Showing posts with label தோட்டம். Show all posts
Showing posts with label தோட்டம். Show all posts

Monday, May 12, 2008

தோட்டக்காரன்

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். கசக்கிய கண்களுடன், வாசற் கதவை திறந்து வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. வானம் மட்டும் லேசாக தூறிக் கொண்டிருந்தது. காற்று தான் கதவைத் தட்டியதோ என்று எண்ணியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டேன். யாரும் வந்து போனதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று எதிர்த்தாற் போல இருந்த மரத்தைப் பார்த்தேன். ஆஹா என்ன அழகு! கழுவினாற் போல் ஒரு அழகிய பச்சை நிறத்துடன் நின்றிருந்தது. இறைவனின் படைப்பில் எது தான் அழகு இல்லை?

மீண்டும் படுக்கப் பிடிக்காமல், காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு பூஜை புனஸ்காரங்களை முடித்து அலுவலகத்திற்கு செல்ல தயாராகி இருந்தேன். சிறிது நேரத்தில் அருமை மனைவி, காலை சிற்றுண்டியுடன் வந்தாள். சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

என் சக நன்பன் ஒருவன் அவனது மேஜையில் இருந்த ரோஜா செடியின் காய்ந்த இலைகளை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் பராமரிக்கும் விதத்தை வியந்து பார்த்தவாறே இருந்தேன். என் வீட்டின் முன் நின்றிருந்த மரத்தின் அதே கழுவிய பச்சை நிறம் இப்பொழுது அந்த செடியில் இருந்தது. சிறிது நேரம் நன்பனிடம் உரையாடி விட்டு என் மேஜைக்கு வந்து உட்கார்ந்தேன். என் கவனம் மீண்டும் அந்த மரத்தை சுற்றியே வந்தது. யார் அந்த மரத்துக்கு இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் விடுகிறார்கள்? என் மனம் விசுவரூபம் எடுத்து உலகெங்கும் பரவியது. இந்த மரம் மட்டும் இல்லை, மலைகளிலும், காடுகளிலும், ஆற்றோரங்களிலும் வளரும் மரங்களை யார் பராமரிக்கிறார்கள்?

இயற்கையா? இறைவனா?
யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. காற்றும் மலையும் தான் இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் ஊற்றுகிறதோ? என்ன தான் உரம் போடுகிறார்கள்? யார் போடுகிறார்கள்? யார் படைத்தார் இந்த காலங்களை? காற்றின் அசைவுகளை?
இறைவன் என்னும் தோட்டக்காரனோ?
அப்படி என்றால் "வறட்சி" என்பது என்ன? அவனின் சோம்பேறித்தனமா? புயல், வெள்ளம் என்பது அவனின் படைப்பு பிடிக்கவில்லை என்று அழிக்கும் விதம் தானோ? இது தான் அவன் பராமரிக்கும் விதம் என்றால், நாம் காண்பது அவனின் தோட்டத்தைத் தானே. அவன் தோட்டக்காரன் என்றால் அந்த தோட்டம், நாம் வாழும் உலகம் தானோ? அப்படி என்றால் அந்த தோட்டத்திற்கு யார் சொந்தக்காரன்?
இயற்கையா? இறைவனா?

தோட்டத்தின் பலனை அனுபவிப்பவன் தானே, அதன் சொந்தக்காரன். அப்படி என்றால், இந்த உலகை அனுபவிப்பவர்கள் நாம் தானே? ஆக நாம் தானே தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள். நாம் தோட்டத்தின் சொந்தக்காரன் என்றால் இறைவன் நம் தோட்டக்காரனோ?

நாம் யார்? இறைவன் யார்?

- வெங்கடேசன் செட்டியார்

ரிச்மண்டில் 2002ல் நடந்த இலக்கியப் போட்டியில் பங்கேற்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒன்று. இதை அவ்வப்போது படித்துக் கொண்டிருப்பேன். மற்ற படைப்புகளை இங்கே காணலாம்.

Friday, May 11, 2007

தோட்டம்

வாழைக் குலை தள்ளி
வைத்த கன்று பலவிருக்கும்

அவரை துவரை கொடியேறி
அழக ழகாய்ப் பூத்திருக்கும்

மலருண்ணும் வண்ணத்துப் பூச்சி
மகரந்தத் தூள் பரப்பும்

கொய்யா மரத்து அணில்
குதித் தோடி விளையாடும்

மா மரத்து மைனா
மண்புழுவைத் தேடி நிற்கும்

வேப்ப மர நிழலடியில்
வெக்கை இன்றி குளுகுளுக்கும்

இளந் தென்றல் மிதமாக
இன்னிசை பாடி வரும்

மண்ணில் கால் பதிக்க
எண்ணம் நடை திறக்கும்

-----

என்றும் அன்புடன்
சதங்கா