Showing posts with label #உள்ளூர்க்காரன். Show all posts
Showing posts with label #உள்ளூர்க்காரன். Show all posts

Sunday, October 01, 2023

ஒழிக்கப்பட வேண்டிய நோய்

 உலகில் ஒழிக்கப்பட வேண்டிய நோய்கள் பல உண்டு. தீ-உயிராக (Virus) உடலுக்குள் நுழைந்து ஆளைக் கொல்வது முதல் மூளைக்குள் தீ எண்ணமாக நுழைந்து நன்மனதைக் கொல்வது வரை நோய்கள் பலவிதம், ஒழிக்கப்பட வேண்டியதும் பலது உண்டு.

உலக வரலாற்றில் மனிதகுலத்தின் அதிகாரம் (Dominance) நாம் சிந்திக்கத் துவங்கிய பின் வெகுவாக வேகம் எடுத்தது. அதற்கு முன்பு நாம் மற்ற குரங்கின (Primates) கூட்டத்தைப் போல பத்தோடு பதினொன்றாக ஏனோதானோ என்றே இருந்திருக்கிறோம். சிந்தனைப் பொறி தட்டிய உடனேயே "முதல் நிலை வேட்டையாடி" (Apex predator) ஆவதற்கான பாதையில் நகரத்துவங்கிவிட்டோம். ஆனால், சிந்தனை, நினைவாற்றல், அதை ஒட்டிய செயல்திறன் என்பன ஒருங்கிணைந்து அறிவார்ந்த (Cognitive) குழுவாக நாம் மாறிய போது நம்முள் பிளவுகளும் போட்டிகளும் தோன்றின என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இன்றுவரை தொடர்கிறது. சமூக வாழ்விலும், அரசியலிலும், நாம் இன்னொரு மனிதனுடன் போட்டியிடும் எல்லா இடங்களிலும் பிளவுகள்  நீக்கமற உள்ளது. அதைத் தவறு என்றும் சொல்வதற்கில்லை. நம் முன்னேற்றத்துக்கான உந்துதல் இன்னொரு குழு/தனி-மனிதப் போட்டிகளில் இருந்தே பிறக்கிறது.

போட்டிகள் சரி என்றாலும் ஒரு அறிவார்ந்த சமூகமாக, பகிர்ந்துண்டு எல்லோரும் பசியாறி இன்புற்றிருக்க தடையாக இருப்பது மாறுபட்ட சிந்தனை கொண்டோர் மீது வளர்த்துக் கொள்ளும் வெறுப்ணர்வு. பழைமை விரும்பும் யானை, செலவை விரும்பும் கழுதை, நோயுற்று தடுமாறும் இலை, சுட்டெரிக்கும் சூரியன் என எந்தக் குழுவில் இருந்தாலும் எதிர்க் குழுவினர் மீது வெறுப்பை (Hate) வளர்த்தல் நல்லதுக்கில்லை. அப்படியான சூழல் உருவாவதை நோய் என்கிறார் ஐயன் வள்ளுவர்.

திருக்குறளில் நட்பியல் எனும் பகுதியை மட்டும் தனியாக ஒரு ஆராய்ச்சி நூலாகவே பதிப்பிக்க முடியும். அதன் அதிகார வரிசை அமைப்பும், உள்ளடக்கமும் ஆழ்ந்து படிப்போரை அசரடிக்கும் அடர்த்தி கொண்டது. நட்பு என்பதை எப்படி கவனமாக அமைத்துக்கொள்ள வேண்டும், தீய நட்பு, கூடாத நட்பு, பேதைமை (லூசுத்தனம்) என நட்பு மெதுமெதுவாசச் செல்லும் பாதையிலேயே அதிகாரங்கள் வரிசையாக வருகிறது. நட்பு திரிந்து கடுப்பாகி வெறுப்பு தோன்றுவது பகை உண்டாகும் முன் என அசத்துகிறது குறளின் அதிகார அமைப்பு.

வெறுப்புணர்வு துளிர்விடுவதைப் பற்றி எச்சரிக்கும் அதிகாரம் இகல்.

அந்த அதிகாரத்தின் முதல் குறள்,
"இகல் (வெறுப்புணர்வு) என்பது உயிர்களிடையே பிரிவினை எனும் பண்பற்ற தன்மையைப் பரப்பும் நோய்" என்கிறார்.

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்


இகல் என்பது எல்லா உயிர்க்கும் பகல் எனும்
பண்பின்மையைப் பரப்பும் நோய்

இகல் = வெறுப்புணர்வு
பகல் = பகுதல் = பிரிவினை
பாரிக்கும் = பரப்பும்

முழு அதிகாரமும் இகல் எனும் வெறுப்புணர்வை ஒழித்தால் கிடைக்கும் நிம்மதி, இன்பம், நன்மை பற்றி பேசுகிறது.

வெறுப்பை ஒழிக்க முடியாமல் போனால் பகை மூளும் என அடுத்த அதிகாரமே பகை பற்றித் துவங்குகிறார்.

அடுத்த மனிதனோடு பிளவை உண்டாக்கி, சமூகத்தில் நீதியைக் குலைக்கும் சிந்தனைகள், வேறுபாடுகள், வெறுப்பு என்பன நோய்களேதான். ஒழிக்கப்படட்டும். பிறப்பு நம் எல்லோருக்கும் ஒரே முறைதான், இப்பிறப்பில் நம்மைப் போலவே எல்லோரும் பிறப்பொக்கும் என வேறுபாடு களைந்து மனிதம் தழைக்கச் செய்வோம்.

--------

Friday, September 01, 2023

சாப்பாட்டுக்கு முன், சாப்பிட்ட பின்.

 

உலகம் முழுக்க "பெரிய" நோயாக மாறி வருவது உடல் எடை கன்னா பின்னான்னு கூடிப் போவது.

பல காரணிகள் இதற்கு இருந்தாலும் தேவைக்கு மேல் உண்பது பெரிய காரணமாக இருக்கிறது. உணவுப் பற்றாக்குறையை அறிவியலின் துணை கொண்டு வென்று விட்டோம். மனித வரலாற்றில் உணவு இவ்வளவு எளிதில் எப்போதும் கிடைத்ததில்லை. ஆனாலும் பஞ்சங்கள் பல கண்ட மனிதன், உணவைப் பார்த்ததும் பாய்ந்து விடுகிறான்.

இன்றைக்கு கைக்கு எட்டிய தொலைவில் எப்போதும் ஏதோ ஒன்று தின்பதற்கு இருக்கிறது. இனிப்பாக, காரமாக, உப்பாக என சுவையாக ஏதோவொன்று நினைத்த போதெல்லாம் தின்பதற்கு பக்கத்திலேயே வைத்திருக்கிறோம். தின்று தின்றே ஒரு வழியாகிறோம்.

போதாக்குறைக்கு தூக்கம் என்பதை ஏதோ நேரத்தை வீணடிக்கும் ஒன்றாக நினைத்து தூங்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டோம். உடலுக்குத் தேவையான ஓய்வைக் குறைத்து, தேவைக்கும் அதிகமான உணவை உள்ளே தள்ளி பெருத்துப் போய் விடுகிறோம். மருத்துவர்களும் ஆய்வாளர்களும் இந்தப் போக்கை சரி செய்யச் சொல்லி மன்றாடுகிறார்கள்.

நம் நண்பர் மருத்துவர் பழனியப்பன் மாலை மங்குவதற்குள் உண்டு முடித்து பின் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்து நல்ல உறக்கம் கொள்ளுங்கள்; நலம் கொடுக்கும் உணவை கவனமாக, அளவாக உண்டு நோயைத் தவிருங்கள் மருந்தின்றி நல்வாழ்வு வாழலாம் என ஒரு முழு நீள தொலைக்காட்சித் தொடரே கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேட்போர் கேட்கட்டும், கேட்டு நல்லபடியாக நடப்போர் நடக்கட்டும். கேளாதோர் மருத்துவமனைக்கு நடக்க வேண்டியிருக்கும்.

ஏன் நலம் கொடுக்க வேண்டிய உணவே உடலைக் கெடுக்கும் நஞ்சாகிறது? உண்பது மகிழ்வாக இருக்கிறது ஆனால் தீங்கு விளைவிக்கிறதே ஏன்? குறைவாக உண்டாலும் சிக்கல், நிறைய உண்டாலும் சிக்கலாகிறதே ஏன்?

பதில் சொல்கிறார் ஐயன் வள்ளுவர்.

மருந்து என ஒரு அதிகாரம் நட்பியலின் கீழ் எழுதுகிறார். அதன் பத்து குறள்களில் ஏழு குறள்கள் உணவைப் பற்றியது. கிட்டத்தட்ட எல்லா குறள்களிலும் அவர் அழுத்தி அழுத்திச் சொல்வது "அளவோடு உண்" என்பதைத்தான்.

நம் விருப்பத்திற்கு ஏற்ற உணவை உண்ணலாம். புலால் வேண்டாம் என அவர் வலியுறுத்துவது துறவற இயலில், துறவிகளுக்கு. மற்றவர்களுக்கு அவர் சொல்லும் கட்டுப்பாடு உணவின் அளவு மீதுதான். மரக்கறி உணவோ புலால் உணவோ, அளவோடு உண்டால் சிக்கலில்லை.

சாப்பிட்ட சாப்பாடு செரிச்சுதா என கவனிச்சு செரிச்சபின் அடுத்த முறை சாப்பிடுவது நீண்ட நாள் நல்லபடியாக வாழ்வதற்கான வழி; செரிச்சு இருந்தாலும் பசித்த பின் சாப்பிடு; மிகப் பிடிச்ச உணவு என்றாலும் கூட "போதும்" என அளவோடு சாப்பிட்டால் துன்பமில்லை, பெருந்தீனி தின்பவர் நோய்க்கு ஆளாவது தவிர்க்கவே முடியாத ஒன்று என தலையில் குட்டாத குறையாக சொல்கிறார்.

மருந்து என பெயர் கொண்ட அதிகாரமில்லையா, மருந்தைப் பற்றி சொல்லாமல் இருப்பாரா? சொல்கிறார். அதில் ஒன்று,

என்ன சாப்பிட்டோம், சாப்பிட்டது ஒழுங்காகச் செரித்ததா என்பதை கவனத்தில் கொண்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கை கழுவினாய் என்றால், மருந்து என்பதே உன் உடலுக்குத் தேவைப்படாது என்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்


மருந்தென வேண்டாவாம் = மருந்து என்பதே தேவையில்லை
யாக்கைக்கு = உடலுக்கு
அருந்தியது = உண்டது
அற்றது = செரித்தது
போற்றி = கவனத்தில் கொண்டு
உணின் = உண்டால்

"உண்டதையும், செரித்ததையும் கவனத்தில் கொண்டு சாப்பிட்டு வருவோர்க்கு மருந்து என்பதே தேவையில்லை" என்கிறார்.

நல்ல சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு வருவோர்க்கு "சாப்பிடும் முன், சாப்பிட்ட பின்" என எந்த மருந்தும் தேவைப்படாது.

ஐயன் வள்ளுவராகட்டும் மருத்துவர் பழனியப்பனாகட்டும், அவர்கள் சொல்வதெல்லாம் "போதும் என்ற வயிரே பொன்னுடல் போற்றும் வழி" என்பதுதான். வாயைக் கட்டி, வயிற்றையும் கட்டி உடலையும் ஆயுளையும் கெட்டியாக்குவோம்.

Tuesday, August 01, 2023

செங்கோலும் கண்ணீரும்

 

உலகம், மக்கள் நலம் நாடிய மாபெரும் மன்னர்களை மட்டுமல்ல, வழிநெடுகிலும் கொடுங்கோலர்களையும் கண்டே வந்து கொண்டிருக்கிறது.

தம் குடிமக்கள் இயல்பாகச் சந்திந்த பிணி- மூப்பு-சாவு எனும் துன்பங்களைத் தம் இளம் வயதில் கண்டு, குழம்பிப் போய், பதவியைத் துறந்து, துன்பத்தில் இருந்து விடுதலைக்கான விடைதேடச் சென்றார் புத்த பிரான். வசதியான அரண்மனை வாழ்வை, அழகிய குடும்பத்தைப் பிரிந்து ஏன் என் குடிமக்கள் துன்பப்படுகிறார்கள்? ஏன் என்னால் மன்னனாக எதும் செய்ய இயலவில்லை? இதற்கு விடை கண்டே தீர வேண்டும் என தன்னைத்தானே வருத்தி, நீண்ட தேடலுக்குப் பின் மெய் அறிந்தார். மனித வாழ்வே மகத்தானது, வெற்று ஆசைகள் அதனைக் குலைத்துப் போடுகிறது, ஆசையே துன்பத்திற்குக் காரணம் என போதித்து மக்களை சிந்திக்கத் தூண்டினார்.

உலகம் அவரையும் பார்த்தது, அவரைத் தொடர்ந்த அசோகர் போன்ற கருணையாளர்களையும் ஆட்சியாளர்களாகக் கண்டது. மனித உயிர்கள் மட்டுமல்ல, எல்லா உயிர்களும் உன்னதமானவையே என்று அறிவித்து மனித வரலாற்றில் விலங்குகளுக்கும் மருத்துவமனைகளை அமைத்த மென்மனம் கொண்ட மனிதர் அவர்.

புத்தர், அசோகர் போன்றோரை மட்டுமல்ல, ஆசையே உருவாகக் கொண்ட ஆட்சியாளர்களும் வந்த வண்ணமே இருக்கிறார்கள். அவர்கள் கையில் சிக்கிய செங்கோல் வளைந்து கொடுங்கோலாக மாறி மக்களை வதைக்கும் சூழல்களும் வரலாறு பார்த்துதான் வருகிறது. தமிழில் "கொடு" என்ற சொல்லுக்கு "வளைதல்" என்று ஒரு பொருள் உண்டு. கடமை தவறி, அறவழியில் இருந்து வளைந்து போன செங்கோல், வளைந்தகோல் = கொடு+கோல் = கொடுங்கோல் என்றாகிறது.
கோல் என்பது ஆட்சி - குச்சி அல்ல.

நிற்க. தலைப்புக்கு வருவோம்.

ஐயன் வள்ளுவர் இக்கொடுங்கோலர்களை நோக்கி அரசியல் எனும் இயலில் "கொடுங்கோன்மை" என ஒரு முழு அதிகாரம் ஒதுக்கி எச்சரித்துத் தள்ளுகிறார்.

அந்த பத்து குறட்பாக்களில் ஒன்று இயலாமையில் கண்ணீர் சிந்தும் குடிமக்களைக் குறிக்கிறது. ஆட்சியாளர் பெரும் வலிமையோடு அதிகாரத்தில் அமர்ந்து இருப்பவராக இருக்கலாம். எதிர்க் குரல்கள் ஓசையின்றி அமைதியாக்கப்படலாம். குடிமக்கள் எதுவும் செய்ய முடியாத இயலாமைச் சூழலில் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், அந்தக் குடிமக்கள் ஆற்ற முடியாத துன்பத்தில் சிந்தும் கண்ணீர், சிறுகச் சிறுகவேனும் ஆட்சியாளரின் வலிமை, அதிகாரம், செல்வாக்கு என எல்லா செல்வத்தையும் தேய்த்து அழிக்கும் கருவியாகிவிடும் என எச்சரிக்கை ஒலிக்கும் குறள்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை


அல்லல்பட்டு = துன்பப்பட்டு
ஆற்றாது = தாள முடியாமல்
அழுத கண்ணீர் அன்றே = அழுத கண்ணீர் அல்லவோ
செய்வத்தை = ஆட்சி, அதிகாரம் எனும் செல்வத்தை
தேய்க்கும் = சிறுகச் சிறுக அழிக்கும்
படை = கருவி

எந்த ஆட்சியாளரும் எவ்வளவு வலிமையானவராகத் தோற்றமளித்தாலும், குடிமக்கள் கண்ணீர் சிந்தும்படி ஆண்டால் அவரது எல்லா செல்வமும் தேய்ந்து அழிந்து போகும் என எந்த நாட்டுக்கும், எந்தக் காலத்துக்கும் பொருந்தும் படியாக ஒலிக்கும் எச்சரிக்கை மணிக் குறள். 



Friday, July 14, 2023

நம்ம ஊர் பேரைக் காப்பாற்ற

 

நம்ம பேரை யாராவது பிழையா எழுதினா எம்புட்டு கடுப்பாவோம்?

பள்ளி, கல்லுாரி, வேலை செய்யும் இடம் என எங்கேயாவது நம்ம பேரை யாராவது எழுத்துப்பிழையோட எழுதினா சட்டுன்னு அது மட்டும் கண்ணுல படும்தானே? அதே மாதிரி நம்ம ஊர் பெயருக்கும் ஒரு சிக்கல் இருக்கு. நம்ம ஊரோட பேரை சிலர் தமிழ்ல எழுதும் போது, தெரியாம தப்பா எழுதிடறாங்க. நம்ம ஊர் பேரைக் காப்பாற்ற நாம தானே சண்ட செய்யணும்? செஞ்சிடுவோம். :)

எங்க வாத்தியார் ஒரு சூட்சமம் சொல்லிக் கொடுத்திருக்கார். ஏதாவது கதை சொல்லும் போது அலுங்காம ஒரு இலக்கண குறிப்பையும் சேர்த்து சொல்லிடணும். ஒரே கல்லுல இரண்டு மாங்கா-ன்னு ஆகிடும். நாம குட்டியா வெகு எளிதா ஒன்னு பார்ப்போம்.

தமிழ்ப் பெயர்கள் எந்த எழுத்தில் தொடங்கணும், எதுல தொடங்க கூடாது, எதுல முடியணும், முடியக்கூடாது என்பதற்கு விதிகள் இருக்கு.

அதுல எதெல்லாம் கூடாதுங்கறத மட்டும் பிழிஞ்சு எடுத்து இரண்டே வரில சொன்னா, இப்படிச் சொல்லிடலாம்:

1. இந்த 8 எழுத்துகள்ல தொடங்கக் கூடாது:
ட, ணன, ரற, லழள

2. இந்த 8 எழுத்துகள்ல முடியக் கூடாது:
க்ச்ட்த்ப்ற், ங்

அவ்வளவுதான். அவ்வளவேதான்.

அப்போ, அது மாதிரி அமைந்த புதிய பெயர்களை எழுதும் போது என்ன செய்ய? மீசைக்குப் பழுது இல்லாமலே கூழ் குடிக்க ஒரு வழி இருக்கு. "டக்"குனு மனசுல வெச்சுக்கற மாதிரி அதையும் ஒரு கை பார்த்திடலாம்.

தூரமா இருக்கறதை காட்டும் போது "அதை" என்று சொல்றோம், அதே பக்கமா இருந்தா "இதை" என சுட்டிக்காட்டி சொல்றோம் இல்லையா? அந்த அ, இ என்னும் எழுத்துக்கள்தான் நம்ம கதாநாயகர்கள். (இன்னொரு எழுத்து "உண்டு". அது பொறவு).

அ அல்லது இ இந்த 2ல ஒன்றை முதல் எழுத்தா வெச்சி எழுதிடுங்க. வாய் விட்டு படிக்கும்போது அதை விட்டுட்டு படிச்சிடலாம். ஆங்கில சைலன்ட் எழுத்துக்கள் முதலில் வருவது போல என்னு வெச்சுகுங்களேன் (Knife, Write, Psychology).

அப்படின்னா, நம்ம ஊர் becomes

இரிச்மண்...

கடைசி எழுத்தை என்ன செய்ய?
அங்கே "உ" தான் கதாநாயகி. மெய் எழுத்தோடு உகரம் சேர்த்து எழுதிட வேண்டியதுதான்.

ட் + உ = டு

டடா..

"இரிச்மண்டு".

ஆச்சா?
இப்போ, வழக்கமான ஒரு கேள்வி வரும்.
இந்த "அமைதிப் புறாவை" (Silent letter) தெரியாதவங்க E-Richmond-u என்று வாசிக்க மாட்டாங்களா?

வாசிப்பாங்கதான். ஒன்னு, அவங்க வெளியூர்காரர்களாக இருப்பாங்க, இல்லைன்னா கிண்டலுக்காக அப்படி வாசிப்பாங்க. விபரம் தெரிஞ்சவங்க சரியா வாசிச்சுடுவாங்க.

நம்ம ஊர் பெயரைக் காப்பாற்ற நாமதானே சண்டை செய்யணும்? செய்வோம். என்னாங்கறீங்க? இனியும் யாராச்சும் தப்பா எழுதட்டும், உண்மையிலேயே சண்டைக்குப் போவோம். சரிதானே? :)

வாழ்க இரிச்மண்டு, வளர்க தமிழ்.


ஆங், இன்னொன்னு.
உங்க சொந்தப் பெயரைக் கூட இதே விதிகளின்படி பட்டி- டிங்கரிங் செய்து கொள்க. உங்களோடு சேர்ந்து தமிழன்னையும் மகிழ்வாள்.
(தினப்படி வாழ்வில், தமிழில் உங்கள் பெயர் எழுதும்போது பயன்படுத்துங்கள். உங்கள் சான்றிதழ்கள் இருக்கறபடியே இருக்கட்டும்)

 

Sunday, July 02, 2023

கலகத்தலைவன்

 

உலகில் நாம வந்த நாள் முதல் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து நம்மை எச்சரிக்கவும் கலகக்காரர்கள் இருக்கிறார்கள்.

பொதுவாக மக்கள் உணர்ச்சித் திலகங்கள். ஏமாற்றுவது எளிது. பரிதாபமாக மூஞ்சி வெச்சுட்டு பச்சைப் பொய் சொன்னா கூட நம்மாளுகள்ல பாதி பேராவது நம்பிடறாங்க. சாமி சமாச்சாரம்னா அவ்ளோதான், பேச்சே கிடையாது. சரக்குக்கும் சாமிக்கும் தான் கூட்டமே நம்மிடையே. கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் களவாணிகளுக்கு வேலை பட்டென முடிகிறது எப்போதும்.

கலகக்காரர்களும் சமூகப் போராளிகளும் எச்சரிக்கை மணி அடிச்சுட்டே தான் இருக்காங்க, நமக்குத்தான் அவ்வப்போது காது, மூளை எல்லாம் தூங்கப் போய் விடுகிறது.

நம்மாளு வள்ளுவர் அப்படியான ஒரு கலகத்தலைவர். துறவு கொள்ளப் போகிறேன் என்பவனிடம் பேசுவது போல ஆரம்பிச்சு நமக்கு பல எச்சரிக்கைகளைக் காட்டுகிறார் துறவறம் என்ற பகுதியில்.

பதிமூன்று அதிகாரங்கள் அதில் எழுதுகிறார். துறவி ஆகப்போகிறேன் என்பவரிடம் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது என்று பட்டியல் போடுகிறார்.

திருடாதே, பொய் பேசாதே, சிடுமூஞ்சியாட்டம் இருக்காதே, கெடுதல் செய்யாதே அப்படின்னு போய்டே இருக்கு. அதில் பலமா யோசிக்கற மாதிரி ஒரு அதிகாரம். "கறி திங்காதே" என்று. என்னடா, சாமியாரா போறேங்கறவன்ட இதச் சொல்றாரேன்னு யோசிக்க ஆரம்பிச்சா, "யோவ் வள்ளுவரு செம ஆளுய்யா நீ" என சொல்லத் தோன்றும். கறி தின்றதும் திங்காததும் அவனவன் விருப்பம்; பெரிசா "அறிவுரை" சொல்ல யாரும் வரவேண்டாம், ஆனா நான் "முற்றும் துறக்கப் போகிறேன்" அப்படிங்கறவன்ட, "மொதோ பிரியாணி குண்டான கீழ வை" என்பதில் தப்பில்லை என்று நினைத்திருக்கிறார். சரியாத்தான் படுது. யோசிக்க யோசிக்க ஆளு உண்மையிலேயே கன்னியாகுமரில நிக்கிற மாதிரி பெரிசா மனசுல தெரியறார்.

"வேண்டாத வேலை"* அப்படின்னு ஒரு பத்து குறள் சாமியாரா போறவனுக்கு சொல்ற மாதிரி.

மனசுல வஞ்சம் வெச்சுகிட்டு சாமியாரா போறேன்னு சொன்னா வேற யாரும் வேண்டாம் உன் உடம்பே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனச ஒழுங்கா வெச்சுக்காம பெரிய ஆளாட்டம் படம் போட்டாய்னா ஒரு பயனும் இல்லை தெரிஞ்சுக்கோ என்று திட்டுகிறார் இன்னொரு குறளில். வெள்ளையும் சொள்ளையுமா வேசம் போட்டுகிட்டு வேண்டாத வேலை எதும் செய்யறது, புதர்க்குள்ள ஒளிஞ்சி அப்பாவிப் பறவைகளைப் பிடிக்கும் வேடன் செய்யும் செயல் போல தரங்கெட்டது என கடுமையாகத் திட்டுகிறார்.

இப்படி சாமியார் பயலுகளைத் திட்டிகிட்டே வர்றவர் மெதுவாக நம்மை நோக்கி பேசத் துவங்குகிறார்.

மனசுக்குள்ள அழுக்கை வெச்சுட்டு எவ்ளோ தண்ணில முங்குனாலும் அழுக்கு போகாது. அழுக்கு மனசோட பல பேர் சாமியார்னு திரியறான் கவனம் என்கிறார். ஆளப்பார்த்து எதையும் முடிவு செய்யாதே. நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைஞ்சு வளைஞ்சு இருக்கும் யாழ் அருமையான இசை கொடுக்கிறது. செய்யும் செயலைக் கொண்டே ஒருவர் எப்படியானவர் என்பதை உணர வேண்டும், புரியுதா? என்கிறார்.

எல்லாம் சொல்லிட்டு, கடைசியா
"இவனுக ஏன் ஒன்னு மொட்டையடிச்சுட்டு திரியறானுக, இல்லைன்னா கசாமுசான்னு முடி வளர்த்திட்டு திரியறானுக, உலகத்தார் முகம் சுழிக்கற மாதிரி நடந்துக்கறத நிறுத்தினாலே போதும்" என முடிக்கிறார்.

அப்போது இருந்தே இவனுகளால ஏதோ நடந்துகிட்டு இருக்கு. கடுப்பாகி திட்டித் தள்ளி இருக்கார்.

முழு அதிகாமுமே நையாண்டியும் திட்டுகளும்தான். கூடவே கலகக் குரல். சமயம் எனும் மனதை மயங்கச் செய்யும் கருவியைப் பற்றி எச்சரிக்கைகள், கிண்டல்கள் எப்போதும் பெரியோர் செய்துதான் வருகிறார்கள்.

நாமதான்...

மேலே கடைசியாகக் குறிப்பிட்ட குறள்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

மழித்தல் = மொட்டை அடித்தல்
நீட்டல் = நீண்ட முடி வளர்த்தல்

படித்தவுடன் அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசமான குறள்.

-------
* "வேண்டாத வேலை" = கூடா ஒழுக்கம்

 

Saturday, July 01, 2023

அவள் என்றைக்கடா பேசினாள்?

 உலகில் நாம் தோன்றிய நாள் முதலாக கலகக்காரர்கள் ஏமாற்றுவோரை நோக்கி சுடு கேள்விகளையும் பகுத்தறிந்த ஆழ்ந்த சொற்களையும் வீசியபடியே தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

பொதுவாக மக்கள் உணர்வு மயமானவர்கள். எளிதில் ஏமாற்றி விட முடியும். அதிலும் அறிவை வேகமாக மழுங்கடிக்கும் சமயம் எனும் கருவி ஏமாற்றுக்காரர்களுக்கு மிகப் பிடித்தமானது. தகவல் பரிமாற்றம், தொழில்நுட்பம், போக்குவரத்து, பொது அறிவு வளர்ந்திருக்கும் இன்றைய உலகிலேயே இன்னமும் ஏமாற்றவும் ஏமாறவும் ஆள் இருக்கும் போது வள்ளுவர் காலத்தில் பாமர மக்கள் எவ்வளவு ஏய்க்கப்பட்டிருப்பார்கள்?

மின்சார விளக்கு வந்த பின் பேய்கள் ஒழிந்துவிட்டன என்பார்கள். பாதி ஏமாற்றுக்காரர்களும் கூடவே ஒழிந்து போனார்கள். மீதிப் பாதியை ஒழிக்க ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வரும் வரை கலக்காரர்களின் தேவை கண்டிப்பாகத் தேவை.

இப்போது நம் கலகக்காரர் வள்ளுவரின் கலகக் குரலில் ஒன்றைப் பார்ப்போம். துறவற இயல் எனும் பிரிவில் பதிமூன்று அதிகாரங்கள் எழுதுகிறார். துறவியாகும் எண்ணம் கொண்டோருக்கு கைவிளக்காக செய்ய வேண்டியவற்றை, வேண்டாதவற்றைப் பட்டியலிடுகிறார்.

கள்ளாமை, வாய்மை, வெகுளாமை (சினம் கொள்ளாத தன்மை), இன்னாசெய்யாமை என பட்டியல் நீள்கிறது. மிகவும் யோசிக்கும்படியாக "புலால் மறுத்தல்" என்பதை துறவற இயலில் வைத்திருக்கிறார்.
ஆம். இல்லறவாசிகளுக்கு சொல்லவில்லை - ஊண் உண்பதும், மரக்கறி மட்டும் போதும் என்பது அவரவர் விருப்பம். எவரும் "அறிவுரை" சொல்லக்கூடாது; ஆனால் துறவிக்கு புலால் மறுத்தல் கண்டிப்பான ஒன்று என நினைத்திருப்பார் போல.

அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் திருக்குறள்.

கூடா ஒழுக்கம் என்ற தலைப்பில் துறவியாக மாற எண்ணுபவரின் வேண்டாத ஒழுக்கம் பற்றி நக்கலும் நையாண்டியுமாக எழுதுகிறார்.

மனதில் வஞ்சம் வைத்துக்கொண்டு, துறவி என்பாயானால் உன் உடம்பு கொண்டுள்ள ஐம்பூதங்களே உன்னைப் பார்த்து சிரிக்கும்டா என்கிறார். மனதுக்குள் குற்றம் வைத்துக்குக் கொண்டு வானுயர்ந்த தோற்றம் கொண்டவர் போல காட்டிக் கொண்டால் அந்தத் தோற்றத்தால் ஒரு பயனும் இல்லை. உயர்ந்த தோற்றத்தில் மறைந்து கொண்டு வேண்டாத வேலைகளைச் செய்வது, புதருக்குள் மறைந்து இருந்து அப்பாவிப் பறவைகளை ஏமாற்றிப் பிடிக்கும் வேடனின் செயலைப் போன்றது.

என்றெல்லாம் துறவு பூண எண்ணுபவருக்குச் சொல்லிக் கொண்டே வந்தவர் குரல், மெதுவாக நம்மை நோக்கி பேசுவது போல மாறுகிறது அந்த அதிகாரம்.

மனதுக்குள் அழுக்கை வைத்துக் கொண்டு எவ்வளவு குளித்தாலும் பயனில்லை, அழுக்கு மனதோடு துறவி வேடத்தில் பலர் உள்ளனர். கவனம். என்கிறார். அடுத்ததாக‌, ஆளைப் பார்த்து முடிவு செய்திடாதே - துறவி வேடம் போட்டு இருப்பவர் நல்லவராக இருக்க வேண்டும் என்பது இல்லை. வளையாமல் நேராக இருக்கும் அம்புதான் கொல்கிறது. வளைந்து இருக்கும் யாழ் நல்லிசை தருகிறது. செயலைக் கொண்டே அவர் பண்பை உணர வேண்டும்; கவனம். என்கிறார்.

முத்தாய்ப்பாக,
மொட்டையடித்துக் கொண்டு அல்லது நீண்ட முடி வளர்த்து இவனுக எதுக்கு இப்படித் திரியணும்? உலகத்தார் முகம் சுழிக்கும்படி நடக்காது இருந்தாலே போதும், இந்த பம்மாத்துகள் தேவையில்லை என்கிறார்.

முழு அதிகாரமுமே ஒரே எள்ளலும் ஏச்சும்தான். கூடவே கலகக் குரல். அப்போது இருந்தே சமயம் எனும் மனம் தடுமாறச் செய்யும் கருவியை எதிர்த்து, முழுதாக எதிர்க்க முடியாத போது குறைந்தது கிண்டலடலடித்தாவது வந்திருக்கிறோம். இன்றைக்கும், "அவள் என்றைக்கடா பேசினாள்" என கேட்பதாக அது நீள்கிறது. "சமயக்காரர்களிம்" நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நமக்காக நாம் தான் கலகக் குரல் எழுப்ப வேண்டும். அவள் என்றைக்கும் பேச மாட்டாள்.

மேலே சொன்ன குறள்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்


மழித்தல் = முகம் தலை சிரைத்தல்
நீட்டல் = முகம் தலை எங்கும் முடி நீட்டலாக வளர்த்தல்

அப்படியே புரியும் இன்னொரு அட்டகாசக் குறள்.

------------------------------------

கட்டுரையைத் தமிழாசிரியர்கள் தாண்டி மற்றவர்களும் படிக்கறமாதிரி கொஞ்சம் மொழிநடையை மாற்றி எழுதித் தா என "அன்போடு" வந்த கட்டளையின் படி கொஞ்சம் மாற்றிய நடையில் இதே கட்டுரை இங்கே

~~~~~~~~~~~~~~~~~~~~~


Thursday, June 01, 2023

காசு சேர்த்து வைக்கும் இடம் தெரியும். அறத்தை சேர்க்கும் இடம் எது?

 

 உலகில் நாம் காட்டுயிர்களாக அலைந்து திரிந்த போது இருந்து, நாகரிகமடைந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடத் துவங்கி, இன்று வரை வெல்ல முடியா சிக்கல் - பசி.

இன்றைக்கு அறிவியலின் துணை கொண்டு பெரும்பாலும் பசித்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். இருப்பினும் ஆதரவற்ற சிறுவர், முதியோர், உடல் நலிந்தோர் போன்ற சிலர் பசியில் வாடும் சூழல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறது.

அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் இயன்ற வழிகளில் எல்லாம் பசித்த மனிதன் எங்கும் இருக்கக் கூடாது என பாடுபடுகிறார்கள். அவர்களைக் காட்டிலும் தனி மனிதர்கள் சிலரின் அறமும் கொடையுள்ளமும் பல நேரங்களில் கண்கலங்க வைத்து விடுகிறது. சமீபத்தில் நண்பன் ஒருவன் தன் கைப்பொருளோடு தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளை காசாக்கி பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவாகப் பரிசளித்தான். செய்தியைக் கேட்டவுடன் மனம் இளகி கண்கள் பனித்தன. இருக்கட்டும். உலகம் இயங்குவது நல்லோர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழையாலேயே. வாழ்க ஈரமனம் கொண்ட நல்லோர்.

நம் பெருங்கருணையாளரான ஐயன் வள்ளுவரும் பசி கொண்ட மனிதனைக் கண்டு கலங்கி பல இடங்களில் எழுதுகிறார். அவன் துயர் நீக்க பொருள் கொண்டவரை உதவச் சொல்கிறார். வெறுமனே, "காசு வெச்சிருக்க இல்ல, குடுடா அவனுக்கு" எனச் சொல்லவில்லை. பொருள் கொண்டவனின் அற உள்ளத்தைத் தூண்டி, மகிழ்வோடு உதவிடும் எண்ணத்தை விதைக்கிறார்.

பசி எனும் பெருந்தீயை எல்லாவற்றையும் அழிக்கும் ஒன்றாக உருவகப்படுத்துகிறார். அந்த அழித்துவிடும் பசி கொண்ட மனிதனின் பசி தீர்ந்த நிறைவே பொருள் கொண்டவன் அறத்தை சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு என்கிறார். எல்லாம் ஏழு சொற்களில்.

ஐயனே, உம்மைக் கண்டதில்லை; உம் பெயரை நாங்கள் அறிந்ததில்லை; உருவத்தில் உயரமானவரா குள்ளமானவரா தெரியாது;

ஆனால் உம் அறிவின் உயரம் அறிவோம்; தமிழை அழகுற பயன்படுத்தும் ஆற்றல் அறிவோம்; அடுத்த மனிதன் மீதான உம் கருணையுள்ளம் காண்கிறோம். வாழிய நின் புகழ்.

இல்லறத்தில் உள்ளோரிடம், இல்லார்க்கு உதவிடச் சொல்லி "ஈகை" எனும் தலைப்பில் 10 குறட்பாக்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

அற்றார் = இல்லாதவர்கள்
அழிபசி = அழிக்கும் பசி
பெற்றான் பொருள் = பொருள் பெற்றிருப்பவன் = வசதி இருக்கிறவன்
வைப்புழி = வைக்குமிடம்

பொருள் கொண்ட ஒருவன், இல்லாதவர்களின் அழித்து விடும் பசியை தீர்த்ததில் (கிடைக்கும் நிறைவே) (அறத்தை) சேர்த்து வைக்கும் சேமிப்புக் கிடங்கு.

"வைக்கும் இடம்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடுகிறார். அறத்துப்பாலில், ஈகை அதிகாரத்தில் இல்லறவாசிக்குச் சொல்லும் அறிவுரை வேறு என்னவாக இருக்க முடியும்? பசித்தவனின் இடர் நீங்கும் போது கிடைக்கும் நிறைவில் தங்கத்தையா சேமிக்க முடியும்? அறத்தைத்தான் சொல்லாது சொல்கிறார்.

நலிந்தோர்க்கு கொடுப்பதற்கே செல்வம். அதிலும், பசிப்பிணியைப் போக்க இயன்ற போதெல்லாம் உதவிடுவோம். தழைக்கட்டும் மானுடம்.

----------

குறிப்பு:
இதனுடன் உள்ள படங்கள் மேற்சொன்ன நண்பன் ஆதரவு குன்றிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுணவு கொடுத்து மகிழ்வித்த போது எடுத்தவை.
 



 

Saturday, April 01, 2023

பெண் விடுதலையை யாரும் கொண்டு வந்து கொடுக்க மாட்டார்கள்.

 

உலகில் எங்கு பிறந்திருந்தாலும் என்ன மொழி பேசினாலும் புரட்சியாளர்கள் சிந்தனை ஒன்று போலவேதான் இருந்திருக்கிறது. உடன் வாழும் மனிதனை அறத்துடன், சமமான நீதியுடன் நடத்த வேண்டும் என்ற எண்ணம், அதை நோக்கிய அவர்களது செயல்பாடுகள் இருந்திருக்கின்றன. தனக்குரியதைப் பெற, தாங்களே முனைய வேண்டும் என்கிறார்கள்.

ஆப்பிரிக்க-அமெரிக்கப் புரட்சியாளர் மால்கம்-X அவர்களின் தன்-வரலாற்றைப் படிக்கவும் ஓரிரு நேர்காணல்களையும் பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. சினம் கொண்ட, கூர்மையான வாதங்கள். சட்டென சுடும் கேள்விகள். மனிதர், தன் இனத்தின் மீதான அடக்குமுறைகளை, ஏய்ப்புகளை சொற்களின் வழியே கேட்போர் முகத்தில் அறையும் வண்ணம் சுடுகிறார்.

தன் இனத்தவரின் விடுதலை மற்றவர்கள் மூலம் கிட்டாது, அவர்களே தான் போராடிப் பெற வேண்டும் என்கிறார். வெகு சூடாக.

தமிழ்நாட்டின் பெரியாரும் இதையே தனக்கேயுரிய எளிய மொழியில் பெண் விடுதலை பற்றி பேசும்போது சொல்கிறார். "எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? நரிகளால் கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? அப்படித்தான் பெண் விடுதலையும்." என்கிறார்.

பெண் விடுதலை, பெண் உரிமைக்கான உந்துதல் பெண்களிடம் இருந்தே வர வேண்டும், ஆண்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள் எனக் காத்திருந்தால் ஏமாற்றமே எஞ்சும் என்பதுதான் அவர் சொல்லவருவது.

இப்போது ஐயன் வள்ளுவருக்கு வருவோம். இவர், 20-22 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிந்தனையாளர். தான் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் மிக உயரத்துக்குச் சிந்தித்த அறிவாளி. பசித்தவனைக் கண்டு கசிந்த கருணையாளர். இரந்தே உயிர் வாழும் சூழல் ஏற்பட்டால், அச்சூழலை ஏற்படுத்தியவனும் அங்ஙனமே கெட்டு அழியட்டும் என குரல் எழுப்பும் கலகக்காரர். இன்றிருந்தால் மேற்சொன்ன புரட்சியாளர்களைக் காட்டிலும் கூடுதலாக, காட்டமாக, அழகாகவும் பேசியிருப்பார்.

பெண் பற்றிய கீழ்காணும் தன் குறளுக்கு என்ன விளக்கம் சொல்லியிருப்பார்?

அவரது குறளுக்கு அவரே நேரில் வந்து பொருள் சொன்னால் ஒழிய எவர் புரிதலும் தவறல்ல.

கண்டிப்பாக‌, பெண்கள் தன் வலிமையை உணர்ந்து தங்களுக்கு வேண்டியதை யாருக்காவும் காத்திராமல் தாங்களே பெறவேண்டும் என்று தான் சொல்லியிருப்பார் நம் அன்புக்குரிய புரட்சியாளர் வள்ளுவர்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்


தற்காத்து = தன்னைக் காத்து
தற்கொண்டா(னை) = தன்னை அன்பில் கொண்டானை = தன் அன்புக்குரிய வாழ்க்கைத் துணையை.
பேணி = நலன் போற்றி
தகைசான்ற = பெருமைக்கு உரிய
சொல் காத்து = புகழைக் காத்து (பெற்று) - "சொல்" என்பதற்கு புகழ் என்ற பொருள் இங்கு.
சோர்வு இலாள் = அயற்சி அடையாள் (Never giving up attitude)

பெண் என்பவள், தன்னைக் காத்து, தன் அன்புக்குரிய கொண்டவனின் (வாழ்க்கைத் துணை) நலன் போற்றி, "தகைசான்ற சொல் காத்து" - பெருமைக்குரியவாறு நற்பெயர் பெற்று, என்றும் சோர்வின்றி இருப்பவள்.

மற்றவர்களுக்காக காத்திராமல், நீங்களாகவே உங்களைக் காத்துக் கொண்டு, உங்கள் காதல் துணைவனையும் பேணி, எல்லோரிடமும் பெருமைக்குரியவாறு நல்ல பெயர் வாங்கி, என்றும் எதற்கும் சோர்ந்து போகாது இருங்கள் (முன்னேறுங்கள்) பெண்களே என்று இக்குறளை பெண்கள் தின வாழ்த்தாகச் சொல்லியிருப்பார் ஐயன்.

அவருடன் நாமும் நம் பெண்களுக்கு பெண்கள் தின வாழ்த்தோடு, "உங்கள் முன்னேற்றம் உங்களால்தான் முடியும் - யாருக்காவும் காத்திராதீர்" என்ற பரிந்துரையும் சொல்வோம்.

வாழ்த்துக்கள், பெண்களே!

Wednesday, March 01, 2023

கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம்

 

உலகின் தலைசிறந்த வழக்காடு மன்றத் திரைப்படப் பட்டியலில் (Court room drama) தவறாது இடம் பெறும் 12 Angry Men என்ற படத்தை மீண்டும் சென்ற வார இறுதியில் நண்பர்களோடு பார்த்தேன் என்றான் செல்வம்.

என்னடா படம் அது?

1957ல் வந்த ஒரு கருப்பு-வெள்ளை திரைப்படம். ஒரே அறையில் கிட்டத்தட்ட முழுப்படமும் நடக்கும். அமெரிக்க நீதித் துறையின் நடுவர் குழு ஒரு கொலைக் குற்றத்திற்கான தீர்ப்பை முடிவு செய்யக் கூடியிருப்பார்கள். 12 பேர். வழக்கும், சாட்சிகளும், குற்றச் சூழல் பற்றிய தகவல்களும் மிகத் தெளிவாக இருப்பதாகத் தொடங்கும்.

இருக்கும் தகவல்கள், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் பற்றிய நடுவர்களது பார்வை, சாட்சிகளின் வாக்குமூலங்கள் எல்லாம் நேர்க்கோட்டில் குற்றம் சாட்டப்பட்டவரை ஐயத்திற்கு இடமின்றி குற்றவாளியாக முன்னிறுத்தும்.

நடுவர்களில் 11 பேர் "ஒரு டீ போட்டு வை, ஆறிப் போவதற்குள் தீர்ப்பு சொல்லிட்டு வந்திடறேன்" என்பது போல மிகத் தெளிவாக இருப்பார்கள்.

ஒரே ஒருவரைத் தவிர.

அவர், "வெரசா வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போகலாம்" என்று பரபரக்கும் குழு முன், "அவர் குற்றவாளி என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை" என்பார். மற்றவர்கள் சினம் கொள்வர். மெல்ல மெல்ல இவரின் கேள்விகளும் அதற்கு மற்றவர்களின் பொருந்தாத பதில்களும் ஒவ்வொருவர் மனதையாகத் தைக்கும். இறுதியாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரணதண்டனை உறுதி என்ற நிலையில் இருந்து குற்றமற்றவர் என்ற நிலைப்பாட்டுக்கு வருவர்.

நடுவர்கள், தாங்கள் கண்ணால் கண்டதும், காதால் கேட்டதும் பொய்யாகிப் போகிறது, சரியான விசாணையிலேயே உண்மை வெளிப்படுகிறது என்பதை உணருவார்கள்.

மிக அருமையாகப் படமாக்கப்பட்ட திரைப்படம். நம் முன்-முடிவுகள், நம்மை அறியாமலேயே நாம் கொண்டிருக்கும் ஒரு பக்கமான சாய்வுகள், சாட்சியங்களின் நம்பகத்தன்மை, மனித மனம் நிலை தடுமாறும் தருணங்கள் போன்றவற்றை அட்டகாசமாகக் காட்டியிருப்பார் இயக்குனர்.

உவத்தலும் காய்தலும் இன்றி நடுவில் நின்று விசாரிப்பது என்பது மனத்திடத்தை சோதிப்பது.

வள்ளுவர், மன்னனுக்குத் தேவையான குணங்களில் ஒன்றாக இதனைச் சொல்கிறார். செங்கோன்மை என்ற அதிகாரத்தில், என்னென்ன செய்தால் மன்னனது செங்கோல் வளையாமல் நல்லாட்சி நடக்கும் எனும் போது, முதன்முதலாவதாக நடுநிலை தவறாத நீதி வழங்குதலைச் சொல்கிறார்.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

பொருள்கோள் முறையில் படிக்கும் போது,

"ஓர்ந்து, யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து தேர்ந்து செய்வதே முறை."

ஓர்ந்து = ஆராய்ந்து
யார்மாட்டும் = எவரிடத்தும்
கண்ணோடாது = இரக்கம் காட்டாது*
இறை புரிந்து = நடுவுநிலை பொருந்தி
தேர்ந்து = தெளிந்து (சிந்தித்து)
செய்வே முறை = செய்தலே நீதி.

* குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் பரிதாபமாகவோ, நல்லவர்/தீயவர் போலவோ இருந்து, நீதி வழங்குபவரது இரக்க மனம் அறிவை மறைக்கக் கூடாது என்பதால், இந்த இடத்தில் இரக்கம் கூடாது என்றும், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்  நல்லவரோ அல்லவரோ - மன்னன் யார் பக்கமும் சாயாமல், நன்கு ஆராய்ந்து செய்வதே நீதி என்கிறார், வள்ளுவர்.

குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், "உவத்தல் காய்தல்" இன்றி சட்டம் சொல்லும் தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். குற்றம்கடிதல் என பத்துக் குறட்பாக்களில் அதையும் தெளிவாக, உறுதியாகச் சொல்கிறார் ஐயன்.

இன்றைய மக்களாட்சி உலகில் நாம் எல்லோருமே மன்னர்கள் என்பதால், வள்ளுவர் நமக்கும் சொன்னதாக எடுத்துக்கொண்டு எவர் மீதான தகறாறுக்கும் முன்-முடிவுகள் (Prejudice), சாய்வுகள் (Bias) இன்றி விசாரித்து, குற்றம் இருப்பின் தயங்காது, சட்டப்படி குற்றம் கடிவோம். நம்முடைய உள்ளச்-செங்கோல் (moral campus) வளையாது நடந்து நல்லதொரு உலகைச் செய்வோம் என்று சொல்லி அந்தப் படம் பற்றிய உரையாடலை எங்கள் நண்பகளுக்குள் முடித்தோம்.

போதும் அரசியல், மன்னன், வழக்கு, நீதி எல்லாம்.
இது பிப்ரவரி மாதம் - "காதல் திங்கள்" என அன்பைக் கொண்டாடும் மாதம். நான் என்னுயிரைக் காண, கொண்டாட தாமதமாகிறது அப்பால வர்றேன் என்று நமுட்டுச் சிரிப்புடன் கிளம்பினான், செல்வம்.

 

Wednesday, February 01, 2023

எப்போது திருட்டு எண்ணம் வரும்?


உலகத்தில் திருட்டுப் பயலுக எல்லா இடத்திலும் இருக்கானுக நாமதான் கவனமா இருக்கணும், சரி நான் அப்புறமா பேசறேன் என்று யாரிடமோ அலைபேசியில் பேசி முடித்தபடியே வந்தான் செல்வம்.

வாடா, யாரைத் திட்டிகிட்டே வந்தே?

என் நண்பனை யாரோ தொலைபேசியில் அழைத்து ஏமாற்றப் பார்த்திருக்காங்க. வங்கியில் இருந்து பேசுவது போலவும் காவல்துறை இவனைத் துரத்துவதாகவும் ஏதேதோ கதை விட்டு இவன் வங்கி விபரங்களைக் கேட்டிருக்கிறார்கள். பயல் என்னையும் அதே அழைப்பில் இணைத்து பேசச் சொன்னான். வெற்று திருட்டுக் கூட்டம் என்பது போனவுடனேயே தெரிந்து விட்டது, இணைப்பைத் துண்டித்து விட்டு அந்த எண்ணை என் நண்பனின் தொலைபேசியில் தடை செய்யவும் சொன்னேன். தப்பித்தான்.

கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று பாடுபடுவது போலவே இணையமும் கவனமாக பாதுகாக்க வேண்டிய இடமாகிவிட்டது. சந்து பொந்துகளில் இருந்தெல்லாம் திருடர்கள் முளைக்கிறார்கள். அலைபேசிகளும், வேகமான இணையமும் அவர்களுக்கும் வசதியாகிப் போய்விட்டது.

ஆமாம்டா செல்வம், திருட்டு பெருகிப்போச்சு. காலம் மாற மாற திருட்டு எண்ணம் கூடிப் போச்சு.

அப்படியெல்லாம் ஏதுமில்லை. திருட்டு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. திருட்டு என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இயற்கையாக இருப்பது.

எத்தித் திருடும் காக்கையும், காக்கைக் கூட்டில் குயில் முட்டையிடுவதும் அதே காக்கைக் கூட்டில் இருந்து பாம்பும் கழுகும் முட்டையத் திருடுவதும், மிக எளிய எடுத்துக்காட்டுகள்.

மனிதர்கள் மற்ற உயிரினங்களிடம் இருந்து திருடுவது இல்லையா என்ன?
மாட்டிடம் இருந்து பாலைக் "கறப்பது", தேன்கூட்டில் இருந்து தேனை "எடுப்பது", கோழி முட்டையை, பட்டுப்புழுவைக் கொன்று நூல் எடுப்பது என மற்ற உயிரினங்களிடம் நாம் "வேலையை" காட்டும் போது சிக்கலில்லை. வசதியாக கண்ணை மூடிக் கொள்கிறோம். மனிதர்களிடமே திருடும் போதுதான் வம்பாகிறது.

டேய், என்னடா திருடுவது தப்பில்லை என்று சொல்வாய் போல் இருக்கிறதே?

சேசே .. அப்படிச் சொல்லவே மாட்டேன்.
திருட்டு என்பது மனிதனின் சமூக வாழ்வை கேள்விக்குறியாக்கும் செயல். திருட்டு கட்டுப்படுத்தப்படாது போனால் குழுவாக நாம் கூடி வாழ முடியாது. எனவே அதைக் குற்றமாகக் கருதி தண்டனையும் கொடுத்து கட்டுப்படுத்துகிறோம்.

ஆனாலும் திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தான். திருடன்/டி எப்போது திருந்துவான்?

திருட்டை அறம் சார்ந்த ஒன்றாகக் கருதினால், திருடும் எண்ணம் அவர் மனதில் முளையிலேயே நிறுத்தப்படும்.
ஐயன் வள்ளுவர் கள்ளாமை என ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கார்.

திருடாதே, திருடாதே திருட்டினால் வரும் பொருள் முதலில் பெரிதாகத் தோன்றினாலும் முடிவில் இருப்பதையும் அடித்துக் கொண்டு போய்விடும், திருட்டு குணம் ஏற்படுத்தும் திரில் (காதல் என்கிறார்) தீராத துன்பத்தைத் தரும், அடுத்தவர் பொருளை கள்ளத்தால் கள்வோம் என நினைப்பது கூட தீங்கானது எனவே திருடலாமா என்று நினைத்துக் கூட பார்க்காதே, அளவறிந்து வாழாதோரே (living within their means) திருட்டுப் பக்கம் போகிறார்கள் - எனவே உன் சக்திக்கு உட்பட்ட வாழ்க்கையை வாழ் என்கிறார். ஊரார் பொருளை திருடி வாழ்வது, ஏய்த்து, ஊழல் செய்து வெட்டிச் செலவு செய்வது எல்லாம் "அளவின் கண் நின்று ஒழுக முடியாதவர்கள்" (Within means வாழ முடியாதவர்கள்) செய்வது என்கிறார்.

இந்த "அளவுக்குள் வாழ்" என்பதை அழுத்தி அழுத்தி பலமுறை சொல்கிறார். உன் "அளவு" கடந்த வாழ்க்கையே திருட்டு எண்ணத்தை ஏற்படுத்துகிறது, "அளவு அறிந்தவர்" நெஞ்சம் அறம் பக்கம் நிற்கும், "களவு அறிந்தவர்" நெஞ்சம் வஞ்சத்தின் பக்கம் செல்லும் - நல்லவனாக இருக்க அளவோடு வாழ், களவு செய்யாதே என்கிறார்.

ஐயன் வழி நடக்க முயலும் நான் திருட்டு சரி என்பேனா?
திருட்டு பற்றிய நம் எண்ண-முரணை (Hypocrisy) எடுத்துக்காட்டுகளோடு சொன்னேன், அவ்வளவுதான்.

ஒரு வேலையாக இந்தப் பக்கம் வந்தேன் அப்படியே உன்னைப் பார்த்திட்டு போகலாம் என்று வந்தேன். அப்புறமாக சாவகாசமாக வர்றேன் என்றபடியே கிளம்பினான், செல்வம்.

டேய் இருடா. அந்த "Within their means" குறள்ல ஒன்றையாவது எனக்கு விளக்கிட்டு இந்த தேநீரைக் குடுச்சிட்டு போ.

சரி சொல்றேன் கேள். அப்படியே புரியும். மிக எளிய குறள். அதன் சரக்கு தான் கனம்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்


அளவின்கண் = அளவுக்குள்
நின்று ஒழுகல் ஆற்றார் = நின்று வாழ முடியாதவர்
களவின்கண் = களவுக்குள்
கன்றிய = மிகுந்த
காதலவர் = ஆசையுடையவர்

அளவுக்குள் வாழ முடியாதவரே
திருட்டுக்கு ஆசை படுகிறவராகிறார்.


யோசிச்சுப் பாரேன். சோத்துக்கு இல்லாம திருடுறவன் வெகு குறைவு. பேராசையில் திருடுபவரே மிகப் பெரும்பாலும்.

எனவே, நாம் அளவறிந்து வாழ்வோம், தனிச்சொத்தோ பொதுச் சொத்தோ - கள்வோம் என்ற எண்ணம் கூட வராது வாழ்வோம், திருட்டுப் பசங்களிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

நேரமாயிடுச்சு இன்னொரு நாள் வர்றேன், காபி நல்லாயிருந்துச்சு என்றபடியே கிளம்பினான்.

டேய், அது "டீ" டா.

 

Sunday, January 01, 2023

எவ்வளவு விரைவாகக் கொடுக்க வேண்டும்?

 

உலகின் மிகப்பெரும் கருணையாளர்கள் எனப் பட்டியலிட்டால் கண்டிப்பாக வள்ளுவர் அதில் இடம்பெறுவார்.

துன்பம் கொள்ளும் மனிதனைக் கண்டு கசிந்து உருகுகிறார். வசதியானவர்கள் வறியவர்களுக்கு கணக்குப் பார்க்காமல் உதவிட வேண்டும் என்கிறார். தன்மானக்காரர் வேறு. வறுமை பீடித்து இரக்கும் நிலை (begging) போல இழிநிலை வேறு இல்லை என்கிறார். இரவு (இரத்தல் - begging பற்றியது), இரவு - அச்சம் (இரப்பதற்கு அஞ்சவேண்டும்) என்று இரு முழு அதிகாரங்கள் எழுதியிருக்கிறார்.

எவ்வளவு முயன்றும் இரந்தே உயிர் வாழவேண்டும் என்ற நிலை ஒருவனுக்கு உருவாகிவிடுகிறது என்றால், அப்படியான சூழலை உண்டாக்கியவனும் அப்படியே இரந்து கெட்டு அழியட்டும் என கலகக்குரல் எழுப்புகிறார்.

இவ்வளவும் சொல்லிவிட்டு, செல்வம் சேர்ந்து இருப்பவரிடம் "தாராளமாகக் கொடு-கெட்டுப்போகமாட்டாய்" என முழுதாக 10 குறட்பாக்களை எழுதுகிறார்.
இல்லறத்தில் இருப்பவரிடம் ஈகை எனும் கொடுக்கும் குணம் பற்றி கூறும் போது இவ்வாறு சொல்கிறார்.

பெரும்பாலான அற நூல்கள் கொடுப்பதை மகிழ்வான, உயர்ந்த, பெருமைப்படும் ஒன்றாகவே சொல்லும். ஐயன் மாறுபடுகிறார். கொடுப்பதால் தலைக்கனம் கூடி விடக் கூடாது என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

உதவி கேட்டு வந்தவரது இயலாமையைக் கேட்டுக் கொண்டு இருந்து தாமதிக்காதே என்கிறார். இரப்பவனது முகம், கிடைக்கும் உதவியினால் மலரும் வரை உதவிடும் உனக்கு மகிழ்ச்சியில்லை, எனவே உடனடியாக துன்பம் களை என்கிறார்.

நின்று நிதானித்து யோசியுங்கள்.
நீங்கள் ஒருவருக்கு உதவுகிறீர்கள். எதிரில் இருப்பவரோ தன்மானம் தடுத்தும் வேறுவழியின்று இரந்து நிற்கிறார். துன்பத்தில் இருக்கிறார். பொருள் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் அவர் முகம் மலரும் கணம் வரை உனக்கும் துன்பமே என்ற சிந்தனை எவ்வளது மனிதம் கொண்டது.

குறள் இதுதான்:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

பொருள்கோள் வகைப்படி மாற்றி அமைத்துப் பார்க்கும் போது,

இரந்தவர் இன்முகம் காணும் அளவு
இரக்கப் படுதல் இன்னாது


/* இரந்தவர் = உதவி கேட்டு வந்தவர்
இன்முகம் = மலர்ந்த, மகிழ்வான முகம்
காணும் அளவு = காணும் வரை
இரக்கப்படுதல் = உதவலாம் என்று நினைக்கும் ஈகை உள்ளம்
இன்னாது = இனிமை அடையாது */

உதவி கேட்டு வந்தவரது துன்பக்கதையைக் கேட்டு காலம் தாழ்த்துதல் இன்பம் தராது, இரப்பவரது முகம் மலரும்படியாக உடனடியாக உதவிடு என்கிறார்.

சொல்லாமல் புரிய வைத்தது மேற்சொன்ன பணிவும், இரப்பவனது நிலையை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு விரைவாக மாற்ற உதவிடு என்ற கருத்தும்.

தன்மானம் தடுத்தும் வேறு வழியின்றி இரந்து நிற்கும் மனிதனது பதைபதைப்பைக் கண்டு ஐயன் கலங்குகிறார். உதவிடும் நிலையில் உள்ளவனிடம் உடனடியாக உதவு, அவன் முகம் மலரும் அளவுக்கு உதவு, அவன் பதைபதைப்பு விலகும் வரை உனக்கும் இன்பம் இல்லை என்கிறார்.

முதல் முறை படித்தபோது இக்குறளின் அடர்த்தி வெகு நாட்களுக்கு அலைகழித்தது.

Tuesday, November 01, 2022

சேற்றில் சிக்கிய யானை

​​
​ உலகம் இயங்கும் விதம் வியப்பானது என்றபடியே வந்தான் செல்வம்.

எதைப்பற்றிடா சொல்கிறாய்?

'யூவால் ஆரரி' எழுதியிருக்கும் சேப்பியன்கள் என்ற புத்தகத்தைப் படித்தேன்; இயற்கை யார் பக்கமும் சாய்வதில்லை, வலிமை கொண்டவர்கள் வாழ்கிறார்கள் வலிமை குறைந்தால் எதிர்பாரா இடங்களில் இருந்து கூட ஆபத்துகள் வரும் - வரலாறு அப்படித்தான் சொல்கிறது என்கிறார்.

வரலாற்று ஆசிரியராக அவர் பல எடுத்துக்காட்டுகளையும் விரிவாக விளக்குகிறார்.

வரலாறு மாத்திரம் அல்ல, அறிவியல் அறிஞர் டார்வினின் படிமலர்ச்சி [Evolution] கோட்பாட்டில் இருந்து பிறந்த புகழ்பெற்ற "தக்கன பிழைக்கும்" [Survival of the fittest] என்ற தத்துவமும் அதைத்தானே வேறு மாதிரி சொல்கிறது.

வலிமை உள்ளவரை சிக்கலில்லை. ஏதோ காரணங்களால் உடல் நலமோ, பொருள், உறவு, அறிவுரை சொல்லும் சுற்றம் போன்றவை கெட்டுப்போய் குழப்பத்தில் சிக்கிக் கொண்டால் அது நாள் வரை மறைந்திருந்த சிறு எதிரிகள் கூட வெளிப்பட்டு கோரைப் பற்களைக் காட்டக்கூடும். உண்மையிலேயே நிலவரம் கலவரமாகப் போய் இருந்தால் உயிரையே கூட எடுத்துவிடக் கூடும்.

வரலாறும் அறிவியலும் பட்டறிவும் காட்டும் இக்கருத்தை ஐயன் வள்ளுவர் சொல்லாமலா இருப்பார்.

களம் பல கண்ட போர் யானையாகினும் எதிர்பாராச் சூழலால் சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அந்த வலிமை மிக்க யானையைக் கொன்றுவிடும் என்கிறார்.

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆழ் முகத்த களிறு

 
{
    கால் ஆழ் களரில் = கால் ஆழமான சேற்றில்
    நரி அடும் = நரி கொல்லும்
    கண் அஞ்சா = பயம் இல்லா (கண்ல பயம் தெரியாத)
    வேல் ஆழ் முகத்த களிறு = முகத்தில் வேல் ஆழமாக பதிந்த யானை (களம் பல கண்டு  விழுப்புண் கொண்ட போர் யானை)
    களிறு = யானை

    /* பயமறியாத, களம் பல கண்ட, ஆழமான விழுப்புண் கொண்ட வீரமான யானையாக இருந்தாலும் கால் அசைய முடியாத ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டால் சிறு நரி கூட அம்மாம்பெரிய யானையைக் கொன்றுவிடும். */
 
}

அதனால, எப்பவும் நீ இருக்கும் இடம் பற்றி கவனமாக இரு என்கிறார். ஒன்றைச் சொல்லி இன்னொன்றைப் புரிய வைக்கிறார். ("பிறிது மொழிதல் அணி" - நினைவு இருக்கா?)

வேந்தனோ, படைத்தலைவனோ, ஏன் கொள்ளைக் கூட்டம் நடத்தும் நபராகக் கூட இருக்கலாம். அவரவர் தம் வலிமை குன்றாது இருக்கும் வரை சிக்கவில்லை. யாருக்கும் அஞ்சாத, களம் பல கண்டு விழுப்புண் கொண்ட வீரராக, எல்லோரும் பம்மி வணங்குபவராகக் கூட இருக்கலாம். ஆனால், காலச்சூழலில் தன்னைச் சுற்றி சரியான இடம் அமைத்துக் கொள்ளாமல், இயங்க முடியாத சேற்றில் சிக்கிய யானையாகிவிட்டால் காத்திருக்கும் நரிக்கூட்டம் கமுக்கமாக, என்றைக்குச் செத்தார் என்றுகூட அறிய முடியாதவாறு கொன்றே விடும். - அறிவியல், இலக்கியம், வரலாறு எல்லாம் சொல்லும் செய்தி இது.

திகில் செய்திகள் (facts) போதும். வலிமை குன்றா காபி ஒன்று போட்டுக் கொடேன் - அதான் Strong coffee என்றான் செல்வம் சிரித்தபடி.

Saturday, October 01, 2022

பிரிவால் கொடுமையாக நீளும் இரவுகள்

உலகம் எங்கும் என்றும் மாறாத மனித உணர்வுகளுள் ஒன்று பிரிவுத்துயர். இன்று என்னதான் தொலைத்தொடர்புகள் வளர்ந்துவிட்ட போதிலும் அன்புக்குரியவர் அருகில் இல்லை என்ற துயரம் எல்லோருக்கும் நேர்வது.

காலையில் வேலைக்குப் போகும் போது செல்ல மகள்/ன் முகம் வாடிப்போவது முதற்கொண்டு நிரந்தரமாக இறப்பு பிரித்துக் கொண்டு போகும் போது ஏற்படும் துயரம் வரை நாம் சந்திக்கும் பிரிவுகள் வலிமிகுந்ததே.

இறுதிப் பிரிவு ஒரு வகை வலியெனில் தற்காலிக பிரிவுகள் இன்னொரு வகை. எதிர்பார்த்து நடக்கும் பிரிவுகளான நண்பர்கள் படிப்பு காரணமாக, அல்லது பெற்றோருடன் வேறு ஊருக்கு மாற்றலாகிப்போவது என இளவயது பிரிவுகள்; பின் நடுவயதில் மகள்/ன் கல்லூரி, மணம், பணிநிமித்தம் காரணமாக வீட்டைவிட்டு கிளம்பும் போது ஏற்படும் பிரிவுகள் என பிரிவு எப்போதும் கண்ணீர் நிரம்பியது. யோசித்துப் பார்த்தால் மருத்துவமனைகளை விட பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி நிலையங்கள் காணும் கண்ணீர் மிக அதிகம்.

அது கிடக்கட்டும். காதல் ஏற்படுத்தும் பிரிவுத் துயர் பற்றி பார்ப்போம். அது சற்று சிறப்புற்றதுதான். காதல் துணையின் பிரிவு தவிக்கவிடும். வெளியில் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட கூட முடியாது. தோழியோ தோழனோ இருப்பின் அவரிடம் மட்டும் சொல்லிப் புலம்பலாம். இன்றைய தொலைத்தொடர்புக் கருவிகள் இல்லாத முற்கால காதலர்களை நினைத்துப் பாருங்கள். தென்றலையும் மேகத்தையும் தூதுவிட்டுக் கொண்டு காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படியான ஒரு பெண், பிரிவின் வலி தாளாது தவிக்கும் ஒரு காட்சியை திருக்குறளில் அமைத்திருக்கிறார் ஐயன்.

திருக்குறளை நாடக வடிவமாகவும் பார்க்கலாம், ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு காட்சியாகவே எழுதப்பட்டிருகிறது - அதிலும் குறிப்பாக காமத்துப்பால் நாடகக் காட்சிகளேதான் என்பார்கள். அந்தப் கோணத்தைப் (perspective) பற்றி இன்னொரு நாளில் பேசுவோம். இன்று பிரிவுத்துயர் கொண்டு வாடிப்போய் இருக்கும் தலைவி தன் தோழியிடம் பேசுவது/புலம்புவது போன்ற ஒரு அதிகாரம் படர்மெலிந்திரங்கல் [படர் மெலிந்து இரங்கல்]. இதில் இருந்து ஒரு குறளையும் அதன் அசத்தும் கற்பனையும் பார்க்கலாம்.

காட்சி இதுதான்:
பயல் இவளை வீட்டில் விட்டுவிட்டு பணி நிமித்தமாகவோ, வேறு காரணமாகவோ எங்கேயோ போய் இருக்கிறான். போனவன் பற்றி தகவல் ஏதுமில்லை. அம்மிணி பசலை நோய் கொண்டு வழி மேல் விழிகொண்டு காத்திருக்கிறாள். சில பல நாட்களும் போய்விட்டது. புலம்புகிறாள். கண்ணீர் சிந்துகிறாள்.

ஏதேதோ சொல்லிப் புலம்புகிறாள். தவிக்க விட்டுட்டு போயிருக்கானே, வரட்டும் பெரிய சண்டை போடுகிறேன் என்கிறாள். உடனேயே, அய்யோ நட்போடு இருக்கும் போதே இவ்வளவு துன்பம் தருகிறானே பகையாகிப் போனால் சமாளிக்கவே முடியாதே என்றும் சொல்லிக் கொள்கிறாள்.

தான் இப்படி அவனை நினைத்து வருந்துவது யாருக்கும் தெரியாமல் இருக்கும்படி நடந்துகொள்ளலாம் என்றால் இந்தக் காதல் நோய் மறைக்க மறைக்க ஊற்று போல் பெருகுதே, நீ சம்பாதித்து கிழித்தவரை போதும், என்னப் பார்க்க வாடா என்று தூது விடலாம் என்றாலும் என் நாணம் தடுக்கிறது. நாணமும் காதலும் மாறிமாறி வந்து எதும் செய்ய விடாது பாடாய்ப் படுத்துகிறது. அவன் இருக்கும் இடத்திற்கு என் மனம் போவது போல் என் உடலும் போக முடிந்தால் இப்படி கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க மாட்டேனே என்று அழுகிறாள்.

அந்த அதிகாரதில் வரும் ஒரு குறள்:

கொடியார் கொடுமையின் தாம்கொடியது இந்நாள்
நெடிய கழியும் இரா


கொடியார் = தன்னைத் தவிக்க விட்டு போயிருக்கும் காதலனைச் சொல்கிறாள். தனிமைக் கொடுமையில் தள்ளிய கொடுமைக்காரன்.

கொடுமையின் = அவன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையை விட

தாம் கொடிது = இவை கொடுமையாக இருக்கிறது

நெடிய கழியும் இரா = நீண்டு, நெடியதாக மெதுவாகக் கழியும் இரவுகள்.

இப்படிப் படிக்கலாம்:
இப்போதெல்லாம் நெடிய கழியும் இரவுகள் அந்தக் கொடுமைக்காரன் செய்யும் கொடுமையை விட கொடிதாக இருக்கிறது.

இப்போது அவன் அருகில் இல்லாத நாட்களில் உறக்கம் இன்றி இரவுகள் நீண்டு போகிறது. இதுவே பெரும் கொடுமையாக இருக்கிறது - எவ்வளவு துன்பம் என்றால் அந்தக் கொடுமைக்காரன் ஏற்படுத்தியிருக்கும் கொடுமையைக் காட்டிலும் பெரிதாக இருக்கிறது.

கொடுமைக்காரா என்று அவனுக்கு ஒரு திட்டு, அவன் அருகில் இல்லாதது கொடுமையாக இருக்கு என்ற புலம்பல், அவன் நினைவால் நீண்டு போகும் உறக்கமற்ற இரவு மேற்சொன்ன கொடுமையை விட, துன்பமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு - எல்லாம் ஏழே சொற்களில்.

தளை தட்டாது, வெண்பா வடிவம் கெடாது, அழகுணர்ச்சி போகாது படிப்பவரை வாய்பிளக்கச் செய்யும் ஐயனின் மொழியாளுமை.

அதிகாரம் முழுதும் படிக்கையில் அப்பெண்ணின் மீது பரிதாபம் மட்டுமல்ல நமக்கே கண்ணீர் முட்டும்படி எழுதியிருக்கிறார்.

உண்மையில், தோண்டத் தோண்ட வியப்பூறும் மணற்கேணி  திருக்குறள்தான்.

 

 

 

Thursday, September 01, 2022

துட்டு கொடுத்தாவது அந்தத் துன்பத்தை வாங்கிக்கோ - வள்ளுவர்

 

உலகத்துல யாராச்சும் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டு இருக்கியா?


டேய், ஒரேடியா கதை விடாதே. அப்படியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

அட, உண்மையாத்தான் சொல்றேன். வள்ளுவர் ஒரு so called "துன்பத்தை" ("கேடு" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்) அடைய பொருள் (காசு, பணம், துட்டு, மணி மணி) கொடுக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை; பொருள் கொடுத்தாகிலும் அதைப் பெறு என்கிறார். அது என்னவாக இருக்கும்? யோசிச்சுப் பாரேன்.

எவ்ளோ யோசிச்சாலும் தோணலைடா. நீயே சொல்லிடு.

சரி. சொல்றேன்.
ஐயன் மனிதர்கள் எல்லோரையும் நேசித்தவர். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவணும், நமக்குத் தீங்கிழைத்தவருக்கும் அவர் நாண நல்லதே செய்யணும் என்ற பெரிய மனசுக்காரர். சமூகம் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் வேண்டும் என்கிறார். நாம் சம்பாதித்த அறிவு, பொருள் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறார். தன்னலம் இன்றி பொதுநலனுக்காக செய்வதை இன்றைய பேச்சுவழக்கில் 'தொண்டு செய்வது' என்கிறோம் இல்லையா? அதைச் சொல்கிறார்.

தொண்டு-ன்னு பொதுவா சொல்லிடறோம். எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் அறிவு, நேரம், உழைப்பு என தொடர்ச்சியாக பொது நோக்கத்துக்காகக் கொடுப்பது என்பது அவ்ளோ எளிதானது அல்ல. சொல்லிடலாம்; செஞ்சு பார்த்தா தான் அதில் உள்ள சிக்கல்கள் தெரியும். பல நேரங்களில் எப்படா முடியும் என்று "துன்பமாக" தோன்றும்.

கொஞ்சம் அப்படி-இப்படி இடைஞ்சலாக, துன்பமாக இருந்தாலும் நீ செய்யும் செயல் பொது நலனுக்காக. கைமாறு எதிர்பாரா சேவை செய்கிறாய். நீ செய்யும் செயலால் சில-பலர் நன்மை அடையப் போகிறார்கள். இப்படியான செயலைச் செய்ய ஒரு வேளை, உன் கைப்பொருளை செலவழிக்க வேண்டி இருந்தாலும் தயங்காதே. தொண்டு செய்யும் ஒருவனுக்கு இதனால் கேடு வந்தாலும் பரவாயில்லை, செலவழித்தாகிலும் அந்தத் "துன்பத்தை" அடைந்திட வேண்டும் என்கிறார்.

உண்மையில், பொது நலனுக்குப் பாடுபடுவது இன்பமான ஒன்று; அப்படிச் செயல்படும் போது வரும் சிக்கல்களும் இடைஞ்சல்களும் கூட துன்பம் கிடையாது என்ற மறைபொருள் (hidden message) கொண்ட குறள் அது.

எங்கள் ஆசிரியர் அடிக்கடி சொல்வார்: "திருக்குறள் சந்தன மரம் போல. தேய்க்கத் தேய்க்க மணக்கும்" என்று.

யோசிச்சுப் பாரேன். ஏழே சொற்களில் இவ்வளவு அடர்த்தி.
வாவ்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து

'ஒப்புரவு அறிதல்' என்ற அதிகாரத்தில் உள்ள ஒரு குறள் இது. ஒப்புரவு என்ற சொல்லே வியப்புக்குரிய ஒன்று.

ஒப்பு = சமம்.
ஒப்புரவு = பிறரையும் தனக்குச் சமமாகக் கருதி உதவுதல்.

குறளை எளிமையாகப் படித்தால்,

ஒப்புரவால் ஒருவனுக்கு கேடு வரும் என்றால்,
அந்த "கேடு" விலை கொடுத்து கூட பெறும் தகுதி படைத்தது.

இந்த முழு அதிகாரமுமே இப்படித்தான் இருக்கும். படித்துப்பார் சொக்கிப் போவாய். இதில் இருக்கும் பத்து குறள்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல எழுதியிருப்பார்.

கைமாறு (பதில் உதவி) எதிர்பார்த்தா மழை பெய்யுது? அது போல எதையும் எதிர்பாராது செய்; உன்னிடம் உள்ள பொருள் எல்லாம் தொண்டாற்றவே, தயங்காமல் செய்; தொண்டாற்றவது போன்ற நல்ல செயல் எந்த உலகிலும் இல்லை.
நாம் உயிரோடு இருப்பதே எதையும் எதிர்பாராது பொதுச் சேவை செய்யவே. நல்ல உள்ளம் கொண்ட உன்னிடம் சேர்ந்திருக்கும் செல்வம், ஊர் நடுவில் எல்லோருக்கும் பயன்படும் கிணறு நீர் நிரம்பியது போன்ற நன்மை செய்யக்கூடியது எனவே தாராளமாக எல்லோருக்கும் உதவு. மருந்துக்காக தன்னையே தரும் மருத்துவ மரம் போல உன்னிடம் உள்ள எதையும் பொது நலனுக்காகக் கொடு. தப்பில்லை.

Difficult days என்பது போல கொஞ்சம் இடறு நேரும் காலங்கள் ஆனாலும் உன் தொண்டாற்றும் மனதைத் தளரவிடாதே.

என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக மேலே சொன்ன குறளைச் சொல்கிறார் ஐயன்.

தொண்டாற்றுவதால் கேடு வருவது போல் இருந்தால் விலை கொடுத்து கூட அந்த அந்தத் துன்பத்தைப் பெறலாம் என்று முடிக்கிறார்.

-----

தன்னலமின்றி தமிழுக்காக தங்கள் நேரம், உழைப்பு, அறிவு என இயன்றதையெல்லாம் கொடுக்கும் தமிழ்ச் சங்கத்தாருக்கும் தமிழாசிரியர்களுக்கும் இக்குறளை மேற்கோளிட்டு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
உங்களது இந்தத் "துன்பம்" பெரிதும் மதிக்கப்படும் ஒன்று.

வாழ்க தமிழ். 
வாழிய தமிழுக்கு உழைக்கும் உங்கள் நல்லுள்ளம், தொண்டுள்ளம்.

Friday, July 01, 2022

ஏ உலகமே, இதுல என்ன "பெரும" உனக்கு?

 
உலகத்துல இப்படி வாழைப் படத்துல ஊசி ஏத்தற மாதிரி எழுதின ஆளுக வேற யாரும் இருக்காங்களான்னு தெரியலை என்றபடியே வந்தான்.

வாடா செல்வம், என்ன ஒரு மாதிரியா இருக்கே? எதும் சிக்கலா?

ப்ச்..
அதெல்லாம் ஒன்னுமில்லை. என் மதிப்புக்குரிய ஆசிரியர் ஒருத்தர் தவறிட்டார். அதான் கொஞ்சம் மனசு கனமா இருக்கு.

யாரு? எனக்குத் தெரியுமா?

உனக்குத் தெரியாது. என் பள்ளிகால ஆசிரியர். என்னை நன்முறையில் பாதித்த பெருமகனார்களில் அவரும் ஒருவர். வயது முதிர்ந்து இயற்கை எய்திட்டார் சமீபத்தில். நேற்று தான் எனக்குத் தெரிய வந்தது; அதான் கொஞ்சம் மனம் வாடி இருக்கேன்.

அவரையா வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி எழுதறவர்ன்னு சொல்லிகிட்டே வந்தே?

அவரை இல்லை. வள்ளுவரைச் சொன்னேன். ஆசிரியர் தவறியதைப் பற்றி யோசிக்கையில் ஒரு குறள் நினைவுக்கு வந்துச்சு. எதுவும் நிலையில்லை எல்லாம் ஒரு நாள் போய்டும், போய்டுவோம் என்ற நிலையாமையைச் சொல்ற அதிகாரத்தில் வரும் குறள். வள்ளுவரின் நாசூக்கும், anguish என்று ஆங்கிலத்தில் நாம் சொல்லும் மனச்சோர்வும் வெளிப்படும் குறள் அது. நிலையற்ற தன்மைதான் இயல்பு, இயற்கை, உலகம். அந்த இயற்கையை, உலகத்தை வஞ்சப்புகழ்ச்சியாக குத்திக் காட்டுகிறார் என்றும் சொல்வாங்க.

இன்னொரு பார்வையாக,
எவ்வளவு பெரிய அறிவாளியாக, நல்லவராக இருப்பினும் நாளைக்கு இருப்போம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. அந்த நிலையாமையே உலகை இயக்குகிறது அதுவே அதன் பெருமை என்றும் சொல்வாங்க.

எது எப்படியாகினும் என் மதிப்புக்குரிய ஆசிரியப் பெருமகனார் இன்றில்லை. அவரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு இன்னொரு தருணத்தில் சொல்றேன் என்றபடியே கிளம்பினான்.

டேய், இருடா அந்தக் குறளையாவது சொல்லிட்டுப் போ.

ஓ, அதுவா.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு


நெருநல் = நேற்று வரை
உளன் ஒருவன் = இருந்த ஒருவன்

நேற்றுவரை நம்மோடு இருந்த ஒருவன் இன்றைக்கு இல்லை என்ற "பெருமை" உடையது இந்த உலகம். 20 நூற்றாண்டுகள் கடந்தும் அப்படியே புரியும் எளிய இனிய தமிழ்.

இதில் வரும் "பெருமை" என்ற சொல் அவரவர் மன இறுக்கத்தைப் பொறுத்து ஆழமான பொருள் தருகிறது. நெருங்கினவர் தவறிட்டால், ஏ உலகமே இப்படி சட்டென்று என் அன்புக்குரியவர் வாழ்வை முடித்துவிட்டாயே எவ்வளவு இழிவான இயல்பு உனக்கு என்று திட்டத் தோன்றும். அதைத்தான் குத்தலாக வள்ளுவர் உலகின் "பெருமை" என்கிறார் என்று எடுத்துக் கொள்ளத் தோன்றும்.

தத்துவ நயமாக, இந்த நிலையற்ற இயல்பே இவ்வுலகின் உண்மையான பெருமை என்றும் எடுத்துக் கொள்வதும் உண்டு.

சரி, களைப்பாகவும் சோர்வாகவும் இருக்கு கொஞ்சம் தூங்கி எழுந்து அப்புறம் வர்றேன். உறங்குவது போல சாக்காடு, தூங்கி எழுவது போன்றது பிறப்பு என்ற புகழ் பெற்ற குறளும் இந்த அதிகாரத்தில் தான் இருக்கு.

புதிதாய் பிறந்து இன்னொரு நாள் வர்றேன் என்றபடியே கிளம்பினான்.

Wednesday, June 01, 2022

கார் புதுசு வாங்கலாமா பழசு பரவாயில்லையா - வள்ளுவர் என்ன சொல்றார்?

 உலகத்துல கார் வாங்க வள்ளுவர்ட்ட யோசனை கேட்கும் ஆளு நீதான்டா. அதும், நான் கார் வாங்குகிறேன், நீ குறளை வைத்து விளையாடுற, நடத்து.

அட சும்மா விளையாட்டுக்கு ஒரு புகழ்பெற்ற குறளை கார் வாங்கும் முடிவில் பொருத்திப் பார்த்தேன் என்றான் செல்வம்.

சரி, ஆரம்பிச்சுட்ட, சொல்லு கேட்போம்.

அந்த ஒரு குறளை மட்டும் விளக்கவா இல்லை "பல குறள் மன்னன்" என சில குறள் விளக்கங்களை இணைத்துச் சொல்லவா?

யப்பா, என் மூளை ஒரு நேரத்தில் ஒன்று என்றே புரிந்துகொள்ளும், நீ ஒரு குறள் மட்டும் சொல்லு இப்போதைக்கு.

"அப்படியே ஆகட்டும்" என்று ரொம்பவே விளையாட்டு மனநிலையில் இருந்தான் செல்வம்.

கார் வாங்க எவ்ளோ காசு வெச்சிருக்க?

ஏற்கனவே கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தேன், இப்போ அலுவலகத்தில் ஊக்கத் தொகை கொஞ்சம் கொடுத்தாங்க; எல்லாமா சேர்த்து கார் வாங்க ரெடி.

கேட்ட கேள்விக்கு முழுசான பதிலைக் காணோம். இருக்கட்டும்.
அடுத்த கேள்வி. என்ன கார் வாங்க யோசிச்சு வெச்சிருக்க?

அங்கதான் கொஞ்சம் இடிக்குது. Tesla வின் புது மாடல் மேல ஒரு கண்ணு. தெரிஞ்சவங்க சிலர் வாங்கிட்டு ஒரே அலப்பறை. எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா காசு கொஞ்சம் பத்தாது. அங்கே இங்கே புரட்டி சமாளிச்சுடலாம்னு நினைக்கிறேன். Tesla வின் புது மாடல்ல base version க்கு போதுமான அளவு தேத்திடுவேன். ஆசை நிறைவேறிடும். என்ன சொல்ற?

நான் என்ன சொல்றது, வள்ளுவர் சொல்கிறார் கேள்.
அதுக்கும் முன் இன்னொரு கேள்வி. ஒரு Fully loaded, 3 ஆண்டு பழைய வண்டி வாங்க உன் சேமிப்பு போதுமா?

தாராளமா போதும். மிச்சம் கூட இருக்கும். ஆனா புதுசு புதுசுதான்டா.

இல்லைங்கலை. இப்போ, வேற ஒரு சூழலுக்கு வள்ளுவர் எழுதிய குறளை இங்கே சொல்றேன், பொருத்திப் பார்த்துக்கோ.

காட்டில் மறைந்திருக்கும் முயலை வெற்றிகரமாக அம்பு எய்து வேட்டையாடுபவனாக இருப்பதைவிட, போர் யானையைக் கொல்ல வேல் வீசும் வீரனாக இருப்பது இனிது என்கிறார். யானை பிழைச்சுட்டா/தப்பிச்சுட்டா கூட பரவாயில்லை முயல் வேட்டைக்காரனாக இருப்பதைக் காட்டிலும் இதுவே இனிது என்கிறார்.

அதாவது, இருக்கிற காசில் புது மாடல் base version காருக்குச் சொந்தக்காரனாய் இருப்பதைவிட, எல்லா வசதிகளும் கொண்டிருக்கும் Fully loaded, 3 ஆண்டு வண்டியை வாங்குவது இனிது என்கிறேன் நான்.

யப்பா டேய்..
உன் விளக்கத்தை வள்ளுவர் கேட்டார்னா குபீர்ன்னு அதிர்ச்சி ஆகிடுவார்டா.

ஒன்னு சொல்றேன் கேளு. என் தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்த trick.
பொதுவாக மாணவர்கள் தவிர்க்கும் இலக்கண, இலக்கிய வகுப்புகளை எப்படிக் கையாள்வது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஏதாவது ஒரு ஆர்வம் மிக்க, தொடர்பற்ற தலைப்பில் பேசத் துவங்க வேண்டும். மாணவர்களின் கவனத்தை முழுசாகப் பெறும் போது, சொல்ல வந்த பாடத்தையும் உள்நுழைத்து பேசிட‌ வேண்டும். தேனில் மருந்தைக் குழைத்து பிள்ளைகளுக்குக் கொடுப்பதைப் போல.

தேன்+மருந்து கலவையை உன் வாயில் போட்டுட்டேன். இனி, காரும் வரும் குறளும் மறக்காது. என்சாய் மாடி, அடுத்த வாரம் வர்றேன் நேரமாச்சு என்றபடியே கிளம்பினான்.

----------

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

கான = கானகம் = காடு

வேறு எந்தச் சொல்லுக்கும் விளக்கம் தேவைப்படாத குறள்.

கானமுயல் = காட்டுமுயல் என்று சொல்லிவிட்டு, யானைக்கு எதும் சொல்லாமல் விடுகிறார். காட்டுயானை அல்ல, போர்க்களத்தில் உள்ள யானை என்று நம்மையே புரிந்து கொள்ள வைக்கிறார். குறள் இருக்கும் அதிகாரம் படைச்செருக்கு. அதனால் போர்க்களம், போர்யானை என்பன இயல்பான சிந்தனை.

எய்த அம்பு = முயலை நோக்கி எய்த அம்பு.
யானை பிழைத்த வேல் = யானையை நோக்கி எறிந்த வேல், ஆனால் யானை பிழைத்துவிட்டது. அப்படியெனில் முயல் பிழைக்கவில்லை என்ற செய்தியும் உள் அடக்கியிருக்கிறார்.

பெரிய முயற்சிகள் செய்பவராக இருப்பது பெருமை, சிறப்பு என்றுகூட சொல்லவில்லை. முழுமையாக வெற்றி கிட்டாவிட்டாலும், அப்படி இருப்பதே "இனிது" என்கிறார். இன்றைய பேச்சு வழக்கில், "அதான் பரவாயில்லை" என்பது போல.

ஐயனே, குறளை நவில் தோறும் வியந்து போகிறோம். வாழிய நின் புகழ்.

 

#குறளும்_பொருளும்

Saturday, February 26, 2022

கமா, சோம்பல் மற்றும் பக்கோடா

 

வாடா செல்வம், நேத்திக்கே உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன், முடியாம போய்டுச்சு. உட்கார், ஒரு காபி போட்டுட்டு வர்றேன் குடிச்சுட்டே பேசலாம்.

வேலையெல்லாம் எப்படி போகுது?

ம்.. கொஞ்சம் கடியாத்தான் போகுது. எதையாவது உடைச்சிடறானுக; அப்புறம் நாம விடிய விடிய உட்காந்து சரிசெய்ய வேண்டி இருக்கு. ப்ச்., அதுக்குத்தானே சம்பளம் குடுக்கறாங்கன்னு ஒன்னும் பேசறதில்லை. புகார் படிக்க ஆரம்பிக்கும் போதே முற்றுப்புள்ளி வெச்சிடறது. எதுக்கு வம்பு.

காபி நல்லாயிருக்கு.

அடுத்த முறை வரும்போது கொஞ்சம் வெங்காய பக்கோடா போடு; இல்லாட்டி நான் போட்டு எடுத்து வர்றேன். வெறும் காபி குடிக்கறத்துக்கு அது இன்னும் நல்லாயிருக்கும்.

உனக்கு இல்லாமலா? கண்டிப்பா. இன்னிக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு, அடுத்த முறை போண்டா போட்டு வைக்கிறேன்.
அது கிடக்கட்டும், முற்றுப்புள்ளின்னதும் நினைவுக்கு வருது, தமிழில் நிறுத்தக்குறிகள் எனும் punctuations போன நூற்றாண்டு வரை இல்லைன்னு சொன்னாயாமே? உண்மையாவாடா?

ஆமா.
அச்சு இயந்திரங்கள் வந்து, நாம புத்தகங்கள் அச்சிடும் போது கூட நிறுத்தக் குறிகள் தமிழில் புழக்கத்தில் கிடையாது. ஐரோப்பிய மொழிகள் அறிமுகம் ஆன போது, நமக்கு punctuations புதுசா இருந்திருக்கு. அவர்களுக்கே அது அப்போது ஒரு மாதிரி புதுசுதான். நாமளும் சும்மா இருக்காம உரைநடையில் பயன்படுத்திப் பார்த்த போது, அட இதுகூட வசதியாத்தானே இருக்குன்னு கபால்ன்னு பிடிச்சிகிட்டோம்.

ஆங்கில punctuation பற்றி ஒரு interesting ஆன trivia சொல்லவா?

ம், சொல்லு கேட்போம்.

வரிசையா பட்டியல் இடும்போது நடுவில் கமா போடறோம் இல்லையா? கடைசிச் சொல்லுக்கு முன் and என்று எழுதி கடைசிப் பட்டியல் பொருளை எழுதி முடிச்சிடறோம்.
அதாவது,
Fri, Sat and Sun. என்று.

கொஞ்ச காலம் முன் வரை கூட andக்கு முன் ஒரு கமா இருந்திருக்கிறது. Fri, Sat, and Sun. என்று.
அதான் and இருக்கே வெட்டியா எதுக்கு கமா - அச்சு செலவை மிச்சம் பிடிக்கலாம் என்று தூக்கிட்டானுக.

ஓ வாவ்!

சரி சோம்பேறி. நான் கிளம்பறேன்.

டேய் இருடா. சோம்பல் போய்டுச்சு. பக்கோடா போட்டுத் தர்றேன் சாப்டுகிட்டே இன்னும் கொஞ்ம் நேரம் பேசிட்டு இருக்கலாம்.

சரி, செய். சோம்பல் இல்லா மன்னவனுக்கு அவன் ஆட்கள் அளந்த நிலமெல்லாம் சொந்தமாகும்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். சோம்பலை வென்ற உன்னால் கொஞ்சம் வெங்காய பக்கோடா சொந்தமாகாதா என்ன. நீ ஆரம்பி, நான் முடிக்கிறேன் - சாப்பிட்டு.

இப்போ சொன்னியே அந்தக் குறளையும் அதற்கான விளக்கத்தையும் இந்த வெங்காயத்தை வெட்டிட்டே சொல்லு, நான் மாவு கரைக்கிறேன்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி, அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

அதாவது,
சோம்பல் இல்லாத மன்னவன் அடையும் எல்லை என்பது, அவன் ஆட்கள் - surveyors-ன்னு வெச்சுக்கோயேன்; அளந்த எல்லா நிலமும் உள் அடங்கியது என்கிறார்.

இப்போதைக்கு நீ சுடும் பக்கோடாவின் கலோரிகளை அளக்கிறேன், அளவாக உண்கிறேன்.

பக்கோடாவும் நல்லாயிருக்கு. ஒரு டப்பால 4 போட்டுக் கொடு அப்புறமா கொஞ்சம் சாப்பிடறேன்.

நேரமாச்சு, கிளம்பறேன். அடுத்த வாரம் வர்றேன். Bye.

---

மடி = சோம்பல்
மடியிலா = சோம்பல் இல்லாத
மன்னவன் எய்தும் அடி = மன்னவன் எய்தும் எல்லை
அளந்தான் = Surveyor
தாயது = சொத்து
எல்லாம் ஒருங்கு = எல்லாம் சேர்ந்து
---

மடியிலா மன்னவன் எய்தும் அடி,  அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு

சோம்பல் இல்லா மன்னவன் எய்தும் எல்லை, நில அளவர்கள் -surveyors அளந்த தாயம் எல்லாம் உள் அடங்கியது.


---

 

#குறளும்_பொருளும்

Sunday, February 13, 2022

நீங்க படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு நான் தலைமை ஆசிரியர், தம்பிகளா!

 
கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் கடிதம்..
கண்மணியே காதல் என்பது..
கண்மணி நீ வர காத்திருந்தேன்..
கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது..
கண்மணி ஓ காதல் கண்மணி..

என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஒரு ஏழெட்டு கண்மணி பாட்டாவது சொல்லிடுவோம். திரைப்பாடல்கள் மட்டுமல்ல தினப்படி வாழ்க்கையிலும் "கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்குவேன்", "கண்ணுக்கு கண்ணானவள்" என்று கண்மணி எனும் பாவையைப் பற்றிப் பேசாதவர் இல்லை, பாடாத புலவர்கள் இல்லை, காதலர்களும் இருந்ததில்லை; இருப்பதில்லை.

மனிதர்களோ, விலங்கு, பறவை மற்ற உயிரினங்களோ, எல்லாவற்றுக்கும் கண்ணும் அதன் பார்வைக்குக் காரணமான பாவையும் (கண்மணி)யும் எவ்வளவு இன்றியமையாதது என அறிந்திருப்பதால் காதலன்/காதலியை அந்தக் கண்மணி போன்றவர் என்று சொல்லி மகிழ்கிறோம்.

மேலே சொன்னமாதிரியான திரைப்பாடல் ஆசிரியர்கள், புலவர்கள், எல்லோரும் காதலன்/காதலியை அவ்வளவு சிறந்த கண்மணிக்கு ஒப்பாக வைத்து கிறங்கிப் போய் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நம்மாளு வள்ளுவர் அவர்களைப் பார்த்து, தம்பிகளா சின்னப் பசங்க எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க என்கிறார் ஒரே ஒரு குறள் மூலமாக.

காதலன் தன் காதலியை நினைத்து தன் கண்மணியிடம் பேசுவது போல ஒரு குறள்.

"யய்யா கண்மணி, நீ மிக உயர்ந்த, மிக மிக மதிப்பு மிக்க உறுப்புதான். இல்லைங்கல. ஆனா பாரு, என் காதலி உன்னைவிட உயர்ந்தவள். அந்த அழகு நெற்றியாளை என் கண்ணுக்குள் வைத்து அவள் வழியாக உலகைப் பார்க்கப் போகிறேன்; நீ கொஞ்சம் இடத்தைக் காலி பண்ணு" என்கிறார்.

படிப்பதை நிறுத்திவிட்டு இக்காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நம் உடலின் உறுப்புகளில் மிக உயர்ந்ததான கண்மணியை விட உயர்ந்தவளாம் காதலி. கண்மணி இருக்கும் இடத்தில் அவளை வைத்து காண்பவை எல்லாம் அவளாகவே காண விரும்புகிறானாம். அதனால் தன் சொந்தக் கண்மணியை இடத்தைக் காலி செய், போ என்கிறானாம்.

யோவ் வள்ளுவரே, காதல் மன்னன்யா நீர். பின்றய்யா என்று சொல்ல வைக்கும் குறள்.

கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

கருமணியின் = கண்ணின்
பாவாய் = Pupil
நீ = நீ
போதாயாம் = போய்விடேன்
வீழும் = நான் மயங்கிப் போய் காதலில் வீழ்ந்து கிடக்கும்
திரு + நுதற்கு = அழகு + நெற்றி கொண்டவளுக்கு

இப்படிப் படிக்கலாம்:
"கண்ணின் பாவையே நீ போய்விடேன் - என்னைக் காதலில் வீழ்த்திய அழகு நெற்றியாள் இங்கு வருகிறாள்; அவளுக்கு நீ இருப்பதால் இடமில்லாமல் இருக்கிறது"

இதில் ஒரு இரட்டுற மொழிதல் (Double meaning) வேறு - நல்ல விதமாகத்தான் :)

பாவை என்ற சொல்லுக்கு பெண் என்ற பொருளும் உண்டு. இவன் கண்ணுக்குள் இருக்கும் பாவையை போகக் சொல்லிட்டு மனதுக்குள் இருக்கும் பாவையை (காதலியை) அங்கே வைக்கப் போகிறானாம்.

கவிதையில் அழகு, மாபெரும் கற்பனை, செய்யுள் வடிவம் மாறாமல் தளை தட்டாமல் எழுதிய ஒன்றரை அடி அதிசயம். 
ஐயனே, உம்மை நவில் தோறும் அதிசயிக்கிறோம். 
 

Saturday, October 05, 2019

கடன் தா Vs கொடு

இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

வேறுபாடு இருந்தா என்ன,  இல்லாட்டா என்ன? கேட்ட கடன் கிடைச்சா போதும். சரிதானே?

ஆனா, இந்தச் சொற்களுக்குள் ஒரு சின்ன வேறுபாடு இருக்கு.  என்னன்னு பார்த்திடுவோம்.

சூட்டோட சூடா முதல்ல கொஞ்சம் இலக்கணம் படிச்சிடலாம்;  கடனுக்கு அப்பால வருவோம்.

கொடு, தா, ஈ எனும் கிட்டதட்ட ஒரே பொருள் கொடுக்கும் மூன்று சொற்களிடையே ஒரு மெல்லிய வேறுபாடு காட்டுகிறார் தொல்காப்பியர்.

மூன்றும் ஒரே செயலைக் குறிப்பதுதான் என்று முதலிலேயே(1) சொல்லிடறார்.
'ஆனா பாருங்க..' அப்படின்னு ஒரு * போட்டு அடுத்த மூன்று தனித்தனி வரிகளில் வேறுபாட்டை விளக்கறார். (2,3,4)

* ஈ என்னும் சொல்லை இழிந்த நிலையில் இருப்பவன் அவனுக்கும் உயர் நிலையில் இருப்பவனிடம் சொல்லிக் கேட்பது. (ஈ என இரத்தல் இழிந்தன்று -  புறநானூறு)
* தா என்னும் சொல்லை சரிக்கு சரியாக இருப்பவரிடம் சொல்லிக் கேட்பது.
* கொடு என்ற சொல்லை உயர்ந்த நிலையில் இருக்கும் போது அவ்வளவு உயர் நிலையில் இல்லாதவரிடம் கேட்பது. 

கொடு என்றாலே வளைதல் என்று முன்பு ஒரு முறை பார்த்தோம் (கொடுவாள், கொடுக்காப்புளி, கொடுக்கு என வளைந்ததற்கு எல்லாம் அதன் பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்தவையே). உயர்ந்த இடத்தில் இருந்து வழங்குபவரது கைகள் வளைந்து இருப்பதால் அது 'கொடு'ப்பது என்று சொல்வது உண்டு.

இப்போ, கடனுக்கு வருவோம்.

கடன் கேட்பதே கொஞ்சம் நெளிஞ்சுக்கிட்டு கேட்பதுதான். இருந்தாலும் நம்ம நண்பர்களிடம் ஒரு சிறு கை மாற்று, கேட்கிறோம் என்று வையுங்கள்.
"உன் கைபேசியைத் தா, வீட்டுக்கு ஒரு கால் பண்ணிட்டு தர்றேன், என்னுதுல பேட்டரி போய்டுச்சு" எனும் போது இருவரில் யாரும் உயர்/தாழ் நிலையில் இல்லை. எனவே, கொஞ்சம் உரிமையோடு தா என கேட்கிறோம்.

இதே, நீங்கள் ஒருவருக்கு பணம் கடன் கொடுத்திருக்கிறீர்கள் என வைப்போம். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது "ஏம்பா, அடுத்த வாரம் குடுத்திடறதா சொன்னியே, ஞாயிற்றுக் கிழமை வீட்லதான் இருப்பேன், பணம் கொண்டு வந்து கொடு" என சற்றே உயர் நிலையில் இருந்து கேட்பது.

வேறுபாடு தெரியுதில்ல?

முதல் வகையான ஈ என்பது கெஞ்சிக் கேட்பது - இரப்பது. 
நீதிபதியிடம் குற்றவாளி, "இனி திருட மாட்டேன், தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுடுங்க" எனக் கெஞ்சுதல் - ஈ என இரத்தல் வகை. இழிந்த நிலையில் இருப்போன் கெஞ்சுவது. அவனுக்குக் கருணையோடு கொடுப்பது - ஈவது.

எனவே,
தன் நிலையில் இருந்து இறங்கி, இரந்து கேட்பவருக்கு வழங்குவது - ஈவது.
சரி நிகராய் இருப்பவருக்கு வழங்குவது - தருவது
உயர் நிலையில் நாம் இருந்து வழங்குவது - கொடுப்பது.

பேச்சு வழக்கில் தா, கொடு என்பதற்குள் இருக்கும் வேறுபாட்டை நாம பெரிசா கண்டுக்கலைன்னாலும் இப்படி ஒன்னு இருக்குன்னு தெரிந்து வைத்துக்கொள்வதில் தப்பு இல்லைதானே.

இதுதான் அந்தத் தொல்காப்பிய வரிகள்:
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 1

அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 2
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 3
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 4

இதே கட்டுரை கொஞ்சம் கிளுகிளு வடிவில் இங்கே: முத்தம் குடு  Vs  முத்தம் தா


---------------
#ஞாயிறு போற்றுதும்.   

Saturday, September 28, 2019

இரட்டைக் காப்பியர்கள்

அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். முதல் முறையாக அவரைச் சந்திக்கிறேன். அவர் இளங்கோ என்றும் சில பல ஆண்டுகளுக்கு முன் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்ததாகவும் அப்போது நண்பர்கள் ஆனதாகவும் சொன்னார்கள். அறிமுகப் படலத்திற்குப் பின் கொஞ்சம் சரளமாக பேசிக் கொண்டிருந்தோம்.

தமிழர் பண்பாட்டின் படி கொஞ்ச நேரத்தில் அரசியல் பேசத் தொடங்கினோம்.

அவரோட தந்தையார், ​அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் தமிழ் இரண்டிலும் கவரப்பட்ட அன்றைய டிபிகல் தமிழக இளைஞர் என்றும், எப்படி இன்றைய தமிழகம் அண்ணாவால் வடிவு பெற்றது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஆர்வமாகத்தான் போய்க் கொண்டிருந்தது, அல்லது அப்படித் தோன்றியது.

என் அப்பா பேச்சை மாற்ற நினைத்து, "உங்க அண்ணன் எப்படி இருக்கார்" என்றார்.

"செங்குட்டுவன் நல்லா இருக்கானுங்க, ரிட்டையர் ஆனப்புறம் கேரளால மகள் வீட்டுக்குப் பக்கத்துலயே வீடு வாங்கிட்டு போய்ட்டார். ஒரே மகள், பக்கத்திலேயே இருக்கலாம்னு அங்க போய்ட்டார்".

என் முகத்தைப் படித்தவராக அப்பா சொன்னார், "இவரும் இவர் அண்ணனும் இரட்டையர்கள், அவர் பெயர் செங்குட்டுவன்".

செங்குட்டுவன் - இளங்கோ.

அட!

இளங்கோ கிளம்பும் போது அவர் அண்ணன் செங்குட்டுவனின் மகளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். சொன்னார்.

"மணிமேகலை"

_________


உண்மையில் இது சில வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. மானே தேனே சேர்த்தது மட்டும் என் பங்கு.



*******