நான் என்ன பதிவு போடலாம்னு யோசிச்சி யோசிச்சி கண்ல பட்டாம்பூச்சி பறக்கற அளவு வந்ததை யாரோ
கவிநயாகிட்ட சொல்லிட்டாங்க போல இருக்கு. கண்ல மட்டும் ஏன் பூச்சி பறக்கனும். பதிவு பதிவா பறக்கட்டும்னு எந்த புண்ணியவானோ ஆரம்பிச்ச தொடரில் சேர்ந்து அவங்க பறக்கவிட்ட
பட்டாம்பூச்சி விருதுல என்னையும் சேத்துக்கிட்டாங்க. விருதுக்கு நன்றி கவிநயா! கவிநயா எந்த தலைப்பு எடுத்தாலும் கலக்கறவங்க. பதிவும் சரி,
கவிதையும் சரி, பாடுகிறதுக்கு வசதியா பாடுறதும் சரி, நாட்டியத்திலும் சரி,
பக்தியிலும் சரி - அவங்களுக்கு நிகர் அவங்கதான். அதனாலதான் அவங்களுக்கு ரெண்டு பேர் இந்தப் பட்டாம்பூச்சி விருதை கொடுத்திருக்காங்க....
நமக்கு அவங்க ரேஞ்சுக்கு எழுத முடியாட்டியும் கொஞ்சம் படம் காமிப்பமேன்னுதான் மேலே இருக்கற படம். வர்ஜினியா ட்வின் லேக் பார்க்கில் நானே எடுத்தது.
டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி. அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் காணப்படும் இந்தப் பட்டாம்பூச்சி வர்ஜினியா மற்றும் நான்கு மாநிலங்களுக்கு மாநிலப் பூச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
நான் இந்தப் பட்டாம்பூச்சி விருதை இந்த மூனு பேருக்கு வழங்குகிறேன். முதலாவதாக எங்க கட்சியில் இருந்து போய் தனிக்கட்சி ஆரம்பிச்சி அப்பப்போ கூட்டணி தர்மத்தை காப்பாற்றும்
சதங்கா!சுவையாக
கவிதை, கதை எழுதுவது,
ஓவியம் வரைவது, வீட்டில் சமையலறை எந்த திசையில் இருக்கிறது என்று கூடதெரியாமல்
சமையல் குறிப்பு எழுதுவது(சும்மானாச்சியும் சொன்னேன்) என்று பல கட்சிகள் நடத்தி கலக்கிக் கொண்டிருக்கிறார். மனுஷன் பல சுவையான சின்ன விஷயங்களை அவருடைய கவிதை மூலம் அப்படியே நம் கண் முன்னால் நிறுத்துவார். சுந்தரத் தெலுங்கினில் அவருடன் ஆணி பிடுங்கும் பெண்டிராகட்டும்,
நம்ம ஊர் டீக்கடை ஆகட்டும், ஓட்டு வீட்டு முற்றமாகட்டும்,
நம்ம ஊர் டவுன் பஸ்ஸாகட்டும்- இவருடைய எளிய, இனிய தமிழ் அப்படியே நம்முன் வந்து நிறுத்தும். நான் எழுதும் தமிழ் தாங்காமல் வேறு ஊருக்கு ஓடிவிட்டார். உங்க ஊர் 'பட்டாம்பூச்சி' குறித்து எழுதுங்க சதங்கா!
அடுத்தது
செல்வராஜ்! அவருடைய கொங்குநாட்டுத் தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய எழுதிக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய எழுதும் செலுத்தலுக்கு ஏதோ கட்டுப்பாடு வந்திருக்கிறது :-) அதாங்க இவர் வேதிப் பொறியியலில் செலுத்தக் கட்டுறுத்தல் (Process Control) துறையில் பணி புரிபவர். தமிழ்மணத்தின் நிர்வாகத்தில் இவருடைய தொண்டும் உண்டு.
வேதிப் பொறியியலை விளக்கும் பதிவுகளும்,
அவருடைய மகள்கள் கேட்கும் கேள்விகள் குறித்த பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடித்தவை. இவருடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது மகள்களின் துவக்கப் பள்ளியில் இந்தியா குறித்து அவர் செய்த ஒரு வீடியோ. மழலையுடன் பெண்கள் இந்தியாவின் அருமை, பெருமைகளை விளக்க அழகாக இந்தியாவைப் படம் பிடித்திருந்தார். சுட்டி கிடைக்கவில்லை. நீங்கள் திரும்ப உங்க பதிவில் பட்டாம் பூச்சிகளைப் பறக்கவிடவேண்டும், செல்வராஜ்.
மூன்றாவதாக
கானாப்பிரபா! "ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" - அவரைப் பற்றிய அவரது விளக்கமே நெஞ்சில் ஒரு வலியைத் தரும்! எனக்கு இங்கே பல ஈழத்தோழர்கள் மூலமாக கொஞ்சம் ஈழப்பாரம்பரியம் குறித்துத் தெரிந்திருந்த போதிலும் ஈழத் தமிழரின் பாரம்பரியத்தை எனக்கு நிறைய அறிமுகப் படுத்தியவர் பிரபா. இணுவில், யாழில் வளர்ந்து இப்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். இவருடைய
மடத்து வாசல் பிள்ளையாரடியும்,
றேடியோஸ்பதி பதிவும் மிகவும் பிரசித்தம்.
ஒருமுறை இவருடைய நல்லூர் கோவில் பதிவை எனது ஈழ நண்பர் வீட்டில் காண்பித்தேன். கண்கலங்க அப்படியே கணினி முன் சேவிக்கவிருந்தார்கள். நல்லூர் ஈழ மக்கள் வாழ்வில் எப்படி பிணைந்திருக்கிறது என்று எனக்கு உணர்த்தியது. அவருடைய பிள்ளையாரடி பதிவுகளில் எனக்கு ரொம்பவும் பிடித்தது
கல்லடி வேலர் பதிவு. சென்ற வாரம் பல ஈழப்பதிவர்களுடன்
ஈழத்து முற்றம் ஆரம்பித்திருக்கிறார். ஈழத் தமிழின் இனிமையும், தூய்மையும் அனைவரும் அறிந்ததே. ஈழத்து பேச்சு வழக்குகளை நமக்கெல்லாம் விளக்குவதற்கான இந்த சேவையின் ஆரம்பமே
முசுப்பாத்தியாக இருந்தது. ஈழத்து பட்டாம்பூச்சிகளைத் தொடர்ந்து பறக்கவிடவேண்டும், பிரபா!
மூவருக்கும் வாழ்த்துகள்!
நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்