Showing posts with label பெண் கல்வி. Show all posts
Showing posts with label பெண் கல்வி. Show all posts

Sunday, May 17, 2015

மாறும் சமூகம், மாற வேண்டிய மனிதர்கள்

        சென்ற 8 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  வெளிவந்தது. வழக்கம் போல மாநில அளவில் முதல் மார்க் வாங்கிய மாணவ மாணவிகளுடைய பேட்டி அவர்களுடைய பெற்றோர்களிடம் பேட்டி ஆசிரியர்களிடம் பேட்டி இப்படியாகச் செய்திகள் செய்திதாள்களில் நிரம்பி வழிந்தன. சிறைக் கைதிகள் தேர்வு எழுதி பெற்ற வெற்றி, கூலித்  தொழிலாளியின் மகன் 1180 மார்க் (98 சதவிகிதம் ) எடுத்து சாதனை. இப்படி பல செய்திகள்.
    கீழ்த்தட்டு மக்கள் பகுதியில் சிலருடைய கல்வி ஆர்வமும்,  உழைப்பும், முன்னேற்றத்திற்கான முயற்சியும் தமிழ்ச் சமூகத்தை சில வருடங்களில்  தலைகீழாக மாற்றும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. கல்வித் துறையில் விபரீதமான ஒழுங்கீனங்கள் பற்றிய பல செய்திகள் வந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்பிக்கையூட்டும் செய்திகளும் வரத்தான் செய்கிறது
     இவ்வளவு செய்திகளுக்கு இடையில் என்னை வெகுவாகக் கவர்ந்த ஒரு செய்தியைக் கீழே கொடுக்கிறேன் அதற்கு தனிப்பட்ட முறையில் சில காரணங்கள் உண்டு.
      பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலத் துறையின் பாதுகாப்பில் படித்து தேர்வு எழுதிய 19 பெண்களில் 17 பேர் தேர்வில் வெற்றி பெற்றனர்.இவர்களில் அதிகபட்சமாக ஒரு பெண் 867 மார்க் ( 75 சதவிகிதம் )வாங்கியிருந்தாள். இந்த செய்திதான் என்னைக் கவர்ந்த செய்தி.
     இந்த 19 பெண்களுக்கும் வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் நிச்சயமாகி கடைசி நேரத்தில் சமூக நலத் துறை அதிகாரிகள் தலையிட்டதால் நிறுத்தப்பட்டது. பெற்றோர்களிடமிருந்து அந்த பெண்கள் மீட்கப்பட்டு சமூக நலத் துறை ஆதரவில் கல்வியைத் தொடர்ந்தனர்.பெற்றோர்கள் மீது பால்ய விவாகத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது பெரம்பலுர் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப் பிற்பட்ட மாவட்டங்களில் ஒன்று. இதுபோன்ற சம்பவங்கள் அங்கே அடிக்கடி நடைபெறும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் மீறி பல குழந்தைத் திருமணங்கள் அந்த பகுதிகளில் இப்பொழுதும் நடக்கத்தான் செய்கிறது.  
திருமணம் நிறுத்தப்பட்ட பிறகு அரசு அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கல்வியைத் தொடர ஒப்புக் கொண்ட பெண்கள்தான் மேலே குறிப்பிடப்பட்ட 19 பெண்கள்
     இந்த  செய்தியின் பின்னணியில் உள்ள ஒரு சம்பவத்தை  சொன்னால் மேலும்  விளக்கமாகப் புரிந்து கொள்ள முடியும்.
 சென்ற ஆண்டு மார்ச் மாதம் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை தொடர்பு கொண்டவர் தன் பெயரைச் சொல்லித்  தானே அறிமுகப் படுத்திக் கொண்டார். அவர் ஒரு முஸ்லீம் இளைஞர். குரான் வாசகர் வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். அவர் என்னை தொடர்பு கொண்டதற்கான நோக்கம் பற்றி விசாரித்தேன்.
  அவர்கள் அமைப்பின் கூட்டத்தில் குரான் பற்றி பேச என்னை அழைத்தார். நான் அவரை முன்பின் பார்த்ததில்லை.பேசுவதற்கு என்னை ஏன் அழைக்கிறீர்கள் என்னைப் பற்றி நீங்க்ள் எப்படிக் கேள்விப் பட்டீர்கள் என்று கேட்டேன். என்னுடைய முஸ்லீம் நண்பர் ஒருவருடைய பெயரைச் சொல்லி அவர்தான் உங்களைப் பேச அழைக்கும்படி கூறினார் என்றார். தானே என்னை சந்திக்க நேரடியாக வருவதாகவும் கூறினார்.
     சற்று நேரத்தில் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். ஒருவர் முஸ்லீம் என்று தோன்றக் கூடிய வகையில் தாடி வைத்துக் கொண்டு பைஜாமா ஷெர்வானியுடன் இருந்தார். மற்றொருவர் நாகரீகமான முறையில் உடை அணிந்திருந்தார்/.
 அவர்களுடன் பேச்சைத் தொடர்ந்தேன். முஸ்லீம்களின் அமைப்பில் கலந்துகொண்டு குரான் பற்றி பேசுவதில் எனக்கு நிறைய தயக்கம் இருந்தது. அவர்களுடைய தீவிரவாதப் பின்னணி பற்றிய என்னுடைய சந்தேகமும் தீரவில்லை.
  நான் வெளிப்படையாகக் கூறினேன். நான் எல்லா தீவிரவாதத்துக்கும் எதிரான நிலை கொண்டவன். முஸ்லீம் தீவிரவாதம் பற்றியும் எனக்கு அழுத்தமான மாற்றுக் கருத்துகள் உண்டு என்றேன். ஆகையால் நீங்கள் விரும்பும் முறையில் குரானைப் பற்றி முழு ஆதரவாகப் பேச முடியாது என் கருத்தில் பட்ட விஷயத்தை சுதந்திரமாகப் பேசுவேன் என்று கூறினேன். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் மற்ற பேச்சாளர்கள் பற்றியும் விசாரித்தேன்
  ஒரு ஹிந்து, ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லீம் குரானைப் பற்றி பேசும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் ஒரு ஹிந்து என்ற முறையில்  குரானைப் பற்றி பேசுங்கள். உங்கள் கருத்தை சுதந்திரமாக வெளியிடலாம் என்றார்.  
. நான் என் கருத்தில் பட்டதைச் சொல்வேன். அதிருப்தியாளர்கள் யாரும் குழப்பம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. யாராவது கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லமாட்டேன் என்றேன். என்னுடைய எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்  கொண்டார்கள்.
   குறிப்பிட்ட நாளில் கூட்டம் சிறப்பாகவே நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்தான். ஒரு சில முஸ்லீம் பெண்களும் வந்திருந்தார்கள்.
    கிறிஸ்தவர் என்ற முறையில் பேசிய வழக்கறிஞர் என்னுடைய நண்பர். அவர் பேசிய பிறகு நான்  குரான் பற்றி பேசினேன்.
      குரான் தோன்றிய காலகட்டம் அன்றைய மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த மக்கள் அவர்களுடைய சமய, சமூக வாழ்க்கை முறையில் இருந்த பொருந்தாத நிலை தொடர்ந்து அவர்கள் மத்தியில் இருந்த உட்பூசல் இவற்றிற்கு மாற்றாக நபிகள் நாயகம் செய்த மாற்றங்கள் பற்றி விரிவாகப் பேசிவிட்டு இன்றைய முஸ்லீம்களின் வாழ்க்கை முறை பற்றி பேசினேன். குரான் மட்டுமல்ல எந்த சமய நூலிலும் எல்லா காலத்துக்கும் உரிய முறையில் தீர்வு எழுதப்படவில்லை என்று கூறினேன் சொல்லப்பட்ட அடிப்படை அறநெறிகளை மட்டும் நாம் தவறாமல் பின்பற்றவேண்டும் என்றேன். இன்றைய பிரச்னைகளின் ஆழத்தை புரிந்து கொண்டு அதற்கு தக்க முறையில் விடை காண வேண்டும் என்றேன்.
      உதாரணமாக அப்பொழுது அருகில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டேன். அந்த மாவட்டத்தில் சிறு வயது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் அதிகம் அத்தகைய திருமணம் ஒன்றை அரசாங்க சமூகநலப் பிரிவு அதிகாரிகள் தக்க நேரத்தில் தலையிட்டு நிறுத்தினார்கள். பெற்றோர்களை கைது செய்து அவர்கள் மீது பால்ய விவாகத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தார்கள்.
       அந்த முறையில் ஒரு முஸ்லீம் பெண்ணுடைய திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது. பெண்ணின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. முஸ்லீம் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் மீது எதிர்வழக்கு தொடுத்தார். அவருடைய வாதம் எல்லாம் இதுதான். நான் ஒரு முஸ்லீம் பால்ய விவாகத் தடைச் சட்டம் என்னைக் கட்டுப் படுத்தாது. எங்கள் ஷரியாவின்படி என் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க உரிமை உண்டு.
என்னுடைய மதவிதிகளின்படி,  ஷரியத்தின் படி செயல்பட எனக்கு உரிமை வேண்டும் என்று கோரியிருந்தார்.
  இதில் வேடிக்கை என்னவென்றால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும் ஒரு முஸ்லீம் என்பதுதான். டாரஸ் அஹமது என்பது அவருடைய பெயர் 
   இந்த செய்தியைக் குறிப்பிட்டுவிட்டு ஒரு இளம் பெண்ணின் கல்வியைக் கெடுத்து, மிகச் சிறுவயதில் திருமணம் செய்து வைக்க ஷரியத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் முயற்சி இறுதியில் முஸ்லீம்களுக்குத்தான் கேடு செய்யும் என்று கூறினேன். இந்தியாவில் முஸ்லீம் பெண்களில் கல்வி கற்றவர்கள் 15 சதவிகிதம்தான். இந்த அளவுக்குப் பின் தங்கிய நிலைக்கு யார் காரணம், எந்த மதக் கருத்துக்கள் காரணம் என்பதைக் கண்டு அதைக் களைய முஸ்லீம் இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று பேசினேன்.
  மற்றும் குரானின் வேறு சில அம்சங்களைப் பற்றியும் பேசி முடித்தேன். குரானின் எல்லா கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு வாழ்வது என்பது நவீன கால வாழ்க்கைக்கு பொருந்துமா என்பது பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றேன் என் பேச்சைக் கேட்டவர்கள் எந்த அளவுக்கு என் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டார்கள் என்பது பற்றி எனக்குச் சந்தேகம் இருந்தது.
  இறுதியாக எனக்குப் பிறகு ஒரு முஸ்லீம் பேசினார் அவர் சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு கல்லூரிப் பேராசிரியர்.அவர் என்னைப் பற்றி சில வார்த்தைகள் பெருமையாகக் கூறினார்
ஆனால் என்னுடைய கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்தார் அவர் என்னுடைய எந்த கருத்தையும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அவர் முஸ்லீம்களுக்கு ஷரியத் மட்டுமே வழிகாட்டி:முஸ்லீம் பெண்களுக்கு குரான் கல்வி ஒன்று மட்டுமே போதும் திருமணம் என்பது பெற்றோர்கள் தீர்மானித்துச் செய்யும் குடும்பக் கடமை. அதில் தலையிட அரசாங்கத்துக்கு உரிமை இல்லை இது போன்ற கருத்துக்களை அவர் கூறினார் அதற்கான ஆதாரங்களை குரானிலிருந்து மேற்கோள் காட்டினார்.
   என்னுடைய பேச்சுக்கு மறுப்பாகவே அவருடைய பேச்சு அமைந்திருந்தாலும் நான் பதில் எதுவும் கூறவில்லை. கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது
      கூட்டம் நடந்த பின் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் நான் ஒரு மருத்துவ மனைக்குப் போயிருந்தேன். டாக்டருடைய அறைக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது  நடுத்தர வயதுள்ள ஒரு முஸ்லீம் தன் மனைவியுடன் வந்து கொண்டிருந்தார். சற்று தூரத்திலிருந்து அவர் என்னைப் பார்த்தார். அவர் தொடர்ந்து என்னையே உற்று கவனிப்பதை நான் கண்டேன். நான் எதுவும் பேசவில்லை. அவர் சற்று தூரத்தில் நின்று கொண்டார்
  சற்று நேரம் கழித்து அவர் என்னருகில் வந்து என்ன ஸார் உடம்பு
சரியில்லையா? என்று விசாரித்தார். ஆமாம் என்று கூறிவிட்டு சற்று தயக்கத்துடன்,  நீங்கள் யார் உங்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்றேன்.
அவர் மகிழ்ச்சியோடு நீங்கள் குரான் பற்றி அன்று பேசிய கூட்டத்துக்கு வந்திருந்தேன் ஸார் என்று கூறிவிட்டு தன் பெயரச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டார். மேலும் தொடர்ந்து சொன்னார், அன்று உங்கள் பேச்சு ரொம்ப நன்றாக இருந்தது ஸார் என்றார்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி என்று கூறிவிட்டு சிரித்தபடியே சொன்னேன் அதுதான் அந்த பாய் என் பேச்சை எல்லாம் மறுத்துப் பேசிவிட்டாரே என்றேன்
  ஒரு ஹிந்து நீங்கள் குரானைப் பற்றி பேசியதே  எங்களுக்குப் பெருமைதான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிவிட்டு  அவர் பேசியது ஒரு பக்கம் இருக்கட்டும். சார்.நீங்கள் பெரம்பலூர் கலெக்டர் பற்றி பேசியது நல்ல விஷயம். அவர் செய்ததும் சரி. பெண்கள் படிக்கணும் ஸார் எந்த மதமானால் என்ன பெண்கள் படிக்கணும் அதைத்தானே அவர் செய்யறார் என்றார்
    அவர் பேசியதை நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவருடைய மனைவியும் பேசினார். எங்களுக்கு மூன்றும் பெண் பிள்ளைகளாகப் போச்சு. அல்லா கருணையில் எல்லோருமே நல்லா படிக்கிறாங்க. எங்க வசதியைக் குறைத்துக் கொண்டு மூன்று பேரையும் படிக்க வைக்கிறோம் ஸார் என்றாள் பர்தா அணிந்த அந்த பெண்.  அவள் முகத்தில் மகிழ்ச்சி நிறம்பி வழிவதை என்னால் உணர முடிந்தது.   
   மதத்தை விடாப் பிடியாகப்  பிடித்துக் கொண்டு பழைய கதை பேசுபவர்களை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லா மதக் கருத்துகளையும் சமகால வாழ்க்கைக்கு உகந்த முறையில் விளக்கம் செய்ய வேண்டும்.இல்லையேல் அந்த கருத்துக்கள் பொருத்தப்பாட்டை இழந்துவிடும்.என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்துவதாக நினைக்கிறேன் அந்த முஸ்லீம் தம்பதிகளை மனமாற வாழ்த்தினேன்.
     இந்த கட்டுரையை முடிக்கும் போது ஒரு இனிப்பான செய்தியைக் கூறி முடிக்கவேண்டும். மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கல்வியை வளர்ப்பதில் பெரும் சாதனை செய்த்தற்காக 2014 ம் ஆண்டு ஜனாதிபதி பரிசும் பாராட்டு பத்திரமும் அந்த மாவட்ட கலெக்டர் டாரஸ் அகமது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த இனிப்பான செய்தி
-    மு.கோபாலகிருஷ்ணன்