Showing posts with label நாசர். Show all posts
Showing posts with label நாசர். Show all posts

Tuesday, July 10, 2007

இமேஜை வென்ற கதாபாத்திரங்கள் - மாயன்

சமீபத்தில் வெளியான ஒரு ப்ரமாண்ட திரைப்படம், திரைத்துறை வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பெரிய தலைகளும் அவர்களது இமேஜும் தான். சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தும் புகைச்சலோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்தத் (தொடர் ?) கட்டுரையின் நோக்கம் சினிமாவில் தங்கள் இமேஜை மறைத்து அந்தக் கதாபாத்திரங்களாகவே நம் கண்முன்னே வலம் வந்தவர்களைப் பற்றியது அன்றி விவாதம் பண்ண அல்ல.

1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர்மகன்'. இதில் கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரோடு மாயனும் நடித்தது நம்மில் பலருக்குத் தெரியும். ஆமாங்க, படத்தில் வில்லனான 'மாயன்' நாசர் தான் இங்க நமக்கு ஹீரோ !

கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் இவர்கள் மூவரும் எவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அதற்காக மாயனும் சளைத்தவர் அல்ல. இவர்களுக்கும் மேல் தேவர்மகனில் மாயனின் ஆளுமை நிறைந்திருந்தது எனலாம். கமலும், சிவாஜியும் அவர்களாகவே தான் தோன்றினார்கள். அவர்களால் அவர்களது இமேஜை மறைக்க முடியவில்லை. ஆனால் மாயன் ...

கொத்து மீசையும், பொட்டிட்ட அகன்ற நெற்றியும், வெள்ளை உடுப்பும், உறுமும் குரலும் அப்படியே ஒரு கிராமத்துக் கோபக்காரராய் மாயன் இன்றும் நம் நினைவில் நிற்பவர்.

கீழே உள்ள youtube-ல் பஞ்சாயத்துக் காட்சியில் மாயனைக் காணுங்கள்.



சமீபத்தில் சலசலத்த திறமைமிக்கவர்களுள் ஒருவர் என்பது தான் இந்த நேரத்தில் நாசரைப் பற்றி சிந்திக்க வைத்தது.

நாம் என்ன தான் திட்டினாலும், விலக்கினாலும் சினிமாவைத் தவிர்க்க முடியாது தான் வாழ்கிறோம். நம்ம blogலேயே சிலர் அங்கலாய்த்திருந்தார்கள். ஒரு நான்கு பேர் சேர்ந்தால், என்ன தான் வேறு வேறு தலைப்புகளில் அரட்டை அடித்தாலும் கண்டிப்பாக சினிமாவைப் பற்றிய பேச்சு இருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது என் எண்ணம்.

காலத்தால் வெற்றி பெறுவது கதையின் கதாபாத்திரமே அன்றி, எட்டும் இமேஜோ, கொட்டும் கோடிகளோ அல்ல. இதை உணர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை சிருஷ்டிக்க, சிந்திப்பார்களா நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்!