Tuesday, January 18, 2011

கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!! – 2

(கைப்பிள்ளை (வடிவேலு) மற்றும் அவருடைய இரண்டு அள்ளக் கைகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு சிறிய உரையாடல். இதை வின்னர் திரைப்படத்தில் தேடவேண்டாம். ஆனால் கைப்பிள்ளை வடிவேலுவின் குரலில் படித்து பார்க்கவும்.)

கைப்பிள்ளை கை கால்கள் கோணிக்கொண்டு தடுமாறி தடுமாறி நடந்து வந்து ஸ்டார்பக் கடை ஒன்றின் உட்புறம் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்கிறார். அவருடைய அள்ளக் கைகள் இருவர் தயங்கி தயங்கி அவர் அருகில் வருகின்றனர்.

கை.பி: “அம்ம அம்ம, யப்பா, எப்பிடி அடிக்கராங்க, ஹும் ஒரு பச்ச புள்ளையாச்சே, இத இப்படி அடிக்கரமேன்னு ஒருத்தருக்கும் தெரியலையே”
பேசியபடியே திரும்பி பார்க்கிறார், அள்ளக் கைகள் வருவது தெரிகிறது. “என்ன, எப்படி அடி பட்டு இருக்குதுன்னு பாக்கரீங்களா?”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அவிங்க நீங்க ஒரு பச்ச புள்ளைன்னு அடிக்கல”

கை.பி: “பொறவு”

அ.கை-1: “கைப்புள்ளன்னு அடிக்கராங்கண்ணே”
அவர்களை பார்த்து கோபமாக கையை ஓங்கி அடிக்க வருகிறார், வலி தாங்காமல் கையை இழுத்துக் கொள்கிறார்.

கை.பி: “எனக்கு வர கோவத்துக்கு உங்களையெல்லாம் மர்டர் பண்ணிடுவேன் பீ கேர்புல், இடியட் ஆஃப் த ஸ்டுபிட் ஆஃப் தி நான்சென்ஸ்”

அ.கை-2: (ரகசியகுரலில்) “ஏய் இது பேசரது ஏதாச்சும் புரியுதா”

அ.கை-1: (அதே ரகசியக் குரலில்) “நமக்கு அடுத்து ஒரு குடாக்கு கிடைக்கர வரை இதோடதான் காலந்தள்ளனும், அதனால வாய மூடிகிட்டு இரு”

கை.பி: “ஏய்ய்ய் அங்க என்ன குசு குசுன்னு பேச்சு”

அ.கை-1: “அது ஒன்னும் இல்லை அண்ணே, கொலு பத்தி நீங்க எழுதின பதிவுக்கு மூமூமூனு பேர் பதில் எழுதியிருக்காங்கன்னு சொல்லிகிட்டு இருந்தேன், அவ்வளவுதான்”.

கை.பி: “மூமூமூனு பேரா, சொல்லவேயில்ல, எப்பவும் நாகு மட்டும் தான படிப்பாரு, என்ன ஆச்சு மக்களுக்கு, சரி சரி படிங்க”

அ.கை-1: சலித்தபடி “என்னத்த படிக்கரது”

கை.பி: “ஏய்ய், என்ன வாய்ஸ் டவுன் ஆகுது”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அதையெல்லாம் வெறும படிக்கக்கூடாது, அனுபவிச்சு படிக்கனும்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “சரி சரி ரொம்ப மொக்கை போடாம படி”

அ.கை-1: “முதல் பதில் நம்ம மீனா வீரப்பன் எழுதியிருக்காங்க”

கை.பி: “அப்படியா!, அப்படி போடு அருவாள, படி படி கேக்கலாம்”

அ.கை-2: ‘உங்க வீட்டு கொலு போலவே உங்க பதிவும் நல்லா இருக்காம்”

கை.பி: (அ.கை-1 சொன்னதை கேட்டவுடன் ஒரு மயக்க நிலையில்) “ரியலி, போதுண்டா போதுண்டா ரொம்ப புகழராங்க”

அ.கை-1: ‘ஆமாம் அண்ணே அதுதான் நானும் நினைச்சேன்”

கை.பி: (அவன் சொல்வதை கவனிக்காது) “ம் மேல படி”

அ.கை-2: “அடுத்து நம்ம மு.கோ. இந்தியாவில இருந்து எழுதியிருக்காரு”

கை.பி: (பரபரப்பாக) “மு.கோ வா!, படி படி”

அ.கை-1: “உங்க பதிவு ப்ரமாண்டமாம், உங்க வீட்டு கொலுவைப்போலவே, அதோட ....” என்று இழுக்கிறான்

கை.பி: (எரிச்சலாக) “என்னடா, அதோட ன்னு இழுக்கர”

அ.கை-1: “அதில்ல உங்க மனசும் உங்க பதிவும் கொலுவும் போல ப்ரமாண்டமாம்”

கை.பி: “ஏண்டா நிஜமாவே அப்படியா எழுதியிருக்காரு”

அ.கை-2: “ஆமாண்ணே, வேனா நீயே படிச்சு பாரு”

கை.பி: “அதில்லடா, இந்த ஊரு இன்னமுமா நம்மள நம்பிகிட்டு இருக்கு”

அ.கை-1: “அத விடுங்க அண்ணே, அடுத்தது யார் எழுதியிருக்காங்க தெரியுமா”

கை.பி: “அது தெரியாதா நம்ம நாகுவா இருக்கும், எப்ப்புடி!”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே”

கை.பி: “போதும் மூடிக்கிட்டு மேல படி”

அ.கை-1: “உங்க தலைவர் பதவி பாரம் இப்ப இல்லைங்கரதுன்னால நிறைய எழுதுவீங்கன்னு எதிர் பாக்கரார்”

கை.பி: (சலிப்பாக ) “அது சரி”

அ.கை-1/2: (கோரஸ்ஸாக) “என்ன அண்ணே சலிச்சுக்கரீங்க”

கை.பி: “பின்ன என்னடா, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடராங்க, வெளில வாசல்ல பாத்தா சொல்லி சொல்லி அடிக்கராங்க”

அ.கை-1: "அப்படின்னா ஏன் எழுதறீங்க"

கை.பி: "டேய், ஒரு எழுத்தாளரா இருக்கரது என்ன பெரிய பதவி தெரியுமா, அது உங்கள மாதிரி அள்ளக் கைகளுக்கு எங்க தெரியப் போவுது"
அ.கை-1: “அது சரி அண்ணே, ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி தடயம்ன்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சீங்களே....” என்று இழுக்கிறான்.

கை.பி: “ஏய்ய், எவனாவது தடயம் பத்தி பேசினா, பிச்சுபுடுவேன் பிச்சு, என்ன்ன்னது இது சின்னபுள்ளத்தனமா இருக்கு”

அ.கை-1: “அதில்லண்ணே, இத்தனை வருஷமா ஒரு தடயம் கூடவா கிடைக்கலைன்னு, ஊர்ல நாட்ல பேச்சு இருக்குன்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “அத ஏண்டா என்கிட்ட சொல்ற”

அ.கை-1: “அண்ணே நான் என்ன சொல்ல வந்தேன்னா ...”

கை.பி: “ஒன்னும் சொல்ல வேண்டாம், வாய மூடு”

அ.கை-1: “இருந்தாலும் .....”

கை.பி: “எனக்கு ஒன்னும் கேக்க வேண்டாம்” என்று நொண்டி நொண்டி ஓடுகிறார்.

அ.கை-2: “ஏம்பா அது என்னப்பா தடயம்”

அ.கை-1: “இது தடயம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சு, முடிக்காம ரெண்டு மூனு வருஷமா இழுத்துக்கிட்டு இருக்கு, இத தொரத்தனும்னா இந்த மாட்டர எடுத்தா போதும் ஓடிடும்”

அ.கை-1: “சரி சரி நம்ம ரெண்டு பேருக்கும் சூப்பரா காபி சொல்லு”

அ.கை-2: “காசு”

அ.கை-1: “அது ஒடர அவசரத்துல வாலட்டை விட்டுட்டு போயிருக்கு பார், வா பெரிய பொங்கலே கொண்டாடிடலாம்”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுன்னே, உங்க சகவாசம் கெடச்சது நான் செஞ்ச புண்ணியம்”

அ.கை-1: “இது மட்டுமா, எங்கிட்ட வந்திட்ட இல்லை இனி இந்த அண்ணனை பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுப்ப, வா முதல்ல காபி சாப்பிடலாம்”

முரளி இராமச்சந்திரன்.

Monday, January 17, 2011

தாயே, கவலையை விடு

சங்க இலக்கியங்களில் அற்புதமான கருத்துக்களை மறைமுகமாக  நயம்பட  சொல்லும் பல கவிதைகளை காணலாம், கலக்கமடைந்து இருக்கும் தாய்க்கு  மனக்கவலை தீரும் வகையில்  சொல்லப்பட்ட ஒரு ஆறுதலான செய்தியை  இங்கே  பார்க்கலாம்.
நவீன காலத்தில் ஒரு பெண் தனக்கு விருப்பமானவனை பெற்றோருக்கு தெரியாமல், அல்லது அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி மணந்து கொண்டு போவது பற்றி நிறையவே கேள்விப் படுகிறோம்.  இது ஒன்றும் புதிதல்ல. மனித குலம் தோன்றிய காலம் தொடங்கி நடைபெறும் சம்பவம்தான்.
ஒரு நாள் வழக்கம் போல் காலையில் எழுந்த தாய் தன் மகள் படுத்திருந்த படுக்கை காலியாக இருப்பதைப பார்த்து ஆச்சரியப்பட்டாள். எப்பொழுதும் அதிக நேரம் தூங்கி எல்லோருக்கும் பிறகு கடைசியாக எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவள் அந்தப் பெண் . வீட்டில் எல்லோருக்கும் அவள் செல்லப் பெண். 
அவள் வெளியில் இருக்கிறாள் என்று நினைத்து கூவி அழைக்கிறாள் தாய். பதில் இல்லை. தேடிப் பார்க்கிறாள். அவளைக் காணவில்லை.
       நெடுநேரமாகியும் அவள் வரவில்லை. தாய்க்கு கவலை அதிகமானது. வயதுப்பெண். தனியாக வெளியில் அதிக தூரம் போய் பழக்கம் இல்லாதவள்.  அதிக நேரம் தாயை விட்டு பிரிந்து  இருந்தவளுமில்லை.
 
           தாய்க்கு அடுத்தபடியாக அந்த பெண்ணை நன்கு அறிந்தவள் செவிலித்தாய்பல நேரங்களில் அந்த பெண் செவிலித்தாயுடன் அதிக  நேரத்தை கழிப்பதுண்டு.
 
        வந்த செவிலித்தாயிடம் கேட்கிறாள் எங்கே அவள் என்று. செவிலித்தாய்க்கும் தெரியவில்லை என்று அறிந்து அதிர்ச்சி  அடைகிறாள். இப்பொழுது தாயின் முகத்தில் சோகம் படர்ந்து விட்டது. முகம் வாடிவிட்டது.  அழாத குறைதான்

என் மகள் எங்கே போயிருப்பாள்  என்று திரும்பத் திரும்ப கேட்டு புலம்பிக்கொண்டிருந்த  தாய்க்கு பதில் கூறுகிறாள் செவிலித்தாய்.

           கடுமையான வெயிலடிக்கும் பாலைவனம். நண்பகல் நேரம். நல்ல கோடைக்காலம். அனல் பறக்கும் நீண்ட  நிலப்பரப்பில் எங்காவது குடிக்க நீர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில்  இரண்டு மான்கள் அலைகின்றன .

கோடை வெயில் காரணமாக எல்லா உயிர்களுக்கும் நீர்  அதிகம் தேவைப்படும்.
வெயிலில் அலைவதால் கூடுதலான நீர் தேவைப்படுகிறது. நீரைத்தேடி  ஓடிக்களைத்து  சோர்வால் பெண்மான் விழுந்து விடுமோ என்று ஆதங்கத்துடன் பார்க்கிறது ஆண்  மான்.
       பல நேரங்களில் கானல்நீர் கண்டு ஓடிக்களைத்து ஏமாந்து சோர்வு மிகுந்த நேரத்தில் ஒரு சுனையை பார்கிறது ஆண் மான். அந்த சுனை மிகச்சிறியது. .அதில் இருக்கும் நீர் மிகக் குறைவு. இரன்டு மான்களுக்கும் இருக்கும் தாகத்திற்கு அந்த நீர் நிச்சயமாக போதாது என்று ஆண் மான் உணர்கிறது.

           இரன்டு மான்களும் சுனையின் அருகில் வந்து நின்றன. பெண் மான் ஆண் மானை பார்த்தது. ஆண் மான் சுனை நீரில் வாயை  வைத்தது. பெண் மானும் சுனை நீரில் வாயை வைத்து நீரை குடிக்கத் தொடங்கியது.  ஆனால் ஆண்   மான் நீரில் வாயை வைத்ததே  தவிர  நீரைக் குடிக்கவில்லை. குடிப்பதுபோல் நடித்தது.  தாகமிகுதியாலும் சோர்வாலும் பெண்மானுக்கு எந்த நினைவும் இல்லை.
 
        தான்  நீர் குடிக்காவிட்டால் பெண்மான் நீர் குடிக்காது என்று ஆண் மானுக்குத்  தெரியும்அதனால் சுனையில் வாயை வைத்ததே தவிர உண்மையில் நீரைக்  குடிக்கவில்லை.  குடிப்பது போல் ஆண் மான் நடித்தது.
 
     பாலைவனத்தில் உள்ள அந்த ஆண்மானுக்கு பெண்மான்  மீது அவ்வளவு காதல். தன்னை வருத்திக்கொண்டு தன் இணையை காக்கும் பண்பு கொண்ட ஆண்மான் அது.
 
    அந்த வழியில்தான் உன் மகள் தனக்கு உரியவனுடன் போயிருக்கிறாள். இதுதான் செவிலித்தாய் கொடுத்த பதில். ஆண் மானுக்குள்ள அந்த பண்பு அந்த வழியில் செல்லும் உன் மகளின் காதலனுக்கும் நிச்சயமாக உண்டு. அவளை அவன் கண்  போல் வைத்து காப்பாற்றுவான். . ஆகையால் உன் கவலையை விடு. என்பது சொல்லாமல் சொன்ன செய்தி.

இப்பொழுது பாட்டை பார்ப்போம்


சுனை வாய்ச்சிறு நீரை எய்தாதென்றெண்ணி
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான் தன் 
கள்ளத்தினூச்சும் சுரமென்ப  காதலர்  தம் 
உள்ளம் படர்ந்த  நெறி.      
--- ஐந்திணை  ஐம்பது


இது போன்ற இனிமையான நயம் மிகுந் கவிதைகள் பலவற்றை  சங்க இலக்கியங்களில்  காணலாம்.
- மு. கோபாலகிருஷ்ணன்.

Saturday, December 11, 2010

கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!!

என் மனைவி ஏறக்குறைய ஒரு பத்து வருடம் முன்பு “நம்ப வீட்டுல இந்த வருஷம் கொலு வெக்கலாமா”ன்னு கேட்ட உடனே, வடிவேலுவின் பல குரலில் ஒரு குரல் என் மண்டைக்குள் இந்தப் பதிவின் தலைப்பு போல “கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!!” என்று பதறித் துடித்தது.

முதலில் நாங்கள் இருந்தது ஒரு வாடகைக் குடியிருப்பு, அதிலும் சமையல் அறையின் சிங்க்கில் கொஞ்சம் வேகமாக தண்ணீரைத் திறந்தாலும் கீழ்வீட்டுக்காரர்கள் ஒரு கட்டையால் “டொம் டொம்” இடித்து “யோவ் சத்தம் போடாத” என்று சத்த்த்த்தமாக சொல்லும் இடம். இதில் கொலு என்றால் குறைந்தது 10-15 நண்பர்களின் குடும்பத்தையாவது கூப்பிடனும். “எப்புபுபுடி” ன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது நாங்கள் அமெரிக்கா வந்து ஏறக்குறைய ஒரு 8-9 மாதங்கள்தான் ஆயிருந்தது. எங்க நண்பர்கள் குழாமே ஒரு 5-6 குடும்பங்கள்தான். அலுவலகத்திலும் அப்படி ஒன்றும் சிலாக்கியமாகச் சொல்லக்கூடிய நண்பர்களும் இல்லை என்ன செய்யலாம் என்று தலையை பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

என் மனைவிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சரியாகச் சொல்லனும்னா, அவளுக்கு எல்லா விஷயமும் சின்ன விஷயம்தான். “வா மரியாதையா வந்து வண்டியை எடு, டாலர் ஷாப் போகனும்”னு சொல்லி அங்கிருந்து ஒரு 30 பொம்மைகள் வாங்கி வந்தாள்.

“இதை வெச்சு எப்படி கொலு வெப்பே, எல்லாம் நம்மூர் பொம்மை மாதிரியே இல்லை, எங்கம்மா கொலு வெச்சா அதெல்லாம் ஸ்வாமி பொம்மையா இருக்கும். இப்படி மாடர்ன் பொம்மைகள் இல்லை” என்று என் பங்கிற்கு மறுபடியும் ஒரு பிட்டை போட்டேன்.

“ஹும் உங்கம்மா நம்ம கல்யாணத்தும் போதே சொன்னா, என் பையனுக்கு சமர்த்து பத்தாது, அவனை நீதான் பார்த்துக்கனும்னு, அதை இத்தனை வருஷம் கழித்தும் கரெக்ட்டா ப்ரூவ் பண்றேள். எல்லார் வீட்டு கொலுவிலும் ஒரு செட்டியார், செட்டிச்சி, ஒரு போலீஸ்காரன், ஒரு கல்யாண செட், ஒரு காய்கறிக்காரன், ஒரு செட் நாய், பூனை, யானை ன்னு இருக்குமே அது மாதிரி நம்ம வீட்டு கொலு ஒரு அமெரிக்கா பொம்மை கொலுன்னு சொல்லிட்டு போறேன். இதைகூட சமாளிக்கத் தெரியலை உங்களுக்கெல்லம் எவன் வேலை போட்டு கொடுத்தானோ அவனைச் சொல்லனும்” என்று என்னை சொல்லும் சாக்கில் என் கம்பெனிக்காரனுக்கும் ஒரு ஃப்ரீ அர்ச்சனை நடந்தது. சரி இதுக்கு மேல ஏதாவது சொன்னா பிறகு சாப்பாட்டிற்கு நண்பர்கள் வீட்டிற்குத்தான் “நான் மாது வந்திருக்கேன்” ரேஞ்சில் கையேந்தனும்னு தெரிந்தது.

“அதுக்கில்லம்மா, யாராவது கேட்டா நான் ஒன்னு சொல்லி நீ ஒன்னு சொல்லிடக்கூடாதில்லையா அதுக்குதான் கேட்டேன். அதோட மாடர்ன் கொலுவா இருந்தாலும், கொலுங்கரது நம்ம ஊர் விஷயம் அதான் நெருடுது, வேணா ஒன்னு செய்யலாம், கலிஃபோர்னியாவில mail-bag.com ன்னு ஒரு கடை இருக்கு அங்க பொம்மைகள் விக்கராங்கன்னு கேள்வி, வேணும்னா 100-150 டாலர்ல நம்மூர் பொம்மைகள வாங்கிடலாமா”ன்னு இரண்டாவது பிட்டை போட்டேன்.

“ப்பூ இது பெரிய விஷயமா, எல்லா பொம்மைக்கும் சாந்து பொட்டு வெச்சுட்டாப் போச்சு” என்று செலவே இல்லாமல் ஒரு 30 பொம்மைகளை மத மாற்றம்/தேச மாற்றம் செய்து நம்மூர் பொம்மைகளாக்கினாள்.

அடுத்தது படி கட்ட என்ன வழி என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் முழுக்க யோசித்த பிறகும், சுலபமான வழி ஒன்றும் புலப்படாமல் ஒரு 50 டாலர் செலவில் ஒரு 3 (அ) 5 படி செய்ய ப்ளான் போட்டுவிட்டு, பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் போல பெருமையுடன் மனைவியிடம் “படிக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சியா, யோசிச்சு இருக்க மாட்டியே, நான் யோசிச்சுட்டேன், இதோ பார் என் ப்ளான்” என்றேன்.

“ப்ளான் இருக்கட்டும் செலவு என்ன ஆகும், அதை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்”

“ஒரு 50-60 டாலர் ஆகும், ஒரு 8-10 மணி நேரத்துல செஞ்சுடலாம்.”

“அதெல்லாம் வேண்டாம், நாம சிகாகோவில இருந்து கொண்டு வந்த அட்டை டப்பா எல்லாம் சும்மாதான கிடக்கு அதை வெச்சு 3 படி பண்ணினா போச்சு” என்று 10 விநாடிகளில் ஒரு தீர்வைச் சொன்னாள்.

இந்த இடத்தில் வாரியார் ஸ்வாமிகள் சொன்ன ஒன்று ஞாபகம் வருது. அவருடைய எல்லா கதைகளிலும் ஒன்றைச் சொல்லுவார், “பெண்ணறிவு நுண்ணறிவு” என்று அதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பவர்கள் நம் இல்லத்துப் பெண்கள். தேவையில்லாமல் ஒரு விஷயத்திற்கு செலவு செய்ய யோசிப்பவர்கள், ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் (ROI) என்பதை ஒரு பெரிய பாடமாக பல பல்கலைகழகங்களில் பயிலுவதை, நம் இல்லத்து பெண்மணிகள் சர்வ சாதாரணமாக செயலில் காட்டக் கூடியவர்கள். ஒரு 40-50 டாலர் செலவு செய்து கொலுப் படி செய்ய நான் ப்ளான் போடும் போது ஒரு 10 விநாடிகளில் 10 செண்ட் செலவில்லாமல் படி செய்ய தூண்டி அதை செயலிலும் காட்டினாள் என் மனைவி. 100-150 டாலர் செலவு செய்ய தயாராக இருக்கும் போது அதை ஒரு சின்ன சாந்து டப்பா மூலம் தடுத்தவள். ஒளவையார் ஒரு பாடலில் இல்லாள் என்பதைப் பற்றி மிக அருமையாக பாடியுள்ளார்.


இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

என்ன புரிஞ்சுதா, புரியலையா ஒன்னும் கவலைப் படாதீங்க, எனக்கும்தான் புரியலை, நான் கவலைப் பட்டேனா பாருங்க, நம்மூர் தமிழ் பண்டிதர்களிடம் அதுவும் ‘வளையாபதி, குண்டலகேசி’ எல்லாம் தெரிஞ்ச பண்டிதர்களிடம் கேளுங்க அர்த்தம் சொன்னாலும் சொல்லலாம்.

ஒரு வழியாக படி செய்ததும், அருமையான என்னுடைய இரண்டு பாம்பே வேஷ்டிகளை கொலுவுக்கு தாரை வார்த்ததும் காலத்தில் அழியாத நினைவுகள்.

படியில் மாதிரிக்கு ஒரு சில பொம்மைகளை வைத்ததும் காலி அட்டை பெட்டிகள் சற்று ஆட்டம் காண ஆரம்பித்த்து. “இது என்னடா புது கதை, யாராவது வரும்போது இப்படி ‘டப்பா’ டான்ஸ் ஆடினா, இது பொம்மை கொலுவா இல்லை டான்ஸிங் கொலுவா” ன்னு கேள்வி வருமே என்ற கவலை வந்தது. உடனடி சொல்லுஷன், என்னுடைய படிக்காத (படிக்காத என்ன, பிரித்துக்கூட பார்க்கப் படாத) கம்ப்யூட்டர் புத்தகங்கள், பழைய பேப்பர், துணிகள் என்று பலவற்றை ஒவ்வோரு டப்பாவிலும் திணித்து ஒருவழியாக ஆடாத கொலுவை அரங்கேற்றினோம்.
அடுத்தது செட்யூல், “ஏம்மா எல்லா நாட்களும் எல்லோரும் வரலாமா, இல்லை சில நாட்களுக்கு சில சிலராக வரச்சொல்லலாமா”
“தெரியாமதான் கேக்கறேன், உங்களுக்கு புத்தின்னு ஏதாவது இருக்கா”
“என்ன நான் கேட்டுட்டேன்னு இப்படி கத்தற?”
“பின்ன என்ன, எல்லா நாளும் வரலாம்ன்னு சொன்னா, நாம நாலுபேர் வீட்டுக்கு போகவேண்டாமா? அப்படி போனாதானே 4-5 பேர் சகவாசம் நமக்கு கிடைக்கும்.”
“சரி சரி புரிஞ்சுது, ஒரு ப்ளான் போட்டு சொல்லு அன்னிக்கு நான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்துடறேன், நீ கார்லயே போய்ட்டு வந்துடு”
"என்னது! நான் கார்ல போய்ட்டு வரதா, அப்ப நீங்க வரலையா, நாலு பேர் வீட்டுக்கு போய் கொலு பார்த்தாதானே நம்ம வீட்டு கொலுவை எப்படி மெருகேத்தலாம்ன்னு தெரிஞ்சுக்கலாம்”
எனக்குத் தெரிந்து நகைக்குதான் மெருகேத்துவார்கள்ன்னு சொல்ல எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது, மெருகுன்னா நிஜ மெருகு இல்லைங்க ஆங்கிலத்தில improvise-ன்னு சொல்வாங்களே அதுன்னு நீங்க புரிஞ்சுக்கனும்.
முதலில் இப்படி கொலுவுக்கு என்று போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு, ஒன்று, அவர்கள் வீட்டு கொலு எப்படி வைத்திருக்கிறார்கள் என்று அளவிடுவது, ரெண்டு, என்ன மாதிரி பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், எங்கிருந்து வாங்கி வருகிறார்கள், என்ன விலை, எப்படி எடுத்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்வது, மூனு மற்றும் நாலு, என் மனைவி சொன்னது போல அவர்கள் வீட்டு கொலுவிலிருந்து நம்ம வீட்டு கொலுவிற்கு என்று சில பல புதிய யோசனைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே கடத்திக் கொண்டு வருவது, மற்றும் அவர்கள் வீட்டிற்கு வரும் பலரை நமது நண்பர்களாக்கிகொள்ள ஒரு வாய்ப்பு, இதையெல்லாம் தாண்டி நமது நாட்டு பண்டிகை, காலாச்சாரம் இவற்றை இங்கும் பின்பற்றுவதில் இருக்கும் ஒரு அலாதி திருப்தி.
எனது பள்ளிப் பருவத்தில் 10வது படிக்கும் வரை என் அக்காவுடன் எங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு தினமும் போய் ‘ரார வேணு கோப பாலாஆஆஆஆஆ அல்லது ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதா அம்பிகேஏஏ’ என்று நீட்டி முழக்கி ஒரு பாட்டை இருவரும் பாடி விட்டு அவர்கள் தரும் சுண்டல் பொட்டலமும், சின்ன கண்ணாடி, சீப்பு, குங்கும டப்பா, வெத்திலை பாக்கு எல்லாம் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்ததும் யார் வீட்டில் என்ன சுண்டல், என்ன மாதிரி கொலு, நாங்கள் போயிருந்த போது யார் யாரெல்லாம் வந்தார்கள், அவர்கள் பாடியதை விட நாங்கள் பாடியது எப்படி சூப்பர் என்றெல்லாம் அனுபவித்து கதை விட்டிருக்கிறேன். அதிலும் எனக்கு ஏன் சீப்பு கண்ணாடி, குங்கும டப்பா தரலைன்னும் அதை பெண்களுக்கு மட்டும் தரதுக்கு என்ன காரணம்னும் என் அம்மா கிட்ட கேட்டதுக்கு இது வரைக்கும் சரியான பதிலில்லை. அதுக்கு பிறகு இந்த இனிய கொலுவுக்கு நகர் வலம் செய்யும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக +1, +2 படிக்கும் காலத்தில் 10-15 வீடுகளாக குறைந்து போய், கல்லூரி படிக்கும் காலத்தில் (அதாவது சும்மா போய் வந்த காலத்தில்) 1-2 வீடுகளாகி, என் அக்கா கல்யாணம் பண்ணிக் கொண்டு பம்பாய் போனதும் சுத்தமாக நின்னு போச்சு. அடுத்த சில ஆண்டுகளில் அடிமையாக சென்னையை விட்டு புலம் பெயர்ந்ததும் கொலு என்பது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தது. மீண்டும் சென்னை வந்த போதும் பெரிய ஆர்வமில்லாமல் அம்மாவிற்கு உதவி செய்து கொலு வைத்தாலும், அக்காவோடு பல வீடுகளுக்கு அவளுக்கு துணையென்று (பல நேரங்களில் அவள்தான் எங்களுக்குத் துணை, அவளை என் இரண்டாவது அம்மா என்றே சொல்வேன்) போய் வந்ததும் அந்த இனிய நிகழ்வுகளை இழந்த சோகம் மனதின் ஓரத்தில் சற்று நெருடத்தான் செய்கிறது. நாம் இழந்த சந்தோஷங்கள் என்று கணக்கிட்டால் இப்படி நம் மனதை பாதித்த பல விஷயங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக வெளிவரும்ன்னு நினைக்கிறேன்.
கொலுன்னா முதலில் எங்க வீட்டு கொலுதான் எனக்கு நினைவுக்கு வரும். எங்க வீட்டு கொலுவில் பொம்மைகளை எடுத்து அழகாக பிரித்து கொலுவைப்பதும், கொலு முடிந்ததும் மறுபடி பாதுகாப்பாக கட்டி வைக்கும் பொறுமை என் அப்பாகிட்டதான் கத்துக்கிட்டேன். அவரோட லாஜிக் சூப்பர் லாஜிக். “ஒரு நாள் கஷ்டப் பட்டு பிரிச்சு வெக்கனும், ஒரு நாள் ரொம்ப கஷ்டப் பட்டு கட்டி வெக்கனும் அப்படி செஞ்சா, வருஷா வருஷம் சூப்பரா கொலு வெக்கலாம். ஒரு பத்து நாள் விழாவுக்கு ரெண்டு நாள் கஷ்டப் பட்டா என்ன குறைச்சல்”. படிகளுக்கு சீரியல் செட் போட்டு கொலு வைப்பது, பார்க் கட்டி நடுவில் தெப்பகுளம் வைத்து அழகு படுத்துவது, சுவர் ஓரம் மண் கொட்டி அதை ஒரு மலை போல செய்து அதன் மேல் ஒரு வாரம் முன்பே கடுகு, தனியா தெளித்து செடிகளை வளர்த்து மலை மேல் சின்ன ஒரு கோபுரம் வைத்து கோவில் எழுப்புவது என்று அப்பாவும் அம்மாவும் தூள் கிளப்புவாங்க. 9 நாட்களில் என்னிக்கு என்ன சுண்டல் என்று பட்டியல் போட்டு அதுக்கு தேவையானதை அப்பா ‘பாரதி மளிகை’ ல இருந்து வாங்கிண்டு வருவார். அம்மா, சுண்டலை எப்படி பேப்பரில் கிழியாமல் மடிப்பது, வருபவர்களுக்கு எப்படி, எந்த பக்கம் நின்றபடி கொடுப்பது என்பதை எங்களுக்குச் சொல்லித் தருவா. அந்த 9 நாட்களும் வீடு ஜே ஜேன்னிருக்கும். நவராத்திரி வெள்ளிக் கிழமை கண்டிப்பாக அரிசி வெல்ல புட்டு செய்து அம்மா, ஊரையே மயக்கிடுவா. இப்படி பலவிதமான கொண்டாட்டங்களுக்கு இடையில் 9 படியில வெச்ச கொலு “இந்த வாட்டி 3 படிதான் வெச்சேன்டா”ன்னு அம்மா சொல்லும் போது சற்று கஷ்டமாக இருக்கிறது.
என் சென்னை வீட்டு கொலுவின் ஞாபகமாக சில பொம்மைகளை இங்கும் வைச்சிருக்கேன். அவை ஒரு 50-60 வருடத்திற்கு முன்பு செய்யப் பட்டவை. அவைகளின் நேர்த்தி, திருத்தம் இன்றைய பொம்மைகளில் இல்லை.
அடுத்து என்னை அசத்திய கொலு எனது தந்தையின் உறவினர் தனது ராஜாஅண்ணாமலைபுரத்து வீடான ‘நவசுஜா’ வில் வைத்த கொலு, படிகளில் வைத்த கொலுவை பார்த்தே பரவசப் பட்ட எனக்கு வீடு முழுவதும் அங்கங்கே வைக்கப் பட்ட கொலுவை ஒரு கண்காட்சி திடலை சுற்றி பாக்கர மாதிரி பார்த்ததும் “கொலுன்னா இது கொலு” என்று தோன்றியது.
சரி சரி ஆரம்பிச்ச விஷயத்துக்கு வரேன். இப்படியெல்லாம் கொலு வெச்ச குடுமபத்தில இருந்து வந்தும் நம்ம வீட்டில கொலுன்னதும் ஏன் யோசிச்சேன்னுதானே யோசிக்கிரீங்க, யோசிக்கலன்னாலும், யோசிக்கரமாதிரி நடிங்க. அது தூங்கர சிங்கத்தை பிடரில தட்டி எழுப்பர மாதிரி. கொலு வெக்கனும்னு யோசிக்கரது ஒரு சின்ன விஷயம்தான் ஆனா, அதோட துடிப்பு பிடி பட்டுடுத்துன்னா, அதுக்கு பிறகு அதை நகாசு பண்ண யோசிக்கரத நிறுத்தரது ரொம்ப கஷ்டம். எப்படி பெரிய படி செய்யலாம், எப்படி பார்க் வெக்கலாம், என்ன தீம்ல கொலு வெக்கலாம், என்ன மாதிரி லைட்டிங் செட்டப் செய்யலாம் என்று மண்டை குடைய ஆரம்பித்துவிடும். இது ஒரு மகா அவஸ்த்தை ஆனால் பிடித்திருந்தால் மட்டுமே ஈடுபட முடியும். தீபாவளி பிடிக்காது ஆனால் பட்டாசு மட்டும் பிடிக்கும் என்றோ, அல்லது பட்டாசு சத்தமே இல்லாத தீபாவளி மட்டும் பிடிக்கும் என்றோ இருக்க முடியாது இல்லையா அது போல ஈடுபாடில்லாமல் கொலு வெக்க முடியாது வெச்சாலும் அது ஒட்டு போட்ட ப்ளாஸ்டிக் பக்கெட் போல பல்லை இளிக்கும்.
கொலுன்னா என்ன அர்த்தம், எதுக்காக கொலு வெக்கனும், என்ன ப்ரயோசனம் என்றெல்லாம் யோசிச்சா பொங்கல் பண்டிகையைத் தவிர வேறு எந்த பண்டிகையையும் கொண்டாட முடியாது.
இப்படி அமெரிக்காவில் எங்கள் வீட்டு கொலு ஒரு சின்ன கொலுவாக ஆரம்பித்தது. டப்பா கொலுவில் ஒரு அவஸ்த்தை என்னவென்றால், முன் வருடம் வைத்த்து போலவே இந்த வருடமும் கொலு வைக்க முடியாது காரணம் டப்பா லொகேஷன் மாறிவிடும் அபாயம்தான். நம்ம மூளைதான் இது மாதிரி வெத்து சமாசாரத்துக்கு ரெடியா இருக்குமே, “எடு காமெராவை ஒரு படம் பிடித்து ப்ரிண்ட் போட்டு வெச்சுட்டா போச்சுன்னு” சொல்ல, கர்ம சிரத்தையா அதை கடைபிடித்தோம். முதல் இரண்டு வருடங்கள் 3 படியாக இருந்த கொலு மூன்றாவது வருடம் 5 படிக்கு பரிணாம வளர்ச்சியடைந்தது. அந்த 5 படி கொலுவுக்கும் வழக்கம் போல் பழைய டப்பா, கம்யூட்டர் டேபிள் என்று ஒரு மாதிரி ஒப்பேற்றி கொலு வைத்திருந்தோம்.
நான்காவது வருடம் புது வீடு வாங்கி அங்கு கொலு வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்து, கொலு வைக்க வேண்டிய நாள் அன்று மனைவி அதிகம் யோசிப்பதற்குள் ‘Lowes‘ போய் தேவையான மரக்கட்டைகளை வாங்கி வந்து 4-5 மணி நேரத்திற்குள் 5 படி செய்து அரங்கேற்றினேன்.
கொலுப் படி செய்ததை பத்தி அம்மாவுக்கு சொல்லி பெருமைப் படும் போது “ஏண்டா வெறும கொலு மட்டும் வெச்சா போதுமா, பார்க் எதுவும் இல்லையா”ன்னு தன் பங்கிற்கு அம்மா ஒரு பிட் போட, அடுத்த வருஷம் ஒரு மின்சாரத்தில் இயங்கும் ரெயில் வண்டி செட் வாங்கி, ஒரு சில நகாசுகள் செய்து ஒரு சிறிய கிராமம் தயாரித்தோம்.
இதற்குப் பிறகு வருஷா வருஷம் சில சில பொம்மைகளாக சேர்த்து சேர்த்து, போன டிசம்பரில் சென்னை போன போது உச்ச கட்டமாக 4 பெரிய பெட்டி நிறைய பொம்மைகளை அடுக்கிக் கொண்டு வந்தோம்.
இதற்கு இடையில் நான் பார்த்து பார்த்து செய்த 5 படி கொலு 7 வருடங்கள் தாக்கு பிடித்து இந்த வருடம் வளைந்து நெளிந்து “போடா நீயும் உன் கொலுவும்” என்று சற்று முரண்டு பிடிக்க, “இனி வழியே இல்லை என்று ரிச்மண்டின் தென் திசையில் இருக்கும் பார்கவி கணேஷின் வீட்டின் கொலுப் படி செய்த திரு. அனந்தராமன் என்ற பெரியவரை 8 அடி நீளத்தில் 7 படிகள் செய்யச் சொல்லி இந்த வருடம் அதையும் அரங்கேற்றியாயிற்று.
இவரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் பல படங்கள் தரப் பட்டுள்ளது. இவரை பார்த்து பேசிய போது ஒன்னு தெளிவா தெரியுது, கற்றது கையளவு, கல்லாதது உலகளவு-ன்னு. 1952-ல் சென்னை – கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் படிச்சு, படிப்பில் புலின்னு பேர் எடுத்து பல வருடஷங்கள் வட மாநிலத்தில் சிறந்த தொழிலகங்களில் வேலை பார்த்து, 1972-ல் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, விமான நிலயத்திலேயே நிரந்தரக் குடியுரிமை (அதாங்க பச்சை அட்டை) தரப்பட்டு, நியூ ஜெர்சியில் வசிக்கிறார். இவரது வீட்டின் – தப்பு தப்பு தப்பு அது ஒரு கலைக் கோயில் உள்ளே நுழைஞ்சா, ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ ன்னு பாரதி பாடியது போல ‘எங்கெங்கு காணினும் மண்டபமடா’ ங்கர மாதிரி சின்னதும் பெரியதுமா மண்டபங்கள், எல்லாமே இவரது கை வண்ணத்தில் உருவானவை. அது மட்டும் இல்லாமல் படங்களுக்கு செய்யப் பட்டுள்ள ஃப்ரேம்கள், ஸ்டூல்கள் பென்சுகள் என்று பலதிலும் இவரது திறமை பளிச்சிடுகிறது.
வீட்டின் பின்புறம் ஒரு பெரிய இடம் முழுவதும் மழை வெயில் தாக்காமல் பெரிய கொட்டகை – நம்மூர் கீத்துக் கொட்டகை போல வெள்ளை தார்ப் (Tarp) மூலம் மூடி நம்மை கிறங்கடிக்கிறது. அருகில் ஒரு பெரிய தொழிலகமும் அவருடைய கார் நிறுத்துமிடமும் – (இந்த ‘கராஜில்’ ஒரு நாள் கூட தனது காரை இவர் பார்க் செய்ததில்லையாம்.) இவருடைய தொழில் தொடர்பு கருவிகளின் ஆக்ரமிப்பினால் திணறுகிறது. தொழிலகத்தில் சின்ன சின்ன டப்பாக்களில் சைஸ் வாரியாக நட் போல்ட் என்று நேர்த்தியாக வைக்கப் பட்டிருக்கிறது. எதையும் யாரும் தேட வேண்டிய அவசியமே இல்லை.
தினமும் குறைந்தது ஒரு கொலு படி செட்டாவது செய்து விற்பனை செய்கிறார். சில நாட்கள் 2 செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறதாம். கொலுப் படிகளும் சைஸ் வாரியாக செய்கிறார். கேட்ட ‘படி’, கேட்ட படி இவரிடம் கிடைக்கிறது. இவர் பகுதி நேர DJ வாகவும் பணியாற்றுகிறார். இதற்குத் தேவையான ஒலி பெருக்கி சாதனங்கள் ஒரு பெரிய ‘வேன்’ முழுவதும் பக்காவாக நிரம்பியிருக்கிறது.
இவர் தனது கைத்தொழிலை நேசித்து செய்வதாகத் தெரியவில்லை, இவர் அதை சுவாசித்து வாழ்வது போல் இருக்கிறது. இவர்கிட்ட “ஒரு சம்மர் கேம்ப் மாதிரி ஆரம்பித்து உங்க திறமையை ஏன் அடுத்த தலைமுறைக்கு மாத்தி விடக்கூடாது” ன்னு ஒரு பிட் போட்டு பார்த்தேன். அதுக்கு அவர், “செஞ்சுட்டா போச்சு, ஒரு வாரம் வெச்சுக்கலாமா, இல்லை ரெண்டு வாரமா” ன்னு கேட்க, “நான் இதைப் பத்தி எங்க வலைப்பூவில் எழுதிடறேன். அதைப் பார்த்துட்டு யாராவது கேட்டா நானும் ஒரு வாரமோ அல்லது ரெண்டுவாரமோ லீவ் போட்டுட்டு உங்களுக்கு உதவியா இருக்கேன்”ன்னு வாக்கு கொடுத்துட்டு வந்திருக்கேன். அதனால நல்லா யோசிச்சு சொல்லுங்க யாரெல்லாம் ரெடின்னு. அடுத்த வருடம் ஜூலை – ஆகஸ்டில ஏற்பாடு செய்வோம்.
மறுபடி தொடங்கிய தலைப்புக்கு வரேன்.
இப்படியாக எங்க வீட்டு கொலு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று நாகுவின் பதிவிலும் இடம் பிடித்திருக்கிறது.
இந்த முறை கொலுவுக்கு வந்தவங்கள்ள சிலர், “வெறும ரெயில் செட்டை பார்த்து பார்த்து போர் அடிக்குது, வேற ஏதாவது செய்”ன்னு அன்பாக கண்டிச்சுட்டு போயிருக்காங்க. அதனால அடுத்த வருஷ கொலுவில் ஒரு சின்ன தெப்பக் குளம், ஒரு சிறிய பார்க் என்று சில பல நகாசுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில இருக்கேன். யாருக்காவது அதை செய்யரதுக்கான யோசனை தோணித்துனா, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க. இந்த முறை நண்பர் அருண் நடராஜன் - விஜி நடராஜன் வீட்டு கொலுவில சூப்பரா ஒரு பார்க் கட்டியிருந்தார்கள் அதன் செய்முறையை கொஞ்சம் அவர்களுக்கே தெரியாமல் கடத்திக் கொண்டு வந்திருக்கிறேன். எவ்வளவு தூரம் அதன் செய்முறை நான் செய்யும் போது ஞாபகத்தில் இருக்குமோ தெரியாது.சரி

அடுத்த வருடம் கொலுவில் சந்திப்போம்.

-முரளி இராமச்சந்திரன்.

Wednesday, December 08, 2010

படம் பாரு கடி கேளு - 50யோவ் அந்த பட்டன் தான்யா. சட்டுனு அமுக்கி படம் எடுய்யா பரதேசி. நீ வேற படுத்தறியே!
வீட்டுக்காரங்க வர்றதுக்குள்ளே இத்தனையும் முடிச்சுட்டு ஓடணும்.

படம் பாரு கடி கேளு - 49


இங்கே தானே என் சைக்கிளை பார்க் பண்ணினேன்.
ஐயோ! இத்தோட 37 சைக்கிள் ஆச்சு. இதுவாவது திறக்கணுமே!

Saturday, December 04, 2010

படம் பாரு கடி கேளு - 48


போங்கய்யா உங்க "ஹாலோவீனும்" நீங்களும். என் பாடு எனக்கு தான் தெரியும். "நம நமன்னு" சில்மிஷமா அரிக்குது. எந்த தலைன்னு தெரியலியே!!!

Monday, November 29, 2010

படம் பாரு கடி கேளு - 47


பால் சக்கரை வேண்டாம் - அப்படியே சாப்பிடுவேன் !

Sunday, November 28, 2010

படம் பாரு கடி கேளு - 46


ஆமாம் அங்கேதான். பார்த்து சரியா கையெழுத்து போடுங்க. அப்புறம் 'zoo' லிருந்து நீங்க ரிலீஸ் பண்ணலே நானே ஓடிட்டேன்னு பிரச்சனையெல்லாம் வரக்கூடாது சொல்லிட்டேன்.

Tuesday, November 23, 2010

ஒன்று நமது பூமி

மு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு பற்றி அக்டோபர் 13, 2010 அகில இந்திய வானொலி (திருச்சி) நிலையத்தில் ஆற்றிய சொற்பொழிவு இங்கே கேட்கலாம்.

Click here for ஒன்று நமது பூமி. 

அந்த வலைப்பக்கத்தில் பிழை வந்தால், இங்கே வந்து மீண்டும் சொடுக்கவும்.

மீனாவுடன் மிக்சர் 22 - {சித்ரகுப்தா, எடு உன் லெட்ஜரை!}

அறிவிப்பு - இது வழக்கம் போலான நகைச்சுவை பதிவு அல்ல. மனிதத்தோல் போர்த்திய சில மிருகங்களின் அரக்கத்தனத்தில் மனமொடிந்து நான் எழுதிய பதிவு தான் இது. ஆரோக்யமான இருதயம் இருந்தால் மட்டுமே இதை படிக்கவும்.

-------------------------------

அரக்கத்தனமும் அசுரத்தனமும் உலகத்தில் தலைவிரித்து ஆடும் போது கடவுள் அவதாரம் எடுத்து உலகத்தை காப்பார் என்பது நம் புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்தி சொல்கிற ஒரு விஷயம். இன்டர்நெட் வலைப்பூ மூலமாக இத்தனை நாட்களாக இனிமையான விஷயங்களை மட்டுமே பொழுது போக்குக்காக படித்து கொண்டிருந்த எனக்கு நேற்று ஒரு பலமான சாட்டை அடி. மனிதாபிமானம், மனித நேயம் - இதெல்லாம் வெறும் பைத்தியக்கார கனவுகளோ என்று எண்ண வைக்கும் அதிபயங்கரமான அசுரத்தனம் ஒன்றை நேற்று வலைப்பூ மூலம் முதல் தடவையாக பார்த்து தெரிந்து கொண்ட எனக்குள் ஏதோ உறைந்து போன மாதிரியான உணர்வு.

பாசமான உறவுகள், இனிமையான நண்பர்கள் மற்றும் அருமையான சமூக தோழமைகள் - இது தான் நான் சாதாரணமாக வாழும் ஒரு dettol போட்டு அலம்பிய உலகம். நான் பார்க்க உதித்து, அஸ்தமிக்கும் அதே சூரியனின் கீழ் மனிதத்தோல் போர்த்திய பல அசுரர்கள் நடமாடுவது நம்ப விரும்பாமல் நான் இத்தனை நாட்கள் மறுத்திருந்த ஒரு உண்மை. ஆனால் இன்று கண்கட்டவிழ்ந்து ஒரு முட்டாளின் சொர்கத்திலிருந்து வெளியே வந்து விட்ட நான் அதிகம் உணர்வது சீற்றமா, துக்கமா, அருவருப்பா, வெறுமையா? எனக்கு சொல்ல தெரியவில்லை.

பெண்களுக்கு சுதந்திரமும், கல்வியும், வேலை வாய்ப்புக்களும் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் பல இடங்களில் இன்னும் பல இளம் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படுகிறார்கள் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்படுவது முட்டாள்தனமென்றால் ஆமாம், நான் முட்டாள் ராஜ்யத்தின் மகாராணி தான். அதிலும் மூன்று, நாலு, ஐந்து வயது பச்சிளம் குழந்தைகளை அவர்களோட தாய் தந்தை மற்றும் உறவினர்களே சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒரு சில நூறு ரூபாய் தாட்களுக்காக விற்று விடுவதை கேட்டு இதயக்கூடு காலியாகி ஸ்தம்பித்து நிற்பது பைத்தியக்காரத்தனமென்றால் ஆமாம் நான் சட்டையை கிழித்து கொண்டு அலையாத ஒரு பைத்தியக்காரி தான்.

மூக்கில் சளி வந்தால் தானாக துடைக்க தெரியாத மூன்று வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தார் ரோட்டில் தடுக்கி விழுந்தால் சராய்த்து ரத்தம் வரும் கால் முட்டியை பார்த்து பயத்தில் வீறிடும் நாலு வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தன் பெயரையே முழுசாக இன்னும் எழுத தெரியாத ஒரு பச்சிளம் ஐந்து வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? குண்டு திராட்சை கண்களால் பீதியுடன் ஏறிட்டு பார்க்கும் குழந்தையை பலாத்காரம் பண்ணக் கூட ஒரு மனிதனுக்கு மனம் வருமா? சிவன் தலையில் ஊற்றெடுத்து பொங்கி ஓடும் கங்கை நதியில் சாக்கடை நீரை கொட்டக் கூட ஒரு மனிதனால் முடியுமா?

ஒரு மனிதன் அல்ல, பல மனிதர்களால் முடியும் என்பதை நேற்று பார்த்த செய்தியில் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று வயது பெண் குழந்தையை gang rape செய்து, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி ரயில் தண்டவாளத்தில் குப்பை போல தூக்கி விட்டெறிந்து விட்டு போன மனிதர்கள் எந்த நரகத்திலிருந்து தப்பி வந்த அசுரர்கள்? இவர்கள் வாழும் இந்த பூமியில் இன்னும் மழை எப்படி பெய்கிறது? சுனாமி இவர்களை எல்லாம் இழுத்து கடலில் மூழ்கடிக்காமல் ஏன் இன்னும் விட்டு வைத்தது? அந்த குழந்தையை பெற்று விற்ற தாய் தந்தை ஏன் இன்னும் பஸ்பமாகவில்லை? ஆஸ்பத்ரியில் உயிருக்கு அந்த குழந்தை போராடும் போது பச்சிளம் குழந்தைகளிடம் தங்கள் ஆண்மையை காண்பிக்கும் இந்த அராஜகர்களேல்லாம் எப்படி உயிரோடு நடமாடலாம்? இந்த அவலைப் பெண்கள் சுவாசிக்கும் அதே காற்றை இந்த அரக்கர்களும் எப்படி சுவாசிக்கலாம்?

என் கேள்விகளுக்கு பதில் எங்கே? நம் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் சொல்படி பார்த்தால் இந்த அசுரர்களை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்திருக்க வேண்டும். அவர் எங்கே? ஒ மறந்து விட்டேன். அரசன் அன்று கொல்லுவான் ஆனால் தெய்வம் நின்று தான் கொல்லுமோ? என்னால் முடியாது. எனக்கு அந்த பக்குவமும் இல்லை, பொறுமையும் இல்லை. இதோ என் கற்பனை உலகத்தில் நான் இன்றே வழங்கும் தீர்ப்புகள்.

நான் - சித்ரகுப்தா, விலகிக்கொள். இன்று ஒரு நாள் உன் லெட்ஜர் மற்றும் நாற்காலி என் கையில்.

சித்ரகுப்தன் - அப்பாடி! ஒரு நாள் எனன, ஒரு மாசம் வேணும்னாலும் நீயே இந்த வேலையை பாரு. (ஓட்டமாய் ஓடுகிறார்)

சித்ரகுப்தன் நாற்காலியில் நான் - யமதர்மா, இன்று பூமியில் ஒரு சில மனிதர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது. நீங்களே பயந்து எருமையில் ஏறி ஓட்டம்பிடிக்கும் அளவு அசுரத்தனம் எல்லாம் அங்கு நடக்கிறது. அவர்கள் முன் சூரபத்மனும், நரகாசுரனும் கமர்கட் திருடிய சிறு பிள்ளைகளாக தோன்றுகிறார்கள்.

யமதர்மன் - உனது பரிவுரை எனன மீனா?

நான் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் சொல்லொணா கொடுமை செய்யும் மானிடப் பதர்கள் அனைவருக்கும் இந்த நரகம் பற்றாது. புதுசாக ஒன்று நிர்மாணிக்க ஏற்பாடு செய்யுங்கள். எண்ணைக் கொப்பரைக்கு பதில் அங்கு கொதிக்கும் எண்ணைக் கடல் ஒன்றை நிறுவுங்கள். இந்தப் பாவிகளை அந்த கரையோரம் நிறுத்தி, கொதிக்கும் எண்ணை அலை அலையாய் பொங்கி அடித்து அதில் அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெந்து, புண்பட்டு, கதறி சாக வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் அசுரத்தனமாய் தீண்டிய அவர்கள் கைகளை வெட்டி விட்டு பின்பு தான் எண்ணை கடல் கரையோரம் நிற்க வைக்க வேண்டும்.

யமதர்மன் - செய்து விடுகிறேன் மீனா. வேறெதாவது கோரிக்கை உண்டா?

நான் - இன்னும் ஒன்றே ஒன்று மன்னா. இவர்களிடம் கொடுமைப்பட்ட அனைவரின் மனத்திலும் அந்த கொடூரமான நினைவுகளை அகற்றி அவர்கள் மகிழ்ச்சியோடு மற்ற நாட்களை பூமியில் கழிக்க நீங்கள் அருள வேண்டும்.

யமதர்மன் - இல்லை. அது எனக்கு அப்பாற்பட்டது மீனா. நினைவுகளை அகற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. உனது பரிவுரைகளை உடனே அமுலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். இனி, நீ போய் சித்ரகுப்தனை சபைக்கு அனுப்பு.

நான் - அப்படியே ஆகட்டும் காலனே. (வெளியேறுகிறேன்)

-மீனா சங்கரன்