Showing posts with label பஹாமாஸ். Show all posts
Showing posts with label பஹாமாஸ். Show all posts

Tuesday, September 06, 2011

பஹாமாஸ் விஜயம் - 5



இந்த பதிவுல பஹாமாஸ் பத்தி எழுத அதிகம் இல்லை.  இப்படி ஒரு சொகுசு கப்பல் பயணம் போனா மறக்காம தினமும் இரவு நடக்கர சில பல விஷயங்களை பாருங்க.  நான் போகல, அதுக்கு தாக சாந்தி பழக்கம் இருக்கரவங்க போனா பலன் அதிகம் அதோட கல்யாணம் ஆகாதவங்களுக்கும் விசேஷமோ விசேஷம் அம்புட்டுதேன்.

5ம் நாள் கப்பல்ல இருக்கர இஞ்சின் ரூம் போய் பார்க்க எங்களுக்கு ஒரு சிறப்பு அழைப்பு தந்தாங்க சரின்னு காதுமடலெல்லாம் ஜிவ்வுன்னு ஆகி புளகாங்கிதமடைஞ்சு போனா எங்கள மாதிரி 5 குடும்பம் வந்திருந்தது. 

முதல்ல போனது கண்ட்ரோல் ரூம்.  அதுதான் கப்பலோட தலைமைச் செயலகம்.  அங்க என்ன ஒரு ஒழுங்கு அப்படி ஒரு ஒழுங்கான ரூமை எங்க வீட்டுல ஒரே ஒரு தடவை வீடு வாங்கினப்ப பார்த்தது, வீட்டுக்குள்ள சாமான் செட்டெல்லாம் வந்ததுக்கு பிறகு பார்க்கல.  என் வீட்டு கதை எதுக்கு இப்ப, கப்பல் கதைக்கு வருவோம். 

அந்த ரூமில் 4-5 இஞ்ஜினியர்கள் எப்போதும் இருக்காங்க.  எங்க என்ன கப்பல் வருதுன்னு தெரிஞ்சுக்க ஒரு ராடார் கருவி அதை பார்த்துக்கரதுக்கு ஒரு இஞ்ஜினியர், ஒரு பைனாகுளர் வெச்சுக்கிட்டு ராடாரில் தெரியாத கப்பல்களையும், ராடாரில் தெரியும் கப்பல்களையும் கண்காணிக்க ஒரு இஞ்ஜினியர், கப்பல் கடலில் எங்க இருக்குன்னு ஜி.பி.எஸ் கருவி மற்றும் ராடாரை வெச்சு கவனமா குறிக்கர ஒரு இஞ்ஜினியர், கம்ப்யூட்டரில் குறிக்கப்பட்ட இடத்தை ஒரு பெரிய வரைபடத்தில் குறிக்க இன்னொரு இஞ்ஜினியர். இவங்களை மேற்பார்வை பாக்கர 2 இஞ்ஜினியர்கள்ன்னு ஒரு கூட்டமே இருக்கு.  இவங்களை மாதிரி இன்னும் ரெண்டு குழு இருக்காம் அது எதுக்குன்னா 24 மணி நேரமும் கப்பலை பார்த்து ஓட்டனுமே அதுக்காகத்தான். 

நாமதான் உடனே கேள்வி கேப்பமில்ல, “ராத்திரில எப்படி பைனாகுளர் வெச்சுகிட்டு பாப்பீங்க பக்கத்துல வர கப்பல் தெரியாதே அப்ப என்ன பண்ணுவீங்க?”

“அது ஒன்னும் கஷ்டமில்லை, அந்த கப்பல்கள்ள ஒரு விளக்கு இருக்கும் அதை வெச்சு கண்டு பிடிச்சுடுவோம்.  பெரிய கப்பலா இருந்தா கண்டிப்பா ராடார் இருக்கும், சின்னதா இருந்தா கண்டிப்பா லைட் இருக்கும்”

“லைட் சரியா வேலை செய்யலைன்னா?”

“கவலைப் படாதீங்க.  எல்லா கப்பலும் தரையில் இருக்கர கண்ட்ரோல் டவரோட தொடர்பு வெச்சுகிட்டே இருக்கணும் அவங்க எங்களுக்கு தொடர்ந்து தகவல் தருவாங்க அதை கண்காணிக்க தனியா ஒரு இஞ்ஜினியர் இருக்கார்”

இப்படி பேசிகிட்டே வெளியில ஒரு சின்ன பால்கனி மாதிரி இருந்த இடத்துக்கு கூட்டிகிட்டு போனாங்க.  கப்பல்ல கண்ட்ரோல் ரூமுக்கு ரெண்டு பக்கமும் பால்கனி இருக்கு அதுல ஒரு சின்ன ரிமோட் எஞ்ஜின் கண்ட்ரோல் இருக்கு அது மூலமா கப்பலை இயக்க முடியும்.  அதை கூடுமான வரைக்கும் கப்பலை துறைமுகத்தில ஒழுங்கா பார்க் பண்ண மட்டுமே யூஸ் பண்றாங்க.  இன்னொரு உபரித் தகவல், இந்த மாதிரி சொகுசு கப்பல்கள் நின்ற இடத்திலேயே 360 டிகிரி திரும்பும், அதை துறைமுகத்தில் பார்க் செய்யும் போது ரிவர்ஸில் வந்து பார்க் செய்ய ரொம்ப வசதியாம். 

இதுக்கு பிறகு எஞ்ஜின் ரூம் போய் பார்த்தாதான் தெரியுது ஒரு கப்பலை ஓட்டரது எவ்வளவு கஷ்டம்ன்னு.  ஏறக்குறைய 250 சிப்பந்திகள் கப்பலை ஓட்ட மட்டும் இருக்காங்க, கப்பல்ல 1000 சின்னச் சின்ன எஞ்ஜின்கள் இருக்கு அதுல ஒன்னு பழுதடைஞ்சாலும் உடனே ஒரு ஹார்ன் சப்தம் இவங்களுக்கு எஞ்ஜின் ரூமில் கேட்கிறது, உடனே அதைச் சரி செய்ய ஒரு குழு தயாராக ஓடுகிறது. ஆனால் யாரும் எதுக்கு அலுத்துக் கொள்ள வில்லை.  சிரித்தபடி இருக்கிறார்கள்.  எப்புடி!

இனி சில டிப்ஸ்:

நாங்க போனது ராயல் கரீபியன் கப்பல், என்னை மாதிரி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கின சாப்பாட்டு ராமன்களுக்கு இந்தக் கப்பல்ல அதிக பட்சமா ஊத்தப்பம், கிச்சடி, ரவா உப்புமா, சாம்பார், சப்பாத்தி, சப்ஜி கிடைக்கும்,  இதுக்கு பதிலா கார்னிவல் கப்பல்ல போனா சரவணபவன் ரேஞ்ஜில் சாப்பாடு கிடைக்குமாம்.  மத்தபடி வேறு என்ன வித்யாசம்ன்னு எனக்குத் தெரியலை. 

டிக்கெட்டை காஸ்ட்கோ வழியா வாங்கினோம்.  அதனால டிக்கெட் விலையில 10 பர்செண்ட் நமக்கு க்ரெடிட் கொடுதாங்க அதனால ஒரு 300$ கிட்ட நமக்குக் கிடைச்சுது.  அதை வெச்சு 10-15 ஃபோட்டோ வாங்க முடியும், 30 டி-சர்ட் வாங்க முடியும், நல்லா தாக சாந்தி பண்ண முடியும். 

பஹாமாஸ் - நஸாவு ல இருக்கர அட்லாண்டிஸ்ஸில் 4 பேருக்கு ஒரு நாள் எண்ட்ரிக்கு காசு ஏறக்குறைய 720$ ஆகும் அதை தவிர்க்க ஒரு ஐடியா எங்க வீட்டம்மா கண்டு பிடிச்சாங்க அதுனால ஒரு 410$ மிச்சபிடிச்சாங்க.  விஷயம் இவ்வளவுதான்.  நஸாவுல Comfort Suites Paradise Island ஹோட்டல்ல ஒரு நாள் தங்க சார்ஜ் வரியோட 310$ ஆகுது, அதுக்கு அவங்க அட்லாண்டிஸ் சுத்தி பாக்க 4 ஒரு நாள் பாஸ் தராங்க அதனால எங்களுக்கு 410$ மிச்சம். 

கப்பல்ல லாப்டாப் கொண்டு போறது வேஸ்ட், wifi கிடையாது, கடலுக்கு நடுவில செல்ஃப்போன் சிக்னல் இல்லாம சும்மாதான் இருக்கும் அதனால அதை ஆஃப் பண்ணி வெச்சா பாட்டரி சார்ஜ் குறையாம கரைக்கு வந்ததும் உபயோகமா இருக்கும். 

கப்பல் பயணத்தை நல்லா என்ஜாய் பண்ணுங்க, கடல்ல போகும் போது நமக்கு ஒரு விஷயம் புரியும், இயற்கைக்கு முன்னாடி நாமெல்லாம் வெறும் தூசுன்னு.

 முந்தைய பதிவுகள்:






-முரளி இராமச்சந்திரன்.

Monday, April 04, 2011

பஹாமாஸ் விஜயம் - 4



புதன் கிழமை கார்த்தால நஸாவு துறைமுகத்துக்கு போயிடுவோம்னு ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளோட செவ்வாய்கிழமை ரூமுக்கு வந்தோம். முதல் நாள் பத்தி எழுதியிருந்த பதிவுல ஒரு விஷயம் சொல்லியிருந்தேன், ஞாபகம் இல்லைன்னா பரவாயில்லை ஒரு ஆள் கடை போட்டு நஸாவுல என்ன வாங்கனும்னு க்ளாஸ் எடுத்தான்:



ஏய் கைஸ்

ஏன் ஸார்,

எங்க போறோம்

நஸாவுக்கு

என்ன வாங்க

வைரம் வாங்க

என்ன வைரம்

சூப்பர் வைரம்

எங்க வாங்கனும்

நீ சொல்ற கடைல வாங்கனும்

அங்க ஏன் வாங்கனும்,

அதுதான் நல்ல கடை

எந்த கடை

…. வைரக்கடை

... இப்படி நம்மூர் கோபாலா ஏன் ஸார் மாதிரி சொல்லி சொல்லி உறு ஏத்தி ஏத்தி ஒரு 25$ க்கு புத்தகமும் வித்தான், அந்தப் புத்தகத்தில ஒரு விஷயம் இருக்கரத நம்ம வீட்டுல கண்டு பிடிச்சாங்க, அது வேற ஒன்னும் இல்லை எந்த கடைல எந்த கூப்பனைக் கொடுத்தா என்ன சமாசாரம் சும்மா கொடுக்கரான்னு. ராவோட ராவா அதுக்கு ஒரு ப்ளான் போட்டு, எந்தக் கடைக்கு யார் போரதுன்னு ஒரு முடிவு பண்ணி, தாங்க்ஸ் கிவிங் கருப்பு வெள்ளிக்கு எந்தக் கடைல சொர்க வாசல் எப்ப திறக்கராங்கன்னு பாத்து பரபரப்பா ஓடுவோமே அதுமாதிரி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு தூங்கப் போனோம்.

செவ்வாய் கிழமை கப்பல் சிப்பந்தி ஒருத்தர் வேற, நாளைக்கு நஸாவுல ராயல் கரீபியனோட 3 கப்பலும், நார்வேஜியனின் ரெண்டு கப்பலும் வருது அதுல ராயல் கரீபியனோட ஒரு கப்பல் இருக்கரதிலேயே ரொம்பப் பெருசு (16 மாடி) அதனால பஹாமாஸே ஆடப் போகுதுன்ற ரேஞ்சில கிளப்பி விட்டாரு. அதோட விடாம, குழந்தைங்க பத்திரம் அங்க கொஞ்சம் திருட்டுப் பசங்க ஜாஸ்தி கொஞ்சம் ஏமாந்தா, குழந்தைகளை தள்ளிட்டு போயிடுவானுங்கன்னு போற போக்கில ஒரு சின்ன பிட்டை போட்டுட்டு போயிட்டாரு. அது நிஜமா, பொய்யான்னு தெரியலை, நான் கேட்டதை உங்க பக்கம் தள்ளி விட்டுட்டேன். அப்பால உங்க பாடு, அம்புட்டுதேன்.

ராயல் கரீபியனின் 16 மாடி கப்பல்


விடிய காலை 5 – 5:30 இருக்கும் அப்போ, என்ன வண்டி ஸ்லோவா போவுது, ஒருவேளை பேசின் ப்ரிட்ஜ் வந்திடுச்சான்னு தோணிச்சு. சீ எங்க வந்து என்ன பேச்சு, நாம கரீபியன் தீவு பக்கத்தில இருக்கோம், இங்க ஏது பேசின் ப்ரிட்ஜ், அந்தக் கொடுப்பினை இவங்களுக்கெல்லாம் கெடயாதுன்னு கர்வமா எழுந்து பாலகனிக்கு வந்தா துறைமுகத்துக்கு வந்தாச்சு.

கப்பலில் இருந்து நஸாவு நகரம்.

ஒவ்வொரு அரை மணிக்கு ஒவ்வொரு கப்பலா வந்து சேர்ந்தது. மொத்தம் 5 கப்பல்களை ஒரே இடத்தில் பாக்கரது நல்லாத்தான் இருந்தது. ஒரு வழியா எங்கள் கப்பலில் இருக்கரவங்களுக்கு தீவுல இறங்க அனுமதி வாங்கிட்டு வந்து எங்களை வெளியில விட ஒரு 9 – 9:30 ஆயிடுச்சு.


நஸாவு துறைமுகத்தில் ஒரே சமயத்தில் 5 கப்பல்கள்அம்மா, மாதுரியை கெட்டியா பிடிச்சுக்கோ, மஹிமா, எங்கூடவே நட, எல்லோரும் என் கண்பார்வைலயே இருக்கனும்னு ஏகப் பட்ட கண்டிஷன் போட்டுட்டு கப்பல்ல இருந்து கிளம்பின அஞ்சு நிமிஷத்தில மஹிமா ஒரு பக்கம், மாதுரி ஒரு பக்கம், மாலதி ஒரு பக்கம்னு நடக்க, கடைசீல அவங்கள விட்டுட்டு நான் தொலைஞ்சு போகாம என்னை காப்பாத்திக வேண்டியிருந்தது.
கப்பல விட்டு வந்த்தும் இமிக்ரேஷன்னு சொல்லி ஒரு கூத்தடிக்கராங்க, அதுக்கு உங்க பாஸ்போர்ட் கைல இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு ஒரே அலப்பர. க்யூவில நின்னு அவங்க கிட்ட பாஸ்போர்டை கொடுத்தா, கைல கூட வாங்காம, ஹும் போங்கன்னு கழுத்தில கைய வெச்சு தள்ளாத குறைதான். இதெல்லாம் கடந்து வெளியில வந்தா பெரிய அதிர்ச்சி காத்திருந்த்து.
அதிர்ச்சின்னு கூட சொல்லக்கூடாது ஒரே ஏமாற்றம்தான். அது வேற ஒன்னுமில்லைங்க, குமட்டற நாத்தமில்லை, “ஜுஜுஜுடாண காப்ப்ப்ப்பி, காப்ப்ப்பி, டீயேய், மொறுமொறு பஜ்ஜீ” ன்னு கத்தி கத்தி விக்கர ஒரு அருமையான தாயகத்துக் குரலில்லை, “அம்மா, அய்யா, சாப்ப்பிட்டு பத்து நாளாச்சுய்யா, ப்ப்ப்ப்பாபாபாவம் பச்சை புள்ளை பசியால துடிக்குதிய்யா”ன்னு கேக்க ஆளில்லை. ஆனால், “வா சார், வா, இன்னா பாக்கனும், நான் வலிச்சிகினு போறேன்”ர ரேஞ்சில ஆங்கிலத்தில பேசர டை கட்டிய டாக்ஸிக்காரர்கள் கும்பல் கும்பலா சுத்தராங்க. ஜாக்கிரதை.
நஸாவுல பார்க்க வேண்டியது ரெண்டு இடம்தான்னு எங்க வீட்டுக்காரம்மா சொல்லிட்டாங்க. அதனால அதத் தாண்டி மூனாவது இடமிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க மத்தவங்களுக்கு உதவியா இருக்கும்.
முதல் இடம் ஒரு பே தெரு (Bay Street) என்ற சின்னத் தெரு, அங்கதான் அந்த கூப்பன் புக் பிச்சை எல்லாம் எடுக்கனும்.

பே தெருவில் ஒரு வைரக் கடை
இரண்டாவது இடம், அட்லாண்டிஸ் – இது ஒரு தீம் பார்க்குன்னு ஜல்லியடிக்கராங்க.

கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட அட்லாண்டிஸின் படம்

முதல்ல அந்த பே தெரு. அது நம்மூர் ரங்கநாதன் தெரு மாதிரிதான் இருக்கு அங்க ஒரு நாளைக்கு வியாபாரம் சுமாரா ஒரு 1-2 மில்லியன் அமெரிக்க டாலர்ன்னு கப்பல கடை போட்டு எங்களை படுத்தினவன் சொன்னது. சின்ன தெருதான், அதுல ரெண்டுபக்கமும் கார், பஸ் வருது, சைக்கிள் ஓட்டராங்க, கும்பல் கும்பலா எங்கள மாதிரி கப்பலில் வந்தவங்க வந்து பராக்கு பாக்கராங்க. முன்னாடி சொன்ன மாதிரி படக்கு படக்குன்னு ஒவ்வொரு கடையா அதாங்க பிச்சை போடர கடையா போய், அம்மா பிச்சேய், அய்யா பிச்செய்ன்னு அவன் போட்டதையெல்லாம் பொறுகிக்கிட்டு வர ஒரு 30 நிமிஷம் செலவு பண்ணினோம். அங்க நான் விரும்பி வாங்கினது ஒரு கடைல மூங்கில்ல பண்ணின டி. ஷர்ட் விக்கராங்க, அது குளிர் காலத்துக்கு சூப்பரா இருக்கும், வெயில் காலத்தில கொஞ்சம் ஜில்லுன்னு இருக்கும், வியர்வை நாத்தத்தை தடுக்கும், அப்படி இப்படின்னு சொல்லி ஒன்னு 45$க்கு வித்தாங்க, அது அவங்க சொன்ன படி இருக்கான்னு தெரியலை ஆனா போட்டுகிட்டா நல்லா இருக்குன்னு ஒன்னு வாங்கிட்டு வந்தேன். அதே கடைல ஒரு கூலிங் க்ளாஸ் விக்கராங்க, கண்ணாடி கலர் மாறுவதைத்தானே பார்த்திருப்பீர்கள் அவர்கள் விற்கும் கண்ணாடியை போட்டுகிட்டு வெயிலில் சில நிமிடங்கள் இருந்தால் போதும் ப்ரேமின் கலர் மாறுது. அது மட்டும் இல்லை, அது தொலைஞ்சு போனாலோ, உடைஞ்சு போனாலோ வாழ்நாள் முழுக்க இலவசமா இன்னொன்னு தராங்கலாம். அதனால அதை ஒன்னு வாங்கிட்டு வந்து பத்திரமா வெச்சிருக்கேன்.


இப்போ அட்லாண்டிஸ். இது கடல் பக்கத்தில இருக்கர ஒரு வாட்டர் பார்க், நிறைய நடக்கனும், ரொம்ப வெயில், அதுலயே நமக்கு காத்து போயிடும். இதுக்கு டிக்கெட் விலை ஒருத்தருக்கு 180$ க்கு பக்கம், எங்க வீடு மாதிரி நாலு பேர் போனா ஒரு $720 ஆகும், அதை ஒரு $300 - $350 க்குள்ள முடிக்கனும்னா அடுத்தப் பதிவை படிங்க அதுல என் பங்கிற்கு சில டிப்ஸ் தரப்போறேன், படிச்சு என்சாய் பண்ணுங்க.


நேரா அட்லாண்டிஸ் போய் ஒரு நாள் முழுக்க குட்டை குட்டையா ஊறிட்டு, சின்னச் சின்னதா ரைடு போயிட்டு, சந்தோஷமா வந்துகிட்டு இருந்தோம். அப்போ அங்க நம்மூர் கிங்ஸ் டொமினியன்ல இருக்கர மாதிரி லேசி ரிவர் மாதிரி ஒன்னு இருந்தது, சரி நமக்கு இதெல்லாம் ஜுஜூபின்னுட்டு போய் க்யூவில நின்னோம். இதை வெளியில இருந்து பார்த்ததுமே மாதுரி ஒரு தீர்க்கதரிசி மாதிரி இந்தக் கதையெல்லாம் வேண்டாம்னு அழ ஆரம்பிக்க, அவள சமாதானம்பண்ணி திரும்பி க்யூவில நின்னதும் “அம்மா சுச்சூ வர்தூ”ன்னு அவளோட மழைலைல திரும்பித் திரும்பி பிட்டு போட்டும் நாங்க காதுல விழாத மாதிரி ஒருவழியா அவளை இழுத்துப் பிடிச்சு அந்த ரைடுக்கு போனோம். போன 5 நிமிஷத்தில சடக்கு சடக்குன்னு திசை திரும்பி பல்ஸ் எகிற வெச்சுச்ச அந்த ரைடு, ஒரு சந்தர்ப்பத்தில மாதுரியும் மாலதியும் வந்த ட்யூபை குடைசாய்க்க, அதை நான் எதேச்சையா திரும்பிப் பார்த்துட்டு என்னடா மாதுரியைக் காணும்னுட்டு நானும் மஹிமாவும் போய்கிட்டிருந்த ட்யூபிலிருந்து குதித்து அவங்க கிட்ட போகரதுக்குள்ள, “ஓ மை பேபி ஓ மை பேபி” ன்னு மாலதி கத்திக்கிட்டிருந்தா, லைஃப் ஜாக்கெட் போட்டிருந்த மாதுரி தண்ணிக்குள்ள நல்லா ஒரு முங்கு முங்கிட்டு ஜிங்ன்னு வெளில வந்துட்டா, 6 அடி தண்ணீல நானும் மாலதியும் தான் ததுங்கிணத்தோம் போட்டு அந்த எடத்தை விட்டு வெளில வந்தோம். அந்த இடத்தில 15 அடிக்கு ஒரு லைஃப் கார்ட் இருந்தாங்க, ஆனா நான் ட்யூபில இருந்து குதிச்சதும், மஹிமாவை பத்திரமா கரையேத்தினதும், மாதுரியை காப்பாத்த ஒடி வந்ததும் எங்களை மாதிரி அந்த ரைடுல இருந்தவங்கதான், லைஃப் கார்ட் ஒரே ஒரு விஷயம்தான் செஞ்சாங்க அது விசிலடிச்சு எங்களை திரும்பியும் ட்யூபுக்கு உள்ள போய் உக்காந்துக்கங்ன்னு சொன்னதுதான். நல்ல பொழப்புடா. ரைட விட்டு வெளில வந்ததும்தான் தெரிஞ்சுது அது லேசி ரிவர் ரைடு இல்லையாம், ராபிட் ரிவர் ரைடாம். கொஞ்சம் எல்லோரும் நார்மலானதுக்கு அப்புறம் மாலதி கிட்ட கேட்டேன் “என்ன மை பேபின்னு கத்தினே”ன்னு அதுக்கு “ஏங்க கொஞ்சங்கூட புத்தியில்லாம இப்படி கேக்கரீங்க, இது என்ன மெட்ராஸா தமிழ்ல கத்தறதுக்கு, இங்க இங்லீஷ்ல கத்தினாதானே ஹெல்ஃப் பண்ணுவாங்க”ன்னு பதில் வந்ததுதான் சூப்பர்.


அதுக்கு அப்புறம் சொல்லும் படி ஒன்னும் செய்யாம சும்மா கடல் பக்கம் போய் ஒரு இடம் பிடிச்சு மண்ணுல விளையாடிட்டு வந்துட்டோம். ஞாபகம் வெச்சுக்கங்க அட்லாண்டிஸ் போனா அங்கயும் பெரிய ஹோட்டல் இருக்கு ஹொட்டல்ன்னா சும்மா ஒன்னு ரெண்டு இல்லைங்க ஒரு நகரமே ஹொட்டலா இருக்கு. கூகுளாண்டவர்கிட்ட கேளுங்க அவங்களப் பத்தி செய்தியா கொட்டுவார்.


நாங்க போயிருந்த புதன்கிழமை நல்ல சுபமுகூர்த்த தினம்ன்னு நினைக்கிறேன், பீச்சை ஒட்டி ஒரு 40-50 நாற்காலிகள் போட்டு எல்லோரும் உக்கார்ந்துண்டிருக்க நானும் மஹிமாவும் சும்மா ஒரு நடை நடக்கலாம்னு போன போது அங்க ஒரு திருமணம் நடந்ததை பார்த்துட்டு வந்தோம், ஆனா சுத்த நாகரீகம் தெரியாத பசங்க, என்னடா இப்படி ஒருத்தன் வந்து நம்ம கல்யாணத்தை பார்த்து ஆசீர்வதிக்கரானேனு, ஒரு ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்கன்னு சொல்லத் தெரியலை, அட அது கூட வேண்டாங்க ஒரு சின்னதா தேங்காய் பை கூட குடுக்கல, ஹூம் இதெல்லாம் வெளில சொன்னா நமக்குத்தான் கெட்ட பேர்.


அட்லாண்டிஸ்ல ஒரு அக்வேரியம் இருக்கு கண்டிப்பா பாக்க வேண்டிய ஒன்னு. வித விதமா மீன்கள் இருக்கு, குழந்தைகளை அங்கிருந்து கிளப்பரது ரொம்ப கஷ்டம்.


மாலை 6 மணிக்கு முன்னாடி அட்லாண்டிஸ்ல இருந்து கிளம்பினா போட் டாக்ஸி பிடிச்சு துறைமுகத்துக்கு வரலாம், நாங்க கிளம்பின 7 மணிக்கு தரை டாக்ஸி வந்ததே அதிர்ஷ்டம்தான்.


இப்படி மிக மிக எதிர்பார்ப்புகளோட காலையில் தொடங்கின எங்க நஸாவு பயணம் ராத்திரி 7:30 மணிக்கு முடிஞ்சுது. எல்லோரும் ரொம்ப டையர்டா ஆனதினால இன்னிக்கு ரெகுலரா சாப்பிடப் போகும் இடத்துக்குப் போகாம இன்னொரு இடத்துக்குப் போய் சாப்பிட்டுட்டு வந்துட்டோம்.


முந்தைய பதிவுகள்:





-முரளி இராமச்சந்திரன்.

Thursday, March 03, 2011

பஹாமாஸ் விஜயம் - 2

நாங்க போன கப்பல் ராயல் கரீபியன் கப்பல். கார்னிவல், டிஸ்னி, நார்வேஜியன் என்று பல கப்பல்கள் இருக்கு. அதில் இது கொஞ்சம் நல்லதுன்னு செவி வழி செய்தியை கேட்டு நாங்களும் டிக்கெட் வாங்கினோம்.

க்ரூய்ஸ் கப்பலில் நுழையரதுக்கு பல வழிமுறைகள் போட்டு, பல வசதிகளைச் செய்து வா வா என்று எதிர் கொண்டழைக்க சில ஆட்களைப் போட்டு நம்மள சும்மா திணரடிக்கராங்க. துறைமுகத்திலேயே கார் நிறுத்துமிடமும், அதற்கு முன்னாடியே நமது பெட்டி படுக்கைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லா சாமான் செட்டையும் கொடுத்துட்டு ஹாயாக கையை வீசிகிட்டு உள்ளே போகலாம். அடுத்த நாட்டுக்குச் போவதாக இருந்தால் மறக்காமல் பாஸ்போர்ட்டை கையிலேயே வெச்சுக்கங்க. இல்லை போகவே முடியாது, ஜாக்கிரதை. கொஞ்சம் தின்பண்டம் ஏன்னா, எப்போ, எந்த குழந்தை, எப்படி, எதுக்கு கத்துமோ தெரியாது கப்புன்னு வாயில அடைச்சு ஒரு கப் தண்ணி ஊத்தி அடக்கிடலாம், தேவையான மருந்துகள், காமெரா, லேப்டாப் கம்ப்யூட்டர் இதை லக்கேஜ்ஜோடு அனுப்பினால் அது கையில் வந்து சேர்ந்து ஒழுங்காக வேலை செய்யுதான்னு தெரியர வரைக்கும் ஒரு மாதிரி அவஸ்தையா இருக்கும்.

நம்ம போர்டிங் பாஸ் கொடுக்கர இடம் ஏர்போர்டை ஞாபகப் படுத்தும் அதே சமயம், எந்த மாதிரி டிக்கெட் வாங்கியிருக்கீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சீக்கிரமாகவோ அல்லது லேட்டாகவோ உங்களை செக்கின் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு முதலில் ஒரு கைப் பட்டை போட்டு இதுங்க ரெண்டும் உங்க கூட வருதாங்கர ரேஞ்ஜில கேள்வி கேட்டுட்டு, அப்புறம்தான் “O they are so cute” ன்னு ஒரு மொக்கையை போட்டுட்டு, முக்கியமான விஷயத்துக்கு வருவார்கள். அது வேற ஒன்னும் இல்லைங்க கப்பல் உள்ளே திங்கர சோறு, காபி, டீ, எலுமிச்சை தண்ண்ண்ணீ ஜூஸைத் தாண்டி எதைச் சாப்பிட்டாலும் அதாவது மஹா ஜனங்களே இந்த லாகிரி வஸ்துகள் எதைச் சாப்பிட்டாலும் வேறு எதை வாங்கினாலும், போட்டு தாளிக்கரதுக்கு அப்பப்ப க்ரெடிட் கார்டை நீட்டு தேய் தேய்ன்னு தேய்க்க வேண்டாம், அதை செக்கின் பண்ணும் போதே வாங்கி ஒரே ஒரு முறை தேய்த்து விட்டு (அப்பாடி என்ன சவுகர்யம் இல்லை) அத நம்ம ரூம் கார்டோடு கோர்த்து விட்டுடுவாங்க. அப்படின்னா, ரூம் கார்ட் தொலைஞ்சு போனாலோ, கொஞ்ச நேரம் காணாம போனாலோ, அடி வயித்தில கரைக்கிர புளில சூப்பரா ஒரு கப்பல் கும்பலுக்கே சாம்பார் வெக்கலாம் ஜாக்கிரதை. நாங்க கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா பரம்பரை, குழந்தைகள் கார்டில் அதைக் கோக்கவேண்டாம்னு சொல்லிட்டு, அது மட்டும் இல்லை குழந்தைகள் நாங்க இல்லாம எதுவும் வாங்க முடியாதுன்னும் சேர்க்கச் சொல்லிட்டோம். சரி, சரி, உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. வீட்டுக்காரம்மா கார்டை அப்படி கண்ட்ரோல் பண்ண முடியுமான்னு நான் கேக்கலை, அவங்க பக்கத்திலேயே இருக்கரச்சே எப்படி அதெல்லாம் ஒரு சாத்வீகமான மனுஷன் கேக்க முடியும்ன்னு உங்களுக்குத் தோண வேண்டாம். மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கங்க, கேள்வி கேக்கரது ரொம்ப ஈசி, கேள்விகளுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.

ஒருவழியாக இதெல்லாம் கடந்து கப்பல் உள்ளே வந்தா முதல் மரியாதைல ராதா படகுல இருந்து இறங்கினதும் இழுத்து கிட்டு இருக்கும் சிவாஜி படக்குன்னு ஒரு பட்சி கொத்தினமாதிரி வெடக்குன்னு காலை உதறுவாரே அது போல ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சா ஒரு மண்ணும் இல்லை. ஒரு வரவேற்பாளி மாயாஜால படத்துல வர்ர மாதிரி திடீர்ன்னு தோன்றி (என்ன, டொய்ய்ய்ங் ன்னு ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்தான் இல்லை) ஒரு சூப்பர் அன்னாசி பழ ஜுஸ் கப்பை கொடுத்து குடிக்கிறியான்னு கேட்டு “நல்லா இருக்குமா”ன்னு கேக்க வாயெடுக்கரதுக்குள்ள நம்ம ரூம் கார்டை வாங்கி ஒரு தேய் தேச்சு 8 டாலர் ஆச்சுன்னு சொல்லிட்டாங்கப்பு. அப்பால நாம எப்பேர்பட்ட ராஜ பரம்பரை, ஒரே ஒரு கப்பு போதும், நிறைய பேர் வராங்க எல்லாருக்கும் வேணுமில்லையான்னு பெருந்தனமையா அவங்ககிட்ட நடந்துகிட்டு விடு ஜீட்.

இப்படியாக படாத பாடு பட்டு சொகுசு கப்பலேறிய ஒரு தமிழன் என்ற பெயரை வேறுயாரும் எடுத்துக்கரதுக்குள்ள எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.

காலை 11 மணிக்கு கப்பலுக்குள்ள வந்தா சட்டுபுட்டுன்னு நாலு எடத்த பார்த்தமா, நம்ம ரூமுக்கு வந்தமா, சின்னதா ஒரு த்யானம் செய்தமான்னு இல்லாத குறைக்கு, மதியம் 1 மணிக்குத்தான் ரூமுக்குள்ள போக முடியும்ன்னு சொல்லி வெளியிலேயே நிறுத்திட்டாங்க. “ஏண்டா என்னடா ஆச்சு உங்களுக்கு இவ்ளோ நேரம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு” ன்னு கேட்டே விட்டேன்.

அதுக்கு “கப்பலை நல்லா சுத்திப் பாருங்க, ராவிக்கு ஜூப்பர் ஷோ இருக்கு எங்க ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா”ன்னு அன்பா சொல்லிட்டு போய்கிட்டே இருந்தானுங்க. இவனுங்களுக்கு எங்கள பத்தி அவ்வளவா தெரியாது, இவங்களோட மிட்நைட் ஷோ எதுக்கும் போகாம நாம ஏன் வரலைன்னு இவனுங்க வருத்தப் பட வெக்கனும்னு மனசுக்குள்ளேயே கறுவிக்கிட்டோம்.

நாங்க போன கப்பல் 10 தளம் கொண்டது. எங்க ரூமும் 10வது தளத்திலதான். 11வது தளத்தில் நீச்சல் குளமும், கப்பலின் முன் பக்கம் 12வது தளத்தில் சாப்பாடும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கப்பலில் எங்களைப் போல பயணித்த 3000 பேருக்கு 850 சிப்பந்திகள்ன்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லக்கூடாது, கப்பலுக்குள்ளே ஒரு சின்ன நகரமே இருக்குங்க. பெரிய சூதாட்ட விடுதி, 3 சாப்பாடு ஹோட்டல், சின்ன மால், 2 ஸ்பெஷல் ‘தண்ணி’ கிடங்கு, ஒரு பெரிய இரண்டடுக்கு ஆடிட்டோரியம், குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை கண்காணித்துக் கொள்ள இடம், லைப்ரரி, முடிதிருத்தும் இடம், கூடைப் பந்தாட இடம், டேபிள் டென்னிஸ் ஆட இடம் என்று அசத்தோ அசத்துன்னு அசத்ராங்க. கொஞ்சம் அசந்து மறந்து எங்கெயாவது நின்னா போச்சு ஒன்னு “என்னங்க ஏதாச்சும் வேணுமா, ஏதாச்சும் தெரியனுமா, என்னைய கேளுங்க நான் சொல்றேன்” னு வந்துடரானுங்க, இல்லை “ஏதாச்சும் சாப்பிடரீங்களா, கொண்டுவரட்டுமா”ன்னு கேக்கராங்க. இப்படியெல்லாம் நம்மள கவனிச்சா நாம திரும்பத் திரும்ப கப்பல் பயணத்துக்கு வருவோம்னு எந்தப் பயபுள்ளையோ போட்டு கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
ஒருவழியா ரூமுக்கு நம்மள அனுப்பி அதப் பார்த்தா கொஞ்சம் மலைப்பாத்தான் இருந்துச்சு. காசுக்கேத்த தோசைன்னு சும்மாவா சொன்னாங்க.
ஒரு கிங் சைஸ் பெட்

ஒரு சோபா அதைப் பிரிச்சு குயின் சைஸ் பெட்டாக்கி ரெண்டு பேர் தூங்கலாம்,
Add Image

ஒரு சின்ன பார்

ட்ரெஸ்ஸிங் டேபிள்

சின்ன குளியலறை

பால்கனி
என்று ரொம்ப தாராளமாகவே இருந்தது.
இதையெல்லாம் அனுபவிக்கரத்துக்குள்ள ரூம் சர்வீஸ்ன்னு ஒருத்தன் வந்து கதவை இடிச்சு, “என்ன ஏழரை மணி ஷோவுக்கு போகலையா”ன்னு கேட்டு கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா அனுப்பிட்டான். அப்பதான் தெரிஞ்சுது எங்களை வெளியில அனுப்பினாதான் அவன் ரூமை க்ளீன் பண்ணி பளிச்சுன்னு வெக்க முடியுமாம். நேரம்டா சாமின்னு, அந்த ஷோவுக்குப் போனோம்.
இவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் நல்லாத் தெரியுது, எதை வேணும்னாலும், பேசிப் பேசியே வித்துடுவானுங்க. இப்படித்தான் 25 டாலருக்கு ஒரு கூப்பன் புத்தகம் வித்தானுங்க அத வாங்கினா நமக்கு 1000 டாலர் லாபம்ன்னு சொல்லி சொல்லி வித்தானுங்க. ரஸல் பீட்டர் ஸ்டாண்டப் காமெடி கேட்டீங்கன்னா ஒன்னு சொல்வான், ரெண்டு பேர் வியாபாரத்துல மீட் பண்ணக்கூடாது, இந்தியனும் சீனனும். இந்தியன் எதையும் பேரம் பேசாம வாங்க மாட்டான், சீனன் எந்த பேரத்துக்கும் ஒத்துக்க மாட்டான். இது இவங்களுக்கு நல்லாத் தெரியும் போல இருக்கு. அப்படி புத்தகம் வாங்கினவங்கள்ள(ஹி ஹி என்னையும் சேர்த்து) பாதி பேர் இந்தியர்கள். அந்தப் புத்தகத்தில நாளான்னிக்கு நாம நசாவு (பஹாமாஸ்) போய் எல்லோரும் மூட்டை மூட்டையா வைரமும் வைடூரியமும்மா வாங்கிட்டு வரணும்ன்னு அவனுக்கு ஆசையா இருக்குன்னு சொல்லி சொல்லி கிளப்பி விட்டு “எலேய் வேலையப் பாருடா வெண்ணை”ன்னு நான் கத்தலாம்னு எழுந்ததும் டக்குன்னு கடைய மூடிக்கிட்டு ஓடிப் போயிட்டான். ரூமுக்கு வந்து அந்தப் புத்தகத்தை ஒழுங்கா படிச்சதும் தெரிஞ்சுது 1000$க்கு வாங்கினா 50$ இனாம்னு ஒரு கூப்பன் அதுமாதிரி பலதும் சேர்த்தா உங்களுக்கு 1000$ லாபமாம். அதுக்கு ஒரு 8000-10000 டாலர் செலவு பண்ணனுமாம். நாங்க இதுமாதிரி சீப்பா 1000$ லாபமெல்லாம் பாக்காம, ஸ்ட்ரெய்ட்டா 10000 டாலர் லாபமே பாத்துட்டோம். அந்த கதை 4ம் பாகத்தில வருது.
அந்தப் பயபுள்ள எழுந்து ஓடினதும் கப்பலின் நிகழ்ச்சிகளின் இயக்குனர் வந்து எல்லோருக்கும் அவரோட பல பல முறை சொன்ன ஜோக்ஸை எங்களுக்கு முதல் முறையா சொல்றாப்ல சொல்லி அவரே சிரிச்சுகிட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடியனை அறிமுகம் செய்துட்டு போனார். அந்த ஆள் பாவம், ஆபாச ஜோக் சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம, “என்ன கொடுமை சரவணா”ன்னு தலைல அடிச்சுகிட்டே ஜோக் சொன்னான். அதையெல்லாம் இப்ப சொல்லப் போரதில்லை அதெல்லாம் சேத்து வெச்சு நானும் ஒரு நாள் மேடைல ஸ்டாண்டப் காமெடி செய்ய வேண்டி வந்தால் சொல்றேன்.
சரியாக 8:30 மணிக்கு எங்களுக்கு சாப்பாடு போடுவதாக டைம் தந்திருந்தார்கள். சரின்னு அந்த ஹோட்டலுக்குள்ள போனா, முக்காவாசி பேர் இந்தியர்கள், மீதி சீனர்கள். எங்களுக்கு சர்வரும் சீனன் அவனோட உதவியாளியும் சீனள்.
அவளுடைய வேலை சூப்பர் ஈசி.
அவள்: “மேம், வாட்டர்ர்ர்ர்ர்”
மாலதி: “யா, வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓஓஓ ஓகே ஒன் லெமனெட்”
நான் குறுக்கிட்டு: “நோ, ஷி வாண்ட் வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், ஒன் லெமனெட் அண்ட் வாட்டர்”
நான்: “நோ, ஒன்லி வாட்டர் வித் லெமன் அண்ட் ஐஸ்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், வாட்டர் அண்ட் லெமனெட், ஐஸ் க்ரீம் ஆஃப்டர் ஃபுட்.
மாலதி: “டு யூ ஹாவ் எனிதிங் அதர்தன் லெமனெட்”
அவள்: “மேம், யு வாண்ட் அனதர் லெமனெட்”
நான் (தமிழில்): “கிழிஞ்சுது போ, அம்மா, நீ இவகிட்ட அதிகம் பேசாதே, அப்புறம் அவ பேசரமாதிரி உன் இங்லீஷும் ஆகிடப் போகுது பாத்துக்க”
அவள்: “சர்ர்ர்ர் யு வாண்ட் சம்திங் டு டிரிங்”
நான்: “லெமனெட்”
அவள்: (முகமெல்லாம் பல்லாக) “ஓ, லெமனெட் வெரி குட்”
இவள் இப்படின்னா சர்வர் அதுக்கும் மேல ஒரு படி போயிட்டான். அவன் பெயர் ஜார்ஜ். சீனனுக்கு எப்படி ஜார்ஜ்ன்னு பேர் வெச்சாங்கன்னு எனக்குத் தெரியலை அதை அவன் கிட்ட கேட்டு அவன் சொல்ற பதில் எனக்குப் புரியரதுக்குள்ள மாதுரி காலேஜ்க்கே போயிடுவாளோன்னு பயம் வந்துடுச்சு.

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, ஆங்கிலம் சுத்தமா தெரியாம, இவங்க எல்லாம் என்ன தைரியத்தில அமெரிக்காவுக்கு வேலைக்கு வராங்கன்னு தெரியலை, நம்ம அப்பா அம்மா வராங்களேன்னு சொன்னா அவங்க இங்க வேலைக்கு வரலை (நம்ம வீட்டுல குழந்தைகளை பாத்துக்கர வேலைக்கு வராங்கன்னு சொல்லி சிண்டு முடியாதீங்க சொல்லிட்டேன்). நம்மளோட இருக்கரதுக்குத்தான் வராங்க அதனால அவங்களுக்கு நல்லா ஆங்கிலம் பேச வரலைன்னா பரவாயில்லை. இவங்க எல்லாம் இப்படி வரதுக்கு அவங்க வருமானமும், அவங்களோட சர்வைவல் எண்ணமும்தான்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுடன் நடந்த டைலாக்கை கொஞ்சம் காமெடிக்காக இங்க போட்டாலும், அந்தப் பெண்ணையும் ஜார்ஜையும் நினைச்சா பாவமாவும் இருக்கு, பாராட்டவும் தோணுது.
இப்படியாக எங்களின் முதல் நாள் கப்பலில் முடிந்தது.

அடுத்தப் பதிவில கோகோகே பீச்சுக்கு கூட்டிகிட்டு போய் சுத்தி காமிக்கறேன்.
-முரளி இராமச்சந்திரன்.

Tuesday, March 01, 2011

பஹாமாஸ் விஜயம் - 1

“எங்கள் பஹாமாஸ் விஜயம் (பாமா விஜயம் இல்லைங்க, தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி அதனால நல்லா பார்த்து படிங்க) முதலில் பஹாமாஸுக்கு என்று ஆரம்பிக்கவில்லை. சும்மா ஒரு ரவுண்டு க்ரூய்ஸ் அதாங்க சொகுசு கப்பல்ல போய்ட்டு வரலாம்னு ஆரம்பிச்சது.”

“கோடிவீட்டு கோமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, பக்கத்து தெரு பரிமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, எனக்கும் அவங்க மாதிரி நாலு எடம் போய் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, எல்லாம் என் தலையெளுத்து, என்னை நல்லா ஆசை ஆசையா வளர்த்து இப்படி ஒரு களிமண் பொம்மைகிட்ட மாட்டி விட்டுட்டாங்களே” ன்னு உங்க வீட்டுல சொல்ற மாதிரி என் வீட்டிலயும் சொன்னாங்கன்னு நீங்க நினைச்சா “சாரி அப்படி எந்த பிட்டும் போடாம, என் நண்பன் போன வருஷம் இப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வந்து எப்படி இருந்ததுன்னு சொன்னதும் எனக்கே அப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வரணும்னு தீ பிடித்துக் கொண்டது.”

ரிச்மண்ட்டில் சிலரிடம் பேசியபோது “அதுவா, அது ஒன்னும் காசு அதிகமான விஷயம் இல்லை, ஒரு 800$ல் எல்லோரும் போயிட்டு வந்துடலாம், சும்மா சூப்பரா இருக்கும்” என்று அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் விசிறிவிட்டார்கள். தீ கணன்று கணன்று எரிந்து, எந்த க்ரூய்ஸ் நல்லது, எதில் என்ன கிடைக்கிறது, நம் ப்ளானுக்கு எந்த க்ரூய்ஸ் ஒத்து வரும், என்றெல்லாம் பார்த்து பிறகு ஒன்றை முடிவு பண்ணினோம். அதுவரை இது கொஞ்சம் விலை அதிகமான ஒரு சமாச்சாரம் என்பது டிக்கெட் விலையை பார்க்கும் வரை உறைக்கவில்லை. பார்த்ததும் திடீர்ன்னு ஒரு பக்கெட் பச்சை தண்ணியை தலைமேல ஊத்தினா மாதிரி ஆயிடுச்சு. இதுக்குள்ள என் பெண்கள் ரெண்டு பேரும் அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோருக்கும் இப்படி க்ரூயிஸ் போகப் போவதாக சொல்லிட்டதாக சொல்லவும், சரி நாமதான் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டோமேன்னு எங்களை சமாதானம் செய்து கொண்டுடோம் (வேற வழி). அதிலேயும் பால்கனி இருக்கனும், ரெண்டு கிங் பெட் இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு வீட்டில எல்லோரும் பலப் பல கண்டிஷன்ஸ் போட்டு அதெல்லாம் இருக்கரமாதிரி ஒரு நல்ல சுப மூஹூர்த்த தினத்தில் டிக்கெட் புக் பண்ணினோம்.

என்னய்யா ஒரு ப்ரயாணத்திற்கு டிக்கெட் வாங்கிட்டு இப்படி அலுத்துகரான் இவன்னு சீப்பா நினைக்காதீங்க. டிக்கெட் வாங்கினதும்தான் தெரிஞ்சது பஹாமாஸ்ல சுத்தரதுக்கு தோதா நல்ல அரைநிஜார் இல்லை, அது இல்லை இது இல்லைன்னு சொல்லி ஒரு டப்பா சினிமால தனுஷ் பாடின மாதிரி ‘துண்ட காணோம் துணிய காணோம், தூங்கும் போது துட்ட காணோம்”ங்கர கதையா செலவுமேல செலவு செய்து ஒரு வழியா ப்ரயாணத்துக்கு தயாரானோம். இதர செலவுகளை கணக்கு பண்ணினா, ஆனை அரை காசு, அங்குசம் ஆறு காசுங்கர கதையானது ஒரு தனிப் பதிவே போடக்கூடிய சமாச்சாரம்.

நல்ல வேலையா இங்கிருந்து ஃப்ளோரிடாவில் கேப் கானவரல்ங்கர இடத்துக்கு எங்களோட வேனிலேயே போகலாம்னு முடிவு செய்தோம். இந்த இடத்தில இருந்துதான் அமெரிக்க விண்வெளி ராக்கெட்கள் செலுத்தப் படுகிறது. இவர்களுக்கும் நமக்கும் (இந்தியாவிற்கும்) என்ன வித்தியாசம்ன்னா இவங்க விண்வெளி ராக்கெட்கள் எப்போதாவது வெடிக்கிறது, நம்மூரில் எப்போதாவது வெடிக்காமல் விண்வெளிக்கு போகிறது. இதிலிருந்து தெரியும் உண்மை, இந்தியாவில்தான் நல்ல வெடிக்கும் ராக்கெட்டுகள் இருக்கிறது, பின்ன என்னங்க எத்தனை வருஷமா நாம தீபாவளிக்கு வெடிக்கர ராக்கெட், பூவாண ராக்கெட்ன்னு விட்டுகிட்டு இருக்கோம். இவ்ளோ செலவு பண்ணி ஒரு ராக்கெட் வெடிக்காம சும்மா மேல போனா, பாக்கரவன்லாம் என்ன கேணையங்களா.

எல்லா ஏற்பாடுகளும் செய்யரதுக்கு முன்னாடி, என் மனைவியும் குழந்தைகளும் ஒரு கவுண்ட் டவுன் காலெண்டர் தயாரித்து தினம் ஒரு நாளை அடித்து அடித்து அவங்க பங்கிற்கு எதிர்பார்ப்பை அதிகப் படுத்திக் கொண்டே வந்தார்கள். இதுக்கு நடுவில நானும் கோபால் பல்பொடி விக்கரவன் மாதிரி வாரா வாரம் ஊர் ஊரா போய் வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்ததும் முதலில் அந்த காலெண்டரைப் பார்த்து இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று என் பங்கிற்கு கொஞ்சம் ப்ரெஷர் ஏத்தி விட்டேன்.

இதற்கு நடுவில் நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேலை ஒரு வாரம் முன்னாடியே முடிந்துவிட என்னை ப்ரயாணம் போக இருந்த வாரம் தலைநகரத்தில் வேலை செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்கள். வேலை ஒன்னும் பெரிசில்லை பிடிங்கின ஆணிகள் சரியா வந்து சேர்ந்ததா, ஆணி கணக்கு சரியா இருக்கா, சேதாரம் எவ்வளவு, செய்கூலி எவ்வளவுன்னு கணக்கு போட்டு கணக்கு போட்டு எல்லாம் சரியா இருக்கா, இல்லைன்னா என்ன ஆச்சுன்னு கதை விட்டு காதுல பூசுத்தர வேலை. காலைல 8:30க்கு ஆஃபீஸ் உள்ள போனா ஹோட்டலுக்கு திரும்பி போக இரவு 10-10:30 ஆகிடும். இதுக்கு நடுவில அந்த வாரம் பனி மழை பொழியப் போகுதுன்னு சொல்லப்பட வீட்டுல எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள் - அது என்ன எதுக்கெடுத்தாலும் எல்லாரும் சொல்றாங்க, சொன்னாங்க ன்னு எல்லாரும் சொல்றாப்பல நீயும் எல்லாரும்னு சொல்ல வரேன்னு நீங்களும் சொல்லாதீங்க, அப்புறம் யார் அந்த எல்லாரும்னு, எல்லாரும் கேக்கர மாதிரி நானும் கேட்பேன். மேல என்ன எழுதினேன்னு எனக்கே புரியலை உங்களுக்கும் புரியலைன்னா கவலைப் படாதீங்க. அடுத்து படிங்க.

என்ன சொல்லிகிட்டு இருந்தேன், வீட்டுல கவலைப் பட ஆரம்பிச்சாங்கன்னுதானே, கரெக்ட், ஆனா அவங்க கவலைப் பட்டது நான் எப்படி தலைநகரத்தில இருந்து கொட்டர பனில வீடுவருவேன்னு இல்லை, எப்படி ப்ரச்சனை இல்லாம கப்பல்ல போகப் போறோம்ன்னு. என்ன, எல்லா வீட்டிலயும் இதே கதைதானா. சரி சரி அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம். ஒருவழியா ஒரு 8 மணிநேரம் ப்ரயாணம் செய்து தலைநகரத்தில இருந்து ஃப்ளோரிடா போக இருந்த தினத்திற்கு முன் தினம் வீடு வந்து சேர்ந்தேன். மட மட வென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து மறுதினம் மதியம் கிளம்பி மேளதாளங்கள் எதுவும் இல்லாமல், நான் எப்போது ஊருக்கு போனாலும் வீடு வரை வந்து கண்டிப்பாக இவன் ஊருக்கு போகிறானா, குறைந்த பட்சம் 10 நாளாவது இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாமா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் என் ‘ஆத்மார்த்த’ நண்பர்களும் வழியனுப்பாமல் ஃப்ளோரிடா நோக்கி எங்களது ரதத்தை செலுத்தினோம்.

மறுதினம் மதியம் சொகுசு கப்பல் கிளம்பர போர்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு நல்ல தங்கும் இடம் போய் சேர்ந்தோம்.

பக்கத்தில் இருந்த பீச்சில் காலார நடக்கும் போது ஒரு ஸ்டிங் ரே கிடக்க, அதை தொட்டால் ‘கதை கந்தலாயிடும்’ என்று மனைவியும் குழந்தைகளும் பயப்பட, அதி பயங்கர தைரியசாலியான நான் அவர்களுக்காக என் தைரியத்தை மறைத்துக் கொண்டு ஒரு புகைப் படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லாமல் எப்படி துல்லியமாக படமெடுத்திருக்கிறேன், என்னை பார்த்து பயம் பயந்து ஓடிடும்.
இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக இருந்து விட்டு மூன்றாம் நாள் மதியம் மேலே இருக்கும் கப்பலுக்கு போய் சேர்ந்தோம்.

மீதி அடுத்த பதிவில்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, February 24, 2011

பஹாமாஸ் பயணம்

முரளி: "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த கதை தெரியுமா?
தெரியாதா, எனக்கும் தெரியாது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சமீபத்தில் க்ரூஸ் அதாங்க சொகுசு சுற்றுலா (தப்பா படிச்சுட்டு "என்னாது, சொகுசு சுந்தரியா"ன்னு கேக்கக் கூடாது) பஹாமாஸ் போய் வந்த கதை நாளைக்கு வெளியிடப் போறேன்".

நாகு: "நாளைக்கா!"

முரளி: "உடனே நாளைக்குன்னா நாளைக்கா, ம்ம்ம்ம் நாளான்னிக்கு, ஹும்ம்ம் அதுக்கு மக்கா நாள்ன்னு வெச்சுக்கங்க எழுதி ஒரு ரெண்டு பதிவு, போட்டு வாங்கிடலாம்னு இருக்கேன். உடனே ஊருக்கு போகனும், ஆஃபீஸ்ல ஆணி புடுங்கணும், தமிழ் சங்க விழாவில தட்டி தட்டி கைவலிக்குது, விசிலடிச்சு வாய் வலிக்குது, சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு வலிக்குதுன்னு சொல்லாம, மருவாதையா படிங்க, ரசிங்க, பின்னூட்டமிடுங்க சரியா".

-முரளி இராமச்சந்திரன்.