நாம் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இதைப் பாருங்கள். தமிழ்நாட்டிலேயே பள்ளிக்கூடத்தில் தமிழுக்கு பதில் ஹிந்தி படித்திருக்க வேண்டும் என்கிறார் திருச்சியில் வளர்ந்த, தமிழ் படித்த தேசிகன்.
இதில் எனக்கு உடன்பாடில்லை. தேசிகன் கேட்கிறார்: சுஜாதாவையும் பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுத்த அப்பா தமிழை சொல்லிக் கொடுத்திருக்க மாட்டாரா என்று? தமிழ் தெரிந்திருக்காவிட்டால் எங்கேயிருந்து சுஜாதாவையும், பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுப்பது. ஆளை விடுடா சாமி என்று மலைக்கோட்டைக்கு நடையை கட்டியிருப்பார் அப்பா.
வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது ஹிந்தி தெரியாதிருப்பது கேவலமா, திருச்சியில் உட்கார்ந்துகொண்டு தமிழ் தெரியாமலிருப்பது கேவலமா? என் கல்லூரியில் ஒருவன் சீரங்கத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்காமலிருந்தான். அதை பெருமையாக வேறு சொல்லிக் கொள்வான். எத்தனை பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஒரு மொழியை சொல்லிக் கொடுக்க முடிகிறது. அது கட்டாயம், கடமை என்று எல்லாம் பட்டி மன்றத்தில் பேசலாம். நடைமுறையில் பத்தில் ஒருவராவது கற்றுத் தருகிறார்களா?
பள்ளியில் மும்மொழித்திட்டம் இல்லா நிலையில், தமிழ் கற்காவிட்டால், வீட்டில் தமிழ் கற்பது கடினம். அதானால் முன்னேறுவார்களா இல்லையா என்பது தேசிகன் சொல்வதுபோல விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். தமிழ் அழியும் என்று நான் வசனம் பேசவும் இல்லை. அந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தமிழ் கற்கமுடியாது என்பதே என் கருத்து. அதுவும் வெளியே தமிழ் கற்றால், பிரபந்தமும் படிப்பது கஷ்டம். குமுதம், விகடன் படிக்கலாம். ஆனால் நாராய், நாராய் செங்கால் நாராய் எல்லாம் தெரியாது.
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில்(comment) இடவும்.