Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Wednesday, August 27, 2014

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதைத் தைத்தது.  எவரெஸ்ட் ஏறிய டென்சிங்கிடம், 'இந்த மலையில் ஏறி என்ன கண்டீர்கள் ?' என்று கேட்டதற்கு, 'மனிதன் மலைச் சிகரத்தைக் கைப்பற்றுவதைவிட, தன்னைத் தானே உணர்வது முக்கியம் என்று புரிந்து கொண்டேன்! இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள நான் எவரெஸ்ட் மீது ஏற வேண்டி இருந்தது!!" என்றாராம்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்று கணியன் பூங்குன்றன் சொல்லிச் சென்றதைப் போல பல யோகிகள், மகான்கள், பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டு வந்திருக்கிறோம்.  இது எத்துணை சத்தியம் என்று நம்மை நாம் அறிந்தால் மட்டுமே சாத்தியம்!!

'தன்னை உணர்வது' என்றால் என்ன என்று அறிய முதலில், நம்மை நாம் அறிய வேண்டும்!  நான் அறிந்த‌ வ‌ரையில் திருமூல‌ரின் இர‌ண்டு பாட‌ல்க‌ள் இவ‌ற்றை அழுத்த‌மாக‌ உண‌ர்த்துகின்ற‌ன‌.  அவ‌ற்றிலிருந்து தான் க‌ணிய‌ன் பூங்குன்ற‌ன் தம‌து 'தீதும் ந‌ன்றும்'ஐ எளிமைப்ப‌டுத்தியிருக்க‌க்கூடும்.

கீழே உள்ள திருமூல‌ரின் இரு திருமந்திரப் பாடல்கள், சாதார‌ண‌ வ‌ரிக‌ள் போல‌த் தோன்றினாலும்,  உள்ளார்ந்து பய‌ணிக்க‌ ஒரு பேருண்மை புல‌னாகும் என்ப‌து திண்ண‌ம்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!

மனித இனத்தில் இரண்டே ஜாதி தான்.  ஒன்று, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போதும் என்ற மனம்.  மற்றொன்று, எவ்வளவு தான் கிடைத்தாலும் போதாதென்ற மனம்.

தந்தையும், தாயும், குழந்தை மகளும் நகைக்கடைக்குள் நுழைந்தால், பளபளக்கும் நகைகளைவிட, அங்கே பளபளப்பாக இருக்கும் தாயின் மனம்.  ஆனால், குழந்தைக்கோ அங்கிருக்கும் பலூன்களிலோ, பொம்மைகளிலோ பதிந்திருக்கும் மனம்.  த‌ந்தையின் ம‌ன‌ம் ... சொல்ல‌வே வேண்டாம் :)

எல்லாவற்றிற்கும் காரணம் நாம் தான்.  அது ... நம்மை ஆட்டுவிக்கும் மனம் தான்.  இந்த பாழாய்போன மனது இருக்கிறதே, அது, கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் துள்ளித் திரிவது.  இலக்கின்றித் துள்ளிக் குதிப்பது.  ஓரிடம் பற்றாது, முட்டி மோதி வீழ்ந்தெழுந்து ... மீண்டும் அங்குமிங்கும் துள்ளி ஓடுவது.  மனதினை அடக்கிய மனிதன் மகான் ஆகின்றான்.

நம்மை அறிவதை விடுத்து பிறரை அறிவதில் அதிக‌ நாட்டம் செலுத்துகிறோம்.  பிறரை அறிவதுகூட ஒரு கட்டத்தில் சுலபம் என்றாகிவிடும், நம்மை நாமே அறிய முற்படுகையில்.

நம்மை அறிய‌, மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.  காலையில் எழுந்ததில் இருந்து, மாலை வரை உடலாலும் மனதாலும் அலுத்துத் திரியும் நாம், 'ஓரிடம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது சாத்தியமா ?'  என்றால், ஆம் ... ஆனால், உடனே இல்லை எனலாம்.  மனதை ஒருமுகப்படுத்தி, தன்னை அறிய, நமது சுவாசத்தைக் கவனிக்க மற்றும் சரி செய்யச் சொல்கிறார் திருமூலர் ப‌ல‌ பாட‌ல்க‌ளில்.  அவ‌ற்றைப் பிரிதொரு ப‌திவினில் பார்க்க‌லாம்.

***

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது சங்ககால‌ புறநானூற்றுப் பாடல்.   திருமந்திரம், திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வருகிறது.  இது ஐந்தாம் நூற்றாண்டு படைப்பு என்கின்றனர் பலர்.  ஆனால், திருமுறைகள் காலத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படவில்லை என்பதையும் நாமறிய வேண்டும்.  தென்நாட்டில் வாழும் தலைச்சங்கத்தின் தலைவராக இருந்த அகத்தியரை சந்திக்க வடக்கில் இருந்து வந்ததாக திருமூலரின் வரலாறு சொல்கிறது.  அதுவுமன்றி  ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் பாடல்கள் பாடியாதாகவும் நாம் படிக்கின்றோம்.  இது 'எந்த ஆண்டு' என்றும் ஆராய வேண்டும்.  கண்டிப்பாக சூரியனைச் சுற்றும் பூமி சுழற்சி ஆண்டாக இருக்கமுடியாது.