அன்புடன் கவிதைப் போட்டியில் கவிநயாவின் காட்சிக்கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. கவிநயாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதைப் பிரிவு
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
===========================================================
ஆறுதல் பரிசுக்குரிய காட்சிக்கவிதை 1
காட்சி வடிவம் இறுதியில் தரப்பட்டுள்ளது
அருவி
உலகத்து மாந்தர்களின்
உள்ளத்து அன்பெல்லாம்
ஒன்றாகத் திரண்டு வந்து
அருவியெனப் பொழிந்ததுவோ!
அன்புக்கு அளவில்லை;
அருவிக்கோ அணையில்லை!
கட்டுப்பாடின்றித் துள்ளும்
காட்டாற்று வெள்ளம்போல்
அட்டகாசமாய்ச் சிரித்து
ஆர்ப்பாட்டமாய் விழுந்து
ஆசையுடன் புவி தழுவும்
அற்புதமும் இதுதானோ!
வைரக் கற்கள் தம்மை
வஞ்சனை யின்றிவாரி
வழியெங்கும் இறைத்ததுபோல்
துளித்துளியாய் துள்ளுகின்ற
நீர்த்துளியின் உயிரினுள்ளே
காதலுடன் கதிர்நிறைத்து
கண்மலரக் கதிரவன்தன்
ஒளிசிதறச் செய்தானோ!
பரவசமாய்ச் சரசமிடும்
பாதங்கள் பண்ணிசைக்க
நவரசங்கள் காட்டுகின்ற
நர்த்தனப் பெண்களைப் போல்
பல வண்ண ஆடைகட்டி
மனங் கவர ஒளிவீசி
ஆலோலப் பாட்டிசைத்து
ஆனந்த நடனமிட்டு
கற்பனைக்கும் எட்டாமல்
கருத்தினைக் கவர்ந்து கொள்ளும்
இயற்கைத் தேவதையின்
இன்னெழிலும் இதுதானோ!
- கவிநயா என்றழைக்கப்படும் மீனா
ரிச்மண்ட், அமெரிக்கா