Showing posts with label மலேசியா. Show all posts
Showing posts with label மலேசியா. Show all posts

Sunday, January 29, 2012

சங்கத் தமிழ் மூன்றும் தா!

மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் கலாசார, மொழி பாரம்பரியங்களை போற்றிக் காப்பது என்னை எப்பொழுதும் வியக்க வைக்கும். இங்கு ரிச்மண்டில் எனக்கு  இலங்கை, மலேசியா, சிங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் கயானா நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என்னை மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள். உதாரணமாக எனது மலேசிய நண்பர் சேகரின் மூலம்தான் 'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும்' என்ற பழமொழியின் அர்த்தம் தெரிந்தது.  ஆமை புகுந்தால் வீட்டுக்கென்ன ஆகும்? அந்த ஆமை வெறும் ஆமையல்ல. பொறாமை!

கயானா நண்பர்களின் வீட்டு பஜனைக் கூட்டத்தில் அவர்கள் வாசித்த டன்டால்  எனும் கருவியின் பிண்ணனியும் சுவாரசியமானது. கரும்புத் தோட்டத்து மாட்டு வண்டியின் அச்சை இசைக்கருவியாக பயன்படுத்தி தங்கள் கலாசாரத்தை காத்திருக்கிறார்கள்.

இன்னும் இது போல பல சொல்லிக் கொண்டு போகலாம். இன்றைய நிகழ்வுக்கு வருகிறேன்.  நேற்று  ஒரு நண்பரின் மகளின் நிச்சயதார்த்தத்துக்கு போய்விட்டு அதற்குப் பிறகு எங்கள் மலேசிய நண்பர்களின் வீட்டுக்குப் போய் ஓய்வாகக் கதை பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் அன்றாடம்  தமிழ் மிகக் குறைவாகப் பேசும் சராசரி இந்தியத் தமிழகக் குடும்பங்கள் போன்ற குடும்பம்தான் இவர்களும் :-).  பேச்சு நமது பழக்கவழக்கங்களில் இருந்து பிரார்த்தனை, பூஜை, பாடல்கள் என்று போய்க் கொண்டிருந்தது. சிறு வயதில் கற்ற இறைவாழ்த்து பாடல்கள் பல இருந்தும் நிறைய மறந்துவிட்டது என்று  இரண்டு மலேசியக் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.  இன்னும் எதெல்லாம் நினைவிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டு இல்லத்தரசி தன் இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

இந்தப் பாடல் சத்தியமாக எனக்குத் தெரியாது.  தமிழகத்தில் வளர்ந்த எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  சற்று இந்தப் பாடலைப் பார்ப்போம். ஔவையின் நல்வழியில் வரும் கடவுள் வாழ்த்து இது.


பிள்ளையாரிடம் முத்தமிழ் அறிவைக் கேட்பது போல் அமைந்திருக்கிறது இப்பாடல். ஆனால் அவருடைய பதிவில் இப்பாடலுக்கு  மேலும் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்கிறார் சுந்தர வடிவேல்.

*நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரது வீடியோவை நீக்கிவிட்டேன்.