Sunday, March 27, 2011

கோமாதா எங்கள் குலமாதா - ஒரு கண்ணோட்டம்....

'கோமாதா எங்கள் குலமாதா' என்ற கட்டுரை ரொம்பவே சென்ட்டிமேன்ட்டலாக இருந்தது. வீட்டுப் பசு என்ன, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் இறந்தாலும் இதுபோலவே சோகப் படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆமாம், பசுமாட்டின் மீது காட்டுவதுபோல் காளை மாட்டுக்கு ஏன் காட்டுவதில்லை? இருந்த இடத்திலேயே நின்று தின்னும் பசுவிடம் பால் கறக்கப் படுகிறது. அது ஒன்றும் விரும்பிக் கொடுப்பதில்லை. செயற்கைக் கருத்தரித்தல் வரும் முன்பு செக்ஸ் சுகம் கூட அனுபவித்தது. எருது, சுமை இழுக்கிறது, உழுகிறது, தண்ணீர் இறைக்கிறது, சுண்ணாம்புக் கலவை அரைக்கிறது. அதற்கு ஒரு சுகமும் இல்லை, உண்பது தவிர. இந்த வேலைகளுக்கெல்லாம் இயந்திரங்கள் வந்து விட்டதால் எருது வளர்க்கப்பட்டு, கசாப்புக் கடைக்குத்தான் அனுப்பப் படுகிறது. காப்பகங்கள் யாவும் பசுக்களுக்குத்தாம். (ஹிந்து சமூகத்தில் பசுவுக்குக் காட்டப்படும் பாசம் எருமைக்கு இல்லை. இந்தியாவில் எருமைப்பால் உற்பத்திதான் அதிகம். நிற வெறி காரணமோ?) குடும்பச் சூழலில் ஆண்களுக்குக் கிடைக்கும் recognition, பாசம் போல்தான் எருதுக்கும் போல. இந்திய சினிமாவில் தாய் சென்ட்டிமென்ட் போல் தந்தை சென்ட்டிமென்ட் இருக்கா?
அடுத்ததாக, இறப்பையும் பிரிவையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. மாறிவரும் காலத்திற்கேற்ப முதியோர் இல்லத்தை முதியோர் பலர் தாமே opt செய்கின்றனர். அவர்களுடைய மக்களை அவர்கள் நொந்து கொள்வதில்லை. பெற்றோர்களும் பல்வகைப் பட்டவர்கள்தாம். பாரபட்சம் காட்டுதல், சுயநலம் போன்ற குணங்களைக் கொண்ட பெற்றோர் இல்லையா? இதனால், மக்கள் தம் பெற்றோரை ஆதரிக்கத் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. தாம் பெற்றது இறந்தால் படும் சோகம் தம்மைப் பெற்றவர் மறையும்போது இருக்காதுதான். இது இயற்கை. பாசம் ஆற்றொழுக்குப் போலக் கீழ் நோக்கித்தான் செல்லும்.

Saturday, March 26, 2011

புரட்சிகுளிர் என்னும் அரக்கனின்
அடக்குமுறையிலிருந்து
வெடித்துக் கிளம்பிய
வசந்த கால
மஞ்சள் புரட்சி!

Wednesday, March 23, 2011

கோமாதா என் குலமாதா

            பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. முற்றிலும் புதிய சூழலில் வாழும் இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு இதை ஒரு சம்பவமாக பதிவு செய்வது தேவையா என்று கூட தோன்றலாம். இருந்தாலும் இதை அறிந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

      எங்கள் குடும்பம் கிராமத்தில்  விவசாயம் செய்து வாழ்ந்த ஓரளவு வசதி படைத்த குடும்பம். வீட்டின் பின்புறத்தில் முற்றத்தையொட்டி ஒரு மாட்டுப்பட்டி. கறவை மாடுகளும் கன்றுக்குட்டிகளும் ஐந்து அல்லது ஆறுக்கு குறையாமல் எப்பொழுதும் அங்கே இருக்கும். வீட்டின் பின்புறத்தில் உள்ள பெரிய தோப்பில் இன்னொரு பட்டி. அந்த பட்டியில் உழவு மாடுகளும் சில எருமைகளும் இருக்கும். 
 
          வீட்டின் உள்ளே இருக்கும் சிறிய பட்டியில் மற்ற எல்லா பசுக்களுக்கும் இடையில் ஒரு வெள்ளை நிறப் பசு உண்டு. வெள்ளை  கிடாரி என்று எல்லோரும் அதை குறிப்பிடுவது வழக்கம்.  சலவை செய்யப்பட்ட வேஷ்டி போல தூய வெள்ளை நிறத்தில் அந்த பசு கம்பீரமாக, ஆனால் அமைதியாக நிற்கும். சிறிய கொம்பு. யார் வேண்டுமானாலும் பக்கத்தில் தைரியமாக போகலாம். முட்டாது. யார் வேண்டுமானாலும் அதனிடம் பால் கறக்கலாம். உதைக்காது.
 
         வீட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் அந்த பசு கொடுத்த பாலில்தான் வளர்ந்ததாக அம்மா அடிக்கடி  சொல்வாள் .வீட்டில் உள்ள சில உழவு காளைகளும்அந்த பசு ஈன்ற கன்று குட்டிகள்தான் நானும் என் அண்ணனும் பக்கத்து கிராமத்தில் உள்ள பள்ளிகூடத்துக்கு போக ஒத்தை மாட்டு வண்டியில் கட்டபபடும் காளையும்அந்த வெள்ளை கிடாரி ஈன்ற கன்று தான் என்று என் அப்பா கூறுவார்.
            எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் வெள்ளை கிடாரி பால் வற்றிப்போய்விட்டது. இந்த காலத்தில் பால் வற்றிப்போன மாடுகளை  அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் வீட்டில் உள்ள பால் வற்றிப்போன மாடுகளை விற்கும் வழக்கம் இல்லை.
           இதெல்லாம் பழைய கதை.
 
         இப்பொழுது  அந்த வெள்ளை கிடாரி மேய்ச்சலுக்கு  கூட வெளியே போவதில்லை. மிக மெதுவாக நடப்பதால் பட்டியிலேயே அதற்கு புல்லையும் வைக்கோலையும் வேலைக்காரர்கள் போட்டார்கள். மாட்டுக்கு பல் தேய்ந்து போய்விட்டது.  வைக்கோலை அதக்கி விட்டு வெளியே போட்டுவிடுகிறது. தீனி கூட சரியாக எடுப்பதில்லை. அப்பா ஒரு நாள் சொன்னார், "வெள்ளை கிடாரி இன்னும் அதிக நாள் தாங்காது தீனியை தள்ளிவிட்டது" என்று. 
           நான் பட்டியில் போய் அந்த பசுவை பார்த்தேன். பழைய தூய வெள்ளை நிறம் கூட இல்லை. சற்று மங்கிய வெள்ளை .கீழே விழுந்ததால் பின்புறம் ஏற்பட்ட புண்ணில் உட்காரும் ஈயை விரட்ட கூட வேகமாக வாலை  அசைக்க முடியவில்லை  நான் சிறிய புல்லுக்கட்டை எடுத்து கொஞ்சம் புல்லை எடுத்து அதன் வாயருகில் கொண்டு போனேன். சற்று நேரம் புல்லை வெறிக்கப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டுபிறகு நாக்கால் நக்கியது.  பிறகு கீழே தள்ளிவிட்டது.

          நான்கைந்து நாட்களுக்குப்  பிறகு அந்த வெள்ளை கிடாரி படுத்துவிட்டது. காலையில் எவ்வளவோ முயற்சி செய்தும் அது எழுந்திருக்கவில்லை. பக்கத்தில் உள்ள மற்ற பசுமாட்டையும் கன்றுகளையும் வேலைக்காரர்கள் அப்புறப்படுத்தி விட்டு அது படுக்க தாராளமாக இடத்தை ஏற்பாடு செய்தனர். நான்கு கால்களையும் நீட்டி அந்த கிடாரிப்பசு படுத்திருந்த காட்சியை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அவ்வப்போது தலையை அசைத்துக் கொண்டிருந்தது.
            அடுத்த வாரம் ஒரு நாள் காலை நான் எழுந்திருந்தபோது என் அம்மா "வெள்ளைக் கிடாரி செத்துப்போச்சு " என்றாள் நான் ஓடிப்போய் பட்டியில் பார்த்தேன். நான்கு  கால்களை நீட்டியபடி தலை ஒரு புறம் சாய்ந்து அந்த பசு இறந்துகிடந்ததைப் பார்த்ததும் எனக்கு என்னவோ செய்தது. அழுகை அழுகையாக வந்தது.கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தேன், என் அம்மா முகம் கலங்கியிருந்தது.அம்மா செயலிலும் ஒரே குழப்பம் தெரிந்தது. அப்பா நீண்ட நேரம் பக்கத்தில் நின்று இறந்துகிடந்த மாட்டை  பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வேலைக்காரனை கூப்பிட்டு இறந்த மாட்டை எடுப்பதற்கு ஆட்களை கொண்டுவரச்  சொன்னார்.
           என் அம்மா என்னைக் கூப்பிட்டு "பாட்டியிடம் போய் சொல் " என்றாள். பத்து வீடு தள்ளி என் சித்தப்பா வீட்டில் இருந்த பாட்டியிடம் போய் "பாட்டி வெள்ளைக் கிடாரி செத்துப் போச்சு" என்றேன். "அப்படியா" என்று கேட்ட பாட்டி சற்று நேரம் மனக்கலக்கத்துடன் அமைதியாக நின்றாள். நான் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அம்மாவிடம் நான் இன்னிக்கு பள்ளிக்கூடம் போகவில்லை" என்றேன். அம்மா சரி என்று சொல்லி விட்டாள்
 
          சற்று நேரத்தில் எங்க பாட்டி கொல்லைப்புறமாக மெதுவாக நடந்து மாட்டு பட்டிக்கு வந்தாள் "நீ எதற்காக இப்படி கஷ்டப்பட்டு நடந்து வரணும் " என்று கேட்டுவிட்டு பாட்டி உட்கார ஒரு நாற்காலியை கொண்டு வந்து முற்றத்தில் போட்டார். பாட்டி நாற்காலியில் உட்கார்ந்தாள். உட்கார்ந்தபடி பாட்டிவெள்ளைக் கிடாரியின் பாரம்பரியத்தைப்  பற்றி, அதன் தாய் சிவப்புப்பசுவின் பெருமை பற்றி, அந்த காலத்தில் அதுகொடுத்த பால் பற்றி பழைய கதையை எல்லாம் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். என் அம்மா அடுக்களை  வேலையை  எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர்களை கவனிக்கவும் பாட்டியிடம் பேசுவதுமாக இருந்தாள்
      
பாட்டி வேலைக்காரனைக் கூப்பிட்டு" கோயில் பண்டாரத்திடம் போய் கொஞ்சம் பூ வாங்கிக்கொண்டு வா" என்றாள் சற்று நேராத்தில் பூ வந்து சேர்ந்தது. என் அம்மாவைக் கூப்பிட்டு இறந்து கிடந்த வெள்ளைக் கிடாரியின் முகத்தில் மஞ்சளையும் குங்குமத்தையும் இடச் சொன்னாள் இரு கொம்புகளுக்கு இடையிலும்  கழுத்திலும் பூவை கட்டும்படி வேலைக்காரனிடம் கூறினாள் அவனும் அப்படியே செய்தான். எல்லாம் முடிந்த பிறகு மஞ்சளை கையில் வைத்துக்கொண்டு என் அம்மா புடவைத் தலைப்பால் கண்ணை துடைத்துக்கொண்டாள்.
 
            சற்று நேரத்தில் பண்ணை  ஆள் நான்கு பேரோடு வந்து சேர்ந்தான்.வந்தவர்கள் ஒரு பெரிய கனமான கழியைக் கொண்டு வந்தார்கள். வந்த நான்கு பேரும் இறந்து கிடந்த அந்த கிழட்டு பசுவின் இரன்டு முன்னங்கால்களையும் ஒன்றாக ஒரு கயிற்றைக் கொண்டு வரிந்து  காட்டினார்கள் அப்படியே பின்னங்கால்களையும் ஒரு சேரக் கட்டினார்கள். கட்டப்பட்ட இரு கால்களுக்கும் இடையே அந்த பெரிய கழியை செலுத்தினார்கள்.
   என் வீட்டில் உள்ள வயதான வேலைக்காரி அம்மா எல்லோரும் கும்பிடுங்க அம்மா என்றாள் என் அம்மாவும் பக்கத்தில் இருந்த சில பெண்களும  விழுந்து கும்பிட்டார்கள்.  அந்த நான்கு ஆட்களும்
"சரி தூக்குடா என்று ஒரு குரல் கொடுத்தவாறே இரன்டு பக்கமும் தூக்கி தோளில் வைத்துக்கொண்டார்கள். வெள்ளைக் கிடாரி இப்பொழுது தன் இறுதிப் பயணத்தை தொடங்கி விட்டது. தலை மட்டும் தனியாக அந்தரத்தில் ஆடுவதைப் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. இவ்வளவு நேரமும் என் அப்பா வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மேல் துண்டை தலைப்பாவாக கட்டிக்கொண்டு அவர்களுடைய வேலையில் உதவியாக இருந்தார்.  
 
       அவர்கள் தோளில் தூக்கிக்கொண்டு புறப்பட்டபோது என் அம்மா ஓவென்று கதறி அழுதபடி அவர்களுக்கு அருகில் போனாள் அதைப் பார்த்தோ என்னவோ நானும் அழுதேன். என் பக்கத்தில் நின்ற தங்கையும் அழுதாள் . அருகில் நெருங்கிய அம்மாவைப் பார்த்து அப்பா "சரி சரி போ அந்தப் பக்கம். " என்று கூறி  அம்மாவை மெதுவாக தள்ளினார்.
       மாட்டை தூக்கிக்கொண்டு போனவர்கள் கொல்லைப் புறம் நெருங்கியதும் என் அப்பா தலைப்பாவாக கட்டியிருந்த மேல் துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார். கண்ணில் கசிந்த கண்ணீரை துடைக்கத்தான் அப்பா அப்படி முகத்தை துடைத்துக் கொண்டார் என்பதை என்னால் அப்பொழுது உணர முடிந்தது.
        ஏனோ தெரியவில்லை என் சிறுவயது காலத்தில் நடந்த இந்த சம்பவம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். குறிப்பாக நிர்ப்பந்தம் காரணமாகவோ, பாசம் பற்றாக் குறை காரணமாகவோ, வேறு ஏதோ காரணத்துக்காக முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்ட பெற்றோர்களை பார்க்கும்போது அவர்கள் நிலை பற்றி கேள்விப் படும்போது இந்த பழைய சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.
 
 - மு .கோபாலகிருஷ்ணன்

Wednesday, March 16, 2011

புகுஷிமாவின் ஐம்பது சாமுராய்கள், ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை!


ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்களை வெகு காலமாக உலகப்போர்  வரலாறு மூலம் பலரும் எடுத்துகாட்டியதுண்டு.  இப்போது நம் காலத்தில் அதை மீண்டும் நேரடியாக  உணர வேண்டியிருக்கும் என நான் நினைத்து பார்க்கவில்லை. கடந்த வாரம் வந்த 9.0 நிலநடுக்கமும் அதை தொடர்ந்து வந்த சுனாமியும் முடிந்த போது சரி இத்தோடு விட்டதே இயற்கை என்று நினைத்தால்,  அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவுகிறது! 

ஒரு பெரும் நகரத்தில் மின்சாரம் இல்லை, எரிபொருள்  தட்டுப்பாடு, நீர் மற்றும் உணவு தட்டுப்பாடு, இவை நடுவே உற்றார் உறவினரை தொலைத்து முகாமில் தங்கி இருக்கும் போதும் அம்மக்களின் முகத்தில் ஒரு அசாதாரண எழுச்சி தெரிகிறது. எவரும் ஆளும் கட்சியையோ அரசாங்கத்தையோ திட்டி கோஷம் போடவில்லை. நில நடுக்கம் வந்த போது அங்காடியிலிருந்து வெளியே ஓடிய மக்கள் அது முடிந்த பின் எடுத்த பொருளுக்கு பணம் கட்ட  உள்ளே வந்து நின்றது வேறு எங்கும் நடக்காது. மீண்டும் திங்கள் அன்று எல்லோரும் (ரயில் மற்றும் எந்த போக்குவரத்தும் இல்லாதபோதும்) தம் வேலைக்கு திரும்பிவிட்டனர்! 

வாகனங்கள் பெட்ரோல் போட நிற்கும் வரிசையில் ஒரு ஒழுங்கு/பொறுமை, இருக்கும் சின்ன உணவு பொட்டலத்தை முகம் தெரியாத பிறர்க்கு பகிர்ந்தளிக்கும் முதியவர்,  அங்காடிகள் இருக்கும் உணவு பொருட்களை அநியாய விலைக்கு விற்காமல் விலையை குறைத்து விற்பது, ஒரு இடத்தில கூட கடை சூறையாடல் போன்ற வன்முறை இல்லாதது, இந்த பகுதி மக்களுக்காக மொத்த ஜப்பானியர்களும் சிக்கனமாக எரி பொருள் செலவு செய்தல், ஒருவருக்கு ஒரு பாட்டில் குடிநீர் என்ற போதும் சண்டையிடாமல் வாங்கி செல்தல், சிலருக்கு நீர் திறந்துவிட்டது என்று சொன்ன பின்பும் சத்தம் ஏதும் இல்லாமல் வீடு திரும்புதல் என ஒழுக்கம், கட்டுப்பாடு, நாட்டுப்பற்று, மனித நேயமும்  தாங்கள் என்றும் பின்பற்றுபவர்கள் என மீண்டும் நிரூபித்துள்ளனர். 


# புகுஷிமாவின் ஐம்பது சாமுராய்கள்

  அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவும் இடத்தில் முகம் தெரியாத  (எந்த கட்டாயமும் இல்லாமல் தாமே முன் வந்த) ஐம்பது பேர் மட்டும் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த அணு உலை ஆலையில் தீயை அணைக்கவும், வெப்பத்தை கட்டுபடுத்தவும் மின்சாரம் இல்லாமல் உடல் உழைப்பில் வேலை செய்துகொண்டுள்ளார்கள்! இவர்கள் மீண்டும் திரும்பி வருவார்களா என தெரியாது, அப்படி வந்தாலும் பெரும் உடல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் தம் நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாதென தம்முயிரையும் கொடுக்கும் இவர்கள் தான் நிஜ சாமுராய்கள். பல நாட்கள் இவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது நடக்கும் ஒரு உரையாடல் - இது போல ஒரு ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதே! 
தம் மனைவி மக்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் இந்த ஆபத்தான இடத்தில இருக்க முடிவு செய்வதை என்னவென்று சொல்வது!  

என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜப்பானிய பெண் இவை  தனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை என சாதாரணமாக சொன்னார்.  "வீண் ஆர்ப்பாட்டமும், குழப்பமும் அந்த இடத்தை மேலும் மோசமாகவே ஆக்கிவிடும் அதனால் எல்லோரும் பொறுமையாகவே இருப்போம்! பொதுவாக எங்களுக்கு முதலில்  நாடும், நாட்டு  மக்களும், பிறகே தம் குடும்பம், ஆகவே இந்த ஐம்பது பேர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள்" என்றார்.  அமெரிக்கர் ஒருவர் சொன்னது "இங்கு நாங்கள் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் எமக்கு எது நல்லதோ அதை தான் செய்வோம்.  ஜப்பானியர் நாட்டை நேசிப்பவர்கள், நாட்டிற்கு எது நல்லதோ அதையே செய்வார்கள்.". ஒரு நாட்டில் வெகு சில மனித நேயமிக்கவர்களை காண்பது அதிசயமில்லை. பெரும்பாலானவர்கள் மனித நேயமிக்கவர் என்பது வேறு எங்கும் காண இயலாது. 

தற்போது நம்மால் முடிந்தது அவர்களுக்காக பிரார்த்திப்பது
ம்
,  முடிந்தால் http://www.redcross.org/ ரெட்கிராஸ் தளத்தில் (ஜப்பான் நில நடுக்கம் என்ற முதல் ஆப்ஷன் தெரிவு செய்யவும்) பண உதவி செய்வதுமே [::ஜாக்கிரதை:: - வேறு பல போலி இணைய தளங்கள் பணம் சேர்க்க  உலவுகின்றன, செய்யும் உதவி பலனில்லாமல் போகலாம்]

 ட்விட்டரில் தற்போது அதிகம் பேர் ட்விட் செய்யும் இந்த வாக்கியம் தான் எனக்கும் அவர்களுக்கு சொல்ல தோன்றியது. 
 "Ganbatte Nihon"  - "Do your best, Japan. Never give up." ( மன்னிக்கவும் இதற்கு எனது தமிழாக்கம் தகுந்த நிறை செய்யவில்லை).

Tuesday, March 15, 2011

வம்பு

வம்பு

அன்பு என்று சொல்லி
பண்பை சொல்ல அது வம்பாய் மாறி
என் என்பு எங்கு என்று
கேட்கும் அளவுக்கு கம்பு பேசியது என்றால்
அது வம்பா? இல்லை என் தெம்பா?

நண்பா நீ என்னை நம்பு.
நான் தூக்க சொல்ல வில்லை சொம்பு.
வம்பாய் நீயும் மறுக்காமல்
தமிழ் மன்றத்தில் இடு ஒரு வெண்பா.

சிலம்பின் வம்பு காப்பியம்
சினத்தின் வம்பு நெற்றிக்கண்
பழத்தின் வம்பு திருவிளையாடல்
நம்மின் வம்பு நாளைய ....

அது இந்த தமிழ் மன்றம் சொல்லட்டும்
வா நாம் வம்பு பேசலாம். அது பயனுள்ளதாக இருக்கட்டும்.

வேதாந்தி

Monday, March 14, 2011

பஹாமாஸ் விஜயம் - 3

முதல் நாள் இரவு கப்பலில் சாப்பாடு முடிந்ததும் ஒரு சின்ன வாக்கிங் போயிட்டு ரூமுக்கு வந்தால் ஒரு பொம்மை செய்து கட்டிலின் மேலே தொங்க விட்டிருந்தார் எங்கள் அறையை சுத்தம் செய்யும் ஒரு கப்பல் சிப்பந்தி லீ ராய். அது என்னங்கரதை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கேன். நாங்கள் கப்பலில் இருந்த நான்கு நாட்களும் காலையில் வந்து அறையை சுத்தம் செய்து, படுக்கையை சரி செய்து, எல்லா இடத்தையும் பளபளவென்று செய்து எங்க வீட்டு அம்மணி கிட்ட நல்லா திட்டு வாங்க ஒரு வசதி செய்து விட்டு போயிடுவார். சும்மா சொல்லகூடாது செய்யர வேலையை ஒழுங்காதான் செய்யறார். மறுபடி இரவு 8 மணிக்கு வந்து படுக்கையை சரி செய்து, சோபாவை படுக்கையாக மாற்றிவிட்டு, துண்டு சோப்பு சீப்பு எல்லாம் மாத்திட்டு, ஒவ்வொரு தலையணை மேலும் ஒரு சின்ன சாக்கலேட் வெச்சுட்டு, ஒரு துண்டுல சின்ன பொம்மை செய்து தொங்க விட்டுட்டு போயிடுவார்.

சாப்பாடு பரிமாறும் சிப்பந்திகளின் தலைவர் நம்ம மும்பையை சேர்ந்த ஒருவர். எங்களை ரொம்ப நல்லா பார்த்துகிட்டார், ஆனா அப்பப்ப வந்து சின்னதா ஜல்லி அடிச்சுட்டு போயிடுவார்.

ராத்திரி ரூமுக்கு வந்தா கப்பலின் ஆட்டம் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம்ன்னா சாதாரண ஆட்டந்தான், ஆனா அதோட எஃபெக்ட் கேப்டன் பிரபாகரன் படத்தில ரம்யா க்ருஷ்ணன் போட்ட கெட்ட ஆட்டத்தை விட கேவலமா ஒரு ஆட்டம் என் காதுக்குள் போட்டு எப்படா இது நிக்கும்னு தோணித்து. இப்படி இருக்கும்னு பல பேர் சொன்னதால, கப்பல் ஏற்றதுக்கு முன்னாடியே, காதுக்கு பின்புறம் தடவ ஒரு தைலம், கைல போட்டுக்க க்ரிப், உள்ளுக்கு சாப்பிட மருந்துன்னு ஒரு சின்ன மெடிகல் ஷாப்பே கைல இருந்தது. அதையெல்லாம் போட்டுகிட்டு ரூமை விட்டு வெளியில வந்ததும் என்னவோ பெரிய போருக்கு போற மாதிரி ஒரு பில்டப் கிடைச்சுது. இதுலயும் ஒரு ஆச்சர்யமான விஷயம், மஹிமாவுக்கும் மாதுரிக்கும் ஒரு சின்ன ஆட்டமும் இல்லாம சாதாரணமா விளையாடிகிட்டு இருந்தாங்க, அது எப்படின்னு தெரியலை.

இப்படியாக பலப் பல எதிர்பார்புகளோட துவங்கிய எங்கள் கப்பல் பயணத்தின் முதல் நாள் சின்ன ஆட்டம் பாட்டங்களோட முடிய மறுநாள் காலை கோகோகே பீச்சு போவதாகப் ப்ளான் (எனக்கு தெரிஞ்சு க கா கி கீ கு கூ கெ கே தானேன்னு ப்ளேடு போடாதீங்க) இது ராயல் கரீபியன் கப்பல் கம்பெனியின் சொந்த தீவு.

செவ்வாய் விடிய காலையில் அந்த தீவின் அருகில் நங்கூரம் போட்டு கப்பலை ஆடாமல் அசையாமல் நிறுந்தி விட்டு, “ஹும் வாங்க வாங்க”ன்னு மிரட்டாத குறையா கூப்பிட்டு போனாங்க. நாம எப்படி பட்ட ஆளு, சாதாரணமாவே ப்ரேக் ஃபாஸ்ட்ன்னு ஒன்னு வெச்சா பொளந்து கட்ற கூட்டம், இப்படி பலப் பல வகைகளை வெச்சு வேணும்னா சாப்பிடுன்னு சொன்னதுக்கு அப்புறம் சாபிடலைன்னா அவங்க மனசு கஷ்டப்படுமில்லையா அதனால அந்த வெரைட்டியான ப்ரேக் ஃபாஸ்ட்டை ஒரு காட்டு காட்டிட்டு பொறுமையா விடிய காலைல தீவுக்கு போனவங்க எல்லாம் கப்பலுக்குத் திரும்ப வர ஆரம்பிக்கும் போது நாங்க சாவகாசமாக தீவுக்கு புறப்பட்டு போனோம்.

நாங்க போயிட்டு வந்த கப்பல்
தீவுல ஸ்நார்கலிங் என்ற ஒரு பயிற்சிக்கு பணம் கட்டியிருந்தோம். நான் பெரிய பருப்பு மாதிரி, ‘எவ்வளவு ஆழம் இருக்கும்”ன்னு கேட்டதும் ஒரு சிப்பந்தி “அது ஒன்னும் பெரிசில்ல ஒரு அடில இருந்து 4 அடிவரைக்கும் ஒரு பகுதி, உனக்கு தோதா ஒரு 15 ல இருந்து 35 அடி வரைக்கும் இன்னோரு பகுதி”ன்னு என் நீச்சல் திறமையை அவன் கொடுத்த ஸ்விம் ட்ரெஸ்சை நான் போட்டுகிட்டு நின்ன ஸ்டைல பார்த்தே கண்டுபிடிச்சிட்டான். அவனை அமெரிக்காவின் துப்பறியும் சாம்புன்னு அறிவிக்கலாம்னா அவனுக்கு பாவம் தமிழ் தெரியாதேன்னு விட்டுட்டேன். மகா ஜனங்களே காசு நிறைய இருந்தா இப்படி ஸ்நார்கலிங்குகெல்லாம் பணம் கட்டாம என்கிட்ட கொடுங்க உங்க பெண்/பையன் கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்து வயிறார சாப்பிட்டுட்டு, வாய் நிறைய வாழ்த்திட்டு, ஒரு சின்ன சோப்பு டப்பா பரிசா கொடுக்கறேன்.

சரி பணத்தை கட்டிட்டோமேன்னு ஸ்நார்கலிங் போகலாம்னு தண்ணில இறங்கினா, கச்சா முச்சான்னு காலெல்லாம் கல்லு கல்லா குத்துது, சரி நம்ம ரேஞ்சுக்கு இதுலெல்லாம் போகமுடியாதுன்னு வெளில வரலாம்னா, நம்ம வீட்டுக்காரம்மா, “ஏங்க கொடுத்த காசுக்கு ஒரு தடவை நல்லா தண்ணில நனைஞ்சுட்டாவது வாங்க, இப்படி வெறும வந்தா அக்கம் பக்கத்துல பார்த்தா நம்மள பத்தி தப்பா நினைப்பாங்க” ன்னு அன்பாக எடுத்து சொன்னதும், சரி நம்மள வெச்சு இன்னிக்கு காமெடி பண்ணரதுன்னு முடிவு பண்னிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நானும் குட்டைல ஊறின ஒரு ஜந்து மாதிரி எவ்வளவு நேரம்தான் இருக்கரது, சின்ன சின்ன வாண்டுங்கள்லாம் சூப்பரா நீச்சல் அடிக்கும் போது, நமக்கு அது தெரியாதுன்னு அவங்களுக்குத் தெரியரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும், சொல்லுங்க. நாம பள்ளிக்கூடத்தில வெளில முட்டி போட்டு கிட்டு இருக்கர அழகைப் பாத்து டீச்சரே “ஹூம் போனா போகுது நாளைக்கு ஒழுங்கா பாடம் படிச்சிட்டு வந்திடுன்னு” சொல்ல வெச்சவங்களாச்சே, ஒரு 30 நிமிஷத்துக்கு அப்புறம் எங்க வீட்டில “ஏங்க இப்படியே தண்ணில இருந்தா உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது, போதும் வந்திடுங்க”ன்னு சொல்ற வரைக்கும் தண்ணிலயே இருந்து மைக்கேல் பெல்ஃப்ஸ், பதக்கம் வாங்கிட்டு வந்த ஸ்டைல் தோக்கரமாதிரி வந்தம்ல.

அந்தத்தீவு ஆனா அநியாயத்துக்கு அமைதியா இருக்குங்க. அங்கு கடை போட்டிருந்த பல பேர எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, அவங்க எல்லாம் கப்பல்ல வேலை செய்யரவங்க. இது கப்பல் கம்பெனியோட சொந்தத் தீவு அதனால கப்பல்ல மக்களை கொண்டுவரும்போது, கடைக்கு வேலைக்கும் ஆட்களையும் கொண்டு வந்துடராங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, இது எப்படி இருக்கு.

இங்க ஒரு க்ளாஸ் பாட்டம் ட்ரிப்ன்னு ஒன்னு இருக்கு கண்டிப்பா போய் பாருங்க, தண்ணி ஸ்படிகம் மாதிரி இருக்க, அதுல இருக்கர மீன்களை பாக்கரது அழகோ அழகு. அப்பப்ப சுறா – பயப்படாதீங்க நம்ம நடிகர் விஜய் இல்லை, நிஜ சுறாமீன், டால்ஃபின், கடல் பசு எல்லாம் பாக்கலாம். இந்தத் தீவுல நம்ம குழந்தைகளை கொஞ்சம் காபந்து பண்ணி கூட்டிகிட்டு போய், கூட்டிகிட்டு வரணும். அங்கங்க சில பல இளஞ்சோடிகள் ரொம்ப ‘அன்யோன்யமா’ இருப்பாங்க, அவ்வளவா நல்லது இல்லை சொல்லிட்டேன்.

ஆஹா ஆனந்தமா இருக்கேன்னு அங்கங்க கட்டித் தொங்க விட்டிருக்கர தூளியில கொஞ்சம் படுத்தா அட அட அந்த சுகமே தனிங்க. தூளின்னா என்னவா? அதாங்க ஹம்மாக். என்னங்க இது தமிழ் பாடத்துக்கு விளக்கமா கோனார் நோட்ஸ் கேக்கர இஸ்கூல் பசங்க மாதிரி கேள்வி கேக்கரீங்க.

ஆமா கதையை எங்க விட்டேன், ஆங் தூளில படுத்துகிட்டு ஒரு சின்ன தீவுல காத்து வாங்கிகிட்டு இருந்தேன், பட்டுன்னு எங்க வீட்டுகாரம்மா வந்து “என்னங்க இன்னிக்கு ஃபார்மல் நைட் அதனால கப்பலுக்கு போய் நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டுதான் சாப்பிட போகனும் ஞாபகம் வெச்சுக்கங்க”ன்னு சொல்லி ஃப்யூஸை பிடிங்கிட்டாங்க. ஃபார்மல் ட்ரெஸ் போட்டுகிட்டு போய் சாப்பிடனும்னா கோட்டு டை போட்டு, கல்யாண ரிசப்ஷன் போல அலங்காரம் பண்ணிகிட்டு போகனும்னு அர்த்தம். எந்த மடையன் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினானோ அவனை கொஞ்சம் தனியா கவனிக்கனும். சும்மா சொகுசு கப்பல் ஏறி பஹாமாஸ் பாத்தமா, போக வர கப்பல்ல சுத்தி சுத்தி வந்தமா, தேவைப்பட்ட போதெல்லாம் சாப்பாடு அறைக்கு போய் கிடைச்சதையெல்லாம் சாப்பிட்டமா, நல்லா நாலு அஞ்சு பவுண்டு எடையை ஏத்தினமான்னு இல்லாத, இப்படி கோட்டு டைய்ன்னு படுத்தராங்க. நாங்க போன கப்பல் பரவாயில்லையாம், என் மனைவிக்கு தெரிஞ்ச ஒருத்தர் இது மாதிரி ஒரு கப்பல்ல போகனும்னு எடையை குறைச்சுட்டுப் போனாங்களாம், அப்படி ஒரு கண்டிஷன் இருந்த்தாம் அவங்க கப்பல்ல.

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம விட்டுட்டேன். கப்பல்ல அங்கங்கே காமிராவும் கையுமா 4-5 ஆட்கள் அலைவாங்க இங்கன நில்லுங்க அங்கன நில்லுங்கன ஒரு படம் எடுக்கறேன்னு அலப்பரை பண்ணி படம் எடுப்பானுவ, அங்கங்க நம்மூர் கிராமத்து திருவிழால இருக்கரமாதிரி படுதா கட்டி நடுவில நம்ம எல்லோரையும் நிக்க வெச்சு படம் பிடிப்பானுவ. இவனுங்க தொல்லை இல்லாத ஒரே இடம் உங்க ரூம் மட்டும்தான். ஒவ்வொரு படமும் $19.95+ வரி, எப்படியும் ஒரு 200$ இதுல தண்டமா போயிடும தயாரா இருங்க.

நாகு, நான் அந்த சீனப் பெண் பேசியதை எழுதியதை நீங்க நிஜம்னு நம்பளைன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொல்லனும்னா, அந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும், பிறகு எங்களுக்கும் வெயிட்டர் ஜார்ஜ்ஜுக்கும் நடந்த உரையாடலை ஒரு சின்ன காமெடி நாடகமாகவே போடலாம். ஆனால், அந்தப் பெண் மற்றும் ஜார்ஜ் போன்ற பல சீன நாட்டினர்களை அந்தக் கப்பல்ல பார்த்தேன், அவங்களோட அந்த தைரியம் நிஜமாகவே பாரட்டப் படவேண்டியதுதான். அங்கு வெயிட்டராக இருக்கும் பல இந்தியர்களையும், தமிழர்களையும் பார்த்தேன் அவர்களும் ஏறக்குறைய இவர்களைப் போலத்தான், ஆனால் ஆங்கிலம் கொஞ்சம் சுமாராகப் பேசுகிறார்கள் அவ்வளவுதான். நாகு பின்னூட்டத்தில் சொன்னது போல் 6 மாதத்திற்கு ஒரு முறை இந்தியா போகலாம். மற்ற நாள் எல்லாம் கப்பலிலேயே இருக்கிறார்கள். எப்படின்னு தெரியலை.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில டவலில் செய்து மாட்டியிருக்கிறது குரங்கு பொம்மை. இதை எப்படி செய்யரதுன்னு ஃப்ரீயா க்ளாஸ் எடுத்தாங்க, ஆனா அதை செய்யர வேகத்துல ஒரு மண்ணும் ஞாபகத்துல இல்லை.

சரி அடுத்த பதிவில் நசாவு, பஹாமாஸ் விஜயம் பத்தி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி கப்பல்ல இருந்து நாங்க பார்த்த சூரிய அஸ்தமனம் பார்த்திட்டு போங்க. நான் தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னும் சொல்லலைங்க, நீங்கள் படித்துக் கொண்டிருப்பது எங்களோட பஹாமாஸ் விஜயம் பத்திதாங்க. நம்புங்க.

-முரளி இராமச்சந்திரன்.

Thursday, March 10, 2011

சிரிப்பு

என் தந்தை அழுவார் என்று எங்கள் கோமளவல்லி சொன்னால் கூட்டம் சிரிக்கிறது.
செந்தில் அழுதால் கவுண்டமணியுடன் சினிமா ரசிக்கிறது.
சில நேரம் நாம் அழ அழ சிரிக்க வைக்கிறார் ஆனந்த கண்ணீர் என்று
பிறர் அழ நாம் சிரிப்பதில் எத்தனை சந்தோசம் - இது காமெடி

பிறந்த குழந்தை அழுதால் தாய் சிரிக்கிறாள் சுகப்பிரசவம் என்று
குழந்தை அடித்து தாய் அழுதால் மழலை சிரிக்கிறது பாசாங்கு என்று
இதிலும் தான் எத்தனை சந்தோசம் - இது தாய்மை உணர்வு

குடிகாரன் சிரித்தால் குடும்பம் அழுகிறது
குடும்பஸ்தன் அழுதால் ஊரே சிரிக்கிறது
ஏழை அழ பணக்கரான் சிரிக்கிறான்
பணக்காரன் அழுதால் உலகம் சிரிக்கிறது
இதனை என்னவென்று சொல்ல --

பிறர் சிரித்து நாம் சிரித்தால் அது சிறப்பு
பிறர் அழ நாம் சிரித்தால் அது வெறுப்பு
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு
உலகம் சிறக்க நீ சிரித்தால் அது பொறுப்பு
உன் தாய் சிரிக்க நீ சிறந்தால் அதுவே உன் பிறப்பு.

வேதாந்தி

நிலவின் வண்ணம்

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ?
நாளில் நீ இல்லை என்று கவிநயா
சொன்னதால் உன் நிறம் வெண்மையோ?
நாகு வானவில்லும் இல்லை என்றதால் நீ கருமையோ ?

அறிவியல் அறிங்கனோ உன்னில் பல வண்ணம் என்பார்
அருகில் சென்றவரோ நீ மஞ்சள் என்பார்
தொலைவில் நின்றவரோ நீ சாம்பல் என்பர்
இலக்கியமோ நீ களங்கம் என்று
குறை கூறியதால் நீ கரு வெண்மையோ

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ?
உன் வண்ணம் பார்க்கத் தானோ
என் தாய் உன்னை அருகில் அழைத்து
எனக்கு அமுதும் ஊட்டினாளோ

கவிஞரும் காதலரும் விரும்பும் உன்னை
ஓவியனும் மழலையும் விரும்பும் உன்னை
இந்த தமிழ் மன்றம் மறந்ததேனோ ?


கணினியில் பார்த்தால் உன் வர்ணம் தான் எத்தனை
அறிவியலும் உன் உலோக ஆடையால் தான்
உன் உடலும் சிலிர்ப்பதாக சொல்லுகிறதே
உன்னில் என்ன தான் உள்ளது?

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ
உள்ளத்தின் வண்ணம் தான் உன் வண்ணமோ
அதனால் தானோ என்னவோ உன்னை வெள்ளை என்கிறார் ?

நீ குறைந்தாலும் மறைந்தாலும் வளர்ந்தாலும்
உன் வண்ண எழில் காண எத்தனை குஷி

உன்னில் வண்ணம் தேடும் என்னை
உரைகல்லில் இடாமல் உன் வண்ணம் தன்னை
எனக்கு மட்டும் உரைப்பாயோ ?
நிலவே உன் வண்ணம் தான் என்னவோ ?

வேதாந்தி

Thursday, March 03, 2011

பஹாமாஸ் விஜயம் - 2

நாங்க போன கப்பல் ராயல் கரீபியன் கப்பல். கார்னிவல், டிஸ்னி, நார்வேஜியன் என்று பல கப்பல்கள் இருக்கு. அதில் இது கொஞ்சம் நல்லதுன்னு செவி வழி செய்தியை கேட்டு நாங்களும் டிக்கெட் வாங்கினோம்.

க்ரூய்ஸ் கப்பலில் நுழையரதுக்கு பல வழிமுறைகள் போட்டு, பல வசதிகளைச் செய்து வா வா என்று எதிர் கொண்டழைக்க சில ஆட்களைப் போட்டு நம்மள சும்மா திணரடிக்கராங்க. துறைமுகத்திலேயே கார் நிறுத்துமிடமும், அதற்கு முன்னாடியே நமது பெட்டி படுக்கைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லா சாமான் செட்டையும் கொடுத்துட்டு ஹாயாக கையை வீசிகிட்டு உள்ளே போகலாம். அடுத்த நாட்டுக்குச் போவதாக இருந்தால் மறக்காமல் பாஸ்போர்ட்டை கையிலேயே வெச்சுக்கங்க. இல்லை போகவே முடியாது, ஜாக்கிரதை. கொஞ்சம் தின்பண்டம் ஏன்னா, எப்போ, எந்த குழந்தை, எப்படி, எதுக்கு கத்துமோ தெரியாது கப்புன்னு வாயில அடைச்சு ஒரு கப் தண்ணி ஊத்தி அடக்கிடலாம், தேவையான மருந்துகள், காமெரா, லேப்டாப் கம்ப்யூட்டர் இதை லக்கேஜ்ஜோடு அனுப்பினால் அது கையில் வந்து சேர்ந்து ஒழுங்காக வேலை செய்யுதான்னு தெரியர வரைக்கும் ஒரு மாதிரி அவஸ்தையா இருக்கும்.

நம்ம போர்டிங் பாஸ் கொடுக்கர இடம் ஏர்போர்டை ஞாபகப் படுத்தும் அதே சமயம், எந்த மாதிரி டிக்கெட் வாங்கியிருக்கீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சீக்கிரமாகவோ அல்லது லேட்டாகவோ உங்களை செக்கின் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு முதலில் ஒரு கைப் பட்டை போட்டு இதுங்க ரெண்டும் உங்க கூட வருதாங்கர ரேஞ்ஜில கேள்வி கேட்டுட்டு, அப்புறம்தான் “O they are so cute” ன்னு ஒரு மொக்கையை போட்டுட்டு, முக்கியமான விஷயத்துக்கு வருவார்கள். அது வேற ஒன்னும் இல்லைங்க கப்பல் உள்ளே திங்கர சோறு, காபி, டீ, எலுமிச்சை தண்ண்ண்ணீ ஜூஸைத் தாண்டி எதைச் சாப்பிட்டாலும் அதாவது மஹா ஜனங்களே இந்த லாகிரி வஸ்துகள் எதைச் சாப்பிட்டாலும் வேறு எதை வாங்கினாலும், போட்டு தாளிக்கரதுக்கு அப்பப்ப க்ரெடிட் கார்டை நீட்டு தேய் தேய்ன்னு தேய்க்க வேண்டாம், அதை செக்கின் பண்ணும் போதே வாங்கி ஒரே ஒரு முறை தேய்த்து விட்டு (அப்பாடி என்ன சவுகர்யம் இல்லை) அத நம்ம ரூம் கார்டோடு கோர்த்து விட்டுடுவாங்க. அப்படின்னா, ரூம் கார்ட் தொலைஞ்சு போனாலோ, கொஞ்ச நேரம் காணாம போனாலோ, அடி வயித்தில கரைக்கிர புளில சூப்பரா ஒரு கப்பல் கும்பலுக்கே சாம்பார் வெக்கலாம் ஜாக்கிரதை. நாங்க கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா பரம்பரை, குழந்தைகள் கார்டில் அதைக் கோக்கவேண்டாம்னு சொல்லிட்டு, அது மட்டும் இல்லை குழந்தைகள் நாங்க இல்லாம எதுவும் வாங்க முடியாதுன்னும் சேர்க்கச் சொல்லிட்டோம். சரி, சரி, உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. வீட்டுக்காரம்மா கார்டை அப்படி கண்ட்ரோல் பண்ண முடியுமான்னு நான் கேக்கலை, அவங்க பக்கத்திலேயே இருக்கரச்சே எப்படி அதெல்லாம் ஒரு சாத்வீகமான மனுஷன் கேக்க முடியும்ன்னு உங்களுக்குத் தோண வேண்டாம். மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கங்க, கேள்வி கேக்கரது ரொம்ப ஈசி, கேள்விகளுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.

ஒருவழியாக இதெல்லாம் கடந்து கப்பல் உள்ளே வந்தா முதல் மரியாதைல ராதா படகுல இருந்து இறங்கினதும் இழுத்து கிட்டு இருக்கும் சிவாஜி படக்குன்னு ஒரு பட்சி கொத்தினமாதிரி வெடக்குன்னு காலை உதறுவாரே அது போல ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சா ஒரு மண்ணும் இல்லை. ஒரு வரவேற்பாளி மாயாஜால படத்துல வர்ர மாதிரி திடீர்ன்னு தோன்றி (என்ன, டொய்ய்ய்ங் ன்னு ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்தான் இல்லை) ஒரு சூப்பர் அன்னாசி பழ ஜுஸ் கப்பை கொடுத்து குடிக்கிறியான்னு கேட்டு “நல்லா இருக்குமா”ன்னு கேக்க வாயெடுக்கரதுக்குள்ள நம்ம ரூம் கார்டை வாங்கி ஒரு தேய் தேச்சு 8 டாலர் ஆச்சுன்னு சொல்லிட்டாங்கப்பு. அப்பால நாம எப்பேர்பட்ட ராஜ பரம்பரை, ஒரே ஒரு கப்பு போதும், நிறைய பேர் வராங்க எல்லாருக்கும் வேணுமில்லையான்னு பெருந்தனமையா அவங்ககிட்ட நடந்துகிட்டு விடு ஜீட்.

இப்படியாக படாத பாடு பட்டு சொகுசு கப்பலேறிய ஒரு தமிழன் என்ற பெயரை வேறுயாரும் எடுத்துக்கரதுக்குள்ள எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.

காலை 11 மணிக்கு கப்பலுக்குள்ள வந்தா சட்டுபுட்டுன்னு நாலு எடத்த பார்த்தமா, நம்ம ரூமுக்கு வந்தமா, சின்னதா ஒரு த்யானம் செய்தமான்னு இல்லாத குறைக்கு, மதியம் 1 மணிக்குத்தான் ரூமுக்குள்ள போக முடியும்ன்னு சொல்லி வெளியிலேயே நிறுத்திட்டாங்க. “ஏண்டா என்னடா ஆச்சு உங்களுக்கு இவ்ளோ நேரம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு” ன்னு கேட்டே விட்டேன்.

அதுக்கு “கப்பலை நல்லா சுத்திப் பாருங்க, ராவிக்கு ஜூப்பர் ஷோ இருக்கு எங்க ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா”ன்னு அன்பா சொல்லிட்டு போய்கிட்டே இருந்தானுங்க. இவனுங்களுக்கு எங்கள பத்தி அவ்வளவா தெரியாது, இவங்களோட மிட்நைட் ஷோ எதுக்கும் போகாம நாம ஏன் வரலைன்னு இவனுங்க வருத்தப் பட வெக்கனும்னு மனசுக்குள்ளேயே கறுவிக்கிட்டோம்.

நாங்க போன கப்பல் 10 தளம் கொண்டது. எங்க ரூமும் 10வது தளத்திலதான். 11வது தளத்தில் நீச்சல் குளமும், கப்பலின் முன் பக்கம் 12வது தளத்தில் சாப்பாடும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கப்பலில் எங்களைப் போல பயணித்த 3000 பேருக்கு 850 சிப்பந்திகள்ன்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லக்கூடாது, கப்பலுக்குள்ளே ஒரு சின்ன நகரமே இருக்குங்க. பெரிய சூதாட்ட விடுதி, 3 சாப்பாடு ஹோட்டல், சின்ன மால், 2 ஸ்பெஷல் ‘தண்ணி’ கிடங்கு, ஒரு பெரிய இரண்டடுக்கு ஆடிட்டோரியம், குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை கண்காணித்துக் கொள்ள இடம், லைப்ரரி, முடிதிருத்தும் இடம், கூடைப் பந்தாட இடம், டேபிள் டென்னிஸ் ஆட இடம் என்று அசத்தோ அசத்துன்னு அசத்ராங்க. கொஞ்சம் அசந்து மறந்து எங்கெயாவது நின்னா போச்சு ஒன்னு “என்னங்க ஏதாச்சும் வேணுமா, ஏதாச்சும் தெரியனுமா, என்னைய கேளுங்க நான் சொல்றேன்” னு வந்துடரானுங்க, இல்லை “ஏதாச்சும் சாப்பிடரீங்களா, கொண்டுவரட்டுமா”ன்னு கேக்கராங்க. இப்படியெல்லாம் நம்மள கவனிச்சா நாம திரும்பத் திரும்ப கப்பல் பயணத்துக்கு வருவோம்னு எந்தப் பயபுள்ளையோ போட்டு கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
ஒருவழியா ரூமுக்கு நம்மள அனுப்பி அதப் பார்த்தா கொஞ்சம் மலைப்பாத்தான் இருந்துச்சு. காசுக்கேத்த தோசைன்னு சும்மாவா சொன்னாங்க.
ஒரு கிங் சைஸ் பெட்

ஒரு சோபா அதைப் பிரிச்சு குயின் சைஸ் பெட்டாக்கி ரெண்டு பேர் தூங்கலாம்,
Add Image

ஒரு சின்ன பார்

ட்ரெஸ்ஸிங் டேபிள்

சின்ன குளியலறை

பால்கனி
என்று ரொம்ப தாராளமாகவே இருந்தது.
இதையெல்லாம் அனுபவிக்கரத்துக்குள்ள ரூம் சர்வீஸ்ன்னு ஒருத்தன் வந்து கதவை இடிச்சு, “என்ன ஏழரை மணி ஷோவுக்கு போகலையா”ன்னு கேட்டு கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா அனுப்பிட்டான். அப்பதான் தெரிஞ்சுது எங்களை வெளியில அனுப்பினாதான் அவன் ரூமை க்ளீன் பண்ணி பளிச்சுன்னு வெக்க முடியுமாம். நேரம்டா சாமின்னு, அந்த ஷோவுக்குப் போனோம்.
இவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் நல்லாத் தெரியுது, எதை வேணும்னாலும், பேசிப் பேசியே வித்துடுவானுங்க. இப்படித்தான் 25 டாலருக்கு ஒரு கூப்பன் புத்தகம் வித்தானுங்க அத வாங்கினா நமக்கு 1000 டாலர் லாபம்ன்னு சொல்லி சொல்லி வித்தானுங்க. ரஸல் பீட்டர் ஸ்டாண்டப் காமெடி கேட்டீங்கன்னா ஒன்னு சொல்வான், ரெண்டு பேர் வியாபாரத்துல மீட் பண்ணக்கூடாது, இந்தியனும் சீனனும். இந்தியன் எதையும் பேரம் பேசாம வாங்க மாட்டான், சீனன் எந்த பேரத்துக்கும் ஒத்துக்க மாட்டான். இது இவங்களுக்கு நல்லாத் தெரியும் போல இருக்கு. அப்படி புத்தகம் வாங்கினவங்கள்ள(ஹி ஹி என்னையும் சேர்த்து) பாதி பேர் இந்தியர்கள். அந்தப் புத்தகத்தில நாளான்னிக்கு நாம நசாவு (பஹாமாஸ்) போய் எல்லோரும் மூட்டை மூட்டையா வைரமும் வைடூரியமும்மா வாங்கிட்டு வரணும்ன்னு அவனுக்கு ஆசையா இருக்குன்னு சொல்லி சொல்லி கிளப்பி விட்டு “எலேய் வேலையப் பாருடா வெண்ணை”ன்னு நான் கத்தலாம்னு எழுந்ததும் டக்குன்னு கடைய மூடிக்கிட்டு ஓடிப் போயிட்டான். ரூமுக்கு வந்து அந்தப் புத்தகத்தை ஒழுங்கா படிச்சதும் தெரிஞ்சுது 1000$க்கு வாங்கினா 50$ இனாம்னு ஒரு கூப்பன் அதுமாதிரி பலதும் சேர்த்தா உங்களுக்கு 1000$ லாபமாம். அதுக்கு ஒரு 8000-10000 டாலர் செலவு பண்ணனுமாம். நாங்க இதுமாதிரி சீப்பா 1000$ லாபமெல்லாம் பாக்காம, ஸ்ட்ரெய்ட்டா 10000 டாலர் லாபமே பாத்துட்டோம். அந்த கதை 4ம் பாகத்தில வருது.
அந்தப் பயபுள்ள எழுந்து ஓடினதும் கப்பலின் நிகழ்ச்சிகளின் இயக்குனர் வந்து எல்லோருக்கும் அவரோட பல பல முறை சொன்ன ஜோக்ஸை எங்களுக்கு முதல் முறையா சொல்றாப்ல சொல்லி அவரே சிரிச்சுகிட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடியனை அறிமுகம் செய்துட்டு போனார். அந்த ஆள் பாவம், ஆபாச ஜோக் சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம, “என்ன கொடுமை சரவணா”ன்னு தலைல அடிச்சுகிட்டே ஜோக் சொன்னான். அதையெல்லாம் இப்ப சொல்லப் போரதில்லை அதெல்லாம் சேத்து வெச்சு நானும் ஒரு நாள் மேடைல ஸ்டாண்டப் காமெடி செய்ய வேண்டி வந்தால் சொல்றேன்.
சரியாக 8:30 மணிக்கு எங்களுக்கு சாப்பாடு போடுவதாக டைம் தந்திருந்தார்கள். சரின்னு அந்த ஹோட்டலுக்குள்ள போனா, முக்காவாசி பேர் இந்தியர்கள், மீதி சீனர்கள். எங்களுக்கு சர்வரும் சீனன் அவனோட உதவியாளியும் சீனள்.
அவளுடைய வேலை சூப்பர் ஈசி.
அவள்: “மேம், வாட்டர்ர்ர்ர்ர்”
மாலதி: “யா, வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓஓஓ ஓகே ஒன் லெமனெட்”
நான் குறுக்கிட்டு: “நோ, ஷி வாண்ட் வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், ஒன் லெமனெட் அண்ட் வாட்டர்”
நான்: “நோ, ஒன்லி வாட்டர் வித் லெமன் அண்ட் ஐஸ்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், வாட்டர் அண்ட் லெமனெட், ஐஸ் க்ரீம் ஆஃப்டர் ஃபுட்.
மாலதி: “டு யூ ஹாவ் எனிதிங் அதர்தன் லெமனெட்”
அவள்: “மேம், யு வாண்ட் அனதர் லெமனெட்”
நான் (தமிழில்): “கிழிஞ்சுது போ, அம்மா, நீ இவகிட்ட அதிகம் பேசாதே, அப்புறம் அவ பேசரமாதிரி உன் இங்லீஷும் ஆகிடப் போகுது பாத்துக்க”
அவள்: “சர்ர்ர்ர் யு வாண்ட் சம்திங் டு டிரிங்”
நான்: “லெமனெட்”
அவள்: (முகமெல்லாம் பல்லாக) “ஓ, லெமனெட் வெரி குட்”
இவள் இப்படின்னா சர்வர் அதுக்கும் மேல ஒரு படி போயிட்டான். அவன் பெயர் ஜார்ஜ். சீனனுக்கு எப்படி ஜார்ஜ்ன்னு பேர் வெச்சாங்கன்னு எனக்குத் தெரியலை அதை அவன் கிட்ட கேட்டு அவன் சொல்ற பதில் எனக்குப் புரியரதுக்குள்ள மாதுரி காலேஜ்க்கே போயிடுவாளோன்னு பயம் வந்துடுச்சு.

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, ஆங்கிலம் சுத்தமா தெரியாம, இவங்க எல்லாம் என்ன தைரியத்தில அமெரிக்காவுக்கு வேலைக்கு வராங்கன்னு தெரியலை, நம்ம அப்பா அம்மா வராங்களேன்னு சொன்னா அவங்க இங்க வேலைக்கு வரலை (நம்ம வீட்டுல குழந்தைகளை பாத்துக்கர வேலைக்கு வராங்கன்னு சொல்லி சிண்டு முடியாதீங்க சொல்லிட்டேன்). நம்மளோட இருக்கரதுக்குத்தான் வராங்க அதனால அவங்களுக்கு நல்லா ஆங்கிலம் பேச வரலைன்னா பரவாயில்லை. இவங்க எல்லாம் இப்படி வரதுக்கு அவங்க வருமானமும், அவங்களோட சர்வைவல் எண்ணமும்தான்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுடன் நடந்த டைலாக்கை கொஞ்சம் காமெடிக்காக இங்க போட்டாலும், அந்தப் பெண்ணையும் ஜார்ஜையும் நினைச்சா பாவமாவும் இருக்கு, பாராட்டவும் தோணுது.
இப்படியாக எங்களின் முதல் நாள் கப்பலில் முடிந்தது.

அடுத்தப் பதிவில கோகோகே பீச்சுக்கு கூட்டிகிட்டு போய் சுத்தி காமிக்கறேன்.
-முரளி இராமச்சந்திரன்.

Tuesday, March 01, 2011

பஹாமாஸ் விஜயம் - 1

“எங்கள் பஹாமாஸ் விஜயம் (பாமா விஜயம் இல்லைங்க, தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி அதனால நல்லா பார்த்து படிங்க) முதலில் பஹாமாஸுக்கு என்று ஆரம்பிக்கவில்லை. சும்மா ஒரு ரவுண்டு க்ரூய்ஸ் அதாங்க சொகுசு கப்பல்ல போய்ட்டு வரலாம்னு ஆரம்பிச்சது.”

“கோடிவீட்டு கோமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, பக்கத்து தெரு பரிமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, எனக்கும் அவங்க மாதிரி நாலு எடம் போய் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, எல்லாம் என் தலையெளுத்து, என்னை நல்லா ஆசை ஆசையா வளர்த்து இப்படி ஒரு களிமண் பொம்மைகிட்ட மாட்டி விட்டுட்டாங்களே” ன்னு உங்க வீட்டுல சொல்ற மாதிரி என் வீட்டிலயும் சொன்னாங்கன்னு நீங்க நினைச்சா “சாரி அப்படி எந்த பிட்டும் போடாம, என் நண்பன் போன வருஷம் இப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வந்து எப்படி இருந்ததுன்னு சொன்னதும் எனக்கே அப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வரணும்னு தீ பிடித்துக் கொண்டது.”

ரிச்மண்ட்டில் சிலரிடம் பேசியபோது “அதுவா, அது ஒன்னும் காசு அதிகமான விஷயம் இல்லை, ஒரு 800$ல் எல்லோரும் போயிட்டு வந்துடலாம், சும்மா சூப்பரா இருக்கும்” என்று அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் விசிறிவிட்டார்கள். தீ கணன்று கணன்று எரிந்து, எந்த க்ரூய்ஸ் நல்லது, எதில் என்ன கிடைக்கிறது, நம் ப்ளானுக்கு எந்த க்ரூய்ஸ் ஒத்து வரும், என்றெல்லாம் பார்த்து பிறகு ஒன்றை முடிவு பண்ணினோம். அதுவரை இது கொஞ்சம் விலை அதிகமான ஒரு சமாச்சாரம் என்பது டிக்கெட் விலையை பார்க்கும் வரை உறைக்கவில்லை. பார்த்ததும் திடீர்ன்னு ஒரு பக்கெட் பச்சை தண்ணியை தலைமேல ஊத்தினா மாதிரி ஆயிடுச்சு. இதுக்குள்ள என் பெண்கள் ரெண்டு பேரும் அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோருக்கும் இப்படி க்ரூயிஸ் போகப் போவதாக சொல்லிட்டதாக சொல்லவும், சரி நாமதான் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டோமேன்னு எங்களை சமாதானம் செய்து கொண்டுடோம் (வேற வழி). அதிலேயும் பால்கனி இருக்கனும், ரெண்டு கிங் பெட் இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு வீட்டில எல்லோரும் பலப் பல கண்டிஷன்ஸ் போட்டு அதெல்லாம் இருக்கரமாதிரி ஒரு நல்ல சுப மூஹூர்த்த தினத்தில் டிக்கெட் புக் பண்ணினோம்.

என்னய்யா ஒரு ப்ரயாணத்திற்கு டிக்கெட் வாங்கிட்டு இப்படி அலுத்துகரான் இவன்னு சீப்பா நினைக்காதீங்க. டிக்கெட் வாங்கினதும்தான் தெரிஞ்சது பஹாமாஸ்ல சுத்தரதுக்கு தோதா நல்ல அரைநிஜார் இல்லை, அது இல்லை இது இல்லைன்னு சொல்லி ஒரு டப்பா சினிமால தனுஷ் பாடின மாதிரி ‘துண்ட காணோம் துணிய காணோம், தூங்கும் போது துட்ட காணோம்”ங்கர கதையா செலவுமேல செலவு செய்து ஒரு வழியா ப்ரயாணத்துக்கு தயாரானோம். இதர செலவுகளை கணக்கு பண்ணினா, ஆனை அரை காசு, அங்குசம் ஆறு காசுங்கர கதையானது ஒரு தனிப் பதிவே போடக்கூடிய சமாச்சாரம்.

நல்ல வேலையா இங்கிருந்து ஃப்ளோரிடாவில் கேப் கானவரல்ங்கர இடத்துக்கு எங்களோட வேனிலேயே போகலாம்னு முடிவு செய்தோம். இந்த இடத்தில இருந்துதான் அமெரிக்க விண்வெளி ராக்கெட்கள் செலுத்தப் படுகிறது. இவர்களுக்கும் நமக்கும் (இந்தியாவிற்கும்) என்ன வித்தியாசம்ன்னா இவங்க விண்வெளி ராக்கெட்கள் எப்போதாவது வெடிக்கிறது, நம்மூரில் எப்போதாவது வெடிக்காமல் விண்வெளிக்கு போகிறது. இதிலிருந்து தெரியும் உண்மை, இந்தியாவில்தான் நல்ல வெடிக்கும் ராக்கெட்டுகள் இருக்கிறது, பின்ன என்னங்க எத்தனை வருஷமா நாம தீபாவளிக்கு வெடிக்கர ராக்கெட், பூவாண ராக்கெட்ன்னு விட்டுகிட்டு இருக்கோம். இவ்ளோ செலவு பண்ணி ஒரு ராக்கெட் வெடிக்காம சும்மா மேல போனா, பாக்கரவன்லாம் என்ன கேணையங்களா.

எல்லா ஏற்பாடுகளும் செய்யரதுக்கு முன்னாடி, என் மனைவியும் குழந்தைகளும் ஒரு கவுண்ட் டவுன் காலெண்டர் தயாரித்து தினம் ஒரு நாளை அடித்து அடித்து அவங்க பங்கிற்கு எதிர்பார்ப்பை அதிகப் படுத்திக் கொண்டே வந்தார்கள். இதுக்கு நடுவில நானும் கோபால் பல்பொடி விக்கரவன் மாதிரி வாரா வாரம் ஊர் ஊரா போய் வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்ததும் முதலில் அந்த காலெண்டரைப் பார்த்து இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று என் பங்கிற்கு கொஞ்சம் ப்ரெஷர் ஏத்தி விட்டேன்.

இதற்கு நடுவில் நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேலை ஒரு வாரம் முன்னாடியே முடிந்துவிட என்னை ப்ரயாணம் போக இருந்த வாரம் தலைநகரத்தில் வேலை செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்கள். வேலை ஒன்னும் பெரிசில்லை பிடிங்கின ஆணிகள் சரியா வந்து சேர்ந்ததா, ஆணி கணக்கு சரியா இருக்கா, சேதாரம் எவ்வளவு, செய்கூலி எவ்வளவுன்னு கணக்கு போட்டு கணக்கு போட்டு எல்லாம் சரியா இருக்கா, இல்லைன்னா என்ன ஆச்சுன்னு கதை விட்டு காதுல பூசுத்தர வேலை. காலைல 8:30க்கு ஆஃபீஸ் உள்ள போனா ஹோட்டலுக்கு திரும்பி போக இரவு 10-10:30 ஆகிடும். இதுக்கு நடுவில அந்த வாரம் பனி மழை பொழியப் போகுதுன்னு சொல்லப்பட வீட்டுல எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள் - அது என்ன எதுக்கெடுத்தாலும் எல்லாரும் சொல்றாங்க, சொன்னாங்க ன்னு எல்லாரும் சொல்றாப்பல நீயும் எல்லாரும்னு சொல்ல வரேன்னு நீங்களும் சொல்லாதீங்க, அப்புறம் யார் அந்த எல்லாரும்னு, எல்லாரும் கேக்கர மாதிரி நானும் கேட்பேன். மேல என்ன எழுதினேன்னு எனக்கே புரியலை உங்களுக்கும் புரியலைன்னா கவலைப் படாதீங்க. அடுத்து படிங்க.

என்ன சொல்லிகிட்டு இருந்தேன், வீட்டுல கவலைப் பட ஆரம்பிச்சாங்கன்னுதானே, கரெக்ட், ஆனா அவங்க கவலைப் பட்டது நான் எப்படி தலைநகரத்தில இருந்து கொட்டர பனில வீடுவருவேன்னு இல்லை, எப்படி ப்ரச்சனை இல்லாம கப்பல்ல போகப் போறோம்ன்னு. என்ன, எல்லா வீட்டிலயும் இதே கதைதானா. சரி சரி அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம். ஒருவழியா ஒரு 8 மணிநேரம் ப்ரயாணம் செய்து தலைநகரத்தில இருந்து ஃப்ளோரிடா போக இருந்த தினத்திற்கு முன் தினம் வீடு வந்து சேர்ந்தேன். மட மட வென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து மறுதினம் மதியம் கிளம்பி மேளதாளங்கள் எதுவும் இல்லாமல், நான் எப்போது ஊருக்கு போனாலும் வீடு வரை வந்து கண்டிப்பாக இவன் ஊருக்கு போகிறானா, குறைந்த பட்சம் 10 நாளாவது இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாமா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் என் ‘ஆத்மார்த்த’ நண்பர்களும் வழியனுப்பாமல் ஃப்ளோரிடா நோக்கி எங்களது ரதத்தை செலுத்தினோம்.

மறுதினம் மதியம் சொகுசு கப்பல் கிளம்பர போர்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு நல்ல தங்கும் இடம் போய் சேர்ந்தோம்.

பக்கத்தில் இருந்த பீச்சில் காலார நடக்கும் போது ஒரு ஸ்டிங் ரே கிடக்க, அதை தொட்டால் ‘கதை கந்தலாயிடும்’ என்று மனைவியும் குழந்தைகளும் பயப்பட, அதி பயங்கர தைரியசாலியான நான் அவர்களுக்காக என் தைரியத்தை மறைத்துக் கொண்டு ஒரு புகைப் படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லாமல் எப்படி துல்லியமாக படமெடுத்திருக்கிறேன், என்னை பார்த்து பயம் பயந்து ஓடிடும்.
இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக இருந்து விட்டு மூன்றாம் நாள் மதியம் மேலே இருக்கும் கப்பலுக்கு போய் சேர்ந்தோம்.

மீதி அடுத்த பதிவில்.

முரளி இராமச்சந்திரன்.