Showing posts with label மகள். Show all posts
Showing posts with label மகள். Show all posts

Monday, January 17, 2011

தாயே, கவலையை விடு

சங்க இலக்கியங்களில் அற்புதமான கருத்துக்களை மறைமுகமாக  நயம்பட  சொல்லும் பல கவிதைகளை காணலாம், கலக்கமடைந்து இருக்கும் தாய்க்கு  மனக்கவலை தீரும் வகையில்  சொல்லப்பட்ட ஒரு ஆறுதலான செய்தியை  இங்கே  பார்க்கலாம்.
நவீன காலத்தில் ஒரு பெண் தனக்கு விருப்பமானவனை பெற்றோருக்கு தெரியாமல், அல்லது அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி மணந்து கொண்டு போவது பற்றி நிறையவே கேள்விப் படுகிறோம்.  இது ஒன்றும் புதிதல்ல. மனித குலம் தோன்றிய காலம் தொடங்கி நடைபெறும் சம்பவம்தான்.
ஒரு நாள் வழக்கம் போல் காலையில் எழுந்த தாய் தன் மகள் படுத்திருந்த படுக்கை காலியாக இருப்பதைப பார்த்து ஆச்சரியப்பட்டாள். எப்பொழுதும் அதிக நேரம் தூங்கி எல்லோருக்கும் பிறகு கடைசியாக எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவள் அந்தப் பெண் . வீட்டில் எல்லோருக்கும் அவள் செல்லப் பெண். 
அவள் வெளியில் இருக்கிறாள் என்று நினைத்து கூவி அழைக்கிறாள் தாய். பதில் இல்லை. தேடிப் பார்க்கிறாள். அவளைக் காணவில்லை.
       நெடுநேரமாகியும் அவள் வரவில்லை. தாய்க்கு கவலை அதிகமானது. வயதுப்பெண். தனியாக வெளியில் அதிக தூரம் போய் பழக்கம் இல்லாதவள்.  அதிக நேரம் தாயை விட்டு பிரிந்து  இருந்தவளுமில்லை.
 
           தாய்க்கு அடுத்தபடியாக அந்த பெண்ணை நன்கு அறிந்தவள் செவிலித்தாய்பல நேரங்களில் அந்த பெண் செவிலித்தாயுடன் அதிக  நேரத்தை கழிப்பதுண்டு.
 
        வந்த செவிலித்தாயிடம் கேட்கிறாள் எங்கே அவள் என்று. செவிலித்தாய்க்கும் தெரியவில்லை என்று அறிந்து அதிர்ச்சி  அடைகிறாள். இப்பொழுது தாயின் முகத்தில் சோகம் படர்ந்து விட்டது. முகம் வாடிவிட்டது.  அழாத குறைதான்

என் மகள் எங்கே போயிருப்பாள்  என்று திரும்பத் திரும்ப கேட்டு புலம்பிக்கொண்டிருந்த  தாய்க்கு பதில் கூறுகிறாள் செவிலித்தாய்.

           கடுமையான வெயிலடிக்கும் பாலைவனம். நண்பகல் நேரம். நல்ல கோடைக்காலம். அனல் பறக்கும் நீண்ட  நிலப்பரப்பில் எங்காவது குடிக்க நீர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில்  இரண்டு மான்கள் அலைகின்றன .

கோடை வெயில் காரணமாக எல்லா உயிர்களுக்கும் நீர்  அதிகம் தேவைப்படும்.
வெயிலில் அலைவதால் கூடுதலான நீர் தேவைப்படுகிறது. நீரைத்தேடி  ஓடிக்களைத்து  சோர்வால் பெண்மான் விழுந்து விடுமோ என்று ஆதங்கத்துடன் பார்க்கிறது ஆண்  மான்.
       பல நேரங்களில் கானல்நீர் கண்டு ஓடிக்களைத்து ஏமாந்து சோர்வு மிகுந்த நேரத்தில் ஒரு சுனையை பார்கிறது ஆண் மான். அந்த சுனை மிகச்சிறியது. .அதில் இருக்கும் நீர் மிகக் குறைவு. இரன்டு மான்களுக்கும் இருக்கும் தாகத்திற்கு அந்த நீர் நிச்சயமாக போதாது என்று ஆண் மான் உணர்கிறது.

           இரன்டு மான்களும் சுனையின் அருகில் வந்து நின்றன. பெண் மான் ஆண் மானை பார்த்தது. ஆண் மான் சுனை நீரில் வாயை  வைத்தது. பெண் மானும் சுனை நீரில் வாயை வைத்து நீரை குடிக்கத் தொடங்கியது.  ஆனால் ஆண்   மான் நீரில் வாயை வைத்ததே  தவிர  நீரைக் குடிக்கவில்லை. குடிப்பதுபோல் நடித்தது.  தாகமிகுதியாலும் சோர்வாலும் பெண்மானுக்கு எந்த நினைவும் இல்லை.
 
        தான்  நீர் குடிக்காவிட்டால் பெண்மான் நீர் குடிக்காது என்று ஆண் மானுக்குத்  தெரியும்அதனால் சுனையில் வாயை வைத்ததே தவிர உண்மையில் நீரைக்  குடிக்கவில்லை.  குடிப்பது போல் ஆண் மான் நடித்தது.
 
     பாலைவனத்தில் உள்ள அந்த ஆண்மானுக்கு பெண்மான்  மீது அவ்வளவு காதல். தன்னை வருத்திக்கொண்டு தன் இணையை காக்கும் பண்பு கொண்ட ஆண்மான் அது.
 
    அந்த வழியில்தான் உன் மகள் தனக்கு உரியவனுடன் போயிருக்கிறாள். இதுதான் செவிலித்தாய் கொடுத்த பதில். ஆண் மானுக்குள்ள அந்த பண்பு அந்த வழியில் செல்லும் உன் மகளின் காதலனுக்கும் நிச்சயமாக உண்டு. அவளை அவன் கண்  போல் வைத்து காப்பாற்றுவான். . ஆகையால் உன் கவலையை விடு. என்பது சொல்லாமல் சொன்ன செய்தி.

இப்பொழுது பாட்டை பார்ப்போம்


சுனை வாய்ச்சிறு நீரை எய்தாதென்றெண்ணி
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான் தன் 
கள்ளத்தினூச்சும் சுரமென்ப  காதலர்  தம் 
உள்ளம் படர்ந்த  நெறி.      
--- ஐந்திணை  ஐம்பது


இது போன்ற இனிமையான நயம் மிகுந் கவிதைகள் பலவற்றை  சங்க இலக்கியங்களில்  காணலாம்.
- மு. கோபாலகிருஷ்ணன்.