Tuesday, January 18, 2011

கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!! – 2

(கைப்பிள்ளை (வடிவேலு) மற்றும் அவருடைய இரண்டு அள்ளக் கைகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு சிறிய உரையாடல். இதை வின்னர் திரைப்படத்தில் தேடவேண்டாம். ஆனால் கைப்பிள்ளை வடிவேலுவின் குரலில் படித்து பார்க்கவும்.)

கைப்பிள்ளை கை கால்கள் கோணிக்கொண்டு தடுமாறி தடுமாறி நடந்து வந்து ஸ்டார்பக் கடை ஒன்றின் உட்புறம் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்கிறார். அவருடைய அள்ளக் கைகள் இருவர் தயங்கி தயங்கி அவர் அருகில் வருகின்றனர்.

கை.பி: “அம்ம அம்ம, யப்பா, எப்பிடி அடிக்கராங்க, ஹும் ஒரு பச்ச புள்ளையாச்சே, இத இப்படி அடிக்கரமேன்னு ஒருத்தருக்கும் தெரியலையே”
பேசியபடியே திரும்பி பார்க்கிறார், அள்ளக் கைகள் வருவது தெரிகிறது. “என்ன, எப்படி அடி பட்டு இருக்குதுன்னு பாக்கரீங்களா?”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அவிங்க நீங்க ஒரு பச்ச புள்ளைன்னு அடிக்கல”

கை.பி: “பொறவு”

அ.கை-1: “கைப்புள்ளன்னு அடிக்கராங்கண்ணே”
அவர்களை பார்த்து கோபமாக கையை ஓங்கி அடிக்க வருகிறார், வலி தாங்காமல் கையை இழுத்துக் கொள்கிறார்.

கை.பி: “எனக்கு வர கோவத்துக்கு உங்களையெல்லாம் மர்டர் பண்ணிடுவேன் பீ கேர்புல், இடியட் ஆஃப் த ஸ்டுபிட் ஆஃப் தி நான்சென்ஸ்”

அ.கை-2: (ரகசியகுரலில்) “ஏய் இது பேசரது ஏதாச்சும் புரியுதா”

அ.கை-1: (அதே ரகசியக் குரலில்) “நமக்கு அடுத்து ஒரு குடாக்கு கிடைக்கர வரை இதோடதான் காலந்தள்ளனும், அதனால வாய மூடிகிட்டு இரு”

கை.பி: “ஏய்ய்ய் அங்க என்ன குசு குசுன்னு பேச்சு”

அ.கை-1: “அது ஒன்னும் இல்லை அண்ணே, கொலு பத்தி நீங்க எழுதின பதிவுக்கு மூமூமூனு பேர் பதில் எழுதியிருக்காங்கன்னு சொல்லிகிட்டு இருந்தேன், அவ்வளவுதான்”.

கை.பி: “மூமூமூனு பேரா, சொல்லவேயில்ல, எப்பவும் நாகு மட்டும் தான படிப்பாரு, என்ன ஆச்சு மக்களுக்கு, சரி சரி படிங்க”

அ.கை-1: சலித்தபடி “என்னத்த படிக்கரது”

கை.பி: “ஏய்ய், என்ன வாய்ஸ் டவுன் ஆகுது”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அதையெல்லாம் வெறும படிக்கக்கூடாது, அனுபவிச்சு படிக்கனும்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “சரி சரி ரொம்ப மொக்கை போடாம படி”

அ.கை-1: “முதல் பதில் நம்ம மீனா வீரப்பன் எழுதியிருக்காங்க”

கை.பி: “அப்படியா!, அப்படி போடு அருவாள, படி படி கேக்கலாம்”

அ.கை-2: ‘உங்க வீட்டு கொலு போலவே உங்க பதிவும் நல்லா இருக்காம்”

கை.பி: (அ.கை-1 சொன்னதை கேட்டவுடன் ஒரு மயக்க நிலையில்) “ரியலி, போதுண்டா போதுண்டா ரொம்ப புகழராங்க”

அ.கை-1: ‘ஆமாம் அண்ணே அதுதான் நானும் நினைச்சேன்”

கை.பி: (அவன் சொல்வதை கவனிக்காது) “ம் மேல படி”

அ.கை-2: “அடுத்து நம்ம மு.கோ. இந்தியாவில இருந்து எழுதியிருக்காரு”

கை.பி: (பரபரப்பாக) “மு.கோ வா!, படி படி”

அ.கை-1: “உங்க பதிவு ப்ரமாண்டமாம், உங்க வீட்டு கொலுவைப்போலவே, அதோட ....” என்று இழுக்கிறான்

கை.பி: (எரிச்சலாக) “என்னடா, அதோட ன்னு இழுக்கர”

அ.கை-1: “அதில்ல உங்க மனசும் உங்க பதிவும் கொலுவும் போல ப்ரமாண்டமாம்”

கை.பி: “ஏண்டா நிஜமாவே அப்படியா எழுதியிருக்காரு”

அ.கை-2: “ஆமாண்ணே, வேனா நீயே படிச்சு பாரு”

கை.பி: “அதில்லடா, இந்த ஊரு இன்னமுமா நம்மள நம்பிகிட்டு இருக்கு”

அ.கை-1: “அத விடுங்க அண்ணே, அடுத்தது யார் எழுதியிருக்காங்க தெரியுமா”

கை.பி: “அது தெரியாதா நம்ம நாகுவா இருக்கும், எப்ப்புடி!”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே”

கை.பி: “போதும் மூடிக்கிட்டு மேல படி”

அ.கை-1: “உங்க தலைவர் பதவி பாரம் இப்ப இல்லைங்கரதுன்னால நிறைய எழுதுவீங்கன்னு எதிர் பாக்கரார்”

கை.பி: (சலிப்பாக ) “அது சரி”

அ.கை-1/2: (கோரஸ்ஸாக) “என்ன அண்ணே சலிச்சுக்கரீங்க”

கை.பி: “பின்ன என்னடா, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடராங்க, வெளில வாசல்ல பாத்தா சொல்லி சொல்லி அடிக்கராங்க”

அ.கை-1: "அப்படின்னா ஏன் எழுதறீங்க"

கை.பி: "டேய், ஒரு எழுத்தாளரா இருக்கரது என்ன பெரிய பதவி தெரியுமா, அது உங்கள மாதிரி அள்ளக் கைகளுக்கு எங்க தெரியப் போவுது"
அ.கை-1: “அது சரி அண்ணே, ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி தடயம்ன்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சீங்களே....” என்று இழுக்கிறான்.

கை.பி: “ஏய்ய், எவனாவது தடயம் பத்தி பேசினா, பிச்சுபுடுவேன் பிச்சு, என்ன்ன்னது இது சின்னபுள்ளத்தனமா இருக்கு”

அ.கை-1: “அதில்லண்ணே, இத்தனை வருஷமா ஒரு தடயம் கூடவா கிடைக்கலைன்னு, ஊர்ல நாட்ல பேச்சு இருக்குன்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “அத ஏண்டா என்கிட்ட சொல்ற”

அ.கை-1: “அண்ணே நான் என்ன சொல்ல வந்தேன்னா ...”

கை.பி: “ஒன்னும் சொல்ல வேண்டாம், வாய மூடு”

அ.கை-1: “இருந்தாலும் .....”

கை.பி: “எனக்கு ஒன்னும் கேக்க வேண்டாம்” என்று நொண்டி நொண்டி ஓடுகிறார்.

அ.கை-2: “ஏம்பா அது என்னப்பா தடயம்”

அ.கை-1: “இது தடயம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சு, முடிக்காம ரெண்டு மூனு வருஷமா இழுத்துக்கிட்டு இருக்கு, இத தொரத்தனும்னா இந்த மாட்டர எடுத்தா போதும் ஓடிடும்”

அ.கை-1: “சரி சரி நம்ம ரெண்டு பேருக்கும் சூப்பரா காபி சொல்லு”

அ.கை-2: “காசு”

அ.கை-1: “அது ஒடர அவசரத்துல வாலட்டை விட்டுட்டு போயிருக்கு பார், வா பெரிய பொங்கலே கொண்டாடிடலாம்”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுன்னே, உங்க சகவாசம் கெடச்சது நான் செஞ்ச புண்ணியம்”

அ.கை-1: “இது மட்டுமா, எங்கிட்ட வந்திட்ட இல்லை இனி இந்த அண்ணனை பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுப்ப, வா முதல்ல காபி சாப்பிடலாம்”

முரளி இராமச்சந்திரன்.

Monday, January 17, 2011

தாயே, கவலையை விடு

சங்க இலக்கியங்களில் அற்புதமான கருத்துக்களை மறைமுகமாக  நயம்பட  சொல்லும் பல கவிதைகளை காணலாம், கலக்கமடைந்து இருக்கும் தாய்க்கு  மனக்கவலை தீரும் வகையில்  சொல்லப்பட்ட ஒரு ஆறுதலான செய்தியை  இங்கே  பார்க்கலாம்.
நவீன காலத்தில் ஒரு பெண் தனக்கு விருப்பமானவனை பெற்றோருக்கு தெரியாமல், அல்லது அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி மணந்து கொண்டு போவது பற்றி நிறையவே கேள்விப் படுகிறோம்.  இது ஒன்றும் புதிதல்ல. மனித குலம் தோன்றிய காலம் தொடங்கி நடைபெறும் சம்பவம்தான்.
ஒரு நாள் வழக்கம் போல் காலையில் எழுந்த தாய் தன் மகள் படுத்திருந்த படுக்கை காலியாக இருப்பதைப பார்த்து ஆச்சரியப்பட்டாள். எப்பொழுதும் அதிக நேரம் தூங்கி எல்லோருக்கும் பிறகு கடைசியாக எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவள் அந்தப் பெண் . வீட்டில் எல்லோருக்கும் அவள் செல்லப் பெண். 
அவள் வெளியில் இருக்கிறாள் என்று நினைத்து கூவி அழைக்கிறாள் தாய். பதில் இல்லை. தேடிப் பார்க்கிறாள். அவளைக் காணவில்லை.
       நெடுநேரமாகியும் அவள் வரவில்லை. தாய்க்கு கவலை அதிகமானது. வயதுப்பெண். தனியாக வெளியில் அதிக தூரம் போய் பழக்கம் இல்லாதவள்.  அதிக நேரம் தாயை விட்டு பிரிந்து  இருந்தவளுமில்லை.
 
           தாய்க்கு அடுத்தபடியாக அந்த பெண்ணை நன்கு அறிந்தவள் செவிலித்தாய்பல நேரங்களில் அந்த பெண் செவிலித்தாயுடன் அதிக  நேரத்தை கழிப்பதுண்டு.
 
        வந்த செவிலித்தாயிடம் கேட்கிறாள் எங்கே அவள் என்று. செவிலித்தாய்க்கும் தெரியவில்லை என்று அறிந்து அதிர்ச்சி  அடைகிறாள். இப்பொழுது தாயின் முகத்தில் சோகம் படர்ந்து விட்டது. முகம் வாடிவிட்டது.  அழாத குறைதான்

என் மகள் எங்கே போயிருப்பாள்  என்று திரும்பத் திரும்ப கேட்டு புலம்பிக்கொண்டிருந்த  தாய்க்கு பதில் கூறுகிறாள் செவிலித்தாய்.

           கடுமையான வெயிலடிக்கும் பாலைவனம். நண்பகல் நேரம். நல்ல கோடைக்காலம். அனல் பறக்கும் நீண்ட  நிலப்பரப்பில் எங்காவது குடிக்க நீர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில்  இரண்டு மான்கள் அலைகின்றன .

கோடை வெயில் காரணமாக எல்லா உயிர்களுக்கும் நீர்  அதிகம் தேவைப்படும்.
வெயிலில் அலைவதால் கூடுதலான நீர் தேவைப்படுகிறது. நீரைத்தேடி  ஓடிக்களைத்து  சோர்வால் பெண்மான் விழுந்து விடுமோ என்று ஆதங்கத்துடன் பார்க்கிறது ஆண்  மான்.
       பல நேரங்களில் கானல்நீர் கண்டு ஓடிக்களைத்து ஏமாந்து சோர்வு மிகுந்த நேரத்தில் ஒரு சுனையை பார்கிறது ஆண் மான். அந்த சுனை மிகச்சிறியது. .அதில் இருக்கும் நீர் மிகக் குறைவு. இரன்டு மான்களுக்கும் இருக்கும் தாகத்திற்கு அந்த நீர் நிச்சயமாக போதாது என்று ஆண் மான் உணர்கிறது.

           இரன்டு மான்களும் சுனையின் அருகில் வந்து நின்றன. பெண் மான் ஆண் மானை பார்த்தது. ஆண் மான் சுனை நீரில் வாயை  வைத்தது. பெண் மானும் சுனை நீரில் வாயை வைத்து நீரை குடிக்கத் தொடங்கியது.  ஆனால் ஆண்   மான் நீரில் வாயை வைத்ததே  தவிர  நீரைக் குடிக்கவில்லை. குடிப்பதுபோல் நடித்தது.  தாகமிகுதியாலும் சோர்வாலும் பெண்மானுக்கு எந்த நினைவும் இல்லை.
 
        தான்  நீர் குடிக்காவிட்டால் பெண்மான் நீர் குடிக்காது என்று ஆண் மானுக்குத்  தெரியும்அதனால் சுனையில் வாயை வைத்ததே தவிர உண்மையில் நீரைக்  குடிக்கவில்லை.  குடிப்பது போல் ஆண் மான் நடித்தது.
 
     பாலைவனத்தில் உள்ள அந்த ஆண்மானுக்கு பெண்மான்  மீது அவ்வளவு காதல். தன்னை வருத்திக்கொண்டு தன் இணையை காக்கும் பண்பு கொண்ட ஆண்மான் அது.
 
    அந்த வழியில்தான் உன் மகள் தனக்கு உரியவனுடன் போயிருக்கிறாள். இதுதான் செவிலித்தாய் கொடுத்த பதில். ஆண் மானுக்குள்ள அந்த பண்பு அந்த வழியில் செல்லும் உன் மகளின் காதலனுக்கும் நிச்சயமாக உண்டு. அவளை அவன் கண்  போல் வைத்து காப்பாற்றுவான். . ஆகையால் உன் கவலையை விடு. என்பது சொல்லாமல் சொன்ன செய்தி.

இப்பொழுது பாட்டை பார்ப்போம்


சுனை வாய்ச்சிறு நீரை எய்தாதென்றெண்ணி
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான் தன் 
கள்ளத்தினூச்சும் சுரமென்ப  காதலர்  தம் 
உள்ளம் படர்ந்த  நெறி.      
--- ஐந்திணை  ஐம்பது


இது போன்ற இனிமையான நயம் மிகுந் கவிதைகள் பலவற்றை  சங்க இலக்கியங்களில்  காணலாம்.
- மு. கோபாலகிருஷ்ணன்.