தமிழர்களின் காது எதனால் ஆனது என நீங்கள் நினைக்கிறீர்கள்? காது இரும்பால் ஆனதாம். அதனால்தான் தெரியாத மொழிகளில் இவ்வளவு காலம் பாடித் தள்ளிக் கொண்டிருக்கிறார்களாம். தெரிந்த மொழியில் பாட்டு கேட்கிறவர்கள்தான் தோல்செவி படைத்தவர்கள் என்கிறான் பாரதி. இசைக்கு மொழியில்லை என்கிறவர்கள் ஒரு நல்ல புரிந்த மொழியில் பாடல் கேளுங்கள். அப்புறம் நீங்கள் அன்றாடம் கேட்கும் புரியாத மொழிப் பாடலைக் கேளுங்கள். வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றால் மேலே படிக்காதீர்கள்.
அண்மையில் ரிச்மண்டில் சௌம்யா அவர்களின் கச்சேரி நடந்தது. அற்புதமான குரலில் அனைவரையும் மகிழ்வித்த அவரது கச்சேரியில் எனக்கு மிகவும் பிடித்தவை தமிழ்ப் பாடல்கள். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா' பாடல் தேவகானமாய் இருந்தது. அர்த்தமும் தெரிந்து இசையும் உயர்வாக இருந்தால் அந்த அனுபவமே வேறு.
இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் தமிழ்ச் சங்கத்தில் தமிழிசை விழா நடத்தினோம். அது என்ன அற்புதமாக அமைந்தது தெரியுமா? நீங்களே இங்கு சென்று பாருங்கள். என் மனதில் இன்னும் நிற்கும் பாடல்களில் சில - வருவாய் வருவாய் கண்ணா, சாந்தி நிலவ வேண்டும், முருகா முருகா... அதுவும் குறிப்பாக சாந்தி நிலவவேண்டும் பாடல். நிகழ்ச்சிக்கு முதல்நாள் ஒரு நூலகத்தில் ஒத்திகை நடந்தது. அந்த ஒத்திகையில் எந்த ஒலிப்பெருக்கியும் இல்லாமல் குழந்தைகள் பாடிய சாந்தி நிலவ வேண்டும் பாடல் தேவகானமாக இருந்தது. கேட்கும் மனதில் எல்லாம் நிஜமாகவே சாந்தி பரவும்விதமான அற்புதம். இங்கு ரிச்மண்ட் வாசிகளுக்கு வருவாய் வருவாய் கண்ணா என்று மனமுருகி அந்தக் குழந்தை பாடுவதை இன்று பார்த்தால் கண்ணீர் வராமல் இருக்க முடியாது. உடல்நலம் குன்றி இருக்கும் அவளை பார்த்துக் கொள்ள கண்டிப்பாக வருவான் கண்ணன். மேலே இருக்கும் சுட்டியில் நீங்கள் அவசியம் கேட்க வேண்டிய இன்னொரு பாடல் காற்றின் மொழி! மனிதர்க்கு மொழியே தேவையில்லை என்று வலியுறுத்தும் பாடல் :-) என்னமாய் அனுபவித்து, சந்தோஷமாய் பாடுகிறாள் பாருங்கள்.....
இனிமேல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையேனும் தமிழ்ச் சங்கம் தமிழிசை விழா நடத்தவேண்டும் என்பது என் விருப்பம். பார்ப்போம். தமிழ்ச் சங்கம் மூன்று விழா, ஒரு பிக்னிக்கோடு நிற்கிறதா அல்லது வளர்கிறதா என்று பார்ப்போம் ;-) ;-)
சங்கீத உலகில் எனக்குப் பிடிக்காத மற்றொரு விஷயம் வார்த்தைகளின் இறுதியைக் கொல்வது. கர்நாடக உலகில் பயன்படுத்தும் வார்த்தைகள் - ராகா, தாளா, பாவா எல்லாம் எந்த மொழி? எனக்குத் தெரிந்தவரை - தமிழும், தெலுங்கும், மலையாளமும் ஹிந்தியும் அல்ல. கன்னடத்தில் மட்டும்தான். நம்மவர்களுக்கு கன்னடர்கள் மீது அவ்வளவு பயமரியாதையா என்ன? எனக்கு என்னவோ இது ஆங்கிலப்பைத்தியத்தினால் வந்தது என்று தோன்றுகிறது. ராகா என்று சொல்லிவிட்டால் அது தமிழல்லாத மொழி மாதிரி இருப்பதால் வடக்கிந்தியர்களுக்கும், ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்ற அறியாமையோ?
சென்ற மாதம் இங்கே ஒரு மூன்று உயர்நிலைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. அதில் வீட்டில் ஹிந்தி பேசும் பெண் அவளுடை ய பாட்டை அறிவிக்கும்போது அழகாக ராகம் என்று சொன்னாள். அவளுக்கு இருக்கும் மரியாதை நம்மூர் சங்கீதக்காரர்களுக்கு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
தோல்செவி உடைய மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மொழிப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எட்டுத் திக்கும் சென்று இசைச் செல்வங்கள் கொண்டுவந்து எட்டுத் திக்கு மொழிகளிலேயே பாடுவதுதான் இரும்புச்செவி கொண்டோர் செய்வது. புரிந்த மொழியில் பாடுவது மெல்லிசையைச் சேர்ந்த ரகம் என்றும் பஜனைகள் என்றும் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரிகிறதாம். என்னைக் கேட்டால் ஒரு சில பாடல்கள் தவிர கர்நாடக சங்கீதத்தில் எல்லாமே இறைவழிபாடுதான், பஜனைதான். அதை புரிந்த மொழியில் பாடினால் மோட்சமாவது கிட்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தமிழ் கர்நாடக வித்வானுக்கு நடந்த விழாவில் ஒரு தமிழ் எழுத்தாளர் அந்த வித்வானின் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார். தமிழனின் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுக்குமளவு நிலமை இருக்கிறது. அதில் அந்த வித்வான் பேசும்போது ஒரு மலையாளப் பாடகர் ஒரு தமிழ் பாடலை கொலை செய்தார் என்று பேசினார். தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த.... என்று பாடினாராம். கண்ணாடி மாளிகையில் இருந்து கல்விட்ட கதை இது. இந்தப் பாடகரின் மற்ற மொழிப் பாடல்கள் - குறிப்பாக மீரா பஜன் - கேட்டால் அவரது பரம விசிறிகளே பத்து மைல்ஓடுகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இடையில் எதற்கோ வெளியே சென்று திரும்பும்போது ஒரு பாடகி பாடிக் கொண்டிருந்தார். சம்மா நம்மா கும்மா என்று போய்க்கொண்டிருந்தது பாடல். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடா இது என்று என் நண்பனைக் கேட்டேன். அந்த பாடல் எது தெரியுமா? சௌம்யா பாடிய தேவகானம்தான் அது. இசைக்காக வார்த்தைகளை சிதைத்து பாடினால் இப்படித்தான். அதுவே பொருள் தெரிந்தால் அப்படி சிதைக்க மனம் வராது. பொருள் தெரிந்தால், எங்கோ மணம்தான் பறக்கும். வேறு எதுவும் பறக்காது. நீங்கள் அடுத்த முறை எந்தரோ மகானுபாவுலு யாராவது பாடினால் கவனியுங்கள். நிறைய பேர் 'எந்தரோ'வையே ஒரு கை பார்ப்பார்கள். entha ro என்பார்கள் அது போகட்டும். நான் சொல்வது கடைசி லு. வார்த்தைகளை ஒலியில் பொருத்தும்போது லு அடுத்த வரிக்கு தள்ளப்படுகிறது. பொருள் தெரிந்தவர்கள் அதை சேர்த்து சிதைக்காமல் பாடுவார்கள். மற்றவர்கள்
எந்தரோ மஹானுபாவு
லூஊஊ அந்தரிகி
என்று மாற்றி விடுவார்கள்.
இன்னொரு தமிழ்ப்பற்று கொண்ட கூட்டம் இருக்கிறது. ஒரு பாடகி இப்படி பாடினார்...
ஓங்கி உலகலந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்கு ( nambaavaikku) ஷாற்றி நிராடினாள்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் ஷென்னேல் உடுக்கையருகல
பூங்குவலை போதில் பொரிவண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கு இருந்து ஷீற்ற முலை பற்றி வாங்க கடும் நிறைகள்
வண்ணப் பரும் பஷுக்கள் நீங்காத ஷெல்வம் நிரைந்தேலொரெம்பாவாய்......
கல்கியே வந்து யாரும் தமிழில் பாடவேண்டாம் என்று தடையுத்திரவு போடுமளவுக்கு இருக்கிறது டமிலிசை.
ஒரு பாடலுக்கு இசை வடிவம் கொடுக்கும்போது கவனமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உ.வே.சா.வுக்கு ஒரு கிராமக் கூத்தில் நடந்தமாதிரிதான் இருக்கும். ஒரு கிராமத்தில் உ.வே.சா. போகும்போது கூத்து நடந்து கொண்டிருந்ததாம். இவர் போய் உட்காரும்போது பாடகன் இப்படி பாடிக் கொண்டிருந்தானாம்.
மரத்தேப்பூ மரத்தேப்பூ
டிங்கினானே டிங்கினானே
என்ன பாடுகிறான் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்?