Showing posts with label ISRO. Show all posts
Showing posts with label ISRO. Show all posts

Friday, November 14, 2008

சந்திராயன்-1 சாதனை!

சந்திராயன்-1








இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மற்றொரு மைல்கல் சந்திராயன்-1 சென்ற மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது நினைவிருக்கலாம். அதிலிருந்து நம் தேசிய கொடியின் வர்ணம் பூசப்பட்ட "Moon Impact Probe" எனப்படும் இயந்திரம் இந்திய நேரப்படி இன்று இரவு 8:31 மணியளவில் நிலவைத்தொட்டுள்ளது!!. இந்திய தேசத்தின் கொடியின் வர்ணம் நிலவில் கால் பதித்த பெருமையான நாள்!! இதுவரை அமெரிக்கா, சோவியத் ரஷ்யா மற்றும் ஜப்பான் தங்கள் நாட்டு தேசியக்கொடிகளை நிலவில் நிறுவியுள்ளன! அதில் நம் பாரத தேசத்தின் கொடியும் சேர்ந்துள்ளது எல்லோருக்கும் மிக்க பெருமையான நிகழ்வாகும்!!


இது குழந்தைகள் தினத்தன்று நிகழ்வது மேலும் சிறப்பு!! வருங்கால அப்துல் கலாம்களுக்கு இது மிக்க உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் என நான் நம்புகிறேன்.


மேலும் விபரங்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தினை காணவும்!


ஜீரோ-G:



டாம் ஹாங்ஸ் அப்போலோ-13 திரைப்படத்தில் விண்வெளியில் மிதந்ததை பார்த்து அதைப்போல அனுபவிக்க நம்மில் பலரும் ஆசைப்பட்டிருப்போம். சில காலம் வரை இதை அனுபவிக்க ஆகும் விலையால் $5100 டாலர் (25000 ரூபாய்) மக்கள் எண்ணிப்பார்க்க கூட முடியாமல் இருந்தது. சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய விலையே! இதையே அமெரிக்காவில் drugstore.com என்ற தளத்தில் குறைவான விலைக்கு அறிவித்துள்ளனர்! உங்களுடன் மேலும் 9 பேர் சேர்ந்து பயணம் செய்ய மொத்தமாக சுமார் $35,000 டாலர் (10 பேருக்கு $35000, ஒருவருக்கு $3500) செலவழிக்க தயாராக இருந்தால், இந்த தளத்தில் அதற்கான பயணத்தை நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக முன்பதிவு செய்யலாம்!!





இந்த பயணத்தில், போயிங் நிறுவனம் அமைத்துள்ள G-FORCE ONE விமானத்தின் மூலம் சுமார் 24 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் அடி உயரத்திற்கு அழைத்து சென்று புவியீர்ப்பு விசையின்றி ("weightless fall / Parabola Flight") விமானம் சுமார் 10 மைல் கீழே செல்லும் போது உள்ளே இருப்பவர்கள் மிதப்பார்கள்! ஒரு மிதவை சுமார் ஒரு நிமிடமே நீடிக்கும்! இதே போல பல முறை திரும்ப செய்வார்கள்.


என்ன அடுத்த விண்வெளி பயணத்திற்கு தயாரா? அப்படியானால், நீங்கள் முதலில் அடுத்த செய்தியையும் படித்துவிடுங்கள்..



சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர்!


உங்களுக்கு விண்வெளியிலுள்ள நாசாவின் ஆராய்ச்சி ஆய்வு மையத்திற்கு சென்று வர வாய்ப்பு கொடுத்தால் இந்த தகவலை படித்து விட்டு முடிவு செய்யுங்கள். நாசா ஆராய்ச்சியாளர்கள் சிறுநீர் சுத்திகரிப்பு எந்திரத்தின் ஆராய்ச்சி முடிவிகளை வெளியிட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட சிறுநீர் சுவையில் சாதரண நீர் போலவே உள்ளதாக தெரியவந்துள்ளது (சிறு Iodine சுவையை தவிர்த்து!!). இதன்படி, இன்று $250 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட சிறுநீர் சுத்திகரிப்பு எந்திரம் மற்ற உபகரணங்களுடன் சேர்த்து விண்வெளியில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப் படும் என நாசா அறிவித்துள்ளது!

நாசாவின் 124வது விண்கல பயணத்தில், இந்த முறை இரண்டு படுகையறைகள், இந்த நிலையத்தின் முதல் ப்ரிஜ், புதிய உடற்பயிற்சி உபகரணங்கள், மற்றும் புதிய கழிப்பறை ஆகியன எடுத்துச்செல்லபடும் என தெரிவித்துள்ளனர்!! சுமார் 6 - 10 பேர் மாதக்கணக்கில் விண்வெளியிலுள்ள நாசாவின் ஆராய்ச்சி ஆய்வு மையத்தில் பணியாற்றுகின்றனர்.

2010 வது ஆண்டுக்குள் இன்னும் 10 முறை இது போல விண்கல பயணம் பல ஆராய்ச்சிகளை விண்ணில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்கு எடுத்துச் செல்லும்! அதன் பிறகு இந்த திட்டத்தை கைவிடப்போவதாக நாசா அறிவித்துள்ளது.

என்ன பயணத்திற்கு தயாரா?