இந்தத் தலைப்பு சரியா! சரியில்லையா! ன்னு தமிழ் நல்லா
தெரிஞ்ச நாகு, மெய்யப்பன், சீனிவாசன், வெங்கட் செட்டியார், சத்யா, நடராஜ மூர்த்தி மற்றும்,
மு.கோ போன்ற தமிழ் அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.
சொல்ல வந்த விஷயம் (விடயம் நு எழுதனுமோ!) இதுதான். தமிழ் சங்கதின் சார்பில் ஒரு குழுமமா சேர்ந்து சில
விஷயங்களைப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் கூட்டம்
போட்டு பேசினோம். வெறும கூட்டம் போட்டு பேசரதோட, பல நல்ல புத்தகங்களை
கடனா வாங்கிட்டு போய் படிச்சுட்டு அடுத்த கூட்டம் நடக்கும் போது கொண்டு வந்து தரலாம். உங்க கிட்ட இருக்கர புத்தகங்களையும் இப்படி கொண்டு
வந்து கொடுத்து நம்ப மக்களுக்கு படிக்கர ஆர்வத்தையும், படிக்கர விழிப்புணர்வையையும்
கொண்டு வரலாம்.
சீனிவாசனின் தொடக்க உரைக்கு அப்புறம் தமிழ் சங்கத்தின்
இந்த கூட்டங்கள் நல்லா போகுமா போகாதான்னு தெரிஞ்சுக்க நம்ம வெங்கட் செட்டியார் ‘சந்தேகம்’
ங்கர தலைப்பில் பேசினார். வெறும பேசினார்ன்னு
சொல்லக் கூடாது, சந்தேகமே இல்லாம, நம்ம எல்லோருக்கும் சந்தேகம்ன்னா என்னன்னு கண்டிப்பா
சந்தேகம் வர்ர மாதிரி பேசினார். இப்படி பட்டைய
கிளப்பி வெங்கட் பேசினதும், சத்யா மாறிவரும் பல மாறுதல்களைப் பற்றிப் பேசி நாம இழந்தை
பல விஷங்களைப் சொல்லி நம்மை மறுபடி நம்முடைய பால்ய காலத்துக்கு கொண்டு சென்றார். கடைசியா நான் ‘அரசியல்’ ங்கர தலைப்பில பொதுவா அரசியல்ன்னா
என்ன, நம்மோட தினசரி வாழ்க்கையில அரசியல் எப்படி இயங்குதுன்னு பேச ஆரம்பிச்சு, 45 நிமிஷம்
எல்லோரும் விவாதிச்சதுக்கு அப்புறம் வெறும அரசியல்ன்னா என்னங்கரதுல வந்து நின்னதோட
கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தோட
துவங்கிய கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவுக்கு வந்தது.
கடந்த சனிக்கிழமை (12.17.2011) சங்கத்தின் இரண்டாவது
கூட்டம் நடைபெற்றது. இந்த முறை க்ரெடிட் மதிப்பீட்டு
எண் என்பது என்ன அதை எதற்காக பார்க்கிறார்கள் என்பது பற்றி நண்பர் ராஜ்குமார் விவரமாகச்
சொன்னார். இதுபோல பல அரிய பெரிய விஷங்கள் இவரிடம்
இருக்கிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்தான்.
இவரை அடுத்து நண்பர் மெய்யப்பன் (தமிழ் சங்கத்தின்
தமிழ் ஆசிரியர்) தமிழுக்கு யார் எதிரி என்று காரசாரமாக பேச வந்தவர் முதல் எதிரிகளாக
நாகு, நான் மற்றும் சீனிவாசனை உதாரணமாகக் காட்டினார். இவர் சொல்ல வந்த கருத்து தமிழ் நசிந்து வருகிறது,
நல்ல எழுத்தாளர்கள் பலர் இருந்தும், படைக்கவும், படைப்புகளைப் பதிப்பிக்கவும் ஆர்வம்
இல்லாம இருக்காங்க, தமிழ் நாட்டு கோவில்கள்ள இங்கு தமிழிலும் அர்சனை செய்யப் படுங்கர
போர்டை பார்த்தா வெக்கமா இருக்கு, தமிழ் கொஞ்சம் கொஞ்சமா நசிஞ்சு போயிட்டே இருக்குன்னு
விலாவரியா பேசினார், இது பல நிஜ தமிழ் ஆர்வலர்களுக்கும், நம்ம பலருக்கும் காலம் காலமாக இருக்கும் ஒரு ஆதங்கம்தான். ஆனா அதை இவர் சொன்ன விதம், இவருடைய கவலை, தமிழக
அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுபோல் போலியாக இல்லாமல் ஹிருதயத்திலிருந்து வந்த ஒரு
கவலைங்கரதை விளக்க வேண்டிய அவசியமில்லை. இவர்
பேச்சை குறுக்கிட்டு என்னை மாதிரி எல்லோரும் பேசினாலும், பேச்சு தங்கு தடையில்லாமல்
நல்லா இருந்தது.
ரஜனியோட டிசம்பர் 12 பிறந்த நாளை கொண்டாடர தமிழக மக்கள்,
தேசிய கவி பாரதியோட டிசம்பர் 11 பிறந்த நாளை கண்டுக்காம இருக்காங்களேன்னு ரொம்ப வருத்தப்
பட்டார் மெய்யப்பன். ரஜனி பிறந்த நாள் ஒரு
கமர்ஷியல் விஷயம், பாரதி பிறந்த நாள் நம்மை
போல பலருக்கு உணர்வு பூர்வமாண ஒன்னு, இதை பத்தி அதிகம் கவலைப் பட வேண்டியதில்லைங்கரது
என்னோட கருத்து. இதைத் தவிர அதிகமா பேசப் பட்ட
விஷயம் ப்ளாக்ங்கர விஷயம் வந்ததும், ஒரு சென்சார்ஷிப் இல்லாமல் யார் வேணும்னாலும் எதை
வேணும்னாலும் எழுதலாம்ங்கரது. நாகுவோட கவலை
ஒற்றெழுத்து எப்படி எழுதரதுன்னு கூட ப்ளாகுல எழுதர நிறைய பேருக்குத் தெரியலை, ரவியுடைய
கவலை, இப்படி தப்பு தப்பா பலர் எழுதரதுனால கூட பல படிச்சவங்க எழுதரதுல ஆர்வம் காட்டாம
இருக்கலாம். எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே
இல்லை. தமிழை தப்பு தப்பா எழுதினா தப்பு இல்லை. தப்பான கருத்தை சரின்னு எழுதினாதான் தப்பு. (ஹீம் நாடகம், கதைன்னு எழுதும் போது எனக்கு இப்படி
ஒரு ஃப்ளோ வரதே இல்லை)
ஒரு சின்ன சிற்றுண்டி இடைவெளி (அதாங்க ஸ்நேக்ஸ் ப்ரேக்)
க்கு பிறகு மு.கோபாலகிருஷ்ணன், பேசினார். இவர்
பேசியதை சுருக்கமா சொல்லனும்னா கூட ஒரு பெரிய கதை மாதிரி சொல்லனும். பல விஷயங்களை பளிச்ன்னு சொன்னார். மெய்யப்பன் கருத்துகள் பலதை ஆதரிச்சும் சிலதை எதிர்த்தும்
பேசினார். அந்தக்கால அரசியலில் காமராஜர், முத்துராமலிங்க
தேவர் ரெண்டு பேருக்கும் நடுவில இருந்த பல விஷங்களைச் சொன்னார். பெரியாரைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு, அவருடைய பல
நல்ல எண்ணங்களை பத்தி சொல்லிட்டு அந்தப் பேச்சு அரசியலை நோக்கி போறதை தெரிஞ்சுகிட்டு
அதை தவிர்த்துட்டு பேசினார். இவர் பேச்சு நல்ல
பல கருத்துக்களோட இருந்தது.
எனக்கு இப்படிப் பட்ட கூட்டங்கள் பிடிக்கும், ஏன்னா
அடுத்தவங்க கருத்து என்னன்னு தெரிய வரும் அது மட்டும் இல்லாமல், கருத்துப் பகிர்வுங்கரது
அருமையான ஒரு விஷயம். பேசப் பேச பல விஷயங்களைப்
பத்தி ஒரு தெளிவு வரும். ஆனா இப்படிப் பட்ட
நல்ல கூட்டங்கள் தொடர்ந்து நடக்கரதுக்கு நம்மல மாதிரி பலருடைய ஒத்துழைப்பு அதி முக்கியம். பேச தயாரில்லையா, வேண்டாம், ஆனா, வந்து பங்கெடுத்துக்கலாமே. அதை செஞ்சா 10-15 இருக்கர இந்தக் கூட்டம்,
40-50 ஏன் 100 பேர் கலந்துக்கர கூட்டமா மாறும்.
இன்னிக்கு நம்ம எல்லோருக்கும் இருக்கர ஒரு கவலை, நம்ம
நாட்டின் அரசியல் நிலைமை மாறாதா, யார் எதைச் செஞ்சா இது மாறும், அன்னா ஹசாரே காப்பாத்துவாரா,
மோடி காப்பாத்துவாரா, எப்படி நாம இதுல பங்கெடுத்துக்கரதுன்னு தினம் தினம் யோசிக்கரோம்,
அதே யோசனையோட, மாசம் ஒரு தடவை இப்படி கூட்டங்களுக்கு வந்தால், ஊர் கூடி யோசிச்சா ஒரு வழி பிறக்காமலா போகும்.
முரளி இராமச்சந்திரன்