Friday, December 13, 2013

மார்கழித் திங்கள் மதி நிறைந்த...

பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலை நேரத்தை பிரும்ம முகூர்த்தம் என்றும் உஷத் காலம் என்றும் சொல்கிறோம். உஷத் காலம், இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்த காலமாகும். மார்கழி மாதம், தேவர்களின் உஷத் காலமாகும்.  இறைவழிபாட்டுக்கென்றே வைக்கப்பட்டிருப்பதால், இந்த மாதத்தில் வேறு விசேஷங்கள் நடத்தப்படுவதில்லை. மார்கழி மாதம் முழுவதும் கோவில்களில் மாணிக்க வாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும், மற்றும் திருப்பள்ளியெழுச்சியும், பாடுவர். திருப்பதி திருமலையிலும் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக திருப்பாவை பாடுவார்கள்.

அந்த நாட்களில் தமிழகத்தில் மார்கழித் திங்கள்...  மாலே மணிவண்ணா... கேட்காமல் இருந்திருக்க சாத்தியமில்லை.  அந்த அனுபவங்களை அனுபவிக்க இங்கும் ஒரு சந்தர்ப்பம்.

நம் ரிச்மண்ட் கோவிலிலும் மார்கழி மாதத்தில் (இந்த வருடம் டிசம்பர் 15 முதல்), வார நாட்களில் தினமும் காலை 7:00 மணிக்கும் (சனி, ஞாயிறு காலை 9:30 மணிக்கும்) திருவெம்பாவை திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடப் படுகிறது. 

நானும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளாவது இதை அனுபவிக்க செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டு போகவே முடியவில்லை. இந்த முறையாவது செய்ய வேண்டும்...



Saturday, November 23, 2013

படம் பாரு கடி கேளு - 60


கீழே நிற்கும் மைக் செட் கடை தொழிலாளி: அண்ணே மன்னிச்சுக்குங்க. தெரியாம தப்பு பண்ணிட்டேன்

கீழே நிற்கும் மைக் செட் கடை முதலாளி: டேய், உன்னால எனக்கு 500 ரூபாய் நஷ்டம். அனியாயமா 10,000 வாட் ஸ்பீக்கரை 1,000 வாட் ஸ்பீக்கர்னு பெயிண்ட் பண்ணிட்டியே. உன் சம்பளத்தில ஒரு சைபரை கட் பண்ணிடறேன் பாரு.

Thursday, October 10, 2013

மழை



உயரம் வெறுத்த மேகம்
தவழ்ந்து தரையிறங்கி
தெளிவு மறைத்து எழில் கூட்ட
கதகதப்பான காரில்
கண்ணதாசன் தமிழ் கசிய
காப்பியின் மணம் நுகர்ந்து
இளங்கசப்பை சுவைத்தபடி
கண்டதையும் கேட்டதையும்
கொண்டாடும் மனம்

                                         - வாசு

சென்ற வருடம் எழுதியது, இன்று நன்கு பொருந்தும்

Wednesday, October 09, 2013

மழை

நாளை மதியம் முதல் மழையென
நேற்றே அறிவித்தது அறிவியல்,
அறிந்தவுடன் அவரவர் அறிவிற்கேற்ப
வழக்கத்தை வசதிக்கேற்ப மாற்றியும்
உடை கொண்டும் குடை கொண்டும்
மழை தவிர்த்தது மனிதரினம்
மரத்தின் கிளைகளில் பதுங்கின பறப்பன
மரத்தின் கீழ் ஒதுங்கின நடப்பன
மண்ணுக்குள் ஒளிந்தன ஊர்வன
விண்ணிலிருந்து ஆவலோடிறங்கி
தொட்டுத் தழுவி உடல் நனைக்க
நகரும் உயிர் தேடித் தேடி
அலைந்து அலுத்து ஏமாந்து
தனித்துத் தவித்து அழும் மழை
                                                         - வாசு  

Sunday, August 18, 2013

தகுதி

கோவிலைச் சார்ந்த உணவகத்தில்
அரைக்கால் சராய் அணிந்தவர்க்கு
அனுமதி மறுக்கும்
லுங்கி அணிந்த தடியன்.

Thursday, August 15, 2013

எந்தத் தொழிலும் கேவலமில்லை...

அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் எந்த தொழில் செய்யலாம். இன்னார் இந்தத் தொழில் செய்தால் கேவலம் என்ற நிலையில்லை. அந்த மனப்பான்மை இந்தியாவிலும் ஆரம்பித்திருப்பது நல்லது. ஊரில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இனிய அதிர்ச்சி.  நடிகைகள் காலங் காலமாக சோப், ஷாம்பூ, நகை விற்று வருகிறார்கள். இன்று நம் நடிகர்கள் பல விளம்பரங்களில் வருகிறார்கள். விஜய் அலைபேசி விளம்பரத்தில் வந்தார், ஷாருக் கான் சிமெண்ட் விற்கிறார்,  மம்முட்டி பனியன், வேட்டி விற்கிறார்.  இவர்கள் எல்லோரையும் விட சூப்பர் அப்பாஸின் டாய்லட் கழுவும் திரவம் விளம்பரம்.

என்னடா, மார்க்கெட் போனதால் டாய்லட் கழுவும் விளம்பரத்திலெல்லாம் வருகிறானே என்று கேலி செய்வார்கள் என்றெல்லாம் கவலைப்படாமல் ஜாலியாக விளம்பரத்தில் வருகிறார்.




அடுத்து  ______________________________ (மார்க்கெட் போன ஒரு நடிகர் பெயரை செருகவும்)  நடிக்கும் தென்னந்தொடப்பம் விளம்பரத்தை எதிர்பார்க்கிறேன். என் பையன்கள் தென்னந்தொடப்பத்தின் அருமை பெருமைகளை ஒத்துக் கொள்ள மாட்டென்கிறார்கள். :-)

Saturday, July 20, 2013

படம் பாரு கடி கேளு - 59


ஒரு 5 நிமிடம் ட்ராபிக்கை பார்த்துக்கோ ஒரு டீ சாப்பிட்டு எனக்கும் ஒரு பன் வாங்கி வரேன்னு சொல்லிட்டு போனவரு போனவருதான். ஆளையே காணும். ஒரு யூனிபார்ம், தொப்பி, ஷூ கூட கிடையாது. வரட்டும் அந்த ஆளு கடிச்சு கொதரிடறேன் பார்,

Friday, May 31, 2013

படம் பாரு கடி கேளு - 58


மாப்ளே: நாயகிய கல்யாணம் பண்ணி கண்கலங்காம பாத்துக்குங்கன்னு சொன்னாங்க. இங்க வந்தா வேற கதையா இல்லே இருக்கு!!!

Thursday, May 16, 2013

திருக்குறள் கணிணி மென்பொருள் - 2

சமீபத்தில் பதிந்த திருக்குறள் கணிணி மென்பொருள் பதிவின் தொடர்ச்சியாக, சில நண்பர்களின் வேண்டுகோளின் பேரில், சிறிது மேம்படுத்தப்பட்ட மென்பொருளைக்  கீழ்க்கண்ட சுட்டியில் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.  மேல் விபரங்களுக்கு, மென்பொருளின்  F1 விசையை அழுத்தினால், தகவல் பெறலாம்.





நம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.


திருக்குறள் கணிணி மென்பொருள் முந்தைய பதிப்பு

http://blog.richmondtamilsangam.org/2013/05/blog-post.html




Wednesday, May 15, 2013

தடயம் - மர்மத்தொடர் - 15


தடயம் - மர்மத்தொடர்


தடயம் மர்மத்தொடரின் பதினைந்தாம் அத்தியாயத்தை இங்கேபடிக்கலாம்.


முரளி.

தடயம் - மர்மத்தொடர் - 14


தடயம் - மர்மத்தொடர்


தடயம் மர்மத்தொடரின் பதினான்காம் அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.


முரளி.

Thursday, May 09, 2013

படம் பாரு கடி கேளு - 57


பார்வதி: என்னங்க அப்பவே சொன்னேன் பின்னால இன்னொரு ஸீட் இல்லேன்னா ஒரு ஸைட்கார்  மாட்டுங்கன்னு. நீங்க தான் கேட்கல்லே, இப்போ பாருங்க முருகன் மயில்மேல தான் வருவேன்னு பறந்துட்டான்.

மறுகடி:
போன் பேசும் இன்ஸ்பெக்டர்: ஆமாம் சார் 6 பேர் போகக்கூடிய மோட்டார்பைக்கில் 3 பேர் தான் போறாங்க. ம்ம்ம்.. இல்ல சார். 2 பேர் தலையில தான் ஏதோ ஹெல்மெட் மாதிரி இருக்கு. ஓட்டுனர் தலையில தண்ணி கொட்டுது சார். முன்னால உள்ள குழந்தைக்கு யானை தலை சார். 

Monday, May 06, 2013

திருக்குறள் ‍- கணிணி மென்பொருள்

அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு மனித வாழ்விலும் ஏதோ ஒருவகையில் கூடவே வரும் பழம் தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் மிக முக்கியமான படைப்பாகும்.

மனனத்தில் தொடங்கிய கல்வி, எழுத்துக்களாய் உருப்பெற்று, ஏடுகளில் அழுந்தி, தாள்களில் தவழ்ந்து, இன்று மின்னணுவியலில் பயணிக்கும் இக்காலத்தில், என்னால் ஆன ஒரு சிறு முயற்சியே இது !

திருக்குறளை தமிழிலும் ஆங்கிலத்திலும், வரிசையாகவோ, அல்லது குறிப்பான வரிசை அன்றியோ, சிறு கட்டமைத்த‌ கால அவகாசத்தில் காட்டுவதே இத் திருக்குறள் மென்பொருளின் திட்டம். குறிப்பிட்ட எண் கொண்ட குறள் தேடும் ஆற்றலும் இதில் கண்டு பயன் பெறலாம்.

கீழ்க்கண்ட சுட்டியில், இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் முயற்சித்துப் பாருங்கள்.


671 முதல் 680 குறள்களுக்கான ஆங்கில விளக்கம் கிடைக்கப் பெற‌வில்லை. தகவல் இருந்தால்/அறிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இம்மென்பொருளின் சில திரைக்காட்சிகள்:

முதல் பக்கம்

குறிப்பிட்ட குறள் எண் தேடல் பக்கம்

அசைவூட்டக் கட்டமைப்புப் பக்கம்


தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்புவோம் !

நன்றி !!

Monday, April 29, 2013


மேனேஜர் – பாகம் - 2
பலமான கைதட்டல்களுக்கும் “Congrats Kumar” க்கும் நடுவில் “குமார், குமார், எழுந்திருங்க குமார். குமார் குமார் ….” என்று எங்கோ குரல் கேட்டது.
திரும்பிப்படுத்த குமாரின் முகத்தில் சுளீரென்று வெய்யில் அடித்தது. சந்தியா தான் கிச்சனிலிருந்து கூவிக்கொண்டிருந்தாள். கடிகாரத்தைப்பார்த்தான். மணி 7:30. “சந்தியா காபி ரெடியா?” என்று கத்தினான். “ஆமாம் இவரை கட்டிக்கொண்ட கடனுக்கு தினமும் காபி, சாப்பாடு, வீட்டு வேலை பண்ணியே என் காலம் போயிடும்” என்று வழக்கம்போல சந்தியா முணுமுணுப்பது கேட்டது. அலுத்துகொண்டே எழுந்து பாத்ரூமுக்குள் சென்றவன் “சந்தியா இந்த பேஸ்டை இனிமேல் சுருட்டி அமுக்கினாலும் பேஸ்ட் வெளியே வராது. புது பேஸ்ட் எங்கே” என்றான். “புது பேஸ்டா? வாங்கலே. இன்னிக்கு ஒரு நாள் பல்பொடியால தேய்ச்சா பல் கெட்டுப்போகாது” என்றாள். “அது எங்கே” என்றான் குமார். “பல் பொடி அந்த வாஷ்பேசினுக்கு அடியில் உள்ள ட்ராவில இருக்கு. எல்லாம் நான் தான் எடுத்து வெக்கணுமா? எனக்கு சமையலுக்கு லேட் ஆயிடிச்சு” என்று சொன்னாள் அலுத்துக்கொண்டே. “டவல் எங்கே சந்தியா? எல்லா டவலையும் தோய்க்கப்போட்டுடுவீங்களே” என்று கூவினான் குமார். “ஆமாம் நீங்க குளிக்கிற குளியலுக்கு டவல் கடை தான் வெக்கணும். நேத்து துடைச்சுக்கிட்ட டவல் அங்கே கூடையில இருக்குங்க அதை இன்னொரு தடவை யூஸ் பண்ணுங்க. நான் இன்னும் துணியெல்லாம் துவைக்கல்லே” என்றாள் சந்தியா. குளிச்சு தலை, உடம்பை துவட்டிக்கொண்டு பெட் ரூமிற்கு வந்த குமார் “சந்தியா என் ப்ளூ கலர் ஸ்ட்ரைப்ட் ஷர்ட் எங்கே?” என்றான். “போன வாரம் துவைத்து அந்த க்ளாஸெட்ல தாங்க இருக்கு. ஏடுத்து அயர்ன் பண்ணிக்குங்க நான் லன்ச் பாக் பண்ணனும்ங்க” என்றாள். சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே ஈட் இன் கிச்சனிலுள்ள டைனிங் டேபிளிள் உட்கார்ந்து “என்ன ப்ரேக்பாஸ்ட் சந்தியா? இட்லி, வடை, சாம்பார், சட்னி இப்படி ஏதாவது” என்றான். “அதெல்லாம் பண்ணனும்னு தான் ஆசை ஆனால் சாம்பார் பொடியும் தேங்காயும் ஷார்ட்டேஜ். இன்னிக்கு ஸீரியல் தாங்க” என்றாள். ஸீரியலை பௌலில் போட்டு பாலை விட்டுக்கொண்டு சாபிட்டுவிட்டு “இன்னிக்கு என்ன லன்ச் சந்தியா?” என்றான். “ஸாரி டியர். இன்னிக்கு எனக்கு ஆபீஸில் 8:30 க்கு ஒரு மீட்டிங். அதுனாலே…” என்று இழுத்தாள் சந்தியா. “அதுனாலே?” என்றான் குமார். “அதுனாலே இன்னிக்கு உங்ளுக்கு ஸாண்ட்விச் தான்” என்றாள். “சரி ஸான்ட்விச் கூட சிப்ஸ் வெச்சிருக்கியா? தக்காளி, வெள்ளரிக்காய, வெங்காயம் கட் பண்ணி போட்டிருக்கியா? என்றான். “அதெல்லாம் போட்டா இந்த ஸாண்ட்விச் நல்லா இருக்காதுங்க”. என்றாள். “ஆமாம் இன்னிக்கு என்ன ஸாண்ட்விச்?” என்றான். “பீனட் பட்டர் ஜெல்லி ஸாண்ட்விச்சுங்க” என்று சொல்லிக்கொண்டே ஒரு பேப்பர் பையை குமார் கையில் திணித்தாள்.” “தாங்க்ஸ் சந்தியா” என்று சொல்லிக்கொண்டே சந்தியா அருகில் சென்று அவள் உதட்டில் ஒன்று பதிக்கு முன் சந்தியா திரும்ப “பச்சக்” என்று அவள் கன்னத்தில் ஒன்று விழுந்தது. “சரி மீதி சாயந்திரம்” என்று குமார் சொல்லுமுன் “குமார் எனக்கு இன்னிக்கு இயர் என்டிங். வீட்டுக்கு வர 9:30 – 10:00 ஆயிடும். Freezerலே சாம்பார், ரசம் கறி, Fridgeல் ரைஸ், தயிர் இருக்கு, நீங்க வந்து டின்னர் சாப்பிட்டு படுத்துக்குங்க. ஸீ யூ குமார் எனக்கு பஸ்ஸுக்கு லேட் ஆயிடுச்சு” என்று சொல்லிக்கொண்டே வெளியில் சென்றாள் சந்தியா. வீட்டை பூட்டிக்கொண்டு கடிகாரத்தைப்பார்த்தான். மணி 8:00. இன்னும் 30 நிமிடத்தில் மேனேஜருடன் மீட்டிங். அதற்குள் ஆபீஸ் போய்ச்சேரணுமே என்று எண்ணிக்கொண்டே பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான் குமார். பஸ் ஸ்டாப்பில் ஒரே கும்பல். 8:00 மணி பஸ் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டே வந்துகொண்டிருந்தது. புட்போர்டில் தொங்கிக்கொண்டு வரும் சிலரின் செருப்புகள் ரோட்டில் தேயுமளவுக்கு சாய்ந்துகொண்டே வந்துகொண்டிருந்தது. பஸ் ஸ்டாப் அருகில் வந்து நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றும் நிற்காமலும் சில பயணிகளை தள்ளிவிட்டு சென்றது. “ஐயோ இன்னிக்கு மீட்டிங் அவ்வளவு தான்” என்று எண்ணிக்கொண்டே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் பார்வையைச்செலுத்தினான். தனியாக ஒரு ஆட்டோ நின்றுகொண்டிருந்தது. ஆருகில் சென்று “என்ன ஆட்டோ மவுண்ட் ரோடு L I C பக்கம் போகணும் வர்றியா” என்றான் குமார். குமாரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு “ஆட்டோ கூப்பிடுற ஆளைப்பாரு - கிண்டி பக்கம் போறேன் வர்றியா?” என்று நக்கலாக மறு கேள்வி கேட்டான் ஆட்டோ ட்ரைவர். “என்னப்பா பப்ளிக் சர்விஸ் பண்ணிக்கிட்டு இப்படி பேசறே? கம்ப்ளைன் பண்ணட்டுமா?“ என்றான் குமார். “இன்னா ராங் காட்றே? ஆட்டோல போற மூஞ்சப்பாரு நான் தான் பாக்குறேனே நெதோக்கும் பஸ்ல போற பார்ட்டி தானே நீ? ஆட்டோ ரிப்பேர் ஓடாது போ” என்று அடுக்கிக்கொண்டே போனான். இனி அங்கு நின்றால் மானம் போகுமென்று உணர்ந்த குமார் மறுபடியும் பஸ் ஸ்டாப் பக்கம் சென்றான். அடுத்த பஸ் வந்து ஸ்டாப்பில் அதிசயமாக நின்றது. அதிலும் கூட்டம். முன்னால் ஏறலாமா பின்னால் ஏறலாமா என்று குமார் எண்ணிக்கொண்டிருக்கையில் ஒருசிலர் முன் பக்கம் ஏறினர். “முன்னால ஏறின சாவுகிராக்கியெல்லாம் பின்னால வாங்க” என்று கண்டக்டர் கத்த மட மடவென்று முண்டியடித்துக்கொண்டு பின் பக்கம் ஏறி பஸ்ஸினுள் சென்றான் குமார். “ரைட் ரைட்” என்று சொல்லிய கண்டக்டர் நகர பஸ்ஸும் நகர்ந்தது. “பஸ் கம்பியில் எல்லா இடமும் தொட்டுப்பாருங்க” என்று கிண்டலாக கண்டக்டர் கூவ லேடீஸ் ஸீட் பக்கம் நின்று கொண்டு “ஜொள்” விட்டுக்கொண்டிருந்த மூன்று காலேஜ் மணிகளும் கேட்டும் கேட்காமலுமாக மெதுவாக முன்னால் நகர்ந்தனர். “டிக்கட் டிக்கட்” என்று சொல்லிக்கொண்டே குமார் அருகில் வந்த கண்டக்டர் “இன்னா சார் எங்கே போவணும்” என்றார். “L I C” என்று சொல்லிக்கொண்டே 10 ரூபாயை குமார் கண்டக்டரிடம் நீட்ட “டென் ரிபீஸா? நான் இன்னா பாங்கா நட்த்தறேன்? கீழ எறங்கு. ட்ரைவர் ஹோல்டான் என்று கத்த “இருப்பா இருப்பா சேஞ் இருக்கு” என்று சொல்லிக்கொண்டே பாண்ட் பாக்கட்டை துழாவி சரியான சில்லரையை கொடுக்க “இந்தா” என்று டிக்கட்டைக்கசக்கி குமார் கையில் திணித்துவிட்டு ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தார் கண்டக்டர். அந்த கும்பலில் எந்த ஸ்டாப்பும் கண்ணுக்குத்தெரியாமல் பஸ் நடுவில் நின்றுகொண்டிருந்த குமாருக்கு ஒரு வழியாக “L I C எல்லாம் இறங்கு” என்று கேட்டவுடன் அப்பாடா என்றிருந்தது. எப்படியோ முட்டி மோதிக்கொண்டு பஸ்ஸைவிட்டு இறங்கி ஆபீஸ் இருக்கும் சாலையில் நடந்து சென்று ஆபீஸ் பில்டிங்கை அடைந்து உள்ளே நுழைந்தான். மேனேஜர் குட்டி போட்ட பூனையைப்போல் அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டுந்தார். “குட் மார்னிங் சார்” என்றான் குமார். “குட் மார்னிங்கா? குட் ஈவினிங்னு சொல்லு குமார். என்னப்பா ஆபீஸுக்கு வர்ற நேரமா இது அது தவிற இன்னிக்கு எனக்கும் உனக்கும் மீட்டிங்னு தெரியுமில்லே? என்று கடுப்புடன் கேட்டார். “ஸாரி சார் பஸ் லேட், அடுத்த பஸ்லே ஒரே கூட்டம் அதான்…” என்று இழுத்தான். “சரி வா என் ரூமுக்கு போவோம்” என்று விரைந்தார். பின்னாலேயே குமார் சென்றான். “குமார் என்னோட files எல்லாம் நீ தான் பாக்கணும். உனக்கு hand-over பண்றதுக்குத்தான் காத்திட்டு இருந்தேன் இந்தா” என்று ஒரு 10 பைல்களை அவன் முன் குவித்தார். “சார் நான் இதை எதிர் பார்க்கவேயில்ல சார். ரொம்ப தாங்ஸ்” என்றான் குமார். “நான் கூட இதை எதிர் பார்க்கவேயில்ல குமார். ஆனா என்ன ஒரு 2 வாரத்துக்கு தானே I am sure you can manage” என்றார் மேனேஜர். “என்ன சார் சொல்றீங்க?” என்றான். “குமார் இந்த Quarterலே என்னோட Numbers meet பண்ணினதாலே எனக்கும் என் wife க்கும் 2 weeks all expenses paid Europe tour + hefty bonus குடுத்திருக்காங்க நம்ம ஹெட் ஆபீஸிலிருந்து. இன்னும் 2 வாரத்துக்கு நம்ம ஆபீஸ் உன் கைலே. Flight க்கு நேரமாச்சு. நான் வரட்ட்டா?” என்று சொல்லிவிட்டு பறந்தார் மேனேஜர். குமார் மேனேஜர் சேரில் அமர்ந்து மேஜையில் குமிந்திருக்கும் பைல்களை சோகத்துடன் பார்த்தான். மேலாக இருந்த பைலை தூக்கிக்கொண்டு ஜன்னலின் வெளியே பார்த்தான், குமார் ஆபீஸின் அதே complexல் உள்ள பக்கத்து கம்பெனியின் வெளியில் பலூன்களும், streamerகளும் கட்டியிருந்தன. “சரி யாருக்கோ பிறந்தநாளாயிருக்கும் என்று எண்ணினான்”. மதியம் லன்சுக்குப்பிறகு வெளியே வந்த குமார் ஆர்வத்துடன் அந்த கம்பெனியின் அருகில் சென்று lobbyயை நோட்டமிட அவன் கண்ணில் பட்டது வண்ணமிகு பூக்களால் எழுதிய “Welcome to our New Manager”. அந்த கம்பெனியின் புது மேனேஜருக்கு  மனதிற்குள் வாழ்த்து சொல்லிக்கொண்டே தன் ஆபீஸுக்குள் நுழைந்து அடுத்த file ஐ புரட்ட ஆரம்பித்தான்.         
முற்றும்

Sunday, April 28, 2013

மேனேஜர் - பாகம் 1

குமார் படுக்கையில் புரண்டு படுத்ததும் சுளீரென்று வெய்யில் அவன் முகத்தில் அடித்தது. திடீரென்று எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி 8:00. ஐயோ 7:43 மணி பஸ் போயிருக்குமே. இன்னிக்கு 8:15 மணிக்கு மேனேஜருடன் மீட்டிங் வேறு இருக்கே. இந்த அலார்ம் ஏன் அடிக்கலே? எத்தனை கனெக்டிங் பஸ் பிடித்து ஆபீஸுக்கு போக வேண்டுமோ என்று எண்ணிக்கொண்டே எழுந்திருக்கும் பொழுது “குட் மார்னிங் டார்லிங்” என்று சொல்லிக்கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள் சந்தியா. 

“பாவம் அசந்து தூங்கிட்டு இருந்தீங்க. இன்னிக்கு 9:30 க்குத்தானே மீட்டிங்னு சொன்னீங்க? நான் தான் அலார்ம் க்ளாக்கை அணைச்சு ஒரு 5 நிமிடம் தூங்க விட்டுட்டு பெட் காபி எடுத்துக்கிட்டு வந்தேன். இந்தாங்க காபி சாப்பிட்டுவிட்டு பாத்ரூமில் எல்லாம் ரெடியா இருக்கு. சீக்கிரம் கிளம்புங்க. நான் ப்ரெக்பாஸ்ட் ரெடி பண்றேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள் சந்தியா. குமார் மடக் மடக்கென்று காபியை அவசரமாக குடித்துவிட்டு படுக்கையை விட்டு எழுந்து ஓடி பாத்ரூமுள் நுழைந்தான். 

அவனால் நம்பவே முடியவில்லை. ப்ரஷ்ஷில் பேஸ்ட் போட்டு ரெடியாக இருந்தது. அவசரமாக பல்லை தேய்த்துவிட்டு ஷவர் பக்கம் திரும்பினான். வாட்டர் ஹீட்டர் போட்டு வெந்நீர் வெளிவர ரெடியாக இருந்தது. ஷவர் ஸ்டாலில் நுழைந்து செட்டிங்கை வெதுவெதுப்பாக வைத்து குளித்து முடித்து ஸ்டாலை விட்டு வெளி வந்தான். டவல் ரெயிலிங்கில் புஸுபுஸுவென்ற இப்போது தான் ட்ரையரில் இருந்து எடுத்த டவல் தொங்கிக்கொண்டுருந்தது. உடம்பையும் தலையையும் துவட்டிக்கொண்டே பெட்ரூமுக்குள் நுழைந்து க்ளாஸெட்டை திறந்தான் குமார். நீட்டாக அயர்ன் செய்த சட்டையும் பேண்டும் டையும் ஹாங்கரில் ரெடியாக தொங்கிகொண்டிருந்தன. சட்டையையும் பாண்டையும் டையையும் அவசரமாக மாட்டிக்கொண்டு படியிறங்கி கீழே கிச்சனை நோக்கிச்சென்றான். டைனிங் டேபிளில் சுடச்சுட இட்டிலியும், மிளகாய்ப்பொடியும், சட்டினியும் ஆவி பறக்கும் பில்டர் காப்பியுடன் ரெடியாக காத்திருந்தது. “ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுங்க டார்லிங். நான் உங்க லன்ச் பாக் பண்ணிட்டிருக்கேன். இதோ வந்திடுவேன்” என்று சந்தியா குரல் கொடுத்தாள். குமார் வேகமாக இட்டிலிக்களை மென்று முழுங்கி, காப்பியையும் குடித்துவிட்டு வாஷ்பேஸினில் கை அலம்பி திரும்பினான். பின்னால் கை துடைக்க டவலுடன் சந்தியா காத்திருந்தாள். கையை துடைத்துவிட்டு திரும்பியவன் கையில் டிபன் காரியரை திணித்தாள் சந்தியா. “தாங்க்ஸ் டார்லிங்” என்று சொல்லிக்கொண்டே சந்தியா உதட்டில் குமார் முத்தமிட்டு மீதி சாயந்திரம் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தான் குமார். “பை டார்லிங். மறக்காமல் நேரத்தில் லன்ச் சாப்பிடுங்க” என்றாள் சந்தியா.
டிபன் காரியரை விட்டு வெளியிலேயே வாசனை மூக்கை துளைக்குதே இன்னிக்கு என்ன லன்ச் டார்லிங்?” என்றான். “உருளைக்கிழங்கு கறி, வெங்காய சாம்பார், ரசம், காலிப்ளவர் கூட்டு, பப்படாம், ஸ்வீட்” என்றாள். “அடி சக்கை நேற்றே ஜோர்னா இன்னைக்கு அதைவிட படு ஜோர் லன்ச் பை டார்லிங்” என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.


 குமார். வழக்கமாக நிற்கும் கும்பலைக் காணோம். 8:30 மணி பஸ்ஸும் போயிடிச்சா? சரி அடுத்த பஸ் எப்போ வருமோ? இன்னைக்கு மட்டும் ஆட்டோவில் போயிடலாமா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் சென்றான். மெதுவாக முதலில் நின்ற ஆட்டோவிடம் சென்று “என்னப்பா ஆட்டோ மவுண்ட் ரோடு L I C பக்கம் போகணும் வர்றியா?” என்று பயந்துகொண்டே கேட்டான். “என்ன சார் பஸ் போயிடுச்சா? கவலப்படாதீங்க. அடுத்த பஸ் இன்னும் 2 நிமிஷத்தில வந்திடும். நான் தான் உங்களை தினமும் பார்க்கிறேனே. எதுக்கு ஆட்டோக்கு குடுத்து வேஸ்ட் பண்றீங்க? பஸ் அதோ வந்திடிச்சு சார். கலக்கப்படாம போங்க சார்” என்று மரியாதையாக சொன்னான். 

பஸ்ஸில் ஏகப்பட்ட கூட்டம். பின் படிக்கட்டு வழியாக ஏறுவதற்கு இடமில்லை. “Backல ஏற முடியாதவங்களெல்லாம் frontல ஏறுங்க. நான் வந்து டிக்கட் கொடுக்கிறேன்” என்றார் கண்டக்டர். முன் படிக்கட்டு வழியாக முட்டி மோதிக்கொண்டு ஒரு வழியாக ஏறினான். கண்டக்டர் எல்லோரையும் தாண்டி முன்னால் வந்து “டிக்கட் டிக்கட் எங்க சார் போகணும்?” என்றார். “LIC” என்றான் குமார். “ஐயோ change இல்லையே. 10 ரூபாய் தான் இருக்கு” என்றான் குமார். “அதுனால என்ன சார். நோ ப்ராப்ளம். குடுங்க. நான் change தர்றேன்” என்று சொல்லி 10 ரூபாயை வாங்கி, டிக்கட்டை கிழித்து குமார் கையில் திணித்தார் மீதி சில்லரையுடன். “LIC எல்லாம் இறங்கு” என்று கேட்டவுடனே ஆபீஸுக்கு போகப் பறக்கும் பலர் மடமடவென்று இறங்க குமாரும் “அப்பாடா ஆபீஸ் வந்தாச்சு” என்று எண்ணிக்கொண்டே இறங்கினான். 

“கொஞ்சம் லேட். சரி மேனேஜரிடம் எப்படியாவது ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்” என்று எண்ணிக்கொண்டே ஆபீஸினுள் நுழைந்தவன் எதிரில் மேனேஜர் வந்தார். “குட் மார்னிங் சார்” என்றான். “குட் மார்னிங் மிஸ்டர் குமார்”. “சார் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சார்” என்று சொன்னவனின் முதுகில் தட்டிக்கொடுத்து கை குலுக்கி “Congratulations மிஸ்டர் குமார்” என்றார். “என்ன சார் சொல்றீங்க?” என்று சொல்லி திரும்பினான் குமார். ஆபீஸிலிருக்கும் அனைவரும் குமாரை சுற்றி நின்றுகொண்டு “Congrats Kumar கங்ராட்ஸ் குமார்” என்று சொல்லி கைதட்டலுடன் சிலர் குமாரிடம் கை குலுக்க முன்னேறினர். குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சார் இது?” என்றான் மேனேஜரைப்பார்த்து. “மிஸ்டர் குமார் – நீங்க தான் இந்த ஆபீஸின் புதிய மேனேஜர். நான் இன்னும் 2 வாரத்துல நம்ம ஹெட் ஆபீஸுக்கு ஜெனெரல் மேனேஜராக ஜாயின் பண்ணப்போறேன்” என்றார், குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. “Congrats Kumar Congrats Kumar என்று ஒரே சத்தத்துடன் சிலர் குமார் முதுகில் தட்டினர். 
----- தொடரும்  

Tuesday, March 12, 2013

சென்னைப் பகுதிகளின் பெயர்கள்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.
அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 
சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு,பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India 
என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory 
இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18
ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதிபின்பு மாவில்வம் என்றாகி,காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என  அழைக்கபடுகிறது (தி.நகர்)

புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால்இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்றுகாஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும்தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17
ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி மஸ்தான் சாகிப்'.இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள   தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால்இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கிபின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.

தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.

- City Improvement Trust 
என்பதின் சுருக்கமே CIT நகர்

- மின்னஞ்சலில் வந்த செய்தி. மூலம் தெரியவில்லை.

Friday, March 01, 2013

யோகம் பயில்



எளிதான நம் வாழ்வை எவ்வளவு கடினமானதாக‌ ஆக்கியிருக்கிறோம். உற‌வுக‌ள், ந‌ட்புக்க‌ள், உண‌வுக‌ள், செல்வம், பதவி, புகழ், வாழ்க்கை முறை எல்லாவ‌ற்றிலும் கோலோச்சினாலும், அடிப்படையான ஏதோ ஒன்றை இழ‌ந்தே இவ‌ற்றை எல்லாம் பெற்றிருக்கிறோம்.

பொதுவாக‌ இந்திய‌ர்க‌ள் உடல் ந‌ல‌த்தைப் பாதுகாப்ப‌தில்லை என்ப‌து உல‌க‌ளாவிய‌ ஒரு எண்ண‌ம். அகவை நாற்ப‌தைத் தொடுகையில் இது ச‌ற்று மாறக்கூடும். இங்கொன்றும் அங்கொன்றுமாக இளம்வயது மார‌டைப்பு ப‌ற்றி செய்தி அறிகையில் ந‌ம‌க்குள்ளும் ஒரு ப‌ட‌ப‌டப்புத் தோன்றுகிறது. 'ஓடு உடற்பயிற்சி நிலையத்திற்கு' என்று கிளம்புகிறது ஒரு கூட்டம். 'உட‌ற்ப‌யிற்சி செய்கிறேன்' என்பது ஒரு பெருமிதத்தைத் தருகிறது நமக்கு. உடலுக்கு செய்யப்படுகிறதோ இல்லையோ, 'ஜிம்' சென்றுவ‌ருகிறேன் என்ப‌து இன்றைய‌ இள‌வ‌ட்ட‌ங்க‌ளின் ம‌த்தியில் அந்தஸ்த்தான சொல் ஆகியிருக்கிறது. நாள் முழுக்க‌ உட‌ற்ப‌யிற்சி செய்யும் ம‌னித‌ர்க‌ளும் இருக்கிறார்கள்.

ஜி.யு.போப் சொன்னால் திருக்குறள் படிக்கிறோம். 'ப்ரெய்ன் யோகா' என அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள் என தோப்புக்கரணம் போடுகிறோம். இதேபோன்று அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், ஜ‌ப்பானியர்க‌ளும், ஏனைய‌ ம‌ற்ற நாடுக‌ளிலும் செய்ய‌ப்ப‌டுவ‌தால் யோக‌ம் ப‌ற்றியும் தெரிந்து வைத்திருக்கிறோம். செய்கிறோமா, இல்லையா என்ப‌து அடுத்த‌ பிர‌ச்ச‌னை :)

உடல் நலம் பேண, மேற்க‌ண்ட‌வாறு க‌டின‌மான‌ உட‌ற்ப‌யிற்சி தேவையா ?, என்றால், தேவையில்லை என்கிற‌து யோக‌க் க‌லை. "இன்றைய வாழ்வின் கடின உடற்பயிற்சி உடலுக்கு மட்டுமே. அதுவும் கடின உடற்பயிற்சியினால் உடலின் உள்ளுறுப்புக்கள் சேதமடைய சாத்தியங்கள் அதிகம். யோகத்தில், உடல் வருத்தாது உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி இருக்கிறது". இதுவும் மேற்க‌த்திய‌ அறிஞ‌ர்க‌ள் சொல்லித் தான் நாம் அறிகிறோம். ந‌ம் நாட்டில் தோன்றிய‌ ப‌ல‌ துற‌விக‌ளும், ஞானிக‌ளும் ப‌ன்னெடுங்கால‌ம் செய்து வ‌ந்த‌ யோக‌த்தை, நாம் செய்யாம‌ல் விட்ட‌தை, இன்று மேற்க‌த்திய‌ நாடுக‌ள் செய்கின்ற‌ன‌. நாமும் செய்ய‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌ யோசித்தால், விடை சுல‌ப‌மே.

ந‌ம‌க்குத் தேவை நிறைய‌ நேர‌ம். கை, கால்க‌ளை நீட்டி முட‌க்க‌ப் போதுமான‌ இட‌ம், ஒரு வ‌ழுக்காத‌ விரிப்பு, ஒரு குரு. இத‌ற்கும் மேலாக, ம‌ற்ற‌ ச‌ந்தை போல‌வே யோகாவிற்கும் ஒரு பெரிய‌ ச‌ந்தை இருக்கிற‌து. உலக அளவில் யோகா, முப்பது பில்லியன் டாலர் சந்தை என்கிறது இணைய ஆய்வறிக்கைகள்.

மேற்சொன்ன குருவும் (பலருக்கு இணையம்), இடமும், விரிப்பும் நமக்குக் கிடைத்தாலும், பலருக்கும் நேரம் கிடைப்பதில்லை. க‌டின‌ உட‌ற்ப‌யிற்சி செய்ய‌ ப‌ல‌ ம‌ணி நேர‌ம் செல‌விடுகையில், யோகாவிற்கு ஒரு அரை ம‌ணி நேர‌ம் போதும் ஒரு நாள் ஒன்றுக்கு. 'ம‌ன‌ம் ஒன்றுப‌டாத‌ விஷ‌ய‌ங்களில் புல‌ன்க‌ள் வேலை செய்யாது' என்பது பல பழைய பாடல்களின் வாயிலாக நாம் அறியலாம். அதே போல் யோகாவினுள் சென்று உண‌ராத‌ வ‌ரை ந‌ம் யோக‌த்தின் பெருமையை நாம் அனுப‌விக்க‌ முடியாது.

மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி இரண்டும் கலந்தது யோகா. 'மூச்ச நல்லா இழுத்து விடுங்க' என்பாரே மருத்துவர், அதே தான் இங்கு மூச்சுப் பயிற்சி. யோக முறைப்படி கை கால்களை நீட்டி மடக்கியோ, மற்றும் இடுப்பு கழுத்தை வளைத்துத் திருப்பியோ நாம் வெளியில் இருந்து செய்யும் உடற்பயிற்சி, நம் உடலின் உள்ளுறுப்புகளை விரிவடையச் செய்கிறது. உடலின் உள்தசைகளையும் இலகுவாக்குகிறது. இதனால் நம்முள் ஆற்றல் பிறந்து பரினமிக்கிறது. இதுவே அனைத்துலகும் ஏற்றுக் கொண்ட யோகத்தின் அடி நாதம்.

எளிய‌ ப‌யிற்சியாக‌ ஆர‌ம்பித்து, நம்மால் முடிந்த வரை க‌டின‌மான‌ யோக‌ ஆச‌ன நிலைக‌ள் வ‌ரை நம்மால் பயணிக்க முடியும். யோகா பற்றி ஏராளமான செய்திகளும் காணொளிகளும் இணையத்தில் இருக்கின்ற‌ன. நம் முன்னோர் கண்டுபிடித்ததை, நாமும் க‌ண்டு, ப‌டித்து, செய்துண‌ர்ந்து ப‌ய‌ன்பெறுவோம் ! உடல் நலம் காப்போம் !!


Friday, February 01, 2013

விஸ்வரூபம் தடை விமர்சனம்




எடைக்கு எடை கேள்விப் பட்டிருக்கிறோம்.  அதென்ன, தடைக்குத் தடை ?  ஒரு அனுபவம் மிக்க படைப்பாளியின் திறமையை மதிக்காத, அதுவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக (என்று நாம் எல்லோரும் கருதும்) நாடு நமது நாடு.  உண்மையை உரக்கச் சொன்ன பாரதியை என்ன செய்தோம் ?  வெள்ளையனின் உதவியோடு புதுவைக்குத் துரத்தினோம்.  இன்று 'உலகநாயகன்' என்று நம்மால் போற்றப்பட்டு, சொந்த தமிழ்நாட்டை விட்டு துரத்தக் கிளம்பிவிட்டோம்.

தடைக்கு தடை பின்னனியின் பக்கபலம், அரசியல் தான் என்று பலகோடி மக்களும் நம்பியிருக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சமீபத்திய காணொளி உரை இதைத் தகர்த்தெரிந்தது.  இந்தப் படத்தைத் வெளியிடாமல் கு,றுக்கே நிற்பது தாமல்ல என்றும், "சட்டம் ஒழுங்கு எனது மாநிலத்துக்கு முக்கியம், இஸ்லாமிய அமைப்புக்கள் முறையீடு வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மனது புண்படும் காட்சிகளை நீக்குவது தொர்பாக,  கமலை அவர்களுடன் சமரசம் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்." என்று முடித்துக் கொண்டார்.

தமிழக இஸ்லாமியர்கள் அமைப்பைப் பயன்படுத்தி  தடை போடும் அளவிற்கு, என்ன என்ன காட்சிகள் என்று இருதரப்பினர் (எழுத்தாளர், இயக்குநர் ஒருபுறம்.  இஸ்லாம் அமைப்பின் தலைவர்கள் இருவர் மறுபுறம்) சன்டிவி விவாதமேடையில் தூள்கிளப்பியதை பலரும் பார்த்திருக்கலாம் சமீபத்தில்.

பள்ளிக்குச் செல்லும் எட்டு வயது சிறுவனின் கையில் இருக்கும் நோட்டுப்புத்தகங்களைப் பிடுங்கி, கையில் துப்பாக்கியைத் திணித்தல்.

உலகத் தீவிரவாதிகளான முல்லா உம்மர், மற்றும் ஒருவர், மதுரையில் பதுங்கி சதி செய்தல்.

குர்ரான் ஓதி எதிராளியின் தலையறுத்தல்

குர்ரான் ஓதி வெடிகுண்டு வெடித்தல்

பெண்களைப் பயன்படுத்துதல்

இஸ்லாத்தை மையப்படுத்தி பணம் பண்ணப் பார்க்கிறார்

இவையெல்லாம், தமிழக இஸ்லாம் அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டுக்கள்.  அத்தனைக்கும் சான்றுகள் இருக்கின்றன என்கிறார் கமல்.  'இப்படி அவர் சொல்வதைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்' என்கிறார்கள் இஸ்லாமிய அமைப்பினர்.

இந்தப் படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்.  மீசையின்றி தாடி வைத்து வெண் அங்கியில் தெருவில் சென்றால், ஏதோ தீவிரவாதிகள் போல எங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர்.  ஏற்கனவே எங்களுக்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது.  எங்கள் இளைஞர்களுக்குப் போதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.  வீடு வாடகைக்குக் கிடைப்பதில்லை, பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. என்றெல்லாம் அடுக்கினர்.  எற்கனவே இவை மறுக்கப்படுவதாக அவர்கள் நினைப்பதற்கும், தமிழகத்தில் திரையிடப்படாத விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?  பல நாடுகளில், அதுவும் முழுக்க இஸ்லாமியர்களான மலேஷிய நாட்டில் கூட படம் வெளிவந்து, எதுவும் அசம்பாவிதம் நடந்ததாக இன்று வரை செய்தி இல்லை !

பல வருடங்கள் முன்னர், தாலிபான்கள் மந்திரம் சொல்லி,அமெரிக்கர்களின் தலை அறுத்ததை உலகமே பார்த்து அதிர்ந்தது, அப்போது எங்கே போனார்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள்?

2011ல் மந்திரம் ஓதி அமெர்க்க உலக வர்த்தக மையத்தை தகர்த்து எள்ளி நகையாடினார்கள்.  அப்போது எங்கே போனார்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள்?

2008ல் மும்பை புகைவண்டி நிலையத் துப்பாக்கி சூட்டின் போது எங்கே போனார்கள் தமிழக இஸ்லாமிய அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள்?

எடுத்தேன் கவிழ்த்தேன் பேர்வழி அல்ல, முதிர்ந்த அனுபவம் உள்ளவர் கமல்ஹாசன்.  அவர் எப்படி ஒரு (சிறுபாண்மையினர் ?) இனத்தைக் கேலி செய்து, 90 கோடி சொந்த செலவில் படமாக்குவார் ?!  இன்றைக்கு நான் நிற்கும் வீடே நாளை எனதல்ல என்று புன்னகைத்துக் கொண்டே சொல்வதில் பொய்மை இருப்பதாய்த் தோன்றவில்லை.

"கமல் இதில் நல்ல விளம்பரம் பார்க்கிறார்.  பார்த்துக் கொண்டே இருங்கள், படாரென்று சர்ச்சைக்குள்ளானதாகக் கருதப்படும் காட்சிகளை வெட்டிவிட்டு, மன்னிப்பு கேட்டு படத்தை வெளியிடுவார் என்று பலர் சொல்கிறார்கள்.".  அதுவும் படித்தவர்கள் !!!  இது மிகவும் மனவேதனையே.  90 கோடி செலவிட்டு விளம்பரம் தேடுகிறார் கமல்.  இருக்கட்டுமே !  நமக்கு என்ன கேடு.  நாம் ஏன் இது பற்றி விவாதித்து விளம்பரம் தேடவேண்டும். மிஞ்சிப்போனால் இதற்கான செலவிடும் ஒரு சிலமணித்துளிகள் தவிர வேறு என்ன செய்கிறோம் ?

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது பழமொழி.  அவனே அப்படி இருக்கையில், திறமையான ஒருவன் திமிராக இருப்பதில் என்ன தவறு ?  கமல் செய்த ஒரே தவறு.  'என் படைப்பு உண்மை, வெறும் திரிப்பு இல்லை' என்பதில் நிதானமாக, கவனமாக, யாருக்கும் அடிபணியாமல் நீதி மன்றம் படி ஏறியது தான்.

இதைச் அவர் செய்யாமல் விட்டதில், யாருக்கு லாபம் என்றும், யாருக்கு அதிக விளம்பரம் கிடைத்தது என்றும், இந்த உலகு அறியும். !  ரசிகர் மன்றம் புகழ் பரவிக் கிடந்த தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் கமல்.  நற்பணி மன்றம் என்று மாற்றி, போஸ்டர் ஒட்டி புகழ்பாடும் ரசிகர்களுக்கு, ரத்த தானம், உடல் உறுப்பு தானம் என்று தன்னை முதல் உதாரணமாக்கிக் காட்டியவர்.  மதமோ, பணமோ முக்கியமல்ல என்று தன் உறுதியில் இருந்து சற்றும் மனம் தளாரதவர்.  இவையெல்லம் இஸ்லாம் அமைப்புக்களைத் தூண்டி விடுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

மதச் சாயம் பூசி, அரசியல் செய்து, ஒரு தனிமனிதனின் படைப்புக்கு 'தடைக்குத் தடை' செய்வது எல்லாம் அகன்று, விரைவில் விஸ்வரூபம் தமிழகத்தில் தன் வடிவம் காட்டட்டும். !!!

---

விஸ்வரூபம் பாடல் வரிகள் பற்றிய சிறு சிந்தனை.

எனக்குத் தெரிந்து பாரதிக்குப் பின், கவிதைக்கு பொய் அழகில்லை, உண்மை தான் அழகு என நிற்பவர் கமல்ஹாசன்.  படித்த அடுத்த நிமிடம் ஒட்டிக் கொண்ட 'தேடிச் சோறு நிதந்தின்று' என்ற 'பாரதியின் பல கவிதைகளைப் போலவே, கமலின் விஸ்வரூபம் கவிதைகளும் எனலாம்.  'யாரென்று புரிகிறதா ?'வும், 'விழுந்தால் விதையாக விழுவேன்' என்ற கவிதையும் ஒருமுறை படிக்கையில் நம்மோடு ஒட்டிக் கொள்பவை.




Thursday, January 31, 2013

விஸ்வரூபம்



ஊர்ல நாட்ல எல்லாரும் கமலோட விஸ்வரூபம் பத்தி பேசலைன்னாலோ இல்லை அதப் பத்தி லேட்டஸ்ட்டா ஏதாவது தெரியலைன்னாலோ "எதுக்குடா பொறந்தே"ங்கர மாதிரி பாக்கராங்க.  சரி இப்படி எதையாவது எழுதிட்டா.  "இங்க பார்டா இவனெல்லாம் எழுதரான்"ந்னு சொல்ல தோணினாலும், கமல் பத்தி கூகுள் பண்ரவங்க கண்ல நம்ம ப்ளாக் தெரிஞ்சு அவங்க இங்க வந்தா, நம்ம ப்ளாகுக்கு தானே பெறுமைன்னு நீங்க இருக்கனும் சரியா.  

நான் நிறைய பேர்கிட்ட அடிக்கடி சொல்லி அடிவாங்கர ஒரு விஷயம் "சோ" வை எனக்கு பிடிக்கும்ங்கரது.  அது எப்படி விஸ்வரூபம் விஷயத்துல ப்ரச்சனையாச்சுன்னு சொல்றேன் அதுக்கு முன்னாடி விஸ்வரூபம் பத்தி சொல்லிடரேன்.

ரிச்மண்ட்ல பல ஃப்ரெண்ட்ஸ் சொன்னா மாதிரி இது ஒரு ஹாலிவுட் படம் அதுல கமல் நடிச்சு அதை இயக்கியிருக்காருன்னு சொல்லனும்.  அப்படி ஒரு படம்.  கதை என்னன்னு முழுசா சொல்ல மாட்டேன்.  கமல் ஒரு முஸ்லீம், ஆஃப்கானிஸ்தான்ல தீவிரவாதிகளோட பயிற்சி எடுத்துக்கர/கொடுக்கர ஒருத்தர்.  விஸ்வநாதன்ங்கர பேர்ல கதக் டான்ஸ் கத்து கொடுக்கர ஐயரா ஒருத்தர்.  "யோவ்  விஸ்வநாதன்னு பேர் வெச்சுட்டு ஐயங்காராவா இருப்பார்"ன்னு கேக்கக்கூடாது.  இவரோட மனைவி பூஜா, மாணவி ஆண்ட்ரியா, மாமா சேகர் கபூர், நண்பர் மைல்ஸ், வில்லன் ராஹூல் போஸ் மற்றும் பலர்.  பாட்டு வைரமுத்து, கமல்.  டான்ஸ் பண்டிட் பிர்ஜு மஹராஜ்.  கமல் டான்ஸ்ல பிச்சு ஒதரரார்ன்னு சொன்னா அது ரொம்ப சாதாரணமான ஸ்டேட்மெண்ட்.  கண்ணாடி ரூம்ல காமிரா தெரியாம சுழண்டு சுழண்டு ஆடரதும், காமிராவுக்கு எதிரா ஆடராரா, இல்லை ஆடரத கண்ணாடியில காமிச்சு அதை படம் பிடிக்கராங்களான்னு யோசிக்கக்கூட விடாம,  மாத்தி மாத்தி காமிச்சு பின்னிட்டார்.  வசனம் அங்கங்க நல்லா இருக்கு.  கண்டிப்பா ஹாலிவுட்ல பல டைரக்டர்கள், நடிகர்களுக்கு சரியான சவால் விடக்கூடியவன்னு காமிச்சிருக்காரு.  இளையராஜா ம்யூசிக்கா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.  


முஸ்லீம் கமல்தான் ஐயர் கமல் ஆ? இல்லை ரெண்டு பேரா? என்ன ஏதுன்னு தெரியரதுக்கு தியேட்டருக்கு போய் சட்டுன்னு படத்தைப் பாத்துட்டு வந்துருங்க.  பாவம் கமல் கைகாசப் போட்டு வீட்டை அடமானம் வெச்சு படம் எடுத்திருக்கரதா சமீபத்துல பேட்டி கொடுத்திருக்காரு.  வளராத (இல்லை வராத) முடியை வெட்ட மாசா மாசம் 20 டாலர் கொடுத்துட்டு பெருமையா வீட்டுக்கு வருவோமில்ல,  அத மாதிரி நெனச்சுண்டு ஒரு 16 டாலர் கொடுத்து இந்தப் படத்தை பாத்துடுங்க.  நிஜமா சொல்லனும்னா 20 டாலர் கொடுத்தே இந்தப் படத்தை பாக்கலாம்.  அவ்வளவு நல்லா எடுத்திருக்காரு.  நான் படம் பார்த்த அதே நாள்ல படம் பார்த்த ஒருத்தர் "என்னய்யா படம் எடுத்திருக்கான், போலீஸ் வந்து நம்மள பிடிச்சுண்டு போயிடுவானோன்னு பக்கு பக்குன்னு இருந்துச்சு" ன்னு சொன்னார் அவர் சொன்ன மாதிரியெல்லாம் இல்லை அதனால தைரியமா போய் பாருங்க.  அப்படியும் நம்பிக்கை வரலைன்னா டுபுக்கு இந்த இடத்துல http://dubukku.blogspot.com/2013/01/blog-post_25.html எழுதியிருக்கரத முச்சூடும் படிச்சுடுங்க.

இப்போ தமிழ்நாட்டுல கமலுக்கு நடக்கர ப்ரச்சனை:
இந்தப் படம் முஸ்லீம்களுக்கு எதிரான படம்ன்னு சொன்னா யாரும் நம்ம மாட்டாங்கன்னு எல்லோருக்கும் தெரியும், அதனால கேட்பார் பேச்சை கேட்டு, கண்ட மேனிக்குக் குரல் கொடுத்துண்டு இருக்காங்க.  இது ஆஃப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில நடக்கர சில சம்பவங்கள்னு கமல் சொன்னது சரிதான்.  இதுல இவரும் தீவிரவாதிங்க சிலரும் தமிழ் பேசரதும் கொஞ்சம் லாஜிக் இல்லாம இருந்தாலும் சினிமான்னா கமல் பம்மல் சம்பந்தம் படத்துல சொன்னா மாதிரி "அனுபவிக்கனும் ஆராயக்கூடாது"  அவ்வளவுதான்.  இந்தப் படத்துல வந்திருக்கர விஷயத்தைவிட பல மடங்கு விஷயம் சுமார் 15 வருஷத்துக்கு முன்னாடியே  தி சீஜ் "The Seige"ந்னு ஒரு படத்துல விலாவரியா வந்திருக்கு.  கமல் தமிழ்நாட்டுல கஷ்டப் படரதை பார்த்தா விஜய் ஒரு படத்துல (திருமலை) அவரோட ஃப்ரெண்ட்ஸை வில்லனுங்க்க கடத்திட்டு போனதும் யாருன்னு தெரியாம, "தெரியலையே காத்துல கத்தி சுத்தரமாதிரி இருக்கு"ந்னு சொல்லுவாரு அது மாதிரிதான் இதுவும் இருக்கு. 

இந்தப் படத்தை ஜெயா டிவி கிட்டயிருந்து விஜய் டி.விக்கு கொடுத்துட்டாரு அதனாலதான் ஜெ. இவரை இப்படி வறுக்கராங்க, இவர் பி.சி தம்பரம்  இருந்த ஒரு விழாவுல அடுத்த ப்ரதமரா ஒரு வேட்டி கட்டிய தமிழன் தான் வரனும்னு சொன்னாரு (அப்படி சொல்லியிருந்தா அதுக்கே கமலை ஒரு காட்டு காட்டலாம்.  இதுக்கு முன்னாடி வேட்டி கட்டின தேவ கெளவுடா என்னத்தை கிழிச்சாருன்னு தெரியலை) அதுல கடுப்பாயி அம்மா இவரை ஒரு காட்டு காட்டராங்க, அப்படி இப்படின்னு நிறைய கேள்விப் படரோம்.  இதுல எது உண்மை எது பொய்யின்னு யாருக்கு தெரியும்னு எனக்குத் தெரியாது.  அதே சமயம்,  இப்படி ஒன்னு பண்ணி தமிழ்நாட்டுல ஒரு ப்ரச்சனைன்னு வந்தா அது ஜெ வுக்கு தலைவலியா இருக்கும்னு நினைச்சு யாராவது பண்ணியிருக்கலாம்னும் நான் சொன்னா அதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டா நான் எங்க போவேன்.   இதுக்கெல்லாம் புல்ஸ்டாப் வெச்சு ஜெ. கமல் சொல்லி யாரும் ப்ரதமர செலக்ட் பண்ணப் போரது இல்லை அதனால இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அதோட ஜெ டி.வி  நிர்வாகத்தும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு போட்டு ஒடச்சிட்டாங்க.  அதை மறுத்து யாரும் இது வரைக்கும் ஒன்னும் சொல்லலையே அது ஏன்?

ஜெயகாந்தன் (எழுத்தாளர் இல்லை, நம்ம ரிச்மண்ட் நண்பர்) ஃபேஸ்புக்ல சொன்ன மாதிரி கமல் படத்துக்கு இந்த தடங்கல் ஒரு பெரிய பப்ளிசிட்டிதான்னு நினைக்கறேன்.  

இதுக்கு நடுவுல "சோ" கமலுக்கு சார்பா ஜெ கிட்ட பேசனும்னு குப்பன் சுப்பன்னு எல்லோரும் ஒரு அட்வைஸ் கொடுத்திருந்தாங்க.  அதை கேட்டு அவர் கிட்ட போய் யாரோ பேட்டி எடுக்க அவர் "தடை சரிதான்"ந்னு சொல்ல, இப்போ எல்லாரும் அவரை சரமாரியா திட்டிட்டிருக்காங்க.  இதுல ஹை லைட்டு என்னன்னா, ஆபீஸ்ல ஒருத்தர் "யோவ் பெரிசா சோ வைப் பத்தி பேசுவியே, இட்லி வடை பதிவை படிச்சியா (http://idlyvadai.blogspot.com/2013/01/blog-post_31.html)  இப்ப என்ன சொல்றே, அந்தாளுக்கு மண்டைல முடிதான் இல்லைன்னா, இப்ப மூளையும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.  இப்படி இருக்கரதுக்கு அந்தாளு...... " ந்னு அவரத் திட்ர சாக்குல என்னை நல்லா திட்டிட்டு போயிட்டாரு.  

முகமது பின் துக்ளக் படமும் சரி நாடகமும் சரி காலத்தை கடந்து இருக்கர விஷயம்.  அதுல முஸ்லீம்களுக்கு எதிரா எதுவும் இல்லைன்னு தெரிஞ்சாலும் "சோ" வை அலைக்கழிக்கனும்னு அதுக்கு தடை மேல தடை போட்டாங்க.  ஆனா விஸ்வரூபம் அப்படி இல்லைன்னு அந்த டிராமா/படம் பார்த்தவங்களுக்கும், விஸ்வரூபம் பார்த்த/கேட்டவங்களுக்கு தெரியும், தெரியாத மாதிரி நடிச்சா ஒன்னும் பண்ண முடியாது.  

இந்தப் படத்துலயும் ப்ராமின்ஸ்ஸ கேவலமா கிண்டல் பண்றாங்க, அதுவும் கமல் டான்ஸ் ஆடறேன் பேர்வழின்னு நடை, பேச்சு, பாவனைனு எல்லாத்தையும் ஒரு 'திரு நங்கை' மாதிரி பண்ணி வெறுப்பேத்தராரு.  நம்மூர்ல டான்ஸ் கத்துக்கரவங்க, கத்து தரவங்க எல்லாரும் அப்படியா இருக்காங்க. இவரை பார்க்கும் போது, டி.வில மோகன் வைத்யான்னு ஒருத்தர் இப்படிதான் நடிப்பாரு அவர மாதிரியே இருக்கு.  அது என்ன லாஜிக்கோ தெரியலை, கண்றாவியா இருக்கு, அவர் மனைவியா வர்ர பூஜாவை NRI ஐயர்ன்னு சொல்லி அவங்க தமிழ கொலை பண்ணி, நடுவுல ஜோக்குன்னு தத்து பித்துன்னு பேசி படுத்தரதுக்காக இந்தப் படத்துக்கு தடைன்னு சொல்லியிருந்தா சரியா இருந்திருக்கும்.  திரைக்கதைல நிறைய ஓட்டை, டுபுக்கு சொன்ன மாதிரி எடிட்டிங்க் கொஞ்சம் சொதப்பல், நடிகர்கள் செலக்‌ஷன் கொஞ்சம் தண்டம்.  ஆண்ட்ரியா வையும் பூஜாவையும் விசாரிக்கர எஃப். பி.ஐ பெண் ஆபீசர் தண்டமோ தண்டம்.  5 ரூபாய்க்கு நடிச்சுட்டு கண்டிப்பா ஒரு 5000$ -10000$ வாங்கிட்டு போயிருப்பாங்கன்னு நெனைக்கரேன்.

வில்லன் நல்லா பண்ணியிருக்காரு.  "இவர் பெரிய ஆக்டர் இவரைக் கூடத் தெரியாம எப்படி இருக்க" ன்னு போன வாரம் அரவிந்தன் கேவலமா பார்த்தார்.  அதுக்கப்புறம் இவரைப் பத்தி படிச்சா நிஜமாவே நிறைய படங்கள்ல நடிச்சிருக்காரு, எனக்குத்தான் தெரியலை.  இவரை பத்தி நான் படிக்கரது இருக்கட்டும், அப்பா காபி பத்தி சூப்பரா எழுதியிருக்காரே அதைப் படிச்சியான்னு அவரை சதாச்சிட்டேன், அது ஒரு தனிக்கதை.  

கடைசியா, இந்தப் படம் இப்ப சொல்ற விஷயத்துக்காக  தடை பண்ணப் படவேண்டிய படமில்லை.  ப்ராமின்ஸ கிண்டல் பண்றதுக்கும், டான்ஸர்ஸ கிண்டல் பண்றதுக்கும், எஃப்.பி.ஐ. போலீஸ்ன்னு எல்லோரையும் கிண்டல் பண்றதுக்கும் தடைன்னா பரவாயில்லைன்னு சொல்லலாம்.  அது நம்ம வாழ் நாள்ல நடக்கப் போரதில்லை.  அதனால வழக்கம் போல (தி.க உருவான காலத்துல இருந்து) நாம அவங்கள மன்னிச்சிடுவோம்.  அடுத்து "சோ" வோட முகமது பின் துக்ளக் படத்துக்கு கொடுத்த ப்ரச்சனைக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.  அப்படி கம்பேர் பண்ணினா அது சரியான பித்துக்குளித்தனம்.

எப்படியோ, இந்தப் படம் இன்னும் ஒரு வாரம் இல்லை ரெண்டு வாரத்துல internet-ல வரதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல தியேட்டர்ல வந்து கமலுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கட்டும்.



பி.கு 1: கமல் இவ்வளவு நல்லவர், அவ்வளவு நல்லவர்ன்னு எல்லோரும் சொல்றோமே, அவர் ஒரு பேட்டியில எனக்கு மஹாத்மாவை விட மோஹந்தாஸ் கரம்சந்த் காந்திங்கர வக்கீலதான் பிடிக்கும்னு உளறியிருந்தாரே அதை யாரும் ஏன் கேள்வி கேக்கலை?  

பி.கு 2: காதலா காதலா படம் வெளிவரதுக்கு கமலுக்கு ப்ரச்சனை வந்த போது, மணிவண்ணன் நடிக்க மாட்டேன்னு சொன்னதும் அந்த ரோலுக்கு எம்.எஸ். விஸ்வநாதனை போட்டு ஒப்பேத்தி வெச்ச போது வலுவில வந்து நான் உன் படத்துல நடிப்பேன் எனக்கு ஒரு ரோல் குடுன்னு சொல்லி அதை கல கலப்பா செஞ்ச, ரொம்ப நல்லவர்ன்னு கமல் பாராட்டின "சோ"  இப்ப அவரோட கருத்தை தைரியமா சொன்னதும் கெட்டவரா ஆயிட்டாரே அது எப்படி?

பி.கு3: மஞ்சள் அடிக்காம எதையாவது பின் குறிப்புன்னு எழுதினா யாரும் கவனிக்க மாட்டாங்கன்னு (ஹி ஹி) மஞ்சள் தடவிட்டேன்.


முரளி இராமச்சந்திரன்.


Tuesday, January 15, 2013

காப்பி புராணம் - இரண்டாம் பகுதி

காப்பி புராணம் முதல் பகுதி இங்கே...
இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை வெள்ளைத் துரைமார்களின் பானமாக இருந்த  காப்பி மேட்டுக் குடியைச் சேர்ந்த இந்தியர்கள் மத்தியிலும் தலை காட்டியது.விதேசிகளின் பானமாக இருந்த காப்பி படிப்படியாக சுதேசிகளின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும்  அடையாளமாக வளர்ந்தது. பணக்காரர்கள் காப்பி குடிப்பதை நாகரீகத்தின் ஒரு அம்சமாக கருதத் தொடங்கினார்கள்.

அப்பொழுது புதிதாகத் தொடங்கிய காப்பி கிளப்புகளில் மட்டும் காப்பி விற்பனையானது,. காலப்  போக்கில் நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க குடும்பங்களில் காலை உணவு காப்பியுடன் தொடங்கும் நிலை வளர்ந்தது.

குறிப்பாக 1920களில் காப்பி குடிக்கும் பழக்கம் பிராமண சமூகத்தில் எல்லா பகுதியினரிடத்திலும்  நிலை பெற்றது. வீட்டு விசேஷங்களில் காப்பி நன்றாக அமைவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். பிராமணர்கள் காப்பி கிளப்பில் டிகிரி காப்பி என்று பெருமையோடு விளம்பரம்  செய்தார்கள். 

சில ஹோட்டல்கள் நல்ல காப்பிக்காக புகழ்ந்து பேசப்பட்டது. வியாபார போட்டியில் காப்பி  பொடியுடன் போதை பொருட்கள் சேர்க்கப்படுவதாக சில ஹோட்டல்களுக்கு எதிராக வதந்தி  உலவத் தொடங்கியது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பிராமணர்கள் அதிகம் வசிக்கும்  நகரங்களில் பல ஹோட்டல்கள் நல்ல காப்பிக்கு புகழ் பெற்றவை. அந்த ஹோட்டல்களில் காப்பி குடிப்பதை வாழ்நாள் பாக்கியமாக அந்த பகுதி மக்கள் நம்பினார்கள். திருச்சிக்கு அருகில் ஒரு  கிராமத்தில் உள்ள பெரியவர் தன் இளமைக் காலத்தில் பிரபல ஹோட்டலில் காப்பி குடிப்பதற்காக நகரத்துக்கு போனதைப் பற்றி பெருமையாகப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ரயிலில் சீசன் டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு தினமும் திருச்சி சென்று அந்த ஹோட்டலில் காப்பி குடித்த பெருமையை அளந்து கொட்டுவார். 

இப்படி காப்பிக்கு அடிமையாகிப் போனவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள் மத்தியில் அதிகமாக இருந்தனர். ஆனால் இன்று மற்ற சமூகத்திலும் காப்பிக்கு அடிமையானவர்களைப் பார்க்க முடியும். 

வீட்டில் காப்பி தயாரிக்கும் பழக்கத்தை பிராமணர்கள்தான் முதல்முதலாக தொடங்கினார்கள் என்பது சரிதான். அந்த காப்பியை நுரை போங்க ஆற்றி குடிப்பதும், அவர்களுடைய தனி பாணி. அவர்களுடைய ஆச்சாரம் கெடாதபடி காப்பியை குடிப்பதற்கு தனியாக டம்ளர்களும் தயாராகியது.  பித்தளை பாத்திர உற்பத்திக்கு புகழ் பெற்ற கும்பகோணம்தான் விளிம்பில் வளைந்த தம்ளர்களை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வந்தது. உதட்டில் வைக்காமல் மேலே தூக்கி காப்பியை குடிப்பதற்காகவே இந்த தம்ளர்கள் பயன்படுத்தப்பட்டன. டவரா, டம்ளரில் காப்பி கொண்டு வந்து வைக்கும் பழக்கத்தை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் காணமுடியாது. பிராமணர்கள் அதிகம் வாழும் நகரம் கும்பகோணம்.காப்பி பிரியர்களான பிராமணர்களும் அங்கே அதிகம்.நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தமிழ்நாட்டில் டவரா டம்ளரில் காப்பி குடிக்கும் பபழக்கத்தைப் பற்றி படத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. 

தரமான காப்பி தயாரிப்பதில் புகழ் பெற்ற ஹோட்டல்காரர்கள் அபின் போன்ற போதைப் பொருளை பயன்படுத்துவதில்லை என்று மறுக்கிறார்கள். காப்பிக் கொட்டையை தேர்வு செய்வதிலும்,அந்த கொட்டையை பக்குவமாக வறுப்பதிலும்தான் தரம் அமைகிறது என்று கூறுகிறார்கள். பில்ட்டர் முறையில் தயாரிக்கும்போது, சேர்க்க வேண்டிய நீரின் அளவும் கலக்கப்  பயன்படும் பாலும் காப்பியின் தரத்தை நிர்ணயிக்கிறது. அதோடு மட்டுமல்ல, அத்துடன் போடும் சர்க்கரையின் அளவும் காப்பியின் தரத்தையும், ருசியையும் தீர்மானிக்கிறது, சற்று கூடுதலான சர்க்கரை காப்பி ருசியை கெடுத்து விடும் என்கிறார் ஹோட்டல்காரர். 

பல ஆண்டுகளாக காப்பி தயாரித்த அனுபவம் காரணமாக பல பிராமண குடும்பங்களில்  காப்பி சுவையாக அமைகிறது. காலப்போக்கில் மற்ற சாதியினர் வீட்டிலும் பக்குவான முறையில் காப்பி தயாரிக்க முடியும். 

உணவுப் பழக்கங்களில் பழமையை தொடர்ந்து வற்புறுத்தும் பிராமண சமூக முதியவர்கள், காப்பி குடிப்பதால் வரும் பசிமந்தம், மற்ற நோய்கள் பற்றி கூறி மாறிவரும் உணவுப் பழக்கங்கள்  பற்றி எச்சரிக்கை செய்தார்கள். காலப் போக்கில் அவர்களும் காப்பி பிரியர்களாக மாறியதுதான் கண்ட பலன். 

எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் பத்திரிகைகள் வளர்ந்து வரும் காப்பி கலாச்சாரத்தை கண்டித்தன.சில மருத்துவர்கள் காப்பி குடியால் வரும் நோய்களை பட்டியல்  போட்டு பத்திரிகைகளில் எழுதி எச்சரித்தனர்/. தமிழ் அறிஞர் திரு. வி. க. வின் பத்திரிகையான  நவசக்தி தொடர்ந்து, காப்பி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தது. நூறாண்டு வாழ்வது எப்படி என்ற நூலை எழுதிய மறைமலை அடிகள் காப்பி போன்ற நவீன பழக்கங்கள் மனிதனின் ஆயுளைக்  குறைத்து விடும் என்று எச்சரித்தார்.  

ஆனால் திரு. வி. க.வின் நவசக்தியில் தன் பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கிய கல்கி  காப்பியைப் பொறுத்த வரையில் மொடாக் குடியராக மாறினார்.  உயர்சாதி காங்கிரஸ் தலைவர்கள் பலர் காப்பி குடிப்பதை பழக்கமாக வளர்த்துக் கொண்டனர். குறிப்பாக காங்கிரஸ் நடவடிக்கைகளில் பங்கு எடுத்துக் கொள்ளத் தொடங்கிய மேட்டுக் குடிப்  பெண்கள் காப்பி குடிப்பதை புதிய நாகரீகமாக வளர்த்துக் கொண்டார்கள். தீவிர காந்தியவாதிகள் பலர் காப்பியை மினி கள் என்று வர்ணித்தனர். இப்படி நாகரீகமாக காப்பி குடிப்பவர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபடுவதை போலித்தனமான அரசியல் என்று சாடினார்கள்.

இவர்களுடைய காப்பிக் குடி பழக்கத்தை குறை கூறி காந்தியடிகளிடம் பல காங்கிரஸ்வாதிகள் புகார் கொடுத்தார்கள் இத்தகைய புகார்கள் தன்னிடம் வருவதாகத் தெரிவித்து காந்தியடிகள் தன்னுடைய யங் இந்தியா இந்தியா பத்திரிகையில் வருத்தம் தெரிவித்தார் என்றசெய்தியைக் கேட்டால் இன்று எல்லோருக்கும் சிரிப்புத்தான் வரும்.

தமிழ்நாட்டின் மூத்த காந்தியவாதியான ராஜாஜியே ஒரு பெரும் காப்பிபிரியர் என்பதுதான் வேடிக்கையான செய்தி அதுமட்டுமல்ல கொதிக்கும் சூட்டில் உள்ள காப்பியை அவர் அனாயாசமாக குடிப்பதை நேரில் கண்ட பலர் அயர்ந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக ராஜாஜி  மிகச் சூடாக காப்பி குடிக்கும் பழக்கத்தை அவரோடு பழகிய பலர் எழுத்தில் பதிவு  செய்திருக்கிறார்கள்

காலையில் பழைய நீராகாரம் சாப்பிடும் பழக்கம் பல தலைமுறையாக இருந்தது. அந்த பழக்கத்தை விட்டு காப்பி குடிக்கத் தொடங்கியதைக் கண்ட பலர் அது பற்றி எச்சரித்தார்கள். காலையில் பழைய நீராகாரம் சாப்பிடுவதை விட்டு ஆரோக்கியத்துக்கு கேடான காப்பி  பழக்கத்தை வளர்த்துக் கொண்ட நிலையை வர்ணித்து பாடல்களை பாடினார்கள். இந்த வகையில்  இங்கிலாந்து காப்பி vsஇந்திய பழையது என்ற சிந்து பாடல் பிரசித்தமாக இருந்த காலம் உண்டு. இந்த காப்பி பழக்கம் ஆச்சாரமான வாழ்க்கை,ஏகாதசி விரதம் எல்லாவற்றையும் உடைத்து விட்டதாக பழி கூறி காப்பி மீது வசை பாடும் பாடல் பலர் வாயில் முணுமுணுக்கக் கேட்கலாம்.

அமாவாசை விரதத்தை அடியோடு கெடுத்தாயே  
ஆனதோர் கார்த்திகை விரதத்தை தடுத்தாயே 
ஏகாதசி விரதம் இடுப்பை ஒடித்தாயே  

என்று ஜனரஞ்சகமாக அந்த பாடல் செல்லும்.

காளமேகப் புலவர் என்ற பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அவருடைய சிலேடைப்  பாட்டுத் தான் நினைவுக்கு வரும். இரண்டு பொருள் தரும் வகையில் அவருடைய பாடல்கள் நகைச்சுவையாக இருக்கும். தென்னை மரத்தையும் பனை மரத்தையும் ஆசை வார்த்தை கூறி மயக்கி பணம் பறிக்கும் தாசியோடு ஒப்பிட்டு காளமேகப் புலவர் பாடியிருக்கிறார். வாயில் போட்டு  மெல்லும் வெற்றிலையைக் கூட தாசியுடன் ஒப்பிட்டு அவர் பாடியிருக்கிறார். 

அந்த காளமேகப் புலவர் பாணியில் ஒரு புலவர் காப்பியை தாசியுடன் ஒப்பிட்டு பாடியிருக்கிறார்.அந்த பாட்டையும் கொஞ்சம் ரசிக்கலாம்.

முன்னால் இருந்த நல்ல பழக்கத்தை எல்லாம் கைவிடச் செய்தாய், உன் பழக்கத்தை கொண்டவரை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய், பின்னர் பல நோய்களைக் கொடுத்தாய், இவ்வளவு மோசமான காப்பியே நீயும் விலை மாதுவும் ஒன்றுதான் என்று காப்பி மீது வசை பாடினார் இந்த நவீன காளமேகம்.

முன்னர் எளிதிற் பழக்கம் முற்றுவித்துச் சார்ந்தோரை  
தன்னடிமையாக்கித் தளைப் படுத்தும், பின்னர்ப்  
பிணி மல்கச் செய்விக்கும் பெற்றியால் பொல்லாக்  
கணிகையோடு காப்பி ஒப்பாம் காண்  

என்பதுதான் அந்த பாடல். யார் எவ்வளவுதான் வசை பாடினால்தான் என்ன, காலையிலும் மாலையிலும் காப்பியை  மறக்க முடியாதவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆனார்கள்.  நிஜ வாழ்க்கையைப் போலவே எழுத்தாளர்கள் எழுதும் கதைகளிலும் காப்பி பிரதானமான  இடத்தைப் பிடித்தது. காலையில் மனைவி கொண்டு வந்து வைத்த காப்பியை குடித்தபடியே  ஹிந்து பேப்பரை படிக்கத் தொடங்கும் கதாபாத்திரத்தை வர்ணிப்பதை எழுத்தாளர்கள் தங்கள்  பாணியாகக் கொண்டார்கள். ஆபீசிலிருந்து மாலை களைப்போடு வந்த கணவனை சூடான  காப்பியோடு வரவேற்கும் மனைவி பற்றி எல்லா எழுத்தாளர்களும் வர்ணனை செய்திருக்கிறார்கள். 

இப்படி எல்லா வகையிலும் காப்பி என்ற அந்நிய நாட்டுப் பானம் இந்தியாவில் குறிப்பாக  தமிழ்நாட்டில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. எதிர்ப்புகளை சமாளித்து, சாதி போட்ட வேலிகளை ஓரளவு களைந்து சமபந்தி போஜனம் நடத்தியது. பழமைவாதிகளையும் விரதம் இருக்கும் வைதீகர்களையும் மனம் நோகச் செய்தது. இறுதியில் அவர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டது 

இன்று தமிழ்ச் சமூகத்தில் காப்பி வியாபார தந்திரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம்.  LET US TALK OVER A CUP OF COFFEE, என்ற சொல்லாடல் அதைத்தான் சொல்லாமல் சொல்லுகிறது.  

ஒரு மனிதனின் விருந்தோம்பும் பண்பையும் (கஞ்சத்தனத்தையும்) அளந்து பார்க்க  காப்பிதான் அளவுகோலாக இருக்கிறது. அந்தப்பயல் வீட்டுக்குப் போனால் ஒரு டம்ளர் காப்பி கூட  கிடைக்காது என்று எச்சரிக்கையாக சொல்வதை பல சமயங்களில் காதால் கேட்டிருக்கிறோம்  ஒரு பெண்ணின் குடும்பப் பொறுப்பை அளந்து பார்க்கும் அளவு கோலாக காப்பிதான் இருக்கிறது. புதிதாக வீட்டுக்குவந்த மருமகளைப் பற்றி "அந்த பெண்ணுக்கு ஒரு காப்பி போடக் கூடத்  தெரியலையே" என்று மாமியார் குறை பட்டுக் கொள்ளும்போது வேறு எப்படி நாம் பொருள்  கொள்ள முடியும்?

- மு.கோபாலகிருஷ்ணன்  

( எ. ஆர். வெங்கடாச்சலபதியின் அந்த காலத்தில் காப்பி இல்லை என்ற கட்டுரையை படித்த  பிறகு, தோன்றிய சிந்தனையை பதிவு செய்திருக்கிறேன்.)  .   .     .

Monday, January 14, 2013

நோட்டீஸ் ப்யுட்டீஸ் - 7

நோட்டீஸ் ப்யுட்டீஸ்  -7


செருப்பு தான் நம் காலைக்கடிக்கும் என்று நமக்குத்தெரியும். இங்கு செருப்பையே நாம் கடிக்கலாம் போலிருக்கே!!!

Monday, January 07, 2013

காப்பிபுராணம்


 இலக்கிய மன்றக் கூட்டத்திற்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் பேசும்போது தன்னுடைய இளமைப் பருவத்தில் பேராசிரியர் ஆ. சீனிவாசராகவன் வீட்டிற்கு போன அனுபத்தைப் பற்றி கூறினார். பேராசிரியர் சீனிவாசராகவன் முந்தைய தலைமுறையின் மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர். திருநெல்வேலி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பனி புரிந்தவர். கம்பராமாயணம், பாரதி இலக்கியங்களை கற்றுத் தெளிந்த சிறந்த தமிழ் அறிஞர்.

 அவருடைய வீட்டுக்குப் போனால் தனக்கு கிடைக்கும் காப்பியைப் பற்றிக் கூறினார். பேராசிரியரின் மனைவி அற்புதமான ருசியுடன் கூடிய காப்பியை கொடுத்து உபசரிப்பார், என்று கூறினார். அந்த அனுபவத்தைக் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தார். திருச்சிக்கு வந்தால், நல்ல ருசியுள்ள காப்பிக்கு நான் எங்கே போவேன் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குத்தான் போக வேண்டும். என்றார். கூட்டத்தில் ஒரே சிரிப்பு.

 மேலும் தொடர்ந்தார், அது என்ன மாயமோ இந்த பிராமணர்கள் இவ்வளவு ருசியுடன் காப்பி தயாரிக்க எங்கே கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை என்றார். அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது.

பொன்னீலன் என் வீட்டுக்கு ஒரு முறை வந்திருக்கிறார். என் மனைவி கொடுத்த காப்பியை அப்பொழுது வாயாரப் புகழ்ந்தார். அவர் சொன்னது என்னவோ உண்மைதான். பொதுவாக பிராமணர்கள் வீட்டில் காப்பி நல்ல ருசியாக இருப்பதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.கேட்கும்போது ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 இந்த நாட்டின் பாரம்பரியப் பெருமை பேசும் பிராமணர்கள் வெளிநாட்டுச் சரக்கான காப்பியை எப்படி இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டார்கள், அந்த பானத்தை தன்வயப் படுத்திக் கொண்டு ரசனையோடு தயாரிக்கிறார்கள் என்பது ஒரு தனிக் கதை.

 இருபதாம் நூற்றாண்டு தொடக்க காலம் வரை பிராமணர்கள் வீட்டில் காப்பி கிடையாது. விசேஷ நிகழ்ச்சிகளில் கூட காப்பி கிடையாது. நகரங்களில் இன்று காணப்படும் காப்பிக் கடைகள் கூட அன்று இல்லை. சோத்துக் கடை என்று கூறப்படும் சில விடுதிகளில் உணவு கிடைக்கும். பிராமணர்களும், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களும் அந்த விடுதிகளுக்குப் போக மாட்டார்கள். ஆச்சாரக் குறைவு என்று கூறி அந்த விடுதிகளுக்குள் நுழைவதை தவிர்த்துவிடுவார்கள். நகரத்துக்குச் செல்லும் காலங்களில் வீட்டில் தயாரித்த உணவை கையில் எடுத்துச் செல்வார்கள். தன சாதிக் காரர்
வீட்டைத் தேடி அங்கே உட்கார்ந்து கையில் கொண்டு போன உணவை சாப்பிட்டு விட்டு அந்த வீட்டில் நீர் வாங்கிக் குடிப்பார்கள்.

 இதுதான் அன்று நிலவிய பழக்கம்.சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் மேற்கொண்ட தலைவர்கள் கூட தன்னுடன் தன சாதியைச் சேர்ந்த ஒரு சமையற்காரனை உடன் அழைத்துக்கொண்டு போவது வழக்கமாக இருந்தது. அந்த சமையற்காரரை தவசிப் பிள்ளை என்று குறிப்பிடுவார்கள்.

 நகரங்களின் அளவும்,நகரங்களுக்கு அடிக்கடி செல்வோரின் எண்ணிக்கையும் வளரத் தொடங்கிய பின் நிலைமை சற்று மாறியது. அத்தகைய பயணிகளின் தேவைக்காக காப்பி கிளப்புகள் தோன்றத் தொடங்கின. அங்கே காப்பியை தவிர வேறு சில பலகாரங்களும் கிடைத்தன.இப்படி வளர்ந்த காப்பி கிளப்புகள்தான் காப்பி குடி பழக்கத்தை நாட்டில் எல்லா பகுதி மக்களிடமும் வளர்த்தது.

 ஒரு காலத்தில் ஐரோப்பியர்களின் பானமான காப்பி இன்று எல்லா சாதி மக்களின் பானமாக வளர இந்த காப்பி கிளப்புகள் தான் காரணமாக அமைந்தது. எல்லா சாதியச் சேர்ந்த மத்தியதர வர்க்க குடும்பங்களிலும், காலை உணவு காப்பியி லிருந்து தான் தொடங்குகிறது. சிலர் பல் துலக்கக் கூட காத்திருப்பதில்லை. படுக்கையிலிருந்து எழுந்த வுடன் காப்பியை குடிக்கும் நாகரீகமும் (?)உண்டு.

 இந்த காப்பி கிளப்புகளை பெரும்பாலும் பிராமணர்களே நடத்தினார்கள். அவர்களுக்கு கிடைத்த புதிய தொழிலாக ஹோட்டல் தொழில் அமைந்தது. அந்த கிளப்புகளில் எல்லா சாதியாரும் ஒரே பந்தியில்உட்கார்ந்து உணவு அருந்தும் பழக்கம் வளர்ந்தது. சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்ய காலத்தில் தமிழ்நாட்டில் ரயில்கள் ஓடத்தொடங்கிய போது எல்லா சாதியாரும் ஒரு சேர உட்கார்ந்து பயணம் செய்வதால் சாதிக் கலப்பு ஏற்படுகிறது, என்று பிராமணர்கள் அங்கலாய்த்துக் கொண்டது உண்டு. தங்கள் சாதி ஆச்சாரம் கெடாமல் பயணம் செய்ய ரயிலில் தங்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று பிராமணர்கள் அரசாங்கத்துக்கு மனு கொடுத்தது உண்டு. அதே பிராமணர்கள் தான் இன்று காப்பி கிளப் தொடங்கி சகல சாதியாரும் கலந்து அமர்ந்து உணவு அருந்தும் நிலையை உருவாக்கினார்கள்.

 தொழில் திறமையும் சாமர்த்தியமும் உள்ள பிராமணர்கள் காப்பி கிளப் தொடங்கினார்கள்.படிக்க வசதியில்லாத,கல்வியைத் தொடர முடியாத பிராமணச் சிறுவர்கள் கிளப்புகளில் சர்வர்களாக சமையல்காரர்களாக பிழைப்பைத் தொடங்கினார்கள்.ஆகக் கூடி காப்பி கிளப் என்ற புதிய வர்த்தக அமைப்பு பெரும்பாலும் பிராமணர்கள் வசம் இருந்தது என்னவோ உண்மைதான்.

 ஆனால் பழமைவாதம் பேசும் எல்லா சாதியாரும் கிளப்புகளில் உணவு அருந்துவதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை.பல நூற்றாண்டுகளாக தான் உணவு உண்பதை வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் பார்க்கக் கூடாது என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்கள் இந்த நாட்டு மக்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த சாதியாரும் விலக்கு அல்ல. காப்பி கிளப்புகளில் கிடைக்கும் உணவு வகைகள் பிராமணர்களால் தயாரிக்கப்பட்டவை என்ற உத்திரவாதம் சில பழமைவாதிகளை திருப்திபபடுத்தலாம். அவர்கள் காப்பிகிளப் உணவை ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் பிராமணாள் காப்பி கிளப் என்ற பெயர்ப் பலகையுடன் விளம்பரம் செய்யப்பட்டது.

 இந்த அறிவிப்பு சாதி வெறி யை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி பெரியார் ஈ.வே. ரா. 1950 களில் எதிர்ப்பு இயக்கம் தொடங்கினார். அவருடைய தொண்டர்கள் பெயர்ப் பலகையில் இருந்த பிராமணர் என்ற சொல்லை தார் பூசி அழித்தனர்.ஆகையால் பெரும்பாலான ஹோட்டல்களில் பிராமனாள் என்ற சொல் விளம்பரப் பலகையிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஐயங்கார் பேக்கரி என்ற விளம்பரப் பலகையைப் பார்க்கலாம்.எந்த கட்சி தொண்டனும் அதற்கு எதிர்க்குரல் கொடுக்கவில்லை. தார்ச் சட்டி களையும் காணவில்லை.

 இந்த பேக்கரிகளுக்கும்,அங்கே விற்பனையாகும் தின்பண்டங்களுக்கும் அய்யங்கார்களுக்கும் எந்த வகை ஓட்டும் இல்ல, உறவும் இல்லை என்பது வேறு விஷயம்.

 ஆனால் வைதீக பிராமணர்கள் பலர் இன்று வரை கிளப்பில் காப்பியோ இதர உணவு வகைகளையோ சாப்பிடுவதை தங்களுக்கு ஆச்சாரக் குறைவு என்றே நினைக்கிறார்கள்.

 சர்க்கார் உத்தியோகத்தை கைப்பற்றுவதில் பிராமணர்கள் முன்னே நிற்பதை எதிர்த்து பகுத்தறிவுவாதிகள் கிளர்ச்சி செய்தனர். அதனால் சர்க்கார் வேலை வாய்ப்பை இழந்த பிராமண இளைஞர்கள் ஹோட்டல் தொழிலில் இறங்கினார்கள். அவர்களையும் பகுத்தறிவு வாதிகள் விட்டு வைக்கவில்லை. அதன் ஒரு அம்சம்தான் தார்ச்சட்டி, பெயர்ப்பலகை அழிப்பு எல்லாம்.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காப்பிக் கடை முண்டங்கள் என்று பாப்பாரச் சிறுவர்கள் மீது கவிதையில் வசை பாடினார்.

 ஹோட்டல் முதலாளிகளும் சரி அடுப்படியில் நெருப்பில் வெந்து பிழைப்பு நடத்தும் சமையல் காரர்களும் சரி எல்லோருமே சுரண்டல்காரர்கள்தான், ஏனென்றால் அவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள். இதுதான் பகுத்தறிவுப் பார்வை.

 கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று இந்த காப்பிகிளப் தொடர்புடையதுதான்.இன்று பிராமணர்கள் ஹோட்டல் தொழிலில் கொண்டிருக்கும் பங்கு குறைவு. பல்வேறு சாதி இந்துக்கள் ஹோட்டல் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் பிராமணர்கள் நடத்தும் ஹோட்டல்களைத் தேடி காண்பது அரிது. ஹோட்டல் சமையல்காரர்களாக இருப்பவர்களிலும் பிராமணர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. சென்ற தலைமுறையில் பிராமண சமையல்காரர்கள் தயாரித்த தின்பண்டங்களையும்,உணவு வகைகளையும் இதர சாதியைச் சேர்ந்த சமையல்காரர்கள் இன்று நல்ல முறையில் தயாரிக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் காப்பி கிளப்புகளிலும் பார்ப்பன ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.

 இன்று தமிழ்நாட்டில் சகலரும் குடிக்கும் பானமான காப்பி ஆப்பிரிக்காவில் உள்ள எதியோப்பியாவில் உதயமானது என்ற செய்தி பலருக்கு அதிசயமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அந்த நாட்டின் சில பகுதிகளில் வளர்ந்த காப்பிச் செடிகளின் விதைகளை தின்ற பறவைகள் கூடுதலான உற்சாகத்தோடு பறந்து திரிவதை அந்த நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்தார்கள். அந்த காபிச் செடியின் விதைகளை எப்படி உணவாகத் தயாரிக்கலாம் என்று பல முயற்சிகளைச் செய்தனர்.

 அந்த நாட்டின் ஒரு சிறு இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் காப்பிச் செடியின் விதை களை நீரில் போட்டு கொதிக்க வைத்து தயாரித்த பானத்தைக் குடித்தார்கள். இந்த பானம் பசியைக் குறைப்பதையும் சற்று சுறுசுறுப்பை ஏற்படுத்துவதையும் உணர்ந்தார்கள். தங்களுடைய சமயச் சடங்குகளில் இந்த பானத்தை விநியோகம் செய்தார்கள். தங்களுடைய நாட்டிலிருந்து காப்பிச் செடி விதைகள் வெளிநாடுகளுக்குகொண்டு செல்வதற்கு தடை விதித்தனர்.

 17ம் நூற்றாண்டில் மைசூர் பகுதியைச் சேர்ந்த பாபா புதன் என்ற முஸ்லீம் துறவி ஹஜ் யாத்திரை மேற்கொண்டார். மெக்காவிலிருந்து திரும்பி வரும்போது அவர் கள்ளத்தனமாக ஏழு காப்பி விதைகளை கொண்டு வந்தார். தன இடுப்பில் கட்டிய சிறிய துணியில் மறைத்து வைத்து கொண்டு வந்த அந்த
காப்பி விதைகளை மலை பாங்கான சிக்மகளூர் பகுதியில் விதைத்து பயிர் செய்தார். படிப்படியாக பல பகுதிகளில் பயிர் செய்யப்பட்டன. நாளடைவில் மலைப் பாங்கான பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலங்களில் பயிர் செய்யப்பட்டது.

 அப்படி பயிர் செய்யப்பட காப்பி கொட்டை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.மிகச் சிறிய அளவிலான காப்பி கொட்டையை இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ், மற்றும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் வாங்கினார்கள். இந்தியர்கள் யாரும் அந்த காப்பிக் கோட்டையை வாங்கியதில்லை. காலப் போக்கில் மைசூர் பகுதியில் (இன்றைய கர்நாடகம்) மிகப் பெரிய வாணிபப் பயிராக வளர்ந்தது. ஆயிரக் கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

 இப்படி காப்பி விதைகளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து பயிர் செய்து ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பாபா புதன் என்ற துறவியின் மீது மக்கள் அன்பு பாராட்டினர் அவர் காலத்துக்குப் பிறகு அவருக்கு எழுப்பப்பட்ட சமாதி இன்று எல்லா சமயத்தவரும் தொழுகை செய்யும் தர்க்காவாக வளர்ந்திருக்கிறது

 இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் விவசாயப் பொருள்களில் காப்பிக் காப்பிக் கொட்டை மிக முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. இன்று கணிசமான அளவுக்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.


 இதுதான் காப்பி இந்தியாவுக்கு வந்த கதை.

 (இரண்டாம் பாகம்)

- மு.கோபாலகிருஷ்ணன்