ராட்டடூயி படத்தில் ஒரு காட்சி வரும். உணவு விடுதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரு உணவு விமர்சகர் ஒரு கரண்டி உணவை எடுத்து வாயில் வைத்து மெல்லுவார். அப்படியே அது அவரை சிறு வயதில் அம்மா சமைத்த சாப்பாட்டில் கொண்டு விட்டுவிடும். அதைப்போல எனக்கு இந்த வாரம் நேர்ந்தது. வால்மார்ட்டில் கொய்யாப்பழங்கள் பார்த்தேன். ஒரு டப்பாவில் டஜன் வைத்திருந்தார்கள். சாப்பிட்டு நாளாயிற்றே என்று வாங்கியிருந்தேன்.
வீட்டுக்கு வந்து அதில் ஒன்றை எடுத்துக் கடித்தேன்.... ஜிவ்வென்று அப்படியே பண்ருட்டி எதிர் வீட்டு தோட்டத்து கொய்யா மரத்துக்கு டைம் டிராவல்! அந்த செங்காயின் மணமும், சுவையும் அந்த நாளுக்கு கொண்டு சென்று விட்டது. கடைகளில் எப்போதோ பறிக்கப்பட்டு பழுத்த கொய்யாக்களை தின்று அந்த சுவையும் மணமும் மறந்தே போய் விட்டது.
பண்ருட்டியில் எதிர் வீடு ஒரு ரயில்வே காலனி வீடு. வீட்டை சுற்றி பெரிய தோட்டம். முருங்கை, மருதாணி,ஆமணக்கு, காய்கறிகள் என பலவிதமான மரஞ்செடிகொடிகள். அவரை,பாகற்காய் போன்ற கொடிகள் தினமும் படர்ந்து வேகமாக வளர்வதை கண்டு அதிசயித்திருக்கிறேன். வெண்டை, கத்திரி, சுண்டை என்று பலவும் உண்டு. அண்மையில் ஒருவர் கத்திரி செடியில் வளருமா கொடியில் வளருமா என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.
அந்த தோட்டத்தில் மிகவும் பிடித்தது கொய்யா மரம். அவ்வளவு பெரிய மரம் கூட கிடையாது. உங்களுக்கு கொய்யாமரம் பற்றி தெரியுமா? மிகவும் வலுவான மரம். சிறிய கிளையாக இருந்தாலும் வழுவழு என்று வலிமையாக இருக்கும். இந்த ஊரில் கிரேப் மர்டில் என்று ஒரு புதரா மரமா என்று குழப்பும் ஒரு மரம் உண்டு. அதன் கிளைகளைப் பார்க்கும்போதெல்லாம் கொய்யா மரம்தான் நினைவுக்கு வரும்.
அந்த வீட்டில் மூன்று சகோதரர்கள் - கண்ணன், ரவி, பாபு. சுருக்கி கண்ராவி பாபு என்போம்! கண்ணன் என்னைவிட ஒரு வயது சிறியவன், ரவி ஒரு வயது பெரியவன், பாபு என்னும் பாலகிருஷ்ணன் இன்னும் சற்று மூத்தவன். எங்கள் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் பாபுதான். கோடைக்காலங்கள் நிறைய அங்கேதான் கழித்தேன். அவர்கள் விளையாட்டிலும் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அப்பா எங்களுக்கு நிறைய விளையாட்டுப் போட்டி நடத்துவார். ஹை ஜம்ப், லாங் ஜம்ப், கிட்டிப்புள் எல்லாம் அங்கேதான்.
கொய்யா மரத்தில் நன்றாக லூட்டி அடிப்போம். கொய்யாக்காய்கள் கொஞ்சம்கூட வளரவே விடமாட்டோம். கொஞ்சம் நெல்லிக்காய் அளவு தாண்டியதும் அம்பேல். பழுக்காத காய்கள் நிறைய தின்றதால்தானோ என்னவோ வால்மார்ட்டின் செங்காய்கள் அந்த சுவையை நினைவூட்டின. சிறிய கிளைகள் உடைந்துவிடும் என்ற பயம் இருந்தாலும் ஒரு கிளை கூட நாங்கள் ஏறி முறிந்ததாக நினைவில்லை. மேல், கீழ் கிளைகளில் நின்று கொண்டு மரமே அதிரும் அளவு குதித்து கிளைகளை ஆட்டி விளையாடுவோம்.
சில ஆண்டுகளுக்கு முன் சில பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மேமான்ட் பார்க் போயிருந்தேன். அங்கே கழுகுகள் இருக்கும் இடத்திற்கு எதிரில் ஒரு மேடான பகுதி இருக்கிறது. அங்கே ஏறினால் முந்திரி மரம் மாதிரி தரையில் அடர்ந்து பரந்து வளர்ந்த ஒரு மேக்னோலியா மரம் இருக்கிறது. அதனுள் போய் பிள்ளைகள் மேலே ஏறி லூட்டி அடித்தார்கள். ஒரு பிள்ளையை என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. அவ்வளவு மேலே ஏறியிருந்தான்.
https://youtu.be/7cRpWwWJFD4
https://www.youtube.com/watch?v=GYpDXZ2iZuQ
சூப்பராக இருந்தது நாகு. குரோம்பேட்டை வீட்டில் கொய்யா மரத்தில் ஏறி விளையாடி களைத்த நாட்களை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteமுரளி
கொய்யாக் காய். என்ன மணம், என்ன ருசி. அது ஒரு காலம் நாகு, கண்ராவிபாபு சூப்பர் அடைமொழி.
ReplyDelete