பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். இன்னும் பசுமையாக நினைவில் நிற் கிறது. முற்றிலும் புதிய சூழலி ல் வாழும் இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு இதை ஒரு சம்பவமாக பதிவு செய்வது தேவையா என்று கூட தோன்றலாம். இருந்தாலும் இதை அறிந்து கொள் வதில் தவறு ஏதும் இல்லை.
எங்கள் குடும்பம் கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்த ஓரளவு வசதி படைத்த குடும்பம். வீட்டின் பின்புறத்தில் முற்றத் தையொட்டி ஒரு மாட்டுப்பட்டி. கறவை மாடுகளும் கன்றுக்குட்டிகளும் ஐந்து அல்லது ஆறுக்கு குறையாமல் எப்பொழுதும் அங்கே இருக்கும். வீட்டின் பின்புறத் தில் உள்ள பெரிய தோப்பில் இன்னொரு பட்டி. அந்த பட்டியில் உழவு மாடுகளும் சில எருமைகளும் இருக்கும்.
வீட்டின் உள்ளே இருக்கும் சிறிய பட்டியில் மற்ற எல்லா பசுக்களுக்கும் இடை யில் ஒரு வெள்ளை நிறப் பசு உண்டு. வெள்ளை கிடாரி என்று எல்லோரும் அதை குறிப்பிடுவது வழக்கம். சலவை செய்யப்பட்ட வேஷ்டி போல தூ ய வெள்ளை நிறத்தில் அந்த பசு கம்பீரமாக, ஆனால் அமைதியாக நிற்கும். சிறிய கொம்பு. யார் வேண்டுமானாலும் பக்கத்தில் தைரியமாக போகலாம். முட்டாது. யார் வேண்டுமானாலும் அதனிடம் பால் கறக்கலாம். உதைக்காது.
வீட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் அந்த பசு கொடுத்த பாலில்தான் வளர்ந்ததாக அம்மா அடிக்கடி சொல்வாள் .வீட்டில் உள்ள சில உழவு காளைகளும்அந்த பசு ஈன்ற கன்று குட்டிகள்தான் நானும் என் அண்ணனும் பக்கத்து கிராமத்தில் உள்ள பள்ளிகூடத்துக்கு போக ஒத்தை மாட்டு வண்டியில் கட்டபபடும் காளையும்அந்த வெள்ளை கிடாரி ஈன்ற கன்று தான் என்று என் அப்பா கூறுவார்.
எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் வெள்ளை கிடாரி பால் வற்றிப்போய்விட்டது. இந்த காலத்தில் பால் வற்றிப்போன மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் வீட்டில் உள்ள பால் வற்றிப்போன மாடுகளை விற்கும் வழக்கம் இல்லை.
இதெல்லாம் பழைய கதை.
இப்பொழுது அந்த வெள்ளை கிடாரி மேய்ச்சலுக்கு கூட வெளியே போவதில்லை. மிக மெதுவாக நடப்பதால் பட்டியிலேயே அதற்கு புல்லையும் வைக்கோலையும் வேலைக்காரர்கள் போட்டார்கள். மாட்டுக்கு பல் தேய்ந்து போய்விட்டது. வைக்கோலை அதக்கி விட்டு வெளியே போட்டுவிடுகிறது. தீனி கூட சரியாக எடுப்பதில்லை. அப்பா ஒரு நாள் சொன்னார், "வெள்ளை கிடாரி இன்னும் அதிக நாள் தாங்காது தீனியை தள்ளிவிட்டது" என்று.
நான் பட்டியில் போய் அந்த பசுவை பார்த்தேன். பழைய தூய வெள்ளை நிறம் கூட இல்லை. சற்று மங்கிய வெள்ளை .கீழே விழுந்ததால் பின்புறம் ஏற்பட்ட புண்ணில் உட்காரும் ஈயை விரட்ட கூட வேகமாக வாலை அசைக்க முடியவில்லை நான் சிறிய புல்லுக்கட்டை எடுத்து கொஞ்சம் புல்லை எடுத்து அதன் வாயருகில் கொண்டு போனேன். சற்று நேரம் புல்லை வெறிக்கப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டுபிறகு நாக்கால் நக்கியது. பிறகு கீழே தள்ளிவிட்டது.
நான்கைந்து நாட்களுக்குப் பிறகு அந்த வெள்ளை கிடாரி படுத்துவிட்டது. காலையில் எவ்வளவோ முயற்சி செய்தும் அது எழுந்திருக்கவில்லை. பக்கத்தில் உள்ள மற்ற பசுமாட்டையும் கன்றுகளையும் வேலைக்காரர்கள் அப்புறப்படுத்தி விட்டு அது படுக்க தாராளமாக இடத்தை ஏற்பாடு செய்தனர். நான்கு கால்களையும் நீட்டி அந்த கிடாரிப்பசு படுத்திருந்த காட்சியை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அவ்வப்போது தலையை அசைத்துக் கொண்டிருந்தது.
அடுத்த வாரம் ஒரு நாள் காலை நான் எழுந்திருந்தபோது என் அம்மா "வெள்ளைக் கிடாரி செத்துப்போச்சு " என்றாள் நான் ஓடிப்போய் பட்டியில் பார்த்தேன். நான்கு கால்களை நீட்டியபடி தலை ஒரு புறம் சாய்ந்து அந்த பசு இறந்துகிடந்ததைப் பார்த்ததும் எனக்கு என்னவோ செய்தது. அழுகை அழுகையாக வந்தது.கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தேன், என் அம்மா முகம் கலங்கியிருந்தது.அம்மா செயலிலும் ஒரே குழப்பம் தெரிந்தது. அப்பா நீண்ட நேரம் பக்கத்தில் நின்று இறந்துகிடந்த மாட்டை பார்த்துக்கொண்டிருந்தா ர். பிறகு வேலைக்காரனை கூப்பிட்டு இறந்த மாட்டை எடுப்பதற்கு ஆட்களை கொண்டுவரச் சொன்னார்.
என் அம்மா என்னைக் கூப்பிட்டு "பாட்டியிடம் போய் சொல் " என்றாள். பத்து வீடு தள்ளி என் சித்தப்பா வீட்டில் இருந்த பாட்டியிடம் போய் "பாட்டி வெள்ளைக் கிடாரி செத்துப் போச்சு" என்றேன். "அப்படியா" என்று கேட்ட பாட்டி சற்று நேரம் மனக்கலக்கத்துடன் அமைதியாக நின்றாள். நான் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அம்மாவிடம் நான் இன்னிக்கு பள்ளிக்கூடம் போகவில் லை" என்றேன். அம்மா சரி என்று சொல்லி விட்டாள்
சற்று நேரத்தில் எங்க பாட்டி கொல்லைப்புறமாக மெதுவாக நடந்து மாட்டு பட்டிக்கு வந்தாள் "நீ எதற்காக இப்படி கஷ்டப்பட்டு நடந்து வரணும் " என்று கேட்டுவிட்டு பாட்டி உட்கார ஒரு நாற்காலியை கொண்டு வந்து முற்றத்தில் போட்டார். பாட்டி நாற்காலியில் உட்கார்ந்தாள். உட்கார்ந்தபடி பாட்டிவெள்ளைக் கிடாரியின் பாரம்பரியத்தைப் பற்றி, அதன் தாய் சிவப்புப்பசுவின் பெருமை பற்றி, அந்த காலத்தில் அதுகொடுத்த பால் பற்றி பழைய கதையை எல்லாம் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். என் அம்மா அடுக்களை வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர்களை கவனிக்கவும் பாட்டியிடம் பேசுவதுமாக இருந்தாள்
பாட்டி வேலைக்காரனைக் கூப்பிட்டு" கோயில் பண்டாரத்திடம் போய் கொஞ்சம் பூ வாங்கிக்கொண்டு வா" என்றாள் சற்று நேராத்தில் பூ வந்து சேர்ந்தது. என் அம்மாவைக் கூப்பிட்டு இறந்து கிடந்த வெள்ளைக் கிடாரியின் முகத்தில் மஞ்சளையும் குங்குமத்தையும் இடச் சொன்னாள் இரு கொம்புகளுக்கு இடையிலும் கழுத்திலும் பூவை கட்டும்படி வேலைக்காரனிடம் கூறினாள் அவனும் அப்படியே செய்தான். எல்லாம் முடிந்த பிறகு மஞ்சளை கையில் வைத்துக்கொண்டு என் அம்மா புடவைத் தலைப்பால் கண்ணை துடைத்துக்கொண்டாள்.
சற்று நேரத்தில் பண்ணை ஆள் நான்கு பேரோடு வந்து சேர்ந்தான்.வந்தவர்கள் ஒரு பெரி ய கனமான கழியைக் கொண்டு வந்தா ர்கள். வந்த நான்கு பேரும் இறந்து கிடந்த அந்த கிழட்டு பசுவின் இரன்டு முன்னங்கால்களையும் ஒன்றாக ஒரு கயிற்றைக் கொண்டு வரிந்து காட்டினார்கள் அப்படியே பின்னங்கால்களையும் ஒரு சேரக் கட்டினார்கள். கட்டப்பட்ட இரு கால்களுக்கும் இடையே அந்த பெரிய கழியை செலுத்தினார்கள்.
என் வீட்டில் உள்ள வயதான வேலைக்காரி அம்மா எல்லோரும் கும்பிடுங்க அம்மா என்றாள் என் அம்மாவும் பக்கத்தில் இருந்த சில பெண்களும விழுந்து கும்பிட்டார்கள். அந்த நான்கு ஆட்களும்
"சரி தூக்குடா என்று ஒரு குரல் கொடுத்தவாறே இரன்டு பக்கமும் தூக்கி தோளில் வைத்துக்கொண்டார்கள். வெள்ளைக் கிடாரி இப்பொழுது தன் இறுதிப் பயணத்தை தொடங்கி விட்டது. தலை மட்டும் தனியாக அந்தரத்தில் ஆடுவதைப் பார்த்தபோது பரிதாபமா க இருந்தது. இவ்வளவு நேரமும் என் அப்பா வேஷ் டியை மடித்துக் கட்டிக் கொண்டு மேல் துண்டை தலைப்பாவாக கட்டிக் கொண்டு அவர்களுடைய வேலையில் உதவியாக இருந்தார்.
அவர்கள் தோளில் தூக்கிக் கொண்டு புறப்பட்டபோது என் அம்மா ஓவென்று கதறி அழுதபடி அவர்களுக்கு அருகில் போனாள் அதைப் பார்த்தோ என்னவோ நானும் அழுதேன். என் பக்கத்தில் நின்ற தங்கையும் அழுதாள் . அருகில் நெருங்கிய அம்மாவைப் பார்த்து அப்பா "சரி சரி போ அந்தப் பக்கம். " என்று கூறி அம்மாவை மெதுவாக தள்ளினார்.
மாட்டை தூக்கிக்கொண்டு போனவர்கள் கொல் லைப் புறம் நெருங்கியதும் என் அப்பா தலைப்பாவாக கட்டியிருந்த மேல் துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார். கண்ணில் கசிந்த கண்ணீரை துடைக் கத்தான் அப்பா அப்படி முகத்தை துடைத்துக் கொண்டார் என்பதை என்னால் அப்பொழுது உணர முடிந்தது.
ஏனோ தெரியவில்லை என் சிறுவயது காலத்தில் நடந்த இந்த சம்பவம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். குறிப்பாக நிர்ப்பந்தம் காரணமாகவோ, பாசம் பற்றாக் குறை காரணமாகவோ, வேறு ஏதோ காரணத்துக்காக முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்ட பெற்றோர்களை பார்க்கும்போது அவர்கள் நிலை பற்றி கேள்விப் படும்போது இந்த பழைய சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.
- மு .கோபாலகிருஷ்ணன்
மு.கோ.
ReplyDeleteமிக மிக அருமையான பதிவு. நம் காலத்தில் இருந்த பசு மனித நேயம், உணர்வு இவைகளை இன்றைய தலைமுறை மக்களிடம் எதிர்பார்க்க முடியாது.
சமீபத்தில் எனது அலுவலகத்தில் (வெள்ளையர்), "உங்க இந்தியால நிறைய பேர் சாப்பாட்டுக்கு கஷ்டப் படும் போது எதுக்கு மாட்டுக்கு பூஜை பண்ணி கடவுளா கும்புடுரீங்க"ன்னு கேட்டான், நான் சொன்னேன், "அதை நீங்க சொல்லாதீங்க, சொந்த குழந்தைகளை காலேஜ் படிக்க பணம் வேணும்னா வால்மார்ட்ல பை போட்டு பணம் சம்பாதிக்க சொல்லிட்டு, வீட்டுல சாப்பிட தூங்க பணம் வாங்கிட்டு, அப்பா அம்மாவை வயசான காலத்தில தவிக்க விட்டுட்டு வருஷத்துக்கு ஒரு நாள் ஒரு கார்ட் போட்டுட்டு, நாய்க்கும் பூனைக்கு மாசா மாசம் 500-1000 னு செலவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒரு பசு மாடு தன் வாழ்நாள் முழுவதும் தன் உடம்பின் ஒவ்வொரு பாகத்தாலும் நமக்கு உதவுது அதெல்லாம் தெரியாம கொஞ்சூண்டு இந்தியாவை பத்தி படிச்சுட்டு இந்தியாவையும் இந்தியர்களையும் பத்திப் பேசாதே"ன்னு.
எனக்கு இந்த சந்தர்பத்தில் கண்ணதாசனின் ஒரு கவிதை நினைவுக்கு வருது.
"சொல்ல ஒர் வார்த்தையில்லை,
சொல்லியழ நண்பரில்லை,
தனியே படுத்து அழுது தலையணையை நனைப்பதன்றி
இன்னோர் பரிகாரம் எவரும் உரைப்பதில்லை"
மிக மிக கனமான பதிவு உங்கள் பதிவு.
முரளி.
மனம் நெகிழ்ந்தது உங்கள் அனுபவப் பகிர்வைப் படித்து. மனித நேயம் இயல்பாக இருந்தது போய், அவ்வப்போது நினைவுறுத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.
ReplyDeleteஅன்புள்ள கோ,
ReplyDeleteஉங்கள் கட்டுரை மிக்க அருமை. உறவு என்பது மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டும் இல்லை என்பதை மிக அழகாக சொல்லப் பட்டுள்ளது. சிவாஜி பாடல் வரிகள் போல ஆடு, மாடு, கோழி எல்லாவற்றையும் ரேஷன் கார்டில் சேர்க்கும் பண்புள்ள தமிழ் இனம்.
இதைப் படித்து முடித்தவுடன் எதையோ இழந்ததை போல உணர்ந்தேன்.
வேதாந்தி
நெஞ்சைத் தொடும் பதிவு. மாட்டுப்பட்டியை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள். அதுவும் பால்மறத்துப் போன பசுப் பராமரிப்பு நெஞ்சைத் தொடும் விஷயம்.
ReplyDeleteஇங்கே மேற்கு வர்ஜீனியாவில் வீலிங் அருகில் இருக்கும் ஹரேராமா ஹரேகிருஷ்ணா கோவிலின் முக்கியக் குறிக்கோளே பசுப் பராமரிப்புதான்...
கடைசியில் முதியோர் இல்லங்கள் விஷயத்தை நுழைத்திருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து பல நண்பர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் தனியாகத்தான் இருக்கிறார்கள். அனைவர்க்கும் உள்ளூரிலேயே மகன்,மகள்கள் வாழ்ந்தாலும் இதே நிலைமைதான். அனைவருக்கும் மனிதநேயம் குறைந்து விட்டதா, சகிப்புத் தன்மை, அனுசரித்துப் போகும் குணம் குறைந்து விட்டதா என்று தெரியவில்லை. காலம் செய்யும் கோலம்...
'கோமாதா எங்கள் குலமாதா ' என்ற கட்டுரை ரொம்பவே சென்ட்டிமேன்ட்டலாக இருந்தது. வீட்டுப் பசு என்ன, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் இறந்தாலும் இதுபோலவே சோகப் படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆமாம், பசுமாட்டின் மீது காட்டுவதுபோல் காளை மாட்டுக்கு ஏன் காட்டுவதில்லை? இருந்த இடத்திலேயே நின்று தின்னும் பசுவிடம் பால் கறக்கப் படுகிறது. அது ஒன்றும் விரும்பிக் கொடுப்பதில்லை. செயற்கைக் கருத்தரித்தல் வரும் முன்பு செக்ஸ் சுகம் கூட அனுபவித்தது. எருது, சுமை இழுக்கிறது, உழுகிறது, தண்ணீர் இறைக்கிறது, சுண்ணாம்புக் கலவை அரைக்கிறது. அதற்கு ஒரு சுகமும் இல்லை, உண்பது தவிர. இந்த வேலைகளுக்கெல்லாம் இயந்திரங்கள் வந்து விட்டதால் எருது வளர்க்கப்பட்டு, கசாப்புக் கடைக்குத்தான் அனுப்பப் படுகிறது. காப்பகங்கள் யாவும் பசுக்களுக்குத்தாம். (ஹிந்து சமூகத்தில் பசுவுக்குக் காட்டப்படும் பாசம் எருமைக்கு இல்லை. இந்தியாவில் எருமைப்பால் உற்பத்திதான் அதிகம். நிற வெறி காரணமோ?) குடும்பச் சூழலில் ஆண்களுக்குக் கிடைக்கும் recognition, பாசம் போல்தான் எருதுக்கும் போல. இந்திய சினிமாவில் தாய் சென்ட்டிமென்ட் போல் தந்தை சென்ட்டிமென்ட் இருக்கா?
ReplyDeleteஅடுத்ததாக, இறப்பையும் பிரிவையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. மாறிவரும் காலத்திற்கேற்ப முதியோர் இல்லத்தை முதியோர் பலர் தாமே opt செய்கின்றனர். அவர்களுடைய மக்களை அவர்கள் நொந்து கொள்வதில்லை. பெற்றோர்களும் பல்வகைப் பட்டவர்கள்தாம். பாரபட்சம் காட்டுதல், சுயநலம் போன்ற குணங்களைக் கொண்ட பெற்றோர் இல்லையா? இதனால், மக்கள் தம் பெற்றோரை ஆதரிக்கத் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. தாம் பெற்றது இறந்தால் படும் சோகம் தம்மைப் பெற்றவர் மறையும்போது இருக்காதுதான். இது இயற்கை. பாசம் ஆற்றொழுக்குப் போலக் கீழ் நோக்கித்தான் செல்லும்.
அருமையான தகவல், கால்நடைகளை காப்பது நமது கடமை
ReplyDelete