Tuesday, May 20, 2014

தாய் - 1

உலகத்துல ரெண்டு பேர் இல்லாம யாரும் இல்லை.  அம்மாவும் அப்பாவும்.  அதுலயும் அம்மா எல்லோருக்கும் ரொம்ப முக்கியம்.  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்-னு பாட்டு பாடுவாங்க, ஆனால் அம்மா என்பது இறைவன் கொடுக்கர வரமில்லை, அது இறைவனின் கருணை.  இறைவன் வரம் தரனும்னா நாம ஏதாவது செய்யனும், தவமோ, யோகமோ, யாகமோ.  ஆனா அவனுடைய கருணைக்கு இதெல்லாம் தேவையில்லை, வெறும அவனோட நாமாவைச் சொன்னா போதும்.  வரம் கேட்டு வாங்கரது, கருணை தானா பொழியறது.

நமக்கெல்லாம், அன்னையர் தினம் ன்னு சொன்னதும், அமெரிக்காவுல இருந்த, ஆனா ஜார்விஸ் ங்கர (Anna Jarvis) ஒரு பெண்மணியைத்தான் நினைச்சுக்குவீங்க.  நான் முகப் புத்தகத்துல சொன்ன மாதிரி இந்தியாவுல காலங்காலமா தயாரிக்கர பாஸ்மதி அரிசி, மஞ்சள் எல்லாம் காபி ரைட் வாங்கிட்டோம்னு மேலை நாடுகள் உரிமை கொண்டாடர மாதிரி நம்மூர்ல 11ம் நூற்றாண்டுல வாழ்ந்த ஒரு மகான் தன்னோட அம்மாவை நினைச்சு உருகி உருகி பாடினத வெச்சு இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சிருக்காங்கன்னு நான் நினைக்கறேன்.  அவர் மாதிரி யாரும் அம்மாவை நெனச்சு பாடினாங்களான்னு தெரியலை.  அதனால அன்னையர் தினம்னு சொன்னா எனக்கு நினைவுக்கு வரது அவர் தான்.

அவர் - 11ம் நூற்றாண்டுல காவிரி புகும் பட்டினத்துல சிவநேசர் - ஞானகலை தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்.  இயற்பெயர் திருவெண்காடர்.  இவரது வளர்ப்பு மகன் மருதவாணன் சொல்லும் "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே" வாக்கியத்தை கேட்டு உடன் துறவு கொண்டவர்.  அதன் பிறகு இவரது பெயர் "பட்டினத்தார்" என மாறியது.  இவருடைய வாழ்க்கையை பத்தி ஒரு தனி நாவலே எழுதலாம் அவ்வளவு செய்திகள் கொட்டி கிடக்கு.  இந்த பதிவு அம்மா, அவளோட தியாகம் அதை ஒரு மகான் எப்படி பார்த்தார்ங்கரது பத்தி மட்டும் தான்.

நாம நம்ம அன்றாட வாழ்க்கைல பாக்கலாம், போலீஸ்காரங்க போட்டிருக்கர தொப்பி கனமா இருக்கேன்னு சில சமயம் எடுத்துடுவாங்க.  கோட்டு போட்டிருக்கரவங்க, கோட்டு கனமா இருக்கேன்னு அதை கழட்டி ஒரு நாற்காலில வெச்சுடுவாங்க.  நாம குளிர்காலத்துல தோலால் செய்த மேல் சட்டை போட்டுட்டு யார் வீட்டுக்காவது போனா, உள்ளே நுழைஞ்ச உடனே அதை கழட்டி  ஒரு இடத்துல போட்டுடுவோம்.  சில பேர் கைல கடிகாரம் கட்ட மாட்டாங்க, ஏன்னு கேட்டா "அது எதுக்குங்க கைல கனமா இருக்கு"ந்னு பதில் வரும்.  ஏன்னா அது எல்லாம் ஒரு தேவையில்லாத கனமான பொருள்கள்ன்னு நமக்கு ஒரு எண்ணம்.

நம்மூர்ல ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கர பல பேர் சொல்றது, "யப்பா ஒடினா உடம்பு குறையும்னு சொல்றாங்க, ஆனா கால் இப்படி வலிக்குதே".  இதச் சொல்லிட்டு, அடுத்த ஒரு வாரம் ஓட்டப்பந்தய பயிற்சிக்கு போக மாட்டாங்க.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நடந்தா கால் வலிக்கும், எழுதிகிட்டே இருந்தால் கை வலிக்கும், சாப்பிட்டு கிட்டே இருந்தா வாய், வயிறு ரெண்டும் வலிக்கும், படிச்சு கிட்டே இருந்தா, இல்லை சினிமா, டி.வி பார்த்துகிட்டே இருந்தா கண் வலிக்கும், ஏதாவது நறுமணத்தை ரொம்ப வாசனை பிடிச்சா, தலை வலிக்கும், இல்லை யாராவது உறக்க டி.வி. இல்லை பாட்டு வெச்சா, அதனால தலை வலிக்கும் ஆனால் ஒரே சமயத்துல இது எல்லாம் வந்தா ஒரு மனுஷனுக்கு எப்படி இருக்கும்.  அந்த நேரத்துல டாக்டர் வந்து "இதப் பாருங்க உங்களுக்கு வந்திருக்கரது ஒரு புது விதமான வியாதி அந்த வியாதி வந்தா இப்படித்தான் உடம்பெல்லாம் வலிக்கும், ஆன அதுக்காக நீங்க எந்த மருந்தும் சாப்பிடக் கூடாது"ந்னு  சொன்னா எப்படி இருக்கும்.  அந்த டாக்டர் தலைமேல ஓங்கி குட்டலாமான்னு தோணாது.

ஆனா ஒரு தாய், ஒரு குழந்தையை ஒரு நாள் இல்லை, ரெண்டு நாள் இல்லை 10 மாசம் சுமக்க வேண்டியிருக்கு.

இதைத்தான் பட்டினத்தார்

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி  நு பாடரார்.

ஒரு மணி நேரமில்லை, ஒரு நாளில்லை, ஒரு வாரமில்லை, ஒரு மாசமில்லை  10 மாசம், அங்கமெல்லாம் நொந்து பெற்று - ஒரு வலியில்லை, ஒரே வலி, ஆனாலும் அவளுக்கு அந்த சுமையை இறக்கி வைக்க வழியில்லை.  அதுக்கு அப்புறம், அவளுக்கு ஆகாரம் இருக்கோ இல்லையோ, குழந்தைக்கு ஆகாரமாக தன்னோட இரத்தத்தை பாலாக்கி தந்தவளை எந்தப் பிறவியில் பார்ப்பேன் என்று பாடரார்.  இந்தப் பாடல் இவருடைய தாய் இறந்த உடனே பாடறார்.  உலகத்துல இருக்கர எல்லா சுகத்தையும் விட்டுட்டு போன ஒரு மகான் தாய் பாசம் தாங்காம இப்படி பாடும் போதே தெரியனும் அம்மாங்கரது ஒரு சாதாரண வார்த்தையோ இல்லை ஒரு சாதாரண விஷயமோ இல்லைன்னு.

நம்மூர்ல ஒரு வழக்கம் உண்டு, குழந்தையை கொஞ்சும் போது அம்மா சொல்வாள், என்னைப் பெத்த ராஜாவேன்னு, அந்தக் குழந்தையா அம்மாவை பெத்தது, அவதான அந்தக் குழந்தையை பெத்தாள்.  ஒரு குழந்தை பேறுங்கரது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு மறு பிறப்பு, அதனாலதான் அவ அந்தக் குழந்தை பிறந்ததும் தாயான அவள் இறந்து போகாமல் இருக்கரது அந்தக் குழந்தையின் அருள்தான் காரணம் நு சொல்லி அவளோட தியாகத்தை குழந்தையோட த்யாகமாக மாத்தி பாடரா.  இந்தக் கருணையை நாம கடவுளைத்தாண்டி அம்மா கிட்ட மட்டும்தான் பாக்க முடியும்.

ஒரு குழந்தை நல்ல படியா பிறக்கனும்னு அவ பண்ணக்கூடிய பூஜைகள் என்ன, ஜபங்கள் என்ன, தவங்கள் என்ன, இதோடு கூட அவளோட வயத்துல வளர்ர குழந்தை தினமும் பெரிசாகி ப்ரசவ சமயத்துல நல்ல எடையுடன் கூட இருக்கும் அப்படி இருக்கும் சமயத்துல அவளுடைய வயிறு கீழ் நோக்கி இறங்கி அவள் நடக்கவே சிரமமாக இருக்கும், நடக்காவிட்டால் கால்கள் நீர் கொண்டு வலியெடுக்கும்.  அவள் அப்போதும் குழந்தையை நோகாமல், சிவனை நினைச்சு காலத்தை தள்ளுவாள்

முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திப் பகலாச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்றத் தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.


முரளி

தொடரும்....


No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!