உலகத்துல கார் வாங்க வள்ளுவர்ட்ட யோசனை கேட்கும் ஆளு நீதான்டா. அதும், நான் கார் வாங்குகிறேன், நீ குறளை வைத்து விளையாடுற, நடத்து.
அட சும்மா விளையாட்டுக்கு ஒரு புகழ்பெற்ற குறளை கார் வாங்கும் முடிவில் பொருத்திப் பார்த்தேன் என்றான் செல்வம்.
சரி, ஆரம்பிச்சுட்ட, சொல்லு கேட்போம்.
அந்த ஒரு குறளை மட்டும் விளக்கவா இல்லை "பல குறள் மன்னன்" என சில குறள் விளக்கங்களை இணைத்துச் சொல்லவா?
யப்பா, என் மூளை ஒரு நேரத்தில் ஒன்று என்றே புரிந்துகொள்ளும், நீ ஒரு குறள் மட்டும் சொல்லு இப்போதைக்கு.
"அப்படியே ஆகட்டும்" என்று ரொம்பவே விளையாட்டு மனநிலையில் இருந்தான் செல்வம்.
கார் வாங்க எவ்ளோ காசு வெச்சிருக்க?
ஏற்கனவே கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தேன், இப்போ அலுவலகத்தில் ஊக்கத் தொகை கொஞ்சம் கொடுத்தாங்க; எல்லாமா சேர்த்து கார் வாங்க ரெடி.
கேட்ட கேள்விக்கு முழுசான பதிலைக் காணோம். இருக்கட்டும்.
அடுத்த கேள்வி. என்ன கார் வாங்க யோசிச்சு வெச்சிருக்க?
அங்கதான்
கொஞ்சம் இடிக்குது. Tesla வின் புது மாடல் மேல ஒரு கண்ணு. தெரிஞ்சவங்க
சிலர் வாங்கிட்டு ஒரே அலப்பறை. எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா காசு கொஞ்சம்
பத்தாது. அங்கே இங்கே புரட்டி சமாளிச்சுடலாம்னு நினைக்கிறேன். Tesla வின்
புது மாடல்ல base version க்கு போதுமான அளவு தேத்திடுவேன். ஆசை
நிறைவேறிடும். என்ன சொல்ற?
நான் என்ன சொல்றது, வள்ளுவர் சொல்கிறார் கேள்.
அதுக்கும் முன் இன்னொரு கேள்வி. ஒரு Fully loaded, 3 ஆண்டு பழைய வண்டி வாங்க உன் சேமிப்பு போதுமா?
தாராளமா போதும். மிச்சம் கூட இருக்கும். ஆனா புதுசு புதுசுதான்டா.
இல்லைங்கலை. இப்போ, வேற ஒரு சூழலுக்கு வள்ளுவர் எழுதிய குறளை இங்கே சொல்றேன், பொருத்திப் பார்த்துக்கோ.
காட்டில்
மறைந்திருக்கும் முயலை வெற்றிகரமாக அம்பு எய்து வேட்டையாடுபவனாக
இருப்பதைவிட, போர் யானையைக் கொல்ல வேல் வீசும் வீரனாக இருப்பது இனிது
என்கிறார். யானை பிழைச்சுட்டா/தப்பிச்சுட்டா கூட பரவாயில்லை முயல்
வேட்டைக்காரனாக இருப்பதைக் காட்டிலும் இதுவே இனிது என்கிறார்.
அதாவது,
இருக்கிற காசில் புது மாடல் base version காருக்குச் சொந்தக்காரனாய்
இருப்பதைவிட, எல்லா வசதிகளும் கொண்டிருக்கும் Fully loaded, 3 ஆண்டு
வண்டியை வாங்குவது இனிது என்கிறேன் நான்.
யப்பா டேய்..
உன் விளக்கத்தை வள்ளுவர் கேட்டார்னா குபீர்ன்னு அதிர்ச்சி ஆகிடுவார்டா.
ஒன்னு சொல்றேன் கேளு. என் தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்த trick.
பொதுவாக மாணவர்கள் தவிர்க்கும் இலக்கண, இலக்கிய வகுப்புகளை எப்படிக் கையாள்வது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
ஏதாவது
ஒரு ஆர்வம் மிக்க, தொடர்பற்ற தலைப்பில் பேசத் துவங்க வேண்டும்.
மாணவர்களின் கவனத்தை முழுசாகப் பெறும் போது, சொல்ல வந்த பாடத்தையும்
உள்நுழைத்து பேசிட வேண்டும். தேனில் மருந்தைக் குழைத்து பிள்ளைகளுக்குக்
கொடுப்பதைப் போல.
தேன்+மருந்து கலவையை உன் வாயில் போட்டுட்டேன்.
இனி, காரும் வரும் குறளும் மறக்காது. என்சாய் மாடி, அடுத்த வாரம் வர்றேன்
நேரமாச்சு என்றபடியே கிளம்பினான்.
----------
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
கான = கானகம் = காடு
வேறு எந்தச் சொல்லுக்கும் விளக்கம் தேவைப்படாத குறள்.
கானமுயல்
= காட்டுமுயல் என்று சொல்லிவிட்டு, யானைக்கு எதும் சொல்லாமல் விடுகிறார்.
காட்டுயானை அல்ல, போர்க்களத்தில் உள்ள யானை என்று நம்மையே புரிந்து கொள்ள
வைக்கிறார். குறள் இருக்கும் அதிகாரம் படைச்செருக்கு. அதனால் போர்க்களம்,
போர்யானை என்பன இயல்பான சிந்தனை.
எய்த அம்பு = முயலை நோக்கி எய்த அம்பு.
யானை
பிழைத்த வேல் = யானையை நோக்கி எறிந்த வேல், ஆனால் யானை பிழைத்துவிட்டது.
அப்படியெனில் முயல் பிழைக்கவில்லை என்ற செய்தியும் உள் அடக்கியிருக்கிறார்.
பெரிய
முயற்சிகள் செய்பவராக இருப்பது பெருமை, சிறப்பு என்றுகூட சொல்லவில்லை.
முழுமையாக வெற்றி கிட்டாவிட்டாலும், அப்படி இருப்பதே "இனிது" என்கிறார்.
இன்றைய பேச்சு வழக்கில், "அதான் பரவாயில்லை" என்பது போல.
ஐயனே, குறளை நவில் தோறும் வியந்து போகிறோம். வாழிய நின் புகழ்.
#குறளும்_பொருளும்
No comments:
Post a Comment
படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!