Monday, February 21, 2011

நாளின் நிறம்



பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.

கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-

ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-

பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.

--கவிநயா

பி.கு. நாகு ரொம்ப வருத்தப்பட்டாரேன்னு, இப்போதான் எழுதிய கவிதை இங்கே... சுடச் சுட... :)

11 comments:

  1. அருமையான கவிதை, கவிநயா.
    நாட்களில் இத்தனை குணங்களா?

    இப்படி எல்லாம் நடக்கும்னா, இனி அடிக்கடி வருத்தப்படுகிறேன் :-)

    நிஜமாகவே - சுடச்சுட கவிதை எழுதியதற்கு மனமார்ந்த நன்றி...

    ReplyDelete
  2. கவிநயா,
    வழக்கம்போல அசத்தல் கவிதை. சுடச் சுடவா? தமிழ் சங்கத்து வளைப்பூவிலா? கொஞ்சம் இருங்க கிள்ளிப் பார்த்துக்கரேன்.

    முரளி.

    ReplyDelete
  3. நன்றி நாகு! இங்கே எழுதினாலாச்சும் பின்னூட்டறீங்களான்னு பார்த்தேன்... :)

    ReplyDelete
  4. நன்றி முரளி! நல்ல்ல்ல்லா வலிச்சிருக்குமே! :)

    ReplyDelete
  5. அன்புள்ள நாகு

    நீங்கள் கேட்டதால் கவிதை எழுதிய கவிநயா சுடச்சுட எழுதியிருந்தாலும்
    படிக்கும்போது ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது. கவிதைக்கும் சற்று இடம் ஒதுக்கினால் நிறைய வாசகர்கள் தன் கைவரிசையைக் காட்டவாய்ப்பாக அமையும். என்று தோன்றுகிறது. . என் பாராட்டுகளைத் தெரிவிக்கவும்.

    மு.கோபாலகிருஷ்ணன்.

    ReplyDelete
  6. திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. கவிநயா,

    நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்று இதை தான் பாடி உள்ளனரோ?
    நங்கள் கலர் பார்த்தா தவறு. நீங்கள் கலர் சொன்னா அது கவிதை.
    கதிரவனுடன் இருந்ததால் என்னவோ உங்கள் கவிதை சுட சுட சூடாக இருந்தது.
    கொஞ்சம் நிலவுடனும் இருந்தால் நீங்கள் வானவில்லின் வர்ண ஜாலத்தையும் பார்த்திருக்கலாமோ என்னவோ.
    அது கொஞ்சம் குளிர்ச்சி ஆக கூட இருந்திருக்கும்.

    வேதாந்தி

    ReplyDelete
  8. என்ன வேதாந்தியாரே, இன்னைக்கு 'வேதாந்தம்' கொஞ்சம் ஓவராயிடுச்சா? நிலா வெளிச்சத்துல வானவில் எல்லாம் பாக்கறீங்க? :-)

    ReplyDelete
  9. வாங்க வேதாந்தி.

    //நங்கள் கலர் பார்த்தா தவறு. நீங்கள் கலர் சொன்னா அது கவிதை.//

    உண்மை. ஏன்னா நீங்க பார்க்கறதும் நான் பார்க்கறதும் வேற வேற 'கலர்' :)

    //கதிரவனுடன் இருந்ததால் என்னவோ உங்கள் கவிதை சுட சுட சூடாக இருந்தது.//

    கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் குளிர்ச்சியா இருந்ததுன்னு சொன்னார், நீங்க இப்படி சொல்றீங்களே? :)

    //கொஞ்சம் நிலவுடனும் இருந்தால் நீங்கள் வானவில்லின் வர்ண ஜாலத்தையும் பார்த்திருக்கலாமோ என்னவோ.//

    'நாளை' பற்றிதானே எழுதி இருக்கேன், இரவைப் பற்றி அல்ல. நாகுவுடைய வானவில் கேள்வி எனக்கும் வந்தது :)

    வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  10. நாகு,

    அந்தி பொழுதில் தான் நிறைய வானவில் பார்க்க முடியும்.
    இரவில் கூட வானவில் தெரியும் என்பது விஞ்ஞான உண்மை.
    இதுவும் வேதாந்தம் தான்.

    வேதாந்தி

    ReplyDelete
  11. கவிநயா

    நாள் என்பது ஒரு இரவும் ஒரு பகலும் தானே.
    ஆமா கலர் என்றாலே வேறு வேறு வண்ணம் தானே. அதை தான் நானும் சொன்னேன்.
    ஆனால் என் கலர் கதை!!! ஆயிடும். உங்கள் கலர் மட்டும் கவிதை ஆஹி விட்டது.
    உண்மையிலே கவிதை மிக்க நன்றாக உள்ளது.

    வேதந்தியுடன் வேதாந்தம் கூடாது.


    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!