Showing posts with label அன்னையர் தினம். Show all posts
Showing posts with label அன்னையர் தினம். Show all posts

Thursday, May 22, 2014

தாய் - 4

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் மூன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


இதுவரைக்கும் அம்மா எப்படி தன்னை வளர்த்தாள், எப்படி தன்னை பெற்றெடுத்தாள் ந்னு பாடிய பட்டினத்து ஸ்வாமிகள் அம்மாவின் சிதைக்கு தீ மூட்டி அது அடங்கியதும் நேரடியாக சிவபெருமானிடம் கேட்கும் சில கேள்விகள் இந்தப் பாடலில்;

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ
என்னை மறந்தாளோ சந்தமும் உன்னையே நோக்கி
உகந்து வரம் கிடந்தென் 
தன்னையே ஈன்றெடுத்த தாய்.

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானே எப்பொழுதும் உன்னை தன் அகக் கண்ணால் பார்த்து மகிழ்ந்து குழந்தைப் பேறு வரம் வேண்டித் தவம் கிடந்து என்னை உன் அருளால் ஈன்ற என் தாய் நான் இட்ட தீயினால் வெந்து ஆம்பல் ஆயினளோ, அவள் அன்புக்கு உரிய என்னை மறந்து விட்டாளோ, அவள் உன்னை எப்பொழுதும் மறவாதவள் அதனால் அவள் உன் பதத்திற்கு வந்து பேரின்பம் அடைந்தாளோ என்று கேட்கிறார்.


அடுத்து ஊரார் அனைவரையும் அழைக்கின்றார், அழைத்து இந்த வாழ்க்கை எப்படிப் பட்டது என்பதை நான்கு வரிகளில் தெளிவாக்குகிறார்.

வீற்றிருந்தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


என் தாய் நேற்று உயிருடன் இருந்தாள், திண்ணையில் வீற்றிருந்தாள், பிறகு இறந்து போய் வீதி தனில் கிடந்தாள், இன்று வெந்து சாம்பலாகிப் போனாள்.  இதற்கு காரணம் என்ன என்று யாரும் யோசிக்காமல், அதற்காக அழாமல் எல்லோரும் அவளுக்காகப் பால் தெளிக்க வாருங்கள்.  இங்கும் அங்கும் எங்கும் பரவி இருப்பது சிவமயமே.

இவ்வளவு நேரம் தனது தாயின் பிரிவை எண்ணி கலங்கிய பட்டினத்தார் எப்படி இந்த கடைசிப் பாடலில் எல்லோரையும் அழாதே என்று சொல்கிறார்ன்னு ஒரு கேள்வி எழும்.  இவருக்கு ஒரு நீதி நமக்கு ஒரு நீதியா? அப்படி இல்லை, அவர் அழுவதாக காட்டியிருப்பது ஒரு தாய் என்பவள் எப்படி பட்ட நல்ல குணங்கள் கொண்டவள், எப்படிப்பட்ட கருணை கொண்டவள் என்று நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்கு புரியவைக்க என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவரது இந்த கருத்தை சார்ந்து பிற்காலத்தில் ஒரு கவிஞர் இப்படிப் பாடினார்:

"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ நிலத்தீர்"

தன்னைச் சுமந்து பெற்ற தாய்க்கு இறுதிக் கடன் செய்யும் போது இவர் பாடிய பாடலைப் பார்த்தோம்

அடுத்து இவர் தனக்கு பிறவா வரம் வேண்டி பாடுகிறார் என்று பார்ப்போம்.

எத்தனையூர், எத்தனை வீடு எத்தனைதாய் பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டு அழைக்க ஏன் என்றேன் நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா 
உனக்கு திருவிளையாட்டோ


நமக்கு கிடைத்த இந்த பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்று நமக்கு தெரியாது,
எத்தனை ஊர்ல இருந்தோம் தெரியாது.
எத்தனை வீடுகள்ல இருந்தோம் தெரியாது,
நம்மை பெற்றவர்கள் எத்தனைப் பேர் தெரியாது,
எத்தனைபேர் இட்டு அழைத்தார்கள் தெரியாது - அதாவது எவ்வளவோ பேர் நம்மை அழைத்து பேசியிருப்பார்கள் தெரியாது
இன்னொரு அர்த்தம் - எவ்வளவு பெயர் நமக்கு இதுவரை இருந்தது தெரியாது
இப்படி இத்தனை பிறவிகளில் நான் எல்லோருக்கும் ஏன் ஏன் நு பதில் சொல்லி சொல்லி களைப்பாகி விட்டேன். இது என்ன உனக்கு ஒரு திருவிளையாடலா ந்னு கேக்கரார்.  இந்தப் பாடலில் தன்னைப் பற்றிச் சொல்லி பிறவா வரம் தரச் சொல்லி கெஞ்சுகிறார்.


இந்தப் பாடலைத் தழுவி தமிழ்த் திரைப்படத்தில் வந்த ஒரு பாடல்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா, அந்த ஊர் நீயும் கூட இருந்த ஊர் அல்லவா

 அடுத்த பாடலில் அம்மா, பிரம்மா இருவருக்கும் இருக்கும் கஷ்டத்தைச் சொல்லி பிறவா வரம் கேக்காரார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா

திரு இருப்பையூரில் இருக்கும் சிவனே என்னை பெற்று பெற்று எத்தனையோ அம்மாக்கள் உடல் சலித்து விட்டார்கள், கடுமையான வினைகள் உடைய நான் பிறவிப் பெருங்கடலைக் கடக்க நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலையெழுத்தை எழுதி எழுதி வேதா (பிரமன்) கை சலித்து விட்டான், அதனால் எனக்கு இன்னொரு முறை ஒரு தாயின் கருப்பையில் வாழ வேண்டிய கஷ்டத்தைத் தராதே என்கிறார்.

அடுத்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிச் சொல்லி பிறவா வரம் கேக்கிரார்.

மண்ணும் தணலாற வானும் புகையாற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் பண்ணும் அயன்
கையாறவும் அடியேன் காலாறவும் கண்பார்
ஐயா திருவையாறா

திருவையாற்றில் வீற்றிருக்கும் சிவனே, என்னை மீண்டும் படைக்காமல் இருந்தால், மீண்டும் மீண்டும் நான் இறந்து என்னை கொளுத்தி கொளுத்தி இந்த பூமி சூடாவதைத் தடுக்கலாம்.

அப்படி கொளுத்தி கொளுத்தி வெளியேறும் புகையால் வானம் மறைக்கப் படாமல் காக்கலாம்.

பலகோடி தாய்மார்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் கொஞ்சம் இளைப்பாறலாம்
என்னைப் படைத்து படைத்து பிரமன் கை வலியில் துடிக்கிறார் அவருக்கு கொஞ்சம் கை வலியிலிருந்து ஆறுதல் கிடைக்கட்டும்.

உன்னைத் தேடித் தேடி இப்படி அலைந்து அலைந்து வலிக்கும் என் கால்கள் கொஞ்சம் இளைப்பாற எனக்கு பிறவா வரம் தா என்கிறார்.

என்னைப் போன்ற மனிதர்கள் இந்த உடலை பேணிவளர்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் இந்த உடலை ஒரு புண் என்கிறார் இவர்:

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு 
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியின் பொடி.

அதோடு இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு இதன் நிலை என்ன என்பதை இந்தப் பாடலில் தெளிவாக்குகிறார்:

எரியெனக்கு என்னும் புழுவோ
எனக்கென்னும், இந்த மண்ணும்
சரி எனக்கு என்னும் பருந்தோ
எனக்கு எனும் தான் புசிக்க
நரியெனக்கு என்னும் புன் நாய் எனக்கு
என்னும் இந்நாறு உடலைப் 
பிரியமுடன் வளர்த்தேன் இதனால்
என்ன பேறு எனக்கே.

எரி - நெருப்பு, புழு, மண், பருந்து, நரி, நாய் எல்லாம் என் உடலை சாப்பிட ஆவலுடன் இருக்கும் அது தெரியாமல் நாறும் இந்த உடலை இப்படிப் பிரியமாக வளர்த்தேனே இதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்கிறார்.

ஆரணம் நான்கிற்கும் அப்பால் அவர் அறியத் துணிந்த
நாரணன் நான்முகனுக்கு அரியான் நடுவாய் நிறைந்த பூரணன்
எந்தைப் புகலிப் பிரான் பொழில் அத்தனைக்கும் காரணன்
அந்தக் கரணம் கடந்த கருப்பொருளே


வேதங்கள் நான்கிற்கும் அப்பாற்பட்டவன்
அவனை அறியப் புறப்பட்ட நாரணன் மற்றும் பிரமன் இருவருக்கும் தெரியாதவன்
எல்லாப் பொருளிலிலும் இருந்து இயக்குபவன்
என் தகப்பன்
எல்லா உலகங்களுக்கும் வினை முதலானவன்
அந்தக் கரணங்களான - மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என ஒன்றும் இல்லாதவனும் முழு முதற் பொருளானவனுமான அந்தச் சிவனை வணங்கு கின்றேன்.


இந்தப் பாடலோடு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

முரளி இராமச்சந்திரன்.

Wednesday, May 21, 2014

தாய் - 3

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனு நீதியில 4 விஷயங்களை விட்டு வெக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்குன்னு துக்ளக் ஆசிரியர் சோ சொல்லுவார்.  ஒன்னு - விஷம், ரெண்டு - பகை, மூனு - பாம்பு, நாலு - நெருப்பு.  இதுல எதை மிச்சம் வெச்சாலும் அது நம்மள திரும்பி வந்து தாக்கும்.  யோசிச்சு பார்த்தா அது சரின்னு தெரியும்.  நாம யோசிக்கவே வேண்டாம்னுதான் அந்த காலத்துப் பெரியவங்க யோசிச்சிருக்காங்க இருந்தாலும் நாம யோசிப்போமே.  இதுல முக்கியமான ஒன்னு பகை.  அதை அழிக்க பலர் உபயோகிச்ச வழி என்னன்னு பார்த்தால் நெருப்புன்னு தெரியவரும்.  ஒரு ராஜா ஒரு அண்டை நாட்டை தாக்கி அவங்களை வெற்றி பெற்றால், உடனே அவங்களோட இடத்தை தீ வைச்சு அழிப்பாங்க.  இது அந்த நாட்டு மக்களோட மனதுல ஒரு பயத்தையும், அவங்களுக்கு பெரிய செலவையும் கொடுக்கும்ங்கரதும் ஒரு காரணம்.

புராணக் கதையில் சிவன், அசுரர்கள் மூனு பேரோட இடத்தையும் ஒரு சிரிப்பு சிரிச்சு எரிச்சதனால அவரோட பேரே திரிபுராந்தகன்.  அதே மாதிரி அனுமன் இலங்கைக்கு தீ வெச்சார், சிவன், மன்மதனை எரிச்சார்.  இந்த மாதிரி எரிக்கர வேலைகளை செஞ்சது எல்லாம் சிவ பெருமான்தான்.  அனுமன் சிவனோட அம்சம்கரது சொல்லித் தெரியவேண்டியதில்லை.  கந்தபுராணத்துல, மன்மதனை தவம் செய்யர சிவபெருமான் மேல மலர் அம்பு போட ப்ரம்மன் சொல்லும் போது மன்மதன் சொல்றான், அவரை ஒன்னும் பண்ண முடியாது காரணம் அவருக்கு "கையும் தழலாம், மெய்யும் தழலாம், நகையும் தழலாம்" அதே சமயம், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பஞ்ச பூதங்கள் இருக்குங்கு.  பஞ்ச பூதம்னா,  காற்று, நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாசம் அல்லது வெளி.

காற்று - நம்மோட சுவாசப் பைல காற்று இருக்கு.  நிலம் - நம்மோட மூளை மணல் துகல்களால் ஆனதுங்கரதை விஞ்ஞானிகளும் ஆராய்ந்து சொல்லியிருக்காங்க, அதனால நிலம் நம்ம உடம்புல இருக்கு.   நீர் -  தண்ணீரை நாம் குடிப்பதானாலும், இரத்தத்திலும் நீர் இருப்பதாலும் நம்ம உடம்புல நீர் இருக்கு.  நெருப்பு - எல்லோருடைய அடி வயிற்றிலும் நெருப்பு இருக்கு அதனால் நாம சாப்பிடர சாப்பாடு செறிக்கிறது, உடல் நிலை சரியில்லைன்னா, உடம்பு சூடாகிறது, அந்த அடி வயிற்று நெருப்பை குண்டலினி யோகத்தின் மூலம் ஒரு ஜோதியாக நம்ம புருவத்தின் மத்திக்கு கொண்டுவந்தால் ஒரு நீல வர்ணம் தெரியும்னு சொல்லப் படுகிறது, அதுதான் வெளின்னும் சொல்றாங்க.

இதையெல்லாம் நினைவு வெச்சு நமக்கு இந்தப் பாடல்ல பட்டினத்துஸ்வாமிகள் சொல்றார்:

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

இதுல முன்னை ங்கரது முன் + ஐ - அதாவது சிவ பெருமான்னு தெரிஞ்சுக்கனும்.
பின்னை என்பது - பின் + ஐ - அதாவது  லெட்சுமி - சீதை ந்னு தெரிஞ்சுக்கனும்.  அனுமன் தீ வைத்தாலும் அதனை செயல் படுத்தியது சீதை.
அன்னை இட்ட தீ - இதற்கு ரெண்டு அர்த்தம் இருக்கு, ஒன்னு - பட்டினத்துஸ்வாமிகளின் தாயார் இறந்து அந்த துக்கம் ஸ்வாமிகளின் வயிற்றில் ஒரு தீயை மூட்டுகிறது. ரெண்டு - நமது அடிவயிற்றில் இருக்கும் அந்தத் தீ, இந்தத் தாயின் கருப்பையில் இருந்து வந்ததால் நமக்கு வந்தது அதனால் அடிவயிற்றுத் தீ இந்த அன்னை தந்தது.

ஒரு தாய் தன் குழந்தையை எப்படி வளர்ப்பாளாம், அந்தக் குழந்தை வெளியில் விளையாடப் போனால் அந்தக் குழந்தை பின்னாடியே போவாளாம், அப்படி போய், அந்தக் குழந்தை விளையாடும் போது வெட்டப் படாமல் இருக்கர அந்தக் குழந்தையோட சிகையைப் பார்த்து ஒரு சிறு குருவி கூடு கட்டிடலாம்னு நினைச்சு அந்தக் குழந்தையை சுத்தி வட்டமா பறக்குமாம், அதை விரட்டுவாளாம்.  பறவைகள் குழந்தை கையில் இருக்கர பட்சணத்தை பறிக்க வருமாம், அதனால அதை விரட்டுவாளாம்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த கை தாயின் கை ந்னு இந்தப் பாடல்ல சொல்றார்.

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே
பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல்
கோதாட்டி, என்னைக் கருதி
வளர்தெடுத்த கை.

இப்படி என்னை வளர்த்த கை இப்போது பாவியாகிய நான் வெச்ச நெருப்பால் வெந்து பொடி சாம்பல் ஆகுதே என்ன செய்வேன்னு சொல்றார்.

முரளி இராமச்சந்திரன்
தொடரும்.

Tuesday, May 20, 2014

தாய் - 2

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நாமெல்லோரும், மாடு, ஆடு இதெல்லாம் கன்று ஈன்று பாத்திருப்போம்.  அதெல்லாம் கன்று ஈன்றதும், கொஞ்ச நேரம் அதன் குட்டிகளோடு இருக்கும், அப்புறம், அந்த குட்டிகள்தான் தாயைத் தேடி வரனும்.  யாராவது குட்டிகள் கிட்ட வந்தா அப்போ தாய் பசுவோ அல்லது தாய் ஆடோ பயந்து போய் அவங்க கிட்ட இருந்து குட்டியை காப்பாத்த ஓடி வரும் மத்தபடி குட்டிகள் அதனோட தாயின் அருகாமையில நல்லா விளையாட்டிட்டு இருக்கும்.  ஆனா மனிதக் குழந்தைகள் விஷயம் அப்படி இல்லை, குழந்தைகள் ஒரு 2-3 வயசு வரும் வரைக்கும், அம்மாவோட அன்றாட பராமரிப்பு, இல்லை இல்லை ஒவ்வொரு கணமும் அம்மாவோட பராமரிப்பு அவசியம் தேவை.  ஒரு தாய்ப் பறவை அதன் குஞ்சுகளுக்கு தேவையான உணவை கொண்டு வந்து ஒவ்வொரு குஞ்சின் வாயிலும் தானே ஊட்டும், பிறகு அந்தக் குஞ்சிற்கு இறக்கை முளைத்து பறக்க துவங்கியதும், அதை விரட்டி விட்டுவிடும்.  ஆனால் நம்மை வளர்க்கும் அம்மா ஒரு போதும் மகனையோ மகளையோ அப்படி விரட்டி விடுவதில்லை.

நமக்கு கிடைக்கும் முதல் மெத்தை அம்மாவின் மடிதான், தூளி அம்மாவின் கைகள்தான், தொட்டில் அம்மாவின் தோள்கள்தான், போர்வை அம்மாவின் புடவைதான், நாம் பெற்ற முதல் காதல் அம்மாவின் காதல்தான்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்

இந்தப் பாடலில் வரும் "முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றி" என்ற வரிகளை பாசமலர் என்ற படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலிலும் பார்க்கலாம்.

நாம் பிறப்பதற்கு முன்னாடி எவ்வளவு தொல்லைகளை அம்மாவுக்கு கொடுத்தாலும், அம்மா அதற்காக நம்ம கிட்ட கோபம் காட்டரது இல்லை.  குழந்தை நடு இரவில வீல்ன்னு கத்தும், பத்து நாள் சாப்பிடாத மாதிரி கதறும், நாம தங்கும் விடுதி (apartment) மேல கீழ இருக்கர அடுத்த குடித்தனக்காரங்க அடுத்த நாள் சண்டைக்கு வர்ர மாதிரி இருக்கும் நிலைமை, அப்போ, என்னை மாதிரி பொறுப்பில்லாத தகப்பன்கள் பட்டுனு எழுந்து தலைகாணியை எடுத்திட்டு அடுத்த ரூமுக்கு போயி தூங்கிடுவோம், ஆனா, அம்மா அப்படி இல்லை, அவ வீட்டு வேலைகளை முடிச்சுட்டு படுத்து ஒரு அரை மணி நேரம்தான் ஆயிருக்கும், இருந்தாலும், சலிக்காம எழுந்து ஒரு கோப்பை பாலை சுடப் பண்ணி அதை பக்குவமா சூடாற்றி, ஒரு பாட்டிலில போட்டு, குழந்தைக்கு கோடுத்தா அது ரெண்டு வாய் குடிச்சுட்டு தூங்கிடும்.  இது நம்மை மாதிரி சாதாரண மக்களுக்கு நடக்கர விஷயம் மட்டும் இல்லையாம்.  முருகன் இப்படித்தான் இருப்பானாம்.  அதை கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்துல "எள்ளத்தணை வந்து உறு பசிக்கும்" நு எழுதறார்.  எள் அளவு பசி அதுவும் உறு பசி, அதாவது தாங்க முடியாத பசி கொண்டவன் முருகப் பெருமான்னு சொல்றார்.

இதைப் பட்டினத்துஸ்வாமிகள் பாடும் அழகைப் பாருங்கள்:

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து
வளர்தெடுத்துத் தாழாமே அந்திப் பகல் 
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்.

குழந்தை முதல் முதலா பேசரதை கேக்கரது ஒரு ஆனந்தம்.  அதை வார்த்தைகளால வர்ணிக்க முடியாது.  திருவள்ளுவர் - "குழலினிது யாழினிது என்பர், தம் மக்கள் மழலைச் சொல் கேளாதோர்" நு எழுதறார்.  அதுலயும் தம் மக்கள் இதுதான் முக்கியம்.  அடுத்த வீட்டு குழந்தை ஒன்னே முக்கால் வயசு, மழலையாப் பேசினா இந்த வீட்டுல அப்பாவும் அம்மாவும் சொல்வாங்க, "ஒன்னே முக்கா வயசு ஆச்சு இன்னும் என்ன மழலை பேச்சு அது விளங்கினாப்புலதான்"னு.  ஆனா அதே சமயம் இவங்களோட 12 வயசு பையன் கொஞ்சி கொஞ்சி பேசினா, "அவன் வெகுளி, பால் மணம் மாறாத பாலகன்".  இதுதான் அந்த தம் மக்கள்ங்கரதுக்கான வித்தியாசம்.  அப்படி நாம செய்யர, சொல்ற எல்லாத்தையும், பார்த்து பார்த்து ரசிச்சு, ரசிச்சு, மகிழ்ந்து, நம்மை கொஞ்சி குழாவி, சீராட்டி பாராட்டி வளர்பவள் தாய்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த தாய்க்கு நாம பலப் பல நல்ல ஆகாரங்களை செய்து தந்து அவளுக்கு தினமும் வித விதமான உணவு தந்து பராமரிப்பது நம்ம கடமை.


அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு மானே
என அழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு


முரளி இராமச்சந்திரன்
தொடரும்

தாய் - 1

உலகத்துல ரெண்டு பேர் இல்லாம யாரும் இல்லை.  அம்மாவும் அப்பாவும்.  அதுலயும் அம்மா எல்லோருக்கும் ரொம்ப முக்கியம்.  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்-னு பாட்டு பாடுவாங்க, ஆனால் அம்மா என்பது இறைவன் கொடுக்கர வரமில்லை, அது இறைவனின் கருணை.  இறைவன் வரம் தரனும்னா நாம ஏதாவது செய்யனும், தவமோ, யோகமோ, யாகமோ.  ஆனா அவனுடைய கருணைக்கு இதெல்லாம் தேவையில்லை, வெறும அவனோட நாமாவைச் சொன்னா போதும்.  வரம் கேட்டு வாங்கரது, கருணை தானா பொழியறது.

நமக்கெல்லாம், அன்னையர் தினம் ன்னு சொன்னதும், அமெரிக்காவுல இருந்த, ஆனா ஜார்விஸ் ங்கர (Anna Jarvis) ஒரு பெண்மணியைத்தான் நினைச்சுக்குவீங்க.  நான் முகப் புத்தகத்துல சொன்ன மாதிரி இந்தியாவுல காலங்காலமா தயாரிக்கர பாஸ்மதி அரிசி, மஞ்சள் எல்லாம் காபி ரைட் வாங்கிட்டோம்னு மேலை நாடுகள் உரிமை கொண்டாடர மாதிரி நம்மூர்ல 11ம் நூற்றாண்டுல வாழ்ந்த ஒரு மகான் தன்னோட அம்மாவை நினைச்சு உருகி உருகி பாடினத வெச்சு இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சிருக்காங்கன்னு நான் நினைக்கறேன்.  அவர் மாதிரி யாரும் அம்மாவை நெனச்சு பாடினாங்களான்னு தெரியலை.  அதனால அன்னையர் தினம்னு சொன்னா எனக்கு நினைவுக்கு வரது அவர் தான்.

அவர் - 11ம் நூற்றாண்டுல காவிரி புகும் பட்டினத்துல சிவநேசர் - ஞானகலை தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்.  இயற்பெயர் திருவெண்காடர்.  இவரது வளர்ப்பு மகன் மருதவாணன் சொல்லும் "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே" வாக்கியத்தை கேட்டு உடன் துறவு கொண்டவர்.  அதன் பிறகு இவரது பெயர் "பட்டினத்தார்" என மாறியது.  இவருடைய வாழ்க்கையை பத்தி ஒரு தனி நாவலே எழுதலாம் அவ்வளவு செய்திகள் கொட்டி கிடக்கு.  இந்த பதிவு அம்மா, அவளோட தியாகம் அதை ஒரு மகான் எப்படி பார்த்தார்ங்கரது பத்தி மட்டும் தான்.

நாம நம்ம அன்றாட வாழ்க்கைல பாக்கலாம், போலீஸ்காரங்க போட்டிருக்கர தொப்பி கனமா இருக்கேன்னு சில சமயம் எடுத்துடுவாங்க.  கோட்டு போட்டிருக்கரவங்க, கோட்டு கனமா இருக்கேன்னு அதை கழட்டி ஒரு நாற்காலில வெச்சுடுவாங்க.  நாம குளிர்காலத்துல தோலால் செய்த மேல் சட்டை போட்டுட்டு யார் வீட்டுக்காவது போனா, உள்ளே நுழைஞ்ச உடனே அதை கழட்டி  ஒரு இடத்துல போட்டுடுவோம்.  சில பேர் கைல கடிகாரம் கட்ட மாட்டாங்க, ஏன்னு கேட்டா "அது எதுக்குங்க கைல கனமா இருக்கு"ந்னு பதில் வரும்.  ஏன்னா அது எல்லாம் ஒரு தேவையில்லாத கனமான பொருள்கள்ன்னு நமக்கு ஒரு எண்ணம்.

நம்மூர்ல ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கர பல பேர் சொல்றது, "யப்பா ஒடினா உடம்பு குறையும்னு சொல்றாங்க, ஆனா கால் இப்படி வலிக்குதே".  இதச் சொல்லிட்டு, அடுத்த ஒரு வாரம் ஓட்டப்பந்தய பயிற்சிக்கு போக மாட்டாங்க.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நடந்தா கால் வலிக்கும், எழுதிகிட்டே இருந்தால் கை வலிக்கும், சாப்பிட்டு கிட்டே இருந்தா வாய், வயிறு ரெண்டும் வலிக்கும், படிச்சு கிட்டே இருந்தா, இல்லை சினிமா, டி.வி பார்த்துகிட்டே இருந்தா கண் வலிக்கும், ஏதாவது நறுமணத்தை ரொம்ப வாசனை பிடிச்சா, தலை வலிக்கும், இல்லை யாராவது உறக்க டி.வி. இல்லை பாட்டு வெச்சா, அதனால தலை வலிக்கும் ஆனால் ஒரே சமயத்துல இது எல்லாம் வந்தா ஒரு மனுஷனுக்கு எப்படி இருக்கும்.  அந்த நேரத்துல டாக்டர் வந்து "இதப் பாருங்க உங்களுக்கு வந்திருக்கரது ஒரு புது விதமான வியாதி அந்த வியாதி வந்தா இப்படித்தான் உடம்பெல்லாம் வலிக்கும், ஆன அதுக்காக நீங்க எந்த மருந்தும் சாப்பிடக் கூடாது"ந்னு  சொன்னா எப்படி இருக்கும்.  அந்த டாக்டர் தலைமேல ஓங்கி குட்டலாமான்னு தோணாது.

ஆனா ஒரு தாய், ஒரு குழந்தையை ஒரு நாள் இல்லை, ரெண்டு நாள் இல்லை 10 மாசம் சுமக்க வேண்டியிருக்கு.

இதைத்தான் பட்டினத்தார்

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி  நு பாடரார்.

ஒரு மணி நேரமில்லை, ஒரு நாளில்லை, ஒரு வாரமில்லை, ஒரு மாசமில்லை  10 மாசம், அங்கமெல்லாம் நொந்து பெற்று - ஒரு வலியில்லை, ஒரே வலி, ஆனாலும் அவளுக்கு அந்த சுமையை இறக்கி வைக்க வழியில்லை.  அதுக்கு அப்புறம், அவளுக்கு ஆகாரம் இருக்கோ இல்லையோ, குழந்தைக்கு ஆகாரமாக தன்னோட இரத்தத்தை பாலாக்கி தந்தவளை எந்தப் பிறவியில் பார்ப்பேன் என்று பாடரார்.  இந்தப் பாடல் இவருடைய தாய் இறந்த உடனே பாடறார்.  உலகத்துல இருக்கர எல்லா சுகத்தையும் விட்டுட்டு போன ஒரு மகான் தாய் பாசம் தாங்காம இப்படி பாடும் போதே தெரியனும் அம்மாங்கரது ஒரு சாதாரண வார்த்தையோ இல்லை ஒரு சாதாரண விஷயமோ இல்லைன்னு.

நம்மூர்ல ஒரு வழக்கம் உண்டு, குழந்தையை கொஞ்சும் போது அம்மா சொல்வாள், என்னைப் பெத்த ராஜாவேன்னு, அந்தக் குழந்தையா அம்மாவை பெத்தது, அவதான அந்தக் குழந்தையை பெத்தாள்.  ஒரு குழந்தை பேறுங்கரது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு மறு பிறப்பு, அதனாலதான் அவ அந்தக் குழந்தை பிறந்ததும் தாயான அவள் இறந்து போகாமல் இருக்கரது அந்தக் குழந்தையின் அருள்தான் காரணம் நு சொல்லி அவளோட தியாகத்தை குழந்தையோட த்யாகமாக மாத்தி பாடரா.  இந்தக் கருணையை நாம கடவுளைத்தாண்டி அம்மா கிட்ட மட்டும்தான் பாக்க முடியும்.

ஒரு குழந்தை நல்ல படியா பிறக்கனும்னு அவ பண்ணக்கூடிய பூஜைகள் என்ன, ஜபங்கள் என்ன, தவங்கள் என்ன, இதோடு கூட அவளோட வயத்துல வளர்ர குழந்தை தினமும் பெரிசாகி ப்ரசவ சமயத்துல நல்ல எடையுடன் கூட இருக்கும் அப்படி இருக்கும் சமயத்துல அவளுடைய வயிறு கீழ் நோக்கி இறங்கி அவள் நடக்கவே சிரமமாக இருக்கும், நடக்காவிட்டால் கால்கள் நீர் கொண்டு வலியெடுக்கும்.  அவள் அப்போதும் குழந்தையை நோகாமல், சிவனை நினைச்சு காலத்தை தள்ளுவாள்

முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திப் பகலாச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்றத் தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.


முரளி

தொடரும்....