Monday, February 22, 2010

மீனாவுடன் மிக்சர் - 17 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - ஐந்தாவது பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கூப்பர்டினோவில் உள்ள செந்தில், மைதிலி தம்பதியினரின் வீடு

மைதிலி: வலது கால் எடுத்து வச்சு உள்ள வா குஞ்சம்மா.

செந்தில்: ஏன் ஆர்த்தி கரைச்சு உள்ள கூப்பிடலையா? அந்த குறை எதுக்கு உனக்கு? அதையும் பண்ணிடேன். நான் வேணும்னா 'கௌரி கல்யாணம் வைபோகமே' பாடவா?

குஞ்சம்மா: யக்கா, வூட்டு வாசல்ல வச்சு அய்யாவ பாட்டெல்லாம் பாட சொல்லாதே. அவரு பேசினாவே செங்கலை சொரண்டரா மாதிரி இருக்கு. பாடினா நான் ரொம்ப டென்சன் ஆயிருவேன்.

மைதிலி: சும்மாவா உங்க பிரெண்ட்ஸ் உங்கள 'லொள்ளாதிபதி' ன்னு கூப்பிடறாங்க? இப்போ அனாவசியமா லொள்ளு பண்ணி குஞ்சம்மாவை டென்சன் பண்ணாதீங்க சொல்லிட்டேன். நீ வா உள்ள போகலாம் குஞ்சம்மா.

செந்தில்: வீட்டுக்கு அதிபதி தான் கனவாப் போச்சு. சரி தான் ஒரு இத்துனூண்டு அவுட் அவுசுக்காவது அதிபதியாகலாம்னா அதுக்கும் வழியில்லை. லொள்ளாதிபதியா நான் இருக்கறதுல உனக்கு என்னம்மா பிரச்சனை? சரி சரி உள்ள போவோம் வாங்க.
--------------

(பத்து நாட்களுக்கு பின்)

செந்தில்: மைதிலி, நான் சொல்றேனேன்னு நீ தப்பா நெனைக்காதே. பத்து வருஷமா ஜிம்முக்கு போயும் இளைக்காதவள் என் மனைவின்னு நான் கூப்பர்டிநோவுக்கே உன்னை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன். நம்ம ஊரு படத்துல கிராமத்து தேவதைன்னு உக்கிரமான ஒரு அம்மன் சிலையை காமிப்பாங்களே, அது மாதிரி எப்படி கம்பீரமா இருப்ப நீ! இப்ப என்னடான்னா காதும் கண்ணும் பஞ்சடைச்சு போய் இப்படி ஆயிட்டியேம்மா!

மைதிலி: நீங்க வேற வெறுப்பேத்தாதீங்க. இந்த குஞ்சம்மாவுக்கு என்னிக்கு ஜெட் லாக் போய் என்னிக்கு வேலை செய்ய போறாளோ தெரியலையே? கல்யாணமாகி இந்த பதினஞ்சு வருஷத்துல உங்களுக்கு கூட நான் இவ்வளவு சிசுரிஷை செஞ்ச நியாபகமில்லைங்க.

செந்தில்: (மெதுவாக) செஞ்சிருந்தாத்தானே நியாபகம் வர்றதுக்கு.

மைதிலி: என்னது?

செந்தில்: அது ஒண்ணுமில்லை. குஞ்சம்மா எள்ளுன்னா நீ எண்ணையா நிக்கறையே அதை நினைச்சு நான் பெருமைப்படறேன்.

மைதிலி: (கோபமாக) கிண்டலா உங்களுக்கு?

செந்தில்: சரி சரி கோவிச்சுக்காதே. இவளுக்கு நீ வேலை செய்யவா வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு கான்கார்ட் கோவில் முருகனை அப்படி வேரோடு பிடுங்கின? இது சரி வராது மைதிலி. நேத்து என்ன ஆச்சுன்னு சொன்னேனா? ஆபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தா நீ இல்லை, கடைக்கு போயிட்ட. எனக்கு ஒரே தலை வலி. சரி தான் குஞ்சம்மாவை கெஞ்சி ஒரு கப் காப்பி போட்டு தர சொல்லுவோம்னு தேடினா எங்க இருந்தா சொல்லு பார்ப்போம்?

மைதிலி: எங்க?

செந்தில்: பக்கத்து வீட்டுல Mars லேந்து புதுசா போன வாரம் குடி வந்திருக்காங்களே MRS8462 குடும்பம் அவங்க வீட்டு பிள்ளைக்கு தலை முடி வெட்ட உதவி பண்ண இவ போயிட்டா.

மைதிலி: இவளுக்கு தலை முடியெல்லாம் வெட்ட தெரியுமா?

செந்தில்: இவகிட்ட கத்தரிய குடுத்தால் கதை கந்தல் தான். இவ ஒண்ணும் முடியெல்லாம் வெட்டலை. அந்த வீட்டு பிள்ளைக்கு ரெண்டு தலை இருக்கே. ஒரு தலையை யாராவது அசைக்காம பிடிச்சா தான் இன்னொரு தலையில் முடி வெட்ட முடியுமாம். நம்ம வீட்டு மதர் தெரிஸா தன் பிடி உடும்பு பிடின்னு பெருமையா சொல்லிட்டு அங்க போய் உக்காந்து அரட்டை அரங்கம் நடத்திகிட்டு இருந்தா. நான் போய் அவங்க கதவை தட்டி 'குஞ்சம்மா எனக்கு காப்பி போட்டு தரியா'ன்னு கேட்டதுக்கு அவங்க பிரிஜ்ஜை தொறந்து ஒரு தம்ளர் ஜூஸ் விட்டு கொடுத்து 'காப்பியெல்லாம் வேணாம், ஒடம்புக்கு இது தான் குளிர்ச்சி' ன்னு கூசாம சொல்லறா.

மைதிலி: இவளை எப்படி வேலை செய்ய வெக்கறதுன்னு எனக்கு தெரியலையே! ராத்திரி சமையலுக்கு இவ கொஞ்சம் காய் வெட்டி தந்து பாத்திரம் அலம்பி போட்டா நல்லா இருக்கும் ஆனா இந்த பூனைக்கு யார் மணி கட்டறது?

-தொடரும்

-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 1
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 2
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 3
கூப்பர்டினோவில் குஞ்சம்மா - Part 4

Friday, February 05, 2010

பித்தனின் கிறுக்கல்கள் – 37

ஐயா பிச்சை, அம்மா பிச்சை பிச்சையோ பிச்சை

பிச்சை எடுப்பவர்கள்கூட இப்படி கூழைக்கும்பிடு போடுவார்களா என்பது தெரியவில்லை. பிச்சை எடுப்பவர்களுக்கும் கொஞ்சம் கூச்சம் என்பது இருக்கும் என்று நினைக்கிறேன். பாரதி தனது ஒரு பாடலில்

பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று பாடுகிறார் அதிலிருந்து பிச்சை எடுப்பது எவ்வளவு கேவலமானது என்பது தெரிகிறது. ஆனால் இது தமிழக முதல்வரின் ‘ஜால்ரா’ கவிஞர் வாலிக்கு தெரியாது என்பது ஆச்சர்யமில்லை, ஆனால், கமல், ரஜனி போன்றவர்களுக்கும் தெரியவில்லை என்பது மிகப் பெரிய ஆச்சர்யம். நாளை சென்னையில் நடக்க இருக்கும் ஒரு பெரிய பாராட்டு விழாவில் முதல்வரை பாராட்டி திரையுலகைச் சார்ந்தோர் அடிக்கப் போகும் ஜால்ராவில் வாலியின் பாடலை கமல் ரஜனி இருவரும் மேலும் பல நடிகர்களுடன் சேர்ந்து ஒரு துதிப் பாடலைப் பாட இருக்கிறார்கள். வழக்கம் போல சூப்பர் டூப்பர் துதி வார்த்தைகளோடு இருக்கும் இந்தப் திராபைப் பாடலை எழுதியிருப்பவர் வாலி. ஹூம், இதைப் பார்த்தால், இத்தனை வருடங்கள் எப்படி இவர்களால் தமிழர்களை ஏமாற்ற முடிகிறது என்பது தெரியவில்லை. ஒன்று தமிழர்கள் ஆட்டு மந்தை மாட்டு மந்தை போல ஆகியிருக்க வேண்டும், அல்லது, ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன, மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி’ என்று இருக்கும் மனப்போக்கு வந்திருக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் குத்தாட்டம் போடாத நடிக நடிகர்களுக்கு சங்கத்திலிருந்து மிரட்டல் வேறு வந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால், முதல்வரின் வேலை ரொம்ப ஜாலி போல இருக்கிறது. எத்தனை ப்ரச்சனை இருந்தாலும் தேவைப்படும் போதெல்லாம், இப்படி ஒரு விழா, அதில் பல கவர்ச்சி நடனங்கள், பல ஆயிரம் பேர்களின் கால விரயம் என்று சற்றும் பொறுப்பில்லாத்தனம் தான் தெரிகிறது.

கந்தபுராணத்தில் முருகன் வயோதிகராக வள்ளியை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை செய்யும் போது, வள்ளி சொல்கிறார், ‘எத்துக்கு மூத்தீர்’ என்று. என்னைவிட அதிகம் தமிழ் படித்த முதல்வருக்கு இது தெரியவில்லை என்பது ஆச்சர்யமில்லை. முன்பெல்லாம் காவல்துறை யாராவது ரெகார்ட் டான்ஸ் பார்த்தாலோ அதை ஏற்பாடு செய்தாலோ உடனே கைது செய்வார்கள் ‘அக்னி நட்சத்திரம்’ படத்திலும் இது ஒரு காட்சியாக வரும். இன்று அதே செயலை, பல ஆயிரம் வெட்டி தமிழர்கள் சேர்ந்து, தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்து ஓரிரு பெண்களுக்கு பதில் 20-25 நடிகைகள் குறைவான உடையில் குத்தாட்டம் போட்டாலும் போலீஸும் சரி சட்டமும் சரி ஒன்றும் செய்யப் போவதில்லை. மக்களும் மண்புழுக்களைப் போல இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மீண்டும் மீண்டும் இதே கழிசடை கட்சிக்கு எப்படி ஓட்டு போடுகிறார்கள் என்பது புரியவில்லை.

அபத்த விளம்பரங்கள்

இந்தியத் தொலைக்காட்சிகளில் தாங்க முடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் விளம்பரங்கள் (இதை சன் டீவியில் புதுப் படம் போடுகிறோம் என்று ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து இழுத்து அறிவிப்பு செய்வாரே ஒருவர் அவருடைய கட்டைக் குரலில் படியுங்கள்) சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் பல சானல்கள் (சன், கலைஞர், ஜெயா, பேர் வெச்சது, பேர் வெக்காதது) வருகிறது என்று சொல்ல போய் கொஞ்ச நேரம் பார்த்ததில் பலப் பல அபத்த விளம்பரங்கள் இருப்பது தெரிந்தது.

விவல் சோப்.

இந்த விளம்பரம் அபத்தம் என்பதைத் தாண்டி பெரிய எரிச்சல் என்பது என் கருத்து. முதல் எரிச்சல் இந்த சோப்பு கம்பெனி ஆதரவு தரும் நிகழ்ச்சிகளில் இதனுடைய விளம்பரம் ஒவ்வொரு விளம்பர இடைவெளியிலும் ஒரு முறை வந்தால் பரவாயில்லை 3-4 முறை என்றால் ஒரேயடியாக குமட்டுகிறது. இரண்டாவது எரிச்சல் இதில் நடிகை திரிஷாவும் வந்து இஷ்டம் போல அட்வைஸ்களை அள்ளி விடுகிறார். மூன்றாவது எரிச்சல் இதில் வரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பட்டப் பெயர். குண்டு மல்லிகா, குட்டை கோமளா, பளிச் பானு, நெட்டை மேகலா, டல் திவ்யா. இதில் பளிச் பானு யாருன்னு தெரிஞ்சிருக்கும் தெரியலைனா நீங்க தமிழ்நாட்டில் ஒரு வருடம் இருக்க வேண்டியது அவசியம். நான்காவது எரிச்சல் இவர்கள் எல்லோரும் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளாம். குண்டு மல்லிகா என்றவுடன் வகுப்பே கன்னத்தை உப்பிக் கொண்டு, கைகளை விரித்து ஒரு பெரிய யானை நடப்பது போல நடக்கிறார்கள், குட்டை மல்லிகா என்றவுடன் ஒருவர் குனிந்த படி ஒரு பெண்ணிடம் தனது உயரத்தை சரி பார்த்த படி நடக்கிறார், இந்த அபத்தங்களை வெத்து மகளீர் சங்கங்கள் பார்த்துவிட்டு என்ன பண்றாங்கன்னு தெரியலை. இந்த சோப் கம்பெனி மேல ஒரு கேஸ் போட்டா நல்லா காசு பார்க்கலாம். நான் சங்கை ஊதி விட்டேன்.

அலைவ் காபி

ஒரு குடும்பப் பெண்மணி காபி என்று ஒரு டபரா டம்ளரில் சுடு தண்ணீர் தருகிறார் பின்னனியில் ‘சுடு தண்ணி சுடு தண்ணி ஆஹா, பில்டர் காபின்னு சொல்லி குடிப்போம் சுடுதண்ணீ’ என்று பாடல் ஓடுகிறது. அடுத்த காட்சியில் 4-5 மாமிகள் காபி சாப்பிடுவது போல பாவனை காட்ட பின்னனியில் அதே பாட்டு. மூன்றாவது காட்சியில் ஒரு தொலைக்காட்சி நடிகை காபி சாப்பிட உட்கார பின்னனியில் ‘உங்கள் பில்டர் காபியும் சுடுதண்ணிதானா?” என்று ஒருவர் கேட்க நடிகை கேமிராவைப் பார்த்து பேந்த பேந்த விழிக்கிறார். உடன் அலைவ் காபி பவுடரை வாங்கும் படி ஒருவர் சொல்கிறார். அதுவும் ஒரு காபி பவுடர்தான் அது மட்டும் எப்படி ஒசத்தி என்று கேட்பவர்களுக்காக, ‘தனித் தனியாக வறுக்கப் பட்ட காபி கொட்டையிலிருந்து தயாரிக்கப் பட்ட காபி பவுடர்’ என்று ஒருவர் பின்னனியில் விளக்குகிறார். எப்படி ஒவ்வொரு காபி கொட்டையையும் தனித் தனியாக வறுக்க முடியும் என்பது தெரியவில்லை.

இதற்கு மேல் தாங்காமல் நான் விடு ஜூட்.

தமிழ்திரைப்படங்கள்

சமீபத்தில் நான் பார்த்த சில தமிழ்படங்கள் பற்றிய சிறு விமர்சனம்.

வேட்டைக்காரன்

புரட்சித் தலைவர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு, திருப்பாச்சி படத்தின் இரண்டாம் பாகம் போல இல்லாத ஒரு கதையோடு களம் இறங்கியிருக்கிறார்கள். ஒரு நண்பர் ஒரு ப்ளாகில் ‘விஜய் நீ அடிச்சா கூட தாங்கிடுவோம், நடிச்சாத்தான் தாங்க முடியலை’ என்று எழுதியிருந்ததாகச் சொன்னார். அது 100 சதவீதம் தவறு. விஜய் நடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை இந்த படத்தில் என்றில்லை இதுவரை எந்தப் படத்திலும் அவர் நடிக்க முயற்சிக்கவே இல்லை. நடிகர் திலகத்துடன் நடித்த படத்திலேயே அப்படித்தான் என்றால் மற்றப் படங்கள் எம்மாத்திரம் . நாயகி அனுஷ்கா, பாவம் ரொம்ப ஏஏஏழை உடையில், நடிப்பில். விஜய் படங்களுக்கு வசனம் எழுதுவது ரொம்ப ஈசி.

“ஏய்’

“ஏய்”

“ஹூம்”

“என்னடா ஹூம்’

“போடா”

“நீ போடா”

“வாடாஆஆஆ வாஆஆஆஆஆஆஆஆஆ”

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் ஷாயாஜி ஷிண்டே, டெல்லி கணேஷ் மற்றும் சலீம் கவுஸ் மூவரும் ஊறுகாய் போல பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்தப் படம் பார்ப்பது கண்டிப்பாக பெரிய தலைவலிதான்.

இதில் விஜய்க்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு கொடுத்திருக்கிறார்கள். இவரது அடுத்தப் படம் ‘சுறா’. அதை கேள்விப் பட்டதிலிருந்து மீன்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்வதாக ஒரு வேடிக்கை மின்னஞ்சல் வளைதளத்தில் உலா வருவது உங்களுக்குத் தெரியுமா?

ஆதவன்

வடிவேலு பின்னி பெடலெடுத்திருக்கும் படம். நமக்கே சற்று சந்தேகம் வருகிறது இது வடிவேலுவின் படமா அல்லது சூர்யாவின் படமா என்று. சூர்யாவும் வேடத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். நயன்தாரா வழக்கம் போல வெத்து, இவர் என்றில்லை ஏறக்குறைய மற்ற அனைவருமே அப்படித்தான். அடியாளாக வருகிற ஆனந்த் பாபு (மறைந்த நடிகர் நாகேஷின் மகன்), கொஞ்சி கொஞ்சி பேசி அது இந்தக் காலத்திலும் நம் அனைவருக்கும் பிடிக்கும் என்று கழுத்தறுக்கிற சரோஜா தேவி, முன்னால் இயக்குனர் மனோபாலா என்று ஒரு கூட்டமே அலைகிறது. அருமையான நடிகர்கள் ஷாயாஜி ஷிண்டே மற்றும் மறைந்த மலையாள நடிகர் முரளி இருவரையும் ரொம்பவே வீணாக்கியிருக்கிறார்கள். ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

நாடோடிகள்

சுப்ரமணியபுரம் இயக்குனர் தயாரிப்பாளர் சசிக்குமாரின் படம். என்ன கதை சொல்ல வருகிறார்கள் என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். இதில் ஒரு குத்தாட்ட பாட்டுக்கு சசிக்குமாரும் ஆடி படுத்தியிருக்கிறார். ஓசியில் கிடைத்தால் பார்க்கலாம்.

சர்வம்

காதலி அருகாமையில் இருந்தால் காதில் இளையராஜவின் பின்னனி இசை கேட்பதாக ஜல்லியடிக்கும் பாத்திரத்தில் ஆர்யாவும் அவருடைய காதலியாக த்ரிஷாவும் நடிக்கும் படம். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் சமயத்தில் படக்கென்று த்ரிஷா இறந்து விட கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல பல உப கதைகளை உலவ விட்டிருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்