அப்பாவின் பேச்சுக்கள் எல்லாம் அனத்தல் என்று தான் தெரியும் ஆனால் அது அவரது ஏக்கம் என்று யாருக்கும் புரியாது. இன்றைக்கு அப்பாக்கள் தினம். எல்லோருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் அவர்களது பெற்றோர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தான். அப்பாக்கள் தினத்தன்று உன் அப்பாவிற்கு எதாவது செய் என்று கூறினேன். அவனோ என்னை ஒரு வித்தியாசமாக பார்த்தான். அது எல்லாம் அமெரிக்கர்களுக்கு தான் பொருந்தும் நமக்கு ஒன்றும் இல்லை.
நானும் யோசித்தேன், நாம் அப்பாவிற்கு சிறப்பாக என்ன செய்தோம் என்று. பணம் அனுப்புவதைத தவிர அவருடைய அன்றாட தேவைகளைப் பற்றி நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நண்பர்களே இந்த நாளில் ஒரு வாழ்த்து சொன்னால் கண்டிப்பாக அவரின் மனம் குளிரும். இதில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என்று பேதம் பார்க்க வேண்டாம்.
இந்த உண்மை நிகழ்ச்சியை கேட்டால் நீங்கள் அப்பாவின் அனத்தலை புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். ஆனால் வந்த இரண்டாவது மாதமே மிக சோகமாக இருந்தான். காரணம் கேட்ட போது அவன் தந்தை தவறி விட்டார் என்று தெரிய வந்தது. அவனை ஆறுதல் தேற்ற எப்படி இறந்தார் என்று கேட்க அவன் குமுறி குமுறி அழுக ஆரம்பித்து விட்டான். இறுதியில் அவன் அமெரிக்கா வந்ததால் தான் இறந்து விட்டார் என்றான். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. மகன் அமெரிக்கா வந்தால் அப்பாக்கள் சந்தோசம் தானே படுவார்கள். இவனோ இப்படி சொல்லுகிறான் என்று குழ்ப்பம்.
மீண்டும் அவனை விசாரித்தேன்.
நீண்ட நாள் முயற்சியில் ஒரு நாள் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் மிக்க சந்தோசம். பையன் முதன் முதலாக வெளிநாடு செல்லுகிறான் என்று பெருமிதம். அவனுக்கும் அது தான் முதல் பயணம். வீட்டை விட்டு வெளியில் செல்லாத ஒருவனுக்கு விமானம் ஏறி வெளிநாடு செல்லப்போகிறான், அவன் அப்பாவிற்கு ஒரு வித பயம் கலந்த சந்தோசம். பயத்தை வெளிக்காட்டாமல் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மிக்க ஆர்வமாயிருந்தார். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். அவனுடன் அவன் அப்பாவும் வழியனுப்ப சென்னை வந்தார். விமான நிலையத்திற்கு மிக முன்னதாகவே வந்து விட்டார்கள். டிக்கெட்டை செக் இன் பண்ணும் போது அதிகாரிகள் அன்று பயணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். அவனுக்கோ தலை சுற்றியது. கரணம் விசாரித்தால் டிக்கெட் ரீ கன்பர்ம் பண்ண வில்லை என்று சொல்லி விட்டனர், மேலும் 48 மணி நேரம் கழித்து தான் பயணம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர்.
அவனும் அவனது தந்தையும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வழியாக அதிகாரிகள் நண்பனுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இவனும் அப்பாவை ஊருக்கு போக சொல்லி விட்டு இரு நாட்கள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரத்தில் அவனுடைய அப்பாவிற்கு இதய வலி. காரணம் அவன் முதற் பயணம் தடை பட்டு விட்ட கவலையிலும், மகனை பிரிந்த கவலையிலும் இதய வலி வந்து விட்டது. அது நாளடைவில் அவரை நிரந்தரமாக பிரித்து விட்டது.
ஒரு வேளை நண்பன் இங்கு வராமல் இருந்தால் அவனது தந்தை உயிரோடு இருந்திருப்பாரோ?
வேதாந்தி