Thursday, February 14, 2019

காதல்

கண்டதே காரணமாய் 
காந்தம் போல் ஈர்க்கும் காதல் 
கவர்ந்து நம்மை கொண்டதும் 
கற்றவராயினும் உளறல் தரும் 
கற்பனை அற்றவராயினும் கவி தரும்
காட்டுமிராண்டிக்கும் கனிவு தரும்
சிடுமூஞ்சியாயினும் சிரிப்பு தரும்
துறவியாயினும் துரத்தும் ஆசை தரும்
பரம ஏழைக்கும் பார் ஆளும் கனவு தரும்
நாத்திகரையும் உள்ளத்து உணர்வுகளை நம்பவைக்கும்
தறுதலைகளுக்கும் பொறுப்பு தந்து 
தலைவன் தலைவி ஆக்கும்  
காதல் மண்ணில் தோன்றிய காலம் முதல்
மனித குலத்தின் கதை இதுவே

-Feb 13, 2012

Saturday, February 09, 2019

வள்ளுவர் எல்லாரையும் கறி துண்ண வேணாம் ​​என்றாரா?


எந்த உசுரையும் கொல்லாதீங்கடா, கொன்னு தின்னு உங்க உடம்பை வளர்க்காதீங்கடா, உன் உசுரே போகுதுன்னாலும் இன்னொரு உசுர கொல்லக் கூடாதுடா

என்றெல்லாம் சொன்னார்தான்.

கேள்வி என்னனா, எங்கே இதெல்லாம் சொல்லிருக்கார் என்பதுதான்.

துறவற இயலில் சொல்லி இருக்கார்.

ஆம், உலக வாழ்வைத் துறந்து துறவறம் பூண்டவர் எப்படி இருக்கணும் எனும் பகுதியில் இதெல்லாம் சொல்கிறார்.

புலால் மறுத்தல் துறவறவியலில் ஒரு அதிகாரம்.
அதே இயலில் நிலையாமை, மெய்யுணர்தல், அவா அறுத்தல் என *துறவு தொடர்பான * செய்யுள்கள் உள்ளன.

காமத்துப்பாலில் டிசைன் டிசைனாக, காதலிப்பது பற்றியும் கலவி கொள்வது பற்றியும் உண்டு. அதுக்காக துறவறத்தில் உள்ளோரும் பூந்து வெளாடுங்கடா/டீ என்று சொன்னார் என்றா எடுத்துக் கொள்ள முடியும்?

அந்தந்த இயல்களில் அதனதன் பொருள் ஒட்டி (relevance) பொருள் கொள்ள வேண்டும்.

துறவறத்தில் உள்ளவனைப் பார்த்து,
அடேய்.. உழவு, விருந்தோம்பல், குற்றம் கடிதல் என எல்லாமே உனக்கும்தான்டா எனக் கொத்து பரோட்டா போட்டால் தகுமா? அவருக்கு அருளுடைமை, தவம், கொல்லாமை, நிலையாமை என்பன பொருந்தும், பொருத்தம்.

போலவே, இல்லறத்தில் உள்ளோர்க்கு இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, பிறனில் விழையாமை என இல்லற இயல் செய்யுட்களையும்,

மண வாழ்விலும், அதற்கு முன்பும் காதல் கொள்வோருக்கு குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், ​ஊடல் வகை என *அந்தந்தந்த* பருவத்தினருக்கு ஏற்றவாறும் குறளைப் பொருள் கொள்ள வேண்டும்.

மன்னனுக்குச் சொன்னதை உழவனுக்கும், ஒற்றனுக்குச் சொன்னதை அமைச்சனுக்கும் எடுத்து பொருத்தமா இல்லையே என்பது எப்படி சிரிப்போ, அப்படியேதான் துறவிக்குச் சொன்னதை, 'என்னடா வள்ளுவரு கறி துண்ண வேணாங்கறாரு' என்று எடுத்துக் கொண்டாலும்.

எந்தச் சூழலில் எது வேண்டும், எது கூடாது என்று சொல்கிறார்.

ஆக ,
ஐயையோ கறி சோறு வேணாம்ங்கறாரே நான் எப்படி குறள் வழி வாழ்வேன் என்று பதறுமுன் கள்ளுண்ணாமையை ஏன் நட்பியலில் வைத்திருக்கிறார் என யோசித்துப் பாருங்கள்.

சூது, தீ நட்பு, பேதைமை (லூசுத்தனம்), உட்பகை என நட்புக்கு வேட்டு வைக்கும் பலதையும் தொட்டுச் செல்கிறார், சொல்கிறார்.

நட்பியலில்தான் கள்ளுண்ணாமை, மருந்து அதிகாரங்களும் வருது.

'மருந்து' அதிகாரத்தில பத்தில் ஆறு குறள்கள் உண்பதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்.

நிறைய திங்காதே, கண்ணா பின்னான்னு கண்டதையும் திங்காதே, ஏற்கனவே சாப்பிட்டது செரிச்சப்புறமா சாப்பிடு என்று நண்பர்களோடு இருக்கையில் எங்கெல்லாம் தவறுவோமோ அதையெல்லாம் குறிப்பிட்டு எச்சரிக்கிறார்.

​இத விளக்கும் போது, அப்படின்னா கள்ளாமை கூடத்தான் துறவற இயலில் வருது, இல்லறவாசிங்க திருடலாமா ​​என்று எந்த அறிவாளியாவது கேட்டால், திருடித்தான் பாரேன் செங்கோன்மை படிச்சுட்டு மன்னன் (சட்டம்) காத்திருக்கான்-ன்னு சொல்லுங்க.

அதெல்லாம் முடியாது வள்ளுவர் சொன்ன ஒவ்வொரு குறளையும் 'அப்படியே' தனித்தனியா எடுத்துதான் பொருள் கொள்வேன் என்று சொல்பவர்களிடம்,
தாராளமாக புலாலை மறுங்கள், அருளுணவாக மரக்கறி உணவையே எப்போதும் உண்ணுங்கள் அது உங்கள் விருப்பம், உரிமை என்று சொல்வோம்.

ஆனா அதுக்கும் முன்னாடி, அதே துறவற இயலில் இருக்கும் வாய்மை அதிகாரத்தில் 'தன்நெஞ்சு அறிவது பொய்யற்க' என்று சொன்னதற்கேற்ப எந்தச் சூழலிலும் பொய் சொல்லாமலும், அங்கேயே கள்ளுண்ணாமை என்று ஒரு முழு அதிகாரம் எழுதி வெச்சுஇருக்காரே அதற்கேற்ப சரக்கை கனவிலும் எண்ணாமலும் வாழத் துவங்கிட்டு புலாலையும் மறுங்கள். வள்ளுவர் இன்னும் மகிழ்வார் என்று சொல்வோம்.

ஆங்..
இன்னொன்னு.
கறியை துறவுக்கு முன்பே மறுப்பதோ ஏற்பதோ அவரவர் உரிமை, வள்ளுவர் எல்லோரையும் மறுக்கச் சொல்லலை என்பதே நம் விளக்கம்.

முடிவாக,
குறளை அணுகயில், ​எந்தச் சூழலுக்கான பொருளில் சொல்லியிருக்கார் எனப் பார்த்தால், ஒற்றைக் குறளை/அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேவையற்ற பதற்றம், குழப்பம் அடைவதைத் தவிர்க்கலாம்.


​எனவே,
குறள் வழி நடப்போம்;
​​ஆனா, பிரியாணி குண்டானை ​மொதல்ல கழுவிட்டு கடமையாற்றுவோமாக.



========

* ​நண்பர்கள் 'புலால் மறுத்தல்' பற்றி இலக்கியக் குழுவில் பேசத் தொடங்கியதின் தொடர்ச்சியாக எழுதியது.

#​ஞாயிறு போற்றுதும்