துவக்கப் பள்ளிகள் இருந்தன. மணிவாத்தியார் ஸ்கூல், நகராட்சிப் பள்ளி... நானும் மஹேஸ்வரியில்தான் ஆரம்பித்தேன். அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் கிடையாது, அங்கே படித்தால் ஹைஸ்கூல் போக முடியாது என்று கிளம்பிய புரளியால் அப்பா என்னை முத்தைஸ்கூலுக்கு மாற்றி விட்டார். கான்வெண்டில் தொடர்ந்திருந்தால் இந்நேரத்துக்கு முதல்வர் ஆகியிருக்கலாம். விதி!

முத்தையர் பள்ளியில் ஒன்னாங்கிளாஸில் இருந்து எட்டாவது வரை உண்டு. ஆனால்  வெகுசிலர்தான் எட்டாவது வரை முத்தையரிலும் ஏவி ஸ்கூலிலும் தொடர்வார்கள். மற்றவர்கள் ஹைஸ்கூலுக்கு மாறி விடுவார்கள். 

'ரெண்டாவது ஈ'க்கு வருவோம். ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டு தமிழ்ப் பள்ளிக்கு வரும்போது நிறைய மாற்றங்கள்.  தரையில் உட்காருவது,  இன்னமும் சிலேட்டில் எழுதுவது, மதிய உணவு மற்ற வகுப்பு, தெருத் தோழர்களோடு கும்பல் கும்பலாக மாந்தோப்பில் உட்கார்ந்து சாப்பிடுவது, மாந்தோப்பை கண்காணிக்கும் 'சோவை'க்கு தெரியாமல் மாங்காய் அடிப்பது, லேட்டாய் ப்ரேயருக்கு வந்தால் டிரில் மாஸ்டரிடம் அடி வாங்குவது,  மதிய உணவுத் திட்டத்தில்(பெருந்தலைவருடைய திட்டம், புரட்சித் தலைவருடையது அல்ல) சாப்பிட்டுவிட்டு சுத்தம் செய்யாமல் போயிருப்பார்கள் - நம்முடைய இடத்தில் அந்த கோதுமை சாதப்பருக்கைகளை சுத்தம் செய்வது, கரியும் கோவையிலையும் கலந்து போர்டுக்கு கரி பூசுவது, மணியடித்தவுடன் பழி வாங்க வெளியே காத்திருக்கும் மாணவ மணிகளிடம் இருந்து தப்பிப்பது என்று பலவிதம்.  ரெண்டாவதில்தான் வீரட்டன் எனக்கு அறிமுகமானான். அவன் கூட நான் ரெண்டாவது மட்டும்தான் படித்தேன். ஆனாலும் தொடர்ந்து பழக்கதில் இருந்தோம். இன்றும் பண்ருட்டி போனால் அவசியம் சந்திக்கும் ஒரு சிலரில் வீரட்டனும் ஒருவன்.  பண்ருட்டி பக்கத்தில் இருக்கும் திருவதிகை பாடல் பெற்ற ஸ்தலம் அதைப் பற்றி பிறகு விளக்கமாக கூறுகிறேன். அந்தக் கோவிலில் இருப்பது வீரட்டேஸ்வரர். அந்தப் பெயர்தான் வீரட்டனின் முழுப்பெயர். வீரட்டேஸ்வரன். 

வீரட்டன் தான் எனக்கு முதல் நண்பன். ஆங்கிலப் பள்ளியில் இருந்து வந்ததால் மற்ற மாணவர்களுக்கு ஏய்க்க நாந்தான் கிடைத்தேன். அதுவும் ஆறுமுக ஆசாரிக்கு என் மீது 'பாசம்' கொஞ்சம் கூடவே ஜாஸ்தி. திட்டுவது, அடி,உதை கிள்ளு, கொட்டு என்று வாரி வழங்கிக் கொண்டிருந்தான். வீரட்டன் நிறைய தடுக்கப் பார்ப்பான். ஒன்றும் நடக்காது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து 'அஞ்சாவது ஏ'யில் இருக்கும் என் அண்ணனிடம் சொல்லி ஒரு நாள் அழைத்து வந்தேன். வீரமாக வந்த அண்ணன் ஆறுமுக ஆசாரியைப் பார்த்து விட்டு சும்மா போய் விட்டான். எனக்கு ஒரே கடுப்பு. வீட்டுக்கு வந்து சண்டை போட்டேன் என்னடா பயந்துட்டியா என்று. அண்ணன் சொன்னான் அந்தப் பையன் தாயில்லாப் பையன், அடிக்க மனசு வரலை. அண்ணன் அடிக்காததாலோ ஏனோ அதிலிருந்து ஆறுமுக ஆசாரி நண்பனான். வகுப்பு லீடர் மாபெரும் ரவுடி சுப்பிரமணிக்கும் ஏனோ என் மீது பாசம். அந்தக் காலத்தில் சினிமா பட பிலிம்கள் - நெகட்டிவ்கள் தான் கலெக்டர் அய்ட்டம். ஒற்றை ஒற்றையாக இருக்கும். அபூர்வமாக சிலர் சுருள் சுருளாக வைத்திருப்பார்கள். நிறைய பேருக்கு எம்ஜியார் பட பிலிம்கள்தான் பிடிக்கும். நான் சிவாஜி பாசறை. சுப்பிரமணி சிவாஜி பிலிம்களை அழிக்காமல் எனக்கு அவ்வப்போது கொடுப்பான். எப்போதாவது சண்டை போட்டால் என் கண் எதிரே சிவாஜி பிலிம் கிழித்துப் போடுவான். என்ன தண்டனைடா சாமி! 

தங்கராசு வாத்தியார் ரொம்ப அமைதியானவர். கொஞ்சம் குண்டாக இருப்பார். அதனால் சில பெரிய வகுப்பு மாணவர்கள் இட்லிப்பானை என்பார்கள். ஆனால் என் வகுப்பில் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும். எப்போதாவதுதான் அடிப்பார். லீவ் எடுக்கும்போது அப்பா ஆங்கிலத்தில் லெட்டர் எழுதிக் கொடுப்பார். அதை தங்கராசு வாத்தியார் நிறைய நேரம் ஏனோ படித்துக் கொண்டேயிருப்பார். மற்ற மாணவர்கள் சாருக்கு இங்கிலீஷ் தெரியாது என்று கிசுகிசுப்பார்கள்.  தெரியாமலில்லை. எதுக்குடா பெங்களூர் போற என்றோ யாருக்கு கல்யாணம் என்றோ படித்துத் தெரிந்துகொண்டுதான் கேட்பார்.  ஏன் அவ்வளவு நேரம் படிப்பார் என்பது இதுவரை புரியாத புதிர். 

Thursday, September 29, 2011

கடிலக்கரையினிலே...

நவராத்திரி ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில்  சற்று விவரம் தெரிந்தவர்களுக்கு - ரொம்ப வயதானவர்களுக்கு என்றும் சொல்லலாம் - நினைவுக்கு வரும் ஒரு ஊர் பண்ருட்டி.  இப்போதெல்லாம் பண்ருட்டி என்றால் பலாப்பழமும், முந்திரியும், மின்சார அமைச்சர் ராமச்சந்திரனும், கூடவே கொஞ்சூண்டு நாகுவும்தான் உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு காலத்தில் மண் பொம்மைகளுக்கு புகழ் பெற்றது பண்ருட்டி. உண்மையான கொலு (எங்களூர்) மண்பொம்மையில்தான் வைக்க வேண்டும் தெரியுமா? சந்தேகமிருந்தால் இங்கே படித்துக் கொள்ளுங்கள் நவராத்திரி கொலு பொம்மை தத்துவம். நான் அடுத்த வாரம் கொலுவலம் வரும்போது இந்தப் படிக்கணக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகிறேன்.


சரி - பண்ருட்டிக்குப் போவோம். பண்ருட்டி பெயர் காரணம் பற்றி எனக்குத் தெரிந்தது. பண்ருட்டியின் சரியான பெயர் பண்ணுருட்டி. அந்தக் காலத்தில் பாணர்கள் வாழ்ந்து பண் உருட்டி, உருட்டி ஊருக்கு பண்ணுருட்டி என்ற பெயர் வந்ததாம். அவற்றில் இருந்து ஒரு சில பண் எடுத்து விடு என்று சிலர் கேட்கலாம். அடுத்த மாதம் இங்கே ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் ஒரு அரைமணி நேரம் கேட்டிருக்கிறேன். அது கிடைத்தால் நீங்களே எங்களூர் பண்ணின் பெருமையை அனுபவிக்கலாம்.

பண்ருட்டி ஒன்றும் அவ்வளவு பெரிய ஊர் இல்லை. ஊரைச் சுற்றி கடில நதி ஓடுகிறது. சரி - ஒரு காலத்தில் ஓடியது. இப்போது போனால் விவசாயிகள் ஆக்கிரமித்து ஆக்கிரமித்து ஆறையே காணோம். சென்ற முறை போனபோது என் பிள்ளை கேட்கிறான்  ஏனப்பா விவசாய நிலங்கள் மேலே உங்களூரில் பாலம் போட்டிருக்கிறீர்கள் என்று. அதுதானடா பண்ருட்டியில் விசேஷம் என்று சொல்லி வைத்தேன். ஊரின் வடக்கே வெண்ணை உருகும் முன் பெருகிய தென் பெண்ணையாறு. அதில் இப்போது மண்தான் பெருகுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஆற்று மண்கூட இருக்காது என நினைக்கிறேன்.

ஊரின் கிழக்கிலும் வடக்கிலும் செம்மண் படிந்த நிலம். அதனால்தான் மா, பலா, முந்திரி அமர்க்களமாக வளர்ந்திருக்கும். அதுவும் தரையில் குடை விரித்து உட்கார்ந்திருக்கும் முந்திரியின் அழகே அழகு.

நான்  துவக்கப் பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்கருகே இருக்கும் வீதிகளில் எல்லாம் வசித்தவர்கள் பொம்மை செய்யும் கலைஞர்கள். வீதிகளின் இருபுறமும் களிமண் பொம்மைகள் காய்ந்து கொண்டிருக்கும். நான் உயர்நிலைப்பள்ளி போகும்போதே அதெல்லாம் மாயமாகி விட்டது. நான் படித்தது முத்தையர் பள்ளி. நம் வெங்கட் செட்டியாரின் மாமனார் படித்ததும் அந்தப் பள்ளிதான். நான் மூணாப்பு படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி போன வாரம் என் நினைவுக்கு வந்தது.

அந்த நாட்களில் அணி பிரித்து விளையாடும்போது இருவர் இருவராக 'குழு பிரிந்து' கொண்டு வருவோம். இரண்டு பேர் தனியாகப் போய் ஆளுக்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டு வந்து நிற்கும் அணித் தலைவர்களை கேட்போம். முக்கால்வாசி - சிவாஜி வேணுமா, எம்ஜியார் வேணுமா.  சிவாஜி.  சரி நான் உன் பக்கம். இவன் எதிர் பக்கம். எனக்கு சிவாஜி, எம்ஜியார் போரடித்து விட்டது. நானும் இன்னொருவனும்  போய் 'குழு பிரிந்தோம்'.

"தென்னரசு -  பட்டாடி வேணுமா, லாயிட் வேணுமா"
"பட்டாசு."
பட்டாசு இல்லடா, பட்டாடி!. மன்சூர் அலிகான் பட்டாடி!!

பக்கத்தில் அரைத் தூக்கத்தில் இருந்த கண்ணம்மா டீச்சருக்கு ஒரே ஆச்சரியம். டேய் - இங்க வா. என்ன பேர்லாம் சொன்னே?

பட்டாடி, லாயிட் டீச்சர்.

ஏன்டா - அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா?
பட்டாடி இந்திய கிரிக்கெட் கேப்டன். லாயிட் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் டீச்சர்.

சென்ற வாரம் பட்டாடி இறந்து போனார். எனக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு தெரிந்த நாட்களில் கேப்டனாக இருந்தவர். கேப்டன் என்றால் பட்டாடிதான் என்று இருந்த நாட்கள் அவை.     (தொடரும்)





Tuesday, August 12, 2008

சென்னை

  1. சென்னை!

எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது சென்னை! செல்போன்(மன்னிக்கவும் - அலைபேசி) எங்கெங்கும் வியாபித்திருக்கிறது. வீட்டு வேலைக்காரி கையில், கோயிலில் பெருக்கும் ஆயா கையில், திருவண்ணாமலையில் தாலி கட்டி முடித்தவுடன் மணமகன் கையில்... இவ்வளவு நாள் ஒரு போன் இணைப்புக்கே அல்லாடியவர்கள் ஒரு கொலைவெறியுடன் தழுவியிருக்கும் சாதனம் அலைபேசி. அப்பாவின் முகவரிப் புத்தகத்தில் முகவரிகள் எல்லாம் போய் ஒரே போன் நம்பர்களாகத்தான் இருக்கின்றன. போனில் இதுவரை பதில் மட்டுமே பேசிவந்த அம்மா சித்தியின் செல்போன், வீட்டு போன் எல்லாவற்றையும் நினைவிலிருந்தே போடுவதை பார்த்து அசந்து விட்டேன்.

செல்போனிலேயே வினாடிகளில் உங்கள் அக்கவுண்டை டாப்- அப் செய்து விடுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுக்காதீர்கள். குறுஞ்செய்தி வந்து குவிந்து விடும். அண்ணன் மகன் தினத்துக்கு நூறு செய்திகளுக்கு மேல் அனுப்புகிறான். இரவு பனிரெண்டு மணிக்கு என்ன செய்கிறாய் என்று குறுஞ்செய்தி அனுப்புகிறான் என்று இன்னொரு அண்ணன் மகள் புகார் செய்தாள். இன்னொரு அண்ணன் மகன் இவன் செய்திகளுக்கு பயந்து எண்ணையே மாற்றிவிட்டான். இன்னொரு அண்ணன் மகன் இன்னும் செல்போன் பாவிக்கும் வயதுக்கு வரவில்லை. அவன் என்ன செய்யப் போகிறானோ? என்னிடம் முறைத்துக் கொள்பவர்களின் அலைபேசி எண்களை அவனுக்கு கொடுப்பதாக உத்தேசம்.

அண்ணன் சுஜாதா அஞ்சலி வந்த பத்திரிக்கைகளை சேர்த்து வைத்திருந்தான். சதங்காவின் கவனத்திற்கு - ராமகிருஷ்ணன் மூன்று பக்கத்துக்கு மேல் அஞ்சலி எழுதியிருக்கிறார்.

இவ்வளவு நாள் அமெரிக்காவில் இருந்து வந்து பொருட்களின் விலையைப் பார்த்து 'ஆ ஸம்' என்று வாங்கி குவித்தவர்கள், இப்போது நாற்பதால் வகுத்து பார்த்துவிட்டு அம்மாடி என்று ஓடுகிறார்கள். சரவணா, நெல்லி, சென்னை சில்க்ஸில் வாடிக்கையாளர்களை விட பணியாளர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். எது எதற்கோ ஆடி தள்ளுபடி. ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுத் தம்பதிகள் SMS செய்துகொள்ள ஆடி அட்டகாச தள்ளுபடி!

திருமண மேடையில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள், மணமக்கள், புரோகிதர் தவிர மற்ற அனைவரும் செருப்பணிந்து இருக்கிறார்கள்.

சென்ற மறுதினம் மதிமுகவின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது சேலையூரில். ஓபாமாவுடன் வைகோவின் படம் பெரிய பேனரில்.

ஒரு பேச்சில்: அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஓபாமாவை சந்தித்து கை குலுக்கி, கட்டித் தழுவி முத்தமிட்ட முதல் தமிழன் என்று எங்கோ போய்விட்டது பேச்சு. ஓபாமாவும் வைகோவும் கேட்டிருந்தால் நெளிந்திருப்பார்கள்... குடியரசுக் கட்சியினருக்கு இந்த பேச்சு போயிருந்தால் வரும் தேர்தலில் ஓபாமாவுக்கு எதிராக பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. என்னை அசர வைத்த இன்னொரு பேனர் பாண்டிச்சேரியில்.

எந்த பேனரிலும் இவர் பெயரே கிடையாது. புதுவையின் காமராஜர் என்று ஆரம்பித்து ஒரே அடைமொழிதான். அவ்வளவு பிரபலமா என்று வியந்தேன். புதுவை முழுவதும் இவர் பிறந்தநாள் பேனர்தான். சில பேனர்களில் இவர் அமர்ந்திருக்க பக்கத்தில் சிங்கம், புலியெல்லாம். நிறைய பேனர்களில் அந்த வட்டார கட்சி பிரமுகர்கள் அனைவர் முகமும் போட்டு ஒரே அட்டகாசம். எந்த காங்கிரஸ் முதல்வர் இவ்வளவு பிரபலமாகியிருக்கிறார்? அதனால்தான் போலிருக்கிறது காங்கிரஸின் தேசிய விளையாட்டான உட்கட்சி பூசல் அதிகமாகி இப்போது டெல்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நீங்கள் இதை படிக்கும்போது முதல்வராக இருக்கிறாரா என்று பார்ப்போம்.

எல்லா கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங்தான். ஒரு மளிகை கடையில் சில பொருட்கள் வாங்கிவிட்டு பில்லைப் பார்த்தால் அதில் ஒரு வஸ்து: Burpy. என் மகன் சிரி சிரி என்று சிரித்தான். அது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? பெட்ரோல் பங்குகள், பண்ருட்டி மளிகைக் கடைகள், ரிலையன்ஸ் ப்ரஷ் என எங்கிலும் பெண்கள்தான். இந்திய ராணுவத்திலும் பெண்களைச் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களாம்.திருமண வயதில் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் பெண் தேடி அல்லாடுகிறார்கள்.

எஃப் எம் ரேடியோ தமிழ் கலக்குகிறது. அதாவது நம் பித்தன் என் பேச்சை சொன்னமாதிரி, ஆங்கிலத்தில் கொஞ்சூண்டே கொஞ்சூண்டு தமிழ் கலந்து பேசுகிறார்கள். சில DJகள் குரலைக் கேட்டால் நம்ப ஊர் லாவண்யா ராம்கி போலவும், பார்கவி கணேஷ் மாதிரியும் இருக்கிறது. ரிச்மண்டில் எஃப் எம் ரேடியோ ஆரம்பிக்கவிருக்கிறவர்கள் கவனிக்கவும். இதைவிட மோசம் மெகாசீரியல் தமிழ். பார்ப்பவர்கள் அனைவருக்கும் மூளை வளர்ச்சி குறைவு போல மெதுவாகப் பேசுகிறார்கள். பிற்காலத்தில் ஒரு ஆராய்ச்சி பண்ணி இதனால் தமிழர்களின் மூளை அவ்வளவு விரைவாக வேலை செய்யாது என்று டாக்டரேட் செய்யாமல் இருந்தால் சரி.

குசேலன் படப் போஸ்டரில் ஒன்றிலும் அந்தப் படத்தின் கதாநாயகனைக் காணமுடியவில்லை. பாவம் பசுபதி! அனைவர் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கிறது. நாம்தான் இங்கே நின்டென்டோ விற்கும் சாதனங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். சென்னையில் கம்ப்யூட்டரில் gameboy advance, DS எமுலேடர் புரோகிராம் வைத்து அந்த விளையாட்டுகளை பைசா செலவு இல்லாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

போக்குவரத்து மிக மிக அதிகமாயிருக்கிறது. சாலையில் சென்றால் எண்திசைகளிலிருந்தும் வருவதால், ஜாக்கிரதையாக ஓட்ட தும்பி மாதிரி கூட்டுக்கண்தான் வேண்டும். இன்னும் மேலே கீழே இருந்துதான் போக்குவரத்து வரவில்லை. அடுத்த முறை அதுவும் வந்துவிடும். நண்பனின் மாமனார் அவருடைய காரை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். நான் எடுத்துக் கொண்டு போனால் அவர் காரை திரும்ப 'எடுத்துக் கொண்டுதான்' வரவேண்டும் என்று மறுத்துவிட்டேன். டாடாவின் நேனோ வராமலே இந்த கதி! நானோ வந்துவிட்டால் உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் புஷ் நானோவை காரணமாக சொல்லுமளவுக்கு பிரச்னை வரப் போகிறது....


இனி உங்களுக்கு சில கேள்விகள்....

1. இது என்ன பூ?




2. இது எந்த மலைக்கோட்டை?


3. இந்த மலைக்கோட்டை?

4. இந்த மலை அடையாளம் தெரிகிறதா? - மேலே கோயிலோ கோட்டையோ கிடையாது....



5. கீழ்காணும் அமைப்பு என்ன? படத்தை பெரிதாக்கிப் பார்க்காமல் சொல்லவும் :-)


பண்ருட்டி தன்வந்திரி பெருமாள் கோயில் சுவற்றில் இருக்கும் சித்திரம்.
சிலோத்துமத்தில் சிலோத்துமம் மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது முற்றினால் மருந்து கிடையாது. (கிளிக் செய்து பெரிய படத்தில் பார்க்கவும்).

6. கடைசி கேள்வி - எனக்கு எத்தனை அண்ணன்மார்? :-)

தொடரும்...