Thursday, February 24, 2011

பஹாமாஸ் பயணம்

முரளி: "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த கதை தெரியுமா?
தெரியாதா, எனக்கும் தெரியாது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சமீபத்தில் க்ரூஸ் அதாங்க சொகுசு சுற்றுலா (தப்பா படிச்சுட்டு "என்னாது, சொகுசு சுந்தரியா"ன்னு கேக்கக் கூடாது) பஹாமாஸ் போய் வந்த கதை நாளைக்கு வெளியிடப் போறேன்".

நாகு: "நாளைக்கா!"

முரளி: "உடனே நாளைக்குன்னா நாளைக்கா, ம்ம்ம்ம் நாளான்னிக்கு, ஹும்ம்ம் அதுக்கு மக்கா நாள்ன்னு வெச்சுக்கங்க எழுதி ஒரு ரெண்டு பதிவு, போட்டு வாங்கிடலாம்னு இருக்கேன். உடனே ஊருக்கு போகனும், ஆஃபீஸ்ல ஆணி புடுங்கணும், தமிழ் சங்க விழாவில தட்டி தட்டி கைவலிக்குது, விசிலடிச்சு வாய் வலிக்குது, சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு வலிக்குதுன்னு சொல்லாம, மருவாதையா படிங்க, ரசிங்க, பின்னூட்டமிடுங்க சரியா".

-முரளி இராமச்சந்திரன்.

Wednesday, February 23, 2011

தமிழ் தாத்தா உ .வே. சா. - வறுமையிலும் செம்மை (பகுதி 2)

(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

மகன் சாமிநாதய்யரின்  வற்புறுத்தல் காரணமாக தந்தையார் தன் மகனை தமிழ் படிக்க அனுமதித்தாரே  தவிர அவருக்கும் அதில் பூரண சம்மதம் இல்லை. ஆங்கில படிப்பு படிக்க வைத்து அரசாங்க உத்தியோகத்துக்கு மகனை அனுப்பினால் குடும்பம் வயிறாரச் சாப்பிடலாம் என்று எண்ணினார். அந்த நிலையில்தான் தன் மகனை அரை மனதோடு தமிழ் படிக்க அனுமதித்தார்.

ஐயரின் தந்தையார் வேங்கடசுப்பையர் பலருடைய உதவியில் வாழ்ந்து கொண்டிருந்தார். நிலையான வருமானம் இல்லை. குடும்பத்துக் கடனை அடைக்க என்றோ தானமாக வந்த நிலத்தை ஈடு வைத்துத்தான் அவருடைய சீமந்த கல்யாணம் நடந்தது. அந்த கடன் ரூபாய் 500 ரூபாயை வட்டியுடன் சேர்த்து 730 ரூபாயாக பல வருடங்களுக்கு பிறகு சாமிநாதய்யர்தான் அடைத்தார். அந்த அளவுக்கு கைக்கும் வாய்க்குமாகத்தான் அவருடைய பெற்றோர்கள் வாழ்ந்து  வந்தார்கள்.

ஆகையால் ஆர்வம் காரணமாக தமிழ்க்கல்வி தொடங்கினாலும் அதற்காக அதிக செலவு செய்ய வழியில்லை . ஐயருடைய தந்தையாருக்கு நன்கு தெரிந்த சடகோபய்யங்கார் தமிழ் கற்பிக்க முன்வந்தார். அரியலூர் சடகோபய்யங்கார் நல்ல தமிழறிஞர். பல நாடகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய குடும்பத்தில் பல முன்னோர்களும் தமிழையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். அவர் எழுதிய சிவராத்திரி மகாத்மியம் என்ற நாடகம் அந்த நாட்களில் பல முறை மேடை ஏற்றப்பட்டது. . வைணவரனாலும் சமய சமரச நோக்கம் கொண்டவர்.

சாமிநாதய்யர் சில வருடங்கள் சடகோப ஐயங்காரிடம் தமிழ் கற்றார். ஐயரின் ஆர்வத்தையும் எளிதில் படித்தறியும் ஞானத்தையும் கண்டு வியந்து அவரை மேலும் பெரிய தமிழறிஞர்களிடம் சென்று தமிழ் கற்க கூறினார். அவர்.  அவருடைய முயற்சியில் அன்று பிரபலமாக இருந்த தமிழ் அறிஞரான திரிசரபுர மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்பது என்பது அன்றைய நிலையில் ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றதற்கு சமம் என்று கூறுவார்கள் அந்த பெருமை  சாமிநாதய்யருக்கு கிடைத்தது. ஐயர் பிள்ளையவர்களுடன்  தங்கி இருந்து பாடம் கற்க வேண்டும் என்று ஏற்பாடாகி இருந்தது.
    
பிள்ளையவர்கள் அடிக்கடி திருவாவடுதுறை ஆதினத்து மடங்களுக்கு செல்வார். சென்ற இடத்தில் பல நாள் தங்குவார் சாமிநாதய்யரும் அவருடன் சென்று தங்கி பாடம் கேட்பார்.

எல்லா பாடங்களும் சுவடிகளைக்கொண்டுதான். பிள்ளை அவர்களுக்கு பல புராணங்கள் மனப்பாடமாகத் தெரியும், அவரே இருபது தலபுராணங்களை இயற்றியிருக்கிறார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வறுமையில் வாழ்ந்தவர்தான்.  சைவமடங்கள் கொடுத்த பொருளுதவியைக் கொண்டுதான் அவர் வாழ்ந்தார்.

பல மாதங்கள் பிள்ளை மாயவரத்தில் தங்கி இருந்தார். சாமிநாதய்யரும் அவரோடு தங்கி தமிழ் படித்து வந்தார். அன்றைய குல ஆச்சாரப்படிசாமிநாதய்யருக்கு பிராமணர் ஒருவர் வீட்டிலிருந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாத்துரை என்ற அந்த பிராமணருக்கு மடத்திலிருந்து அரிசி முதலிய பொருட்களை கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திலோ மடத்திலிருந்து அரிசி மற்ற மளிகைப் பொருட்கள் அப்பாத்துரை ஐயர் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. 

சில மாதங்களுக்குப் பிறகு ஐயர் பிள்ளையவர்களுடன் வேறு ஊருக்கு புறப்படவேன்டியதாயிற்று. தான் உணவு சாப்பிட்ட வீட்டிற்கு எந்த கைம்மாறும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியது. அப்பாத்துரை ஐயரை நேரில் பார்த்து மடம் கொடுக்க ஒப்புக்கொண்ட அரிசி மற்ற மளிகைப்பொருளை பெற்றுத் தருவது பற்றி பேசினார். சாமிநாதய்யர்  தான் ஊருக்கு செல்வதற்கு முன் எதுவும் நடக்கப்போவதில்லை என்று உணர்ந்தார்.அந்த நாட்களில் உள்ளாடை அணிவதற்காக ஆண்கள் இடையைச் சுற்றி அணியும் ஒரு கயிறு.  பிராமணசிறுவர்களுக்கு உபநயன நாளில் வெள்ளியால் செய்த இந்த கயிற்றை மாமன் சீராகக் கொடுப்பது வழக்கம். தன் இடையில் கட்டியிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை கழற்றி அப்பாத்துரை ஐயரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு தனக்கு சில மாதம் உணவு அளித்ததற்கு மாறாக அதை விற்று பணத்தை எடுத்தக் கொள்ளும்படி வேண்டினார்.

ஆனால் அப்பாத்துரை ஐயர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். "எனக்கு அந்த அளவுக்கு பணம் முக்கியம் இல்லை. நீ ஊருக்குப் போய் உன் தமிழ்ப் படிப்பை தொடர்ந்து படித்து முன்னேறினால் போதும்", என்று பெரிய மனதோடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். பிற்காலத்தில் அப்பாத்துரை ஐயர் குடும்பத்திற்கு ஐயர் சில உதவிகளை நன்றியுணர்வோடு செய்தார்.

கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் பொறுப்பை ஏற்ற பிறகு நேரம் கிடைத்தபோதெல்லாம் சுவடிகளை தேடி பல ஊர்களுக்கு போனார். சுவடி தேடி அவர் செய்த பயணத்தில் அவருடைய கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம்.

பழங்காலத்தில்  புலவர்கள் வாழ்ந்த சிற்றூர்கள், ஜமீன்தார்கள் இல்லங்கள், இப்படியாக பல ஊர்களுக்கு போனார். மருத்துவம் செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள், புலவர்களின் சந்ததியினர், இப்படி பலதரப்பட்ட மக்களை சந்தித்தார். பலர் செய்த உதவியைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான சுவடிகளைச்  சேகரித்தார்.

மருத்துவம், சோதிடம் தொடர்பு உடைய நூல்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த சுவடிகள் அவருக்கு கிடைத்தன. தலபுராணம், சமயம் சார்ந்த பல நூல்கள், இலக்கியங்கள் ஆகியவை அதிகமாகக் கிடைத்தன. சீவகசிந்தாமணி என்ற சமண சமய இலக்கியத்தை இருபது இடங்களிலிருந்து கிடைத்த பல பிரதிகளை ஒப்பிட்டு அச்சில் ஏற்றி புத்தகமாக வெளியிட்டார்.

அந்த நாட்களில் பெரிய புத்தகத்தை அச்சிட்டு வெளியிட தகுந்த அச்சகங்கள் சென்னையில்தான் இருந்தன.ஆகையால் புத்தகம் அச்சாகும் வேலையை கவனிக்கவும் புருப்  படித்து திருத்தி கொடுக்கவும் ஐயர் அடிக்கடி கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டியதாயிற்று. சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட பல தமிழன்பர்களின் உதவியை நாடினார். சில பேரிடமிருந்து மட்டுமே உதவி கிடைத்தது. ஒரு கட்டத்தில் அச்சாகி பிரஸ்ஸில் இருந்த புத்தகத்தை எடுக்கவேண்டியிருந்தது. அச்சகத்துக்கு அச்சுக்கூலி கொடுக்க சாமிநாத அய்யரிடம் பணம் இல்லை. இதுபோன்ற நேரங்களில் அவர் கடன் வாங்கி சமாளிப்பது வழக்கம். ஏற்கனவே கடன் சுமை அதிகமாகிவிட்டது.. அச்சுக்கூலியைக்கொடுத்து புத்தகத்தை எடுத்து வெளியிட அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆழ்ந்த யோசனைக்கு பிறகு தனக்கு  பாண்டித்துரை தேவர் கௌரவிக்கும் வகையில் போர்த்திய பொன்னாடை பற்றிய நினைவு வந்தது.

விலை உயர்ந்த பொன்னாடை அது. அந்த பொன்னாடையை எடுத்துக்கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த சுப்ரமணிய தேசிகரிடம் காட்டி இது என்ன விலைக்கு போகும் என்று கேட்டார். அதிர்ச்சி அடைந்த தேசிகர் ஏன் இதை விற்கப் போகிறீர்களா?இது தேவர் போர்த்திய பொன்னாடை அல்லவா என்று கேட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை அச்சகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று ஐயர் கூறினார். நீங்கள் இதை விற்ற செய்தி தேவருக்கு தெரிந்தால் அவர் மிகுந்த வேதனை படுவார்  என்று கூறினார் ஆதீனகர்த்தா. அந்த பொன்னாடையை விற்கவிடாமல் தடுத்து ஆதீனகர்த்தா தானே வாங்கி வைத்துக் கொண்டார். தற்காலிகமாக அய்யருக்கு பண உதவி செய்து நூல் வெளியிட ஏற்பாடு  செய்தார்.

இப்படி பல சோதனைகளுக்குமிடையே தான் அய்யர் தமிழ் நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்த பழந்தமிழ் நூல்களை அச்சில் ஏற்றி புத்தகமாக வெளிக்கொணர்ந்தார்,. .மிகப்பிற்காலத்தில்தான் சாமிநாதய்யருடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்.

வெளிநாட்டில் வாழ்ந்த சில தமிழறிஞர்கள் அய்யரின் அரிய பணியை பாராட்டினார்கள். ஜூலியஸ் வின்சோன் என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஐயர்  பதிப்பித்த நூல்களைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு நீண்ட பாராட்டு கடிதம் எழுதினார். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ஜி..யு. போப் அவர்களும் அய்யரைத் தொடர்பு கொண்டு பாராட்டு கடிதம் எழுதினார்.

சாமிநாதய்யருடைய பணியின் சிறப்பையும் அந்த பணியை நிறைவேற்றுவதில் அவர் சந்தித்த சோதனைகளையும் பற்றி பாரதியார் நன்கு அறிந்திருந்தார். அய்யருடைய தமிழ்ப்பணியின் பெருமையை வெள்ளையர் அரசாங்கம் உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டமும் மற்ற சில விருதுகளும் வழங்கியது. ஆனால் அவர் எப்பொழுதும் நிதி நெருக்கடியில் இருந்ததையும் பாரதியார் அறிந்திருந்தார். சாமிநாதய்யருடைய பெருமையை பாரதியார் இப்படி பாடினார்.

சாமிநாதய்யருடைய புகழ் வளர்ந்ததில் அதிசயம் ஏதும் இல்லை. சூரியனுக்கு ஒளிஇருப்பது அதன் இயற்கை. தேவர்கள் அமரத்வம் பெற்றது இயல்பானதுதான், இதில் அதிசயப்பட எதுவும்.இல்லை. அதுபோலவே சாமிநாதய்யருக்கு புகழ் வளர்வதும் இயல்பானதுதான் என்று பாரதியார் பாடினார். தமிழறியாத அன்னியரான வெள்ளையரே இப்படி ஐயரை புகழ்ந்தார்கள் என்றால் சங்கம் வைத்து தமிழ்  வளர்த்த பாண்டிய மன்னர் காலத்தில் ஐயர் வாழ்ந்திருந்தால் அவருடைய பெருமை எப்படி இருந்திருக்கும் என்று பாரதி கேட்கிறார்.

மேலும் ஐயருக்கு ஆறுதல் கூறுவதுபோல அடுத்த கவிதையில் கூறுகிறார். பணம் இல்லையே, பலவகை சுகங்களை அனுபவிக்கும் இனிய வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை வேண்டாம் ஐயரே. உங்களுக்கு ஒரு பெருமை உண்டு. பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் கொடுத்த தமிழ் மொழி உள்ளவரை புலவர்கள் வாய் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும். உங்களுக்கு இறப்பு என்பதே இல்லை.என்று பாரதியார் பாடுகிறார். இப்பொழுது பாரதியார் பாட்டை பார்ப்போம்.

 நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே.

                                                                            - மு.கோபாலகிருஷ்ணன்
(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

Monday, February 21, 2011

நாளின் நிறம்



பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.

கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-

ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-

பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.

--கவிநயா

பி.கு. நாகு ரொம்ப வருத்தப்பட்டாரேன்னு, இப்போதான் எழுதிய கவிதை இங்கே... சுடச் சுட... :)

Sunday, February 20, 2011

குற்றுயிரும் குலையுயிருமாய்...


நேற்று சும்மா முயற்சி செய்து பார்க்கலாம் என்று நம் வலைப்பதிவில் வலது பக்கம் 'அந்த நாள் ஞாபகம்' என்று ஒரு பகுதியைச் சேர்த்தேன்.  அந்தப் பகுதியில் நம் பதிவுகளில் இருந்து சீட்டு குலுக்கல் முறையில் (randomக்கு தமிழில் என்ன) ஒரு ஐந்து பதிவுகளைப் பொறுக்கி காண்பிக்கப்படும். ஏன் என் பதிவு தெரியவில்லை என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். அந்த ராண்டம் பகவானிடம் முறையிடுங்கள். பல பழைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹூம்... ஆஹா ஓஹோ என்று இருந்த பதிவு இப்படி கேட்பாரற்று கிடக்கிறது என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்ய? எழுதிக்கொண்டிருந்த ஒரு சிலரும் தனிக்கட்சி பிடித்துப் போய்விட்டார்கள். எழுதுங்கள், எழுதுங்கள் என்று நான் தொந்திரவு செய்வதால் நீர்வைமகள் பார்க்குமிடங்களில் எல்லாம் ஓடி ஒளிகிறார்.  ஏதோ அந்த கோபாலகிருஷ்ணர் தயவிலும், மீனா, முரளி தயவிலும் கொஞ்சம் உயிர் காட்டுகிறது. பரதேசியை வேண்டுமென்றே விட்டிருக்கிறேன். என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் :-)

படிப்பவர்களும் தங்களுக்கு முடிந்த மொழிகளில் - ஆங்கிலமோ, உருதுவோ, அரபியோ, ஹிந்தியோ - பின்னூட்டம் இட்டால் - எழுதுபவர்களுக்கும் எழுதுபவர்களைத் தேடும் எனக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும். அதுவும் மு.கோ.விடம் தென்னிந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் கோபால் பல்பொடிக்கு அடுத்ததாக பாவிப்பது நம் பதிவுத்தளம்தான் என்று ஜல்லியடித்து வைத்திருக்கிறேன். அனலிடிக்ஸ் கிராபிக்ஸ் காட்டு என்று அவர் கேட்காமலிருக்கும்வரை அந்த பஜனை நடக்கும். ஆனாலும் மனிதர் கலக்குகிறார். தமிழ் இசை, இலக்கிய உலகின் நடமாடும் சைக்ளோபிடியாவாக இருக்கிறார் அவர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் இணையத்தில் இன்னும் பிரபலமாக இருக்கிறது. சில புண்ணியவான்கள் அந்த புத்தகத்தை இந்த காலக் கருவிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். உங்கள் ஆப்பிள் கருவிகளில் நிறுவிக் கொள்ள இந்த தளத்தில் பாருங்கள். ஆன்ராய்ட் கைப்பேசியில் வேண்டுமானால் இக்கட சூடு. படங்களும் உண்டா என்று நொட்டைக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. படங்கள் புத்தக வடிவிலேயே இல்லை. வேண்டுமானால் திருச்சி நெல்லித் தோப்பில் பாருங்கள். யாராவது கல்கியில் வந்த தொடரை பைண்ட் பண்ணி வைத்திருக்கலாம். முக்கியமான விஷயம். இந்தக் கதை ஆரம்பிப்பது நான் வளர்ந்த திருமுனைப்பாடி நாட்டினில். அதுவும் ஊழல் ஓங்கி வளர்ந்த வீராண ஏரிக்கரையில் :-)

ஆப்பிள் கருவிகளில் திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கிடைக்கிறது. நம் பதிவுகள் போல படிக்கத்தான் ஆளில்லை. :-)

Thursday, February 10, 2011

தமிழ்த்தாத்தா உ. வே. சா.

தமிழ்த்தாத்தா உ. வே. சா.

- மு.கோபாலகிருஷ்ணன்

தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுடைய பிறந்தநாள் பிப்ரவரி மாதம் 19ம் தேதி வருகிறது. 155 ஆண்டுகளுக்கு முன் 1855ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார் . குடும்பத்தில் எல்லோருக்கும் சங்கீதம்தான் பிழைப்பாக இருந்தது.

ஐயர் தன்னுடைய சிறிய தகப்பனாரிடம் ஹரிகதா காலட்சேபம் செய்ய பயிற்சி பெற்றார் .ஆனால் ஐயருக்கு தமிழ் படிக்க வேண்டுமென்று ஆவல். குடும்பத்தில் உள்ளவர்கள் அவருக்கு ஆங்கில கல்வி கொடுத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பினார்கள். வேறு சிலர் சங்கீதத்தில் ஈடுபடும்படி அவருக்கு அறிவுரை கூறினார்கள். எல்லோருடைய விருப்பத்துக்கு மாறாக பிடிவாதமாக தமிழ் கற்பதுதான் தன் நோக்கம் என்று கூறி தந்தையாருடைய சம்மதத்தை பெற்று தமிழ் கல்வியில் ஈடுபட்டார்.

ஐயர் அப்படி பிடிவாதமாக தமிழ்க்கல்வி கற்க முனைந்தது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய பேறாக அமைந்தது என்பதை கணக்கிட்டு சொல்ல முடியாது. அவர் கல்வி கற்கத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்திய காலத்தில் தமிழ்க்கல்வி கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் ஏட்டுச்சுவடிகள் மூலம்தான் கற்பிக்கப்பட்டது. அந்த சுவடி பற்றியும் சுவடிக்கல்வி முறை பற்றியும் தெரிந்தால்தான் சாமிநாதய்யரின் தமிழ்ப்பணியின் பெருமையை புரிந்து கொள்ள முடியும். கணினி மூலமும் அச்சிடப்பட்ட புத்தகத்தின் துணையோடும் கல்வி பெறும் இந்நாளில் அன்றைய நிலை பற்றி கற்பனை கூடச்செய்ய முடியாது. அச்சுக் கலை அப்பொழுதுதான் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அன்று அச்சகங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மிஷனரிகள் வசம்தான் இருந்தன அச்சாகும் நூல்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அரசாங்கம் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆகையால் அன்றைய நிலையில் புத்தகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது.

பள்ளிக்கல்விக்கு இன்று உள்ளதுபோன்று நோட்டு புத்தகங்கள் கிடையாது. செய்யுள் வாய்ப்பாடு எல்லாம் அன்று மனப்பாடம்தான். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஒரு இடத்தில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுதிப் பழக வேண்டும். ஒரு சில மாத பயிற்சிக்குப் பிறகு சுவடி எழுதப் பயிற்சி கொடுக்கப்படும். .சிலேட்டில் எழுதும் பழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் வந்தது.

எழுதப் பயன்படுத்தும் சுவடியை பனை ஓலையிலிருந்து தயாரிப்பார்கள். அந்த பனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஒரு தனிக்கலை. சுவடியில் எழுதுவதற்கு நீண்ட நாள் பயிற்சி வேண்டும். எழுத்தாணி என்ற கருவியைக்கொண்டு சுவடிகளில் எழுதுவார்கள். எழுத்தாணியால் எழுதும்போது மேலாக எழுதினால் எழுத்து தெரியாது. அழுத்தி எழுதினால் சுவடி ஒடிந்துவிடும். எங்காவது ஒரு மூலையில் ஒடிந்தாலும் அந்த சுவடியை தூக்கி எறியவேண்டியதுதான். ஒரு சுவடியில் பத்து பதினைந்து பாடல்களை கூட எழுதுவார்கள். நிதானமாகவும், அதிக அழுத்தம் கொடுக்காமலும் எழுத வேண்டும். எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில் கை வலி எடுக்க ஆரம்பிக்கும்.

அப்படி வலியை அனுபவித்த மாணவன் ஒருவன் எரிச்சலில் பாடிய பழைய பாட்டு ஒன்று உண்டு.

ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா
வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா

என்பதுதான் அந்த மாணவனின் புலம்பல் பாட்டு.

நாம் இன்று எழுதும்போது எழுத்துக்கு புள்ளி வைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுகிறோம். சுவடியில் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால் புள்ளி வைத்தால் ஓலை ஒடிந்து போய்விடும். ஆகையால் புள்ளி எங்கே தேவை என்பதை படிப்பவர்கள் தெரிந்து உணர்ந்து படிக்கவேண்டும். உதாரணமாக கம்பம் ,ரம்பம் என்ற சொற்களை கமபம ,ரமபம என்றுதான் சுவடியில் எழுதுவார்கள்.

படிப்பவர்கள் சொல் அமைந்திருக்கும் நிலைக்கு தக்கபடி படித்து பொருள் கொள்ள வேண்டும். பழைய உரைநடை ஆசிரியர்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவார்கள். வாக்கியங்கள் நீண்டதாக இருக்கும். இந்த ஓலைச் சுவடிகளில்தான் காலம் காலமாக எல்லா பழைய இலக்கியங்களையும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் .

கல்வியறிவு உள்ளவர்கள் எல்லோரும் சுவடியில் எழுதுவதில்லை. சுவடியில் எழுதியவர்கள் எல்லோரும் நிரம்ப படித்தவர்களும் இல்லை. ஓரளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் சுவடி எழுதுவதை தொழிலாகக் கூட மேற்கொள்ளுவார்கள். தேவையான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் சுவடி எழுதியதால் தான் பலபிழைகள் ஏற்பட்டுவிட்டன. இப்படித்தான் பழைய இலக்கியங்களில் பல பாடல்களுக்கு பாடபேதம் நிறைய ஏற்பட்டது. புலவர் எழுதியதற்கு மாறான சொல் உள்ள பாடல்களை பாடபேதம் உள்ளதாக குறிப்பிடுவார்கள்.

இப்படி எழுதிய சுவடிகளை பூச்சி அரிக்காமல் காப்பாற்றுவது மிகக் கடுமையான வேலை. வசம்பு என்ற நாட்டு மருந்து பொருளை சுட்டு அதன் கரியை மஞ்சள் சாற்றில் கலந்து வேறு சில பச்சிலை சாற்றையும் கலந்து ஒரு குழம்பு தயாரிப்பார்கள். அந்த குழம்பை சுவடிகளில் தடவி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யாவிட்டால் சுவடியை பூச்சி அரித்து விடும்.

அடிக்கடி பழைய சுவடிகளில் உள்ள இலக்கியங்களை புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு பழைய சுவடிகளை அழித்துவிடுவார்கள். இந்த பழைய சுவடிகளை ஆற்று நீரில் போட்டால் நதியில் நீர் வளம்பெருகும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆடிப் பெருக்கு காலத்தில் சுவடிகளை வெள்ளத்தில் போட்டு தமிழர்கள் பல பழைய இலக்கியங்களை அழித்திருக்கிறார்கள்.

பல சைவ மடங்களிலும் புலவர்களுடைய சந்ததியினர் வீடுகளிலும் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய கிடைத்தன சைவ மடங்களில் இருந்த ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ள பல தம்பிரான்கள் உள்பட பலருக்கு அங்கே உள்ள ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கம். என்ன அவை என்ன நூல் என்பது தெரியாது. .இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை இருந்த உண்மை நிலை. மாற்றுச் சமய நூல்களை படிக்கக் கூடாது என்று சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்ததால் பல சமய நூல்கள் கவனிப்பாரற்று அழிந்து போயின. அப்படி அழிந்த நூல்களில் பெருமபாலனவை சமண, பௌத்த மத நூல்களும் பல சமயச் சார்பற்ற நூல்களும்தான். உதராணமாக எந்த சமயத்தைப் பற்றியும் பேசாமல் இயற்கை வளத்தைப் பாடிய முத்தொள்ளாயிரம் என்ற நூலின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சங்க காலத்திலும் அதற்கு பிறகும் சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சுவடியில் இலக்கியங்களை எழுதுவதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். அந்த சுவடிகளை பணமோ பொருளோ கொடுத்து தனவந்தர்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் எழுதியதெல்லாம் பெரும்பாலும் நீதி நெறிமுறைகளை போதிக்கும் அறநூல்கள்தான்.

தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அல்லது நீத்தார் நினைவு நாட்களில் இந்த சுவடிகளை தனவந்தர்கள் தானமாகக் கொடுப்பது வழக்கம். இதை கிரந்த தானம் என்று கூறுவார்கள். .சாஸ்திரதானம் என்றும் சொல்வதுண்டு. கிரந்த தானம் என்பது பழங்காலத்தில் சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. .பிறகு சைவ சமயத்தாரும் இந்த வழக்கத்தை மேற்கொண்டனர். நீத்தார் நினைவு நாட்களில் நிலையாமையைப் பற்றி
குறிப்பிடும் தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு சிறிய புத்தகமாக விநியோகம் செய்யும் பழக்கம் பலவிடங்களில் உண்டு. இலங்கையில் வாழும் சைவ வெள்ளாளர்கள் மத்தியில் கிரந்த தானம் செய்யும் வழக்கம் பெரிய அளவில் இன்றும் உண்டு.

சுவடி எழுதியவர்கள் எத்தனை தவறு செய்திருக்கிறார் எத்தனை சொற்களை விட்டிருக்கிறார் என்று தெரியாது. பல புலவர்கள் எழுதிய சொற்களை திரித்தும், தவறாகவும் எழுதப்பட்டது. பல நூற்றுக்கணக்கான நூல்கள் அழிந்துபோய்விட்டன. தப்பித் தவறி சைவமடங்களில் அகப்பட்டுக்கொண்ட மாற்றுச் சமய நூல்கள் கவனிப்பாரின்றி அழிந்து போயின. மிகச் சிறிய அளவிலான சுவடிகள் மட்டுமே காப்பாற்றப்பட்டன. அந்த நாட்களில் யாரிடமாவது நூல் ஒன்றின் சுவடிப்பிரதி இருப்பதாக அறிந்தால் பலர் அவரை நாடி வந்து கையால் எழுதி பிரதி எடுத்துச் செல்வார்கள.

வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி என்ற நூல் ஓலைச் சுவடியில் இருந்தது. அந்த சுவடிப்பதிப்பை பெற பெர்சிவல் என்ற கிறிஸ்தவப் பாதிரியார் 19ம் நூற்றாண்டில் ரூபாய் 150 கொடுத்து வாங்கினார். அந்த நாட்களில் ரூபாய் 150 எவ்வளவு பெரிய தொகை என்பதை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது. அந்த காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை நிலம் ஒரு ஏக்கர் விலை ரூபாய் 500 ஆக இருந்தது. 150 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பதை அனுமானம் செய்து கொள்ளலாம்.

சுவடியை எழுதவதும் எழுதிய சுவடியை காப்பாற்றுவதும் கடினமாக இருந்ததால்தான். கல்வி என்பது அந்த நாட்களில் மனப்பாடம் செய்யும் முறையைச் சார்ந்து இருந்தது. இந்த சூழலில்தான் தமிழுக்கு பணி செய்வதற்காக சாமிநாதய்யர் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அழிந்து கொண்டிருந்த சுவடிகளை காப்பாற்றி அவற்றை புத்தக வடிவில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். சுவடிகளை தேடி அவர் தமிழ்நாடு முழுவதும். பயணம் மேற்கொண்டார். ரயிலில் ,கட்டைவண்டியில் ,வண்டி செல்ல சாலை வசதியில்லாத இடங்களில் கால் வலிக்க நடந்து சென்று ஊர் ஊராக போய் கண்ணில் பட்டசுவடிகளை எல்லாம் கொண்டு வந்தார். பலர் சுவடிகளை கொடுத்து உதவினார்கள். .பலர் கொடுக்க மறுத்துவிட்டனர். இப்படி அரும்பாடு பட்டுஅவர் சேமித்த சுவடிகளிலிருந்து பல பழைய நூல்களை புத்தக வடிவில் பதிப்பித்தார்.

ஐயர் சேமித்த பல ஆயிரம் சுவடிகள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கிறது. இன்று அரசாங்க உதவியோடு இயங்கும் உ. வே. சாமிநாதய்யர் நூல் நிலையம் சென்னை அடையாறில் செயல்படுகிறது. பழைய நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில்.இன்றும் அந்த நூல்நிலையம் தொடர்ந்து செயல்படுகிறது. .

Thursday, February 03, 2011

மீனாவுடன் மிக்சர் 23 - {ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம்}

முதல் பாகம்: விளையாட சொப்பு வேணும்னா வாங்கித்தரேன், என் கையை திருப்பி கொடு!


கல்யாணம் ஆகி சரியா முப்பதாவது நாள் ஒரு புது மணத்தம்பதி அவங்க வீட்டு தினமலர் காலெண்டர்ல தேதியை கிழிச்சு முடிச்சு திரும்பரத்துக்குள்ள ஊரில் சுத்தி உள்ள மக்கள் எல்லாரும் அவங்க வீட்டு வாசக்கதவை தட்டி 'என்ன, ஏதாவது விசேஷம் உண்டா?' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன்? இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது! எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். பகல் போய் இரவு வரா மாதிரி பலருக்கும் இது ஒரு 'இயல்பான' கேள்வியாப் போச்சு நம்ம ஊருல.

இதே மாதிரி இன்னொரு 'இயல்பான' கேள்வியை அமெரிக்காவில் அடிக்கடி நான் கேட்டிருக்கேன். சேர்ந்தா மாதிரி நாலு தடவை உங்களை ஒரு சக இந்தியர் கடைத்தெருவுல பார்த்தார்னா அடுத்த முறை பல நாள் பழகின உணர்வோடு கிட்ட வந்து கை குலுக்கி 'ஹலோ, எப்படி இருக்கீங்க? கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு? பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா?' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா? எப்போ?' ன்னு படு ஸ்ரத்தையாக விசாரிப்பார். இந்த கேள்விக்கான உங்களோட பதில் அவரோட வாழ்க்கையில் எந்த ஒரு வளமும் கொடுக்காதுன்னு தெரிஞ்சாலும் நிச்சயம் கேட்பார். இரவு போய் பகல் மாதிரி இதுவும் இன்னொரு 'இயல்பான' கேள்வி இங்க.

'நீங்க அமெரிக்க பிரஜையா' ங்கற கேள்விக்கு கடந்த சில வருஷங்களா பல முறை நான் 'இல்லை'ன்னு பதில் சொல்லி சொல்லி ஏதோ பரீட்சையில் பெயிலான உணர்வு எனக்கு. இனியொரு முறை இந்த அவமானம் பட என்னால முடியாதுன்னு என் கணவர்கிட்ட சில மாதங்களுக்கு முன்னால கண்டிப்பா சொல்லிட்டேன். முதலில் அவ்வளவா கண்டுக்காத அவர் நான் சவுதி இளவரசி (பின்ன வயசானவங்களை தானே ராணின்னு சொல்லணும்?)மாதிரி நீள கருப்பு அங்கியும், முகத்திரையும் போட்டுண்டு தான் இனி காய்கறி வாங்கவே வெளியே போவேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சதும் தான் பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுண்டு உடனடியா நாங்க அமெரிக்க பிரஜையாக தேவையான டஜன் forms ஐ தயார் பண்ணி அனுப்பி வைத்தார்.

இமிக்ரேஷன் ஆபீசில் இருந்து முதல் கடிதம் ஒரு வழியா வந்து சேர்ந்தது. ஆனா என்ன ஒரு அக்கிரமம்? எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு! "என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன்? கை நாட்டு போடவா கூப்பிடறாங்க? என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க?" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி தான் என் கணவர்கிட்ட அன்னிக்கு நான் பொரிஞ்சு தள்ளினேன். 'டாய்....எவன்டா அவன்' ன்னு சத்யராஜ் பாணியில லுங்கியை தூக்கி சொருகிண்டு இமிக்ரேஷன் ஆபீசை பார்த்து போர்க்கொடி பிடிச்சு ஒரு நடை போடாத குறை மட்டும் தான்.

சரியான சமயத்தில் என் கணவர் மட்டும் சமயோஜிதமா என் கிட்ட 'அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு நம்ம ரஜினி சொன்னதை மறந்துடாதே மீனா' ன்னு சொல்லி என் கோபத்தை கட்டுப்படுத்தலைன்னா என்ன ஆயிருக்குமோ சொல்லவே முடியாது. படையப்பா திரைப்படம் என் வாழ்க்கையில இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. தலைவர்னா சும்மாவா பின்ன!

ஒரு வழியா எதுக்கு எங்களோட கைரேகையை பதிவு செய்ய கூப்பிடறாங்கன்னு என் கணவர் விளக்கி சொன்னதும் சரி தான்னு தலை ஆட்டிட்டு நான் சாதுவா (ஆமாம் நானே தான்...அதென்ன அவ்வளவு நக்கல் உங்களுக்கு?) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம்? அப்படியே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் ஆபீஸ் ஒண்ணுக்குள்ள நுழையறா மாதிரியே இருந்தது.

இதை எங்கேயோ நிச்சயம் பார்த்திருக்கோமேன்னு நினைக்க வைக்க கூடிய அதே அழுக்கு நாற்காலி. அதே அழுது வடியற சுவர். Terminator படத்து வில்லன் மாதிரி அதே உணர்ச்சியை காட்டாத முகங்கள். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. இருக்காதா பின்ன? ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே! ஒரு வழியா என் டோக்கன் எண்ணை (ஆமாம், இங்கயும் அதே டோக்கன் தான்) கூப்பிட்டதும் என் கணவருக்கு பிரியா விடை கொடுத்துட்டு ஒரு அழுக்கு ரூமிலேர்ந்து இன்னொரு அழுக்கு ரூமுக்கு ஒரு அம்மணி பின்னாலேயே போனேன்.

என் கையை தூக்கி பார்த்த அந்த அம்மணி ஏமாற்றத்தில் சோர்ந்து போய் நின்னது சில நொடிகள் தான். உடனே சமாளிச்சிண்டு பிளாஸ்டிக் டப்பியில இருந்த ஒரு துர்நாற்ற தீர்த்தத்தை சர் சர்ன்னு என் கைல அடிச்சு ஒரு துணியினால என் விரல்களை ஆவேசமா தேய்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும் இவ்வளவு நல்லா என் கையை தேச்சு அலம்பி விடுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் காலையில் கொஞ்சம் சோப்பை குறைவாவே உபயோகிச்சிருப்பேன். செலவாவது மிச்சமாயிருக்குமே!

இனி தேச்சா எலும்பு தான்னு உறுதியானதும் தேய்ப்பதை நிறுத்திட்டு என் விரல்களை கைல தூக்கி பிடிச்சு அவங்க அவ்வளவு உன்னிப்பா ஆராயறதை பார்த்து எனக்கு கொஞ்சம் உதறல். என்ன பிரச்சனை? இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல்? ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ? அதான் இந்தம்மா இப்படி குழம்பி போய் நிக்கறான்களோ அப்படீன்னு எல்லாம் எனக்கு ஒரே யோசனை. ஒருவழியா என் விரல்களோட அழகில் திருப்தியான அந்த அம்மா ஒவ்வொரு விரலா எடுத்து ஒரு கண்ணாடி scanner மேல வச்சு இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி விளையாட ஆரம்பிச்சாங்க.

பூமா தேவி மாதிரி இல்லைன்னாலும் நானும் பொதுவா பொறுமைசாலி தாங்க. ஆனா எத்தனை நேரம் தான் கையை இன்னொருவர் கிட்ட கொடுத்துட்டு பேக்கு மாதிரி நிக்கறது? நான் மட்டும் Barbie பொம்மை மாதிரி இருந்திருந்தேன்னா என் விரல்களை கழட்டி அவங்க கைல கொடுத்து 'ஆசை தீர விளையாடிட்டு திரும்பி கொடும்மா ராசாத்தி'ன்னு சொல்லிட்டு நிம்மதியா ஒரு ஓரமா உக்காந்திருப்பேன்.

ஒரு வழியா பல கோணங்களில் என் விரல்களை படம் பிடிச்சுட்டு கொசுறுக்கு என் முகத்தையும் சின்னதா படம் பிடிச்சுட்டு அவங்க வேலையை முடிச்சாங்க அந்த அம்மா. 'கிளம்பட்டா தாயீ' ன்னு பையை தூக்கிண்டு வெளியே போக நான் திரும்பினா என் கைல ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து உக்கார வச்சிட்டாங்க மறுபடியும். என்ன விஷயம்னு பார்த்தா அந்தம்மா இன்முகமா என்னை வரவேற்று நல்லபடியா என் விரல்களை கவனிச்சுகிட்டு மொத்தத்துல எனக்கு இனிமையான அனுபவம் ஒண்ணை கொடுத்தாங்களான்னு கேள்வி கேட்டிருந்தாங்க. ஹ்ம்ம்..........நம்ம எழுதறதை எழுதி அந்தம்மா கைலயே வேற அதையும் கொடுக்கணுமாம். இதென்ன வம்பு! நான் பாட்டுக்கு எசகுபிசகா ஏதாவது எழுதி அவங்க கைல கொடுத்தா அவங்க கோச்சுகிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பாம உக்கார வச்சு என் விரலை எடுத்து இன்னும் நாலு மணி நேரம் திருகினா நான் என்ன ஆறது?

இப்ப என்ன? பகவத்கீதை புஸ்தகத்து மேல சத்தியமா பண்ண சொல்லறாங்க? அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா? இப்படி தீர்மானம் பண்ணி அவசரமா பேனாவை எடுத்தேன். உன்னைப் போல உண்டாம்மா ராசாத்தி, என் ஒட்டு நிச்சயம் உனக்கு தான்னு அடிச்சு தள்ளி எழுதி குடுத்துட்டு என் விரல்களை பேன்ட் பாக்கெட்குள்ள ஜாக்கிரதையா மறைச்சு வச்சு நல்லபடியா வெளிய கொண்டு வந்து சேர்த்தேன்.

-- ஒரு பிரஜையின் பிரயாணம் தொடரும்

-மீனா சங்கரன்