Tuesday, May 20, 2014

தாய் - 2

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நாமெல்லோரும், மாடு, ஆடு இதெல்லாம் கன்று ஈன்று பாத்திருப்போம்.  அதெல்லாம் கன்று ஈன்றதும், கொஞ்ச நேரம் அதன் குட்டிகளோடு இருக்கும், அப்புறம், அந்த குட்டிகள்தான் தாயைத் தேடி வரனும்.  யாராவது குட்டிகள் கிட்ட வந்தா அப்போ தாய் பசுவோ அல்லது தாய் ஆடோ பயந்து போய் அவங்க கிட்ட இருந்து குட்டியை காப்பாத்த ஓடி வரும் மத்தபடி குட்டிகள் அதனோட தாயின் அருகாமையில நல்லா விளையாட்டிட்டு இருக்கும்.  ஆனா மனிதக் குழந்தைகள் விஷயம் அப்படி இல்லை, குழந்தைகள் ஒரு 2-3 வயசு வரும் வரைக்கும், அம்மாவோட அன்றாட பராமரிப்பு, இல்லை இல்லை ஒவ்வொரு கணமும் அம்மாவோட பராமரிப்பு அவசியம் தேவை.  ஒரு தாய்ப் பறவை அதன் குஞ்சுகளுக்கு தேவையான உணவை கொண்டு வந்து ஒவ்வொரு குஞ்சின் வாயிலும் தானே ஊட்டும், பிறகு அந்தக் குஞ்சிற்கு இறக்கை முளைத்து பறக்க துவங்கியதும், அதை விரட்டி விட்டுவிடும்.  ஆனால் நம்மை வளர்க்கும் அம்மா ஒரு போதும் மகனையோ மகளையோ அப்படி விரட்டி விடுவதில்லை.

நமக்கு கிடைக்கும் முதல் மெத்தை அம்மாவின் மடிதான், தூளி அம்மாவின் கைகள்தான், தொட்டில் அம்மாவின் தோள்கள்தான், போர்வை அம்மாவின் புடவைதான், நாம் பெற்ற முதல் காதல் அம்மாவின் காதல்தான்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்

இந்தப் பாடலில் வரும் "முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றி" என்ற வரிகளை பாசமலர் என்ற படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலிலும் பார்க்கலாம்.

நாம் பிறப்பதற்கு முன்னாடி எவ்வளவு தொல்லைகளை அம்மாவுக்கு கொடுத்தாலும், அம்மா அதற்காக நம்ம கிட்ட கோபம் காட்டரது இல்லை.  குழந்தை நடு இரவில வீல்ன்னு கத்தும், பத்து நாள் சாப்பிடாத மாதிரி கதறும், நாம தங்கும் விடுதி (apartment) மேல கீழ இருக்கர அடுத்த குடித்தனக்காரங்க அடுத்த நாள் சண்டைக்கு வர்ர மாதிரி இருக்கும் நிலைமை, அப்போ, என்னை மாதிரி பொறுப்பில்லாத தகப்பன்கள் பட்டுனு எழுந்து தலைகாணியை எடுத்திட்டு அடுத்த ரூமுக்கு போயி தூங்கிடுவோம், ஆனா, அம்மா அப்படி இல்லை, அவ வீட்டு வேலைகளை முடிச்சுட்டு படுத்து ஒரு அரை மணி நேரம்தான் ஆயிருக்கும், இருந்தாலும், சலிக்காம எழுந்து ஒரு கோப்பை பாலை சுடப் பண்ணி அதை பக்குவமா சூடாற்றி, ஒரு பாட்டிலில போட்டு, குழந்தைக்கு கோடுத்தா அது ரெண்டு வாய் குடிச்சுட்டு தூங்கிடும்.  இது நம்மை மாதிரி சாதாரண மக்களுக்கு நடக்கர விஷயம் மட்டும் இல்லையாம்.  முருகன் இப்படித்தான் இருப்பானாம்.  அதை கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்துல "எள்ளத்தணை வந்து உறு பசிக்கும்" நு எழுதறார்.  எள் அளவு பசி அதுவும் உறு பசி, அதாவது தாங்க முடியாத பசி கொண்டவன் முருகப் பெருமான்னு சொல்றார்.

இதைப் பட்டினத்துஸ்வாமிகள் பாடும் அழகைப் பாருங்கள்:

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து
வளர்தெடுத்துத் தாழாமே அந்திப் பகல் 
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்.

குழந்தை முதல் முதலா பேசரதை கேக்கரது ஒரு ஆனந்தம்.  அதை வார்த்தைகளால வர்ணிக்க முடியாது.  திருவள்ளுவர் - "குழலினிது யாழினிது என்பர், தம் மக்கள் மழலைச் சொல் கேளாதோர்" நு எழுதறார்.  அதுலயும் தம் மக்கள் இதுதான் முக்கியம்.  அடுத்த வீட்டு குழந்தை ஒன்னே முக்கால் வயசு, மழலையாப் பேசினா இந்த வீட்டுல அப்பாவும் அம்மாவும் சொல்வாங்க, "ஒன்னே முக்கா வயசு ஆச்சு இன்னும் என்ன மழலை பேச்சு அது விளங்கினாப்புலதான்"னு.  ஆனா அதே சமயம் இவங்களோட 12 வயசு பையன் கொஞ்சி கொஞ்சி பேசினா, "அவன் வெகுளி, பால் மணம் மாறாத பாலகன்".  இதுதான் அந்த தம் மக்கள்ங்கரதுக்கான வித்தியாசம்.  அப்படி நாம செய்யர, சொல்ற எல்லாத்தையும், பார்த்து பார்த்து ரசிச்சு, ரசிச்சு, மகிழ்ந்து, நம்மை கொஞ்சி குழாவி, சீராட்டி பாராட்டி வளர்பவள் தாய்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த தாய்க்கு நாம பலப் பல நல்ல ஆகாரங்களை செய்து தந்து அவளுக்கு தினமும் வித விதமான உணவு தந்து பராமரிப்பது நம்ம கடமை.


அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு மானே
என அழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு


முரளி இராமச்சந்திரன்
தொடரும்

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!